தளிர் 7

 

Sunitha Bharathi
(@sunitha-bharathi)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 26
Thread starter  

தளிர் : 7

மெல்லிய நாதஸ்வர இசை 'மாங்கல்யம் தந்துநானே' இசைக்க, மணவறையில் அக்னி குண்டம் முன்பு அமர்ந்திருந்த மணமகன் பாலா விழிகளோ தன்னவள் வருகைக்காக காத்திருக்க, அவன் விழிகள் மட்டுமல்ல மெல்லிய கொழுசொலி செவியை நிறைத்த தருணம் மேடை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறு பிள்ளைகள் துவக்கம், அனைவர் பார்வையும் மணவறைக்கு எதிர் திசையில் பதிய,

சர சரக்கும் பட்டு சேலைகள் நேர்த்தியாக கட்டி, அளவான ஆபரணங்கள் அணிந்த அழகு மங்கைகள் புடை சூழ, மருதாணி பூசிய பொற்பாதங்கள் சிவப்பு கம்பளத்தில் மென்மையாக பதிந்து வர, அப்பாதங்களுக்கு சிவப்பு கம்பளமல்ல, சிவப்பு ரோஜாக்கள் விரித்து தான் வரவேற்பு வழங்க வேண்டும். அத்தனை அழகு அவள். 

தன்னையே இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டிருந்தவன் அருகே வந்தமர்ந்த ராதிகாவோ, மை விழிகளை திருப்பி காதல் காளையவனை பார்த்த கணம் அவன் இதழ்களில் ஆசை பூக்கள் பூத்தது.

மெல்லிய வெட்க புன்னகையில் புருவம் உயர்த்தி என்னவென்று அவள் விழியால் கேட்க, அவனோ சுற்றம் மறந்து அவளுள் தொலைந்து போனவன், "அழகா இருக்க டி இந்த பட்டு சேலையில" என்று சொல்லி அவளை விட்டு விழியை அகற்றாது, சூப்பர் என்று கை சைகை செய்ய, மங்கள இசை நடுவே சுற்றத்தார் சிரிபொழி பரவியது.

வெட்கத்தில் தலை குனிந்து கொண்ட ராதிகா கழுத்தில் அவளவன் மூன்று முடிச்சிட, உறவுகள் அட்சதை தூவ, காதலுடன் தன்னவன் முகம் நோக்கியவள் நெற்றியில் பாலா மென் முத்தம் பதிக்க, 

"கட்… டேக் ஓகே" என்று அவள் கற்பனைகளுக்கு கூட தடை விதித்திருந்தான் அவளின் ராட்சசன்.

'உறவுகள் இணையும் உன்னத திருமணத்திற்கு  **** திருமண பட்டுகள்' என்று அந்த ஜவுளி கடையின் விளம்பரமும் முடிவு பெற்றிருந்தது.

 

இத்தனை நேரம் அவள் கண்ணுக்கு பாலா, ராதிகாவாக தெரிந்த அந்த விளம்பர நடிகை நடிகர்கள் எழுந்து செல்ல, மற்ற நடிகர்களும் களைந்து சென்றனர்.

சட்டென்று தோன்றி மறைந்த தன் திருமண நினைவில் கண்கள் சிவந்து தான் போனது ராதிகாவுக்கு.

எத்தனை எத்தனை ஆசைகளை சுமந்து அவள் கழுத்தில் மாங்கல்யம் சூடினான். இப்படி பாதியில் விட்டு செல்வான் என்று யாருக்கு தெரியும். அவன் இல்லை என்றாலும் அவனுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் எத்தனை நாள் இந்த இதயம் கனக்கும் இம்சை நாடகம். 

நிஜம் அறியா மடந்தை அல்லவே அவள். நிழல் துணை வராது என்றும் அறிவாள். இருந்தும் அந்த நிழல் மட்டுமே போதும் என்று உள்ளம் முரண்டு பிடிக்க, நிதர்சனம் அறிந்த பெண் மனமோ தன்னவன் பிரிவில் கண்கள் கலங்கி நின்றது. அந்த கணம் அவள் விரல் நடுவே ஊடுருவிய விரல்கள் அழுத்தத்தில் பக்கவாட்டாக திரும்பி பார்த்தாள்.

பாலா தான் என்றும் போல் புன்னகை முகமாக அவளருகே நின்று அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் விழி நீரின் காரணம் அறிந்தவன், "என்ன பாப்பா? நம்ம கல்யாணம் ஞாபகம் வந்துடுச்சா?" என்று கேட்க, "ஹ்ம்ம்" என்று சத்தமின்றி முனங்க, "நான் உன் கூடவே தானே பாப்பா இருக்கேன்." என்று சொன்னவனுக்கும் இந்த வாழ்க்கை எத்தனை நாளுக்கு என்பது கேள்வி குறி தான்.

ஆனால் அவன் தானே அவள் தைரியம். அவர்கள் காதல் ஒன்று மட்டும் தானே உடலை விட்டு பிரிந்த ஆன்மாவை இத்தனை காலம் மண்ணுலகில் பிடித்து வைத்திருக்கிறது. 

வரமா? சாபமா? இந்த வாழ்க்கை, இருவரும் அறியா ஒன்று தான். 'வரம் என்றால் நான் வாழும் வரை நீ வேண்டும். சாபம் என்றால் நான் சாகும் வரை நீ வேண்டும்' இது தான் அவள் காதல். எதுவாக இருந்தாலும் அவன் துணை வேண்டும் அவளுக்கு. 

பல ஆயிரம் ஆசைகள் இருக்கலாம் மனிதர்கள் இதயத்தில். இங்கு மனிதர்கள் ஒன்றும் தெய்வங்கள் இல்லையே நினைப்பதை எல்லாம் நிகழ்த்தி முடிப்பதற்கு. இயற்கை நியதி என்று ஒன்று இருக்கிறதே! இன்னும் எத்தனை காலங்கள் பாலாவும் இங்கே இருக்க முடியும். அதற்குள் அவள் வாழ்விற்கும், தன் பிள்ளைகள் வாழ்விற்கும் வழி செய்ய வேண்டிய கடமை அவனுக்கு.

உடலை பிரிந்து சென்ற பிறகும் பிரியங்கள் என்றும் விட்டு போவது இல்லையே.

 

மனதில் ஏற்பட்ட சிறு நெருடலில் ராதிகா உடைந்து நின்றிருக்க, இவ்வளவு நேரம் அவளுக்கு தனிமை கொடுத்ததே பெரிய விசயம் என்பது போல், வழக்கமான தன் அதிகார குரலில் பொறி பறந்தது அவள் பெயர்…

வேறென்ன அதே ராதிகாஆஆஆ'வே தான். 

பழைய சிந்தனையில் வாடி நின்றிருந்தவள் முகமோ எரிச்சலாக, கால்களோ குரல் வந்த திசையை நோக்கி விரைந்தது. 

 

"சொல்லுங்க சார்" என்று அவள் வந்து நிற்க, "அங்க என்ன வேடிக்கை பார்த்துட்டு நிற்கிற? சும்மா அங்கங்க நின்னு தேய்ச்சிட்டு நிற்காம போய் வேலையை பாரு…" என்று எழுந்து நின்று கத்தியவனை தான்,

'இப்போ எதுக்கு இந்த திட்டு?' என்று புரியா பார்வை பார்த்து வைத்தாள். அவனோ கண்களால் அருகே இருக்கையில் அவனை உரசி கொண்டு அமர்ந்திருந்த பிரதான நடிகையை கண் காட்டி, 'கிளியர் இட்' என்பது போல் தலையசைத்தான்.

சாதாரணமாக அமர்ந்து இப்போது தயாரித்த வீடியோவை ரீசெக் செய்து கொண்டிருந்தவன் அருகே வந்தமர்ந்த ரசிஹா, "வாவ் இந்த ஆங்கில்ல நான் ரொம்ப அழகா இருக்கேன்ல? அந்த ஷாட் எக்சலெண்ட்" என்று சொல்லிக் கொண்டே அவன் தொடையில் கை வைக்க,

சட்டென்று எழுந்து கொண்டவன், அடுத்த நொடியே ராதிகா ஆ ஆ ஆ என்று தான் சினம் பொங்க கத்தியிருந்தான்.

தான் செய்யும் தொழிலில் சட்டென்று அவள் மீது கோபத்தை காட்டி விட முடியவில்லை. பிரபல விளம்பர பட தயாரிப்பாளரும், இயக்குநருமான அருணன் சமரித் சக நடிகைகளை தகாத சொற்களால் துன்புறுத்துகிறார், ஆணாதிக்கம் செய்கிறார் என்று அடுத்த நாளே மீடியா தன் வசூலை பெருக்க அவன் வாய்ப்பளிக்க விரும்பவில்லை. 

கோபம் இருந்தாலும் சிரித்துக் கொண்டே தவறை சுட்டி காட்டும் தலைவன் தலைமை தானே சிறக்கும்.

அப்படி தான் தொழில் ரீதியாக அந்த நடிகையை உதாசீன படுத்த கூடாது என்று எண்ணியவன், தன் பெண் பாடிகாட் மீது தான் பாய்ந்து இருந்தான். 

 

அவன் அசிஸ்டன்டாக வந்து சேர்ந்திருக்கும் வேணுவும், ராதிகாவும் அடிமை சாசனம் எழுதி தராத அவன் அடிமைகள் தான். யார் மீதும் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் அவன் இறக்கும் இடம் அவர்கள் இருவரும் தான். இதிலும் அநேக நேரம் வேணு தப்பிக் கொள்வான். இறுதியில் சமாளிக்க தெரியாமல் சிக்கி கொள்வது என்னவோ ராதிகா தான்.

இப்போதும் அந்த நடிகையை கடிந்து பேச முடியாமல் அவன் ராதிகாவை அழைத்து பொரிந்து தள்ள அவளோ செத்து போன சிவாஜிக்கு இப்போ எதுக்கு இரங்கல் செய்தி என்பது போல் தான் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவள், அவன் விழி மொழியை புரிந்து நிதானமாக ரசிஹாவை பார்க்க, அவளோ அவனை விழுங்கும் பார்வை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதே நேரம் வேறு ஏதாவது ஆண் அவன் கோபத்தை தூண்டியிருந்தாள் நிச்சயம் வேணு கன்னம் பழுத்திருக்கும். பெண்ணாக போய் விட்டாள், அதான் ராதிகாவை விட்டு விரட்ட முயல, அவன் எண்ணம் புரிந்துக் கொண்ட ராதிகாவோ “வாங்க மேடம் மேக்கப் ரிமூவ் பண்ணிடலாம்” என்று அழைக்க, 

“இல்ல நான்…” என்று அவனருகே டேரா போட இருந்தவளை “அட வாங்க மேடம்” என்று கைய பிடித்து இழுத்தே சென்று விட்டாள்.

 

'பாடி பில்டர் மாதிரி நல்லா உடம்ப வளர்த்து வச்சிருக்கார். பக்கத்துல வர்றது பிடிக்கலைனா செவில்லயே ஒன்னு போட்டு அடிச்சு விரட்டுறத விட்டு, சும்மா ராதிகா ராதிகானு என் உயிரை எடுத்தா? முடில இந்த மனுஷனோட, இப்படி கத்தி கத்தி என் பெயரே வர வர எனக்கு பிடிக்க மாட்டேங்குது.' என்று மனதில் அவனை திட்டிக் கொண்டே முன்னாள் சென்று கொண்டிருந்த ராதிகாவை தொடர்ந்து வந்த ரசிஹா "ஆன்டி" என்று அழைக்க, 

சட்டென்று திரும்பி பார்த்த ராதிகா குட்டி நெஞ்சோ பஞ்சு பஞ்சாக சிதறி தான் போனது.

 

"என்ன சொல்லி கூப்பிட்ட? ஆன்டி யா" மெல்லிய கோபத்தில் கேட்க,

 

"ஹ்ம்ம்… எப்பவும் சாரி கட்டுறீங்க. கல்யாணம் ஆகிடுச்சு, 3 கிட்ஸ் இருக்கு. அப்போ ஆன்டி தானே" என்று சொன்னவள் அவளை விட ஐந்தே வயது தான் சிறியவள்.

பெண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து விட்டாள். அவள் ஆன்டி ஆகி விடுகிறாள். ஆண் மட்டும் முப்பதை கடந்தாலும் இளைஞன் தான். என்ன தான் உலக நியாமோ. 

'இது என்ன டா சாரி கட்டுறவங்களுக்கு வந்த சோதனை. சரி போய் தொலை… எப்படியும் கூப்பிட்டு போ' என்று அந்த பேச்சை விட்டு விட்டாள். அவளிடம் சென்று சண்டையா போட முடியும். போ போ இதுக்கெல்லாம் ஃபீல் பண்ண எனக்கு நேரமில்லை என்பது தான் அவள் நிலை.

 

"சொல்லு மா எதுக்கு கூப்பிட்ட?" அடுத்து என்ன குண்டை தூக்கி போட போறாளோ  என்று கேட்க,

 

"எல்லா ஆட்க்கும் என்னையே சார் புக் பண்ணனும். அதுக்கு ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்" என்று ஆர்வமாக கேட்டவளிடம்,

 

"நீ நல்லா பர்ஃபார்ம் பண்ணா அவரே உன்ன புக் பண்ணுவார் மா" என்று பொதுவாக சொல்லி விலகி கொண்டாள்.

"அதெல்லாம் நான் நல்லா பர்ஃபார்ம் பண்ணுவேன். எனக்கு உங்களை மாதிரி நானும் சாரோட ஃபேவரைட் ஆகனும்" என்று வாயெல்லாம் பல்லாக சொன்னவளை புரியா பார்வை பார்த்து வைத்தவள்,

 

"நான் எப்போ சாரோட ஃபேவரைட் ஆனேன்" என்று தான் கேட்டாள்.

"சும்மா நடிக்காதீங்க. ரெண்டு வருஷம் உங்களை கூடவே வச்சு இருக்கார். எதுனாலும் ராதிகா ராதிகானு உங்களை தான் கூப்பிடுறார். அவ்வளவு பாசம் உங்க மேல" என்று மேலோட்டமாக சொன்னவள் மனதிலோ அத்தனையும் வஞ்சம் தான். 

'அப்படி இவகிட்ட என்ன இருக்குனு சதா இவளை பிடிச்சு தொங்குறார்?' என்று உள்ளுக்குள் கனன்று கொண்டே வெளியே சிரித்து பேசி அவளிடமே அவனை மடக்கும் வித்தை கேட்க,

அவள் பேச்சும் நோக்கும் புரிந்து கொண்ட ராதிகாவோ, 'ஹ்ம்ம்கும் ரொம்ப தான் பாயாசம்' என்று சலிப்பாக முணு முணுத்து கொண்டாள்.

 

'விட்டா என்ன மாமா வேலை பார்க்க சொல்லுவா போல?' என்று அலுத்துக் கொண்டவளுக்கு அவள் செவில்லயே நாலு அரை விடும் அளவிற்கு கோபம் தான் வந்தது. 

 

பெண் தானா இவள் வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய நினைக்கும் அவளை அறிவிலி என்று சொல்லவா? அறியா பெண் என்று சொல்லவா? பெருமூச்சு விட்டு கொண்டவள், அறியா பெண் என்றே எண்ணி அவளுக்கு அறிவுரை வழங்கினாள்.

"சொன்னா கேளு மா நீ சின்ன பொண்ணு. அவரெல்லாம் உனக்கு செட் ஆக மாட்டார். பக்கா ஆன்டி ஹீரோ மெட்டிரியல். சமாளிக்க முடியாது" என்று விளையாட்டாக அவளை குழப்பி விட,

"என்ன சொல்லவறீங்க, அவருக்கு உங்களை மட்டும் தான் பிடிக்குமா?" என்று அப்போதும் அவளை ஆன்டி என்று குத்தலாக சொல்ல,

 

'பாத்தியா இவளுக்கு கொழுப்ப… போய் அடி வாங்கி சாவு' என்று மனதில் சலிப்பாக எண்ணி கொண்ட ராதிகாவோ,

 

"ப்பா… உன் திறமைக்கு நீ ஆட் பிலிம் இல்ல… ஹாலிவுட்லயே கலக்கலாம்" என்று நக்கலாக சொல்லி விட்டு, "சீக்கிரம் பினாயில் போட்டு இது மூஞ்சில இருக்க மாவெல்லாம் எடுத்து விடுங்க" என்று மேக்கப் மேன் காதில் முணு முணுத்து விட்டு ஓடியே விட்டாள்.

 

அவரும் அவள் கேலியில் வாயை மூடி கொண்டு சிரிக்க, ரசிஹா தான் "அவ என்ன சொல்லிட்டு போறா?" என்று இருவரின் நக்கல் சிரிப்பில் உலையாக கொதித்துக் கொண்டிருந்தாள்.

 

செட்டில்மென்ட் எல்லாம் முடித்து விட்டு, அருணன் அடுத்து அலுவலகம் செல்ல தயாராக, அவன் எதிரே வந்து நின்றனர் கோசலையும் சுவாதியும்.

அவர்களை ஒரு நொடி விழி சுருக்கி பார்த்து விட்டு அவன் விலகி செல்ல, மீண்டும் அவன் எதிரே வழியை மறைத்தப் படி வந்து நின்றார்கள் இருவரும்.

ஒரே ஒரு பார்வை, 'என்ன வேணும்? ஏன் வந்தீங்க? எதுக்கு வந்தீங்க?' என்று ஆயிரம் கேள்வி அந்த ஒற்றை பார்வையில் இருக்க,

 

"அருண்… நம்ம சுவாதி காலேஜ்ல புராஜக்ட் பண்ண சொல்லி இருக்காங்க. ஒரு கம்பெனியோட டேட்டா கலெக்ட் பண்ண சொல்லி இருக்காங்களாம். ஒரு ரெண்டு நாள் உன்கூட வச்சு கொஞ்சம் சொல்லி கொடேன்" என்று கோசலை மகளை அவனிடம் கோர்த்து விட இறங்கி வேலை செய்தார்.

நிதானமாக சுவாதி புறம் விழியை திருப்பியவன், "உனக்கு டேட்டாஸ் கொடுத்துட்டு நான் இன்கம் டேக்ஸ் ஆபீஸ்ல போய் கையை கட்டி நிக்கவா" என்று வெடுக்கென்று சொல்லி விட்டு விறு விறுவென சென்று விட, 

 

'எந்த பக்கம் போனாலும் தடுப்பு சுவர் எழுப்புறானே!' என்று எண்ணிக் கொண்ட கோசலை, சுவாதியை இழுத்துக் கொண்டு அடுத்து சென்றது அவன் அலுவலகத்துக்கு தான்.

"அம்மா சும்மா சும்மா அவர் முன்னாடி போய் நிற்க பயமா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே "வா ம்மா வீட்டுக்கு போவோம். காலேஜ்ல இருந்து கரகரணு இங்க இழுத்துட்டு வந்து உயிர வாங்குற" என்று பயத்தில் சுவாதி கைகள் நடுங்க, 

"எல்லாம் காரணமா தான் டி கூட்டிட்டு வந்து இருக்கேன். இரு இப்போ வரேன்" என்று அவளை விட்டு விட்டு அவர் பாஸ்கரை தேடி வந்தார்.

அருணன் அலுவலகத்தில் அவனை பற்றிய தகவல்கள் ரகசியமாக அறிந்துக் கொள்ள கோசலையும், பார்வதியும் செட் செய்த ஆள் தான் இந்த பாஸ்கர். 

 

பார்வதிக்கு, முதல் திருமணம் பாதியில் முடிந்து, தனியாக நிற்கும் தன் மகனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து அவன் சுகபோக வாழ்க்கையை கண் குளிர பார்க்க ஆசை. 

கணவனை இழந்து பிறந்தகத்தில் அண்ணன்களிடம்  தஞ்சம் புகுந்த கோசலைக்கோ, தன் ஒரே மகளை வேறு எவனுக்கோ கட்டி வைத்து, அவள் நலமாக இருக்கிறாளா? இல்லையா? என்பது தெரியாது வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருப்பதற்கு பதில், இரண்டாம் தாரம் என்றாலும் தன் அண்ணன் மகனுக்கு கட்டி வைத்தால், தன் குடும்பம் அவளை நன்றாக பார்த்துக் கொள்ளும் என்ற பேராசை.

 

பதின் வயது விழும்பில் இருக்கும் சுவாதிக்கோ அருணன் என்றால் பிடிக்கும் தான். ஆனால் காதல் எல்லாம் எதுவும் இல்லை. 

 

மனைவியை இழந்து இறுகி இருக்கும் அவன் மீது சிறிதே சிறிது பரிதாபம் அவ்வளவு தான். 

அதை பிடித்து கொண்டு தான் கோசலை அவனை கட்டிக் கொண்டால், சொத்து கிடைக்கும் என்று முதலில் அவளுக்கு ஆசையை தூண்டி விட, அவளோ "அதெல்லாம் எனக்கு எதுக்கு. அதை வச்சு நான் என்ன செய்ய போறேன்?" என்று தான் கேட்டாள்.

பணத்திற்கு மயங்காத பெண்ணை, "அருண் பாவம், இந்த வயசுலயே பொண்டாட்டிய இழந்து கஷ்ட படுறான்" என்று அவள் பிள்ளை மனதில் அவன் மீது பரிதாபத்தை வளர்த்து விட்டவர், அதையே காதல் என்று அவளை நம்பவும் வைத்தார்.

இங்கே யாரும் அறியா வண்ணம் பாஸ்கர் அறை அருகே வந்தவர் அவனை மறைவான இடத்திற்கு அழைத்து செல்ல, அவனும் எக்ஸ்டிரா சம்பளம் கொடுக்கும் முதலாளி அம்மா அழைப்பிற்கு பணிவாக அவர் முன் சென்று நின்றான்.

அவன் முன் சிறிய பொட்டலம் ஒன்றை நீட்டியவர், "இத எப்படியாவது மாப்பிள்ளை குடிக்கிற டீ, காபி, கூல் ட்ரிங்க்ஸ், எதுலயாவது கலந்து கொடு" என்று சொல்லி கொடுக்க, 

அதை வாங்கி திருப்பி திருப்பி ஆராய்ச்சியாக பார்த்த பாஸ்கரோ "என்ன பவுடர் இது?" என்று தான் கேட்டான்.

"வசிய பொடி." என்று சொன்னவரை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தவன், 'பணக்காரங்க, படிச்சவங்க கூடவா இதையெல்லாம் நம்புறாங்க? எவனோ இந்த கிழவியை நல்லா ஏமாத்தி காசு புடுங்கிட்டான்' என்று அவன் மனதில் எண்ணிக் கொண்டே நின்றிருக்க,

"ரொம்பவே பவர்புலானது. மிஸ்ஸாகிட கூடாது. அப்புறம் இந்த விசயம் யாருக்கும் தெரியவும் கூடாது." என்று சொல்லி ஒரு கட்டு பணத்தையும் எடுத்து அவன் கையில் கொடுக்க, பணத்தை பார்த்தவன் அதற்கு மேல் எதையும் கேட்கவில்லை. 

 

'நம்ம கைக்கு பணம் வந்தா, அந்த கிழவி விஷத்தை வைக்க சொன்னாலும் தடயம் இல்லாமல் வச்சிட வேண்டியது தான்' என்று எண்ணிக் கொண்டவன், பணத்தையும் பொடியையும் பேண்ட் பாக்கெட்டில் பதுக்கிய நொடி, சட்டென்று மூளை குறுக்கு வழியில் வேறு திட்டம் ஒன்றை போட்டது.

"இதே போல இன்னொரு பொட்டலம் இருக்கா?" என்று அவசர அவசரமாக கோசலையிடம் கேட்டான். 

இதெல்லாம் ஏமாத்து வேலை என்று சவிடாலக சொன்னவன் மனமோ 'ஒருவேளை உண்மையா இருந்தா? ஓசில கிடைக்கிற கோலா உருண்டையை எதுக்கு விடனும்' என்று தான் கேட்டு வைத்தான்.

அவன் ஆர்வத்தையும் அவசரத்தையும் வித்தியாசமாக பார்த்த கோசலை "எதுக்கு இன்னொன்னு? என்று சந்தேகமாக கேட்க,

"ஒருவேளை ஏதாவது மிஸ் ஆகிடுச்சுனா? அதான்…" என்று தலையை சொரிய, 

தன் பர்ஸில் இருந்து இன்னொரு பாக்கெட் எடுத்து கொடுத்தவர், "ரெண்டு தான் அந்த மலையாள மாந்திரீகன் கொடுத்தான். சொதப்பாம வேலையை முடிச்சிடு" என்று பஸ்கரிடம் சொல்லி சென்றவருக்கு அடுத்து பெரிய தலைவலி சுவாதிக்கு வகுப்பு எடுப்பது தான். அவளை பார்க்க சென்று விட்டார் அவர்.

இங்கே இரண்டு கைகளிலும் பொட்டலத்தை வைத்து பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கர் மனமோ, "திமிர் பேச்சா பேசுற? இனி நான் சொல்றத தான் நீ கேட்க போற" என்று வன்மமாக எண்ணியவன் இதழ்கள் கோரமாக வளைந்து கொள்ள, 

 

அவன் மனமோ முந்தைய நாள் ராதிகா சொன்ன வார்த்தைகளை எண்ணி தான் அனலாக எரிந்து, அவளை கட்டிலில் பலி தீர்க்க ஆவல் கொண்டது.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top