அரன் 4

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 6 months ago
Messages: 207
Thread starter  

ஆருயிர் 4

 

 

தாயும் தந்தையும் தன்னை நம்பிடாமல் இருக்க தாயுமானவளாய் இங்கே தன்னை நம்பி பணத்தைக் கொடுத்திருந்த தன் தோழியை தான் கண்ணீர் முட்ட பார்த்திருந்தான் அரவிந்த்…

 

தன்னை அணைந்திருந்த நிலையிலேயே அவனின் உள்ளத்தை கண்டு கொண்டவள், "ஹே.. ரிலாக்ஸ் அர்வி!" என்று அவனை அந்த வங்கியில் இருந்து தள்ளி இருக்கும் கேண்டினுக்கு அழைத்து வந்திருந்தாள். இருவருக்கும் டீ.. வடை.. போண்டா சொல்லிவிட்டு அவன் அருகில் அமர்ந்திருந்தாள் யாழினி.

 

இன்னும் அவள் கொடுத்த இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை அவன்! "முட்டை போண்டா வேணாமா உனக்கு?" என்று சிரிப்புடன் ஒரு கையில் டீயையும் மறுக்கையில் போண்டாவையும் மாறி மாறி சுவைத்துக் குடித்துக் கொண்டிருந்தவளை விழிகள் கலங்க உதட்டை கடித்து இமை தட்டாமல் பார்த்திருந்தான் அரவிந்த்.

 

"இப்படியே பார்த்து பார்த்து என்னை 10 கிலோ குறைய வச்சுடாதடா!! ஹலோ தம்பி.. என்ன அஞ்சு லட்சம் பணத்தை எடுத்து உன் கையில கொடுத்த உடனே அப்படியே என்னை தெய்வமா உயரே வச்சு தினமும் பூ போட்டு பூஜை பண்ணிட்டு போயிடாத ராசா… மாச மாசம் இதுக்கு ஈஎம்ஐ நீ தான் கட்டணும்!! ஞாபகம் இருக்கட்டும்!!" என்றதும் பெருமூச்சு எடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் "உனக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது! இவ்வளவு நாள் நான் கஷ்டப்பட்டதை பார்த்தவ, இதை முன்னாடியே செய்ய வேண்டியது தானே! இதுவே லேட்டா செஞ்சிருக்க.. அதுக்கு வேணா ரெண்டு கொட்டு மட்டும் பார்சல் பண்றேன்" என்றாள் அவளுக்கு குறையாத நக்கலோடு!!

 

அன்று இருவரும் ஒன்றாக செல்வதை பார்த்த அதிரதன் அதன்பின் இங்கே பள்ளி பக்கம் வரவே இல்லை. இன்று அந்த வங்கியில் தன் டிஜிட்டல் ஸ்கூல் விஷயமாக பேசுவதற்காக வந்தவன் இருவரையும் பார்த்து முதலில் யோசனையோடு புருவம் சுருக்கியவன், அடுத்து அரவிந்தனின் அணைப்பில் அவளை கண்டு புருவம் அதிர்ச்சியில் உயர்ந்தது!!

 

இத்தனைக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியனாக இருப்பவனுக்கு இந்த தொடுதல் எல்லாம் சாதாரண நட்பின் அடிப்படையில் என்று புரிந்தாலும்.. அதையும் தாண்டி ஏனோ ஒரு மனம் யாழினியிடம் அதிக உரிமை கொண்டு யாருக்கும் அவளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தது. தன் விஷயமாக அந்த வங்கியின் மேனேஜரை பார்த்தவன் எதார்த்தமாக கேட்பது போல யாழினி பற்றி கேட்டான்.

 

 அதுவும் அவள் தங்கள் பள்ளியில் தான் பணிபுரிகிற ஆசிரியை என்று கூற.. வங்கி மேனேஜரும் தன் வேலைக்கு உண்மையாக இல்லாமல் எவ்வளவு பெரிய வேலியபுள் கஷ்டமரிடம் என்று அவனுக்கு உண்மையாக இருந்து அனைத்து உண்மைகளையும் கூறினார்.

 

அதாவது நண்பனுக்கு தொழில் தொடங்க வேண்டும் என்று இவள் பர்சனல் லோன் எடுத்ததாக கூறியிருக்க.. அந்த நண்பன் என்ற வார்த்தையில் தான் சற்று நிதானமானான் அதிரதன். இல்லையெனில் அதிரடியாக எதுவும் செய்திருப்பான்.

 

அடுத்த ஒரு வாரத்தில் தன் வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் அறையை நோட்டமிட்டவன், கோதாவரி போட்டிருந்த தட்டு முட்டு சாமான்களை எல்லாம் அப்புறப்படுத்தி அந்த இடத்தை தனக்கு ஏற்றவாறு தயார்படுத்தியிருந்தான் அரவிந்த்.

 

அவன் டிஜிட்டல் வேலைக்கு தேவையான கணினி போன்ற பொருட்களை வாங்கி செட் செய்தான். அதற்கு முன்னமே இதற்குத் தேவையானவை பற்றி அவன் லிஸ்ட் போட்டு வைத்திருந்ததான். அதில் எது மிகவும் அத்தியாவசிய தேவையோ அதை மட்டும் முதலில் பார்த்து பார்த்து வாங்கினான். பத்து நாட்களில் அனைத்தையும் செட் செய்து விட்டான் அரவிந்த்.

 

யாழினி பணம் கொடுத்த அன்றே தந்தையிடம் வந்து காட்டி கூறியவன் "என் நண்பி போல யாரு மச்சான்.. அவள் ட்ரண்டை எல்லாம் மாத்தி வச்சா.." என்று தந்தைக்கு முன்னாலே வெறும் நட்பு பாடலாக பாடி அவரை வெறுப்பேற்றி இருந்தான்.

 

யாழினி செய்தத்தை முதலில் நம்ப முடியாமல் திகைத்த விஸ்வநாதன்..

அடுத்து ஃபோனை போட்டு யாழினியை திட்டியிருந்தார். "கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு மா நீ! உனக்கு இதெல்லாம் தேவையா? அவனால கட்ட முடியலன்னா நீ என்ன பண்ணுவ.. எப்படி இப்படி தூக்கி கொடுத்திருக்க.. ப்ரண்டு தான் ஆனா அதுக்கு ஒரு அளவு வேண்டாம்?" என்றவர் நிறுத்தாமல் பேச..

 

"மாமா.. மாமா.." என்று அவருக்கு சமாதானம் சொல்ல வந்தவளை பேசவே விடவில்லை விஸ்வநாதன்.

 

"முதல்ல அவன் மேல நம்பிக்கை வையுங்க மாமா! பணம் என்ன மாமா பணம்? இன்னைக்கு வரும் நாளைக்கு போகும்! அவன் நல்லா வந்தா என் கல்யாணத்துக்கு இதைவிட நிறைய தர மாட்டானா என்ன? அதெல்லாம் தருவான்!" என்றதும் அவளின் அந்த நம்பிக்கை கண்டு வியந்து போனார் விஸ்வநாதன். இதை ஏன் நாம் நம் மகனின் மீது வைக்கவில்லை என்று கேள்வியோடு!!

 

மல்லிகாவிடவும் சொக்கலிங்கிடமும் கூறிவிட்டு தான் யாழினி இந்த லோனையே அவள் போட்டது. மல்லிகை முதலில் முணுமுணுத்தாலும் பின்பு அமைதியாக விட்டார். "நம் அரவிந்த் தானே.." சுப்ரமணியம் இல்லாத இவ்வளவு நாளில் அவர்களுக்கு ஏதாவது என்றால் முதலில் நிற்பது அரவிந்த் தான்.. 

 

ஆனால் சுப்பிரமணியம் தான் சான்பிரான்சிஸ்கோவில் இருந்த குளிரையும் மீறி கொதித்துக் கொண்டிருந்தான். அதுவும் தங்கையிடம் அவ்வளவு விவாதம்!! "ஏன் அவனுக்கு அவ்வளவு பணம் கொடுத்த? உனக்கு இதெல்லாம் தேவையா?" என்று ஏகப்பட்ட அறிவுரைகள் கூறிய அண்ணனிடம் "அவன் என் ஃப்ரெண்ட்!" என்ற ஒரு வார்த்தையோடு முடித்து விட்டாள்.

 

நட்புக்கு ஒரு உதவி செய்திருக்கிறேன் அதற்கு ஏன் இந்த உலகமே என்னை இப்படி பேசுகிறது என்று புரியவில்லை நட்பு உலகத்தில் திளைத்திருந்த நம் நாயகிக்கு!! ஆனால் இவளே அந்த நட்புக்கு துரோகம் செய்யும் காலம் வரும் பொழுது??

 

பத்து நாட்கள் கழித்து சொக்கலிங்கம் மல்லிகா யாழினி அனைவரையும் அழைத்து அந்த சிறு அறையில் அவன் வேலைக்கு என்று செய்தவற்றை போட்டு காண்பித்தான். சொக்கலிங்கமும் மல்லிகாவும் அவனை மனமார வாழ்த்தி சென்றனர்.

 

ஆனால் தினமும் அவன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என்று வேலை முடித்து வந்ததும் முட்டி வலியை கூட பார்க்காது மேலே வந்து பார்த்து விட்டு சென்று விடுவார் விஸ்வநாதன். அவரது மனம் முழுக்க முழுக்க மகன் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமே? ஜெயிக்க வேண்டுமே? என்ற எண்ணம் மட்டுமே!!

 

பொதுவாக நம்மை அன்னை பத்து மாதங்கள் சுமந்தால்.. நம் காலில் அதாவது சொந்த காலில் சுயமாக நிற்கும் வரை நம்மை தோளில் தாங்குவது தந்தை தானே!! ஆனால் என்ன ஏற்றி வைத்த ஏணியை உயரே ஏறிய பிறகு உதைத்து தள்ளி விடுகின்றனர்.

 

அவர் திட்டுவதும் பிள்ளையின் எதிர்காலத்தை கண்டு பயந்தேன் அதுவும் இப்பொழுது இருக்கும் போட்டி உலகில் பொறாமையும் முதுகு பின் குத்தல்களும் வழிந்து கிடக்க.. அதில் வெற்றி வீரனாய் வெளிவருவது சற்று சிரமமே என்று புரிந்த சராசரி நடுத்தர வர்க்க தந்தைக்கு மிஞ்சுவது பயம் மட்டுமே!!

 

யாழினிக்கு பள்ளியில் அவளது வேலைகளோடு அதிரதன் கொடுத்த வேலைகளும் நேரத்தை எடுத்துக் கொண்டிருந்தது. அவன் சொன்ன மாதிரி முதலில் பத்தாவது மற்றும் 12வது கணக்கு பற்றிய காணொளிகளை அவ்வப்போது விருட்சம் டிஜிட்டல் ஸ்கூல் என்ற தலைப்பில் வெளியிட்டுக் கொண்டிருந்தான். அதற்கு ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதிரதன் எதிர்பார்த்த அளவுக்கு அதில் வரவில்லை. அவன் அதற்கு என்று வைத்திருந்த டீமிடம் இன்னும் இதை மெருகப்படுத்த.. மேலும் மேலும் பல உயரங்கள் கொண்டு போக பல ஐடியாக்களை கேட்டுக் கொண்டிருந்தான்.

 

அந்தக் குழுவும் "இன்னும் சாஃப்ட்வேர் மேம்படுத்த வேண்டும் சார்! வெறும் மேத்ஸ் மட்டும் போதாது.‌ இன்னும் சில சப்ஜெக்ட்களை சேர்க்க வேண்டும்" என்று நிறைய நிறைய ஆலோசனைகள் கொடுக்க அனைத்தையும் அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்ல ஆயத்தப்படுத்த தொடங்கினான். ஏனோ மற்ற தொழில்கள் மாதிரி இந்த டிஜிட்டல் ஸ்கூல் அவனுக்கு எடுத்ததும் வளர்ந்து விடவில்லை. விருட்சம் என்ற பெயர் வைத்ததால் இன்னும் மண்ணுக்குள் இருந்ததே ஒழிய முளைத்து துளிர் விடவில்லை.

 

அன்று யாழினி தனது லசர் பீரியடில் ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்திருந்தாள். "நல்ல வேலை இப்போ நான் ஃப்ரீயா இருக்கிறது அந்த கரஸூக்கு தெரியல போல.. இல்லைன்னா ஏதாவது ஒரு வேலையை கொடுத்திருப்பார்!" என்று முணுமுணுத்தவள், தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்ததால் கைவிரல்களுக்கு சொடுக்கிட்டு நிமிர்ந்தவள் கண்ணில் புதிதாக அமர்ந்திருந்த பெண் தெரிந்தாள்.

 

அவ்வறையில் இருந்த கனகா டீச்சரிடம் "புது ஜாயினியா?" என்று கேட்க.. குசுகுசுப்பில் ஆர்வம் மிகுந்த கனகா டீச்சர் மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டவர் "ஆமா யாழினி.. எப்படி அழகா இருக்கா இல்ல? ஆனா உன்ன விட வயசு சின்னது தான் போல…" என்று அவர் அடுத்து எங்கே வருகிறார் என்பதை உணர்ந்த யாழினி "வயசுல என்ன இருக்கு டீச்சர்? அவங்களோட திறமையும் அனுபவம் தான் பேசும்!!" என்று அதோட அந்த பேச்சுக்கு எண்ட் கார்டு போட்டு விட்டாள்.

 

யாழினியுமே அந்த பெண்ணை பார்த்தாள். அழகி தான்!! அந்த துரு துரு கண்களும் மொழு மொழு கன்னங்களும் அவளது அழகை இன்னும் தூக்கிக்காட்ட.. அதை ஒரீ நிமிடம் ரசித்தபடி அடுத்த பாடத்திற்கான குறிப்புகளை எடுக்க தயாரானாள் யாழினி.

 

ஆனால் மதிய சாப்பாட்டு இடைவெளியின் போது அந்த பெண்ணே வந்து யாழினியிடம் பேசி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் "ஆர்த்தி!!" என்று.

 

"ஐ அம் சங்கமித்ரா யாழினி!! மேக்ஸ் டீச்சர்" என்றதும், அவள் "நான் கம்ப்யூட்டர் டீச்சர்" என்றாள்.

 

அவளது படிப்பு திறமைகளை கேட்டு யாழினி இதுக்கு "நீங்க ஐடில வேலை செய்திருக்கலாமே? இன்னும் அதிக சம்பளத்தோடு கிடைத்திருக்குமே!" என்றதும் அவளது அழகிய கண்கள் சோகத்தில் வடிய.. "நிறைய ட்ரை பண்ணிட்டேன் டீச்சர்! சரியான ஸ்கொப் எனக்கு கிடைக்கல.. இன்ஜினியரிங் தான் முதல்ல கேக்குறாங்க.. ஆனாலும் தொடர்ந்து அப்ளை பண்ணிட்டு இருக்கேன். அதுவரைக்கும் குடும்பத்தை ஓட்டணுமே… அதுக்கு தான் இங்கு வேலைக்கு வந்தது எனக்கு அப்புறம் மீண்டும் ஒரு தம்பியும் தங்கச்சியும் இருக்காங்க" என்றாள் வருத்தத்துடன்!!

 

பெரும்பாலான பெண்களின்.. பெண்கள் மட்டுமல்ல இளைஞர்களின் கனவுகள் பலியிடப்படுவது குடும்பத்திற்காக தான்!! கனவு வேலை கிடைக்கும் வரை இதை தொடர்வோம்.. அதை தொடர்வோம்.. என்று சிலர் அந்த வேலையில் இருந்து குடும்ப சுமை காரணமாக கனவை தொடர முடியாமல் இதையே தொடர்ந்து கொண்டிருப்பர்.. மற்றும் சிலர் என்றும் விடாது தனது கனவை பின்தொடர்ந்து பிடித்து விடுவர்!

 

"கவலைப்படாதீங்க.. சீக்கிரமே நீங்கள் நினைக்கிற மாதிரி ஐடி ஃப்ள்டூல உங்களுக்கு வேலை கிடைக்கும்" என்றாள்.

 

"டீச்சர் உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது கம்ப்யூட்டர் சென்டர் இல்ல ஈவினிங் பார்ட் டைம் ஜாப் மாதிரி இருந்தா எனக்கு சொல்றீங்களா? நான் காஞ்சிபுரத்திற்கு புதுசு!"

 

"எங்கே தங்கி இருக்கீங்க?" என்று கேட்டாள் யாழினி.

 

"நான் இங்கு ஒரு ஹாஸ்டல் தங்கி இருக்கேன் டீச்சர்! குடும்பம் எல்லாம் விழுப்புரத்தில் இருக்காங்க" என்றவள்,

 

"இரவு 10 மணிக்குள்ள ஹாஸ்டலுக்கு போயிடனும். அதுக்கு தகுந்த மாதிரி ஏதாவது இருந்தா பாத்து சொல்லுங்க.. இங்க பிஜி ஹாஸ்டல் ரொம்ப காஸ்ட்லியா இருக்கு" என்று கண்களை விரித்து காட்டும் அந்தப் பெண்ணின் அழகும் அவள் குடும்பத்தின் மீதான அக்கறையும் அவள் பால் இரக்கம் சுரந்தது யாழினிக்கு!!

 

"கவலைப்படாதீங்க ஆர்த்தி.. எனக்கு தெரிஞ்சவரையில் உங்களுக்கு நான் பார்த்து சொல்லுறேன்! ஓகேவா?" என்றாள் யாழினி.

 

அதன் பிறகு ஆர்த்தியும் யாழினியோடு சீக்கிரம் ஓட்டிக்கொண்டாள். ஒருநாள் இவர்கள் இருவர் மட்டும் இருக்கும் வேலையில் "என்னை டீச்சர் இந்த கனகா டீச்சர்.. இவ்வளவு காசிப் பேசுறாங்க! அப்பப்ப ஊர்ல உள்ள எங்க ஊரு கிழவி எல்லாம் தோத்திடுவாங்க போங்க.. டீச்சர் தானே இவங்க என்ன இப்படி பேசுறாங்க" என்று வாயை பிளந்து அப்பாவியாய் கேட்டவளை கண்டு சிரித்தாள் யாழினி. 

 

"அவங்க மட்டும் இல்ல நம்மள சுத்தி இருக்கிற முக்காவாசி பேரு அப்படித்தான்!! நாம கண்டும் காணாது போயிடனும். இவர்களோடு தான் புழங்க போறோம். அதனால் தவிர்க்கவும் முடியாது!" என்று நிதர்சனத்தை உணர்த்தினாள்.

 

இப்போதெல்லாம் அரவிந்த் யாழினியை அழைக்க வருவதில்லை. இவளும் அவனை பெரிதாக தொந்தரவு செய்ய மாட்டாள். அவனின் வேலை பலுவை உணர்ந்து.. முன்னே வீடு தங்காது ஊர் சுற்றியவன், இப்பொழுது பெரும்பாலும் அந்த அறை தான் உலகம் என்றிருந்தான். கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கி அதற்காக பாடுபவர்களுக்கு கையில் கிடைக்கும் சிறு மணிக்கல் கூட வைரம் தான்!

 

அவன் நினைத்த அந்த சாப்ட்வேரை தயாரிப்பில் முழு மூச்சையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான் அரவிந்த். இடையிடையே சில யூப் டூப் சேனல் மூலம் சின்ன சின்ன கம்ப்யூட்டர் செல்ஃபோன் பற்றிய தகவல்களையும் அவன் பகிர.. அதில் அவனுக்கு வருமானமும் வந்தது!!

 

ஆனால் அவன் ஒருவனால் மட்டும் அந்த புதிய சாஃப்ட்வேரை உருவாக்க முடியவில்லை. கண்டிப்பாக இன்னொரு ஆள் உதவிக்கு தேவை என்று நினைத்தான். அவ்வப்போது யாழியையும் உதவிக்கு கூப்பிடுவான். வார இறுதியில் அவனுக்கு சென்று உதவுவாள். ஆனால் பெரும்பாலும் அவன் சொல்லும் சில கணினி சம்பந்தப்பட்டவைகள் இவளுக்கு புரியாது.

 

"ஏண்டா.. யாராவது இந்த பீல் இருக்குறவங்கள உனக்கு அசிஸ்டென்டா வச்சுக்கலாம் தானே! என்னை ஏன்டா போட்டு படுத்துற! எனக்கு நீ சொல்ற கோடிங் எதுவுமே புரியலடா.. கம்ப்யூட்டரல்ல இவ்ளோ அட்வான்ஸ் படிக்கல.. ஏதோ எனக்கு பேசிக் தெரியும் அவ்வளவுதான்!" என்றவனைப் பார்த்து பாவமாக கூறுபவள் தலையில் இரண்டு குட்டை வைப்பவன் "கத்துக்கடி பிசாசே! உனக்கும் பிச்சர்ல யூஸ் ஆகும். இப்போ வேல்டே இப்படித்தான் டிஜிட்டலா போயிட்டு இருக்கு" என்று அறிவுறுத்துவான். ஆனால் அதை கண்டு கொள்ள மாட்டான் அவள்.

 

அன்று ஏனோ அவளை அழைக்க வந்து காத்திருந்தான் அரவிந்த்.. சிறிது நாள் வழக்கமாக ஆர்த்தியோடு பேசிக்கொண்டே வெளியில் வந்த யாழினி.. அரவிந்த் பார்த்து ஆச்சரியமாக புருவம் உயர்த்த.. அவனோ தோழியின் அருகில் வந்த அழகியை கண்டு புருவம் உயர்த்தினான்.

 

"ஆர்த்தி.. இவன் ஃபிரண்ட் அரவிந்த்" என்று அரவிந்தை அறிமுகப்படுத்தியவள், "இவங்க புது கம்ப்யூட்டர் டீச்சர், ஆர்த்தி!" தன்னை உத்து உத்து பார்க்கும் அரவிந்தை கண்டவள் "நாம் அப்புறம் பார்க்கலாம் டீச்சர்" என்று ஓடிவிட்டாள்.

 

"அடப்பாவி அர்வி… அந்த பொண்ணு உனக்கு இன்ட்ரோ பண்ணலாம்னு பார்த்தா… இப்படி பார்த்து பார்த்து அவளை ஓட விட்டுட்டியேடா!! அவ்வளவு காஜியாடா நீ!" என்று அவள் கிண்டல் அடிக்க..

 

 "காஜியா? பார்க்க அழகா இருக்கான்னு கொஞ்சம் உத்து பார்த்தேன்! அதுக்கு இப்படி பெயர் வைப்பியாடி.. பிசாசு பிசாசு!" என்று வழக்கமான அடித்தல் நக்கல் கால் வாருதலோடு வீடு வந்து சேர்ந்தனர்.

 

இடையிடையே அவள் ஆர்த்தியை பற்றி கூறிக் கொண்டு வர அர்வியின் மனதிலும் ஒரு எண்ணம்!!

 

"ஏண்டி அந்த பொண்ணு பார்ட் டைம் ஜாப் கேட்டுச்சே, எனக்கு அசிஸ் பண்ண முடியுமான்னு கேளு? 2 ஹவர்ஸ் வந்து இருந்தா கூட போதும்! ஒரு நல்ல அமௌன்ட் ஆரம்பத்தில் தர முடியாது போக போக தர முடியும் டி!" என்றான்.

 

"அட சூப்பர்டா!! நான் அந்த பொண்ணு கிட்ட பேசுறேன்" என்றவள் ஆர்த்தி இடமும் சம்மதம் வாங்கி.. அரவிந்த்துக்கு உதவியாளராக சேர்த்து

விட்டாள் ஆர்த்தி.

 

ஆர்த்தி அரவிந்தன் வாழ்க்கையில் கொடுக்கப் போகும் மாற்றம் என்னவாக இருக்கும்??


   
Azhagi reacted
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top