ஆருயிர் 12
அதிரதன் பார்ட்டி கொடுத்துக் கொண்டிருந்த அந்த பிரம்மாண்டமான ஹோட்டலின் பெரிய பார்ட்டி ஹாலில் இருந்து வேகமாக சென்ற அரவிந்த் பார்க்கிங் ஏரியாவில் இருந்து அவனது வண்டியை வேகமாக உதைத்து உயிர்பித்து திருப்ப, அப்போதுதான் அவனுக்கு மித்துவின் ஞாபகம் வந்தது!!
"ஷிட்..!" என்று தலையில் அடித்துக் கொண்டான். இந்த இரவில் அவள் தனியாக வரக்கூடாது என்பதற்காகத்தானே அவளுடன் இங்கு வந்தது.. அவளுடன் வந்ததனால் தானே இந்த துரோகத்தை கண்டு கொள்ள முடிந்தது… இப்பொழுது எப்படி அவள் தனியாக வருவாள் என்று தோழியின் பால் மனது சாய்ந்து, அங்கிருந்து நகராமல் சண்டித்தனம் செய்தது மனமும் அவன் மனம் அறிந்த வண்டியும்!
அறிவோ.. 'இங்கிருக்கும் ஒவ்வொரு வினாடியும் உன்னுள் நீ மிருகமாய் மாறிக் கொண்டிருக்கிறாய் அரவிந்த் பிரபாகரா…!! இங்கிருந்து எவ்வளவு வேகமாக செல்ல முடியுமோ சென்று விடு!' என்று உரக்க கூவியது.
"கோழை போல நான் ஓட வேண்டுமா இங்கிருந்து செல்ல வேண்டுமா? நோ.. நெவர்…!" என்று ஆங்காரமாய் அவன் கத்த…
மனமோ… "இது மித்துவின் வாழ்க்கை டா! அமைதியாக நட.. பொறுப்பார் பூமி ஆளாவார்! பொறுமையாக யோசி!!"
என்று அத்தனை அறிவுறுத்தல்!!
மனம் அறிவு.. அறிவு மனம் என்று இரண்டுக்கும் இடையே அல்லாடியவன் தலையைப் பிடித்துக் கொண்டான்!!
வலி.. வலி… வலி மட்டுமே…!!
தாங்க முடியவில்லை அந்த வலியை அவனால்!! அந்த பார்க்கிங் ஏரியாவிலேயே தலையை பிடித்துக் கொண்டு "ஆஆஆ..!" என்று வேகமாக கத்தினான்!!
அவன் கத்தி முடிக்கும் முன் அவனின் புஜத்தில் அழுத்தமாக தனது முகத்தை புதைத்து கையை இறுக்கி பற்றி… மற்றொரு கையால் அவன் முதுகை வருடினாள் அர்வியின் மித்து!!
இன்னும் அவளுக்கு முழுமையாக எதுவும் தெரியாது. அர்வியின் சாஃப்ட்வேரை தான் ஆரத்தியா எடுத்தியிருக்கிறாள் இல்லையில்லை திருடியிருக்கிறாள் என்பதும் தெரியாது!
ஆர்த்தி தான் ஆரத்தியா என்று தெரிந்த கணத்தில் அவள் தனக்கு துரோகம் இழைத்து விட்டாள் என்று எண்ணி இப்படி மறுகுகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
இந்த சாதாரண விஷயமே எத்தனை அவனுக்கு வலி கொடுப்பது கண்டு பொறுக்காதவள், ஆரத்தியா ஒரேடியாக இவனின் வாழ்க்கையை முடித்து வைக்க அவனது அத்தனை வருட உழைப்பை திருடி இருக்கிறாள் என்று தெரிந்தால்…
முதலில் அந்த வலியை இவள் தாங்குவாளா? இல்லை அதிரதனை ஏற்பாளா??
இல்லை அந்த ஆரத்தியாவின் நடவடிக்கைகளில் அருவுருத்து
அவளை மன்னிக்க மறுத்து.. அவனின் அண்ணனையும் ஏற்க மறுப்பாளா??
இதுவரை அதிரதன் மேல் காதல் இல்லை ஒரு சலனம்!! அதை தாண்டியே மெல்லிய ஈர்ப்பு அவன் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில்.. அதிலும் அத்தனை பேர் இருக்க தன்னையும் மேடையில் அமர வைத்திருந்தவனின் அந்த அன்பு அவளுக்கு பிடித்திருந்தது.
தன்னை முதன்மையாக தாங்கும் ஆண்மகனை எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது? அப்படி ஒரு பிடித்தம் மட்டுமே!
அதிலும் இத்தனை பெரிய பிரம்மாண்டமான மீட்டிங்கில் அவனை சேர்ந்தவர்கள் இருக்க.. ஏன் அவனோடு தொழில் புரிபவர்கள் அவன் வீட்டினர், அவனின் நண்பர்கள் எத்தனையோ பேர் இருக்க அத்தனைக்கும் முதன்மையாய் இவளை மேடையில் அமரச் சொன்ன அவனின் அந்த காதல் பிடித்து இருந்தது.
இவள் காதல் கொண்டுள்ளாளா? என்று கேட்டால்? தெரியாது! ஆனால் அவனின் காதல்.. அவள் மீது அவன் காட்டும் அளப்பரிய அந்த நேசம் அது பிடித்திருந்தது பெண்ணுக்கு!!
ஆனால் அனைத்தையும் இப்பொழுது பின்னுக்கு தள்ளிவிட்டு இங்கே ஓடி வர செய்திருந்தது அர்வியின் மீது கொண்ட நட்பு!! பாசம்!! அன்பு!!
நட்பா? காதலா? என்ற நிலையில் பெண்ணவள் எதை தேர்ந்தெடுப்பாள்??
அன்பா? தேசமா? தெரியவில்லை!!
இருக்கொல்லி தலை எறும்பு மாதிரி தான் அவளது நிலை!
இதனில் இன்னும் அன்னை தந்தை வேறு இருக்கின்றனர். அவர்களையெல்லாம் எப்படி சமாதானப்படுத்த? அனைத்தையும் புறந்தள்ளி விட்டு நட்பை மட்டும் கையில் எடுத்தவள், அவனை ஆசுவாசப்படுத்த மெல்ல முதுகை வருடிக் கொண்டே இருந்தாள்.
"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. கண்ட்ரோல் அர்வி! ஆர்த்தி இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று அவள் கூறியது பணக்காரியான ஆராத்தி ஏழையாக நடித்ததை…
"மித்து..!!" என்று தன் ஆத்திரம் தீர அவன் கத்த.. அதற்கு பின் அவள் வாயை திறக்கவில்லை. ஆனாலும் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அவன் தான் வலியை கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்க.. இவளும் அவன் புஜத்தை விடாமல் மற்றொரு கையால் அவன் முதுகை நீவி விட்டுக் கொண்டே இருந்தாள்.
"நீ அங்கே இருக்கணும்! தயவுசெய்து நீ போ.. நான் போயிட்டு மாமாவை அனுப்புறேன்! அவர் கூட வா" என்றதும் இல்லை என்பதாய் தலையாட்டியவள் "நானும் உன் கூடவே வரேன்.. அர்வி!" என்றாள்.
"வேணாம்!! அது சரி வராது… என்று அவன் முடிக்க முன்.. "வா போகலாம்" என்று அவன் கையை இழுத்துக் கொண்டு அவள் செல்ல..
அங்கே ஒரு நல்ல வாழ்வு அவளுக்காக காத்திருக்கிறது. அதைக்கூட மறந்து தனக்காக வரும் தோழியை பார்த்தவன் மனம் பெருமை கொண்டது. அவளின் அன்பில் கர்வம் கொண்டது!! ஆனால் மற்றொரு மனமுமோ அவளுக்கு நன்மை செய்ய தூண்டியது.
அதே நேரம் மேடையில் யாழினியை காணாமல் தேடிக்கொண்டு வந்த அதிரதன் கண்களில் பட்டது அர்வியும் யாழினியும் கைகோர்த்து சென்று கொண்டிருப்பது தான்.
உண்மையில் யாழினி தான் அர்வியின் கையை பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருந்தாள். ஆனால் தூர இருந்து பார்ப்பவர்களுக்கு அது தெளிவாக தெரியாது தானே? இருவரும் ஜோடியாக செல்வது போல தோன்ற… அப்படி கண்ணு மண்ணு தெரியாத கோபம் அதிரதனுக்கு.
தன் காதலியை தன்னிடம் இருந்து பிரித்து செல்லும் அந்த அரவிந்தை பிடித்து இழுத்து நிறுத்தி அவன் கன்னத்திலேயே இரண்டு கொடுத்து விட்டு "அவள் என்னவள் டா! ஷி இஸ் மைன்! எனக்கானவள் மட்டும்… இல்லை உன்னோட நட்புக்கு இங்கே இடமில்லை! போ.. தூர போ… இருந்து எங்காவது தூரமாக ஓடிப் போய் விடு!" என்று உரக்க கத்தி விட்டு, யாழினியை தன் கையோடு இழுத்து கொண்டு வர வேண்டும் வேகம் எழுந்தது.
ஆனால்.. அந்த கோபத்தை காட்டும் தருணம் இதுவல்லவே.. இன்று தங்கைக்கான நாள்!! தங்கையின் புதிய கண்டுபிடிப்பு இப்போது அவர்களின் டிஜிட்டல் போர்டில் கால் வைக்கும் இனிய ஒரு தொடக்கம்!!
ஒரு புதிய வியாபாரத்தில் கை கொடுக்க இவர்களோடு தோள் கொடுக்க என்று பல தொழிலதிபர்கள் உள்ளே இருக்கின்றனர்.
அதனோடு கூட, கத்தி தீர்க்கும் போது யாரேனும் வீடியோ எடுத்துவிட்டால்.. வாய்ப்பு ஒன்று கிடைத்துவிட்டால்.. அவ்வளவுதான் மலைப்பாம்பாய் பிடித்து நெருக்கி விழுங்கி ஏப்பம் விடாது, மாறுதலாக அனைத்தையும் கக்கி வைத்து விடும் சமூக வலைத்தளங்களில்!!
பின் அவனது தொழில் வாழ்க்கை இரண்டுமே அதள பாதாளத்தை நோக்கிதான்!! அதற்காக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், "முதலில் பிஸ்னஸை பார்ப்போம் இவள் எங்கே சென்று விடப் போகிறாள்.. பிட்டி கேர்ள்! பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம்!" என்று நினைத்து உள்ளே சென்றான்.
அதுதான் அவனின் முதல் தோல்வி!!
ஆம்.. உறவுகளை காட்டிலும் தொழில் முக்கியம் என்று எப்பொழுது அவன் உணர ஆரம்பித்தானோ, அப்போது அந்த உறவுக்கான முக்கியத்துவத்தை உன்னதத்தை அவன் கொடுக்கவில்லை என்று தானே அர்த்தம்!
பின் அந்த உறவு எப்படி நிலைக்கும்?
அர்வியின் கோபம் அவன் வண்டியின் வேகத்தில் தெரிய எப்பொழுதும் வேகமாக வண்டி ஓட்டினால், 'மெதுவா போட பக்கி!' என்று அவன் பின்னந்தலையில் இரண்டு தட்டு தட்டுவாள். அவன் ஹெல்மெட் மாட்டி இருந்தால் தோளில் வேகமாக இரண்டு அடி போடும் யாழினி.. இன்று அமைதியாக வந்தாள். ஆனால் அந்த வேகம் அவளுக்கு பயம் கொடுக்க.. அவள் இறுக்கி பிடித்து இருந்த அவன் சட்டையின் இறுக்கமே கூறியது அதனை!!
முதலில் அதனை அரவிந்த் உணரவில்லை. அதனை உணர்ந்ததும் அவன் வேகத்தை குறைக்க… யாழினி முகத்தில் மெல்லிய புன்னகை!!
அவளை வீட்டின் முன் இறக்கிவிட்டவன், இவன் வண்டியிலிருந்து இறங்கவில்லை.
ஆக்சிலேட்டரை முறுக்கியப்படியே அவன் வண்டியில் இருக்க.. இவளோ அவன் இறங்கி வரவேண்டும் என்ற பிடிவாதமாய் அருகில் நின்று இருக்க.. இரண்டு பிடிவாதங்களும் ஒன்றை ஒன்று மிஞ்சிக் கொண்டிருந்தன!! ஆனால் உள்ளுக்குள் கெஞ்சிக் கொண்டிருந்தன!!
அதனை இருவரும் உணர்ந்தாற் போல ஒருவரை ஒருவர் ஒரே சமயத்தில் திரும்பி பார்த்து கண்களால் கெஞ்ச… மீண்டும் ஒரு அழகிய புரிதல்!!
"சரி கிளம்பு… ஆனா.. நேரா வீட்டுக்கு தான் போகணும்! வேற எங்கேயும் சுத்த கூடாது!" என்று கண்களால் மிரட்டியே அவனை அனுப்பி வைத்தாள்.
அவளிடம் தலையை தலையை ஆட்டியவன் சென்றது நேராக வீட்டுக்கு அல்ல…!!
எங்கே சென்றான் என்று தெரியாமல் போனது! இரண்டு நாட்களாக அவனை காணாமல் தவித்தாள் யாழினி!
அர்வி எங்கே போனான் என்று யாருக்கும் தெரியவில்லை. விஸ்வநாதன் யாழினிக்கு ஃபோன் செய்து "எங்கே மா அந்த பையன ரெண்டு நாளா காணல.. இப்பதான் கொஞ்சம் ஒழுங்கா திருந்தினானு நினைச்சேன்! மறுபடியும் ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டானா? இவன் எல்லாம் திருந்தவே மாட்டான்! நீ தான் அவனுக்கு ரிஸ்க் எடுத்து பணம் எடுத்து கொடுத்த.. இப்ப பாரு??" என்று புலம்பி தள்ளி விட்டார்.
அந்த புலம்பலுக்கும் கோபத்துக்கும் பின்னே இருந்தது மகனை இன்னும் காணவில்லையே என்று ஒரு தந்தையின் தவிப்பு மட்டுமே!!
யாழினிக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவன் எங்கே என்று தெரிந்தால் அல்லவாசொல்ல முடியும் 'இந்த பக்கி போகும்போது வீட்டுக்கு போகும்ஸநினைச்சது தப்பா போச்சு! நாமளே கொண்டு போய் அவனை வீட்டில விட்டுட்டு வந்து இருக்கலாம். அந்த நிலைமையில் அனுப்புனது தப்பா போச்சு!' என்று ஆயிரமாவது முறையாக தன்னையே நொந்து கொண்டாள்.
"மாமா… இல்ல அவன் பேட்டன் விஷயமா யாரையோ பார்க்க போறேன் சொல்லிட்டு இருந்தான் அன்னைக்கு நைட்… ஒரு வேளை அவர பார்க்க போயிருப்பான் போல…" என்று அரவிந்த்காக பொய் உரைத்தாள்.
"எந்த இடம் எந்த ஊர்னு ஏதாவது சொன்னான மா?"
"பாண்டிச்சேரி பக்கம்னு சொன்னான் மாமா!"
"பாண்டிச்சேரியா?" என்று சற்று குழப்பமும் அதிர்ச்சியும் ஆக கேட்டார் விஸ்வநாதன்.
"ஆமா மாமா அந்த ஆபீஸர் அங்க அடிக்கடி போவாராம். இங்க பார்க்க முடியலன்னு அங்க போய் அவர பாக்குறத சொல்லிட்டு இருந்தான். ஒருவேளை அதுக்கு தான் போயிருப்பான் மாமா.. நீங்க கவலைப்படாதீங்க வந்துடுவான்!"
"ஆனாலும்… அவ்வளவு தூரம் ஏன் மா போனான்?"
"மாமா.. இப்ப எல்லாம் எங்க நேர்மையா எந்த ஒரு விஷயம் செய்ய முடியுது? லஞ்சம் தான் எதிர்பாக்குறாங்க!! அது மாதிரி தான் மாமா இதுவும்.. கவர்மெண்ட் ஆபீஸர்ஸ் தங்களுடைய வேலையை பார்ப்பதற்கு நம்மகிட்ட லஞ்சம் எதிர்பார்க்குறாங்க.. நீங்க கவலைப்படாதீங்க மாமா.. வந்துடுவான்" என்று அவருக்கு ஆறுதல் அளித்தாள்.
விஸ்வநாதனுக்கு ஆறுதல் அளித்து விட்டாள் தான். ஆனால்.. அவனை காணாமல் தவிக்கும் மனதுக்கு யார் ஆறுதல் சொல்வது?
அதைவிட இரண்டு நாட்களாக வேறு எதிலுமே அவளுக்கு நாட்டம் போகவில்லை பள்ளியில் கூட ஏனோதானோ என்று தான் அமர்ந்திருந்தாள். "இந்த கணக்குகளை ப்ராக்டீஸ் பண்ணுங்க!" என்று மாணவர்களுக்கு வேலை கொடுத்து விட்டு அமைதியாக இருந்தவளை மாணவர்களே சற்று யோசனையோடு தான் பார்த்தனர்.
அவள் உயிராய் கருதும் ஆசிரியர் பணி!! அறப்பணி என்று சொல்லும் அளவிற்கு அவள் மனதை நெகிழ வைக்கும் பணி!! அதில் மாணவர்களோ அத்தனை முக்கியமானவர்கள்!! அவர்களையே கண்டுகொள்ளாமல் அர்வியின் இணைப்பில் இரண்டு நாட்களாக அவள் சுற்றுகிறாள் என்றால்… எங்கனம் அதிரதனை கண்டு கொள்வாள்?
அவனும் இரண்டு நாட்களாக ஆவலோடு அவளிடம் பேச முயற்சித்து கொண்டு இருக்கிறான். ஆனால் இவள் பிடி கொடுத்தால் அல்லவா? அவனை கண்டதுமே அபிஷியலாக ஒரு வணக்கத்தை வைத்து விட்டு தள்ளிப் போகிறவளை எல்லோரும் முன்னிலையிலும் என்ன செய்வது? அப்படியும் தனியாக அழைத்து பார்த்து விட்டான்.
அழைக்க வந்த ப்யூனிடம் "எனக்கு முக்கியமான வேலை இருக்கு!" என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாள். இதில் மாலை சிறப்பு வகுப்பு எதுவும் இல்லை என்று சீக்கிரமாகவே சென்று விடுபவளை என்ன சொல்லி தடுத்து நிறுத்துவது என்று புரியாமல் தவித்தான் அதிரதன்.
அரவிந்தை காணாமல் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் அவன் நண்பர்கள் என்று ஒருத்தர் விடாமல் ஃபோன் செய்து கேட்டுக் கொண்டிருந்தாள். சீக்கிரமே பள்ளியில் இருந்து வந்து அவன் அடிக்கடி செல்லும் இடங்களுக்கு எல்லாம் தனியாக வண்டியில் சுற்றி அழைந்து இரவு தான் வீட்டுக்கு சென்றாள். வீட்டில் சொக்கலிங்கமும் மகளுக்கு அதிக வேலை என்று நினைத்து கொண்டார்.
யாழினி இந்த இரண்டு நாள் பாராமுகத்தை தாங்க முடியாமல் தவித்தான் அதிரதன். தான் பெரிய தொழில் அதிபன்! மற்றவர்களை எல்லாம் தன்னுடைய சுட்டு விரலின் சொடுக்கில் அருகில் அழைத்து காரியத்தை முடிப்பவன், இன்று ஏனோ அவளை அது மாதிரி செய்ய முடியாமல் தனக்குள்ளேயே தகித்து இப்பொழுது புகைத்துக் கொண்டிருந்தான் பாக்கெட் பாக்கெடாக சிகரட்டை…
மாடி பால்கனி ஒரு இடத்தில் நில்லாமல் புகைத்துக் கொண்டிருக்கும் அண்ணனை தான் யோசனையோடு பார்த்துக் கொண்டே வந்தாள் ஆர்த்தி. இல்லை இல்லை ஆராத்யா அல்லவா இவள்!
வர்மா குடும்பத்தின் பெண் இளவரசி! இளவரசியாக தான் வளர்ந்தாள். இளவரசியாக தான் கொண்டாடப்பட்டாள். வெளாநாட்டில் தான் படித்தாள். அவளுக்கு நண்பர்கள் கூட அவளது மேல் தட்டு வர்க்கத்தில் மட்டுமே!!
ஒரு நாள் அதிரதன் வந்து "நம் பள்ளிக்கான சாஃப்ட்வேரை வெளியில் கொடுத்தேன். அது சரியாகவில்லை.. நீ வெளிநாட்டில் இதற்காக படித்தவள் தானே! இதை நீ தான் செய்ய வேண்டும்" என்று கட்டளையாக கூறி விட.. இவளும் உடன்ப்பட்டாள்.
ஆறு மாதம் அதில் செய்து பார்த்தும் பல தோல்விகளை சந்தித்தாள். தொடர் தோல்வி அவளை சற்று பயத்தில் பதட்டத்தில் ஆழ்த்தியது. முதலில் அந்த பள்ளிக்கு என்ன தேவை என்பதை கண்டறிவோம் அதற்குப் பின் இதை செய்வோம், என்று யோசித்தவள்.. அண்ணனிடம் சொல்லி அந்த பள்ளியில் தனக்கு ஒரு வேலை வேண்டும், அதன் மூலமாக இந்த சாப்ட்வேர் பணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.
"அப்படி என்றால் சாதாரண ஒரு ஆசிரியராக போ! அப்பொழுதுதான் உன்னால் என்ன தேவை என்பதை பார்க்க முடியும்" என்றதும் அதுபோலவே ஆர்த்தியாக மாறி அப்பள்ளியில் சேர்ந்தாள்.
அண்ணனின் பார்வை அவ்வப்போது யாழினியை சுற்றி வருவது அவளுக்கும் தெரியும்தான். அப்படி ஒன்றும் இல்லை நல்ல எண்ணமும் கிடையாது அதேசமயம் அண்ணன் விரும்பினால் அதை தடை சொல்லும் கெட்ட எண்ணமும் கிடையாது.
'அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம்!' என்று வெளிநாட்டுக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள்.
"நீ இப்படி பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதி தள்ற அளவுக்கு அந்த யாழினி ஒன்றும் அவ்வளவு வொர்த் இல்லை" என்று இகழ்ச்சியாக கூறும் தங்கையை வெறித்துப் பார்த்தான் அதிரதன்.
"அர்விந்தை நீ காதலிச்சியா?" என்றவனின் அதிரடி கேள்வியில் திகைத்து பார்த்தாள் அண்ணனை!!
தொடரும்…
என்ன எங்க போனான் இந்த அர்வி பையன்🥺🥺🥺🥺
ச்சைக் இந்த பிள்ளைய பார்த்தா எரிச்சலா வருது🤮🤮🤮🤮🤮