தளிர் : 18
உணர்ச்சி வேகத்தில் அணைத்து கொண்ட அணைப்பு அல்ல அது. உணர்ச்சிகள் மறித்து போன நிலையில் ஆறுதலாக அவன் கரங்கள் அவளை அடைக்காத்துக் கொள்ள, இந்த நிமிடம் அவளுக்கும் ஒரு அடைக்களம் தேவைப்படவே விலக்க எண்ணாது அவளும் தன் பற்றுக் கோலாக அவன் முதுகில் கரம் பதித்துக் கொண்டாள்.
நடு ஹாலில் அணைத்துக் கொண்டு நின்றிருந்த இருவரையும் இரு ஜோடி பாவைகள் வெறுப்புடன் உறுத்து விழித்து கொண்டிருக்க, மீண்டும் தன்னை சுற்றி பின்ன போகும் சதி வலையறியாது ராதிகாவை அணைத்துக் கொண்டிருந்த அருணனும் கூட, அவள் மீது ஆசை கொண்டெல்லாம் அணைக்கவில்லை என்பதே உண்மை.
மனதின் குமுறல்கள் குறைய, அவன் இதயத்தின் ஓசை அவள் செவியை நிறைக்க, தீச்சுட்டார் போல் சட்டென்று விலகிய ராதிகாவோ அவன் முகத்தை கூட பார்க்காது விலகி ஓட, அவள் முந்தானை சேலையை பிடித்திருந்தவன், விரல்களில் அழுத்தம் இல்லாது மெல்லிய சேலையோ அவள் திசைக்கு மெல்ல மெல்ல அவன் விரல் கடந்து செல்ல,
உரிமையாக தன்னுடன் இருக்க வைக்கவும் முடியாது, முழுதாக விலக்கவும் மனமில்லாது அவன் தவிக்கும் தவிப்பை அவன் மட்டுமே அறிவான்.
அறைக்குள் வந்த ராதிகாவுக்கோ வேதனை தான் கூடியது.
பிள்ளைகளின் பிரிவு ஒரு புறம் வாட்ட, தன் மீது சுமத்த பட்ட கலங்கம் வேறு முடிவிலா கதையாக நீண்டுக் கொண்டே போக, இந்த நேரத்தில் அவன் அணைப்பிற்கு எதிர்வினை புரியாது, தானும் அவனை அணைத்துக் கொண்டு நின்றதே அவளை மேலும் மேலும் மனதளவில் காயப்படுத்தியது.
கதவில் சாய்ந்து நின்று மெளனமாக கண்ணீர் வடித்தவள் அப்படியே கதவருகில் மடங்கி விழ, அவள் சிந்தையை கலைத்தது "அம்மா…" என்ற சனாவின் குரல்.
தாய் பாசம் அறியா பிள்ளையோ தனக்கு தெய்வம் கொடுத்த அன்னையாக தான் அவள் மீது அன்பு காட்டிக் கொண்டிருக்கிறாள்.
தனியறையில் பொம்மைகளை அணைத்துக் கொண்டு தூங்கும் குழந்தையோ, இன்று முதல்முறை தன் அன்னை மார்பில் நிம்மதியாக துயில் கொண்டிருக்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள் சிறிது விழிப்பு தட்டவே, அன்னை கதகதப்பு தேடி மெத்தையில் கையால் துளாவி தோல்வியடைந்தே, கண் விழித்தாள்.
கதவருகில் ராதிகாவை பார்த்ததும், "அம்மா…" என்று இறங்கி ஓடி வந்து தாவி அவள் கழுத்தை கட்டிக் கொண்டவள், கன்னதில் வடிந்த நீர் துளிகளை தன் விரல் கொண்டு துடைத்து விட்டு, "ஏன் அழுவுறீங்க? உங்களுக்கும் என்னை பிடிக்கலையா?" என்று கேட்க,
பிள்ளை மனதின் காயம் உணர்ந்த தாய் அவளுக்கு தன் வேதனைகள் எல்லாம் புறம் தள்ள, குழந்தை ஏக்கம் போக்கும் தாயாக மாறினாள்.
"எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்" என்று கண்ணீர் மட்டுபடா விழிகளோடு சொல்ல, "எப்பவும் என்கூடவே இருங்க… என்னை விட்டு எங்கேயும் போகக் கூடாது" என்றவள் அவள் மார்பில் முகம் புதைத்து விழி மூடிட,
குழந்தையை அணைத்துக் கொண்ட ராதிகா மனமோ, 'ஒத்த பிள்ளையை கொடுத்துட்டு, தன் மற்ற பிள்ளைகளை தன்னிடம் இருந்து பிரித்து வைத்த அருணனை தான் அந்த நிமிடம் வசைப் பாடியது. இப்படி பிள்ளையை அன்பிற்காக ஏங்க வைத்திருக்கிறானே! என்ன மனுஷன் இவன்?' என்று.
அடுத்த நாள் காலையில் அருணன் கேஸ் விசயமாக வக்கீலை சந்திக்க தயாராகி கீழே வர, ராதிகாவோ டைனிங் டேபிளில் அமர்ந்து சனாவுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தாள்.
அருணனும் சாப்பிட வந்து அமர, வேலைக்கார அம்மா தான் அவனுக்கு பரிமாறினார். ராதிகா முகத்தை ஆராய்ந்துக் கொண்டே சாப்பிட்டிக் கொண்டிருந்தான்.
மகளுக்கு உணவூட்டி முடித்து சனாவுடன் செல்ல இருந்தவளிடம், "நீ சாப்பிட்டியா?" என்று கேட்க, ராதிகா அவன் முகம் நோக்காது ஆம் என்று தலையாட்ட, சனாவோ அவளை போலவே தலை குனிந்து நின்றிருந்தவள் இல்லை என்று தலையாட்டி கொண்டிருந்தாள்.
இருவரையும் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன், "நீ ஆமா சொல்ற, அவ இல்ல சொல்றா… யார் சொல்றது உண்மை? என்ன ரெண்டு பேரும் என்கிட்ட பொய் சொல்லுறீங்களா?" என்று அவன் கோபமாக கேட்பது போல் கேட்க, சட்டென்று ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர் ராதிகாவும், சனாவும்.
சனாவோ "நீங்க சாப்பிடல தானே மா" பொய் சொல்ல தெரியாது பிள்ளை அப்பாவியாக கேட்க, 'நீ பாசத்தை பொழிய இது தான் நேரமா?' என்று எண்ணிக் கொண்ட ராதிகாவோ,
"பசிக்கல சார்" என்றாள்.
"பட்டினி கிடந்து என்ன சாதிக்க போற? உட்கார்…" என்று சொன்னவன் "எனக்கு வேணா சார். சாப்பிடவே தோணல" என்றவள் பேச்சை காதில் கேட்காது "பட்டம்மா' என்று குரல் கொடுக்க, அவரும் ஓடி வந்து நின்றார்.
அவரிடம் கண்ணை காட்டி சனாவை அழைத்து செல்ல சொல்ல, அவரும் "பாப்பா நாம வெளிய போய் விளையாடலாமா?" என்று கேட்டுக் கொண்டே குழந்தையை தூக்கி கொள்ள, அவளோ "அம்மாவும் வரட்டும்" என்று தான் ராதிகா முந்தானையை பிடித்து கொண்டிருந்தாள்.
"அம்மா சாப்பிட்டு வருவாங்க… வாங்க நாம போய் அம்மாவுக்கு வீடு கட்டி வைக்கலாம்" என்று அவளை தூக்கி சென்று விட, ராதிகவோ 'வீடு இல்ல, இந்த வீட்ல இருக்கதுக்கு எனக்கு சமாதி தான் கட்டி வைக்கணும்' என்று மனதில் நொந்து கொண்டே அமைதியாக நின்றிருந்தாள்.
காலையில் குழந்தைக்கு உணவூட்ட அழைத்து வந்த போதே, பார்வதியும் கோசலையும் ஜாடை பேசியே அவளை காயப்படுத்தி இருந்தனர்.
"வசதியா ஒருத்தனை பார்த்திட கூடாது… வாயை பொழந்துட்டு வந்திட வேண்டியது. பெத்த பிள்ளைகளை விட்டு எப்படி தான் இங்க இருப்பு வருதோ… பிள்ளை பாசமே இல்லையா… அப்படி என்ன தான் கண்றாவி காதலோ" என்று பார்வதி அவளை கரித்துக் கொட்ட,
"அய்யோ அண்ணி இந்த நாற பொழப்புக்கெல்லாம் காதல்னு ஏன் பேரு வைக்கிறீங்க… இதுக்கு பேரு .." என்று கோசலை முடிக்க கூடவில்லை.
கையில் எடுத்த தட்டை டேபிளில் நங்கென்று போட்டவள், "பட்டம்மா… அறிவில்ல? சின்ன பிள்ளை முன்னாடி இப்படி தான் பேசுவீங்களா? வாயசான மூளை மங்கி போகுமா என்ன? இன்னொரு முறை இந்த மாதிரி வார்த்தை வந்துச்சு? பேசுற நாக்க இழுத்து வச்சு அறுத்து விட்டுருவேன்" என்று பட்டம்மாவை திட்டுவது போல் இருவரையும் திட்ட,
"பார்க்க சாதுவா இருக்கானு நினைச்சா? இந்த போடு போடுறா? இனி வாயை குடுத்தா நாக்கு மிஞ்சாது" என்று பார்வதி கோசலை காதில் கிசு கிசுக்க,
"ஆமா அண்ணி… எல்லாம் நம்ம நேரம். கண்ட கண்ட தெரு நாய்கிட்ட எல்லாம் கடி வாங்க வேண்டியாத இருக்கு" என்று கோசலையும் பார்வதி காதை கடிக்க,
"அந்த தெரு நாயை தான் நம்ம வீட்டு டாபர் மேனுக்கு பிடிச்சு இருக்கு" என்று சுவாதி தன் பங்கிற்கு மொத்தமாக எல்லாரையும் கலாய்க்க,
"யாரடி நாய் சொன்ன? என் பையனை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?" ராதிகாவை விட்டு சுவாதியை பிடித்துக் கொண்டார் பார்வதி.
ரணமாக ஆரம்பித்த சண்டை சுவாதியின் கேலியில் திசை மாறி இருக்க, தன் மீதிருந்த அவர்கள் கவனம் திசை மாறியதில் சிறு நிம்மதி கொண்ட ராதிகாவும் குழந்தைக்கு உணவூட்ட துவங்கினாள்.
இருந்தும் அவர்கள் சொன்ன வார்த்தைகள் நெரிஞ்சு முள்ளாக நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தது.
அதிலே அவள் மனம் தேங்கி நிற்க, இவன் வேறு அதிகாரம் பண்ண, 'அய்யோ சாமி எப்போ தான் எனக்கு விடுதலை கிடைக்கும்?' என்று தான் ராதிகா மனம் கதறியது.
ரொம்ப நேரமாக நின்றுக் கொண்டிருந்த ராதிகாவை "சிட்" என்று அதிகார தொனியில் அமர சொல்லி அவன் கட்டளை இட, சலிப்பாகவே அவன் முன் அமர்ந்தாள்.
நாற்காலியில் அமர்ந்தாளே தவிர, தட்டை கூட எடுத்து வைக்காது அதை வெறித்து கொண்டிருக்க, "என்ன நானே உனக்கு சேவகம் பண்ணனுமா?" என்ற அதட்டல் குரலில் மீண்டும் தலையை நிமிர்ந்து பாவமாக அவனை பார்த்தவள், பெரு மூச்சு விட்டுக் கொண்டே ஒரு இட்லி எடுத்து வைத்து அதை பிசைய ஆரம்பித்தாள்.
தன் பிள்ளைகள் சாப்பிட்டார்களா? இல்லாயா? என்று கூட அறியாது அவள் வயிறு எப்படி நிறையும்?
சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தவளை அவனும் கவனித்தான். ஏதோ அவளை அடைத்து வைத்து கொடுமை படுத்துவது போல் அவள் நடந்துக் கொள்வது அவனுக்கும் கடுப்பாக தான் இருந்தது. 'ஒரு ரெண்டு நாள் தானே இங்கே இருக்க சொன்னேன், அதுக்கு ஓவரா பண்றா' என்று கோப வர,
தாய்மையின் தவிப்பு அவனுக்கு எப்படி புரியும்?
பிள்ளைகள் நலனை பற்றி அடிக்கடி விசாரித்துக் கொள்கிறான். அவனை பொறுத்தவரை அவர்கள் அங்கே சந்தோசமாக தான் இருக்கிறார்கள். இவள் தான் ஓவரா பண்ணுறா? என்று தோன்றியது.
"நேத்து எந்த தப்பான இன்டன்ஷன்லையும் ஹக் பண்ணல… நீ டிஸ்டர்ப்பா இருந்த போல தோனுச்சு" என்று அவன் முந்தைய நாள் நிகழ்வுக்கு விளக்கம் கொடுக்க,
"ஐ க்னோ சார்" என்று மட்டும் சொன்னவளுக்கு அவன் மனநிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது.
"நாளைக்கு நான் வீட்டுக்கு போகலாம்ல" என்று அவள் மனதில் இருந்த கேள்வியை கேட்க,
ஏதோ இதயத்தில் ஒரு வெறுமை பரவியது அருணனுக்கு. "ஹ்ம்ம் தாராளமா" என்று சொன்னவன் மனமோ 'இப்போ மட்டும் வீட்ல இல்லாம காட்டுலயா இருக்கா?' என்று அவளுக்கு திட்ட தான் செய்தது.
பகுத்தறிய முடியா உணர்வில் அவன் தகித்தாலும், விடை காணும் எண்ணமில்லாது, அவள் போக்கில் அவளை விட்டு விட்டான்.
அவன் சாப்பிட்டு கிளம்பியதும் அவளும் கையை கழுவிக் கொண்டு எழுந்து சென்றதை அவனும் கவனித்து கொண்டான்.
'பிடித்து வைத்து ஊட்டாவா முடியும். எப்படியும் போய் தொல' என்று அவளை திட்டினாலும், அவள் சாப்பிடாதது அவனுக்கும் நெருடலாக தான் இருந்தது.
அவள் வசம் சாயும் மனதை இழுத்து பிடித்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவன், தலையை உலுக்கி கொண்டு தன் வேலையை பார்க்க சென்றிட,
அவன் பின்னால் செல்ல இருந்த ருக்ஷாவை வாசலில் நின்றிருந்த பாலா மடக்கி பிடித்திருந்தான்.
"ஏங்க… நீங்க எங்கங்க போறீங்க?" என்று பாலா அவளை தடுத்து கேட்க,
"ப்ரோ என்ன விடு, நான் என் ரித்து கூட போகணும்" என்று அவன் கார் பின்னால் செல்ல இருந்தவளிடம்,
"உங்க புருஷனை நான் பார்த்துக்கிறேன். இங்க என் பாப்பா தனியா இருக்கா அவளோட நீங்க இருங்க" என்று சொல்ல,
"எத? நீ எதுக்கு என் புருஷனை சைட் அடிக்க போற? அதெல்லாம் நானே என் ரித்துவ பார்த்துக்கிறேன். வழக்கம் போல நீ உன் பொண்டாட்டி பின்னாடியே போ" என்றவளை பாவமாக பார்த்தவன்,
"என்னால தான் இந்த வீட்டுக்குள்ள வர முடியாதே…" என்று பாவமாக சொன்னவனை முறைத்தாள் ருக்ஷா.
"இவன் ஒருத்தன் அடுத்தவங்க வீட்டுக்குள்ள அடியெடுத்து வைக்க மாட்டேனு அடம் பிடுச்சுட்டு… அடேய்… நாமெல்லாம் ஆத்மா டா… எங்க வேணா எப்படி வேணா புகுந்துடலாம்"
"இல்லங்க அதெல்லாம் தப்பு. நம்மள வச்சி கும்பிட்டு மனசார தேடுற வீட்டுக்குள்ள மட்டும் தான் நுழையனும். நமக்கு உரிமை இல்லாத வீட்டுக்குள்ளலாம் போக கூடாது" நியாயம் தர்மம் என்று கொடி பிடிப்பவனை பார்த்து கடுப்பானாள் ருக்ஷா.
"யப்பா சாமி… நல்லவேளை நீ செத்துட்ட… இல்ல வினோத உயிரினம்னு உன்ன தூக்கிட்டு போய் ஆராய்ச்சி பண்ணாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல…" என்று அவனை கலாய்த்த ருக்ஷாவிடம்,
"பிளீஸ் இன்னைக்கு ஒருநாள் பாப்பாவை பார்த்துக்கோங்க. பாவம் பயந்த பொண்ணுங்க" என்று மனைவிக்கு பரிவு பார்க்க,
"எத? உன் பொண்டாட்டி பாவமா? அங்க ஒத்த ஆளா நின்னு அத்தனை பேரையும் தெறிக்க விடுறா… இவ கிட்ட மாட்டிக்கிட்டு என் ரித்து என்ன பாடு பட போறானானோனு நான் தான் பயந்து போய் இருக்கேன்."
"வெளிய தைரியமா இருக்க போல காட்டிக்கிட்டாலும், உள்ளுக்குள்ள அவ படுற கஷ்டம் எனக்கு மட்டும் தாங்க தெரியும். பிளீஸ் அவ கூட இருங்க" என்று கெஞ்சி ருக்ஷாவை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி விட்டு அவன் அருணனை பின் தொடர்ந்தான்.
அவனை அனுப்பி வைத்த அரை மணி நேரத்தில் பாலாவை தேடி ஓடி வந்தாள் ருக்ஷா.
"என் பாப்பா கூட தானே உங்களை இருக்க சொன்னேன். இங்க ஏன் வந்தீங்க?" என்று பாலா அவளை திட்ட,
"ப்ரோ ஒரு முக்கியமான விசயம்" என்று படப்படக்க, அவள் பதட்டம் உணர்ந்து அவனும் என்ன என்று விசாரித்தான்.
வழக்கம் போல் மாத மாதம் பத்மாவதி பாட்டி உடல்நிலையை பரிசோதிக்க மருத்துவர் வருவார். அது போல் தான் இன்றும் வந்தவர், சனாவுடன் விளையாடிக் கொண்டிருந்த ராதிகாவை பார்த்து, "இந்த பொண்ணு யாரென்று" விசாரிக்க, பாட்டி அளித்த பதிலில் அவர் முகமோ பேயறைந்தது போல் ஆனது.
"என்ன அருணன் வைஃப் ஆஆ?" என்று வாயை பிளந்தவர், ஏதோ பயத்துடனே பாட்டியை செக் பண்ணி விட்டு வெளியேறினார்.
அப்போதும் கூட தோட்டத்தில் சனாவை மடியில் தூக்கி வைத்து கதை சொல்லிக் கொண்டிருந்த ராதிகாவை அவர் பார்த்து கொண்டே போக, அவர் பின்னால் இருந்து அவர் பார்வையை கவனித்த ருக்ஷாவுக்கு ஏதோ தவறாக படவே காரில் அவர் அருகே ஏறி அமர்ந்து கொண்டாள்.
தன் மூளையை ஆக்கிரமிக்கும் விசயத்தை யாரிடமாவது உடனே பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மனிதனும் நினைப்பான். இது மனித இயல்பு.
அப்படி தான் அவரும் நான்கு வருடமாக தன் இதயத்தை வேரோடு அறுக்கும் அந்த நிகழ்வில் இருந்து வெளிவர முடியாது தவித்து கொண்டிருந்தவர், மீண்டும் அதே இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ! என்ற பயம் ஒரு புறம் இருக்க,
அருணன் மனைவி என்று அறிமுகம் செய்து வைத்த ராதிகா மீது பாவமும் வந்தது.
உடனே போனை எடுத்து தன் கணவருக்கு அழைத்த வைத்தியர், "அருணன் மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். அவன் முதல் மனைவியை கொன்னது போல இந்த பொண்ணையும் கொன்னுடுவாங்க… அத நினைக்கும் போது எனக்கு இப்பவே உடல் நடுங்குது" என்று அவர் விரல் நடுங்க, குரல் கம்ம கணவரிடம் புலம்ப,
அருகே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ருக்ஷாவுக்கோ அட்ட ஷாக்.
"ப்ரோ என்ன கொன்னுட்டாங்களாம் ப்ரோ…" என்று குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு அவள் பாலாவிடம் சொல்ல,
"அது கூட தெரியாம தான் பேயா சுத்துறீங்களா?" என்று தான் பாலா கேட்டான்.
"தெரிலயே!" என்று அவள் கையை விரிக்க,
"அதெப்படிங்க, உங்களுக்கு தெரியாம உங்கள கொலை செஞ்சிருக்க முடியும்?" என்று அவள் விளையாடுகிறாள் என்ற சிந்தனையில் பாலா கேட்க….
"நான் என்னத்த கண்டேன்?" என்று பதிலளித்த ருக்ஷாவுக்கோ இத்தனை நாள் பிரசவ நேர மரணம் என்று எண்ணிக் கொண்டிருந்த இறப்பு, இயற்கை மரணம் அல்ல, சில இதயமற்ற மனிதர்களின் சதி என்பது தெரிய வர…
முடிந்து போன தன் வாழ்வை விட, புதிதாக அத்தியாயம் எழுத போகும் ராதிகாவை எண்ணி தான் பயமும், பதட்டமும் அதிகரித்தது.