10
கல்யாணம் முடிந்ததும் இருவரையும் அருகருகே நிற்க வைத்து சில பல போட்டோக்களை போட்டோகிராபர் எடுக்க முயல.. இருவரும் வேறு துருவங்களாக பிரிந்து நிற்க.. அன்பும் ஆடலரசியும் தான் தத்தம் மக்களை அதட்டி உருட்டி அருகருகே நிற்க வைத்து, "அதிகம் இல்லை.. நாள பின்ன பாக்குறதுக்காக வேண்டும்" என்று சில போட்டோக்களை எடுத்தனர்.
போட்டோவுக்கே எதிரும் புதிருமாய் நிற்பவர்கள்... அடுத்தடுத்து வாழ்க்கையில்??
பெரியவர்களிடம் தனித்தனியாக ஆசீர்வாதம் வாங்க சொல்ல பிரியம் தான் அவர்களுக்கு. ஆனால் வந்தனா ஒரு பக்கம் மருமகளை முறைத்துக் கொண்டு நிற்க.. கதிரேசன் வீம்பாக இவர்களை பார்ப்பதை தவிர்க்க..
எங்கனம் இதில் ஆசீர்வாதம் வாங்க??
அதனால் அனைவருக்கும் பொதுவாய் இருவரையும் நமஸ்காரம் செய்ய வைத்து ஒட்டுமொத்த சொந்தக்காரங்களும் மலர்களை தூவி ஆசீர்வாதம் செய்தனர்.
அதன்பின் சொந்தகாரர்களை பந்திக்கு அனுப்பும் செயலை அவர்களே பார்த்துக்கொள்ள.. தங்கை குடும்பம் இப்பொழுது சம்பந்தி குடும்பமாய் மாறிவிட "வீட்டுக்கு வாங்க" என்று இருவரையும் முறையாய் அழைத்தார் அன்புச்செழியன்.
"ஆமா.. இங்க எல்லாம் முறையோடு தான் நடந்தது.. இப்ப வீட்டுக்கு அழைக்கிறது மட்டும்தான் குறை!! சரிதான் போயா.. நீயும் வேண்டாம் உன் குடும்பமும் வேண்டாம். ஆனால் என் பொண்ண பார்க்க நான் வருவேன். சொல்லிக்கிட்டு எல்லாம் வரமாட்டேன். எப்ப வேணாலும் திடீர்னு வருவேன். என் பொண்ணுக்கு அங்கு ஒரு சிறு குறை இருந்தாலும் உங்களையெல்லாம் பார்க்க வேண்டிய இடத்தில் பாத்துப்பேன்!!" என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வீர நடையுடன் வெளியேறினார் கதிரேசன்.
ஆனால் அன்னையால் அவ்வாறு வெளியேற முடியாது அல்லவா? என்னதான் மகள் தந்தை மீது பாசத்தை கொட்டினாலும், கல்யாண பெண்ணுக்கு வேண்டியவற்றை பார்க்கும் பொறுப்பு அன்னைக்கே!!
பொதுவாக நல்ல முறையில் திருமணம் நடந்தாலே.. வக்கணை பேச நாலைந்து பேர் இருப்பார்கள். இப்பொழுது இம்மாதிரி திருமணத்தில் அங்கே பெண்ணுக்கு எப்படி வரவேற்பு இருக்கும் என்று தெரிந்த அரசி, கணவனுடன் செல்லாமல் அங்கேயே நின்று கொண்டார். பிள்ளையையும் தன் கண் பார்வையில் போக வேண்டாம் என்று தன்னுடன் நிறுத்திக்கொண்டார்.
இந்தப் பக்கம் காளிங்கன் குடும்பத்தினர் அப்போதே கிளம்பி சென்றுவிட.. வந்தனாவோ தன் மகளுடன் முன்னரே சென்றுவிட்டார் வீட்டுக்கு.
காரில் புதுமணத்தம்பதிகளோடு முன்னே அகிலன் அமர்ந்துகொள்ள.. பின்னே வந்த காரில் அண்ணனோடு சேர்ந்துகொண்டார் ஆடலரசி கூடவே அவர்களது அன்னை. இப்போது தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது. மீண்டும் மகளும் மகனும் இந்த திருமண பந்தத்தின் மூலம் ஒன்று கூடி விட்டார்கள் என்று.
வீட்டில் ஆரத்தி எடுக்க அபர்ணாவோ வந்தனாவோ வரவில்லை. இருவரையும் வெளியே நிறுத்தி விட்டு ஆடலரசியே உள்ளே சென்று ஆலம் கரைத்து வந்து உள்ளே அழைத்தார்.
வந்தனாவின் உறவுக்காரர்கள் "பார்த்தியா நீ பாட்டுக்கு உள்ள வந்து உட்கார்ந்து இருக்க.. அவ உரிமையோடு வந்து ஆலம் கரச்சு உள்ள கூட்டிட்டு போறா.. இவ்வளவு நாள் தள்ளி இருந்தா, இப்ப பொண்ண கொடுத்ததும் வந்து ஒட்டிக்கிட்டா.. நீ இப்படி இருக்க கூடாது. உன் இடத்தை கெட்டியாக பிடிச்சுக்கோ" என்று தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டுவிட்டு சென்றனர்.
தான் வரவில்லையென்றால் சமாதனப்படுத்த தன்னை கணவர் அழைப்பார்.. அவரிடம் சிலபல கண்டிஷன்களை போட்டு அதன் பிறகு இவர்களை உள்ளே அழைக்க வேண்டும், என்று பல திட்டங்களை போட்டு வைத்திருக்க.. அனைத்தையும் தகர்த்து விட்டார் ஆடலரசி என்று இன்னும் வன்மம் கூடியது அவர் மேல..
ஆடலரசி மகளை பூஜை அறை அழைத்து சென்று விளக்கு ஏற்ற சொல்ல.. "மா நீனும் சேர்ந்த படுத்தாத மா.. என்னமோ விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா மாதிரி ஒவ்வொரு சடங்கையும் செய்ய சொல்ற" என்று எரிந்து விழுந்தாள் அன்னையிடம்.
"நானா உன்னை அந்த ரூமுக்குள்ள போய் சொன்னேன்? உன்னை அடக்க ஒடுக்கமா உங்க அப்பாக்கு பக்கத்துல தானா உட்கார சொன்னேன் இல்ல என் பக்கத்துல தான் உட்கார சொன்னேன். ரெண்டுத்தையும் கேட்காமல் நீயே போய் ஏதோ செஞ்சு.. இப்போ கல்யாணம் நடந்து போச்சு. இப்ப வந்து அதை செய்யமாட்டேன் இதை செய்ய மாட்டேனா.. உன்னோட இந்த பேச்சு எல்லாம் என்கிட்ட தான் எடுபடும். நாளைக்கு உன் அத்தக்காரி வந்து பேசுவா.. நீ எதிர்த்து பேசினா உன்னை கொமட்டுலேயே இரண்டு குத்துவா" என்று மறைமுகமாக மகளின் மனதில் வீட்டு நிலைமையை புரிய வைக்க முயன்றார்.
ஆனால் அவளோ ஏற்கனவே ஒரு திட்டத்தோடு தானே வந்திருக்கிறாள். "அதெல்லாம் எங்க எப்படி பேசுணும்னு எனக்கும் தெரியும்!" என்று முறுக்கிக் கொண்டாள்.
"அப்படி எல்லாம் பேசாத பாப்பா?! எப்பவுமே வார்த்தைக்கு வார்த்தையாடினா.. அங்கே வெறுப்புதான் மண்டும். அன்பு பெருகாது!! கொஞ்சம் நீ அனுசரிச்சு போயேன்.. விட்டு கொடுப்பவங்க கெட்டு போக மாட்டாங்க தாரா!!" என்று மகளின் தாடையைத் உதவி அன்னை கெஞ்ச..
"இவ்வளவு வருஷமா இவங்க ஆடுற ஆட்டத்துக்கு எல்லாம் நீ அடங்கி தானே போன.. என்ன பெருசா மாற்றம் வந்துட்டு இவங்க கிட்ட.. நீயே சொல்லு? எனக்கு ஒன்னும் தெரியாது நினைக்கிறியா? எல்லாம் தெரியும்!! அதனாலதான் உங்க அண்ணன் குடும்பம்னாலே எனக்கு அவ்வளவு ஒரு வெறுப்பு!!" என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் தாரிகா.
"ஆமா.. உங்க அத்த குடும்பம் மட்டும் ரொம்ப ஒழுங்கா? அவங்களும் உன்னை கல்யாணம் காட்டுவதற்காகத்தான் இதுநாள் வரைக்கும் நல்லவ வேஷம் போட்டுட்டு இருக்கா.. இப்போ உன் அத்தக்காரியோட சாயம் வெளுத்துப் போகும்" என்று நொடித்து கொண்டார்.
அம்மாவும் மகளும் எங்கே வழக்கு அடித்துக்கொண்டிருக்க.. அன்புத் தாயாரோ "முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணு அன்பு" என்று நடு ஹாலில் உரத்த குரலில் கூறினார்.
"என்னது ஃபர்ஸ்ட் நைட்-
ஆஆஆ!!!" என்று அலறினார்கள் தயாவும் தாரிகாவும்.
தொடரும்..
🤣🤣🤣🤣 செம்ம ஃபன்