சுத்தமான காற்று ஈர மண்ணின் வாசனையும் ஹீதர் பூக்களின் நறுமணத்தையும் சேர்த்து கொண்டு வந்தது.இளநீல வண்ண வானம் அன்று முழு நாளும் நல்ல வானிலையாக இருக்கும் என்பதை காட்டியது.பழுப்பு நிற குதிரையில் அமர்ந்திருந்தான் ஸ்ரீவத்சா.அது வில்சன் அவனுக்கு தனிப்பட்ட உபயோகித்திற்காக கொடுத்தது.அதன் மேனி சூரிய ஒளியில் பளபளத்தது.அவன் அருகே குதிரை சவாரியில் திறமைமிக்க வில்சன் அவனின் உயர்தர குதிரையை வழிநடத்திக் கொண்டு வந்தான்.
இது அவர்களின் வழக்கம். ஸ்ரீயும் அவனின் அன்னையும் அங்கு வந்து சேர்ந்ததில் இருந்தே இருவரும் சனிக்கிழமை தோறும் பரந்து விரிந்திருந்த எஸ்டேட்டை சுற்றிப் பார்த்தபடி சாதாரண விஷயத்திலிருந்து முக்கியமானது வரை அலசி ஆராய்வர்.இன்று வடக்கு எல்லையை நோக்கித் தான் அவர்களின் பயணம் நடந்தது.இரண்டு நாட்களுக்கு முன் ஜார்ஜ் கூறிய வேலியை பார்வையிட்டு மேலே என்ன செய்வது என்று பேசலாம் என்று வில்சன் கூறியிருந்தான்.
குதிரையிலிருந்து இறங்கி உடைந்துப் போயிருந்த வேலியோடு சிறிது தூரம் நடந்து சென்றனர் இருவரும்.
"ஜார்ஜ் சொன்னது சரிதான் ஸ்ரீ!இந்த வாட்டி வேலியை நல்ல அழுத்தமா போடனும்"என்று வில்சன் வேலி கல்லை தொட்டபடி கூற,
"போடலாம் மாமா!ஆனா இந்த தடவை செலவை பாக்காம ஆள் உயரத்துக்கு கல் வேலி போடலாம்னு இருக்கேன் ஸ்ட்ராங்கா இருக்கும் நீங்க என்ன சொல்றீங்க?"
"ஓ தட்ஸ் எ ப்ரில்லியன்ட் ஐடியா ஸ்ரீ!அது சரியா இருக்கும்!நம்மளோடத நாம தான் ஜாக்கிரதை பண்ணிக்கனும். அந்த ஸ்டெர்லிங் பத்தி நீ என்ன நினைக்கற ஸ்ரீ?"என்று வில்சன் வினவ,
"விசாரிச்ச வரைக்கும் ஹி இஸ் எ ப்யூர் கிரிமினல்!அவனால நமக்கு தொல்லை தான் ஆனா ஐ வில் ஹேண்டில் ஹிம்.. நீங்க கவலைப்படாம இருங்க மாமா!"என்று கூறியவனை பெருமை பொங்க பார்த்தான் வில்சன் தன் வளர்ப்பு என்ற பெருமையோடு.
கோட்டைக்கு திரும்பி வரும்போது விவகாரத்திலிருந்து குடும்ப விஷயத்திற்கு மாறி இருந்தது பேச்சு,
"ஸ்ரீ எமி ரொம்ப மாறிட்டா இல்ல?"என்று வில்சன் கேட்க ஸ்ரீயின் தோரணை கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத வண்ணம் விறைத்தது.
"இல்லையே மாமா அப்படி எதுவும் சேன்ஜ் எனக்கு தெரியல!"
"இல்ல ஸ்ரீ முன்னாடி எல்லாம் எமி எவ்ளோ சாஃப்ட் இப்ப ரொம்ப கோபப்பட்றா, எடுத்து எரிஞ்சு பேசறா துள்சி மாதிரி மத்தவங்க மனசு நோகக் கூடாதுன்னு இருந்த எமி இப்ப பேசறது எல்லாம் குத்தல் பேச்சுத்தான்...அவ மனசுல எந்த மாற்றமும் இல்ல ஆனா பேச்சு மட்டும் ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல! நிஜத்தை சொல்லு ஸ்ரீ எனி லவர்ஸ் ஃபைட்?"என்று வில்சன் நேரடியாகவே கேட்டு விட முகம் மாறாமல் இருக்க அரும்பாடு பட்டான் ஸ்ரீ.
"சே சே அப்படி எல்லாம் எதுவும் இல்லை மாமா!வி ஆர் பெஸ்ட் பிரண்ட்ஸ் அவ்ளோதான் அதுக்கு மேல எதுவும் இல்லை"கூறிய பொய் வாயோடு மனதையும் கசக்க செய்தது.உற்று பார்த்தானே தவிர வில்சன் மேலே எதையும் கேட்கவில்லை. ஸ்ரீயின் கண்களில் இருந்த வலி அவன் சொல்லாமலே அவனுக்கு புரிந்தது. மீதி பயணம் முழுவதும் அமைதியே நிலவியது அவர்களுக்கு இடையில்.
மதியம் வில்சன் மற்றும் ஸ்ரீ உணவருந்த துளசியும் கமலாவும் அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தனர்.அப்போது கையில் ஒரு காதிதத்தோடு அங்கே வந்தார் எலிசபெத்.
"மாம் சாப்பிட கூப்பிட்டா வேலையிருக்கு லேட் சாப்பிட்றேன்னு சொன்னீங்களாமே! நேரத்துக்கு சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் அப்படி என்ன வேலை உங்களுக்கு"என்று வில்சன் அக்கறை கலந்த கண்டிப்போடு கேட்க,
"இதை தான் இத்தனை நேரம் தேடினேன் மை சன்!இன்விடேஷன் கொடுத்து ஒன் மன்த் ஆயிடுச்சு எங்க வெச்சேன்னு மறந்திட்டேன்!இப்ப பார்த்தா இன்னிக்கி ஈவ்னிங் தான் பார்ட்டி! எல்லாரும் அஞ்சு மணிக்கு ரெடி ஆயிடுங்க "என்று அவர் கூற அழைப்பை எடுத்துப் பார்த்த வில்சன்,
"ஓ எட்மண்ட் வீட்டிலையா! அதுக்கு எதுக்கு எல்லோரும் போனும்?உங்க கிராண்ட் சன்னை கூட்டிட்டு நீங்க போயிட்டு வாங்க போதும்!"என்று அவன் கூறிவிட,
"நோ நோ எட்மண்ட் அம்மா என் பெஸ்ட் பிரண்ட்!அவங்க வீட்டு பார்ட்டிக்கு எல்லாரும் போகனும் "
"மாம் எட்மண்ட் அம்மா எப்பவோ பரலோகம் போயிட்டாங்களே!நாங்க வரலேன்னு அவங்களுக்கு என்ன தெரியவா போகுது "என்று அவன் கேலியாகக் கேட்க,
"யூ நாட்டி!அவ இல்லேன்னாலும் அவங்க எல்லோரும் என் மேல மதிப்பு வச்சிருக்காங்க! கண்டிப்பா நாம எல்லாரும் போயே ஆகணும்"என்று எலிசபெத் தீர்மானமாக கூறிவிட அன்னையின் விருப்பத்தை கெடுக்க வேண்டாம் என்று வில்சன் நினைக்க எல்லோரும் அங்கே செல்வது என்று தீர்மானம் ஆனது.
அவர்கள் இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த எட்மண்ட்டின் அரண்மனை இருந்தது.அவர்கள் வந்தப் போது முதலே பார்ட்டி களைகட்ட தொடங்கியிருந்தது.அங்கிருந்தவர்களில் அதிகபட்ச மனிதர்கள் நவநாகரீக உடைகளில் இருக்க சிலர் பழைய கால உடைகளில் கண்களை பறித்தனர்.
வில்சன் மற்றும் ஸ்ரீ குளிர்பானத்தோடு ஆண்கள் இருந்த பகுதியில் அமர்ந்துவிட எலிசபெத்தை அவரின் வயதினவரோடு விட்ட துளசி தனக்கு நெருங்கி தோழிகள் வந்திருக்க அவர்களோடு சென்று அமர்ந்துக் கொண்டாள்.
அங்கிருந்த ஆண்களை விட தமிழ் மகனின் கம்பீரத்தோடு ஆங்கில நாகரீக தோற்றம் கொண்டு இருந்த ஸ்ரீயின் அழகும் ஆளுமையும் அங்கிருந்த இளம் கன்னியரை மயங்க செய்ய சிலர் தைரியமாக நெருங்க முயல நாகரீகமாக மறுத்து விட்டான் அவன்.
பக்கத்தில் அமர்ந்தவரோடு எஸ்டேட் நடைமுறைகளைப் பற்றி அவன் விவாதித்துக் கொண்டிருந்த போது பேரழகியான இளம் பெண் ஒருவள் அவனை நெருங்கினாள்.நீல நிற பார்ட்டி கவுன் அவளின் அழகை வெளிச்சமிட்டு காட்ட செந்நிற கூந்தல் அவளின் வெண்மை நிறத்தை அதிகப்படுத்த வானில் இருந்து இறங்கி வந்த தேவதையோ என்று எண்ணும்படி இருந்த அந்த பெண் பார்ட்டி நடத்தும் கோடிஸ்வரனின் கடைசி மகள் ஆலீவியா.
"மே ஐ ஹாவ் த பிளஷர்!"என்று அவள் அவனை நடனத்திற்கு அழைக்க,
"ஐம் அஃப்ரைட்! ரொம்ப நாளாச்சு பிராக்டீஸ் விட்டுப் போச்சு!"
"நல்லதா போச்சு! உங்களுக்கு சொல்லித்தர எனக்கு ஒரு கோல்டன் சான்ஸ்!"என்றவளை கைபிடித்து ஹாலின் நடுவே அழைத்து சென்றான் ஸ்ரீ.
இசைக்கேற்ப அவனின் அழகிய நடனம் அங்கிருந்தோர் கவனத்தை கவர்ந்தது.
"இங்க இருக்கிற மத்த ஆண்கள் போல நீங்க இல்ல ஸ்ரீ! நீங்க பணத்தையோ நிலத்தையோ பத்தி பேசல... எதார்த்தமான உங்க குணம் வேற யாருக்கும் வராது!"என்று அவள் கூற பழக்கப்பட்ட மரியாதை புன்னகை புரிந்தான் ஸ்ரீ.கண்ணியமான விலகலில் அவன் கைதேர்ந்தவன்.நடனம் முடிந்தும் அலீவியா அவனிடமிருந்து விலகவில்லை. யாருமற்ற இடத்திற்கு அவன் கைபிடித்து அழைத்து சென்றவள்,
"ஸ்ரீ!யூ ஆர் சோ பர்ஃபுல்! லார்ட் வில்சன் ராஜ்ஜியத்தை நீங்க எவ்ளோ திறமையோடு நிர்வகிக்கறீங்க!எங்க அப்பா எப்பவும் சொல்வார் உங்க மதிப்பு இங்க இருக்கிற ஆண்கள் அத்தனை பேரை சேர்த்தாலும் ஈடாகாது...ஒரு பெண் தனக்கானவன் கிட்ட எதிர்பார்க்கிற எல்லா குணமும் உங்ககிட்ட இருக்கு "என்று நிறுத்தியவள் கண்களில் அதிக எதிர்ப்பார்ப்போடு,
"நாம திருமணம் செஞ்சுக்கலாம் ஸ்ரீ! நிச்சயம் நாம பிரமிக்க வைக்கிற ஜோடியாக இருப்போம்"
சத்தியமாக அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஒருகணம் அவன் மூச்சே நின்று போனது.அழகும் செல்வமும் நிறைந்தவள் அந்த பெண்.கனவில் கூட அவனுக்கு கிடைக்க முடியாத வாழ்க்கை தான்.ஆனால் மிகுந்த எதிர்பார்ப்போடு அவன் பதிலுக்காக காத்திருக்கும் அவள் மேல் அவனுக்கு எந்த உணர்வும் வரவில்லை என்பதே உண்மை.
"சாரி மிஸ் ஆலீவியா!உங்க ப்ரபோசல் என்னை கவுரவப்படுத்துகிறது ஆனா அதை ஒத்துக்க முடியாத நிலைமைல இருக்கேன்!உங்களுக்கு கொடுக்க என் மனசு எங்கிட்ட இல்ல!"
அவன் பேச்சில் ஏமாற்றம் அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய நல்ல குடும்பத்து பெண் ஆனதால் ஒரிரு நொடிகளில் அதை சமாளித்துக் கொண்டு விட்டவள்,
"ஹோ ஐம் சாரி மிஸ்டர் ஸ்ரீவத்சா நான் கொஞ்சம் முன்னோக்கி போயிட்டேன்"
வில்சனிடம் கூறிவிட்டு அவன் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டான்.அந்த கோரிக்கை அவனின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.அவனின் மதிப்பை உணர்த்தும் கோரிக்கை அது.ஆனால் அதே சமயம் அவனால் எமியை தவிர வேறு யாரையும் நெருங்கவோ நினைக்கவோ முடியாது என்று அவனுக்கே அடித்துப் புரிய வைத்த நொடிகள்.இளம் பிராயத்திலிருந்து அவனை நேசித்த கனிவு மிகுந்த எமிலியா எப்படி அவன் உள்ளே நிறைந்திருக்கிறாளோ அதே எமிலியா அவன் மனதை குத்தி கிழித்து அவமானத்தால் அவனை துடிக்க வைக்கும் இந்த எமிலியாவும் அவன் நெஞ்சை ஆக்ரமித்திருந்தாள்.இந்த பிணைப்பு சங்கிலியிருந்து அவனுக்கு என்றுமே விடுதலை என்பதே இல்லை.
மாதத்தின் ஒவ்வொரு இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் எஸ்டேட்டின் பெண்கள் நலனுக்காக துளசி நிறுவியிருந்த சங்கத்தின் கூட்டம்.சங்கத்தின் கணக்கு வழக்கெல்லாம் ஸ்ரீவத்சா தான் பார்த்துக் கொள்கிறான்.அன்றும் அது சம்பந்தமாக துளசியிடம் கேட்பதற்காக கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றான்.கோட்டையின் வெளியே இருந்த சிறிய கொட்டடி தான் அவர்களின் சங்க கூட்டம் நடக்குமிடம்.
அவன் கோப்புகளோடு அங்கே சென்ற நேரம் உள்ளேயிருந்து ஒரு ஆணின் காட்டமான குரல் கேட்க பதட்டத்தோடு உள்ளே நுழைந்தான்.அங்கே அவர்கள் எஸ்டேட்டில் வேலை செய்யும் மார்டின்,
"எனக்கு இவளை பிடிக்கவேயில்லை! நான் பக்கத்து கிராமத்து பொண்ணை தான் காதலிச்சேன்!என்னை பெத்தவங்க வற்புறுத்திலால தான் இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!என் காதலியை மறந்து என்னால இவளோட வாழ முடியல"
கணவனின் பேச்சில் அந்த பெண் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு அழுதாள்.
மார்டினின் பேச்சு ஸ்ரீவத்சாவிற்கு ஓங்கி அடித்தது போல இருந்தது.அவன் பேச்சு இவனின் மனதின் எதிரொலிப்பாக இருந்தது.இவனும் தானே நிறைவேறா காதலை மனதில் வைத்து அவதிப்படுகிறான்.
"நாங்க பிரிஞ்சுடுறோம்...எங்க வீட்ல பேசி நீங்கதான் உதவனும்"என்று அவன் துளசியிடம் கேட்டுக் கொள்ள அங்கே நின்ற ஸ்ரீயிடம் நீ ஏதேனும் கூறேன் என்று கண்களால் கேட்டுக் கொண்டாள் துளசி.
"மார்டின் நீ விரும்பினது தப்புன்னு சொல்லல ஆனா அது உன் இறந்தகாலம்!இறந்த காலத்தையே பிடிவாதமா நினைச்சு உன் நிகழ்காலமான உன் மனைவியை தண்டிக்கிறது நியாயமே கிடையாது!நீ விரும்பினே உன்னை பெத்தவங்க சம்மதிக்காம இவங்களை உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க சரி ஆனா இதுல உன் மனைவியோட தவறு என்ன?நீயே எல்லாம்னு நம்பி வந்த பொண்ணை முடிஞ்சு போன காதலுக்காக ஒதுக்கறது எப்படி சரியாகும்"
ஸ்ரீயின் பேச்சில் அழுதழுது வாடி போயிருந்த தன் மனைவியை பார்த்தான் மார்டின்.திருமணம் ஆனதிலிருந்து தன் ஒதுக்கத்தை பொருட்படுத்தாமல் தன்னையே நிழலாக தொடரும் அவளின் உன்னதமான காதல் அவனுக்கு இப்போது தான் புரியத் தொடங்கியது.
"மார்டின் உனக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்கு ஒன்னு போனதையே நினைச்சு இப்ப இருக்கிற வாழ்க்கையை கெடுத்துக்கறது இல்ல போனதை தூக்கி எரிஞ்சிட்டு உன் மனைவியோட சந்தோஷமா வாழ்றது இரண்டு ஒன்னை நீயே தேர்ந்தெடு!"என்று ஸ்ரீ கூறவும் சில நிமிடம் மவுனமாக இருந்த மார்டின்,
"லூனா வா போகலாம் இனி நல்ல கணவனா இருக்க கண்டிப்பா முயற்சிப்பேன் "என்று மனைவியை தோளோடு அணைத்தவன்,
"உங்களுக்கு ரொம்ப நன்றி ஸ்ரீ சர்!"என்று அவனுக்கு நன்றி உடைத்துவிட்டு மனைவியோடு சென்று விட்டான்.
'ஊருக்கு தான் உபதேசம் என்கில்லையடி கண்ணே என்று அவனுக்கு மட்டும் தான் உன் பேச்சு பொறுந்துமா உனக்கு இல்லையா நீ மட்டும் இல்லாது போன எமியின் காதலை நினைத்து இன்னும் ஏன் உன் வாழ்வை பாலைவனமாக வைத்திருக்கிறாய் 'என்று அவன் மனசாட்சி சாட,
'என்னால எமியை மறக்க முடியலையே!எந்த பெண்ணாலையாவது என் மனதை மாற்ற முடியுமா?... நிச்சயம் முடியாது!அந்த சக்தி இந்த உலகத்துல இருக்குற எந்த பெண்ணுக்கும் இல்ல'
முடியும் என்று நிரூபித்து காட்டவே ஏந்தெழிலால் ஒருவள்
அவன் இருக்குமிடம் நோக்கி தன் பயணத்தை துவக்கப் போவதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.