3
எலியும் பூனையாகவும் கூட கிடையாது பாம்பும் கீரியுமாக தான் முட்டி கொண்டனர் மாமனும் மச்சானும்.
இவர்கள் சண்டைக்கு இடையில் குளிர் காய்ந்தது என்னவோ கதிரேசனின் தங்கை செவ்வந்தி குடும்பமும்.. வந்தனாவின் அண்ணன் காளிங்கனின் குடும்பம்தான்.
தன் ஒரே மகனுக்கு அண்ணனின் மகளை மணமுடித்து வைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக சென்றுவிடலாம் என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தது செவந்தியின் குடும்பம்.
தயாளனுக்கு பொண்ணைக் கொடுத்து முழு அதிகாரத்தையும் சொத்தையும் தங்கள் வசம் என்று எண்ணத்தில் இருந்தது காளிங்கனின் குடும்பம்.
வந்தனாவுக்கும் அதே எண்ணம்தான், எங்கே பகையை எல்லாம் மறந்து தங்கை மகளை மருமகளாக கொண்டு வந்து விடுவாரோ என்ற பயத்தில், உடம்பு சரியில்லை.. நடந்தால் உடம்பு தானா பறக்கிறது குதிக்கிறது என்று இல்லாத நாடகமெல்லாம் ஆடி, காலேஜ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மகள் அபர்ணா இருக்க.. அவளுக்கு முன் மகனுக்கு திருமணத்தை செய்ய துடித்து அதை செயல்படுத்தியும் விட்டார்.
'இனி எல்லாம் சுகமே! சுபமே!!' என்று அவர் நினைத்திருக்க. அந்த எண்ணத்தில் பெரும் மண்ணை கொட்டினார் அன்பு தனது தங்கையையும் கல்யாணத்திற்கு அழைக்க வேண்டும் என்று.
"அந்த கேடுகெட்ட குடும்பத்தை எல்லாம் என் மகனின் கல்யாணத்திற்கு கூப்பிட முடியாது!!" என்று ஆங்காரமாக வந்தனா கத்த.. "என் தங்கை குடும்பம் உனக்கு கேடு கெட்ட குடும்பமா?" என்று அழுத்தமான பார்வையோடு கேட்ட அன்பை பார்த்தவருக்கு உள்ளுக்குள் குளிர் அடித்தது.
அதற்குள் தயாளனும் "அம்மா என்ன இருந்தாலும் அவங்க சொந்த அத்தை.. கல்யாணத்துக்கு கூப்பிட கூடாதுன்னு சொன்னா எப்படி?" என்று தந்தைக்கு கொடி பிடிக்க.. மகளும் ஆமோதிக்க..
இதுநாள் வரை மகன் குடும்பத்தை நினைத்து வருந்திய அன்பு அரசியின் தாயார், "நீயும் ஒரு பொண்ணை வச்சி இருக்க வந்தனா… ரொம்ப ஆடாதே!" என்று இதுநாள்வரை மனதை அரித்துக் கொண்டிருந்தவற்றை வார்த்தைகளால் கொட்டிவிட்டார்.
"ஓஹோ!! குடும்பமே ஒன்று சேர்ந்துட்டிங்களோ?? நீங்க யார் என்ன செஞ்சாலும் நான் இந்த கல்யாணத்துக்கு அவங்கள வரவை விட மாட்டேன்!" என்று அவர் தர்ணா நடத்த..
"என் தங்கச்சி வராம ஒரு கல்யாணம் என் மகனுக்கு தேவையே கிடையாது!" என்று அன்பும் ஒரு போடு போட..
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த காளிங்கன் "மச்சான்.. மச்சான் அவ தான் ஏதோ அறிவில்லாம பேசுறானா.. நீங்களும் அவளுக்கு சரிக்கு சரியா பேசுறீங்களே? என்ன இருந்தாலும் நம்ம கூட பொறந்தவங்க நமக்கு முக்கியம் இல்லையா? நீங்க போய் பங்காளிக்கு பத்திரிக்கை வைத்து கூட்டிட்டு வாங்க" என்று மச்சானை அந்த பக்கம் அனுப்பிவிட்டு இந்த பக்கம் தங்கையை காய்ச்சி எடுத்துவிட்டார்.
"நான் உன்னை அறிவாளி நினைச்சேன் வந்தனா.. நீ இப்படி பண்ற? வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த மாதிரி.. நீ பாட்டுக்கு இப்படி பேசினா அத்தானும் முறுக்கிக்கிட்டு கல்யாணத்த நிப்பாட்டிட்டா என்ன பண்ணுவ? போதாக்குறைக்கு அந்த வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கு.. நாளைக்கு அந்த பொண்ண கொண்டு வந்து என் தங்கச்சி பொண்ணை தான் கட்டு வைப்பேனு சொன்னால் இத்தனை வருட நம் உழைப்பும் போய்டும். யோசிச்சு பாரு!!" என்று நவயுக சகுனியாய் தந்திரங்களை ஓதினார் காளிங்கன்.
பத்திரிக்கை வைக்க அங்கே சென்றால் கதிரேசனோ.. 'உன்னை வெட்டவா? குத்தவா?' என்று முறைத்துக் கொண்டு நின்றார். ஆனால் ஆடலரசி தான் கண்கள் கலங்க அண்ணனை "வா ண்ணே.. உள்ள வாண்ணே!" என்று வாய்நிறைய அழைக்க தங்கையின் அன்பில் நெகிழ அவரும் கட்டிக்கொண்டார்.
தங்கையின் குடும்பத்திற்கு பட்டு உடைகளோடு மரியாதையோடு பத்திரிக்கை வைக்க.. முறைத்துக் கொண்டு நின்ற கதிரேசன் சாமானியமாக மலை இறங்கவில்லை.
ஆடலரசி தான் அண்ணனுக்கும் கணவனுக்கும் இடையில் அல்லாடினார். பார்த்துக் கொண்டிருந்த தாரிகாவுக்கு தந்தையை பேசிய மாமனை சிறிதும் பிடிக்கவில்லை.
"எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு இப்ப இங்கே பத்திரிக்கை வைக்க வந்த? கொஞ்சமாவது வீட்டு மாப்பிள்ளையான எனக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்சுதா? கல்யாணத்துக்கு மட்டும் பத்திரிக்கையை நீட்டிட்டு வர.. அதுக்கு முன்ன நிச்சயதார்த்துக்கு.. பெண் பாக்குறதுக்கு எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லல.. ஒரு வார்த்தை எங்கள கூப்பிடல" என்று ஏகத்துக்கும் எகிறினார் கதிரேசன்.
"மாப்பிள தப்புதான்! ஆனா நிச்சயதார்த்தம் கல்யாணத்துக்கு முதல் நாள் தான் வைத்திருக்கிறோம். பொண்ணு வெளி ஆளா இருந்தா குடும்பத்தோட எல்லாரையும் கூட்டிட்டு போய் பார்க்கலாம். ஆனா பொண்ணு வந்தனாவுடன் அண்ணன் பொண்ணு தான்! கூடவே வந்தனாவுக்கு முன்ன மாதிரி உடல் நலமில்லை.. அதான் தயாவுக்கு இந்த அவசர கல்யாணம். இல்லைன்னா பொண்ண வச்சுட்டு முன்னாடி அண்ணனுக்கு பண்ணுவோமா?" என்று வீட்டு மாப்பிள்ளையிடம் தணிந்து பேசினார் அன்பு.
"பார்க்கிறோம்.. பார்க்கிறோம். நேரமிருந்தால் வர பார்க்கிறோம்!" என்று முகத்தில் அடித்தாற்போல் கூற..
"கண்டிப்பா நீங்க எல்லோரும் வரணும் மாப்பிள்ளை!" என்று தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு தங்கையிடம் கண்களாலேயே நலம் விசாரித்து வெளியேறினார் அண்ணன்.
"இப்ப மட்டும் என்ன தங்கச்சி பாசம் இவருக்கு பொத்துக்கிட்டு வருது! எனக்கு இவரை பிடிக்கவே இல்ல பா. என்னையெல்லாம் கூப்பிடவே கூப்பிடாதீங்க.. உங்கள மதிக்காத அவங்க வீட்டுக்கு எல்லாம் நான் வரவே மாட்டேன்!" என்று தங்கைக்கு மேலே எகிறினாள் தாரிகா..
"இப்ப புரியாது டி உனக்கு! கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு போவ இல்லையா அப்பத்தான் உனக்கு புரியும்!" என்று கலங்கிய கண்களோடு உள்ளே சென்றுவிட்டார் ஆடலரசி.
"ஒத்துழையாமை இயக்கம்" "சத்தியாகிரகம்" "தர்ணா" என்று காந்தி வழியில் போராடி குடும்பம் அத்தனையையும் இழுத்துக் கொண்டு இதோ கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்துவிட்டார்.
ஆடலரசியின்
குடும்பத்தை வன்மமாக முறைத்தார் வந்தனா!
தொடரும்..
இந்த வந்து & காளி ரெண்டு குடும்பத்துக்கு ஆக வழிகள் 😬😬😬😬😬