தளிர் 4

 

Sunitha Bharathi
(@sunitha-bharathi)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 26
Thread starter  

தளிர் : 4

 

 

அடர் நீல நிறத்தில் தன் கணுக்கால் வரை மறைத்து நிலத்துடன் உறவாடி கொண்டிருந்த நீண்ட கவுனை பிடித்து, அளவில்லா ஆனந்தத்துடன் மெத்தை மேல் நின்று அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தி கொண்டிருந்த சுதர்சனாவை தான் தன் செல்போன் திரை வழியே பார்த்துக் கொண்டிருந்தான் அருணன்.

 

 

முந்தைய நாள், மகள் பிறந்த நாளிற்காக சிங்கிள் ஃபாதர் தன் தேர்வு அவளுக்கு பிடிக்காமல் போய் விடுமோ! என்று எண்ணியவனோ, சாசனம் எழுதி கொடுக்காத அடிமையாக உடன் வைத்து சுத்தும் ராதிகாவை தான் துணி கடைக்கு அழைத்து சென்றிருந்தான்.

 

 

அவளுக்கும் மூனு குழந்தைகள் இருக்கிறதே. குழந்தைகளுக்கு பிடித்தமானதை நன்கு அறிந்து வைத்திருப்பாள், அவள் தேர்வு நன்றாக இருக்கும் என்று எண்ணி அழைத்து வந்து, நாலு வயசு பெண் குழந்தைக்கு என்று சொல்லி உடை தேர்ந்தெடுக்க சொன்னான்.

 

“யாருக்கு சார் ட்ரெஸ்?” 

 

“நாளைக்கு ஷூட்டிங் வர்ற குழந்தைக்கு” 

 

“ஒரு வயசு குழந்தை தானே புக் பண்ண சொன்னீங்க” 'அய்யய்யோ நாலு வயசு புள்ளை தான் வேணும்னு கேட்டா? நான் எங்க போய் இப்போ புள்ள புடிப்பேன்.' என்று தான் அவள் மண்டையில் ஓடிக் கொண்டிருந்தது.

 

“வச்சி போடும்” என்று கேள்வி கேட்கும் அவளை முறைத்துக் கொண்டே அவன் சொல்ல,

 

“வழக்கமா காஸ்டியும் டிசைனர் தானே இதெல்லாம் ரெடி பண்ணுவாங்க?”

 

“ஏய் என்னையே கேள்வி கேட்கிறியா? நீ அசிஸ்டென்டா? நான் அசிஸ்டென்டா? விட்டா ஓவரா கேள்வி கேட்டுட்டே இருக்க. இனி வாயை திறந்த? ஒரு மாசம் சம்பளம் கட்" என்று தடா போட்ட பிறகு, வாயை திறப்பாளா? 'நீ எத்தனை பெரிசா எடுத்த எனக்கு என்ன? எவ புள்ளைக்கு எடுத்தா எனக்கு என்ன?' என்று வாயை மூடிக் கொண்டு உடை தெரிவு செய்ய சென்றவள், அரை மணி நேரம் உருண்டு பிரண்டு அலசி ஒரு உடையை எடுத்து கொண்டே, "சார்… இங்க வாங்க" என்று ஓரமாக அமர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்த அருணனை அழைத்து அவள் தேர்வு செய்த உடையை காட்ட,

 

 

ஒற்றை புருவத்தை உயர்த்தி, தன் பிடித்தமின்மையை மட்டுமல்ல, இவளை கூட்டி வந்தது டைம் வேஸ்ட் என்ற எரிச்சலையும் முகத்தில் காட்டியவன், அப்படியே அவளை பார்க்க, 

 

 

அவள் எங்கே அவன் முக மாற்றங்களை கவனித்தால், சிங்குஜா சிங்குஜா பச்ச கலரு சிங்குஜா என்று அவள் எடுத்து வைத்திருந்த, கண்ணை பறிக்கும் கற்கள் வேலை பாடு கொண்ட பிராக்கை தான் வாயெல்லாம் பல்லாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

"நல்லா இருக்குல… லைட் முன்னாடி நின்னா, இந்த கல்லெல்லாம் அப்படியே கண்ணை பறிக்கும்" என்று கேமரா கண்ணோட்டத்தில் அவள் தேர்வு இருக்க,

 

 

குழந்தைக்கு பிறந்த நாள் பரிசாக தெரிவு செய்ய நினைத்தவனுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை தான்.

 

 

"இவ்வளவு ஹெவி ட்ரெஸ் குழந்தை எப்படி போடுவா? இதுல கல்லு… ***ருனுட்டு… ட்ரெஸ் பார்க்க அழகா இருக்குதா மட்டும் பார்க்க கூடாது, கிளாத் பார்க்கணும். இது ரொம்ப ஹார்ட் ஆஹ் சொரா சொரப்பா இருக்கு, குழந்தை உடம்ப குத்தும்" என்று சொன்னவன், "உன்ன கூட்டிட்டு வந்தது டைம் வேஸ்ட். எப்படி தான் மூனு பிள்ளை…" என்று சொல்ல வந்தவன், 

 

அவள் விழிகள் அழுத்தமாக அவன் மீது பதிந்து இருப்பதை பார்த்து, சொல்ல வந்த வார்த்தைகளை அப்படியே விட்டு விட்டு, "விலகு" என்று அவளை பிடித்து பின்னால் தள்ளி விட்டவன், அவனே தன் மகளுக்கு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான்.

 

அவளிடம் எல்லை கடந்து பேச அவனுக்கு உரிமை இல்லையே. வேலை விசயம் தாண்டி, அவன் சொந்த விசயம் பேசவும் விருப்பம் இல்லை. இந்த இரண்டு வருடத்தில் இதுவே முதல் முறை, அவன் தனிப்பட்ட வேலைக்காக அவளை அழைத்து வந்தது. அதையும் 'ஏன் டா கூட்டி வந்தோம்!' என்று அவனையே எண்ண வைத்து விட்டாள்.

 

 

அவன் தன்னை தள்ளி விட்டதும் முறைத்துக் கொண்டே ஓரமாக வந்து நின்றவள், "அந்த ட்ரெஸ்க்கு என்ன மாமா குறைச்சல்" என்று மெதுவாக முனங்க, 

 

 

"நல்லா தான் பாப்பா இருக்கு" என்று அவள் காதருகில் ஒலித்தது அவளவன் குரல்.

 

"அப்புறம் என்னவாம்?"

 

 

"அவர் சொல்றதுவும் சரி தானே பாப்பா" என்றவனை தீயாய் அவள் முறைத்துக் கொண்டிருக்கும் போதே, அங்கே அருணன் உடை எடுத்து விட்டு கடையை விட்டு வெளியேறி கொண்டிருந்தான். 

 

 

"என்ன முறைச்சது போதும் அவர் போறார் பாரு போ போ" என்று அவளை விரட்டி விட்டு பாலா மறைந்து போக, "சார்…" என்று அழைத்துக் கொண்டே அவன் பின்னே ஓடி வந்தவளை சிறிதும் கணக்கில் எடுக்காது அவன் பாட்டுக்கு காரை உயர் வேகத்தில் கிளப்பி கொண்டு சென்று விட்டான். அதான் அவளால வேலை எதுவும் ஆகளையே, அவளுக்கு டிரைவர் வேலை பார்க்கணுமா? என்று விட்டு சென்று விட்டான். 

 

 

இங்கே பார்க்கிங்கில் பே'வென முழித்துக் கொண்டு தனியாக நின்றிருந்த ராதிகாவோ, "நானா உங்கூட வரேனு அடம்பிடிச்சு வந்தேன். நீ தானே யா மதியம் சாப்பிட்டுட்டு அக்கடாணு ஒரு அஞ்சு நிமிஷம் உட்காரலாம்னு சேர்ல சரிய போனவள வேலை இருக்கு வானு இழுத்துட்டு வந்த. இப்போ இப்படி நடு தெருவுல அம்போனு விட்டு போனா, என்ன அர்த்தம்?"

 

என்று தனியாக நின்று புலம்பிக் கொண்டிருந்தவள் "யோவ்வ் மாமா நீயாவது இருக்கியா? இல்லையா?" என்று அவன் மேல் இருந்த கோபத்தில் கத்தி விட, அந்த பக்கமாக வண்டியை எடுக்க வந்த ஒரு பெண் மார்க்கமாக அவளை பார்த்து கொண்டே வந்தாள்.

 

"இருக்கேன் பாப்பா. நீ இப்படி அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பேசி மாட்டிக்காத" என்று பாலா அவள் அருகே நின்றிருக்க, 

 

 

"ஹி ஹி… ஹாய்" என்று அந்த பெண்ணிற்கு கை காட்டியவள், சற்றென்று காதில் ப்ளூடூத்தை எடுத்து மாட்டிக் கொண்டு அந்த பெண்ணை பார்த்து அசடு வழிய சிரித்து சமாளிக்க முயன்றாள். 

 

அந்த பெண்ணோ அதை பார்த்து இன்னமும் பயந்து அவள் காரை எடுத்துக் கொண்டு ஒரே அழுதாக அழுத்தி பறந்து விட்டாள்.

 

"ரொம்ப கண்ட்ரோல் மிஸ் ஆகுது. இனி கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்" என்று பாலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கையில் இருந்த போன் அழைத்தது.

 

 

அருணனே. "விட்டுட்டு போய்ட்டு என்னவாம் அவருக்கு?" திரையில் தெரிந்த அவன் எண்ணை திட்டி கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைக்க, "பத்து நிமிசத்தில ஸ்பாட்ல இருக்க. இல்ல அரை நாள் சம்பளம் கட்" என்று ஒன்லி இன்கமிங் தான் இந்த பக்கம் அவுட் கோயிங்க்கு வாய்ப்பே இல்லாது தொடர்பை துண்டித்து இருந்தான்.

 

 

"சார் சார்…" என்று கத்தியவள் பேச்சை யார் கேட்டது. அவன் செயலிலும், உத்தரவிலும் எரிச்சல் அடைந்தவள் கைகளை அழுந்த மூடி, "ம்ங்க்" என்று பல்லை கடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

 

'வேலைக்கு போறேனு ஆட்டிட்டு போனவளுக்கு வேலை நடுவுல துணி கடைல என்ன வேலை?' அவள் துணி கடையில் இருந்து வெளியே வந்ததை எத்தனை நலன் விசாரிகள் பார்த்தார்களோ! என்னவெல்லாம் கட்டி விட போகிறார்களோ! என்றெல்லாம் யோசித்து கொண்டே, பஸ் பிடித்து அவன் சொன்ன ஸ்டுடியோ சென்றிருந்தாள்.

 

அப்படி அவன் மகளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய வண்ண உடையில் குட்டி தேவதையாக அவள் மின்ன, கையில் அள்ளி ஆசை முத்தம் வைக்க தான் அவனுக்கு பாக்கியம் இல்லாமல் போனது.

 

 

தன் ஆருயிர் மனைவியின் உயிரை பறித்து மண்ணில் ஜனித்த உயிர் என்று கோபம் இருந்தாலும், தன் உயிரணுவில் உருவாகி, தன்னவள் கருவறையில் வளர்ந்து தன் உறவாக உலகிற்கு வந்த தன் மகவின் மீது கொள்ளை பாசமும் வைத்திருக்கிறான். ஆனால் வெளிக்காட்ட தான் பயம்.

 

 

அவன் அன்பு காட்டும் பெண்கள் யாரும் அவனோடு நீண்ட காலம் நிலைப்பது இல்லை. பெரியன்னை, சகோதரி வரிசையில் காதலித்து கரம் கோர்த்த மனைவியையும் இழந்திருக்க, தன் மீதே சிறு அதிருப்தி தான் அவனுக்கு. 

 

 

விஞ்ஞானம் விண்ணை தாண்டி ஆய்வு நடத்தும் இந்த காலத்தில் நவீன உலக நாகரீக மனிதன் இதையெல்லாம் நம்புவானா? என்று கேட்டால். தொடர் நிகழ்வுகளும், இழப்புகளும் அவன் மனதை ஆட்டி தான் வைத்தது. 

 

 

துரதிஷ்டம் என்று எதுவும் இல்லை என்று விதியோடு வாதாடி தன் மகளையும் இழக்க அவன் தயாராக இல்லை. அதான் அன்பை காட்ட முடியா தகப்பனாக, தன் பிள்ளைக்கு எட்ட நின்று எல்லாம் செய்து ஏக்கத்துடன் கடந்து செல்கிறான்.

 

 

அவள் மனம் நோகும் என்று அறிந்தே சிறுமி என்றும் பாராமல் வார்த்தைகள் என்னும் கனலை அவள் மீது விசுகிறான். ஆனால் அந்த கனல் தான் அவள் உயிரை இந்நாள் வரை காத்து வருகிறது என்பது அவன் அறியா ஒன்றே.

 

 

சில சமயங்களில் மனிதர்களின் சதியை கூட விதி என்று விதி மேல் பழியை போட்டு மறைந்து கொள்கிறது கள்ளமுள்ள இதயங்கள். அதை அறியா மனமோ தன்னை தானே வதைத்து வருத்திக் கொள்கிறது.

 

 

அருணன் எங்கு இருந்தாலும், அவன் கவனம் முழுவதும் அவன் மகள் மீது தான் இருக்கும். வீட்டில் ஆங்காங்கு கேமரா வைத்துள்ளான், யாரும் அறியா வண்ணம். சனா அறையிலும் இருக்கிறது. பிள்ளையின் சந்தோஷத்திற்காக அனைத்தையும் மறைந்து நின்று கொடுப்பவனுக்கு தெரியவில்லை, அவள் ஏங்கி கேட்கும் வரம் அவன் அன்பு ஒன்று தான் என்பது. தெரிந்தும் தன் அன்பிற்கு விலங்கு போட்டு விலகி நிற்கும் அவனை என்னவென்று சொல்ல.

 

 

குழந்தையை குளிப்பாட்டி, அருணன் வாங்கி கொடுத்த உடையை, காலையிலேயே போட்டு விட்ட பட்டம்மா, "நல்லா இருக்கா பாப்பா?" என்று அவள் தலையை வாஞ்சையாக வருடி கேட்க,

 

 

"ஹ்ம்ம்… ரொம்ப நல்லா இருக்கு பட்டம்மா. யாரு வாங்கி தந்தாங்க?"

 

 

"பாட்டி வாங்கி தந்தாங்க… சரி சரி கழட்டு பாப்பா வேற போடலாம்."

 

 

"ஏன் கழட்டனும். இது நல்லா இருக்கே. நான் இதையே போட்டுகிறேன்" என்று கண்களை சுருக்கி தன்னிடம் கெஞ்சும் குழந்தையை பார்க்க அவருக்கும் பாவமாக தான் இருந்தது. 

 

 

ஆனால் குழந்தை ஆசைப்பட்டால் என்று விட்டு விட்டால் இதுவே அவள் தந்தை அவளுக்கு வாங்கி கொடுக்கும் கடைசி உடையாக இருந்து விட கூடுமே! அந்த பயம் அவருக்கு.

 

 

"சொன்னா கேட்கணும் பாப்பா… நீ நல்ல பிள்ளைல நாம பொம்மை வச்ச ட்ரெஸ் போட்டுக்கலாம்" என்று மழுப்பி வேறு உடை மாற்றியே வெளியே அழைத்து வந்தார்.

 

 

இங்கே அறையில் அமர்ந்திருந்த அருணன் விழிகளும் கைபேசி திரை வழியே மகள் போகும் திசை எங்கும் நகர, அதில் தடையாக வந்து விழுந்தது ‘ராதிகா’ என்ற பெயர் செல்போன் சிணுங்களாக, 

 

ஷூட்டிங்கிற்கு எல்லாம் தயார் செய்து விட்டு அவள் காத்திருக்க, டான்னு கண்ணுல மணியை கட்டிட்டு வந்து நிற்கிற ஆள இன்னைக்கு காணோம் என்றதும், ‘இத்தனை பேர் தூக்கத்த கெடுத்துட்டு அவர் மட்டும் நிம்மதியா இருக்கலாமா? அடி டா போனை அந்த டபரா மண்டையனுக்கு’ என்று அடித்து விட்டாள், அந்த அழைப்பு தான் அவளுக்கு மரண ஓலம் என்பதை அறியாது வினையை வீம்பாக அழைத்து அருகில் இழுத்தாள்.

 


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top