தளிர் : 6
மின்னல் வேகத்தில் ஷெட்டுக்குள் நுழைந்தவன் உடல் மொழியே அங்கிருந்த அனைவருக்கும் கிலியை பரப்பியது. உள்ளே நுழைந்தவனுக்கு ஒரு வணக்கத்தை போட்டு விட்டு அனைவரும் தங்கள் வேலையில் கவனமாக இருக்க,
அந்த இடத்தை சுத்தி பார்வையை வீசியவன் விழிகள், திரை சீலைகள் மீது பிடித்தமின்மையாக பதிந்த அடுத்த கணம் "ராதிகாஆஆஆ" என்று அரங்கே அதிரும் படி கத்தி இருந்தான்.
"இந்தா இருக்கேன் சார்" அவன் பிடரிக்கு பின்னால் இருந்து குரல் கொடுத்துக் கொண்டே முன்னால் வந்தவள், "நீங்க வந்துட்டீங்கனு தெரியுது சார்"
'எதுக்கு இப்படி தொண்டை கிழிய கத்துற?' என்று கேட்டால் குரல்வளையை கடித்து குதறி இருக்க மாட்டான், முதல் பாதியிலே ராதிகா வாய்க்கு பூட்டு போட்டு கொண்டாள்.
"வந்தது தெரிஞ்சும் இவ்வளவு நேரம் என்ன பு*டுங்கிட்டு இருந்த?" கோபத்தில் வார்த்தைகள் வளைவு சுழிவு இல்லாமல் வந்து விழுந்தது.
'வந்து ரெண்டு நிமிஷம் தானேயா ஆகுது. உங்க கால் தரையில் படாம காரை விட்டு இறங்கினதுல இருந்து முதுகுல சுமக்கணுமா?' மனதில் அவனை திட்டி கொண்டே வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் பாவையவள்.
அவள் மட்டும் திடகாத்திரமான ஆணாக இருந்திருந்தால் அதையும் செய்ய சொன்னாலும் சொல்வான்.
"எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டேன். ஷூட் போகலாமா சார்?" என்று அவன் கவனத்தை தன்னில் இருந்து திரும்ப கேட்க,
அவனோ "கிழிச்ச… ஒயிட் கலர் பிளோருக்கு பிங்க் கலர் ஸ்கர்டன் போட்டு வச்சிருக்க" என்று திட்ட,
'பிங்க் நல்ல கலர் தானே யா. என்ன குறை கண்டாய் என் ரசனையில்' என்பது போல் பார்த்து வைத்தவள் "நல்லா தானே இருக்கு" என்று சொல்ல,
"*** மாதிரி இருக்கு. உடனே மாத்து" என்றான் வெடுக்கென்று.
"இதோ இப்பவே மாத்த சொல்றேன் சார்" என்றவள் ஓடியே விட்டாள்.
'இந்த மனுஷனுக்கு என்ன தான் மாமா பிரச்சினை?' என்று மெதுவாக முணு முணுத்துக் கொண்டே அவள் செல்ல, நிழல் இழந்த அருவமோ 'வீட்ல ஏதாவது டென்ஷனா இருக்கும் பாப்பா' என்றபடி அவள் நிழலாக தொடர்ந்தது.
"சார் ஸ்கிரிப்ட் பேப்பர்" என்று ஸ்கிரிப்ட் ரைட்டர் வேணு அவனிடம் அட்டை ஒன்றை கொடுக்க, அருணனும் அதனை வாங்கி வாசிக்க துவங்கினான்.
ஏற்கனவே இன்றைய பொழுது ஏன் விடிந்தது என்று இயலாமையில் உழன்று கொண்டிருந்தவனை ராதிகா போன் போட்டு இழுத்து விட்டிருக்க, போதா குறைக்கு பார்வதி கல்யாணம் பற்றி பேசி எரிச்சல் படுத்தியிருக்க, எல்லாம் சேர்ந்து வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அல்லோல பட்டவனை மேலும் எரிச்சல் படுத்தியது அந்த அழுகை சத்தம்.
"ப்ச்…" என்று தன் கவனத்தைச் சிதைக்கும் அந்த சத்தத்தை வெறுத்தவன், அதற்கும் வறுத்து எடுத்தது என்னவோ ராதிகாவை தான்.
ஏன்? எதற்கு? என்று காரணம் இல்லாமல் அவள் மீது சினத்தை காட்டினான். எல்லாம் வெஞ்சன்ஸ் அன்றி வேறு என்ன?
'நான் வீட்ல சிவனேனு தானே இருந்தேன். நீ தானே இழுத்து விட்ட அனுபவி' என்று வேண்டுமென்றே வழக்கத்தை விட ஐமடங்கு வாள் வீச்சு நடந்தது அவள் மீது தன் நா வெனும் கூர் வாள் கொண்டு.
அவன் அழைத்த குரலுக்கு 'சொல்லுங்க எசமா' என்று காலில் விழாத குறை தான். "சொல்லுங்க சார்" என்று வந்து நின்றாள் நெஞ்சை நிமிர்த்தி.
"அங்க என்ன சத்தம்? யார் குழந்தை அது?" என்று கேட்க,
"ஷூட்டிங்க்கு புக் பண்ணியிருந்த குழந்தை சார். அந்த மாடலுக்கு குழந்தையை தூக்கவே தெரில. அவங்க கை பட்டாலே குழந்தை கத்துறான்" என்று புகார் சொல்ல,
"நீ எதுக்கு இருக்க? போய் சொல்லி கொடு" என்று விட்டு மீண்டும் ஸ்க்ரிப்ட் பேப்பரை பார்த்தான்.
ராதிகா சென்ற பிறகு இன்னும் அழுகை அதிகம் ஆனதே தவிர, அடங்கவில்லை.
குழந்தை அழும் சத்தம் மண்டைக்குள் ஆயிரம் மணியை ஒரே நேரத்தில் அடிப்பது போல் தலை வலியை உண்டாக்க, அட்டையை வேணுவிடம் கொடுத்து விட்டு அருணனே அவ்விடம் சென்றான்.
அழும் குழந்தையை தன் நெஞ்சோடு அணைத்து, "ஒன்னும் இல்ல டா. அம்மா இப்போ வந்துருவாங்க" என்று சொல்லி ராதிகா சமாதானம் செய்து கொண்டிருக்க, குழந்தையோ அன்னை நினைவில் அவள் ஆடையை சப்பி சப்பி ஏமாந்து மீண்டும் பெருங்குரலில் அழுது கொண்டிருந்தது.
"ஏய் என்ன பண்ணிட்டிருக்க? ஒரு குழந்தை அழுகையை கூட நிறுத்த தெரியாதா உனக்கு? நீயெல்லாம் எப்படி தான் மூனு பிள்ளை" என்று சொல்ல வந்தவன் அன்று போல் இன்றும் தன் அதிக படியான பேச்சை தொண்டைக்குள் முழுங்கி கொண்டு, குழந்தையை அவளிடம் இருந்து வாங்க,
முரடன் அவனால் எப்படி சிறு பிள்ளையை சமாளிக்க முடியும் என்று எண்ணிய வேணுவோ, "என்கிட்ட குடுங்க சார்" என்று கையை நீட்டினான்.
"நான் பார்த்துக்கிறேன். நீ போ" என்று அவனை அனுப்பி வைத்தவன் குழந்தையை தூக்கி கொண்டு நடக்க,
ராதிகாவும் அவன் பின்னால் சென்றாள். சிறு பிள்ளை அல்லவா! அவனை நம்பி தனியே விட சிறிது பயமே! கோபத்தில் எங்காவது தூக்கி வீசி விட்டான் என்றால். அய்யோ! என்று அவன் பின்னே வாலாக தொடர்ந்தாள்.
"குழந்தை அம்மா எங்க?"
"ரெஸ்ட் ரூம் போய் இருக்காங்க. புது இடம்ல, கூட்டத்தை பார்த்ததும் கொஞ்சம் பயந்திட்டான் போல" என்று சொல்லிக் கொண்டே பின்னால் வந்தவளை ஒரு நிமிடம் நடையை நிறுத்தி பார்த்தவன்,
"அதுக்கு தான் அழுவுறானு உனக்கு தெரியுமா? பசிக்காக கூட அழலாம். பீட் பண்ணு" என்று சொல்லி குழந்தையை அவளிடம் நீட்ட,
"அய்யோ!" என்று கைகளால் தன் மார்பை மறைத்துக் கொண்டவள், "என்னாலலாம் பீட் பண்ண முடியாது" என்று வெடுக்கென்று சொல்ல,
"காட்…" என்று கடுப்பாக தலையை திருப்பியவன், "நானே பண்றேன்" என்று திரும்ப,
"எத? நீங்களா? எப்படி?" என்று ஆர்வம் கலந்த சந்தேகத்துடன் கேட்டாள்.
அவள் கேள்வியில் சட்டென்று திரும்பி அவளை பார்த்தவன், "வந்து பார்கிறியா?" என்று கண்களை சுருக்கி கேட்க,
அவளோ "ச்சீ…" என்று தான் விழியை சுருக்கினாள்.
அதை கண்டவனுக்கு எங்காவது சென்று முட்டி கொள்ளலாம் போல் தான் இருந்தது.
"மிதி வாங்காம, புரொடக்ஷன்ல இருந்து பால் கொண்டு வா" என்று விட்டு வேக நடையோடு குழந்தையுடன் அவன் சென்று விட,
"ச்ச… ஒரு நிமிஷத்துல அவரை தப்பா நினைச்சிடேனே" என்று தலையில் அடித்துக் கொண்டவள் அவன் கேட்ட பாலை கொண்டு வர சென்று விட்டாள்.
"இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் திங்கிங் தான் பாப்பா" என்று பாலா அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,
"ஆம்பளைங்களுக்கு குழந்தை பொறக்குதுனு எவ்வளவு நியூஸ் பார்க்கிறோம். அந்த மாதிரி நினைச்சிட்டேன்" என்றவள் கைகள் சூடான பாலை ஆத்திக் கொண்டிருக்க,
"நல்லா நினைச்ச போ" என்று மீண்டும் சிரித்த பாலாவை ஆசையாக பார்த்தாள் அவன் ஆருயிர் மனைவி.
"நீ எவ்வளவு ஸ்வீட்டா இருக்க மாமா. இந்த மனுஷன் ஏன் இப்படி இருக்கார்? எப்போ பாரு ஐம்பது கிலோ இரும்ப விழுங்கின போல உர்ருனு இருக்கார். வினோத ஜந்து போல இருந்தா சந்தேக பட தானே தோணும்" என்று சொல்லி கண் சிமிட்டி அவள் சிரிக்க,
"ராதிகாஆஆஆ" மீண்டும் ஸ்பீக்கர் இல்லாமல் ஷெட்டை அதிர வைத்தது அவன் அழைப்பு.
"நான் கொஞ்சம் சிரிச்சிட கூடாது. மூக்கு வேர்த்துடும் கடுவன் பூனைக்கு" என்று சிடு சிடுத்தவள், வேக வேகமாக புட்டியில் பாலை அடைத்துக் கொண்டு ஓடினாள்.
அதற்குள் குழந்தையின் அம்மா வந்து குழந்தையை எடுத்து சென்றிருக்க, பால் புட்டியுடன் வந்தவள் "குழந்தை எங்க சார்?" என்று தான் அந்த இடத்தை சுற்றி கண்களை அலைய விட்டபடி கேட்டாள்.
"ஹாங்… ஸ்கூலுக்கு போய்டுச்சு. ஆடி அசைஞ்சு வந்தா…" என்று சிடு சிடுத்தவன் பாதியில் விட்டு சென்ற ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்துக் கொண்டிருக்க,
ராதிகாவோ "அதுக்குள்ள வா?" என்று தான் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவரையும் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த வேணு தான் பதில் சொன்னான். கேரவேனை காட்டி, "குழந்தையை அவனோட அம்மா கொண்டு போய் இருக்காங்க" என்று.
"ஓ…" என்று ராகம் இசைத்தவள், "அப்போ இந்த பாலை என்ன பண்ண?" என்று அருணனிடம் கேட்க, அவனோ "உனக்கு பாலாபிஷேகம் பண்ண முதல்ல மணவறையை பாரு" போவென்று சொன்ன பிறகு அங்கு நிற்ப்பாளா?
திருமண பட்டுக்களுக்கான விளம்பரம் தான் இப்போது எடுக்க தயாராகி கொண்டிருந்தனர்.
அதற்காக போடப்பட்ட மணவறை செட்டப்பை சரி பார்த்துக் கொண்டிருந்தவள், அருகே வந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர், "ராதிகா" என்று அழைத்து கனிவாக பேச தொடங்கி,
"நீ ஏன் மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது? உனக்கு ஒன்னும் வயசு ஆகிடலயே… ஒரு வாழ்க்கை துணை இருந்தா உனக்கும் பாதுகாப்பு தானே. உன் புள்ளைங்களுக்கும் தகப்பன் இருந்த மாதிரி இருக்கும்" என்று அக்கறையாக சொன்னவரை அமைதியாக ஒரு நொடி பார்த்த ராதிகாவோ செட் புரோபர்டியை சரி செய்தபடியே, "ரெண்டு பொம்பள புள்ளைங்கள வச்சு இருக்கேன் கா… என் பாதுக்காப்புக்குனு சொல்லி கண்டவன எல்லாம் வீட்டுக்குள்ள விட்டு அதுங்க வாழ்க்கையை கெடுத்திட கூடாதே."
"அதெல்லாம் எதுவும் ஆகாது. எனக்கு தெரிஞ்சு ஒரு பையன் இருக்கான். முதல் தாரம் எவனோடவோ ஓடி போயிடுச்சு. ரொம்ப நல்ல பையன். உன் பிள்ளைகளை கூட அவன் பிள்ளைகள் மாதிரி பார்த்துப்பான்." என்று வாயெல்லாம் பல்லாக அவர் சொல்ல,
"எனக்கு மாதிரி எல்லாம் வேணாம் க்கா… எங்க வாழ்க்கை இப்படியே நல்லா தான் இருக்கு. நாங்க இப்படியே இருந்துட்டு போறோம்."
"அது இல்ல ராதிகா. வேலியில்லா பயிருனு தெரிஞ்சா கண்டவன் எல்லாம் விளைச்சல் பார்க்க நினைப்பான். நல்லதுக்கு சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே" என்று விடாது அவர் நோண்ட,
'இந்த அம்மாவுக்கு என்ன லாபம்னு தெரிலையே!' என்று அவளுக்கும் சிறிது கோபம் எட்டி பார்த்தது. பல்லை கடித்தவள், மற்றைய புறம் திரும்பி அலங்கரித்த பூக்களை சரி செய்தபடியே, "மாமா கொசு தொல்லை தாங்கல. உன் சக்தியை யூஸ் பண்ணி விரட்டி விடேன்" என்று மெல்லிய குரலில் ரகசியம் பேச,
"பாப்பா இவலாம் என் ரேஞ் கிடையாது நீயே விரட்டு" என்று அவளவன் குரல் மட்டும் அல்ல அவனும் அங்கு தான் இருந்தான் யார் கண்ணுக்கும் புலப்படா அருவமாக.
"அப்படிங்கிற" என்றவள், "ஹ்ம்ம் கல்யாணம் பண்ணிடலாம் க்கா. பையன் நல்ல வேலைல இருக்கணும். மாசம் ஒரு ஐம்பதாயிரம் சம்பாதிக்கனும். கருப்பா இருந்தாலும் பரவாயில்ல, இந்த தொப்பை தொந்தி இல்லாம ஃபிட்டா, பார்க்க அழகா இருக்கணும்" என்று அவள் மணமகனுக்கான தகுதி லிஸ்ட் போடும் போதே முகம் சுருங்கி போனது அவருக்கு.
"ரெண்டாவது கல்யாணத்துக்கே இவ்வளவு கண்டிசனா? இப்படியெல்லாம் எதிர் பார்த்தா எவன் உன்னை கட்டிப்பான். இந்த நிலைல இருக்கும் போதே திமிர் காட்டுறியே. நீயெல்லாம் புருஷனோட நல்லா வாழ்ந்திருந்த உலகத்தையே அழிச்சுருப்ப. பாக்கியாளன் உன் தொல்லை தாங்க முடியாமலே போய் சேர்ந்து இருப்பான்" என்று அவர் கரித்துக் கொட்ட,
"எனக்கு புருஷன் வேணும், என் புள்ளைங்களுக்கு தகப்பன் வேணும்னு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைங்கனு நான் கேட்டேனா? நீங்களா வந்து கேட்டீங்க… சரி இன்ன மாதிரி வேணும்னு சொன்னா, திமிர் பிடிச்சவ, அகங்காரியா? ஒரு பொண்ணு இந்த மாதிரி தான் ஒருத்தன் வேணும்னு கேட்டாலும் குத்தம், எனக்கு எவனும் வேணாம்னு ஒதுங்கி போனாலும் குத்தம். ரெண்டாவது கல்யாணம் எல்லாம் உடம்பு சுகத்தை தீர்த்துக்க மட்டும் தான்னு முத்திரை குத்துற உங்களை மாதிரி ஆட்களோட கரிசனம் எங்களுக்கு வேணாம். ஏன் முதல் கல்யாணத்துல அந்த தேவை இருக்காத? இல்ல அவன்லாம் ஃபர்ஸ்ட் நைட்ல பாலை குடிச்சிட்டு தூங்குறானா?
சும்மா வேலை நேரத்துல வந்து அக்கறைங்கிற பெயர்ல கடுப்பெத்திட்டு" என்று அவள் கடுகாய் பொரிந்துக் கொண்டிருக்கும் போதே "ராதிகாஆஆஆ" என்ற குரல் அந்த செட் முழுவதும் உச்சஸ்தானியில் எதிரொலித்தது.
வேறு யார் குரல் அந்த இடத்தில் ஓங்கி ஒலிக்க போகிறது? சாட்சாத் அவளின் ராட்சசன் குரல் தான் அது.
"எஸ் சார்" என்று அடித்து பிரண்டு ஓடி வந்து நின்றாள் சம்ரித் முன்பு.
"ஏன் இன்னும் அந்த மாடல் ஃபீல்டுக்கு வரல?" என்று அவள் மீது எரிந்து விழ,
"இதோ போய் பார்க்கேன் சார்" என்றவள் அடுத்த கணமே அவன் கண்ணை விட்டு ஓடி மறைந்திருந்தாள்.
கேரவன் அருகே வந்தவள், "மாமா இந்த மனுஷனை ஏதாவது பண்ணனும் மாமா. சும்மா எவன் என்ன பண்ணாலும் என்னை பிடிச்சு ஏறுறார்?" என்று குறை சொல்ல,
அவளுடன் நடந்த பாலாவோ "பண்ணிடலாம் பண்ணிடலாம்" என்று மண்டையை ஆட்டி சொல்ல,
"நீ என்ன பண்ற? இப்படி மண்டையை மண்டையை தான் ஆட்டுற. கோதாவுல இறங்கி எல்லாரையும் தெறிக்க விடு மாமா"
'பாப்பா அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா? உனக்கு யாரு சம்பளம் தர்றது. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் அவன் உயிர் மிஞ்சுது. இல்ல… எப்பவோ என் சக்தியால அவனை உண்டு இல்ல பண்ணியிருப்பேன்."
"என்னவோ மாமா இப்போதைக்கு எதுவும் பண்ண மாட்ட, நான் தான் கிடந்து சாகணும்" என்று அவள் பாலாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே கேரவன் விட்டு விளம்பர நடிகை வெளியே வர, வெளியே தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தவளை வித்தியாசமாக பார்த்தவள்,
"யார் கிட்ட பேசிட்டு இருக்க?" என்று தான் கேட்டாள், அந்த இடத்தை சுற்றி பார்வையை வீசியப்படி.
"ஹி ஹி…" ஸ்கிரிப்ட் டயலொக் பேசி பார்த்துட்டு இருந்தேன். என்று சமாளிக்க முயல, அவளை விழி சுருக்கி சந்தேகமாக பார்க்க,
என்னை பத்தி ஆராய்ச்சி பண்ண, அவளை யோசிக்க விட்டா தானே!
"லேட் ஆகுதுனு சார் கத்துறார். வாங்க" என்று அவள் முன்னே வேகமாக சென்று விட, அவளை தான் குழப்பமாக பார்த்த படி அவள் பின்னே வந்து சேர்ந்தாள் ரசிஹா.