அரன் 15

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 15

"என் அண்ணன் அப்படி எல்லாம் விட்டு விடமாட்டான். வீட்டுல சம்மதிக்கலைனாலும் உன்னை இங்கேயே வைத்துக் கொள்வான்!" என்று குரலில் அத்தனை நக்கல் வழிய கூறி சென்றவளை தான் அதிர்வோடு பார்த்தாள் யாழினி!

 

ஆனால் அடுத்த நிமிடம் அந்த அதிர்வு போய் ஒரு வித அருவருப்பு அவளிடம்! "பெண் நீயே இப்படி இருந்தால்.. உன் அண்ணனும் இப்படியாகத்தான் இருப்பான்" என்று!

 

இனி அதிரதனிடம் அரவிந்தை பற்றி கேட்கவே கூடாது என்று நினைத்தவள், மறுநாள் விடுமுறை எடுத்திருந்தாள் அர்விந்தை தேட..!! முதலில் சொக்கலிங்கத்தோடு சென்று காவல் நிலையத்திலும் அவருக்கு தெரிந்த இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்து வந்தாள். அதுவும் எழுத்தில்லா புகாராக.. அந்த இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கத்தின் பழைய மாணவன்.

 

இன்ஸ்பெக்டர் சந்திரனும் அந்த சரக்கத்தில் உள்ள மற்ற ஏரியா ஸ்டேஷனுக்கும் அர்விந்த் போட்டோவை அனுப்பி தேட சொல்லி ஆணையிட்டிருந்தான்.

 

இதற்கிடையே அர்விந்தை கேட்டோ தேடித் தரச் சொல்லியோ யாழினி தன்னிடம் வருவாள் என்று நினைத்து இருந்த அதிரதனின் மன கோட்டை எல்லாம் யாழினி என்ற பெண்ணின் தைரியத்தின் முன்பு சீட்டுக்கட்டாய் சிதறி விழுந்தது!!

 

தன் மொபைலில் இருக்கும் அவளது புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே பள்ளியின் கரஸ்பாண்ட் அறையில் இருக்கையை அரைவட்டமாக அடித்தபடி அமர்ந்திருந்தான். இந்த நான்கு நாட்களாக அவனது ஜாகை பள்ளிக்கூடம் தான்!!

 

யாழினியை அவதானிப்பதிலும் அவளை அருகே அழைத்துக் கொள்வதிலும் அத்தனை ஈடுபாட்டோடு அவன் காய் நகர்த்த.. அவளோ அத்தனையையும் தகர்த்து, அவனுக்கு தண்ணி காட்டி உனக்கும் பெப்பே.. உன் அப்பனுக்கும் பெப்பே என்றாள்.

 

"ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான்டி! நிமிர்வும் கூட.. அதுதான் என்னை உன் பக்கம் இன்னும் இன்னும் இழுக்கிறது யாழ்!" என்று அவளையே பார்த்திருந்தான். ‌அந்த கண்களில் அவளுக்கான தேடல் மிகுத்திருந்தது.

 

அன்றைக்கு அவள் பள்ளிக்கு வருவாள், வந்தால் அவனை வந்து சந்திக்கும்படி பியூன் மூலம் அவளுக்கு தகவல் அனுப்பிருந்தான்.

 

"இன்று அவள் வந்ததும் அவளே கூறவில்லை என்றாலும் தாமாகவே அவளிடம் இருந்து விஷயத்தை வரவழைக்க வேண்டும், அவள் மீது நான் கொண்டிருக்கும் அன்பையும் காதலையும் மீண்டும் மீண்டும் அழுத்தி சொல்லி அந்த மர மண்டைக்கு புரிய வேண்டும்" என்று ஏக கனவுகளோடும் எதிர்ப்பார்ப்போடும் அவன் காத்திருக்க… பள்ளி ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு எல்லாம் வந்த பியூனோ "சார் யாழ் டீச்சர் இன்னைக்கு லீவாம்" என்று கூறினான்.

 

அத்தனை கோபம் அனைத்தையும் அவன் டேபிள் மேல் இருந்த பொருட்களில் தான் காட்டினான்.

அனைத்தும் என்ன பாவம் செய்தோம் என்று தெரியாமலேயே கீழே விழுந்து உடைய.. பார்த்திருந்த பியூனுக்கு பயத்தில் தொண்டை விக்கியது!!

 

"போச்சு.. போச்சு.. வந்தனைக்கே இந்த சாரு யாழினி டீச்சர் லேட்டா வந்தாங்கன்னு பேசினாரு.. இன்னைக்கு அந்த அம்மா சொல்லாம கொள்ளாம லீவ் எடுத்துச்சிடு போல.. எவ்வளவு கோபம்.. அச்சச்சோ.. நம்ம மேல விழுந்திடாம.." என்று இரண்டடி தள்ளி நின்று கொண்டான்.

 

பயத்தில் நின்றிருந்த ப்யூனை பார்த்த அதிரதன் "வாட்???" என்று எரிந்து விழ…

 

"ஒன்னுமில்ல சார்!" என்று வெளியில் ஓடியே போனான்.

 

அடுத்த பத்தாவது நிமிடம் அவனும் வெளியில் கிளம்பி விட்டான். அவன் போகும்போது பயத்தோடு பார்த்த நின்ற ப்யூனிடம் "க்ளீன் த ரூம்" என்று ஆணையிட்டு செல்ல, அவனும் அடிமை போல உள்ளே ஓடினான். அதை ஒரு கர்வத்தோடு பார்த்து சென்றான்.

 

இப்படி சொடுக்கு போட்டதும் அவன் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்ய ஆங்காங்கே அடிமைகளாய் ஆட்கள் இருக்க.. அது ஏதும் நிறைவேறாமல் போனது என்னவோ யாழினியிடம் தான்!!

 

"யாழ்.. யாழ்…!" என்று ஸ்டீயரிங்கில் குத்தியப்படி அவன் ட்ரைவ் செய்துக் கொண்டே ஃபோனில் அவனின் ஆட்கள் மூலம் 'இப்பொழுது யாழினி எங்கே?' என்று கண்டுபிடிக்க கூறினான்.

 

கண்டிப்பாக அர்விந்தனைத் தேடி தான் இவள் சென்று இருப்பாள் என்பது அவனுக்கு உறுதியாக புரிந்தது.

 

இலக்கில்லாமல் இவன் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த போதே அவனது ஆட்களிடம் இருந்து தகவல்

வந்தது.

 

"சொல்லு.. எங்க இருக்கா யாழ்?" என்று பற்களை கடித்தபடியே கேட்டான்.

 

"சார் மேடம் காலைல அவங்க அப்பாவோட போய் அவங்க சர்க்கிள் இருக்குற போலீஸ் ஸ்டேஷன்ல அவங்க பிரண்டை காணோம்னு கம்ப்ளீட் பண்ணி இருக்காங்க.. அதுவும் வாய்மொழியாக தான் போல.." என்றதும் யாழ் என்று பல்லை கடித்தான் அதிரதன் இங்கே.

 

"ஓகே.. தென்.." என்று அதிகாரமாக கேட்டான்.

 

"அப்புறம்.. அவங்க அரவிந்தனுக்கு தெரிந்த பிரிண்ட்ஸ் எல்லாம் போய் பாத்துட்டு இருக்காங்க சார்!"

 

"தனியாவா?" என்றான்.

 

"ஆமா சார்! தனியா தான்! காலையிலேயே கொஞ்ச நேரம் அவங்க அப்பா வந்தாங்க. அதுக்கப்புறம் மேடம் அவங்கள வீட்டுக்கு அனுப்பிட்டு தனியா தான் ஒவ்வொரு இடமாக சுத்திகிட்டு இருக்காங்க.. அது மட்டும் இல்லாம அவர் அடிக்கடி போற ஒயின்ஷாபுக்கு எல்லாம் கூட.." என்று அவன் தயங்கி தயங்கி சொல்ல…

 

"வாட்??? ஒயின் ஷாப்? யூ மீன்…??" என்று‌ நிறுத்த…

 

"எஸ் சார்! பார் தான்!" என்றான் அவனும் மெல்லிய குரலில்..

 

"வாட்? ரப்பிஷ்!! அங்கெல்லாம் அவ போற வரைக்கும் நீங்க எல்லாம் என்னடா பண்ணிக்கிட்டு இருந்தீங்க? அப்பவே சொன்னேன் தானே அவளை வாட்ச் பண்ணுங்கன்னு.. அதுக்குன்னு அவ அங்க தேட போற வரைக்கும் வாட்ச் பண்ணிட்டே மட்டும் இருப்பீங்களாடா யூ இடியட்ஸ்! ஸ்கவுன்ட்ரல்ஸ்…" என்று ஆரம்பித்தவன் அவர்களை அவனது பாணியில் திட்டி தீர்த்து விட்டான்.

 

'இவர் அவங்க எங்கெங்கெல்லாம் போறாங்கன்னு வாட்ச் பண்ண தானே சொன்னாரு. அது தானடா நாமும் செஞ்சோம்! இப்ப என்னத்துக்கு இவர் திட்டுறாரு?' என்று புரியாமல் அங்கே அவன் முழிக்க..

 

"சீ.. இப்ப யாழினி எங்க இருந்தாலும் உடனடியா அவளை நான் சொல்ற ஹோட்டலுக்கு அழைச்சிட்டு வா!"

 

"சார் அவங்க வரலேன்னு சொன்னா?" என்று பயந்தபடி அவன் கூற..

 

"வரலைன்னு சொன்னா.. தூக்கிட்டு வா மேன்!" என்று திட்டியவன் நேராக ஹோட்டல் ஹெவன் இன்க்கு சென்றான்.

 

யாழினிக்கு தெரிந்தவரை அர்வியோடு படித்த சில நண்பர்கள் அவ்வப்போது அவன் தெருவில் இருக்கும் ஒன்று இரண்டு பேரை தவிர பெரிதாக அர்விந்துக்கு நட்பு என்று பழக்கம் கிடையாது.

 

இப்ப எங்கிருந்து தேடுவது அவனை? காலையில் அப்பாவோடு சேர்ந்து கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு பொதுவான இடத்தில் தேடும்போது அவருக்கு களைப்பாகி விட.. "நீங்க வீட்டுக்கு போங்கப்பா! நான் பார்த்துக்குறேன்!" என்று அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு இவள் மட்டும் வெயிலை பொருட்படுத்தாத தேடிக் கொண்டிருந்தாள்.

 

அவளுக்கு தெரிந்த இரண்டு மூன்று இடங்களிலும் "இல்லையே.. அவன் வரலையே!" "எனக்கு தெரியல!" என்று அவள் கேட்க விரும்பாத அதே பதில்கள்தான்!!

 

அவளுக்கு தெரியும் கண்டிப்பாக அங்கே எல்லாம் அவன் சென்றிருக்க மாட்டான் என்று!! ஆனாலும் ஒரு குருட்டு நம்பிக்கை.. ஒருவேளை சென்று இருந்தால்.. இல்லை அவர்களுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால் என்று தான் விசாரிக்க சென்றாள்.

 

"அஞ்சு நாளாச்சு இந்த எருமை எங்க இருக்குன்னு தெரியல? ஒரு வார்த்தை சொல்லிட்டாவது போய் இருக்கலாம் இல்ல.. ஒரு போன் பண்ணி இங்க இருக்கனாலும் சொல்லியிருந்தா நான் கொஞ்சம் நிம்மதியா இருந்திருப்பேன்! வரட்டும் அவனை…" என்று மனதுக்குள் அவனை வறுத்தெடுத்தபடியே அந்த வெயிலிலும் மீண்டும் மீண்டும் அவனை தேடி சுற்றி அலைந்து கொண்டிருந்தாள் காஞ்சிபுரத்தையே!!

 

ஹோட்டல் ஹெவன் இன்க்குள் சென்ற அதிரதன் சூட் ரூம் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அறை உள்ளே இருந்த ஏசி குளிர் கூட அவன் மனதினுள் உள்ளே கொதிக்கின்ற நெருப்பை அணைக்கவில்லை.

 

ஆனால் இப்படி அவள் அலையறதுக்கு காரணம் தான் என்று அவனுக்கு குற்ற உணர்ச்சி இல்லை! மாறாக அர்விந்த் செய்ததற்கு தான், தான் தண்டனை கொடுத்ததாக இவன் எண்ணி கொண்டிருந்தான்.

 

அரை மணி நேரம் அவனை குறுக்கும் நெடுக்கமாக இங்கேயும் அங்கேயும் அலைந்தவன்,

ஃபோன் போட்டு தன் அடி ஆட்களிடம் "யாழினி எங்கே?? எங்கடா??" என்று கேட்க.. அவர்களோ "சார் மேடம் எங்கள பார்த்தாலே முறைக்கிறாங்க! நாங்க பேசணும் சொன்னா.. எங்க கூட வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க" என்றனர்.

 

"நான் கூப்பிட்டேன்னு கூப்பிடுங்கடா!" என்றான்.

 

"சார்.. அத சொன்ன உடனே தான் சார் எங்கள அவங்க முறைக்க ஆரம்பிச்சதே!!" என்றதும் இவனுக்கு கோபம் பெருக.. பற்களை கடித்துக் கொண்டவன் "பேசி கூட்டிட்டு வாங்கடா!" என்றான் கோபத்தோடு.

 

அவனின் இந்த மொத்த கோபமும் யாழினி தன்னை தவிர்ப்பதற்கு காரணம் அரவிந்த் என்று நினைத்தவன் ஃபோனை தலைக்கு போட… "சொல்லுங்க சாரே?" என்று பவ்யமாக பேசினான் தலை.

 

"அவன் என்னடா பண்றான்?" என்று அதிரதன் கேட்டான்.

 

"சாப்பாடு இல்லாம சோர்ந்து போய் படுத்து இருக்கான் சாரே.."

 

"இன்னும் ரெண்டு நாளைக்கு அவன விடவே கூடாது! என்ன? நான் சொன்னது புரிஞ்சுதா? அப்பப்ப நாய்க்கு போடுற மாதிரி பிஸ்கட்டையும் பொறையும் மட்டும் போட்டு அவனை உயிரோடு வச்சிருங்க" என்று கடித்து துப்பியவன் மீண்டும் அடியாள்களுக்கு ஃபோனை போட்டு யாழினி பற்றி கேட்க.. 

 

"சார்.. என்னை பாலோ செய்தால் போலீசில் சொல்லி விடுவேன்னு மிரட்டுகிறாங்க சார்" என்று விழி பிதுங்கினர்.

 

"மயிலே மயிலேனா இறகுப் போட மாட்டா.. புடிச்சு புடுங்குனா தான் முடியும்!! தூக்கிடுங்க டா அவளை" என்றான்.

 

அவனின் பிபியை உச்சநிலைக்கு ஏற்றி கடுப்பில் காயவைத்து வெறுப்பில் வேகவைத்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு அழைத்து வந்தனர் யாழினியை அவனின் ஆட்கள்.

 

கண்களில் கோபத்தோடு யாழினி அந்த அறைக்கதவை திறக்க..

 

"வெல்கம் யாழ்…!" என்று உற்சாகமாக வரவேற்றான் அதிரதன். அதுவரை இருந்த கோபம் தாபம் எல்லாம் அவளின் நெற்றி சுருக்கத்தில் ஓடிப்போனது!

 

அவனின் ஆற்றாமை எல்லாம் அவள் விழி பார்வையில் மாயமாய் போனது!!

 

அவன் அகம் கொண்ட காதல் முகத்தில் தெரிய… அவளோ அவன் முகத்தையே ஏறெடுத்து பார்க்கவில்லை!!

 

"யாழ்… இதென்ன ஸ்கூலுக்கு கூட வராம இப்படி ரோட்ல எதுக்கு அலைஞ்சுகிட்டு இருக்க?" என்று கேட்டதும் நிமிர்ந்து அவனை ஒரு முறை கூர்மையாக பார்த்தவள் மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

"ஃபர்ஸ்ட் இப்படி வா.. வந்து உட்காரு!" என்று அவளது கையை தொடப் போக.. அவளோ இரண்டடி பின்னால் தள்ளி நின்று கொண்டாள்.

 

"ஓகே.. ஓகே.. கூல் சில்! நான் உன்னை தொடவில்லை!" என்று சோஃபாவை காட்ட அவனிடம் இருந்து சற்று ஒதுங்கி சென்று அவள் சோபாவில் அமர்ந்த வீதம் அவனை வருத்தியது.

 

ஒரு வாரம் முன்ன கூட இவனை பார்க்கும்போது அவள் கண்களில் தெரியும் ஒரு வித அலைப்புறுதல் மற்றும் ஆர்வம் இப்பொழுது சுத்தமாக இல்லை. ஏதோ எதிரியை பார்ப்பது போல பார்க்கிறாளே.. 

 

"ப்ரண்ட காணலைங்கறதுக்கு என்ன இப்படி காய வைக்கிறா! அவனை நான் தான் தூக்கி இருக்கிறேனு தெரிந்தால்… அம்மாடியோவ்..!! கண்ணாலேயே என்னை கொளுத்திடுவா போலயே காளியாய் மாறி!" என்ற நக்கலாக நினைத்துக் கொண்டான்.

 

அவளின் அந்த உணர்வுகள் இருவருக்கிடையேயான அந்த அன்பு.. பாசம்.. நட்பு இவை அனைத்தும் அவனை பொறுத்தவரை சிம்ப்ளி வேஸ்ட்! ஒரு ரூபாய்க்கு கூட பிரயோஜனம் இல்லாதவை! 

 

"தேவையில்லாதவற்றை கழுத்தில் தொங்கவிட்டுக் கஷ்டப்பட்டு கொள்வதை விட அவற்றை தூக்கி எறிந்து விட்டு மூவ் ஆன் பண்ணுவதே லைஃப்ல புத்திசாலித்தனம் யாழ்!" என்று அவளுக்கு எதிரே அமர்ந்த இவன் அறிவுரை என்ற பெயரில் அவளை கடுப்பேத்திக் கொண்டிருந்தான்.

 

"ம்ப்ச்… உங்ககிட்ட அட்வைஸ் கேட்க நான் வரலை! எதுக்கு ஆட்களை விட்டு என்னை ஃபாலோ பண்ண வைக்கிறீங்க? எதுக்கு என்னை கட்டாயப்படுத்தி இங்க அழைச்சிட்டு வர சொன்னீங்க? அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க! எனக்கு நிறைய வேலை இருக்கு. என்னை விட தி கிரேட் பிசினஸ் மேன் அதிரதன் வர்மாவுக்கும் நிறைய வேலைகள் இருக்கும்!! உங்களுடைய டயத்தை இப்படி சாதாரண ஒரு டீச்சர் கூட உட்கார்ந்து பேசி வேஸ்ட் பண்ண வேண்டாம்!" என்றாள் கட்டன் டைட்டாக…

 

இவள் கிட்ட எப்படித்தான் பேசி புரிய வைக்கிறது என்று சமாதானத்தை விட்டு அதிரடியாக அவள் அருகில் அமர்ந்தான் அதிரதன். அவளோ சற்று முறைப்போடு இருவருக்கிடையேயான இடைவெளியை பார்த்து அவனையும் ஒரு பார்வை பார்க்க..

 

"ஓகே.!" என்று சற்று தள்ளி அமர்ந்து கொண்டவன், "எதுக்கு இப்படி லூசு மாதிரி தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்க.. உனக்கு ஒன்னு தேவைன்னா என்கிட்ட நீ வரமாட்டியா? நான் உனக்காக செய்ய மாட்டேன்னா?" என்று கேட்டான் சற்று அழுத்தமாக..

 

"நீங்க யார் சார் எனக்கு? நீங்க நான் வேலை பாக்குற ஸ்கூலோட கரஸ்பாண்ட! நான் அங்க வேலை பார்க்குற டீச்சர்.. டிஜிட்டல் ஸ்கூலுக்காக என்றை நிறைய ப்ரிப்பேர் பண்ண சொன்னீங்க.. உங்களுக்கு நான் ப்ரிப்பேர் பண்ணி கொடுத்தேன்! பங்க்ஷனும் முடிஞ்சிடுச்சு.. அதோட எல்லாம் கிளியர் கட்!! என்னோட பர்சனல் லைப்ல என்ன நடக்குதுன்னு உங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்? நான் யார் தேடுனா உங்களுக்கு என்ன சார்?" என்றாள் வெடுக்கென்று. 

 

நான்கு நாட்களாக அர்வி காணாத வருத்தம்!! காலையிலிருந்து நாயாய் பேயாய் இந்த வெயிலில் சுற்றி அலைந்தும் ஒரு இடத்திலும் அவளுக்கு சாதகமாக பதில் கிடைக்காத ஆதங்கம்!! அதற்கு மேல் நண்பன் என்ற பெயரில் தன் உயிரை வாங்கும் அந்த அர்விந்த் மேல் அத்தனை கோபம்!! அது அத்தனையும் வெடித்தது அதிரதனிடத்தில்.

 

மனசில் பட்டதை சட்டென்று பேசும் ரகம் தான் யாழினி. ஆனால் இப்படி வெடுக்கென்று யாரிடமும் பேச மாட்டாள். அவளின் அந்த குணமே இப்படி மாறி உள்ளதே என்று வருத்தமாக இருந்தது அதிரதனுக்கு.

 

"இது எல்லா பிரச்சனைக்கும் அந்த அர்விந்த் தான் காரணம். படுப்பாவி அவனை வச்சு இன்னும் இவளிடம் கொஞ்சம் நெருங்லாம்னு பார்த்தா.. முடியாது போல இருக்கே! இவளுக்காக வேண்டி அவனை விடுவித்தாக வேண்டும்" என்று சிகையை ஒதுக்கி கொண்டவன் "கவலைப்படாதே யாழ்! கண்டிப்பாக உன் பிரண்ட் கிடைச்சிடுவான்" என்றான். அவளோ யோசனையாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

"நீ காலைல உங்க அப்பாவோட போய் கம்ப்ளைன்ட் கொடுக்க போனதிலிருந்து இப்ப வரைக்கும் எனக்கு நியூஸ் அப்டேட் ஆயிட்டு தான் இருக்கு. நாலு நாள் வேற நீ ஸ்கூல்லையும் ஒழுங்காவே இல்ல.. ஈவன் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட கூட நீ ஒழுங்கா நடந்துக்கல" என்றதும் அவளுக்கு கொஞ்சம் குற்ற உணர்வு ஆகிப்போனது. ஆனாலும் அரவிந்த் முக்கியம் அல்லவா என்று மனதும் அவளிடம் வாதாடியது.

 

"நாலு நாள் இப்படி கஷ்டப்பட்டு இருக்கவே தேவையில்லை நீ. முன்னாடியே என்கிட்ட நீ வந்து சொல்லி இருந்தேனா.. எனக்கு தெரிஞ்ச போலீஸ் ஹையர் ஆபீஸர்ஸ் வச்சி அவனை நான் கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ணி இருப்பேன்" என்று தோளை குலுக்கி ஸ்டைலாக சாய்ந்து அமர்ந்தான் அதிரதன்.

 

அப்போதும் அவளாக தன்னிடம் உதவி என்று கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

 

உண்மையான காதல் 

கர்வம் பார்க்காது!

ஈகோ பார்க்காது! 

சுயநலம் பார்க்காது!!

தன் சுகம் மட்டுமே பெரிது என்று நினைக்காது!!

 

தனக்கு வலித்தால் கூட தன் இணைக்கு எதுவும் நேரக்கூடாது என்று நினைக்கும் மனது தான் உன்னத காதல் மனது!!

 

ஆனால் அதிரதனுக்கு அவள் மீது காதல் இருக்கிறது! அன்பு இருக்கிறது!! ஆனால் அதைத் தாண்டி ஒரு ஈகோ.. அவனிடம் சற்று சுயநலம் உண்டு. தான் என்று எண்ணம்! இது அனைத்துமே இருக்க.. அங்கே எப்படி தன்னலமற்ற காதல் பிறக்கும்? பின் எப்படி அதனின் எதிரொலி அவளிடம் இருந்து வரும்??

 

அதிரதன் பேசுயதும் அவன் உடல் மொழியில் இருந்துமே கண்டுகொண்டாள் தான், தான் அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன் என.. அதற்காகத் தான் இப்படி தன்னை கட்டம் கட்டி தூக்கி வந்திருக்கிறான் என்றும் புரிந்தது.

 

"சார்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?' என்று கேட்டாள்.

 

இதோ இந்த ஒரு வார்த்தைக்காக தானே கடந்த ஐந்து நாட்களாக தவம் கிடக்கிறான்.. அதிரதன்!!

 

கண்கள் மின்ன "வித் ப்ளஷர்! உனக்காக என்ன வேணாலும்…" என்றான், இரு கைகளையும் விரித்து பின் அவற்றை சோஃபாவின் மீது வைத்து கொண்டு!

 

அவன் உடல் மொழியே சொன்னது என்னால் எதுவும் முடியும்!! உன் கண்ணீரை அரை நொடி நேரத்தில் துடைக்கும் வல்லமை எனக்கு உண்டு என்று!!

 

"எனக்கு.. எனக்கு.. ஒரு ஒன் வீக் லீவ் வேணும்" என்றதும் சற்றும் இது எதிர்பார்க்காத அதிரதன் விழிக்க…

 

"வாட்?" என்று எழுந்தே நின்று விட்டான்.

 

"ஆமா சார்! நீங்க சொன்னது மாதிரி என் ப்ரண்ட காணோம். அவன ஒரு பொண்ணு லவ் பண்ணி ஏமாத்திட்டா.. அந்த விரக்தியா இல்ல வேற என்னன்னு தெரியல.. நாலு நாளா அவன காணாம நான் திண்டாடுறேன்! எனக்கு அவனை விட்டா வேற யாரும் கிடையாது. அவனுக்கும் என்னை விட்டா வேற யாரும் கிடையாது!! அதனால அவனை நான் தேடுவதற்கு எனக்கு ஒரு ஒன் வீக லீவ் வேணும். இல்ல லீவு தரமாட்டேன் நீ ஸ்கூலுக்கு வந்து தான் ஆகணும்னா.. நான் ரெசிகினேஷன் பண்றது தவிர வேற வழி இல்ல சார்!" என்று கூறி அவனை திகைக்க வைத்தாள் யாழினி.

 

"காட்! காட்!!" என்று அவன் தலையை கோதிக் கொண்டான். நெற்றியை நீவி கொண்டான். என்ன செய்தும் அவனின் இந்த ஏமாற்றத்தை தாங்கவே முடியவில்லை.

 

அதுவும் யாழினி கொடுத்த அல்வா திருநெல்வேலிக்கே கொடுத்த அல்வா போல இருக்க..

 

"கொஞ்சம் கூட இதை நான் உன்னிடம் இருந்து எதிர்பார்க்கலை யாழ்?" என்று சொல்லவும் 

 

"வேற என்ன சார் எதிர்பார்த்தீங்க?" என்று அப்பாவியாக அவள் கேட்டாள்.

 

"நத்திங்! நத்திங்! என்ன உனக்கு லீவ் தான வேணும். அவ்வளவு தானே… கிராண்டட்!!"'என்றவன் "கார்ட்ஸ்!" என்று சத்தம் போட.. வெளியில் இருந்த அவன் ஆட்கள் உள்ளே வர "இவங்கள பத்திரமாக கொண்டு போய் வீட்ல விடுங்க!" என்றான்.

 

"நான் கேட்ட உடனே லீவ் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்!" என்று கொஞ்சம் நக்கல் வழிய தான் கூறிவிட்டு சென்றாள் யாழினி.

 

இதைவிட அர்விந்தை விட சொல்லி இவனே ஃபோன் செய்வான் என்று கொஞ்ச நேரத்திற்கு முன் சொல்லி இருந்தால்.. நம்பி இருப்பானா என்ன? 

 

ஆனால் இப்போது வேறு வழியில்லாமல் எங்கே நாம் அர்விந்தை நம் கையில் வைத்திருக்க.. இவள் தன் கையை விட்டு போய் விடுவாளோ என்ற பயத்தில் தலைக்கு போட்டான் ஃபோனை அவனை விட சொல்லி…

 

ஆனால் அங்கிருந்து வந்த பதிலோ அவனை இன்னும் கடுப்பேற்றியது!!


   
Azhagi reacted
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top