கோகிலமே 6

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

6

தன்னை பாட வைத்து ஆல்பம் வெளியிட வேண்டும் என்று அவன் சொன்னது அதிர்ச்சியா? இல்லை பார்க்கும் போதெல்லாம் தன்னை முத்தம் இட்டு செல்வது பேரதிர்ச்சியா? இவையெல்லாம் விட என்னை பார்க்கும் ஒவ்வொரு நேரமும் நீ வெளியிடும் வார்த்தைகள் எல்லாம் வம்பாக இருக்கே? என்று அவள் மேல் குறை கூறி அவன் சென்றது தான் எல்லாத்தையும் விட பெரும் அதிர்ச்சியாக இருந்தது வர்த்தினிக்கு..

 

 

'அடப்பாவி கிராதகா? நீ எல்லாம் என்ன மனுஷனா இல்ல ராட்சஷனா? நான் பாட்டுக்கு சிவனேனு அந்த கண்ணனோடு லீலைகளையும் புகழையும் பாடிண்டு இருந்தா, இவன் பாட்டுக்கு அவன் இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிண்டு வந்து நேக்கு முத்தம் வெச்சிட்டு போறான்? பெருமாளே இவனை எல்லாம் பெத்தாளா? இல்ல எங்கையாவது கொடுத்து செஞ்சுட்டு வந்தாளா? இந்த ஊர்ல இப்படி முத்தம் கொடுக்கிறது எல்லாம் சகஜமாக இருக்கலாம்.. அதற்காக இவன் என் பக்கத்துல ஈஷிண்டு ஈஷிண்டு நின்னுண்டு இருக்கிறதெல்லாம் என்ன நியாயம்? இது மட்டும் திருவையாறா இருக்கணும் இந்நேரத்துக்கு உன்ன கம்பத்தில் கட்டி வைத்து தோலை உரிச்சி இருப்பா? பெருமாளே மூணு நாளைக்கே என்னை இத்தணை பாடுபடுத்துறான் இந்த டீமென்... இவன் கம்பெனில சேர்ந்து ஆல்பம் பண்ணினா.. அச்சச்சோ நேக்கு வேணவே வேணாம் இவனோட சான்ஸூ எல்லாம்.. டேய் பாவி உன்னை எல்லாம் அந்த பெருமாள் சும்மா விடமாட்டார் டா"

 

அவள் பாட்டுக்கு அவனை எண்ணெய் சட்டியில் இட்டு ‌தாளித்து வறுத்து கொண்டிருக்க.. அவளது கையோ தன் கையில் இருந்த அந்த பேப்பர் பிளேட்டை அவனாக கருதி பிச்சு பிச்சு எடுத்திருந்தாள். அதில் அவளை சுற்றியும் அவள் சாப்பிட வைத்திருந்த உணவுகள் அனைத்தும் கீழே சிந்தி கிடக்க.. இதையெல்லாம் அவள் சற்றும் உணரவே இல்லை. அவள் கண்கள் அவனையே தான் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருக்க.. வாய் தன்பாட்டில் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

 

 

அவளிடம் நடத்திய அந்த டெஸ்டில் அவன் பாஸ் ஆகிவிட.. 'எப்படி இது சாத்தியம்? அவளிடம் மட்டும்' என்று நினைத்தவன், 'மீண்டும் ஒரு டெஸ்ட் செய்வோமா?' என்று எட்டிப்பார்த்த மனதை, அறிவு தலையில் கொட்டி அடுக்கி வைத்தது. ஏற்கனவே நாம் செய்த செயலால் நம் மீது கோபத்தோடு இல்ல கொலவெறியோடு இருப்பா.. இதற்கு மேல் இன்னொரு முறை செய்தால் ஊரைவிட்டே ஓடி விடுவாள். அவளை அவ்வாறெல்லாம் ஊரைவிட்டு ஓட விட கூடாது. என் கை பிடியிலேயே வைத்திருக்க வேண்டும். அதற்கு தான் வைத்திருக்கிறேன் செக்' என்று தன்னைப்பற்றி அதீத பெருமையில் கர்வத்தில் சென்றான் வினய்..

 

எவ்வளவு கர்வத்துடன் செருக்குடன் வாழ்ந்த மன்னாதி மன்னர்கள் எல்லாம் சிறு பெண்ணின் கண்ணசைவில் வீழ்ந்த சரித்திரம் எல்லாம் இவன் அறியவில்லை போலும்!!

இவனும் சரியும் அந்த நாளும் வெகு தூரத்தில் இல்லை!!!

எந்தவித உணர்வும் அவள் மீது இல்லாமலே, அவளை விட முடியாமல் தன் கைகளுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் இவன் காதலில் விழுந்தால்?? அப்பப்பா.. இன்னும் அவளை பொம்மை போலவே பாவிப்பானோ? இல்லை தன் உதடு சுழிப்பில் இவனை கொள்ளையிடுவாளோ அந்த மோகனம்?

காலத்துடன் நாமும் பயணித்து அறிவோமே!!

 

அவ்விடத்தை விட்டு நகர்ந்து தனது தாய் தந்தையின் அருகில் இவன் நின்று கொண்டிருந்தாலும் அவனது கண் வளைவில் தான் வைத்திருந்தான் அவளை.

 

அவள் இந்நேரம் தன்னை எவ்வாறு திட்டி கொண்டு இருப்பாள் என்று நினைக்கும் போதே.. அவனது உதடுகளில் குறும்புப் புன்னகை பூக்க.. அதனை உதடு மடித்து கடித்து ஒளித்தான் இந்த மாயவன்.

 

சற்று நேரத்தில் வெங்கடேசன் அவரது மற்றொரு சங்க உறுப்பினரான சீனிவாசனுடன் வந்துவிட்டார். ஏற்கனவே அவரிடம் விவரம் தெரிவித்து அழைத்து வந்திருந்தால், வந்திருந்த சீனிவாசனும் 'நமஸ்காரம் சார்.. நீங்க சொன்னதை கேட்கிறச்சே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் சார்" என்று அவரும் வெங்கடேசனுக்கு மேல நயந்து பணிந்து பேச..

 

அவற்றை எல்லாம் ஒரு ஆளுமையான சிரிப்பில் உள் வாங்கி கொண்டான் வினய் விஸ்வேஸ்வரன்.

 

"சார் அவ எனக்கு தெரிஞ்ச ஆத்து பொண்ணு தான். கொஞ்சம் கஷ்டப்படுறவா. நீங்க இந்த சான்ஸ் அவளுக்கு கொடுத்தால் அவளோட ஃப்யூச்சருக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். நான் இப்பவே அவங்க தோப்பனாருக்கு போன் பண்ணி அவருடைய பர்மிசன் வாங்கிட்டுறேன்" என்றவர் அடுத்து நிமிடத்தில் ஐஎஸ்டி செலவையும் பார்க்காமல் சுப்புவுக்கு அழைத்து விட்டார் வெங்கடேசன்.

 

"சுப்பு நான்தான் அன்னைக்கே சொன்னேனா இல்லையா? உன் பொண்ணுக்கு அதிர்ஷ்டம் வந்திருக்குன்னு. வந்த அதிர்ஷ்டம் வாசல் வழியே வராம கூரையை பிய்த்தி கொண்டு கொட்ட போகுதுடா உங்க ஆத்துல" என்று எடுத்த எடுப்பில் பேசியவரின் வார்த்தையில் எதுவும் புரியாத சுப்பு.. "மாமா நீங்க என்ன சொல்றேள்னு நேக்கு சுத்தமா வெளங்கல. கொஞ்சம் தெளிவா சொல்லுறேளா? பிள்ள நல்லா இருக்காள் இல்லையா.. ஷேமமா தானே இருக்கா?" என்று தன் மகள் நலத்தையும் பாதுகாப்பையும் முதலில் அறிந்து கொள்ள துடித்தார் அந்த பாசமிகு தந்தை.

 

"டேய் அதெல்லாம் உன் பொண்ணு நன்னா இருக்கா. நான் சொல்ல வந்தது என்னன்னா இங்கே லண்டன்ல பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருத்தர் உன் பொண்ணு பாடுனதை கேட்டுட்டு, அவர் கம்பெனி மூலமா உன் பொண்ண பாடவைத்து, அது ஆல்பம் தயாரித்து வெளியிட விருப்பப்படுறார். உன் சம்மதத்தை மட்டும் சொல்ல வேண்டியது தான் பாக்கி.. மத்தெல்லாம் நான் பாத்துக்குறேன்" என்று அவர் சொல்ல..

 

அங்கே லண்டனில் இருந்து போன் என்றவுடன் அவர் கையில் இருந்து போனை வாங்கி லவுட் ஸ்பீக்கரில் போட்டு அருகே மீனாட்சியும் கேட்டுக்கொண்டே தான் நின்று கொண்டிருந்தார்.

 

மகளைப் பற்றி அவர்கள் பெருமையாக பேசும் போது அவருக்கு சந்தோஷம் பொங்கியது என்றால் அவளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை கேட்டு ஆனந்த தாண்டவம் ஆட கிளம்பிவிட்டார் அவர்.

 

எங்கு கணவன் எதுவும் தடுத்து விடுவாரோ என்று நினைத்தவர் "மாமா ரொம்ப சந்தோசம். எங்களுக்கு பரிபூரண சம்மதம் இதுல. அவளை உங்கள நம்பி தான் நாங்க அனுப்பி வைத்திருக்கோம். என்ன நல்லது பண்ணினாலும் எங்களுக்கு சந்தோஷமே..‌ உங்க ஆத்து பொண்ணா நினைச்சு நீங்களே பார்த்து நல்லதா பண்ணுங்கோ" என்று கூற சுப்புவால் ஒன்றும் பேச முடியவில்லை. அவரும் தன் மகளுக்கு கிடைத்த இந்த பெரும் வாய்ப்பில் வாயடைத்து நின்றிருந்தார் சந்தோஷத்தில்....

 

 

"சரி மாமி.. எல்லாத்தையும் இனிமே நான் பார்த்துக்குறேன். கூடவே வர்த்தினியையும் நன்னா பார்த்துக்கிறேன் நீங்க கவலை படாதேள்".. என்று கூறி போனை வெங்கடேசன் அணைத்துவிட.. மீனாட்சி உடனே தங்கள் பூஜை அறையில் இருக்கும் பெருமாளை சேவிக்க சென்றுவிட்டார்.

 

 

சந்தோஷத்துடன் வெங்கடேசன் வினய்யை பார்த்து "அவா தோப்பனார் ஒத்துகிட்டார். நீங்க மேல என்ன ப்ரோசிஜரோ அதை பாருங்கோ" என்று அவர் கூற..

 

அவனோ மேல் தாடையை தடவி யோசனையாக அவரை பார்க்க.. "சொல்லுங்க சார் ஏதேனும் பிரச்சனையா?" என்று சீனிவாசன் கேட்க..

 

"பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல. இந்த மாதிரி பாட போகிறவர்கள் குறைஞ்சது ஒரு 3 மாசம் இங்க ஸ்டே பண்ற மாதிரி இருக்கும். அந்த பொண்ணு எந்த விசால வந்திருக்காங்கன்னு எனக்கு தெரியல இல்லையா.. அதனால அதைப் பத்தின டீடெயில்ஸ் எனக்கு கொஞ்சம் வேண்டும்" என்று வினையமாக வினய் கூற..

 

"சார் அவங்க வந்திருக்கிறது மூன்று மாச டூரிஸ்ட் விசாவில் தான் சார்.. அதனால் விசா பற்றி எந்த பிரச்சனையும் இல்லை" என்று வெங்கடேசன் விளக்க..

 

"ஓ சூப்பர்.. தென்.. அக்காமடேஷன் தான் அடுத்து பார்க்கணும். ஜென்ஸ் ஆ இருந்தா ஏதாவது ஒரு ஹோட்டலில் நான் அவங்களுக்கு புக் பண்ணிடுவேன். ஆனா இந்த பொண்ணுங்க..." என்று அவன் இழுக்க...

 

 

"அதுக்கு என்ன சார்.. எங்க ஆத்துலேயே நான் தங்க வைச்சிக்கிறேன். ஒன்னும் பிராப்ளம் இல்ல" என்று வெங்கடேசன் கூற..

 

"வெங்கட்.. உன் ஆத்துல ஏற்கனவே ஒரு பையன் இருக்கான். கல்யாணம் ஆகாத ஒரு கன்னிப் பெண்ணை உன் ஆத்துல தங்க வச்சா நாளைக்கு அவ கல்யாணத்தின் போது இந்த பிரச்சினையெல்லாம் வராதா? என்னதான் நாம வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நம்மவாளுக்குனு ஒரு கல்ச்சர்.. பாரம்பரியம் இருக்கோ இல்லையோ?" என்று சீனிவாசன் கேட்க...

 

'என்னங்கடா உங்க கல்சர்.. பாரம்பரியம். சுத்த ரப்பிஷ்' என்று கடுகடுத்து தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் வினய்.

 

"அப்படி ஒன்னு இருக்கோ? இப்போ என்ன செய்யுறது சீனி? நீயே ஒரு ஐடியா சொல்லேன்" என்று வெங்கடேசன் கேட்க... "எங்காத்துல வச்சுக்கிறேன் டா. எனக்கு இருந்த ஒரே பொண்ணும் கல்யாணம் ஆகி நியூயார்க் போயிட்டா.. நானும் எங்க ஆத்துக்கு மாமியும் தனியா தானே இருக்கோம். அதனால நாங்க பார்த்துக்குறோம்" என்று அவர் கூற..

 

"சீனி எதுக்கும் மாமி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோ?" என்று வெங்கடேசன் கூற..

 

வினய்யை பார்த்து தன் பற்களை காட்டிக் கொண்டே தன் மனைவியை அழைக்க என்றார் சீனிவாசன். அச்சமயம் அவரது மனைவி பங்கஜமும் வெங்கடேசன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்க விஷயத்தை அறிந்து கொண்ட பத்மாவுக்கு மனதில் சில பல கணக்குகள்..

 

உடனே வெங்கடேசனிடம் வந்தவர் "அது எப்படின்னா.. நம்மள நம்பி அவங்க ஆத்துல அனுப்பி வைத்திருக்கா.. நாம எப்படி தெரியாதுவங்க ஆத்துக்கு எல்லாம் அவள அனுப்புறது. அதெல்லாம் நன்னா இருக்காது நம்ம ஆத்துல வைச்சே பார்த்துக்கலாம். மூணு மாசத்துல என்ன ஆகிட போகுது.. அதுவும் இல்லாமல் எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? போதாக்குறைக்கு நாம இப்போ லண்டனில் இருக்கோமாக்கும். இந்த பேச்சை எல்லாம் விட்டு தள்ளுங்க. வர்த்தினி பேஷா நம்ம ஆத்துலேயே தங்கட்டும்" என்று பத்மா ஒரே போடாகப் போட்டு விட...

 

வெங்கடேசன் மெதுவாக தன் மனைவியை பார்த்து "பிரதீபன்..." என்று இழுக்க..

 

"அதெல்லாம் நேக்கு தெரியும். நீங்க ஷெத்த சும்மா இருங்கோ.. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. என்றவாறு வினய்யை பார்த்து இரு கரம் குவித்து வணக்கம் வைத்துவிட்டு "சார் ஒன்னும் பிராப்ளம் இல்ல. அவளை நாங்க எங்க ஆத்துலேயே தங்க வைச்சுக்கிறோம்" என்று கூறி வர்த்தினி லண்டனில் தங்குவதற்காக ஏற்பாடு முடிந்துவிட..

 

"ஓகே.. கம்மிங் ஃப்ரைடே இந்த அட்ரசுக்கு டென் ஓ க்ளாக் ஷார்ப்பா வர்த்தினியை கூட்டிட்டு வாங்க. நாம ஒரு அக்ரீமெண்ட் போட்டுட்டு ஒர்க் ஸ்டார்ட் பண்ணலாம்" என்றவன் தன்னிடமுள்ள கார்டை வெங்கடேசனிடம் நீட்டினான்.

 

 

அவரும் அதை பிரசாதம் போலவே பாவித்து வாங்கி இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டவர் "கண்டிப்பா சார்.. நான் வெள்ளிக்கிழமை வர்த்தினியை நீங்க சொன்ன நேரத்துக்கு அழைச்சிண்டு வந்திடுறேன்" என்றார்.

 

 

தங்கள் மகன் யாரிடமோ நின்று பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை பார்த்த மஞ்சு தன் கணவனிடம் சுட்டிக்காட்ட.. "ஆமா புதுசா இருக்கு? எதுக்கு இவன் கார்டை கொடுக்கிறான்.. என்ன விஷயம் தான் தெரியல. என்னன்னு வா கிட்ட போய் பார்க்கலாம்" என்று அவரும் சேர்ந்து அங்கே வர..

 

தரணீஸ்வரனை பார்த்தும் வெங்கடேசன் அந்த ஈஸ்வரனே தன் கண் முன்னால் நின்றது போல பாவித்து பெரிய கும்பிடு போட்டு "வாங்கோ சார். உங்க பையனால எனக்கு தெரிஞ்சவா குடும்பத்துக்கு ஒரு நல்ல காலம் பொறந்திருக்கு" என்று ஆரம்பிக்க.. என்ன என்று புரியாமல் நெற்றியை சுருக்கி அவரையும் தன் மகனையும் பார்த்தார் தரணி. அதற்குள் வெங்கடேசனே எவ்வித தூண்டுதலும் இன்றி முழு ஷரத்தையும் கூறி முடித்து விட..

 

கேட்ட மஞ்சுளாவுக்கு முதலில் சந்தோசம். அந்தப் பெண்ணின் குரலில் அவருக்கு பிடித்த பாரதியார் பாடல்கள் அதுவும் தங்கள் கம்பெனியிலேயே ஆல்பமாக போடுகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டுமா அவருக்கு. ஆனால் இன்னொரு மனதோ மகனின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசனையாக அவனைப் பார்த்தார்.

 

ஆனால் அவர் பார்த்ததை தன் கண்களாலேயே கேட்டுவிட்டார் தரணி மகனிடம்.. அவனும் வெங்கடேசனை சுட்டிக்காட்டி சற்று பொறுத்து இருக்குமாறு கண்களாலேயே அவரிடம் பதிலளித்தான்.

அதற்குள் வெங்கடேசனே "ஷத்த இருங்கோ சார். நான் அந்த பொண்ணையே கூட்டிண்டு வந்துடுறேன். உங்க வாயாலேயே அந்த நல்ல விஷயத்தை சொல்லுங்கோ" என்று வர்த்தினியை கூட்டிவர தன் மனைவியை அழைத்துக் கொண்டு அவர் சென்றார்.

 

"வாட் இஸ் திஸ் ஆல் வினய்?" தரணி கேட்க..

 

"ஜஸ்ட் நியூ பிஸ்னஸ் டாட்" என்று கெத்தாக தோள்களைக் குலுக்கியவாறு பதில் அளித்தவனை பார்த்து "இந்த நியூ பிசினஸூக்கு இப்போ என்ன அவசியம்?" என்று அவர் கேட்க..

 

"நியூ பிசினஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணலாம்னு ஐடியால தான் இருந்தேன். இந்த ஃபங்ஷனுக்கு வந்ததும் என்ன பிசினஸூனு கன்ஃபார்ம் பண்ணிட்டேன். முதல் இங்கே வந்ததிலேயே யாரை ச்சூஸ் பண்ணலாம் நான் கொஞ்சம் கன்ஃபூஸ்டா இருந்தேன். ஆனால் இன்னைக்கு ஸ்டேஜ்ல மாம்மே அதை நிவர்த்தி பண்ணிட்டாங்க. சோ ஆல் கிரடிட்ஸ் கோஸ் டூ மாம்" முழு பழியையும் தூக்கி தன் அன்னையின் மீது அவன் போட..

 

வந்த பங்ஷனில் கூட ஒரு தொழிலைத் தொடங்கும் தன் மகனின் தொழில் அறிவில் ஆளுமையில் தந்தையாக பெருமிதம் கொண்டார் தரணீஸ்வரன்.

 

ஆனால் வந்தன்று சற்று குழப்பமாக தெரிந்தவன் இன்று திடீரென்று இந்த முடிவு எடுத்திருக்கிறான் என்றால் ஏதோ ஒன்று இடிக்குதே என்று தன் மகனை அறிந்த தாயாக யோசனையுடனே அவனைப் பார்த்தார் மஞ்சுளா.

 

தரணீஸ்வரன் குடும்பம் இவ்வாறு இங்கு பேசிக்கொண்டிருக்க அங்கே வெங்கடேசன் குடும்பமோ...

 

"உங்களுக்கு கொஞ்சமாவது சமத்து இருக்காண்ணா? வழிய வந்த ஸ்ரீதேவியை போயி அவங்க ஆத்துல தள்ளி விடுறேளே.. அந்த பொண்ணு ஊரில் இருந்தா, அவளை கஷ்டப்பட்டு நீங்கதானே பேசி இங்க கூட்டிண்டு வந்தேள். இப்போ போய் அவளை அந்த பங்கஜம் மாமி ஆத்துக்கு அனுப்பி எல்லாத்தையும் அவருக்கு வாரி வழங்குறேளா பேரு புகழு.. ம்ம்.. சொல்லுங்கோ? எப்படியும் அந்த பொண்ணை நம்ம ஆத்துல தங்க வைக்கிறதுக்கு அக்காமிடேஷன்க்கான பணத்தை கண்டிப்பா நம்ம கிட்ட கொடுத்திடுவா.. அது மட்டும் இல்ல பொண்ணு பாக்குறதுக்கு ரொம்ப லட்சணமா இருக்கா. ஏற்கனவே இவளை நமக்கு மாட்டுபொண்ணா பார்க்கலாம்னு மனசுக்குள்ள சின்னதா யோசனை ஓடிண்டே இருந்தது. இப்ப பாருங்க நல்ல சம்பாதிக்கவும் ஆரம்பிச்சுட்டா. இவளை நம்ம தீபனுக்கே கட்டி வச்சுட்டா நல்லா இருக்கும் இல்லையா?" என்று பேசிய தன் மனைவியை ஆவென்று வாயை திறந்து பார்த்தார் வெங்கடேசன்.

 

 

இந்த பெண்கள் எல்லாம் ஒரு விஷயத்துக்குள்ள எப்படி நுணுக்கி நுணுக்கி ஆயிரம் விஷயத்தை பாக்குறாங்க? என்று இதுவரை அவருக்கு புரியவே இல்லை.

 

ஒரு பெண் வயிற்றில் பிறந்து.. அக்கா தங்கை என பெண்களுடனே வளர்ந்து.. மனைவி என்ற ஒரு பெண்ணுடன் வாழ்ந்து.. மகள் என்று ஒரு பெண்ணை பெற்று வளர்த்து.. இன்னும் தம்மால் கண்டறிய முடியா அவர்களிடம் உள்ள சூட்சமத்தை நுண்ணறிவை வழக்கம் போல இன்றும் பிரமிப்புடனே பார்த்தார் வெங்கடேசன்..

 

மூன்று குடும்பங்களும் வெவ்வேறு மனநிலையில் இருக்க.. இங்கே பாட வேண்டியவளோ நல்ல காம்போதி ராகத்தில் பாட சொல்லி கேட்டவனைத்தான் வசைபாடி கொண்டிருந்தாள்.

 

அவர் அருகே வந்த வெங்கடேசன் தம்பதி அவளிடம் விஷயம் அனைத்தையும் கூற அரண்டு போய் பார்த்தாள் அவர்களை..

 

"நோக்கு நல்ல காலம் வந்து இருக்குடிமா அதனால தான் முதல்ல எங்காத்து மாமா கண்ணுல நீ பட்ட.. அவர் மூலமாக இங்கே பாட வந்த, இப்போவும் அவராண்ட பேசிண்டு இருக்குறச்ச தான் நோக்கு இப்படி ஒரு ஆல்பம் தயாரிப்பதில பாடுற வாய்ப்பு கிடைச்சிருக்கு" என்று வார்த்தைக்கு வார்த்தை எங்களால் தான் உனக்கு இந்த அதிர்ஷ்டம் என்று மெது மெதுவாக அவளின் மனதிற்குள் நன்றி உணர்ச்சியை தூண்டும் முயற்சி மேற் கொண்டிருந்தார் பத்மா.

 

ஆனால் அவளுக்கு நன்றி நவில்தலுக்கு பதிலாக ஏன்டா இவரை பார்த்தோம் என்றும் இவரால் தானே இங்கே வந்து இவனிடம் மாட்டுனோம் என்ற எண்ணம் தோன்ற வெங்கடேசனை அவள் பார்க்க..

 

 

அவள் நன்றி சொல்லத்தான் போகிறாள் என்று தவறாக உணர்ந்த வெங்கடேசனோ "நன்றி எல்லாம் ஒன்னும் சொல்ல வேண்டாம் குழந்த.. நீ நல்லா பாடி ஒரு நல்ல நிலைமைக்கு வந்தால் அதுவே எங்களுக்கு பெருமை தான். எங்க ஊரு பொண்ணு இந்த மாதிரி ஆல்பம் வெளியிட்டு இருக்கான்னு நாங்க எல்லோர்க்கிட்டேயும் பெருமையா சொல்லவோம் இல்லையா.. உன் தோப்பனாருகிட்ட பேசிட்டேன். உன் பெற்றோருக்கு அவ்வளவு சந்தோஷம். வா வா அவா எல்லாம் வெயிட் பண்ணிண்டு இருக்கா. போய் பேசிண்டு வந்திடுவோம்" என்று அவளை இழுக்காத குறையாக இழுத்துக்கொண்டு சென்றனர் இருவரும்.

 

 

என்னது பேசி முடிவே பண்ணிட்டீங்களா என்று திகைத்து நொடியே அவர் நிற்க அதை கண்டு கொள்ளாமல் அவளை அழைத்து சென்றனர்.

 

வந்து நின்றவளை சிறிதும் சட்டை செய்யாமல் தன் போனில் வில்லியம்ஸ் கூட பேசிக்கொண்டு இருந்தான் வினய். மஞ்சுளாவுக்கு தான் ஏக சந்தோசம் அவள் அருகில் சென்று "உன் பெயரே அவ்வளவு அழகா இருக்கு.. உன்னை போலவே" என்று அவள் கன்னம் வருடியவர். "நீ இந்த ஆல்பம் பண்றதுல எல்லாரையும் விடவும் எனக்குத்தான் ரொம்ப சந்தோஷம்" என்று தன் சந்தோசத்தை வெளிப்படுத்துபவரிடம் முகத்தில் அடித்தாற்போல் எனக்கு விருப்பமில்லை என்று சொல்லவும் அவளுக்கு வாய் வரவில்லை. அதேநேரம் தனக்கு கிடைத்திருக்கும் பெரும் வாய்ப்பு இது. இதன் மூலம் தன் கனவு நினைவாகும் தூரம் வெகு தூரத்தில் இல்லை என்று அவளுக்கு புரிந்து தானிருந்தது. ஆனாலும் இதை ஏற்றுக்கொள்ள ஏதோ ஒருவித நெருடல் அவள் மனதில்...

 

உள்மனம் முனுமுனுவென்று ராப்பூச்சி சத்தத்தை போலவே சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் அது என்னவென்று சரியாக அவளுக்கு விளங்கவில்லை.

வில்லியம்ஸ் கூட பேசிக் கொண்டிருந்தவன் சிறு தலையை அசைத்தலுடன் பெற்றோரிடமும் மற்றவரிடம் விடை பெற்று சென்று விட்டான்.

 

நேற்று போலவே இன்றும் அறைக்குள் நுழைந்தவள், மாதுரி குளியல் அறையில் நுழைந்த சமயம் பார்த்து தன் நோட் பேட்டில் வகைவகையாக ரகம் ரகமாக அவனை பாராட்டி சீராட்டி எழுதி வைத்து, பலவித கரும்புள்ளி செம்புள்ளிகள் அவன் உருவத்திற்கு குத்திவிட்டு தான் தன் முகத்தை இல்லை இல்லை உதட்டை ஜலக்கிரீடை செய்ய குளியல் அறைக்குள் நுழைந்தாள்.

 

அவளுக்கு எங்கே தெரிய போகிறது மறுநாள் இதைவிட வசமாக அவனிடம் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என்று!!

 

மறுநாள் தனது அன்னை மீனாட்சியின் வற்புறுத்தலாலும் மாதுரியின் ஆசையினாலும் அவ்வூரிலுள்ள சுவாமி நாராயணன் கோவிலுக்கு செல்வதற்கு இவர்கள் இருவரும் கிளம்பினார்கள்.. இவர்களுடன் தங்கியிருந்த மற்ற இருவரும் காலையிலேயே வேறு ஒரு இடத்திற்கு சுற்றி பார்க்க சென்று விட.. அச்சமயம் பார்த்து மாதுரிக்கு கோயில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட அவரோ தாங்கள் ஏற்பாடு செய்திருந்த வண்டியிலேயே வர்த்தினியை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

 

 

லண்டன் புறநகர் பகுதியான நியாஸ்டன் நகரில் வில்லஸ்டன் லேன் உள்ள அந்தப் பெருமாளை சேவிக்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வண்டியில் ஒரு வித பயத்துடனே தனியாக பயணமானாள் வர்த்தினி. அவளது பயமோ இல்லை விதியின் சதியோ அவள் பயணம் செய்து கொண்டிருந்த வண்டி பாதி வழியிலேயே நின்று போனது. 

 

நம் எண்ணங்களுக்கு ஒரு வித வலு உண்டு. ஆகவேதான் எந்த ஒரு காரியத்தை நாம் செய்தாலும் நேர்மறை எண்ணத்துடனும், நேர்மறை எண்ணங்கள் உள்ளவர்களிடம் ஆசியை பெறுமாறும் கூறுகிறார்கள் பெரியவர்கள். இவள் வண்டி ஏறியது முதல் ஒருவித பயத்திலேயே இருக்க அந்த பயமே தற்போது நடந்து விட.. இன்னும் பயம் பீடித்துக்கொண்டது வர்த்தினிக்கு.

 

அந்த வண்டியின் ஓட்டுநரோ கையை விரித்து விட்டான், வேறு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு செல்லுமாறு. வேண்டுமென்றால் அதுவரை தான் உடன் இருப்பதாகவும் கூற.. மொழி அறியா வழி அறியா அந்த வீதியில்.. விழிகள் அருவி என கொட்டத் தயாராக அவள் நின்றிருந்த நிலையில் ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தான் வினய் விஸ்வேஸ்வரன்.

 

அந்த வெளிநாட்டு படகு கார் அவள் அருகே சட்டென்று வந்த நிற்க அதிலிருந்து இறங்கிய அந்த நெடியவனை கண்டதும் ஒருவித நிம்மதி படர்ந்தது வர்த்தினிக்கு மனதில்.. 

 

தெரியாத தேவதைக்கு 

தெரிந்த பேயே மேல் என்று!!

 

ஆனால் அவள் மனதில் இருந்ததை அறியாத வினய்யோ தன் டிரைவரை விட்டு என்னவென்று பார்க்க சொன்னவன் அவள் அருகே சென்று "கார்ல ஏறு" என்று உத்தரவிட்டான்.

 

வேறு வழி இல்லாமல் இவள் வண்டியில் ஏற வண்டி அவன் கையில் வண்டி பதமாக செல்ல.. அதுவரை பழுதாகி விட்டது என்று நின்றிருந்த அந்த வாடகை வண்டியோ, இவள் ஏறி சென்ற அடுத்த நிமிடம் அதுவும் சீறிப்பாய்ந்தது இவர்கள் சென்ற திசைக்கு எதிர் திசையில்...

 

வர்த்தினி அதிர்ச்சியில் அந்த வண்டியையும் வினய்யையும் மாறி மாறி பார்க்க..

 

 

"சில்.. பேப்.. ஜஸ்ட் ஒன் டே டேட்டிங் உன்கூட அதான்.." என்று தங்கள் பின்னே சென்று கொண்டிருந்த காரை சுட்டிக்காட்டியவனின் கையில் கார் பறந்தது.

 

என்னது டேட்டிங்கா??!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top