தளிர் : 12
குளியலறையில் தண்ணீரை திறந்து விட்டு அதன் அடியில் கால்களை கட்டிக் கொண்டு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த ராதிகாவுக்கோ, காலையில் பாத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளும், ஏளன பார்வையும் மட்டுமே திரும்ப திரும்ப மனதில் ஓட, உடல் கூசி போனது.
எவ்வளவு முயன்றும் இரவு நடந்தவை எதுவும் நினைவுக்கு வரவில்லை. நீர் பட்டு எரிச்சல் தரும் அங்கமே அவள் சங்கதி உணர்த்த, கூனி குறுகி போனாள் பெண்ணவள்.
"நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்கு ஏன் இப்படி?" கடவுளை வஞ்சிக்கும் வார்த்தைகள், ஆனால் அவரிடம் நியாயம் கேட்க கூட அவரை அழைக்க தோன்றவில்லை.
நொடிக்கு நூறு முறை "மாமா இருக்கியா?" என்று அவள் நாடும் பாலா பெயரை உதடுகள் மட்டுமல்ல அவள் உள்ளம் கூட அழைக்க முயலவில்லை.
அவன் தன்னை காக்கா வரவில்லை என்ற கோபத்தை விட, எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனை எதிர் கொள்வது? மாபெரும் தயக்கம் தான் இருந்தது.
மனதறிந்து, அவள் சுய நினைவுடன் எதுவும் செய்யவில்லை தான். ஆனாலும் முறையற்ற ஓர் இரவு ஒரு ஆடவனுடன் கழித்து இருக்கிறாளே…
இந்த விசயம் வீட்டாருக்கு தெரிந்தால்? தன் பக்க நியாமென்று எதை சொல்வாள்?
ஊரார்களின் குற்ற சாட்டுகளை எதிர்க் கொள்வதை நினைக்கவே நெஞ்சு வெடித்து சிதறியது.
இந்த நொடி பூமி பிளந்து பூமி தாய் தன்னை அரவணைத்து கொள்ள மாட்டாளா? என்று கூட மனம் ஏங்கியது.
தூய்மை இழந்து மற்றவர்களின் வீண் சொற்களுக்கு இரையாவதை விட, தூக்கில் தொங்குவதே மேல் என்று எண்ணியவள், மனதின் அழுத்தம் தாங்காது நொடியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுத்து, புடவை அணிந்து கொண்டே குளியலறை விட்டு வெளியே வந்தாள்.
மண்ணுக்குள் போகும் உடல் தான், உயிரை மாய்க்க முடிவெடுத்த பிறகும் கூட எந்த பெண்ணும் மானம் துறந்து தற்கொலை முயற்சிக்க எண்ணுவதில்லை. ஆனால் அவள் உயிருடன் இருக்கும் போதே அந்த உடலை கூறு போடும் பிணந்தின்னி கழுகின மாந்தர்களின் இரக்கமற்ற செயலை என்னவென்று சொல்ல…
மானம் கெட்டு வாழ வேண்டுமா? என்று எண்ணியவள் நொடியில் பேனில் சேலை ஒன்றை கட்டி, கண்களை மூடிக் கொண்டு தலையை அதனுள் நுழைத்தும் விட்டாள்.
கோபத்தில், ஆத்திரத்தில் சிந்தையிழந்து எடுக்கும் முடிவில் எத்தனை உயிர்கள் போய் விடுகிறது. சிந்தையிழந்து நின்றவளை "அம்மா… அம்மா… " என்று அவள் குழந்தைகளின் அழு குரல் சுயதிற்கு கொண்டு வர,
சட்டென்று கண்களை திறந்தவளுக்கு, தன் முடிவால் நிற்கதியாய் நிற்க போவது ஒன்றும் அறியா பிள்ளைகள் தானே! என்ற உண்மை புத்தியில் உரைக்க,
தன்னையே நொந்து கொண்டு வேகமாக இறங்கி கதவை திறந்து, வாசலில் கண்ணீரோடு நின்றிருந்த மூன்று பிள்ளைகளையும் மார்போடு அணைத்து வெடித்து அழ, அன்னை அழுகையின் காரணம் அறியவில்லை என்றாலும், தாயின் கண்ணீரில் பிள்ளைகளும் கதறி அழுதது.
அவள் உள்ளே கட்டிய சேலை முதற்கொண்டு எல்லாவற்றையும் அமைதியாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார் சகுந்தலா.
என்ன? ஏது? என்று அறியாது ஊரை கூட்டும் ரகம் கிடையாது சகுந்தலா. தனி ஒரு பெண்ணாக ஐந்து பிள்ளைகளை வளர்ந்தவர், இப்போதும் தனித்து வாழ உடலில் திறம் இருந்தாலும், காலனுக்கு வாரி கொடுத்த கடைசி பிள்ளையின் பிள்ளைகளுக்காக தானே இங்கே இருக்கிறார்.
சட்டென்று கோபம் என்னும் கனலை வீசி வேதனை படுத்தும் ஆள் கிடையாது.
ராதிகா வீடு வந்து சேர்ந்த நிலையே அவருக்கு நெருடலாக இருக்க, அவளிடம் எதையும் கேட்டு வேதனை படுத்த எண்ணாது அமைதியாக நின்றிருந்தார்.
சாக நினைத்தால் கூட தன் விருப்பத்திற்கு முடிவெடுக்க முடியா நிலை அவளுக்கு. கல்லடி பட்டு தான் காலம் தள்ள வேண்டும் என்று கடவுள் தலையில் எழுதி இருந்தால் என்ன செய்ய இயலும்? சிலர் வாழ்க்கை இப்படி தான். சூழ்நிலையும் சுற்றமும் எள்ளி நகையாடும் கைபொம்மை ஆக்கும். பெண்கள் வீறு கொண்டு எழுந்து நிற்காது, பந்து போல் உதை பட்டு தான் ஆக வேண்டும்.
மிஞ்சி மிஞ்சி போனால் என்ன சொல்லிவிட போகிறது? திமிர் பிடித்தவள், ஆணவகாரி, கொழுப்பெடுத்தவள் என்று தானே! எது வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும். இப்போது மட்டும் உன்னை கொஞ்சுகிறதா? எப்போதும் தூற்றும் உலகத்திற்காக எதுக்கு ஓடாக தேய வேண்டும்?
யாருக்காக வாழ வேண்டும் என்று தவிக்கும் போது… எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்று அழும் குழந்தைகள் மட்டும் இல்லை என்றால் எப்போதோ பல கைம்பெண்கள் வாழ்க்கை முடிந்து தான் போயிருக்கும்.
தன்னை கட்டிக் கொண்டு அழும் பிள்ளைகளை முத்தி தீர்த்தவள், அப்போது தான் சிறியவன் தலையில் இருந்த கட்டை கவனித்தாள்.
"தர்ஷூ… என்னாச்சு? எப்படி அடிப்பட்டுச்சு" என்று அவள் பதறி கேட்க, "மதில்ல இருந்து கீழ விழுந்துட்டான்" என்று பெரியவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சர சரவென்று அழுத்தமான காலடிகள் வீட்டிற்குள் நுழைந்தது.
பிள்ளைகள் அருகில் மண்டியிட்டு இருந்தவள் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்த வலிய கரம் ஒன்று, "***** நாயே என்ன காரியம் பண்ணி வச்சிருக்க? இப்படி ஊர்மேஞ்சி தான் காலம் தள்ளுறியா… உடம்பு கூசல உனக்கு? என்று பாலாவின் மூத்த அண்ணன் அனலை வாரி இரைக்க, அரவணைக்க வேண்டியவன், அன்பு கரம் நீட்டாது பரிதவிக்க விட்டு சென்றவள் இந்த பேச்சுகள் எல்லாம் கேட்க வேண்டும் என்று தானே சாக துணிந்தாள்.
அதுவும் முடியாமல் நடை பிணமாக இருப்பவளை, குடும்ப மானத்தை கெடுத்து விட்டாள் என்று ஆளாளுக்கு திட்ட, கண்ணீரோடு பதிலின்றி தலை குனிந்து நின்றாள் காரிகை.
பாலாவுக்கு மூனு அண்ணன்கள் ஒரு அக்கா. இத்தனை நாள் அவள் இருக்காளா? செத்தளா? மூனு பிள்ளைகளை வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறாள்? என்று ஒரு எட்டு பார்க்க கூட நேரமில்லாது ஒதுங்கி நின்ற சுற்றமோ, இன்று குடும்ப மானம் போய் விட்டது என்று அவளை குற்றம் சாட்டி வார்த்தைகளால் வதைக்க மட்டும் வண்டிக் கட்டி வந்து விட்டது.
"அவ எப்பவும் இப்படி தான் இருந்து இருக்கா, நாம தான் கண்ணை மூடிட்டு நல்லவன்னு நம்பி இவ்வளவு நாள் ஏமாந்து இருந்திருக்கோம்"
"இவ யோக்கியதை தெரிஞ்சி தான் மனசு தாங்காது என் தம்பி உயிரை விட்டான் போல…"
"இப்படி உடம்ப வித்து வாழதுக்கு நீயெல்லாம் எதையாவது தின்னு சாக கூடாது. அப்படி செத்தா கூட அனாத பிள்ளைகள்னு ஏதாவது ஆசிரமத்திலையாவது இந்த பிள்ளைகளை சேர்ப்பாங்க… இப்படி உயிரோட இருந்து நாளைக்கு அதுங்க வாழ்க்கையையும் கெடுக்க போற"
என்று ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேச, யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காது காலை கட்டிக் கொண்டு நிற்கும் மூன்று பிள்ளைகளையும் அணைத்த படி நின்றிருந்தாள் ராதிகா.
தன் நிலை இங்கு யாருக்கு புரிய போகிறது? போராடி தெளிவு படுத்தும் அளவு உடலிலும், மனதிலும் தெம்பு இல்லையே. எவ்வளவு முயன்றும் கடும்சொல் தாங்காது விழிகள் நீரை துளிர்க்க, அந்த கண்ணீர் கூட அவர்கள் கண்ணை உறுத்தியது.
"நீலி கண்ணீர் வடிச்சு இன்னும் எத்தனை பேரை கவுக்க நாடகமாடுற, இதுக்கும் மேல இந்த வீட்ல உனக்கு இடமில்லை. வெளிய போ" என்று பாலாவின் அக்கா அவள் கழுத்தை பிடித்து வெளியே தள்ள முயல, அடுத்த நொடி பளார் என்ற சத்தத்துடன், கன்னத்தை பொத்தியபடி நிமிர்ந்து பார்த்தாள்.
சகுந்தலா தான் காளி அவதாரம் எடுத்து அவர்களை முறைத்து கொண்டு நின்றிருந்தார்.
"அம்மா… என்னை ஏன் அடிச்ச? நீயும் அவ பண்ற இந்த கேவலமான வேலைக்கு சப்போர்ட்டா?"
என்று கேட்ட மகளுக்கு கையை ஓங்க, ஓடி வந்து அன்னையை பிடித்து தடுத்து இருந்தார்கள் அவள் தமையன்கள்.
"ஏய் விடுங்க டா" என்று கையை உதறியவர்,
"இப்போ அவ என்ன பண்ணிட்டானு, ஆளாளுக்கு அந்த புள்ளையை பேசுறீங்க?"
"என்ன பண்ணாலா?" என்று பல்லை கடித்த இரண்டாவது அண்ணன், "வேலைக்கு போறேன்னு மினிக்கிட்டு போய், அவ என்ன வேலை பார்த்தானு இப்போ தானே தெரியுது" என்று சொல்ல,
"அட ச்சீ வாய மூடு. என் மருமக பத்தி எனக்கு தெரியும். எவன் என்ன சொன்னாலும் நம்புற ஆள் நான் கிடையாது. இப்போ வந்து குதிக்கிற நீங்க இவ்வளவு நாள் எங்க போனீங்க?" என்று எல்லாரையும் பார்த்து கேட்டவர், மூத்த மகனை நெருங்கி,
"எய்யா… தம்பி பொண்டாட்டி கஷ்ட படுறா அவளுக்கு ஏதாவது உதவி பண்ணுனு உன்கிட்ட கேட்டப்ப என்னையா சொன்ன நீ?
செத்து போனவன அஞ்சு நாளா ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா தூக்கிட்டு போய் கடன் பட்டா நாங்க என்ன பண்ண முடியும்னு அன்னைக்கு ஒதுங்கி போனவங்க, எந்த மூஞ்ச வச்சுட்டு இன்னைக்கு வந்து நிற்கீங்க?
என் மருமக எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டா… சும்மா இங்கட நின்னு உங்க நேரத்தை விரசம் பண்ணாம போய் உங்க பொழப்ப பாருங்க. வந்துட்டாங்க வண்டி கட்டி என் மருமகளா குத்தம் சொல்ல"
என்றவரின் வார்த்தைகளில் அனைவரும் அதிர்ந்து நிற்க, ராதிகாவுக்கோ, அவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் கண்ணீர் தான் வந்தது.
எத்தனை பேர் தூற்றினாலும், நமக்காக ஓர் உறவு நம்மை பாதுக்காக்க இருந்தால் அது போதுமே! இரும்பு பெண்மணி தான் சகுந்தலா, எப்போதும் ராதிகாவிடம் கடுமையாக நடந்துக் கொண்டாலும், எங்கும் அவளை விட்டு கொடுக்க மாட்டார்.
நடப்பது புரியாது அவர் குழம்பி நின்ற சில நொடியில் தன் பிள்ளைகள் அவளை கடித்து குதறி விட்டார்களே! என்று இப்போதும் சூளையாக கோப தீ உள்ளே எரிந்து கொண்டு தான் இருக்கிறது.
"உங்க அம்மாவே அந்த ****** இவ்வளவு சப்போட் பண்ணும் போது அவ ஏன் கண்டவனோட போக மாட்டா… அவளா போறாளா? இந்தம்மா அனுப்பி வைக்குதா யாருக்கு தெரியும்."
அவர் மற்ற மருமகள்களில் ஒருத்தி வயித்தெரிச்சலில் மாமியாரை மட்டம் தட்ட சொல்ல, அவளுக்கும் ஒரு அறை.
"நரம்பில்லா நாக்குனு என்ன வேணாலும் பேச நினைச்ச சங்க அறுத்து போட்டுருவேன்" என்று விரல் நீட்டி எச்சரித்தவரை அல்லளுடன் பார்த்தவள்,
"உங்க அம்மா அடிக்குது, பார்த்திட்டு குத்து கல்லா நிற்கீங்கா?" என்று கணவரிடம் அவள் முறையிட்டு கொண்டிருக்க,
மொத்த கோபமும் ராதிகா மீது தான் எல்லாருக்கும் திரும்பியது. பெற்ற தாயையே அவள் கேவலமான செயலுக்கு ஒத்து ஊத வைத்து, தங்களுக்கு எதிராக திருப்பி விட்டாளே என்ற கோபத்தில்,
"ரொம்ப ஆடாத டி, தெருநாய் மாதிரி கல்லடி பட்டு தான் சாக போற" என்று அன்னையே தங்கள் பக்கம் இல்லை என்ற கோபத்தில் ஒருவன் கடிய,
வேட்டியை மடித்துக் கொண்டு சாபமிட்டு கொண்டிருந்தவனை பிடித்து தள்ளி விட்டு உள்ளே நுழைந்த, ஆறாடி அர்னால்டு ஒருவனோ அழுது கொண்டிருந்த ராதிகா கையை பிடித்து இழுத்து செல்ல,
"டேய் யாரு டா நீ? அவளை விடு" என்று தடுக்க முயன்ற சகுந்தலாவை பிடித்து தள்ளி விட்டு தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற காரில் அவளை தூக்கி போட்டு சென்று விட்டான்.
"அம்மா…" என்று அலறி பின்னால் செல்ல முயன்ற பிள்ளைகளையும், சகுந்தலாவையும் வெளியே போக முடியாத படி வாசலை அடைத்து கொண்டு வந்து நின்ற அதே கருப்பு உடை காட்ஸ் இருவர் மொத்த குடும்பத்தையும் ஹவுஸ் அரெஸ்ட்டில் வைத்தனர்.
"யாரு டா நீங்க? என் மருமகளை எங்க தூக்கிட்டு போறீங்க?" என்று சகுந்தலா கத்திக் கொண்டிருக்க,
காதில் ப்ளூ டூத் மாட்டி கொண்டு நின்றிருந்த இருவரும் காதே கேளாதது போல் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.
"சரி சரி வாங்க நாம போகலாம். அவ எக்கேடும் கெட்டு சீரழியட்டும்" என்று சொல்லிக் கொண்டே தான் கூட்டி வந்த மொத்த கூட்டத்தையும் தலைமை தாங்கி வெளியே அழைத்து செல்ல முயல, உங்களை விட்டா தானே டா!
மூத்தவர் நெஞ்சில் கை வைத்து அவர் பின்னால் நின்ற மொத்த கூட்டத்தையும் உள்ளே தள்ளிய கார்ட்ஸ், கதவை பூட்டி சாவியை பாண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டே, கன்னை வெளியே எடுக்க, எல்லாம் பயந்து பின் வாங்கியது.
சகுந்தலாவும் பிள்ளைகளை அணைத்த படி நின்றிருந்தார். அடங்கி போகும் ஆள் அவர் இல்லை தான். ஆனால் பிள்ளைகள் இருக்க அவராலும் எதிர்த்து நிற்க முடியா நிலை.
இங்கே காரில் ராதிகா கத்தி பார்த்தாள், கதறி பார்த்தாள், நான்கு அடிகள் கூட அவன் புஜத்தில் அடித்து பார்த்தாள். அவனோ சிறிதும் அசறாது அசையாது அமர்ந்து வண்டியை ஓட்டியவன், அவளை சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டே சென்றான்.