ஆருயிர் 20
யாழினியின் இந்த பரிமாணம் அர்விந்தை ஈர்த்தது. உண்மை தானே… ஆணை திருத்தவா பெண் படைக்கப்பட்டாள்?? இல்லையே…!! அவள் வாழ்க்கையை அவள் வாழ வேண்டும் தானே!!
குடிப்பவன்.. தப்பான பழக்க கொண்டவனை ஒரு பெண்ணுக்கு கட்டி வைத்து ‘அவனை திருத்து! நல்வழிப்படுத்து.!’ என்று சொல்ல அவள் என்ன அதற்காகவே வரம் வாங்கி பிறந்தவளா?
அவளுக்கும் தன் வாழ்க்கையை சந்தோஷமாக உற்ற துணையோடு வாழ எல்லா உரிமையும் உண்டு அல்லவா?
அது என்னவோ காலம் காலமாக ஆணை திருத்த வேண்டும் என்றால் அவனை ஒரு பெண்ணின் கையில் பிடித்துக் கொடு என்கிறார்கள். சில இடங்களில் இது சரியாக வந்தாலும்.. பொருந்தினாலும்.. பல இடங்களில் இது பொருந்தாத திருமணமாகி போனது தான் உண்மை!!
இருவருக்கும் இடையே கருத்துக்கள் வேறுப்பட்டு முட்டி பிரிந்து விடுபவர்களும் உண்டு.. இதே தான் விதி.. ஏதோ வாழ்க்கை.. என்று வாழ்பவர்களும் உண்டு!!
இதை எல்லாம் யோசித்த அரவிந்த் “நீ சொல்வது சரி மித்து.. ஆனா அதையும் தான்டி ஒருத்தன் இவ்வளவு திட்டம் தீட்டி உன்னை கட்டம் கட்டுறான்னா… உன்மேல் காதல் இல்லாமலா?” என்று அவன் கண்ணோட்டத்தில் கூறினான்.
“இதுக்கு பேரு காதலா? எப்படி அவள் என்னை வேண்டாம் என்று சொல்லலாம் என்று ஆணவம்! ஈகோ!” என்றதும் அவன் அதிர்ந்தான்.
“அப்போ காதல் என்ன குருஜி?” அப்பாவி போல் கேட்க.. அவன் தலையில் வேகமாக ஒரு கொட்டு போட்டவள் “காதல்னா என்ன தெரியுமா அர்வி? தன்னை நேசிக்க வைக்க முடியலன்னா அந்த பொண்ணை தொந்தரவு செய்யாம.. அவ வாழ்க்கையில் தலையிடாமல் ஒதுங்கி போய்டணும். இவன பாரு இத்தனைக்கும் அவனை நான் லவ் கூட பண்ணல.. அவன் என்கிட்ட லவ் சொல்லும் போது மேலே ஒரு சலனம் ஆனால் அதையே அவனுக்கு சாதகமாக பயன்படுத்தி ஒவ்வொரு விஷயத்திலும் என்னை கவர்னர் பண்றது.. எனக்கு புடிச்சவங்களை தூக்கி வைத்து என்னை அவனிடம் இழுக்கிறது. இதோ இப்ப எங்க அண்ணனுக்கு பேரம் பேசி இருக்கான் இல்லையா? இந்த மாதிரி பண்றதெல்லாம் எனக்கு அருவுருப்பா இருக்கு அர்வி! அவன் கிட்ட இருந்து எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் விலகிப் போகணும்னு என் மனசு சொல்லுது” என்றாள்.
யாழினி சொல்வதும் சரிதான் என்று யோசித்தான். ஆனால் அதே நேரம் அதிரதன் அவளை விட்டு விடுவான் என்றும் தோன்றவில்லை. “நாளை வேறு இடத்தில் இவளுக்கு திருமணம் செய்யும்போது இந்த பிரச்சனை வந்துச்சுன்னா? என்ன பண்றது?”
“அப்படி என் மேல் நம்பிக்கை இல்லாதவனை ஏன் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு? அவசியம் இல்லை அர்வி!” என்றாள்..
“காதலுக்கான அர்த்தம் இங்கு தவறா படைக்கப்பட்டிருக்கு அர்வி! ஆணுக்கு காதல் வந்தால் உடனே பெண்ணுக்கும் காதல் வரணும் என்ன அவசியம் இருக்கு சொல்லு? அப்படி அந்த பொண்ணுக்கு வரலைன்னா துரத்தி துரத்தி ரோமியோ போல பின்னால் வந்து அவளை எமோஷனலா பிளாக் பண்றது ஒரு வகை என்றால்.. இப்படி அவளை எந்த இடத்துக்கும் செல்ல முடியாமல் தன்னுடைய பணத்தையும் பலத்தையும் வைத்து அவர்களை கார்னர் செய்வது இன்னொரு வகை.. இரண்டிலுமே அவங்க தங்களை ஹீரோவா நனைச்சிக்குறாகங்க.. இப்படிப்பட்ட கிட்ட ஒரு பொண்ணு எப்படி சந்தோஷமா இருக்க முடியும் சொல்லு? ஒவ்வொரு விஷயத்துக்கும் கார்னர் செஞ்சு அதில் நாம் பயப்படுறோம் தெரிஞ்சா.. அந்த நம்ம வீக்னஸ் அதுவே அவனுடைய பலமா மாறிடுது!! ஐ ஹேட் திஸ் டைப் ஆப் நான்சென்ஸ்..” என்று கூறியவளை பார்த்து கைதட்டினான்.
“என்ன கதாகலாசேபமா பண்றாங்க போ டா.. கைதட்டுறான்” என்று அவள் அலுத்துக் கொள்ள..
“இல்ல மித்து நீ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை..”
“அதனாலதான் ஆர்த்தியை நான் திரும்பி கூட பார்க்கல.. அதிலும் அவ என்னை உண்மையா கூட காதலிக்கல.. சும்மா நடிச்சிட்டு போனா.. வந்த வேலை முடிந்ததும்” என்று இருளை வெறித்தனின் தோளை தட்டியவள், “விடுடா நாம இத பத்தி இனிமே பேச வேண்டாம்!” என்றாள்.
“ஆனால் விஷயம் இதோட முடிஞ்சா பரவாயில்லையே..” என்று இரு கைகளில் மேலே தூக்கி நெட்டி முறித்தான். “மித்துவை தூக்குவதற்காக அவளின் அண்ணன் சுப்ரமணியனுக்கு கட்டம் போட்டவன் அவனை கைக்குள் வைத்து இந்த குடும்பத்தை என்ன வேணாலும் செய்ய முடியுமே? விடக்கூடாது!! ஒவ்வொரு முறையும் அந்த அதிரதனை ஜெயிக்க விடமாட்டான் இந்த அர்விந்த் பிரபாகரன்! இனி நீயா நானா பார்த்துக்கலாம்” என்று முடிவு எடுத்தவன்,
யாழினியை தோளோடு அணைத்து “எவ்வளவோ பாத்துட்டோம்.. இவன பாக்க மாட்டோமா? இல்ல சமாளிக்க முடியாதா?” என்பது “தட்ஸ் மை அர்வி.!” என்று அவனின் தாடாயை பிடித்து அவள் செல்லமாக ஆட்ட…
“என்ன கேவலம் இது?” என்றபடி அங்கே வந்தான் சுப்பிரமணி!!
இருவரும் திரும்பி இயல்பாகவே அவனை எதிர்கொண்டனர். “என்ன கேவலத்தை கண்டா?” என்று யாழினி அண்ணனை முறைத்துக் கேட்க..
“இதோ ரெண்டு பேரும் தான்” என்று அவர்களை சுட்டிக்காட்டினான். யாழினி தோள் மீது அரவிந்த் கை போட்டு இருக்க. நெருக்கமான நின்றிருந்தனர்!
சாதாரணமாக நல்ல எண்ணத்தோடு பார்ப்பவர்களுக்கு அவர்களது நட்பை தெரியும்.. புரியும்..! ஆனால் இவனுக்கு தான் பணம் என்று கண்ணாடி போடப்பட்டிருக்கிறதே எப்படியாவது தங்கையை தூக்கி அதிரதன் கையில் ஒப்படைக்க வேண்டிய டாஸ்க் இவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளதே.. அதை நிறைவேற்றினால் தானே பணமும் ரதிபோல அழகான பெண்ணும் கிடைப்பாள். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தொடங்கி விட்டான் சுப்பிரமணி. அதன் முதல் அடி தான் இருவரையும் இணைத்து மட்டமாக பேசுவது..
“வா சுப்ரமணி உனக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்..!” என்றபடி மித்துவின் தோளிலிருந்து கை எடுக்காமலேயே அரவிந்த் கையை நீட்ட..
ஏற்கனவே அரவிந்த் என்றால் பிடிக்காது. இப்பொழுது யாழினி அதிரதன் பக்கம் இழுத்து செல்லை இவன் தடையாக இருப்பான் என்று எண்ணியவனுக்கு சுத்தமாக பிடிக்காமல் போக இவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
“நீ ஏன்டா இவனுக்கெல்லாம் வாழ்த்து சொல்ற… நல்ல மனசு தான் இல்ல.. இவனுக்கு நல்ல எண்ணம் நல்ல பார்வை நல்ல மனசு எதுவுமே கிடையாது” என்றதும் “யாழினி..!” என்று கோபத்தில் சுப்பிரமணி கத்த..
“என்ன யாழினி? அண்ணனு பாக்குறேன்.. இல்ல நீ பேசின பேச்சுக்கு இந்நேரம் பல்ல தட்டி கைல கொடுத்து இருப்பேன். கல்யாண வேற ஆகப்போகுது பொழைச்சு போயிடு. இதை போய் நான் கீழ அப்பாகிட்ட சொன்னேன்னு வச்சுக்கோ..” என்றதும் அவன் உள்ளாரா சற்று நடுங்கித்தான் போனான்.
ஆனாலும் அவனுக்கு பக்க பலமாக பணமும் அதனை கொடுப்பவர்களும் இருக்க இவர்களிடம் ஏன் பயப்பட வேண்டும் என்ற எண்ணம் தான்.
“என்ன தப்பா சொல்லிட்டேன்? உண்மையைத்தானே சொன்னேன்! பிரெண்டு பிரண்டுனு சொல்லிட்டு ரெண்டு பேரும் நிக்கிற நிலைய பாரு.. நானும் தான் வெளிநாட்டில் பழகுனேன். எனக்கும் பிரண்ட்ஸ் இருந்தாங்க தான். அவங்களுக்கு எல்லாம் இப்படி எல்லாம் நான் தொட்டு பேசினது இல்லப்பா..” என்று அரவிந்தை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே சொல்ல..
“ஏன்னா உன் மனசுக்குள்ள அசிங்க இருள் கருமை இதெல்லாம் இருந்தா அப்படித்தான் இருக்கும். என் மனசுலயும் மித்து மனசுலையும் அன்பு பாசத்தை தவிர எதுவும் கிடையாது. அதனால் எங்களுக்கு இந்த தொடுதல் எல்லாம் இயல்பானது. உன்ன மாதிரி ஆட்களுக்கு தான் அது விகற்பமானது” என்று அரவிந்த் பல்ல கடித்துக் கொண்டு கூறியவன்.
யாழினியை பார்த்து “மித்து இன்னும் ஒரு வார்த்தை உங்க அண்ணன் பேசினான்னா.. நீ சொன்ன அந்த பல்ல கழட்டி நான் கைல கொடுத்துடுவேன். என்ன பத்தி அவனுக்கு நல்லாவே தெரியும்! என் வாய் பேசுவதற்கு முன்னாடி கை தான் பேசுமுனு.. ஏதோ கல்யாணம்னு ஊருக்கு வந்து இருக்கான். அதை காப்பாத்திக்க சொல்லு..” என்றதும் சற்று அரண்டு தான் விட்டான் சுப்பிரமணி. எங்கே சொன்னது போல் அரவிந்த் செய்து விடுவானோ என்று அவனை அறிந்தவன் அல்லவா??
அதனால் வேறு வழியில் முயற்சிக்கலாம் என்று அவன் கீழே சென்று விட.. “எனக்கு என்னவோ உன் அண்ணன் மேல நம்பிக்கை இல்ல மித்து. அவன் நடவடிக்கைகள் எல்லாமே சுத்தமா மாறி இருக்கு. ஏதோ கீ கொடுத்த ரோபோட் மாதிரியே செய்கிறான். இவனே உன்னை தூக்கிட்டு போய் அந்த அதிரதன் கையில் கொடுத்தாலும் ஆச்சரியப்படத்திற்கு இல்லை” என்றதும் அவளும் யோசனையாக தான் இருந்தாள்.
கீழ சென்ற சுப்ரமணியம் அதிரதனிடம் “எங்க வீட்ல யாரும் இந்த கல்யாணத்துக்கு சம்பாதிக்கல முக்கியமா யாழினி! நீங்க வேற ஏதாவது அதிரடியாக இறங்குங்க.. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேண்டுமா நான் பண்றேன். ஆனா எனக்கு ஆரத்தியாவோட கல்யாணம் நடந்தே ஆகணும். அதுக்கு யார் இடையில் வந்தாலும் அவங்கள தூக்கி போறதுக்கு நான் தயங்கவே மாட்டேன்”
“வரே வாவ்.. இதைத்தான் எதிர்பார்த்தேன்! யாழினிக்கு இப்படி ஒரு அண்ணனா? ஓகே நான் திட்டம் போட்டுட்டு உங்க கிட்ட சொல்றேன்” என்றான்.
“ஃபர்ஸ்ட் எமோஷ்னல் அட்டாக் பண்ணுவோம். அதுக்கு படியலைன்னா அடுத்து பாத்துக்கலாம்” என்றவன் ஐடியா சொல்ல..
மறுநாள் அரவிந்தனின் வேலைக்கு உதவி செய்ய என்று யாழினியும் டுடோரியல் சொக்கவிங்கமும் சென்றவுடன் மல்லிகாவை பிடித்தவன், அழுது கரைந்தான். “அதிரதனுக்கு யாழினி கேக்குறாங்க மா.. அவருக்கு அந்த கல்யாணம் இல்லைன்னா எனக்கும் ஆரால கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டாங்க.. நினைச்சு பாருங்க ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சு.. இப்போ அதை நிறுத்துனா.. நான்.. எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்.. என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன கேலியா பாப்பாங்க மா! எனக்கு இன்னொரு வேலை கிடைக்காது. அப்புறமும் நான் இருக்கணுமா?” என்று அத்தனை பேசவும் மல்லிகா அமைதியாக தான் இருந்தார்.
“இங்க பாரு சுப்பு.. இப்ப எல்லாம் பொண்ணுங்க கல்யாணம் நின்னு போனாலே அடுத்து புரிஞ்சுகிட்டு பண்ணிக்கிறதுக்கு எத்தனையோ ஆம்பள பிள்ளைங்க தயாரா இருக்காங்க. உனக்கு என்ன ஆம்பள புள்ள..! இது போனா வேற பொண்ணு பாத்துக்கலாம்” என்று அவர் அசால்ட் ஆக முடிக்க..
“புரியாம பேசாத மா” என்று கத்தியவன் பின்பு குரலை தனித்து “புரியாம பேசாதம்மா.. எவ்வளவு சொத்து தெரியுமா? அதெல்லாம் என் கையை விட்டு போச்சுன்னா..” என்றதும் சீ.. என்று மகனை பார்த்தவர் “நம்ம எத உழைச்சு சம்பாதிக்கிறோமோ அது மட்டும் தான் நமக்கு ஒட்டும் சுப்பு! அடுத்தவன் காசுக்கு ஆசைப்பட்டால் நிலைக்காது.!!” என்றார்.
“மா.. மா.. ப்ளீஸ்மா எப்படியாவது யாழினிய சம்மதிக்க வை மா.. அவளும் நல்ல வசதியா இருப்பா.. நானும் வசதியா இருப்பேன்மா.. நீங்களும் பெரிய வீட்டிற்கு வந்துவிடலாம் மா” என்று என்னென்னமோ செய்தும் மல்லிகா அசைந்து கொடுக்கவில்லை.
இவன் பேசி முடித்த உடனே சொக்கலிங்கத்துக்கு ஃபோன் செய்து உடனடியாக யாழினிக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல அவரும் தனக்கு தெரிந்த தரகர் மூலம் ஏற்பாடு செய்தார்.
பெண்களுக்கு தானே பஞ்சம்! அதனால் மறுநாளே ஒரு வரன் தகைய.. அன்று மாலையை வீட்டுக்கு வருவதாக அவர்கள் சொல்லிவிட, கோதாவரியும் விஸ்வநாதனும் கூட வந்து விட்டார்கள். காலையிலிருந்து மல்லிகாவுக்கு தேவையானவற்றையெல்லாம் வாங்கி கொடுத்தான் அரவிந்த். ஆனால் வெறும் பார்வையாளராக இதனை பார்த்துக் கொண்டிருந்தான் சுப்பிரமணி.
மாலை போல் வருவேன் என்று சொன்னவர்கள் வரவில்லை. காரணம் பெண்ணின் நடத்தை சரியில்லை என்று தரகர் மூலம் செய்தி வந்தது. என்ன என்று அதிர்ந்து கேட்க “வீட்டிலேயே நண்பன் என்று ஒருவன் வந்து கூத்தடிக்கிறான். இதையெல்லாம் கேள்விப்பட்ட மாப்பிள்ளை எப்படிங்க வருவாங்க?” என்று தரகர் சொக்கலிங்கத்திடம் சற்று காரமாக பேசிவிட.. இந்த பக்கம் நேராக தரகர் வீட்டுக்கே சென்று அவரின் பல்லை உடைத்து விட்டு வந்தான் அரவிந்த்.
“நான் சொன்ன போது மட்டும் எல்லாரும் என்ன பேசுனுங்க.. இப்ப நீங்களே தெரிஞ்சுக்கிட்டிங்களா இவங்களோட லட்சணத்தை?? இதுக்கு தான் சொல்றேன் என் மச்சானுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திடலாம். அவர் இந்த மாதிரி விஷயம் எல்லாம் எதுவும் கண்டுக்க மாட்டார்” என்றதும்
கோதாவரி கூட “என்ன பேசுறான் மல்லிகா இவன்? நம்ம பொண்ணு ஒருத்தன் தப்பா பேசிருக்கான் அத என்னன்னு கேட்காம விட்டுட்டு.. இவன் யாருக்கும் கல்யாணம் பண்ணி கொடுக்கணும் சொல்றான்?” என்று கேட்டார்.
அதற்கு பின்னேதான் அழுகையோடு அனைத்தையும் கூற அப்போதுதான் ஆர்த்தி தான் இவன் திருமணம் செய்து கொள்ளும் போகும் பெண் என்று கேட்டதும் விஸ்வநாதனும் கோதாவரி இன்னும் அதிர்ந்தனர்.
“சும்மா வாய் வார்த்தையா பேசலாம்! வாழ்ந்தா தானே தெரியும்? நல்ல வரன விட்டுட்டு போயும் போயும் ஒண்ணுமே இல்லாத இவனுக்கு அப்புறம் கட்டி குடுப்பீங்க?” என்று கூற சொக்கலிங்கம் பொறுத்தது போதும் என்று ஓங்கி அறைந்து விட்டார் மகனை.
“இனி ஒரு நிமிஷம் இந்த வீட்டில் இருக்காத நீ.. வெளியில போ!” என்றார்.
“அப்பா..!” என்று அவன் அதிர்ந்து அழைக்க “என் பொண்ணையும் என் அரவிந்தனையும் தப்பா பேசின நீ இந்த வீட்டுக்கு நீ வேணாம். உனக்கு தான் பணக்கார வீடு இருக்குல்ல அங்க போ” என்றார்.
அரவிந்துக்கு நரம்புகள் எல்லாம் புடைக்க அந்த இடத்திலேயே சுப்பிரமணியை வெட்டி போட துடித்தான். ஆனால்.. ஆனால்.. முடியாதே..!! அதுவும் இவன் அம்பு எய்தவன் இருக்க.. இவனை செய்வது வீண் என்று கோபத்தை அடக்கிக் கொண்டு வாசலுக்கு சென்று அமர்ந்து விட்டான்.
யாழினி இல்லாது அவனால் அங்க போக முடியாதே.!! வேகமாக அறைக்கு சென்று தன் கதவு கதவை அடைத்துக் கொண்டான்.
இப்படி அந்த இடமே ஒரு வித சூனியமாக இருந்தது. விஸ்வநாதனுக்கு நாக்கு துடித்தது தன் மகனுக்கு யாழினியை பெண் கேட்க.. ஆனால் இன்னும் அவன் வேலை சரியாக செய்யாத பொழுது எந்த முகத்தை வைத்து கேட்பார்? கோதாவரிக்கும் அதே எண்ணம் தான். இருவருக்குமே யாழினி என்றால் அத்தனை பிடித்தம்.
இப்படி தங்கள் மகனால் அவளின் வாழ்க்கை கேள்விக்குறியாவதை காண சகிக்காமல் அமைதியாகவே இருந்தனர். மல்லிகா தான் அழுது கரைய கோதாவரி ஆறுதல் அளிக்க சொக்கலிங்கத்தின் அருகில் அமைதியாக அமர்ந்திருந்தார் விஸ்வநாதன்.
மாலை நேரம் முடிந்து இருள் சூழந்தது. சூரியன் மேற்கில் மறைந்து விட்டுயிருந்தான்.
”சாப்பாடு செய்யலையா மா? பசிக்குது!” என்று அம்மாவைக் கேட்டாள் யாழினி. யாழினி கேட்டது எதுவும் காதில் விழவில்லை. அவர் மனசு முழுக்க ஏதேதோ சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது!!
“மதியம் செஞ்சதே இருக்கு..” என்றார் சோர்வாக மல்லிகா, பின் கோதாவரி தான் அனைவருக்கும் காபி வைத்துக் கொடுத்தார்.
“எழுந்து போய் முகம் கழுவி வந்து காபி குடி மா” என்றதும் மல்லிகா அப்படியே அமர்ந்திருக்க அவரை இழுத்துக் கொண்டு போய் முகம் கழுவி வந்து காபியை கையில் திணித்தவள், தானும் தன்னறைக்கு சென்று தன்னை ஒழுங்கு படுத்தி வந்தாள். தலைவார விருப்பம் இல்லை. அரவிந்த் முன்பாக நின்று அவனை அழைத்தாள்.
”வா அர்வி.. வெளிய போலாம்..”
”எங்க.. ?” அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் பார்வை அவள் முகத்தை ஆராய்ந்து கண்களில் முடிந்தது. அழுதாளா என்று!!
”தெரியல..! வா.. எங்காச்சும் போகலாம்..” என்றாள் அடமாக அவனை பார்த்து..
அவளை முறைப்பாகப் பார்த்தவன், ”என்ன டி உளர்ற?”
”மொதல்ல எந்திரிச்சு வா அர்வி..”
”எங்க போறதுனு மொதல்ல சொல்லு.. அப்புறம் வர்றது பத்தி யோசிக்கலாம்” என்றான். இவனுக்கு பயம் திரும்பவும் ஏதாவது இவள் பிரச்சனை இழுத்துக் கொண்டு வந்து விடுவாளோ என்று..!!
இதே அவனுக்கு ஒன்று என்றால் அவன் எதையும் சமாளித்து விடுவான். யாழினிக்கு ஒன்று என்றால் அது அவனால் சகித்துக் கொள்ள முடியாது. வீணாக அவள் பெயர் கெட்டுப் போவதை அவன் விரும்பவில்லை.
மூக்கு விடைக்க.. அவனை முறைத்தாள் யாழினி “நீ இப்ப வரப் போறியா.. இல்லையா..?” என்று கோபமாக கத்த..
அவனும் முறைத்தவன் ”சும்மா ஏன்டி கத்துற.. ??” என்றான்.
”வா.. வாக்கிங் போலாம்..” என்றாள் அரவிந்திடம்.
அவள் தன் மனதை மாற்ற வர சொல்கிறாள் என்று புரிய புன்னகைத்தவன், ””அப்படிச் சொல்லு.. மொட்டையா.. வா போலாம்ன்னா..?”
”இனி.. மொட்டைக்கு சந்தனம் தடவி சொல்லுறேன் ஓகேவா?” என்று விட்டு வெளியே போய் நின்றாள்.
லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது.
இருவரும் அவர்கள் வீட்டிலிருந்து அருகில் இருக்கும் கோவில் வழியில் நடந்தனர். கோவில் நடையை சாத்தவில்லை. ஏதோ விஷேசம் நடந்துக் கொண்டிருந்தது
”இங்க உட்காரலாமா.. ?” என்றதும் கோவில் இடத்தையும் அவளையும் அவன் பார்க்க.. “வந்து உட்காரு.. வா..” அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
”ஏய்.. இருட்டிருச்சுடி… கோவில் நடை சாத்திடுவாங்க எழுந்திரு.. போகலாம்” என்று அவளை எழுப்பி நடக்க வைத்தான். கோவிலை தான்டி இருவரும் மெதுவாக நடந்தனர். அவனை உரசியபடியே தான் நடந்தாள்.
”ஒண்ணு சொல்லட்டுமா ?” என்றாள் யாழினி.
அவள் ஏதோ முடிவெடுத்து விட்டு தான் பேசுகிறாள் என்று புரிந்தவன் கடுப்போடு அவளைப் பார்த்து
”நீ ஒரு ம சொல்ல வேண்டாம்..”
என்றவன் அமைதியாக நடந்தான்.
அவனை இடித்தப்படி நடந்தவள், லேசான புன்னகையுடன் “இல்ல நான் சொல்லுவேன்” என்றாள்.
”சொல்லித் தொலை..” என்று நிற்காமல் நடந்தான் அரவிந்த்.
“நீ ஏன் அந்த ஆர்த்திய கட்டிக்க கூடாது.. ஹீரோஸ்லாம் கல்யாணத்துக்கு முதல் நாள் பொண்ண தூக்குவாங்கல.. அப்படி தூக்கி வந்து கட்டிக்க.. அண்ணனுக்கும் பிரச்சனை எல்லாம் போயிடும்! எனக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது” என்றதும் அவளை திரும்பி முறைத்தவன் அருகில் குனிந்து ஏதாவது கல்லு கிடைக்கிறதா என்று பார்க்க “நோ நோ வயலன்ஸ்” என்று சிரித்தாள்.
”அந்த அதிரதனை கட்டிக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை.. ?”
“ஏன்டா நேற்றிலிருந்து அவ்வளவு பேசியிருக்கேன்.. எல்லா கோட்டையும் அழிச்சிட்டு திரும்பி போடு என்கிற மாதிரி.. திரும்பவும் உனக்கு என்ன பிரச்சனைனு கேட்கிற” என்று அவனை முறைத்தாள்.
”நீ அன்பா நடந்து பாரு அவனும் திருந்திடுவான். ஒரு வாய்ப்பு தான் கொடேன்..”
”நீ இப்போ ம மாதிரி பேசாத..! நீயும் ஒரு ஆம்பளைதான.. அதான் சும்மா விட்டுக் குடுத்து போ.. அன்பா இருனு சொல்ற.. அவன் என்ன அநியாயம் பண்ணாலும் எல்லாத்தையும் தாங்கிக் கொண்டு பிராணநாதானு என் பிராணம் போகுற வரை அவன் கால சுத்திகிட்டே கிடக்கணும் அப்படித்தானே?” என்று சூடாகக் கேட்டாள்.
”இல்ல குட்டிமா... உன் நியாயம் சரிதான். ஆனா.. இப்ப நீ.. உன்.. கல்யாணம்..??” என அவன் குரல் உடைந்தது.
நடந்து கொண்டிருந்தவள் தட்டென நின்றாள். அவனை கடுமையாக முறைத்தாள்.
“ஒருத்தன் என்னை வேணாம்னு சொன்னதுக்கு என் கல்யாணம் அப்படியே போய்டாது அர்வி. கல்யாண சந்தையில நான் விக்காமலும் இருக்க மாட்டேன் நீ கவலைப்படாதே!” என்று கத்தினாள்.
”இரு குட்டிமா.. கத்தாத..! நான் சொன்னது அப்படி இல்லடி. நல்லா யோசிச்சு பாரு.. எந்த ஒரு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு வருவது இயல்பு! ஆனா அதையும் தாண்டி அங்கு நிற்கிறது அவங்களோட அன்பு! சில பல விஷயங்களை விட்டு குடுத்து போனாத்தான் குடும்ப வாழ்க்கை ஓடும் டா குட்டிமா.. பிரச்சினைகள் இருக்கு என்கிறத்துக்காக யாரும் இங்க ஒன்னா சேர்ந்து குடும்பம் நடத்தமா இல்ல..” அவன் கொஞ்சம் விளக்கமாகப் பேச.. அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டு நடந்தாள் யாழினி. அவன் சொல்வதில் இருந்த உண்மைகளை அவளால் மறுக்க முடியவில்லை!!
ஆனால்.. ஆனால்.. அதிரதனை அவளால் ஏற்க முடியாது!
நன்றாக இருட்டி விட்டது. மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப் பாதை வழியாக இருவரும் நடந்தனர்.
”இப்ப எங்க டி போறோம்.. ?” அந்த இடம் கருவேலங்காடாக இருந்தது
”கால் வலிக்கறவரை நடக்கலாம் அர்வி. வா.. வா..”
”ஏய்.. என்னடி இது.. லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க..! இங்க பாரு குட்டிமா..” என்று அவன் அழைக்க..
”வாடா.. சும்மா குட்டிமா குட்டிமானு.. சின்னதுல கூப்பிடட்து. இப்ப தான் கூப்பிடுற!” அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
”திரும்பவும் இன்னைக்கு உன்ன பார்க்கும் போது சின்ன பிள்ளையா தெரியுற டி. அதான் குட்டிமா சொன்னேன்” என்றவன் “எத்தனை தூரம் போக முடியும்.. இருட்டிடிச்சு டி!”
“இருட்டுனா என்ன?” புருவம் உயர்த்தி கேட்டாள்.
“எனக்கு ஒன்னும் இல்ல.. இந்த ஊர்ல.. இந்த பகுதியில.. இந்த நேரத்துல.. நாம தனியா போறது சரியில்ல.. வரும் முன் காப்பது தான் சிறந்தது” என்று சுற்றும் முற்றும் பார்த்தான் அர்விந்த்..
“எவனாவது என்னிடம் தப்பா நடப்பானு பயப்படுறியா?”
“அப்படியெல்லாம் நான் இருக்கும் போது யாராவது நடந்துருவார்களா என்ன?” என்று கைமுஷ்டியை முறுக்கினான்.
“அப்போ நீ நடந்திருவேன்னு சொல்றியா?” என்றதும் அவளை திடுக்கிட்டு பார்த்தவன், “சீ என்ன பேசுற” என்று கண்டித்தான்.
“ஏன் நீ ஆம்பள இல்லையா?” சீண்டினாள்.
“ஏய்.. லூசி.. உனக்கு என்னாச்சு என்னென்னமோ பேசுற?” என்று அவள் கையை பிடித்து நிறுத்தினான். அவளோ அவன் கையை தட்டி விட்டாள்.
”வா பேசிட்டு போக்கலாம்.. போறவரை போலாம் வா..” என்று நடந்தாள்.
”போயி.. ?”
”கால் வலிச்சா உட்காரலாம்.. இல்ல நடந்து நடந்து…”
”நடந்து.. நடந்து.. பக்கத்து ஸ்டேடுக்கு போய்டலாம். வீட்டுக்கு எப்ப டி போறது.. ?” என்று அலுப்புடன் கேட்டாள்.
”வீட்டுக்கு போய் என்ன பண்ண போறே..? வீட்டுக்கே வேண்டாம்..! அப்புறம் அந்த அண்ணன் லூசு வந்து எங்க அம்மா கிட்ட கேட்கும் உன் பொண்ண என் மச்சானுக்கு கட்டி கொடு.. அப்பதான் என் வாழ்வு சிறக்கும்னு அப்படி இப்படின்னு.. அதனால் இப்படியே நடந்திட்டே இருப்போம்”
”கிழிஞ்சுது போ..! ஏய் லூசி.. உனக்கு என்ன கிறுக்கு புடிச்சிருச்சா.. ?”
”ஆமா..! ” என்றவள் ”உனக்கு என்கூட வர புடிக்கலேன்னா திரும்பி போ..! நான் போறேன்..!”
”எங்க குட்டிமா?”
”எங்கயோ.. தூரமா??”
”தனியாவா..?”
”ம்.. நீ தான் வரலனு சொன்னல.. எனக்கு ஒரு பயமும் இல்ல. ” என்றாள்.
“எதையும் நேரடியா ஃபேஸ் பண்ணனும் குட்டிமா! இப்படி பயந்து ஓடக்கூடாது..” என்று அவளின் கண்களை பார்த்து சொன்னான். அவளும் சிறிது நேரம் நின்றவள் திரும்பி பார்த்து “நீ ஏன் அர்வி என்னை லவ் பண்ணல? ஏன் நீ என்னை அப்படி பார்க்கல?” என்று கேட்டாள்.
,அர்விந்த் திகைத்து நிற்க.. யாழினி மட்டும் தனியாக நடந்தாள்.