Share:
Notifications
Clear all

மோகங்களில் 19

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

மோகங்களில்.. 19

 

துருவ் “வீட்டுக்கு போவோமா?” என்று கேட்டதும் அனுவின் முகம் சுருங்கி போனது.

 

“ஏன் அனுமா?” என்று காதோரம் அவளது முடி கற்றைகளை ஒதுக்கி விட்டு மென்மையாக அவன் கேட்க.. 

 

“இங்க இருக்கிற வரைக்கும் தான் உங்ககிட்ட நான் உரிமையா இருக்க முடியும். அங்க போனா… உங்கள.. உங்கள.. யாரோ போல பார்க்க கஷ்டமா இருக்கு சார்” என்று மனதை மறைக்க முடியாமல் அந்த சின்ன பெண் கண்கள் கலங்க கூற, அவளின் முகத்தை இரு கைகளாலும் தாங்கி மூடிய இமைகளின் மீது அழுந்த முத்தமிட்டவன், “கொஞ்ச நாளைக்கு தான் மா.. இந்த மழை இப்பதான் கொஞ்சம் முடிஞ்சிருக்கு. நான் வேற ஒரு கேர் டேக்கரை பாக்குற வரைக்கும் நீ அம்மா கூட இருக்கிறது நல்லது டா” என்றான்.

 

“என்னது நான் உங்க அம்மா கூட இருந்தா நல்லதா? அப்போ அங்க போன உடனே மறுபடியும்… நீங்க..” முகத்தை அவள் திருப்பிக் கொள்ள…

 

“எனக்கு இப்போ உன்னோட ஹெல்த் ரொம்ப ரொம்ப முக்கியம்டா!! நீனும் நம்மோட கிட்ஸூம் என்கிட்ட பத்திரமா வரணும் இல்லையா? ப்ளீஸ் அனுமா!!” என்று அவள் தாடையை பற்றி கொஞ்சி கெஞ்சி ஒரு வழியாக மலை இறக்க.. அவனோடு வீட்டிற்கு சென்றாள்.

 

இவர்கள் வரும் வழியிலேயே உணவினை முடித்துவிட்டு தான் வந்தனர். சசிகலாவும் திருமலையும் தங்கள் அறைக்குள் தூங்க சென்று விட்டனர்.

 

வீட்டில் வேலையாட்களுமே வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு அருகில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் தான் உறக்கம். அதனால் அந்த நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.

 

அனுவின் அறை வரை வந்தவன் அவள் நெற்றியில் மென்மையாக தன் உதடுகளை ஒற்றி எடுத்தவன், “குட் நைட்!” என்று திரும்ப.. சட்டென்று அவன் சட்டை காலரை பிடித்து இடது கையால் இழுக்க.. அவன் முகம் அவள் முகத்துக்கு வெகு அருகினில்.. 

 

கற்றை மீசையும்.. முரட்டு இதழ்களும்.. அதற்கு கீழே முடி அடர்ந்த தாடையும் அவள் கண்களுக்கு விருந்தாக…!!

 

“என்னடா..” என்று அவள் கண்களை பார்த்து அத்துணை மென்மையாக துருவ் கேட்க.. நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் பாவை.

 

அந்தப் பார்வையில் எதையோ அறிந்தவன்.. புரிந்தவன் ஒரு பெருமூச்சை விட்டு அவளது கைகளை தளர்த்திவிட்டு மெல்ல அறை வாசலை நோக்கி செல்ல, இவளுக்கு முகமே விழுந்தே விட்டது!

 

ஒரு பெண்ணால் இதற்கு மேல் எப்படி கேட்பது, என்னுடன் இரவு தங்கு என்று? எந்த உரிமையில் கேட்பது? என்று அவள் கலங்கி தவித்து நிற்க.. கதவு சாத்தப்படும் சத்தத்தில் இன்னும் நொறுங்கி போனாள் மனதளவில் பேதை.

 

கண்கள் கண்ணீரால் நிறைய அவை இமை தாண்டி இடது கண்ணோரம் கண்ணீர் வழிய.. அந்த கண்ணீர் அவள் கன்னத்தை தாண்டும் முன் துடைக்கப்பட்டது வனப்பான விரல்களால்..

 

ஸ்பரிசமே யார் என்று அவளுக்கு உணர்த்த.. அவசரமாக அவள் கண்களை திறந்து பார்க்க எதிரே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அடக்கப்பட்ட சிரிப்போடு நின்றிருந்தான் துருவ் வல்லப்!!

 

“வா..” என்று அவன் கைகளை விரித்து கண்களால் அழைக்க..

 

அதற்குள் சிரிப்பும் அழுகையுமாக அடைக்கலம் ஆனாள் மாது.

 

“இப்போ ஹாப்பி அனுமா? வா தூங்கலாம்.. வா..” என்று அவளை அழைத்துக்கொண்டு படுக்கையில் படுக்க வைத்தவன், அவனும் சாய்வாக படுத்துக் கொண்டு அவளுக்கு தட்டிக் கொடுத்தான்.

 

அவனை பார்த்தப்படி படுத்திருந்தாள் அனு. அவனது என்ன மாதிரியான நேசம் என்று அவளுக்கு உடம்பு மட்டுமல்ல மனமே சிலிர்த்தது!

 

அவனது இந்தக் நேசத்தின் ஈர்ப்பைக் கண்டு ஸ்தம்பித்தாள் பாவை. ஆக்டோபஸ் போல எல்லா பக்கமும் அவளை வளைத்த அவனது நேசத்தின் வேகத்தில் மூச்சு திணறியது அனுவுக்கு. இதுவரை அன்பு நேசம் என்ற உணர்வே இல்லாமல் இருந்தவனின் இந்த காதல் அவளை பெரும் ஆழியாய் சுழன்று சுழற்ற.. அதற்குள் விரும்பியே தன்னை தொலைக்க நினைத்தாள் அனு.

 

இதுவரை யாரிடமும் நேசம் கொள்ளாத ஆணவன் மனது தன் மீது நேசம் கொண்டதை நினைத்து கர்வம் கொண்டாள் பெண்ணாய் அனுப்ரியா.

 

திகட்ட திகட்ட அவன் கொடுக்கும் அந்த காதலில் அவளும் கரைந்து விடத்தான் துடித்தாள். அவன் காட்டுமளவு நேசம் நம்மிடம் அவன் மீது இருக்கிறதா? என்று பயந்தாள் என்று கூட சொல்லலாம்.

 

“என்னை அப்புறம் சைட் அடிக்கலாம்! இப்ப தூங்கு.. கொஞ்ச நேரம் போனால் தூக்கம் வரலைன்னு சிணுங்குவ.. அப்புறம்.. என் மீது குறை சொல்ல கூடாது.. ம்ம்ம்” என்று கிறக்கமாக காதில் ஒலித்த அவனது குரலில் உதடுகள் புன்னகைக்க கண்ணிமைகள் மூடின சிப்பிகளாய்..

 

இப்படி துருவ்வின் நேசத்தை நினைத்து அவளுக்கு கொள்ளை கொள்ளையாய் அவனை பிடித்திருந்தாலும் அதையும் தாண்டி ஏதோ ஒன்று அவளை இம்சித்தது.. அவளின் மனதை போட்டு பிசைந்தது.. என்னவென்று சொல்லத் தெரியாத ஒன்று அவள் முன் நின்று பயமுறுத்தியது!!

 

அது என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து அவளுக்கு பயத்தோடு தலைவலியும் வந்தது தான் மிச்சம்.

 

இதுவரை யாருமே அவளுக்கே அவளுக்கென்று நிலைத்ததில்லை!! பெற்ற அன்னை.. தந்தை.. வளர்த்த ஆயா என்று இவள் மேல் பாச வைக்க ஆளில்லை!! அப்படி வைத்தவர்களும் பாதியிலே இவளை விட்டு சென்று விட்டார்கள்.

 

கல்லூரியில் பயிலும் போது இவளிடம் காதல் சொல்லியவர்களும் உண்டு! ஆனால் அப்போதெல்லாம் படிப்பு மட்டும் முக்கியம் அதனோடு இப்படி தன்னை நெருங்குபவர்களை கண்டால் இவளே அஞ்சி ஓடினாள். எங்கே அவர்களும் பாதியில் விட்டு சென்று விடுவார்களோ என்று பயந்து!

 

ஆனால் இந்த பூமர் அங்கிள் மேல் எப்படி இப்படி ஒரு அன்பு.. நேசம்.. பிறந்தது அவளுக்கு தெரியவில்லை. 

என்ன சொல்வது இயற்கையின் ரசவாதத்தை.. விதியின் விளையாட்டை..!!

 

மொத்தத்தில் அனு துருவ் மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறாள்.

தன் உயிருக்கு மேலாக அவனை நேசிக்கிறாள்.. அவள் அன்பு வைத்தவர்களின் இழப்பில் இருந்து அவளால் மீண்டு வாழ முடிந்தது. ஆனால் துருவி இல்லாமல்.. ச்சே.. அந்த நினைப்பே அவளை கொன்றது.

 

“இல்லை.. இல்லை.. வல்லபா.. இல்லாமல் என்னால் வாழ முடியாது! வாழ்வே முடியாது!! நிச்சயம் செத்துருவேன்.. உணர்வோடு கலந்துவிட்ட அவன் இல்லாத உயிர்ப்பில்லாத வாழ்வு எதற்கு? உடல் மட்டும் எதற்கு? அதையும் உணர்வோடு சென்று விடு என்று விரட்டி விடுவேன்.. ஆம் மொத்தமாக அனுப்பி விடுவேன்” என்று மனதில் நினைத்தை எல்லாம் வாய் வழியாகவே தூக்கத்திலேயே உளறிக் கொண்டிருந்தாள் அனு.

 

அவளின் உணர்வுகளை மிகத் தெளிவாக கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு மனதில் சொல்ல முடிய உணர்வு பிரவாகம் எடுத்தது! தான் காதலிக்கும் பெண்ணை விட.. தன்னை காதலிக்கும் பெண் விசேஷம் அல்லவா? உயர்வு அல்லவா?! ஆணாய் அதில் கர்வம் கொண்டவன் மேலும் அவள் தூக்கத்தில் உளராத படி, உளறிக் கொண்டிருக்கும் அவளின் இதழ்களோடு தன் இதழ்களை கோர்த்தான்.

 

 “ம்ம்ம்.. வல்லபா…” கிறக்கத்தோடு அவளும் அவனை அனுமதிக்க ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளுக்கு ஆழ்ந்த முத்தத்தை விடாமல் கொடுத்துக் கொண்டிருந்தான் துருவ். அதன்பின் மெல்ல விடுவித்தான்.

 

அனுவை பார்த்தபடி படுத்திருந்த துருவ்வின் மனதில் விடை தெரியாத பல கேள்விகள்! பல குழப்பங்கள்! எதையும் யோசிக்காமல் அவளை அணைத்தபடியே படுத்திருந்தான்.

 

அதிகாலையிலேயே எழுந்து அவன் அறைக்கு சென்று விட்டான் யாருக்கும் சந்தேகம் வராதபடி..

 

அடுத்து வந்த இரு நாட்களும் அனுவுக்கு சென்னை நகரமே நரகமா தான் தோன்றியது. அவள் ஆசை கொண்ட ஆணவன் தள்ளியே இருந்ததால்..

 

அவன் நினைத்தால் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்து அவளை தன் கையில் கொண்டு வர முடியும்! ஆனால் அதுவோ தான் கொண்டு நேசத்திற்கு அழகு இல்லை என்று உணர்ந்தவன், அந்த அழகியை தன்னவளாய் கொண்டு வர செய்ய வேண்டியவைகளை நேற்று இரவே சுகனிடம் கூறியிருந்தான்.

 

துருவ் பேசப் பேச சுகனின் உணர்வுகள் சொல்ல முடியாத விளங்க முடியாத தூரத்திற்கு சென்றது. ஆனாலும் தன் பாஸ் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவன், அடுத்தடுத்து அவன் கட்டளைகளை ஏற்று படைத்தளபதியாய் தனது சிப்பாய்களை பயன்படுத்தி அனைத்து தேவையான விவரங்களை எல்லாம் சேகரித்தான்.

 

மழை ஓரளவு விட்டு விட.. இரண்டு நாட்களாக சரியாக முகம் கொடுத்து பேசவில்லை துருவ் அவளிடம். இரவும் அவன் வெகு நேரத்திற்கு பிறகே வர சுல் தாங்கிய பெண்ணவள் வெகு நேரம் விழிக்க முடியாமல் உறங்கி விடுவாள். அவளை வந்து பார்த்துவிட்டு அவன் சென்றதை அவள் அறியவில்லை. 

 

“சிறிது நாட்களாக தன்னை தவிர்க்கிறான்? ஏன்? என்னானது? ஒரு வேளை அப்சரா..??” என்று மனதில் கோபமும் பயமும் சேர்ந்தே வர அவள் அவளாகவே இல்லை.

 

அன்று காலையிலேயே “தலை சுற்றுகிறது ஆன்ட்டி?” என்று அவள் சோஃபாவில் அமர்ந்து விட.. சசிகலாவும் அவளுக்கு அருகில் அமர்ந்து “என்னமா செய்து?” என்று பயத்தோடு விசாரித்துக் கொண்டிருந்தார்.

 

அலுவலகம் கிளம்பி வந்தவனும் பதறி “என்னாச்சு?” என்று அம்மாவிடம் கேட்க “தலை சுத்துதுனு சொன்னா டா” என்றவுடன் “ம்மா.. நீங்க உங்க ரூமில் இருக்கும் பிபி அப்பாரட்டஸை எடுத்துட்டு வாங்க” என்றவன் அவளை முறைத்துக்கொண்டே சோஃபாவில் தற்று தள்ளி அமர.. அனுவும் அவனை கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

“கொழுப்பு டி உனக்கு! மூஞ்சிய திருப்புற!! இருக்கு உனக்கு” என்று அடி குரலில் அவன் பேச..

 

திரும்பி அவனை ஒரு முறை மேல் கீழாக பார்த்து “போடா.. பூமர் அங்கிள்” என்று அவள் உதட்டை சுழித்தாள்.

 

சுழித்து அந்த உதட்டை இழுத்து கடிக்கும் வேகம் வந்தது அவனுக்கு. ஆனால் அதற்குள் சசிகலா வந்துவிட “வச்சிக்கிறேன் டி உன்னை அப்புறம்” என்று உறுமி கொண்டே அவளுடைய பிபியை பரிசோதித்தான்.

 

அதுவோ உயர் உயர் ரத்த அழுத்தத்தை காட்ட.. அதனை கண்டு பயந்தவன், கடுப்போடு அவளை பார்த்து “வயித்துல குழந்தை இருக்குன்னு உனக்கு அறிவு இருக்கா இல்லையா? இப்படி பிபியை ஏத்தி வச்சிருக்க?” என்று உரிமையுடன் திட்டியவன், அதற்கு பிறகு தான் அன்னை இருப்பதை உணர்ந்து தன் கோப வேகத்தை குறைத்தான்.

 

“நீ ஏன்டா இதுக்கு இவ்ளோ கோபப்பட்டு அந்த பொண்ண திட்டுற? அந்த பொண்ணு ஏற்கனவே தலை சுத்தி பாவமா இருக்கா? கர்ப காலத்துல இதெல்லாம் சகஜம்டா” என்று அனுவின் கையை ஆதூரமாக பற்றிக் கொண்டார்.

 

“பின்ன என்னமா நம்மள நம்பி அனுப்பி வச்சிருக்கான் இவ புருஷன். இவளுக்கு ஏதாவதுன்னா நாளைக்கு நம்மை தானே சொல்லுவாங்க!” என்றான் அன்னையிடம், பின் அனுவை திரும்பி பார்த்து..

 

“அனேகமா உன் புருஷன் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கனு நினைக்கிறேன்.. அவன் காலையில் கிளம்பிட்டான்! சரியா?? எப்படியும் இன்னும் ஒன் ஹவர்ல ரீச் ஆயிடுவான். நீனும் உன்னோட பொட்டி படுக்கைய கட்டு” என்றதும் அவள் முகம் பிரகாசிக்க “நிஜமாவா? நான் பேக் பண்ண வா?” என்றாள்.

 

“பாத்தியாடா இந்த பொண்ண.. ஒரு வாரமா நாம தாங்கினாலும் புருஷன் வரறான்னு கேட்டது மூஞ்சி எப்படி 100 வாட்ஸ் பல்பு போட்டது மாதிரி பிரகாசிக்குது.. பாரேன்!” என்று சசிகலா அவளை வார.. “போங்க ஆன்ட்டி” என்று சிணுங்கினாள்.

 

“அம்மா.. அவ ஹஸ்பண்ட் ஏர்போட்டுக்கு வந்ததும்.. நா இங்க இங்கே கூட்டிட்டு வரேன்” என்றான்.

 

‘இல்லாத புருஷனை எங்கிருந்து கூட்டி வருவாய்?’ என்பது போல் நக்கலாக அவள் பார்க்க..

 

“அனு நீயும் வருகிறாயா ஏர்போட்டுக்கு?” என்று அடுத்த நூலை விட்டான். அவன் எதற்கு சொல்கிறான் என்று புரிந்த அனுவும் “நானும் வரேன்.. நானும் வரேன்..” என்று சந்தோஷமாக ஆர்பரித்தாள்.

 

முறையாக திருமலையிடமும் சசிகலாவிடமும் இத்தனை நாள் பார்த்துக் கொண்டதற்கு நன்றி சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு விடை பெற்றாள்.

 

“அருமையான பொண்ணு! ஆனா என்ன நமக்கு கொடுத்து வைக்கல.. இந்த மாதிரி நீயும் அப்சரா கூட வாழ்ந்து இருந்தால்.. எப்படி இருக்கும்?” என்று செல்லும் அனுவை பார்த்துக் கொண்டே மகனை கடிந்து கொண்டார் சசிகலா.

 

“கூடிய சீக்கிரம் உங்கள் மகன் பொண்டாட்டி புள்ள குட்டினு குடும்பமாய் இருப்பான்! கவலைப்படாதீங்க..!” என்று பூடகமாக சொல்லிவிட்டு கிளம்ப.. அப்போதுதான் சசிகலாவின் மனது குளிர்ந்தது.

 

பெற்றவர் அல்லவா மகனை ஒத்தையாக பார்க்க யாருக்கு தான் பிடிக்கும்??

 

அவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் தான் அதாவது பீச் ஹவுஸூக்கு வந்தவுடன் தான் அவளுக்கு அத்தனை ஆத்ம திருப்தி.

 

இன்னும் கேர் டேக்கரை கண்டுபிடிக்கவில்லை தான். ஆனாலும் தன் வீட்டில் அங்கே இருந்தால் இவள் மனதை போட்டு அலட்டிக்கொண்டு மீண்டும் பிபியை ஏற்றிக் கொள்வாள் என்று தெரிந்து வேற வழியின்றி இங்கே அழைத்து வந்து விட்டான் துருவ்.

 

வந்தவள் முறையாக சசிகலாவிற்கு ஃபோன் செய்து இங்கே வந்து விட்டதாக மகிழ்ச்சியோடு கூறினாள்.

 

அவரோ கணவரிடம் “பரவால்ல இந்த பொண்ணு போனதும் அப்படியே மறந்து விடாமல் வீட்டுக்கு போய் சேர்ந்ததும் ஃபோன் பண்ணி சொல்லுது! ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு” என்று சிலாகித்தார்.

 

உண்மை தெரிந்ததும் இதே பாசம் அவள் மீது இருக்குமா என்று தெரியாது??

 

அந்த மாதம் சசிகலா மகன் குடும்பமாக வாழ வேண்டும் என்று அதுவும் சீக்கிரமே அவர்களுக்கு பேர குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று எண்ணி 51 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு போடும் செலவை ஏற்றிருந்தார்.

 

தொடர் மழையின் காரணமாக அந்த மாதம் இது முடியாமல் போனது. அந்த கோயில் தர்மகர்த்தாவும் சசிகலாவிடம் பேசி “மேடம் இந்த மாசம் அட மழை.. அதனால எங்களால விழா நடத்த முடியும்னு தெரியல.. அதனால தை மாசம் ஆரம்பிச்சதும் செய்வோம்! தையில செஞ்சா நல்லது தானே!” என்றதும் சரி என்றார் சசிகலா.

 

‘இன்னும் ரெண்டு மாசம் போகணுமா?’ என்று பெருமூச்சு விட்டவர், அப்சரா நம்பருக்கு மீண்டும் அழைத்து பார்க்க.. அதுவோ ஸ்விட்ச் ஆஃப் இல் இருந்தது.

 

“இந்த பொண்ண எப்படி தான் பிடிக்குறதுன்னு தெரியல.. அவன் தான் கிறுக்குத்தனமா சுத்தறானா இது அவனுக்கு மேல கிறுக்கு புடிச்சு சுத்துது.. இந்த ரெண்டு கிறுக்கையும் சேர்த்து வைக்கறதுக்குள்ள, எனக்கு போதும் போதுன்னு ஆகுது” என்றவர் அப்சராவின் பெற்றோர் நம்பருக்கு முயன்றார்.

 

அதுவுமே தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருந்தது. “அந்த பொண்ணுக்கு தான் அறிவில்லை இவ அப்பா அம்மாவாவது கொஞ்சம் எடுத்து சொன்னா தான் என்னவாம்? கொஞ்சம் கூட பொண்ணு வாழ்க்கையில் அக்கறையே இல்லை. இவங்களுக்கு எல்லாம் கல்யாணம் குடும்பம் தாம்பத்தியம் எல்லாம் விளையாட்டா போச்சு” என்று கணவனிடம் அங்கலாய்க்க மட்டுமே அவரால் முடிந்தது.

 

அதன் கூட அவ்வப்போது சுல் தாங்கிய பெரிய வயிற்றுடன் அந்த வீட்டில் நடமாடிய அனுவின் எண்ணமும் வந்து போனது. இப்படி ஒரு பெண் நம்ம வீட்டுல இருந்தா எப்படி இருக்கும்? மகனின் மனைவியாக.. பேரக் குழந்தைகளின் தாயாக.. என்று மனதில் அவற்றையெல்லாம் உருவகப்படுத்தி மகிழ்ந்து கொண்டார்.

 

அடுத்து சென்ற இரண்டு மாதமும் துருவ்வின் அன்பிலும் அவ்வப்போது அதட்டலிலும்.. அனுவின் கெஞ்சலிலும் கொஞ்சலிலும் குறும்பிலும்.. சுகனின் எதிர்பார்ப்பில்லாத பாசத்திலும் நன்றாகவே கழிந்தது.

 

நாட்கள் செல்ல செல்ல வேற ஒரு கேர்‌ டேக்கர் ஏற்படுத்திக் கொள்வதை தவிர்த்து விட்டு தாரதியிடம் செக் அப் செல்லும் போது, ஒரு அனுபவம் உள்ள செவிலியரை இவளோடு இருக்க பணித்தான் காலையில்.. 

 

அதேபோல இரவிலும் எந்நேரம் கூப்பிட்டாலும் வரவேண்டும் என்று வேறொரு செவிலியரை அவன் வீட்டிலேயே ஏற்பாடு செய்து வைத்திருந்தான். இப்படியாக இவர்கள் நாட்கள் சென்றது.

 

அவ்வப்போது இவள் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை சசிகலாவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். அவரும் அவ்வளவு அன்பாக அவளிடம் பேசுவார். ஆனால் நேரில் பார்க்க கேட்டால்.. இவள் ஏதாவது சாக்கு சொல்லி சமாளித்து விடுவாள். ‘நானே ஒரு நாள் உங்கள வந்து பார்க்கிறேன் ஆன்ட்டி!” என்றவள், சொன்னது போல ஒருநாள் கால் டாக்ஸி புக் செய்து, ஒரு நாள் முழுக்க சசிகலாவோடு இருந்துவிட்டு தான் வந்தாள்.

 

“நீ வந்தது மகிழ்ச்சியாக இருக்கு அனு. பாரு கொஞ்ச நாள் பாத்துக்கிட்டதுக்காக இவ்வளவு அன்பா பாசமா என் மேல இருக்க.. ஆனா என் மருமகள் ஃபோன் பண்ணா கூட பார்க்க மாட்டேங்குறா” என்று புலம்பினார்.

 

துருவ் அப்சரா இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டாலும் அதை சசிக்காமல் ஏற்க முடியாமல் அப்சராவை இன்னும் தன் மருமகளாக எண்ணிக் கொண்டிருந்தார் சசிகலா.

 

அனு மாமியாரைப் பற்றியும் அவர் கேட்க.. இவளுக்கு அவர் கேட்கும் நேரம் எல்லாம் சாவித்ரி அம்மா நினைவு வந்து செல்லும்.. “சாவி மா ஒரு ஃபோனாவது பண்ணி இருக்கலாம். எதுவுமே பண்ண மாட்டேங்குது இந்த கிழவி.. பார்க்கும் போது இருக்கு” என்று மனதில் திட்டிக் கொள்வாள். சசிகலாவிடம் வேறு வழியின்றி சமாளிப்பாள்.

 

அவளுக்கு மூச்சு முட்டும்! இவள் யாரென்றே தெரியாமல் இருக்கும் போதே இவரை சமாளிக்கிறது இவ்வளவு கஷ்டமா இருக்கே.. உண்மையெல்லாம் தெரிஞ்சா எப்படி சமாளிப்போம்? என நினைக்கவே பயந்து பயந்து வந்தது அனுவுக்கு. 

 

அதை ஒருமுறை துருவிடமும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கூற அவனும் அவள் கன்னம் கிள்ளி சிரித்து வைத்தவன், “இப்போதைக்கு இந்த டென்ஷன் எல்லாம் இந்த அழகு மண்டைல ஏத்திக்காத அனுமா! முதல டெலிவரி நல்லபடி முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம். ஏன் நான் பார்த்துக்க மாட்டேனா? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான்.

 

“உங்க மீது நம்பிக்கை இல்லாமல்தான் இப்படி இருக்கிறேனா?” என்று இருவரும் நிலையையும் சுட்டிக்காட்டி சிரித்தாள் கன்னங்கள் குழைய…

 

அவள் நெற்றியில் விரல் வைத்து கோடாய் கீழே இறக்கி கூர்மையான மூக்கைத் தாண்டி செழுமையான கன்னங்களை கடந்து இதழ்கள் வந்தது நிறுத்தினான் துருவ். 

 

இதழ்களை நிமிண்டி கிள்ளி என்று சேட்டை செய்தவன் அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவள் இதழ் மீது இதழ் பதிக்க.. கண்களை மூடி கிறங்கினாள் அனு!

 

இவர்களுக்குள் நேசம் முளைத்த பின் முதன் முதலில் கொடுத்த முத்தத்திற்கு அவள் காட்டிய அதே பாவம்.. அதே கிறக்கமும் இன்னும் அவளிடம் ஒவ்வொரு முறை முத்தமிடும் போது கண்டு மனதில் கர்வம் கொண்டான் ஆணவன்!!

 

அந்த உணர்வுக் குவியல்களை தாங்க முடியாமல்.. நாணம் மிக அவனது மார்போடு ஒன்றி கொண்டாள் மாது. அவளைப் போல அதே உணர்வில் அவனும் ஆட்பட்டிருப்பது, கற்றை மீசை உரச அவளது காதில் அவன் கூப்பிடும் “அனுமா..” என்று தாபம் மிகுந்த வார்த்தையில் தெரிந்தது.

 

அவனுக்கு பதில் கூறாமல் அவனுள் இன்னும் புதைந்து கொண்டாள் அனு. அவனது தோள் தடவிய கரங்கள் அவனை இறுக்கிக் கொள்ள.. அதில் அவனும் புரிந்து கொண்டான் அவளது உணர்வுகளை. அவளது கன்னத்தில் சூடாக முத்தங்களை அழுத்தமாக கொடுத்த துருவ் தன் தாபங்களை அதன் வழியே கடத்தினான்.

 

அவன் பேசாத பாவத்தை அவனது முத்தங்கள் ஒவ்வொன்றும் உணர்த்தி கொண்டிருக்க.. அனுவும் அவனோடு ஒன்றாக கலக்க துடித்தாள். உரிமை இல்லாமல் உறவாடாதே என்று அறிவு எச்சரிக்க.. அவளோ மனதுக்கும் அறிவுக்கும் இடையே கடந்து அல்லாடினாள்.

 

எப்பொழுதுமே அறிவு மனமும் எதிரெதிர் துருவங்கள் தானே? ஆனால் துருவோடு மையல் கொண்ட அனுவுக்கு இரண்டுமே இப்பொழுது சதிராட.. தன் நகக்கண்ணை அவனது முதுகில் வலிக்க பதித்தாள் அனு.

 

அதில் சட்டென்று சுதாரித்தான் துருவ். அவள் உணர்ச்சியை தூண்டிவிட்டு கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. ஒன்பதாவது மாதம் பிறந்த நிலையில் அவளை கஷ்டப்படுத்த அவனுக்கு மனம் வரவில்லை.

 

என்று இருந்தாலும் அனு இனி அவனுடையவள் தான்!!

 

“காலம் நமக்கு விரித்து இருக்கு அனுமா..” என்று மெல்லிய குரலில் கன்னங்களை இதழ்களால் உரசியவன், அவளை அணைத்து கொண்டே உறங்கினான் நிம்மதியாக..

 

அந்த நிம்மதி பறிபோகும் காலமும் வந்தது..!


   
Quote
(@srd-rathi)
Member
Joined: 6 months ago
Messages: 11
 

Unmai veliya vara pogutha 


   
Jiya Janavi reacted
ReplyQuote
(@gowri)
Member
Joined: 6 months ago
Messages: 48
 

அதானே, சந்தோசமா இருந்தா பிடிக்காதே ரைட்டர் உங்களுக்கு.....

அச்சோ இப்பவே பக்கு பக்குனு இருக்கே


   
Jiya Janavi reacted
ReplyQuote
Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

@srd-rathi yes.. yes... 🥰🥰🥰


   
ReplyQuote
Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

@gowri  ha .. ha... Nalla irukkuala dear 😜😜😜


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top