7
தயாளனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் மணமேடையில் மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருக்க.. இங்கு யாரென்றே தெரியாத ஒரு பெண்ணுடன் தனி அறையில் அவன்!! அதுவும் அரைகுறை நிலையில் அவள்.. அவளின் புடவையை தன் கையில்..
பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைத்தான் குடித்தேன் என்று சொன்னால் நம்புமா உலகம்?
அதுவும் கையும் களவுமாக அல்லவா சிக்கி இருக்கிறான். இல்லை இல்லை கையும் புடவையுமாக!!
இந்த லூசு புடவையை வாங்கி காட்டினால் ஆவது, ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். ஆனால் இவள் புடவையும் வாங்க மாட்டேங்குறா.. கட்டவும் மாட்டேங்குறாளே!! என்ன கொடுமை!! இப்படி ஒரு அராத்து லூசு கிட்ட மாட்டிக்கிட்டேனே!! என்றவன் புலம்ப தவித்தவன், வேறு என்ன செய்து தப்பிக்கலாம் என்று சுற்றுமுற்றும் பார்த்து இங்கிருந்து கீழே குதித்து விடுவோமா.. என்று ஜன்னலை திறக்க அதுவோ இரண்டாம் மாடியில் இருந்தது.
எல்லா பக்கமும் வழி அடைபட்டுக் கிடக்கிறது. அவன் சோர்ந்து கதவையும் திறக்க முடியாமல் அவஸ்தையோடு நின்றிருக்க.. அந்த நேரம் தடாலென்று கதவு உடைபட்டு திறக்க.. வெளியே கல்யாணத்துக்கு வந்த மொத்த சொந்தங்கள் நின்றிருந்தனர்.
கதவைத்திறந்த அதிர்ச்சியில் தாரிக்காவுக்கு ஏற்கனவே இருந்த வெறுப்பு கோபம் அதனோடு சேர்த்த பயம். அப்படியே கட்டிலுக்கு பின் பக்கம் அமர்ந்து கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்து விட்டாள்.
தயாளன் கையில் வைத்திருந்த புடவையையும் அவளையும் மற்றும் அவன் உறவினர்களையும் பார்த்தவாறு செய்வது அறியாமல் நின்றிருந்தான்.
கதவை திறந்தவர்கள், துச்சாதனன் போல கையில் புடவையோடு நின்றிருந்த தயாளனையும், மடங்கி அமர்ந்து அழுத முகமறியா பெண்ணையும் அதிர்ச்சியோடு பார்த்து ஆவென்று வாயை பிளந்து நின்றார்கள்.
"என்னடா பண்ணி வச்சிருக்க!!" என்றவாறு உள்ளே வந்த அன்பு ஓங்கி கன்னத்தில் அறைந்தார் தயாளனை.
காளிங்கன் வாய் பேச முடியாமல் இம்மாதிரி நிலையில் வேறு என்ன செய்வது என்று தெரியாமல் மருமகனை கண்களாலேயே எரித்து நின்றிருந்தார்.
நாலு வார்த்தையையே நானூறாக உருவேற்றி பேசும் உறவினர்களின் கையில் அல்லாமல் வில்லாமல் கண்டெண்டை எடுத்து கொடுத்து இருந்தான் நம் நாயகன்.
பட்ட பகலில் கல்யாண மண்டபத்திலேயே
ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று இருக்கிறானே இவனையெல்லாம் என்ன செய்வது?
பாவி.. படுபாவி.. பாதகா..!!
பாவம் அந்த பொண்ணு.. யாரு பெத்த பொண்ணோ?
இனி அந்த பொண்ணோட வாழ்க்கை என்னவாகும்??
என்று பலவாறு பேசி தீர்த்தனர்.
பெண்ணை தேடிப்பார்த்து காணோம் என்று அந்தப் பக்கமாக வந்த ஆடலரசி ஏதோ ஒரு அறையின் முன் கூட்டமாக நிற்பதை பார்த்து 'வீட்டுக்காரர் இப்பதான் சொன்னார் சண்டையும் சச்சரவும் இருக்குனு.. அது மெய்ப்பிக்க ஏதாவது ஒன்னு நடக்குதே.. ஆண்டவா!! என் அண்ணன் பையன் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி வை!!" என்று அண்ணனுக்காக வேண்டியவருக்கு தெரியவில்லை, தன் பெண் தான் இதில் சிக்கி இருக்கிறாள் என்று.
"என்னப்பா எல்லாரும் அப்படியே நிக்குறிங்க.. யாராவது பொண்டுகள கூப்பிடுங்க.. யார் அந்த பொண்ணு என்னன்னு பாருங்க முதல்ல.. அந்த பொண்ணுகிட்ட புடவை கொடுடா தயா!!" என்று அங்கிருந்த பெரிய மீசை ஒன்று பஞ்சாயத்து பண்ண..
'நான் என்ன ஆசைப்பட்ட வைத்திருக்கிறேன்.. அவ வாங்கினா தானே?' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் அருகில் இருந்த கட்டிலில் அந்த புடவையை தூக்கி போட்டான்.
அந்த வழியே சென்ற ஆடலரசியை, "அரசி உள்ளே வா" என்று அழைக்க, "மதனி.. என் பொண்ணை தேடி போறேன். அப்புறம் வந்து பேசுறேன்" என்று அவர் செல்ல.. "அய்யோ அரசி முதல்ல வா.. உள்ள உங்க அண்ண வீட்டு பஞ்சாயத்து தான் ஓடுது. உன் பொண்ணு இங்கே எங்கையாவது தான் இருப்பா. அப்புறம் என்னான்னு பார்க்கலாம்.. வா அரசி" என்று அவரை அழைத்து கொண்டு சென்றார் உறவினர் ஒருவர்.
"அதே சமயம் என்னடா தாராவையும் காணோம்.. அவளை தேடிட்டு போனா உங்க அம்மாவையும் காணோம்" என்று கதிரேசன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரை தாண்டி சில பல பேர் அந்த ரூமை நோக்கி ஓட "அப்படி என்னடா அங்கே பஞ்சாயத்து நடக்குது.. வா நாமும் போய் பார்ப்போம்!" என்று அகிலனை கையோடு அழைத்து சென்றார் அவர்.
அரசி அங்கே செல்லும் முன் கதிரேசனும் அகிலனும் அங்கே சென்றிருந்தனர். வேர்த்து விறுவிறுத்து மேல்சட்டை பட்டன் இரண்டும் கழண்டு இருக்க.. முகத்தில் அதிர்ச்சியோடு நின்றிருந்த தயாளனை பார்க்க பாவமாக இருந்தது அகிலனுக்கு. சற்று முன் தான் அவனை கம்பீரமாக பார்த்தது ஞாபகம் வந்தது.
வந்தனா அப்போதுதான் உள்ளே நுழைய.. பின்னாலேயே உறவினரோடு அரசியும் நுழைந்தார்.
மகனின் கோலத்தை கண்டு அதிர்ந்த வந்தனா.. "அய்யோ.. என் குடி முழுகிப் போச்சே. எங்குடும்பம் மானமே போச்சே… ஏன்டா? உனக்கு ஏன் இப்படி புத்தி போச்சு?? அலங்காரமா என் மருமக இருக்க.. போயும் போயும் ஒரு அவுசாரி கிட்ட போய் இருக்கியே.. எங்க அந்த எடுபட்ட சிறுக்கி என் பையன மயக்கியவ.. முதல்ல போய் குளிச்சிட்டு வா.. வந்து கல்யாணத்த முடி! அப்புறம் இந்த பஞ்சாயத்தை பார்க்கலாம்" என்று மகனின் கையை பிடித்து இழுக்க..
"நல்லாருக்கே உன்னோட நியாயம்?? கல்யாணத்துக்கு வந்த ஏதோ ஒரு பொண்ண.. உன் பையன் ரூமுக்கு தள்ளிட்டு வந்து தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சு இருக்கான்.. நீ அதை பூசி முழுகி பையனுக்கு கல்யாணம் பண்ண பார்ப்பியா? அப்ப அந்த பொண்ணோட வாழ்க்கை?" என்று ஒரு உறவினர் பேச..
அப்போதுதான் கட்டிலில் கிடந்த புடவையை பார்த்த ஆடலரசி அதிர்ச்சியாகி.. "அய்யோ என் பொண்ணு!!" என்று அலறிக்கொண்டே கட்டிலின் பின் பக்கம் போக..
கதிரேசன் அகிலன் அன்பு முகத்தில் ஈயாடவில்
லை.
வந்தனாவோ இகழ்ச்சியுடன் முகத்தை சுளித்தார்.
தொடரும்..