தளிர்மலரே ம(த)யங்காதே!!
தளிர் : 1
"நாளைக்கு ஷூட்க்கு எல்லாம் ரெடியா? ஆர்டிஸ்ட் எல்லாம் ஓகே தானே?" என்று கடைசியாக ஒருமுறை உறுதி செய்ய கேட்டபடியே வேகமாக நடந்தவன் பின்னே எல்லாவற்றிற்கும் "எஸ் சார்… எஸ் சார்…" என்று ஆமா சாமி போட்டு ஓடி தான் வந்தாள் ராதிகா.
"ஹாங்… அப்புறம் அந்த புராடக்டோட சாம்பிள் பீஸ் வந்துடுச்சா?" என்றவன் நடை சற்று தளர, 'அய்யோ! செக் பண்ணிட்டு வானு சொல்லி இன்னும் இழுத்து அடிப்பாரோ!' என்ற அல்லல் அல்லி விழிகளில் தோன்றி மறைந்தது. "எல்லாம் ஓகே சார். செக் பண்ணிட்டேன்" என்று அவசர அவசரமாக சொன்னாள்.
நிதானமாக நின்று அவள் அவசர விழிகளை கவனித்தவன், "நாளைக்கு ஏதாவது சொதப்பிச்சு உன்ன தான் தூக்கிப் போட்டு மிதிப்பேன்" என்று விரல் நீட்டி எச்சரித்தவன், வேக நடையுடன் முன்னே சென்று விட்டான்.
செல்லும் அவன் முதுகை பார்த்தபடி "ஸப்பா… மிடில" என்று நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டவள் சேலையில் வேகம் தடைபட, கால்கள் பின்ன, 'விழுந்து வாரினாள் கூட இரக்கம் பார்க்காது வீல் சேரில் இழுத்து வந்தாவது வேலை வாங்குவான். நமக்கு தான் கஷ்டம்' என்று ஒவ்வொரு அடியையும் பார்த்து தான் எடுத்து வைத்தாள்.
தடுக்கி விழுந்தால் தூக்கும் கரங்களை விட, தூற்றும் வாய்கள் தான் அதிகம். அதிலும் கைம்பெண் என்றால் ஒவ்வொரு அடியிலும் ஆயிரம் குழிகள் இருக்குமே.
ஆம் ராதிகா… 26 வயது இளம் கைம்பெண். மூன்று குழந்தைகளுக்கு தாயும் கூட.
ஏற்கனவே மணி இரவு பத்தை தாண்டி விட்டது. இதற்கு மேல் நேரம் கடத்த உடலிலும், மனதிலும் திராணி இல்லை. ஆறு மணி தாண்டினாலே 'விளக்கு வச்ச பிறகு அப்படி என்ன வேலையை பார்த்து கிளிக்கிறா?' என்று வார்த்தைகள் வசம் இல்லாமல் வரும்.
மற்றவர்களின் கற்பனை குதிரைகளுக்கு தீனி போடும் நிலை அவளுக்கு. சாமியாராக இருந்தாலும் இரவு பூஜை எப்படி இருந்தது என்று கேட்கும் வஞ்சக உலகம். ஊர் வாயை பார்த்தால், தன் பிள்ளைகள் வயிற்றை யார் நிரப்புவது? வாங்கிய கடனை யார் அடைப்பது?
தன் படிப்பிற்கு இவன் அளவு சம்பளம் எவனும் தர மாட்டான் என்று இன்னும் இங்கே ஓட்டிக் கொண்டிருக்கிறாள். அவனோ அவளுக்கே விடா கண்டன், கொடுக்கும் சம்பளத்திற்கு சக்கையாக பிழிந்து வேலை வாங்கி தான் யாரையும் அனுப்பி வைப்பான்.
ஷைன் இந்தியா ஆட் ஏஜென்சி… உலக அளவில் விளம்பர படங்கள் தயாரிப்பதில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனம். பல்வேறு கிளைகள் இந்தியா முழுவதும். பெட்டி கடை அண்ணாச்சி கடை விளம்பரம் துவக்கம், ஃபாரின் புரோடக்ட் சந்தை விளம்பரம் வரை எல்லாம் செய்து கொடுக்கும் ஒரே நிறுவனம்.
'என்ன வேண்டும் உங்களுக்கு எல்லாமே இங்க இருக்கு.' தரம் வாரியாக, சந்தை வாரியாக பணத்தின் அளவீடு இருக்கும்.
ஐந்து வருடத்தில் அபார வெற்றியடைந்து வானுயரம் வளர்ந்து நிற்கிறது. எல்லாம் அவன் ஒருவனின் முயற்சியால் மட்டுமே.
அருணன் சம்ரித்… முப்பது வயது இளம் தொழிலதிபர். 'ராசா நீ சாப்பிடுவியா? தூங்குவியா? டயர்டே ஆக மாட்டியா?' என்று ராதிகா பலநாள் நாக்கு தள்ள பிரமித்து பார்த்த ஒருவன். இரவு பகல் பாராது பணத்தின் பின்னால் ஓடும் அரக்கன்.
எல்லாம் யாருக்காக என்று கேட்டால்? தன் தனிமையை போக்க, மனதை ரணமாக்கும் சம்பவத்தை மறக்க என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், அத்தனை உழைப்பும் அவள் ஒருத்திக்கு தான் என்பது மட்டும் அவனே மறுத்தாலும் மாறாத உண்மை.
நல்ல சம்பளம் என்று இரத்த காட்டேரிக்கு பி ஏ வாக சிக்கி தன் தூக்கத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறாள் ராதிகா. அலுவலகத்தை பூட்டி சாவியை வாட்ச்மேனிடம் கொடுத்து விட்டு அவள் நகர, சம்ரித் கார் வளாகத்தை கடந்து வெளியேறி இருந்தது.
ராதிகாவும் கையில் இருந்த வாட்ச்சில் மணியை பார்த்துக் கொண்டே வேக வேகமாக பஸ்டாப்பை நோக்கி நடக்க, அவள் எதிரே பைக்குடன் வந்து நின்றான் அவளுடன் பணிபுரியும் பாஸ்கர்.
"ராதிகா மேடம் வாங்க நான் ட்ராப் பண்றேன். இந்நேரம் பஸ் எல்லாம் போய் இருக்கும்" என்று அழைக்க,
"இல்ல சார் லாஸ்ட் பஸ் இன்னும் போய் இருக்காது. உங்களுக்கு எதுக்கு சிரமம்? நான் பஸ்லயே போய்கிறேன்" என்று மெல்லிய புன்னகையோடு நகர்ந்தவள் முன்னால் மீண்டும் பைக்கை திருக்கி கொண்டு வந்து நின்றான் பாஸ்கர்.
"இங்க பாரு ராதிகா" மேடம் என்ற அழைப்பு எல்லாம் பறந்துப் போனதை அவளும் கவனித்துக் கொண்டாள்.
"நான் நேரடியாகவே மேட்டருக்கு வரேன். எனக்கு உன்ன பிடிச்சு இருக்கு. ஒருநாள் என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேன்" என்று கேட்க,
தன்னை வட்டமிடும் கழுகின் பார்வையும், எண்ணமும் புரியா சிறுமி அல்லவே அவள். இதற்கு தான் அடி போடுகிறான் என்று அவன் அக்கறை காட்டும் போதே புரிந்துக் கொண்டாள்.
"இங்க பாரு பாஸ்கர்" அவளும் சாரை விட்டு இருந்தாள், "எனக்கு இன்டரெஸ்ட் இல்ல. இனி இந்த எண்ணத்தோட என்கிட்ட பேசாதீங்க" என்று சொன்னவள் வயது குறைவு தான் என்றாலும், வார்த்தைகளிலும், பார்வையிலும் முதிர்வு தெரிந்தது. வேலைக்கு என்று இறங்கிய இந்த இரண்டு வருடத்தில் இவனை போல் எத்தனை பிணம் திண்ணி கழுகுகளை பார்த்து இருப்பாள்.
'அய்யோ! என்னை பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்டான்?' என்று அழுதுப் புலம்பிய காலமெல்லாம் மலையேறி போச்சு. துணிந்து பதில் சொல்ல பழகிக் கொண்டாள் இந்த இரண்டு வருடத்தில், அதுவும் இன்முகமாக.
"ஓ! சாதாரண ஆபீஸ் பாய்யா இருந்தா இன்டரிஸ்ட் இருக்காது. முதலாளியா இருந்தா மட்டும் ரொம்பவே இன்டர்ஸ்ட இருக்குமோ. இவ்வளவு நேரம் அவரோட என்ன பண்ணிட்டு இருந்தேனு எனக்கு தெரியாது. சும்மா பத்தினி வேசம் போடாத டி. யாருக்கும் சொல்ல மாட்டேன். இந்த விசயம் உனக்கும் எனக்கும் மட்டும் இருக்கும். எவ்வளவு காசு வேணுமோ வாங்கிக்க." அவன் வார்த்தைகள் தரம் தாழ்ந்து வந்து விழுந்தது.
"ஓ! எவ்வளவு காசு வேணா கொடுப்பியா? அந்த காச உன் பொண்டாட்டிகிட்ட கொடுத்து நீ கேட்கிறதா அங்க வாங்கிக்க" என்று கண்கள் மட்டும் கோபத்தில் மின்ன, நிதானமாக சொன்னவள், அவனை முறைத்து விட்டு திரும்பி நடக்க, அவள் மீது அந்த கடவுளுக்கு கொஞ்சம் கருணை இருந்தது போல, அவளுக்கான பேருந்தை அனுப்பி வைத்திருந்தார்.
அதுவும் அவள் கை நீட்டிய திசையில் நிற்க வேறு அருள் பாவித்து இருந்தார். அதற்கு பிறகு ஏன் வீதியில் நின்று கண்ட கண்ட நாய்களின் வீண் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல போகிறாள்.
பேருந்தில் ஏறி அமர, வழக்கமாக பயணிக்கும் பேருந்து என்பதால், "என்ன மா இன்னைக்கும் லேட் தானா?" டிக்கெட்டை கிழித்துக் கொண்டே அவளிடம் கேட்டார் நடத்துநர்.
"ஆமா அண்ணே." என்று வார்த்தைகள் வெளி வந்தாலும், மனமோ தன் நிலையை எண்ணி உள்ளுக்குள் ஊமையாக அழுது கொண்டு தான் இருந்தது.
தினம் தினம் எத்தனை எத்தனை பார்வைகள், பழிகள், வீண் பேச்சுகள் அத்தனைக்கும் பதிலளிக்க விட்டு, தன்னை இந்த சமுதாயத்தில் தனியே போராட விட்டு போன கணவன் மீது இப்போதும் கோபம் வந்தது. அதை தாண்டி வருத்தம். தன்னை ஏன் அந்த கடவுள் சபித்தார் என்று எண்ணுகையில் விழி நீர் கோர்த்து நிற்க, விழி மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் கரம் நடுவே வலிய கரம் ஒன்று ஊடுருவி, அவள் விரல்களோடு தன் விரல்களை பிணைத்து கொள்ள,
மெதுவாக விழி திறந்து பார்த்தவள் இதழ்கள் தன்னவன் அருகாமையில் மனபாரம் மறந்து புன்னகைக்க, அவன் இதழ்களில் தாராள புன்னகை.
கை கோர்த்த மன்னவன் தோள் சாய்ந்தவள், ஒருதுளி விழி நீர் உருண்டோடி அவன் கரம் நனைக்க, அவள் நெற்றியில் அன்பு முத்தங்கள் பரிசாக இட்டவன் காற்றில் கரைந்து போனான்.
பால முரளி கிருஷ்ணா… இந்த ராதையை தவிக்க வைத்து இறையடி சேர்ந்த அவள் காதலன், கரம் கோர்த்த கண்ணாளன். அவள் அளவில்லா காதலின் சொந்தக்காரன்.