4
முதல்நாள் இன்னிசை நிகழ்ச்சியை மிக இனிதாக முடித்து அறைக்கு திரும்பி இருந்தாள் வர்த்தினி.
அவள் குரலில் லயித்தவர்களின் அரங்கம் நிறைந்த கரகோஷம், அனைவரின் பாராட்டுக்கள், மாதுரி வெங்கடேஷ் பிரதீபன் பத்மா என்று வரிசையாக அனைவரும் வந்து அவளைப் பாராட்டி விட்டு சென்றாலும் மனதின் ஓரம் அலட்சியமாக தன் விரலை காதில் விட்டு குடைந்த அந்த உருவமே வந்து நின்று அவளை இம்சை செய்தது.
ஏன் அவளுக்கு அது இம்சையாக தெரிந்தது என்று புரியவே இல்லை.. இவ்வளவு பேரின் பாராட்டுகளும் அவனின் அந்த ஒற்றை அலட்சியத்தில் அவளுக்கு நொறுக்கப்பட்டது போன்று இருந்தது. மனதில் எழும் இந்த ஆயாசத்தை போக்க வழி தெரியாமல் குளியலறைக்குள் புகுந்து வெகு நேரம் தன்னை சமாளித்து விட்டு அறைக்குள் வந்தாள் வர்த்தினி.
பின் போன் செய்து தனது வீட்டாருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டாள் ஐஎஸ்டி ரோமிங் அல்லவா.. அப்பொழுது மாதுரி அறைக்குள் நுழைய..
"வர்த்தினி உன்கிட்ட நான் இவ்வளவு பெரிய டேலண்ட் எதிர்பார்க்கவே இல்லை. உன் குரல் சச்ச அ ஆஸம்.. இன்னும் நிறைய இது போல சபாக்களில் பாட என்னுடைய வாழ்த்துக்கள்" என்று அவளை அணைத்து தன்னுடைய பாராட்டை தெரிவித்தார் மாதுரி.
"அக்கா.. தேங்க்ஸ் அக்கா உங்களுடைய வாக்கு பலிக்கனும்... உங்க கைல என்ன மேஜிக் வச்சிருக்கேள். அவ்வளவு அருமையா வாசிக்கிறது" என்று அவரது கைகளைப் பிடித்து பார்த்தாள் வர்த்தினி.
"ஏய்.. என்னை கிண்டல் பண்றியா?" என்று அவர் கேட்க, "பெருமாளே!! நிஜமா தான் சொல்றேன் கா. வாய்விட்டு பேசுற மாதிரி ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு தெளிவா நீங்க வாசித்தேள். என்னால உங்க கைகள் ஆடிய நர்த்தினத்திலிருந்து கண்ணை எடுக்கவே முடியல. அவ்வளவு உயிர்புடன் இருந்தது உங்களுடைய வீணை கச்சேரி'" என்று அவள் உணர்ந்து கூற.
அதைக் கேட்ட மாதுரிக்கு மெல்லிய புன்னகையை மட்டுமே. இதுபோல் பலரின் பாராட்டுக்களை அவர் கேட்டு கடந்து வந்திருந்தவர். அதனால் அவற்றை எல்லாம் பெரிதாக தலையில் வைத்துக் கொள்ளமாட்டார். அதே நேரத்தில் வீணான புறம் கூறுபவர்களையும் கடந்து சென்று விடுவார். அதையே அவளிடமும் போதித்து விட்டு "நான் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்துடறேன். அப்புறம் ரெண்டு பேருமே நேத்து மாதிரி சாப்பிட்டு லைட்டா ஒரு வாக் போயிட்டு வரலாம்" என்று அவர் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டார்.
தன்னை சரிசெய்வதற்காக கண்ணாடி முன்னே அவள் நிற்க அந்த கண்ணாடியில் கூட அவனின் அந்த அலட்சிய பார்வையும் பின்பு அவளிடம் பேசும்போது தெரிந்த கனல் கக்கும் விழிகளும் தெரிய... தலைவார வைத்திருந்த சீப்பை அப்படியே தூரப் போட்டவள்.. 'இவனை என்ன செய்ய? இப்படி வந்து இம்சை படுத்துறானே பெருமாளே!!' என்று இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு யோசித்தவளின் தலைக்குள் பல்பு எரிய..
சட்டென்று அவள் கை பையிலிருந்து எப்பொழுதும் வைத்திருக்கும் ஒரு நோட் பேட்டை எடுத்து, அவசர அவசரமாக அவனை மாதிரியே இருக்கும் ஒரு உருவத்தை அதில் வரைந்தாள். பின்பு தன் கையிலிருக்கும் பேனாவினால் அதில் நங்கு நங்கு என்று அவள் ஆத்திரம் தீரும் வரை குத்தி கிறுக்கி ஒரு வழி ஆக்கினாள் அந்த உருவத்தை. சிறுவயது முதலே இது அவளுடைய ஒரு பழக்கம். அவளை யாரேனும் திட்டினாலோ.. அவதூறு பேசினாலோ அமைதியாகக் கடந்து விடுவாள். ஆனால் அது அவளது மனதை விட்டு சீக்கிரம் இறங்காது. இம்மாதிரியான நேரங்களில் அவர்களை போல ஏதோ ஒரு உருவத்தை வரைந்து அதில் தன் கோபத்தைக் காட்டி தீர்த்துக் கொள்வாள். அதே போல இன்றும் செய்த உடன் தான்
அவளது மனது கொஞ்சம் சாந்தப்பட்டது.
பின் மாதுரி வருமுன் அவசரமாக அந்த நோட் பேடை தனது பைக்குள் வைத்து முடிவிட்டு உணவருந்த செல்ல தயார் ஆகினாள்.
அதேநேரம் அந்த சனிக்கிழமை இரவின் தன் முன்னே இருக்கும் அந்த மஞ்சள் நிற திரவத்தை சிப் சிப்பாக அருந்தியவாறு அமர்ந்திருந்தான் வினய். அவளிடம் அலட்சியமாக நடந்து கொண்டு வந்து விட்டாலும், மேடை இறங்கிய அடுத்த சில கணத்தில் அவனுக்கு அங்கே நிற்க பிடிக்காமல் போய்விட்டது. அருகில் இருந்த ஒருவரிடம் கூறிவிட்டு தன் வேக நடையுடன் அவ் அரங்கை விட்டு வெளியேறி விட்டான்.
இவன் இருப்பான் என்ற நம்பிக்கையில் வந்த மஞ்சவுக்கும் தரணிக்கும் பெருத்த ஏமாற்றம்தான். ஆனால் அங்குள்ளவர்கள் அவன் அவசரமாகக் கிளம்பியதால் தன் பெற்றோரை அனுப்பி வைத்திருக்கிறான் என்று இன்னும் அவனை பாராட்டித் தள்ளினர்.
அதையெல்லாம் கேட்ட மஞ்சு கணவனை பார்த்து முறைக்க.. அவரோ விட்டுவிடுமா என்றவாறு தன் கண்களை மூடி கூறினார்.
அதன்பின் அவருமே அவற்றையெல்லாம் தூரப் போட்டு அரிதாக கிடைக்கும் இந்த நிகழ்வினை கண்டு களிக்க ஆரம்பித்தார்.
எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அவன் மது அருந்துவதை பார்த்துக்கொண்டிருந்த வில்லியம்ஸ்ற்கு சற்று குழப்பம்தான். இம்மாதிரியான இரவுகளில் அங்கே நடக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களை பார்த்தவாறு ஒரு ரசிப்புத் தன்மையுடன் தான் அவன் நடந்து கொள்வான். ஆனால் வினயின் இந்த மாற்றம் வில்லியம்ஸ்க்கு பயத்தை கொடுத்தது. அது வினய் பற்றிய பயம் அல்ல.. அவன் மனதில் உருவாக்க படும் திட்டத்தில் மாட்டப்போகும் அந்த அப்பாவி மனிதர் யாரோ என்று அவரை பற்றியது..
ஒருவித ஆழ்ந்த சிந்தனை உடைய இருந்தாலும் அவன் மனம் முழுவதும் 'ஹவ் டேர் யூ இடியட்.. எனக்கே நீ மேடை நாகரிகத்தைக் கற்றுக் கொடுக்கிறியா?' என்று அவள் மீது கோபம் கனன்று கொண்டே இருந்தது.
வழக்கம்போல அன்றிரவு தன்னுடைய கெஸ்ட் ஹவுஸூக்கு சென்று விட்டான் வினய். ஆனால் இம்முறை தனியாக..
உயர்ரக மதுவின் போதையில் அவன் உறக்க நிலைக்கு செல்ல செல்ல கடைசியாக அவளின் அந்த பேச்சு மட்டுமே அவன் காதில் ஒலித்தது. ஆழ்ந்த உறக்கத்திற்கு அவன் சென்றாலும் மனதில் "உன்னை விடமாட்டேன் பேப்.. ஐ டீச் யூ" என்ற கோபம் இருந்தது.
அங்கே வர்த்தினிக்கும் முதலில் அவனின் அந்த அலட்சியப்போக்கு சிறிது மன வருத்தத்தை அளித்திருந்தாலும் பின்பு அவளது அந்த சிறிய முயற்சியால் அது மனதை விட்டு போக நிம்மதியாக உறங்கினாள் வர்த்தினி.
அவளின் இந்த நிம்மதியான உறக்கம் நீடிக்குமா?
மறுநாள் வெகு நேரம் கழித்து விழித்தவன் இயல்பாகவே தன்னுடைய வேலைகளை முடித்து, அவனது கெஸ்ட் ஹவுஸ் அருகில் இருந்த கடற்கரையில் தனது காலை நேரத்தை செலவிட்டான். பின் மெதுவாக தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வந்தவனுக்கு ஏனோ எதுவும் பிடிக்காமல் போனது. உடனே கிளம்பி தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டான்.
மதிய நேரத்தில் வீட்டிற்கு வந்த மகனை ஆச்சரியமாக பார்த்தார் மஞ்சு. வார இறுதிகளில் வீட்டிலேயே தங்காதவன்.. மதியமே வீட்டுக்கு வர.. அவருக்கு தெரிந்து பல ஆண்டுகளாக வார இறுதி என்றாலே அவனுக்கு கெஸ்ட் ஹவுஸ் வாசம் தான்.
இன்று அதிசயமாக வீட்டிற்கு வந்த வினய்யை விழி விரிய பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அதுவும் ஏதோ யோசனையுடன் கூடிய அவனது முகம் இவருக்கு தொழில் சம்பந்தமாக ஏதாவது இருக்கலாம் என்றே எண்ணினாரே ஒழிய கிஞ்சித்தும் ஒரு பெண்ணை பற்றி தான் தன்னுடைய மகனின் மனது ஆய்வு செய்து கொண்டிருக்கிறது என்பதை அறியவில்லை.
அதை அறிந்திருந்தால் கதையின் போக்கு மாறி இருக்குமோ என்னவோ??
அவன் செய்யும் செயல்களுக்கு விளக்கம் இதுவரை அவன் யாருக்கும் தந்ததே இல்லை. அனைத்திற்கும் பொறுப்பு தானே என்று செருக்கு உண்டு அவனிடம். பெரும்பாலும் தொழில் விவரங்களை தாய்க்கு ஏதும் தெரியாது என்று நினைத்து தந்தையும் மகனும் மட்டுமே உரையாடுவார்கள். மஞ்சுளாவிற்கு தெரிந்தாலும் அவருக்கு தெரிந்த ஒன்றை கூட வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டார். அவனின் அனைத்து தொழில் பிரச்சனைகளையும் அசால்டாக கையாளுவது அவனது சிறப்பே.. எந்த ஒரு தொழிலிலும் பிரச்சினை என்று இதுவரை தந்தையிடம் வந்து நின்றது இல்லை. இவன் தலையை எடுத்த பிறகு முற்று முழுதும் இவனே... ஆக்கமும் அழிவும் அனைத்தும் எதுவாகினும்...
சிறுவயது முதல் அன்னையின் பின்னே கொஞ்சி தெரிந்தவன் தான். அதுவும் ஒற்றை பிள்ளை வேறு.. பின்பு ஒரு வயதுக்குப் பின் வெளிநாட்டு கலாச்சார மோகமும் ஏறிக்கொள்ள முற்றுமுழுதாக அன்னையிடம் இருந்து விலகினான். அதுவும் அவர் அறிவுரை என்று வாயை திறந்தாலே போதும் அவ்விடம் விட்டுப் பறந்து விடுவான்.
ஆதலால் தன் மகனின் இந்த யோசனை முகம் அவருக்கு சற்று குழப்பத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் மகனின் மீது உள்ள நம்பிக்கை.. தொழில்முறையில் அவன் ஆளுமை அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே அதனால் அமைதியாகவே அவனைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
தன் அறைக்கு வந்தவன் சிறிது நேரம் படுத்து இருந்தாலும் மனது ஏதோ சிந்தனையில் சிக்கி இருந்தது. மாலை போல இறங்கி கீழே வந்தான். அப்போதுதான் அவர்கள் கார்டனில் மஞ்சுளாவும் தரணீஸ்வரனும் அமர்ந்து பேசிக்கொண்டே தேநீர் அருந்தி கொண்டிருந்தனர்.
"மஞ்சு நேத்து அந்த பல்ராம் செட்டி பொண்ண பார்த்தியா? இந்த பொண்ணு ரொம்ப அழகா இருந்தா. நம்ம வினய்க்கு மேட்சாக இருக்கும். தொழிலில் நம்ம அளவு இல்லையென்றாலும் கூட இங்கே பிறந்து வளர்ந்த பொண்ணு அதனால் இந்த பழக்கவழக்கம் அவளுக்கு நல்லா தெரியும். அந்த பொண்ண பார்த்து பேசுவோமா?" என்று தரணி கேட்க..
முகம் அஷ்ட கோணலானது மஞ்சுவிற்கு. "ஏற்கனவே பாதி நேரம் நீங்களும் உங்கள் பிள்ளையும் வீட்டுல தஸ்ஸூ புஸ்ஸூனு இங்கிலீஷ்ல தான் பேசுறீங்க
பத்தாததுக்கு இங்கே வளர்ந்த அந்த பெண்ணையும் கொண்டு வரணுமா? அவ வேற தெலுங்கு.. ஆகமொத்தம் வீட்டில தேன்மதுரத்தமிழ் வந்து என் காதுல பாய போறதில்லை.. வேண்டவே வேண்டாம்" என்று மஞ்சு மறுத்துக் கொண்டிருந்தார்.
"உனக்கு தேன்மதுரத்தமிழ் வேணும்னா தமிழ்நாட்டிலிருந்து நாம் பொண்ண கூட்டிட்டு வரணும். அதுவும் இப்ப எல்லாம் அங்க கூட தமிழ் இல்லமா தங்கிலீஷ் தான். என்ன ஓகேவா?" என்று கேட்க..
"தமிழ் பேசுற பொண்ணுங்க எல்லாம் இடத்தில் எல்லாம் இருக்காங்க. தமிழ்நாட்டில மட்டும் சொல்லிவிட முடியாது. நாம ரெண்டு பேரும் பேசி என்ன பிரயோஜனம். உங்க பையனுக்கு அந்த நினைப்பு இருக்கனுமே.. இன்னும் அஞ்சு மாசத்துல அவனுக்கு முப்பது பொறக்கப் போகுது. அதுக்குள்ள அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தா பிடி கொடுக்க மாட்டேன் என்கிறான்" என்று அவர் வருத்தத்துடன் கூற...
"நீ வருத்தப்படாத.. அவனுக்கும் நடக்கிறது கண்டிப்பா உரிய நேரத்தில் நடந்தே தான் ஆகும். நீ புலம்புறதால உரிய நேரத்துக்கு முன்னாடியோ இல்லை அதற்கு பின்னால் நடக்க போறது கிடையாது. டேக் இட் ஈசி மஞ்சு.." என்று மனைவியின் கைகளைத் தனது கைகளில் பொதித்து அவரும் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறிக் கொண்டிருக்க.. அவர்கள் பேச்சின் நாயகன் வினய் அப்போது அங்கே வந்து சேர்ந்தான்.
"என்ன ஒரு ரொமான்ஸ் இருக்கு" என்று கூறிக்கொண்டே தாய் தந்தையின் எதிரே அமர..
அவனின் பேச்சில் சட்டென்று கணவரிடமிருந்து கையை இழுத்துக் கொண்டார் மஞ்சு. அதை பார்த்த அவன் கடகடவென்று சிரித்தான்.
"இதுதான் மாம்.. நான் சொல்லுறது. உங்க ஹஸ்பண்ட் உங்க வீட்டு அதுவும் கார்டன்ல நீங்க இருக்கீங்க.. இதுல எனக்காக நீங்க ஏன் உங்களோட சந்தோஷத்தைக் கெடுத்துக்கனும். இங்கே உங்களுக்காக வாழுங்க மாம்.. அடுத்தவங்களுக்காக வாழாதீங்க. அதனாலதான் உங்க கல்சர் எனக்கு அவ்வளவா பிடிக்கிறது இல்ல. இங்க பாருங்க பக்கத்திலேயே பிள்ளைங்க இருந்தாலும் வொய்வ் ஹஸ்பண்டுக்கு கிஸ் பண்றதும்.. ஹஸ்பெண்டு வொய்ஃபுக்கு கிஸ் பண்றது எல்லாம் தவறே கிடையாது" என்று வெளிநாட்டு கலாச்சாரத்தை அவன் புட்டு புட்டு வைத்து கொண்டிருக்க அதில் கடுப்பான மஞ்சுளா.. "வேணா வினய்.. நான் ஏற்கனவே மூடு அப்செட்ல இருக்கேன். நீ வேற ஏதாவது பேசாதே" என்று கண்கள் கலங்க அவர் கூறினார்.
பெரும்பாலும் அன்னையின் மனதை நோகாமல் கடந்த விடுவான் தனயன். இன்று அவர் கலங்கிய கண்களை பார்த்ததும் அவனுக்கு ஒரு மாதிரியாக போக எழுந்து அவர் அருகே அமர்ந்து கொண்டான்.
"மாம்.. ஜஸ்ட் ஃபார் ஃபன். இதெல்லாம் போய் நீங்க ரொம்ப சீரியஸா எடுத்துக்காதீங்க. எதுக்கு உங்களுக்கு மூடு அப்செட். நான் உங்க மூட மாற்றவா?" என்று கேட்க..
'அப்படி என்ன செய்து என் மூடை நீ மாற்றி விடுவாய்.. முடிந்தால் மாற்று பார்ப்போம்' என்று கண்களில் சவாலுடன் மகனைப் பார்த்தார் மஞ்சு.
அதை சரியாக படித்தவன் "நாம இன்னைக்கு நேத்து நடந்த அந்த வாட் இஸ் தட்... பாரம்பரிய.. இல்லை இல்லை பண்பாட்டு... ஓ காட் எனக்கு வாய்க்குள் நுழையல.. அந்த ஃபங்ஷனுக்கு தமிழ் கிளப்பில் இருந்து ஏற்பாடு பண்ணி இருந்தாங்க இல்லையா அதுக்கு போவோமா?" என்று கேட்டான்.
"என்னது!!" என்று தாயும் தந்தையும் ஒருசேர அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து கூறினர் பேசியது தங்கள் மகன் தானா என்று..
கண்களில் சிரிப்புடன் அவர்களை பார்த்தவன் "இப்போ உங்க மூடு கண்டிப்பா மாறும் மாம்.. ஷல் வீ?" என்று கேட்க..
அவசரஅவசரமாக அருகில் அமர்ந்திருந்த கணவனை கைகளில் நறுக்கென்று கிள்ளினார் மஞ்சுளா. மனைவியின் எதிர்பாரா இந்த தாக்குதலில் அவர் ஆவென்று கத்த அப்போ நிஜம்தான் என்று தனக்குள் அவர் உறுதிப்படுத்திக்கொள்ள.. மகனோ தாய் தந்தையின் இந்த வினோத செயல்களை பார்த்து வெடித்து சிரித்தான்.
"நெஜமாதான் சொல்றியா வினய்?" மஞ்சுளா கேட்க...
"ஆர் யூ ஷ்யூர் வினய்?" என்று அதையே ஆங்கிலத்தில் தரணீஸ்வரன் கேட்க...
"ஆமா.. இவரு மேஜர் சுந்தர்ராஜன் தமிழ்ல கேட்டதை இங்கிலீஷ்ல சொல்லலைன்னா இவருக்கு தூக்கம் வராது" கணவனை பார்த்து அவர் முனுமுனுக்க... யார் அந்த மேஜர் சுந்தரராஜன் என்று தீவிர யோசனையில் இறங்கியிருந்தார் தரணீஸ்வரன்.
அடுத்து அரை மணி நேரத்தில் தரணீஸ்வரனின் குடும்பம் தமிழ்நாடு பாரம்பரிய பண்பாட்டு விழா நடைபெறும் அரங்கிற்கு முன் நின்றனர்.
இன்று மாதுரியின் நிகழ்ச்சி முதலில் நடைபெற சற்று நேரம் பொறுத்து வர்த்தினியின் கச்சேரி இருந்தது. இவர்கள் உள்ளே நுழைய அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் சற்று ஆச்சரியமே. ஆனாலும் இவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து முதல் இருக்கையில் அமர வைத்தனர்.
அப்போது மாதுரியின் வீணை கச்சேரி பாதி முடிந்து இருந்தது. அதில் கவனம் செலுத்தினர் தரணியும் மஞ்சுளாவும்.
வழக்கம் போல தன்னுடைய மொபைலில் கவனம் செலுத்தினான் வினய். அரை மணி நேரத்தில் அவரது நிகழ்ச்சி முடிவுற.. அடுத்து தொகுப்பாளினி அடுத்து வருவோரின் பெயரை சொல்லி நகர இவை எதுவுமே அவனுக்கு காதில் விழவில்லை.
நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா!!
என்று காதலில் குழைந்து வந்த அந்த குரலில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் வினய்.
அடர் பச்சை நிற பனாரஸ் பட்டில் மிதமான ஒப்பனையுடன் அழகே உருவாக அமர்ந்து தன்னுடைய வசீகரக் குரலால் அரங்கத்தை கட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள் ஹம்சவர்த்தினி.
அவள் அழகா? அவளது பாடல் அழகா? என்று ஒரு பட்டிமன்றமே வைக்கும் அளவிற்கு இருந்தது அரங்கத்தில் உள்ளவர்களின் நிலை..
முதலில் அவனுக்கு அந்த குரலோ அவளோ ரசிக்கவில்லை. ஆனால் அவளிடம் ஏதேனும் வம்பு புரியவேண்டும் என்று அவனது கோபம் கனன்ற மனம் கூற... அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வினய்.
அரங்கத்தில் இருந்தவர்களை சுற்றியே அவளது பார்வை சென்று கொண்டிருக்க ஒரு கட்டத்தில் இருவரின் பார்வைகளும் ஒன்றையொன்று சந்தித்தன. அந்த ஷண நேரத்தை கூட வீணடிக்காமல் அவளைப்பார்த்து தன் சுட்டு விரலை காதருகே கொண்டு சென்றான். அவளோ அதை ஒரு வித முறைப்புடன் பார்க்க... மீண்டும் வேண்டாமா என்று தலையசைத்து கேட்டான், சட்டென்று அவள் பார்வையை திருப்பிக்கொண்டாள். சிறிது நேரத்திலேயே அவளது பார்வை சுழன்று மீண்டும் அவனிடமே நிலைக்கே.. அதே விளையாட்டை விரலை காதின் அருகே கொண்டு செல்வதும் பின்பு எடுப்பதுமாக அவளை நிலை தடுமாற வைத்துக்கொண்டிருந்தான். இம்மாதிரியான சிறு விளையாட்டுகளில் அவளது கவனத்தை சிதறச் செய்து லயம் தப்பி பாடலை சொதப்புவாள் என்று அவன் எதிர்பார்க்க.. அவளோ இவனின் விளையாட்டுகளில் முகம் எக்கச்சக்கமாக சிவந்தாலும், அது எல்லாம் அமைதிப்படுத்திக் கொண்டு ஒரு வழியாக தன் கடைசி பாடலை அவள் பாடினாள்..
கன்னத்தில் முத்தமிட்டால்..
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி!!
என்று அவள் உருகிப் பாட.. அச்சமயம் இருவர் கண்களும் மோத.. தன் நெற்றியை சுருக்கி ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அப்படியா என்று இவன் அபிநயம் பிடிக்க.. அதில் அவள் முகம் சிவந்து கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
இதற்குமேல் இவனைப் பார்க்க கூடாது என்று முடிவெடுத்தவள். மிக வேகமாக அந்த பாட்டு நிறைவுசெய்து மேடையிலிருந்து உள்ளே சென்று விட்டாள். அவளின் அந்த ஓட்டம் அவனுக்கு வெகு சுவாரசியமாக இருந்தது.
அப்போது வில்லியம்ஸிடமிருந்து அவனுக்கு போன் வர.. அங்கே இருந்த சத்தத்தில் அவனால் கேட்க முடியாமல் போக.. கையில் அலைபேசியில் " ஹலோ.. வில்.. வில்..கேன் யூ ஹீயர் மீ?" என்று கூறிக்கொண்டே அரங்கத்திலிருந்து சற்று தள்ளி வந்து நின்று பேசினான்.
இவன் பேசி முடித்து விட்டு வர.. சற்று தூரத்தில் பச்சை நிற புடவையில் ஒரு பெண் தெரிய "ஆகா அது அவள் தான்" என்று உள்மனது அடித்து கூற.. அடி மீது அடி வைத்து அவளை நெருங்கினான்.
சட்டென்று அவளை பின்னாலிருந்து இடது கையால் அவளை அணைத்து வலது கையால் அவள் முகம் திருப்பி.. அவளது இதழைகளை தன் இதழ்களால் சிறை செய்தவன்,சற்று பெருத்த அவளது மேல் உதட்டை கண்டு அதை தனியாக தன்னுடைய இதழ்களுக்குள் வைத்து சுவைத்தவன்.
"நீ பாடுனது கரெக்ட் பேப்..
உள்ளம் ஸ்காட்ச் அடிச்ச மாதிரி தான் இருக்கு.. ஆனால் அது கன்னத்தில் இல்லை.. இதழில்" என்றவன் சடுதியில் அவளை விட்டு மறைந்து விட்டான். வர்த்தினியும் நடந்ததை முழுதாக கிரகிக்க முடியாமல் அதிர்ச்சியில் வாய் பிளந்து விழி விரிய சிலையென நின்றிருந்தாள்.