தளிர் 2

 

Sunitha Bharathi
(@sunitha-bharathi)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 26
Thread starter  

தளிர் : 2

பெரிய இரும்பு கேட்டை தாண்டி சமரித் கார் பல ஏக்கரை வளைத்து பணத்தை வாரி இறைத்து கட்டியிருந்த அந்த மாளிகையுள் நுழைந்தது.

காரை நிறுத்தத்தில் ஒதுக்கி நிறுத்தி விட்டு வேக நடையுடன் உள்ளே வந்தவனுக்காக உறங்காமல் காத்திருந்தது பிஞ்சு விழிகள். அவன் நான்கு வயது மகள் சுதர்சனா.

அவளை கண்டுக் கொள்ளாது அவன் மாடியேறிட, குழந்தையை  பார்த்துக் கொள்ளும் பணிப்பெண் அவள் ஏக்கம் புரிந்து, "ஐயா பாப்பா உங்களுக்காக தான் காத்து இருக்கு. நாளைக்கு பாப்பா பொறந்த நாள்." என்று சொன்னது தான் தாமதம், "என் வாழ்க்கையோட கருப்பு நாள்னு சொல்லுங்க. இந்த சனியன் ஏன் பொறந்து தொலைஞ்சது? என் சந்தோசத்தை மொத்தமா என்கிட்ட இருந்து பறிச்ச இவளுக்கு பிறந்த நாள் தான் இப்போ கேடு" என்று வீடே அதிரும் படி கத்தியவன் உறுமலில் குழந்தை பயந்து அலறி பணிப்பெண் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த டிக்கெட் எல்லாம் கூட அரைகுறை தூக்கத்தில் எழுந்து வந்து ஆஜராகி விட்டது.

"பட்டம்மா… அவளை தான் அவன் கண் முன்னே கூட்டி வராதேனு சொல்லி இருக்கேன்ல. எதுக்கு எல்லாரையும் வேதனை படுத்துற? பிள்ளை பயந்து அழுவுறா பாரு உள்ள கூட்டிட்டு போ" என்று சம்ரிதின் தந்தை தாமோதரன் சொல்ல, பணிப்பெண்ணும் "இல்லைங்க அய்யா பாப்பா தான்…" என்று சொல்ல வந்தவர் தாமோதரனின் கட்டளை பார்வைக்கு அடிப்பணிந்து குழந்தையை அவள் அறைக்கு அழைத்து சென்று விட்டார்.

இங்கே கண்கள் சிவந்து அனலென எரிந்து கொண்டிருந்தவன் அருகே தாமோதரன் அடியெடுத்து வைக்க, அவரை அலட்சியம் செய்தவன், இரண்டு இரண்டு படிகளாக தாவி அறைக்கு செல்ல, 

முதல் தளத்தில் நின்று, உடல் நடுங்க நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் சுவாதி.

தாமோதரனின் தங்கை மகள். அவள் அருகே நின்றிருந்த அவள் அன்னை கோசலை, "அவன் கோபமா வர்றான். இந்த மாதிரி நேரத்துல தான் டி ஆதரவு கரம் நீட்டி ஆம்பளைங்களை மடக்கி போடணும். போ போ போய் அவனுக்கு இசைஞ்ச மாதிரி ஏதாவது பேசு" என்று மகளை பிடித்து அவன் முன்னே தள்ளி விட,

வேகமாக வந்தவன் திடீரென முளைத்த ஸ்பீட் பிரேக்கர் போல் முன்னால் வந்து விழுந்தவளை அதே கோப பார்வை அழுத்தமாக பார்த்து வைத்தான். உள்ளுக்குள் அல்லு தான் என்றாலும், இழுத்து பிடித்து இதழை வளைத்து சிரித்தவள், "என்ன மாமா வந்துட்டீங்களா?" என்று கேட்க,

"இல்ல வீதியில நின்னுட்டு இருக்கேன்" என்றவன், அவளை முறைத்துக் கொண்டே தன் அறைக்கு சென்று விட்டான்.

அவன் பதிலில் ‘ங்ஙே’ என்று விழித்துக் கொண்டு நின்றவள் முதுகில் பொத்தென்று அடி ஒன்றை போட்ட கோசலை, “என்ன டி நின்னு முழிச்சுட்டு இருக்க? அப்படியே அவன் கூட நீயும் அறைக்குள்ள நுழைஞ்சு இருக்க வேண்டியது தானே” என்று மகளை கடிந்து கொண்டார்.

“எத ரூம்குள்ளையா!” என்று அரண்டு வாயை பிளந்தவள், “அட போ ம்மா அவரை பார்த்தாலே கால் நடுங்குது. மனுஷன் பார்வையே ஆளை எரிக்குது. இதுல தனியா போய் சிக்குனேன் வை என்ன வச்சு ராவண வதமே செய்வார். சொத்தை விட உசுரு முக்கியம்” என்று விட்டால் போதும் ரேஞ்சில் அவள் தன் அறைக்கு ஓடியே விட்டாள்.

“புத்தி இல்லாத இவளை வச்சு என்ன பண்ண போறேனோ? இந்த வயசுல நானா போய் அவனை மயக்க முடியும். சொன்னாலும் புரியாத மர மண்டையை பெத்து வச்சிருக்கேனே! இரு டி வரேன்” என்று மகளுக்கு நல்ல புத்தி சொல்ல சென்று விட்டார் கோசலை.

இங்கே தந்தையின் கோபத்தில் இன்னமும் அரண்டு அழுதுக் கொண்டிருந்த குழந்தை சுதர்சனாவை சமாதானம் செய்து தூங்க வைத்துக் கொண்டிருந்தார் பட்டம்மா.

“அப்பாவுக்கு என்னை ஏன் புடிக்கல பட்டம்மா? நான் எந்த தப்பும் பண்ணலயே, அப்புறம் ஏன் அப்பா என்னை திட்டுறார்?” அழுகையூடே தேங்கி தேங்கி வார்த்தைகள் வெளிவர, இன்னமும் உடல் நடுங்க படுக்கையில் படுத்திருந்தவள் பொம்மை ஒன்றை தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள்.

“இல்ல பாப்பா அப்பாவுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.”

“இல்ல… என்னை பிடிக்காது. கோல (கோசலை) பாட்டி சொல்லிச்சு. என்னை ஹாஸ்ட்டல்ல கொண்டு விட போறாங்க. அங்க என் வேலையெல்லாம் நான் தான் செய்யனுமாம், பிடிச்ச சாப்பாடு தர மாட்டாங்களாம், பொம்மைகளோட விளையாட முடியாது, லிட்டில் சிங்கம், சோட்டா பீம், இந்து பிந்துலாம் கூட பார்க்க முடியாதாம்” என்று சொல்லி தேம்பி தேம்பி அவள் அழ, பட்டம்மாவிற்கே ஒரு மாதிரி ஆகி போனது. 

எதையெல்லாம் சொல்லி குழந்தை மனதை காயப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று உள்ளுக்குள் புழுங்க தான் முடிந்தது. என்ன இருந்தாலும் அவர் சாதாரண வேலைகாரி தானே! இந்த பிள்ளைக்காக வீட்டுக்காரர்களை எதிர்த்து பேசினால், அவர் பிள்ளைகள் அல்லவா அடுத்த வேலை சோத்துக்கு தெருவில் நிற்கும். பெரிய இடத்து விசயம் தவறு என்று தெரிந்தும் வாயையும், கண்ணையும் மூடிக் கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலை. 

“அப்படியெல்லாம் இல்ல பாப்பா. நீ பேசாம தூங்கு” என்று அவளுக்கு தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார்.

சுதர்சனாவும், தன் எதிரே சுவரில் மாட்டியிருந்த சம்ரித்தின் ஆளுயர புகைப்படத்தை கண்களில் ஏக்கத்துடன் பார்த்தபடியே தன் குட்டி கண்களை மூடிட, இங்கே கனல் வீசும் கண்கள் இரண்டிலும் அப்பட்டமாக வலியை மட்டுமே சுமந்து சம்ரித்தும் இருண்ட அறையில் மெல்லிய ஒளியில் தன் அறையில் இருந்த புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

நிறை மாத கருவை சுமந்து நிற்கும் மனைவி முன்னால் மண்டியிட்டு தன் உயிரை சுமக்கும் அவள் மணி வயிற்றில் அவன் இதழ்கள் பதிந்து இருக்க, ஒரு கரம் தன்னவன் சிகை கோதிட அவன் நெற்றியில் இதழ் பதித்திருந்தாள் ருக்ஷனா.

எத்தனை கனவுகள், எத்தனை எத்தனை ஆசைகள் அத்தனையும் அவளோடு மாண்டு போனதே. இருள் சூழ்ந்த அறையே அவன் இதயத்தின் சாயலாகிட, தன் விரல் கொண்டு இருண்டு கிடந்த வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தாள் ராதிகா.

வேலை முடிந்து ஓடி ஓடியே வீடு வந்து சேர்ந்த ராதிகாவை இருண்டு கிடந்த வீடு தான் வரவேற்றது. 

“அத்தை கரண்ட் இல்லையா?” என்று கேட்டப்படியே பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்க, “அதெல்லாம் இருக்கு. இந்த லைட் தான் எரியல” என்று மெழுகு வர்த்தியோடு வந்தார் ராதிகாவின் மாமியார் சகுந்தலா.

“வெளியவாவது லைட் போட்டு இருக்கலாமே” 

“அது பியுஸ் போயி ரெண்டு நாள் ஆவுது. வீட்டுல என்ன இருக்கு ஏது தேவைனு பார்க்க உனக்கு எங்க நேரம் இருக்கு. சதா அந்த ஆபிஸையை கட்டி அழு. அதெப்படி டெய்லி உனக்கு மட்டும் முடிய இவ்வளவு நேரம் ஆகுது?” என்று வழமை போல் அவர் பேச்சுகள் அவளை தொடர, தன் போனில் டார்ச் அடித்து, ஸ்டூலில் ஏறி டியுப் லைட்டை விரல்களால் திருக்கி விட அதுவோ பிரகாசமாக எரிந்தது.

“அய்ய்ய் கரண்ட் வந்துருச்சு…” என்று  சின்ன வாண்டுகளின் சத்தம் காதை கிழிக்க, அப்போது தான் தன் புத்திர பாக்கியங்கள் இன்னும் தூங்காமல் விழித்து இருப்பதை பார்த்தாள்.

முதலில் இரட்டை பெண் குழந்தைகள், மன்ஷிகா, தன்ஷிகா. விரைவில் ஐந்து வயதை எட்டி விடுவார்கள். இரண்டாவது பொடி வாண்டு தர்ஷன். மூனேகால் வயது.

“டேய்… நீங்க யாரும் இன்னும் தூங்கலையா?”

“அம்மா எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்த?” அவள் கேள்விக்கு பதில் சொல்ல ஆளில்லை. அவள் கைப்பையை தூக்கி கொண்டு சோபாவில் அமர்ந்து மூன்றும் அலச ஆரம்பித்து விட்டது. 

எப்படியும் வேலை முடிந்து வீடு வந்து சேர நேரமாகிவிடும் என்று அனேக நாட்கள் கிடைக்கும் நேரத்தில் அவர்களுக்காக எதாவது வாங்கி வைத்துக் கொள்வாள். பையில் இருந்த திண்பண்டங்களை வலியவன் எவனோ அவனுக்கே லாபம் என்று மன்ஷிகாவும், தன்ஷிகாவும்  கையில் அள்ளிக் கொள்ள, இளையவன் தர்ஷனோ “ங்ஆஆஆ…” என்று கண்ணீர் வராத கண்களை கசக்கி கத்தி அழ துவங்கி விட்டான்.

“தன்ஷி, மன்ஷி தம்பிக்கும் குடுங்க” என்று அன்னை குரல் கடிமையாக வர, இருவரும் ஆளுக்கொரு சிப்ஸ் பாக்கெட்டை அவனுக்கு கொடுத்தனர். அவனோ “எனக்கு நிறைய வேணும்” என்று அடம்பிடிக்க, ரோஷக்காரிகள் இருவரும் தங்கள் கையில் இருந்ததையும் அவனிடம் தூக்கி வீசி விட்டு உதட்டை பிதுக்கிக் கொண்டு அன்னை முன்னே வந்து நின்றனர். 

“எல்லாம் அவனுக்கு தானா? எங்களுக்கு ஒன்னும் கிடையாதா?” என்று பாவமாக கேட்க, 

“நான் எப்போ டா அப்படி சொன்னேன்? இருக்கத மூனு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடுங்க.”

“நான் தர மாட்டேன். அவளுக்கு குடுக்க கூடாது” என்று அவர்கள் கோபத்தில் தூக்கி போட்டதையும் எடுத்து நெஞ்சோடு இறுக்கி பிடித்துக் கொண்டு அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க,

‘இப்போதான் ஒரு வில்லனை சமாளிச்சு வந்தேன். இங்க மூனு படுத்துதே’ என்று அல்லோல பட்டப்படி துணைக்கு மாமியரை திரும்பி பார்க்க, 

அவரோ ‘என் டியுட்டி முடிஞ்சி போச்சி. இனி நீயாச்சு உன் புள்ளைங்களாச்சு’ என்று பாயை விரித்து கட்டையை சாய்த்து விட்டார்.

சிறிய வீடு தான். ஒரு ஹால், கிச்சன், ஒரே ஒரு படுக்கையறை அதனுள்ளே அட்டாச்ட் பாத்ரூம். எல்லாரும் ஹாலிலே படுத்துக் கொள்வார்கள். படுக்கையறை துணிகளையும், பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களையும் அடைத்து வைக்க மட்டுமே.  

‘வெளி மனுஷால கூட சமாளிச்சிடலாம். வீட்ல இருக்கிற இந்த நால சமாளிக்க முன்ன நாக்கு தள்ளுதே!’ என்று அவள் நெத்தியை நீவிக் கொண்டே பிள்ளைகளை பார்க்க, அவர்களோ குரூப் அழுகைக்கு தயாராக உதட்டை பிதுக்கி கொண்டு நின்றனர்.

“தர்ஷூ குட்டி… நீ குட் பாய்ல குடுங்க” என்று கையை நீட்ட, “ம்ஹிம்” என்று அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றுக் கொண்டான். “எதுவா இருந்தாலும் ஷேர் பண்ணி தான் சாப்பிடனும். அப்போ தான் அம்மா நாளைக்கும் வாங்கிட்டு வருவேன்” என்று சமாதானம் செய்து பங்கு வைத்து கொடுக்க, "நாளைக்கு எனக்கு மட்டும் நிறைய வாங்கிட்டு வரணும். இல்ல அடிப்பேன்” என்று மிரட்டியே கொடுத்தான் தர்ஷன்.

“ஹ்ம்ம்” என்று பிள்ளை மிரட்டலை ரசித்தபடியே உடலை சுத்தம் செய்துவிட்டு சாப்பிட்டு வந்தவள் அருகே யார் படுப்பது என்று அடுத்த யுத்தம் தயாரானது.

பெண்கள் இருவரும் அன்னைக்கு இருபுறமும் ஓடி வந்து இடம் பிடித்துக் கொள்ள, தர்ஷனோ அவள் மேலேயே ஏறி படுத்துக் கொண்டு, “எனக்கு இடமில்ல, ஆ… ஆ…” என்று கத்தியே மன்ஷி பக்கமாக சரிந்து அவளை ஓரம் கட்டி, தள்ளி விட்டிருந்தான் கேடி.

சகுந்தலா அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொள்ள, ஒரு டிக்கெட் தூங்கி விட்டது. அருகே கிடந்த மற்ற இரண்டும், “அம்மா என்னை பார்த்து மூஞ்சிய வை” நிமிர்ந்து படுத்து இரண்டு கைகளையும் பிள்ளைகளுக்கு தலையணையாக்கி படுத்து இருந்தவள் முகம் தன்னை நோக்கி தான் இருக்க வேண்டும் என்று இருவரும் மாறி அவள் முகத்தை திருப்பி விளையாடியதில் கழுத்து வலி வந்தது தான் மிச்சம். 

“சப்பா… ரெண்டு பேரும் அமைதியா தூங்கல, அம்மா தெருவுல போய் படுத்துருவேன்” என்று மிரட்ட, தன்ஷி அமைதியாகி அவளை கட்டிக் கொண்டே கண்ணை மூடிக் கொண்டாள். தர்ஷனோ “நானும் வருவேன். வா போலாம்” என்று அவள் தாடையை பிடித்து சொன்னபடி, அவளை இழுக்க, “அடேய் மிடில டா. நாளைக்கு அம்மாவுக்கு சீக்கிரம் போகனும். லேட் ஆச்சுனா அந்த தீக்கோழி வேற கத்துவான். தூங்க விடு டா.” என்றவள் கண்களை முடிக் கொண்டாள். 

பொடி வாண்டோ, "அம்மா நாளைக்கு ஸ்டிக் பென் வாங்கிட்டு வா. கஸ்டர்ட் ஆப்பிள் வாங்கிட்டு வா" என்று வாய் ஓயாமல் லிஸ்ட் போட்டுக் கொண்டே இருக்க, முழித்து இருந்தாலும் அவனுக்கு பதில் சொல்லவில்லை. 

அவள் வாய் திறந்து பதில் சொல்ல ஆரம்பித்தால் இரவு முழுவதும் பேசியே சாகடிப்பான். பிள்ளைக்கு வாய் வலிக்கும் என்று அக்கறைக் கொண்டவளோ “முழிச்சிட்டு இருக்க ஆள பூச்சாண்டி வந்து தூக்கிட்டு போவான். அம்மா தூங்கிட்டேன் ப்பா” என்று பயம்காட்ட, முட்டை கண்ணை உருட்டி முழித்த பொடியனோ அன்னை மேலே ஏறி  அணைத்தபடி தூங்கிவிட்டான்.

ஆயிரம் வருத்தங்கள் மனதை அரித்தாலும், அவள் சிறு கூட்டுக்குள் நலமாக தான் வாழ்க்கை நகர்கிறது. 

பிரிந்த உயிருக்காக இருக்கும் உறவை அருணன் சம்ரித் வதைக்க,  ராதிகாவோ தன்னவன் விட்டு சென்ற நினைவுகளின் தூரிகைகளை கொண்டு தன் வாழ்வை ஒளித் தீட்டிக் கொண்டிருக்கிறாள்.

யார் இதயம் யாரோடு சேரும். அடைக்கி வைக்க நினைத்தாலும் ஆசைகள் ஆர்ப்பரிக்கும் காலமும் வருமோ!

குடுத்தத எடுக்குறதும்!

வேற ஒன்ன குடுக்குறதும்!

நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி!

 

இரு வேறு துருவமாய் ஒரே வலியை சுமந்து நிற்கும் இருவரின் வாழ்க்கை பயணம் இணையுமா?

இணைத்து வைத்து விடுவோம். நமக்கு வேறென்ன வேலை.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top