ஆருயிர் 21
“என்ன?? என்ன சொன்ன?” என்று அவன் அதிர்ந்து கேட்க…
“நீ ஏன் என்னை லவ் பண்ணல? உனக்கு ஏன் அப்படி தோணல என்னை பார்த்து? ஒரு வேள உன் ரசனைக்கு ஏத்த மாதிரி நான் இல்லையோ? இல்லை ரசிக்கும் படியாகவே நான் இல்லையா??” என்று தன்னை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்து பார்த்தாள்.
யாழினியின் இந்த பேச்சில் இன்னும் அதிர்விலிருந்து அரவிந்த் வெளியே வரவில்லை.
”ஒருவேளை நான் அழகா இல்லையா? உன்னை கவர மாதிரி இல்லையா? இல்ல அதிரதனை நான்…” என்று அவள் சொல்லிக் கொண்டே இருந்தவளுக்கு ஏதோ தொண்டை அடைக்க.. “நான் நல்ல பொண்ணு இல்லையா அர்வி?” மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்.
”ஏய்.. எரும… நில்லுடி..” என்று கடுமையாகச் சொன்னான் அரவிந்த்.
அவளோ நிற்காமல் மெதுவாக நடந்தாள்.
”போடா... நீயே என்னை வேண்டாம்னு சொல்லிட்ட..? போ.. நீயும் போயி.. பத்தினியா எவளாவது கிடைக்கறாளானு பாரு..”
அவன் வேகமாக வந்து அவள் கையைப் பிடித்தான்.
”மித்து நீ ரொம்பத்தான் சீன் போடற.. மூடிட்டு வந்துரு.. இல்லன்னா நானே உன்னை தூக்கிட்டு போய்டுவேன்”
”அதைச் செய் மொதல்ல.. அந்த அதிரதனும் என் அண்ணனும் அப்போது தான் அடங்குவானுங்க”
”அய்யோ.. உனக்கு என்னமோ ஆய்ட்டு.. மூடிட்டு வாடி..!!” அவளை இழுத்து நிற்க வைத்தான்.
“என்னை விட்றா.. நான் அப்படியே நடந்து நடந்து எங்கேயாவது போறேன்.. உனக்கும் என்ன பிடிக்கல” அவள் மீண்டும் கையைப் பிடுங்கிக் கொண்டு வேகமாக நடந்தாள்.
அவனும் அவளை பின் தொடர்ந்தான். மெல்ல மெல்ல வேகம் மட்டுப்பட்டது. சிறிது தூரம் இருவருமே அமைதியாக நடந்தனர். பேசிக் கொள்ளவே இல்லை.!
”உனக்கென்ன தலையெழுத்தா.. ?” என்று திடுமெனக் கேட்டான்.
”என்ன?”
“போயும்.. போயும்.. என்னை..” என்று தொண்டை செறுமியவன், “எனக்கு நிலையான ஒரு வேலை கூட இல்லை. நான் உனக்கு எந்த விதத்திலும் ஏத்தவனும் கிடையாது மித்து.. உனக்கு என்ன விட தகுதியான நல்லவனா வருவான் மித்து” என்றதும் அவனைத் திரும்பி பார்த்து விரக்தியாக சிரித்தவள் மெதுவாக நடந்தாள்.
”நான் தான் வேண்டாம்ல.. நீ எதுக்கு என் கூடவே வர? ஆமா.. உனக்கு ஏன் என் மேல லவ் வரல அர்வி?”
”ஏய் குட்டிமா.. நீன்னா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் டி. ஆனா அந்த பிடித்தம்… எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல??” என்று கையை விரித்தான் அரவிந்த்.
” ஓ.. !!” என்றாள்.
அந்த ஒற்றையடிப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்திருப்பார்கள். அதே வழியில் போனால்.. வேறு வேறு ஊர்களுக்கு எல்லாம் பாதை வரும். அப்போது கிழக்கு வானில் நிலா உதயமாகிக் கொண்டிருந்தது. மேலும் சிறிது தூரம் நடந்தவள் நின்றாள்.
”கால் வலிக்குது அர்வி..” சிறு பிள்ளை போல உதடு பிதுக்கி அவள் கூற, அவனும் நின்றான்.
”ரொம்ப வீரமா ஒருத்தி பேசினாளே அவள நீ பார்த்தியா ” அவனைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தாள். ஆனால் பேசவில்லை. அருகில் தெரிந்த ஒரு மண் திட்டில்
உட்கார்ந்தாள்.
”ஏய் மித்து.. ஏதாவது பூச்சி பொட்டு இருக்கும் எழுந்திரு..” என்றதும் அவனை விழி அசைக்காமல் பார்த்தாள்.
”பரவால்ல..” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், ஒரு தலையசைப்போடு
அவனும் அவளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். ஆனால் அவளைத் தொடாமல் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்தான்.
“ஏன் அர்வி? நான் என்ன டா தப்பு செஞ்சேன். தெரிஞ்சு கூட ஒரு ஈ எரும்புக்கு நான் துரோகம் பண்ணதில்லையடா.. ஏன்டா இந்த அதிரதன் என்னை போட்டு பாடா படுத்துகிறான்” என்றவள்,
“இல்ல.. அவனுக்கு என்ன தான் வேணும்? நான் செத்தா இதெல்லாம் சரியாகுமா?”
அவளை முறைத்தவன் ”ம்ம்ம்.. செத்துதான் பாரேன்..!!”
”போடா.. நீ கூட வந்து அங்கேயும் என்னை இம்சைபப்டுத்துவ..! எனக்கு தெரியும் தன்னை பத்தி! இப்ப சாக மாட்டேன். ஆனா.. அடுத்த டைம் செஞ்சாலும் செய்வேன்..!!” என்று கண்ணடித்து சிரித்தாள்.
”பெஸ்ட் ஆப் லக்.. !!”
”தேங்க் யூ.. !!”
”சரி.. இப்ப போலாமா.. ??”
”ஏய்.. காலு வலிக்குதுனுதான உட்காந்திருக்கேன்.. ?”
அவன் அமைதியானான். இரவின் இருளை கிழிக்கும் நிலவினைப் பார்த்தான். அவளும் பார்த்தாள்.
“ஏன் அர்வி.. பொண்ணாவே பிறக்கக் கூடாதோ? அதிலும் தன்னம்பிக்கை சுய கௌரவம் கொண்டு பெண்ணாக இருக்கவே கூடாது இல்லையா? அதை நசுக்கத்தான் பாப்பாங்க எல்லோரும்” என்று கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு அவள் கூற..
”என்ன குட்டிமா இதெல்லாம்.?? நீ தைரியமானவ டா! என் மித்து ரொம்ப ப்ரேவ் கேர்ள்!”
”போஞா.. சத்தியமா முடியலடா என்னால..” அவள் குரல் உடைந்து அழுகை வந்தது. ”நான் சிரிச்சிட்டே பேசறதுனால.. விளையாட்டுக்கு சொல்றேனு நினைச்சிட்டே இல்ல..?” பேசும் அவளை வெறித்துப் பார்த்தான். மெல்ல அவன் பக்கம் நகர்ந்து அவன் மடியில் சரிந்து படுத்து அழுதாள். அவன் ஒன்றுமே சொல்லவில்லை. மெதுவாக அவளது முதுகை மட்டும் தடவிக் கொடுத்தான்.! ஒரு ஐந்து நிமிடம் அப்படியே அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
”இப்ப சொல்லு.. நான் என்ன பண்றது.. ??”
“இப்ப நீ குழப்பத்துல இருக்க.. இந்த சமயத்துல எடுக்கும் எந்த முடிவும் சரியானதா இருக்காது. கொஞ்சம் ஆற போட்டு காலையில யோசிச்சு பாரு.. நீ எனக்கே அட்வைஸ் பண்ணுவ.. இப்போ இங்கு நடந்தது நினைச்சு நீயே சிரிப்ப” என்றதும் அவளும் சிரிக்க.. “எழுந்திரு போகலாம். நேரமாச்சு!” கைப்பிடித்து எழுப்பி விட்டான் இருவரும் வீட்டுக்கு வந்த போது கோதாவரி தான் மல்லுக்கட்டி அவர்களை சாப்பிட வைத்துக் கொண்டிருந்தார்.
“சிரிச்சுகிட்டே வா…” என்றான் அரவிந்த். யாழினியும் அதற்குள் தன்னிலை மீண்டிருந்தவள் புன்னகையோடு அவர்களுடன் அமர்ந்து உணவு உண்ண.. அவளின் புன்னகை முகமே, அவளது பெற்றோருக்கு தெம்பை அளிக்க அன்று இரவு அரவிந்த் குடும்பம் அங்கேயே தங்கிக் கொண்டது.
வழக்கம்போல அரவிந்த் பாய் தலையணையோடு மாடிக்கு வந்துவிட.. அவன் படுத்தவுடன் இவளும் மாடித்திட்டில் சாய்ந்த அமர்ந்து காலை நீட்டிக் கொண்டாள்.
அவன் அவள் புறம் திரும்பி அவர்களது சிறு வயது நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் ஞாபகம் கூர்ந்து பேச.. அதில் அவர்களின் தற்போதைய சுணக்கம் எல்லாம் மறந்து மனதில் அந்தக் கால மகிழ்ச்சியும் மட்டுமே!! அதே புன்னகை முகத்தோடு உறங்கு சென்றவளை யோசனையாக பார்த்துக் கொண்டே படுத்திருந்தான் அரவிந்த், இரவு முழுக்க பொட்டு தூக்கம் இல்லாமல்..!!
மறுநாள் காலையிலேயே சொக்கலிங்கத்தின் உறவினர்களில் முக்கியமான ஒருவர் ஃபோன் செய்து “என்ன சொக்கா பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்தீங்களாம். ஆனா உன் பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுதாமே.. அதுவும் நைட்டானா மாடில அவனோட குடித்தனம் பண்ணுதுன்னு சொல்லி அந்த மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க போயிட்டாங்கலாமே.. என்ன சொக்கா இதெல்லாம்?? பொட்ட புள்ளைய வச்சிருக்க இப்படித்தான் வளப்பியா? இங்கே ஊர்ல உன் பொண்ணு பேரு சந்தி சிரிக்குது!! இந்த பக்கம் திருவிழா கண்ணாலம் காட்சினு இப்போதைக்கு தலையை காட்டிடாதே.. உன்னை ஆஞ்சிருவாங்க ஆஞ்சு!” என்று அவர் பெரிதாக பேசி வைக்க வியர்த்து வழிந்தது சொக்கலிங்கத்திற்கு..!!
“என்னங்க.. என்ன ஆச்சு? ஏன் இப்படி வேர்க்குது உங்களுக்கு?” என்று மல்லிகா கேட்க..
சொக்கலிங்கம் ஃபோனில் சொல்லுங்க மச்சான்.. இல்ல.. ஓஹ்.. என்று அவர் பேச ஆரம்பித்ததுமே விஸ்வநாதன் அருகில் வந்து நின்று கொள்ள.. கோதாவரியும் அங்கே தான். மல்லகாவும் அங்கேதான்!! எல்லாரையும் சுற்றி ஒரு முறை பார்த்தவர், அங்கே திரும்பிப் பார்க்க தன் அறை வாசலில் கோண சிரிப்புடன் நின்றிருந்தான் சுப்பிரமணியன்.
புரிந்தது அவருக்கு! இது மகனின் வேலை இல்லை இங்கே நடந்தவற்றை அவன் அங்கே ஒப்பித்திருக்கிறான். அதை அப்படியே அதிரதன் ஒரே இரவில் சாதித்து விட்டான் என்று புரிய.. அமைதியாக அனைவரையும் பார்த்தவர், “ஒண்ணுமில்ல மல்லிகா என் தூரத்து மச்சான் சண்முகசுந்தரம் இல்ல.. அவர் தவறிட்டாராம்” என்றதும் “அச்சச்சோ அவரு நல்ல மனுஷன் ஆச்சுங்களே..” என்று மல்லிகா பரிதாபப்பட..
விஸ்வநாதனோ நண்பனை நம்பவில்லை. ஆனாலும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தார். கோதாவரியிடம் பேசிக்கொண்டே ‘அந்த அண்ணா அப்படி.. இப்படி.. அவ்வளவு பாசமா இருப்பாரு..’ என்று பேசிக்கொண்டே சமையலறை செல்லும் மனைவியை பார்த்தவருக்கு மனதில் வலி!!
கண்டிப்பாக இதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதை உணர்ந்தவர், அமைதியாக சோபாவில் அமர, விஸ்வநாதனும் அருகில் அமர்ந்தார்.
முதலில் அப்பாவின் பதட்டமான முகத்தை பார்த்து.. “சரிதான் நம்ம திட்டம் சரியாக வேலை செய்கிறது” என்பதை புரிந்து சுப்பிரமணிக்கு ஒரு சந்தோஷம் பீறிட்டது. ஆனால் இப்போது அவர் வேறு சொன்னதும் அவன் முகத்தில் குழப்பம் கலந்த யோசனை! அதனூடே அவன் வேகமாக அறை கதவை அடைத்ததை பார்த்தவருக்கு முகத்தில் விரக்தியான சிரிப்பு கூடவே கோபம்.
“டேய் லிங்கம்..” என்று விஸ்வநாதன் அவரது கையை பிடிக்க, ‘இப்பொழுது எதுவும் பேசாதே’ என்பது போல தலையசைத்து சுப்பிரமணியின் அறையை கண்ணால் காட்ட விஸ்வநாதன் அமைதியாக இருந்தார்.
சுப்ரமணியம் அதிரதனிடம் தான் பேசிக் கொண்டிருந்தார். “என்னங்க மச்சான்.. நீங்க செஞ்சதெல்லாம் என்ன ஆச்சு? காலைல எங்க அப்பாவுக்கு ஃபோன் மேல ஃபோன் போட்டு சொந்தக்காரங்க எல்லாம் பேசுவாங்கன்னு சொன்னீங்க.. இதுவரைக்கும் யாருமே பேசல! யாரோ ஒருத்தர் பேசினாரு அப்பா பதட்டமாக நானும் சந்தோஷப்பட்டேன்! கடைசியாக பார்த்தா ஏதோ ஒரு துக்க செய்தியாம். என்ன மச்சான் நீங்க..” என்றதும் அதிரனுக்கும் சற்று யோசனைதான்.
நேற்று இங்கு நடந்தவற்றை சுப்பு சொன்னதும் ‘இந்த மிடில் கிளாஸின் பீக் பாயிண்ட் சொந்தக்காரங்க தான்! அவங்க வாயில் விழுந்து எழக்கூடாது என்பதற்காகவே தவறு செய்யாதவர்களை தள்ளி வைக்கவும்.. உண்மையானவர்களை உதறித் தள்ளவும் நிமிடம் கூட யோசிக்க மாட்டார்களே..’ என்பது உணர்ந்த அதிரதன் நேற்று தரகர் மூலம் சொல்லி அனுப்பியதை சில பல கட்டிங் எடிட்ங்களோடு விடியலுக்குள்ளாக சொக்கலிங்கம் சொந்தக்காரர்கள் முக்கியமானவர்கள் யார் யார் என்பதை சுப்புவிடம் கேட்டு அறிந்து அனைத்தையும் பரவச் செய்திருந்தான்.
“கண்டிப்பாக இன் சொந்தத்தில் ஒருத்தனம் கட்ட மாட்டான். சுத்தி உள்ளவங்க மூலம் வரன் வந்தால் கூட தரகரை வச்சு தூக்கிடலாம். அப்படி என்னைத் தாண்டி எவன் அவளை கட்டுகிறான் என்று பார்க்கிறேன்” என்று நக்கலாக சிரித்தவனுக்கு காலையில் சுப்பிரமணியம் சொன்ன செய்தி சற்று ஏமாற்றமாக இருந்தது.
“இனி நான் பார்த்துகிறேன் நீங்கள் கவலை விடுங்க.. இனி அதிரதனின் அதிரடி தான் உங்க வீட்டுக்கு சரிவரும் போல..” என்று ஃபோனை வைத்து விட்டான் அதிரதன்.
அரவிந்தனை மாப்பிள்ளையாக சொக்கவிங்கத்திற்கு ஏக விருப்பம். ‘ஆனால் முன்னே மாப்பிள்ளையாக அவனை தேர்ந்தெடுக்காமல் இப்போது பெண்ணைப் பற்றி அவதூராக பேச்சு வரும் நேரத்தில் அவனை மாப்பிள்ளையாக கேட்டால்.. அவனை குறைத்து காட்டுவது போல் ஆகாதா? வேறு வழியின்றி அவனிடம் போவது போல் ஆகாதா? இது இருவரையும் இறக்கி காட்டுமே!’ என்று பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தார் சொக்கலிங்கம்.
அதே எண்ணம் தான் விஸ்வநாதனுக்கும்!! ‘மகன் ஒரு நல்ல வேலையில் இருந்திருக்கக் கூடாதா? இப்பொழுது யாழகனியை எந்த தயக்கமும் இன்றி அவன் போனா என்னடா லிங்கா.. என் வீட்டு மருமகள என் பிள்ளைக்கு கட்டி வைக்கிறேனு உரிமையோடு அழைத்து சென்று இருக்கலாமே!’ என்று விஸ்வநாதனும் மனதுக்குள்ளேயே புழுங்கினார்.
சிறிது நேரத்தில் மாடியில் இருந்து இறங்கி வந்த யாழினி புத்தம் புது மலர் போல அழகாக இருந்தாள். மனதில் இருந்து வேதனை குழப்பம் எல்லாமே அன்று இரவோடு முடிந்திருந்தது. அதையே நினைத்து குழப்பிக் கொள்ள அவள் பிதற்ற அவள் ஒன்றும் பத்தாம்பசிலி பெண் இல்லையே??
“சாப்பிடலையா பா.. மாமா.. அம்மா சாப்பாடு ரெடி ஆயிட்டா?” என்ற படியே அவள் செல்ல மகளின் தெளிவான முகத்தில் சொக்கலிங்கத்திற்கும் விஸ்வநாதனுக்கும் நிம்மதி.
ஆனால் அந்த நிம்மதியை குறைக்கும் வண்ணம் இவர்கள் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் படை பரிவாரத்தோடு யாழினியை பொண்ணு கேட்டு வந்தான் அதிரதன் இல்லை நிச்சயம் செய்யவே!!
“வாங்க.. வாங்க.. மாப்பிள்ளை..” தடபுடலாய் அவர்களை வரவேற்றான் சுப்பிரமணி!!
அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்த அரவிந்த “ஏன் டாஅறிவு கெட்ட சுப்பு.. பாரின் போனா உனக்கு முறை எல்லாம் மறந்துடுமா? மாப்பிள்ளை நான் இருக்க.. எவனையோ மாப்பிள்ளை என்கிறாயே?” என்றவன் அங்கிருந்த மற்றவர்களை எல்லாம் கூர்மையாக பார்த்துவிட்டு,
“என்ன பொண்டாட்டி.. நீயும் வேடிக்கை பார்க்குற? சாப்பாடு எடுத்து வை டி பசிக்குது” என்றபடி யாழினியை நோக்கி செல்ல… மற்றவர்களுடன் அதிர்ந்தது என்னவோ யாழினி தான்!!