ஆருயிர் 1
அரன்!!
காஞ்சிபுரத்தின் சற்றே புறநகர் பகுதி..
மார்கழி மாதம் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒருபுறம் ஆங்காங்கே பெண்கள் தங்கள் வாயில்களில் அழகாக வண்ண வண்ண கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தனர். மறுபுறம் கோவில்களில் எல்லாம் பக்தி பரவசத்துடன் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
பார்க்கும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் கேட்பவர்களுக்கு தெய்வீகமாகவும் இருந்த அழகான சூழ்நிலையில்.. அபசுரமாக ஒலித்தது அந்த குரல்!!
"ஐயோ காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!" என்று முகம் கை கால்களில் ஆங்காங்கே ரத்தம் வர.. போட்டிருந்த சட்டை எல்லாம் தோரணங்களாக தொங்க.. இடுப்பில் வேஷ்டியோ எப்பவோ காணாமல் போயிருக்க.. கட்டாம்பட்டி அண்டர்வேரோடு நேராக ஓட முடியாமல் விழுந்து புரண்டு மண்ணில் பாதியைத் தன் மீது அப்பிக்கொண்டு கதறிக் கொண்டிருந்தான் அந்த மனிதன்!!
"என்னடா அங்க சத்தம்? யாரு டா அவன்? ஏனிப்படி அடி வாங்குறான்?" என்று கேட்டப்படி அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் யாருக்கும் அடி வாங்கியவன் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவனை அடித்து துவைத்துக் கொண்டிருப்பவனை பார்த்ததும், "இவனா? அப்போ அந்த ஆள் இன்னைக்கு வீடு போய் சேர்ந்த மாதிரி தான்" என்று ஒரு பெண்மணி வெகு மும்முரமாக தான் பாதியிலேயே நிறுத்திய கோலத்தை போட்டார்.
"என்னமோ புதுசா நடக்குற ஒன்னை பாக்குற மாதிரி ஏன் எல்லாரும் வாயை பொளந்துண்டு பார்க்குறேள்? கோலம் போட்டு முடிந்தாயிடுத்தோனோ? உள்ளே போக வேண்டியதுதானே?" என்று ஐம்பது வயது மதிக்கத்தக்க ஐயர் மாமி ஒருவர் சரசரவென்று ஜியோமிட்ரிக் கோடுகளை தரையில் அவ்வளவு துல்லியமாக அழகாக வரைந்து கொண்டு மற்றவர்களை ஏசினார்.
"அதானே மாமி சொல்வது சரி! இதெல்லாம் டெய்லி நடக்கிறது தானே.. போங்க போங்க உள்ள" என்று மற்றொரு பெரியவர் ஜாக்கிங் நடந்தவாரே சொல்லிக் கொண்டே போனார்.
அதற்குள் அடி வாங்கியவன் தட்டு தடுமாறி நடக்க முடியாமல் நடந்து அங்கே அழகிய மயிலை ஓவியமாக வரைந்து கொண்டிருக்க.. அதன் மேல் அவன் விழ, கோலம் அலங்கோலமாக மாற.. அங்கே அமைதி உருவாக அந்த கோலத்தை தீட்டிக் கொண்டிருந்த பெண்ணோ சட்டென்று சந்திரமுகியாக மாறி அவனின் தலைமுடியை பிடித்து இரண்டு ஆட்டு ஆட்டி "ஏன்டா!! கேப்மாரி, இந்த குளுருல காலங்காத்தால எம்மா நேரமோ உட்கார்ந்து இஸ்கு இஸ்குனு வரைஞ்சுகினு இருந்தா.. நீ பாட்டுக்கு வந்து கோலத்தை கலச்சி புட்டு போற கஸூமாலம்!! கோலம் இல்லாத இடமா பாத்து விழ வேண்டியதானடா நாதாரி!!" என்று அவள் உடைக்கும் வார்த்தைக்கும் சம்பந்தமில்லாமல் பேசி அவனை அந்த பக்கம் தள்ளி விட்டாள்.
அந்த அடி வாங்கிய அடிநம்பியோ 'இன்னைக்கு நம்ம யார் முகத்தில் விழித்தோம்? பொண்டாட்டி முகமா? இல்லையே.. நேத்தைக்கு நைட்டு சின்ன வீட்டுல தானே தங்குனோம். ஒரு வேள நம்ம முகத்துலேயே முழிச்சிட்டோமோ? என்று யோசித்தவாறு அடுத்த அடி எடுத்து வைக்க முன் மீண்டும் ஒரு உதை பின்பக்கம் விழுந்தது.
"இதோட இந்த ஏரியாவுல நான் உன்னை பார்க்க கூடாது! பார்த்தேன் மட்டும் வச்சுக்கோ.. பாக்குற இடத்திலேயே உன்னை புதைச்சிட்டு போயிட்டே இருப்பேன்" என்று ஒற்றை விரல் பத்திரம் காட்டிவிட்டு மீண்டும் தனது ஜாக்கிங் ஐ தொடர்ந்தான் அந்த நெடு நெடுனு வளர்ந்தவன்.
"யாழி!! யாழி!!" என்ற அம்மாவின் அழைப்பில் "வந்துட்டேன்.. வந்துட்டேன்!" என்று மாடியில் இருந்த தன் அறையில் இருந்து வேகமாக இறங்கி வந்தாள் ஐந்தடி அழகு பெட்டகம்!!
"ஸ்கூலுக்கு படிக்க போகும் போது தான் லேட்டா கிளம்புவ.. இப்போ அதே ஸ்கூலுக்கு டீச்சரா போகும்போது கூடவே லேட்டா கிளம்புவ?" என்று அவளின் அம்மா மல்லிகா தனது காலை பஜனை ஆரம்பித்துக் கொண்டே அவளுக்கு மதியத்துக்கு தேவையான சாப்பாட்டை பேக் செய்தார்.
சங்கமித்ர யாழினி!! ஐந்தடியில் கொஞ்சம் கொழுக் மொழுக் என்று இருக்கும் காரிகை!! பார்த்தனின் வில்லென்று வளைந்திருக்கும் புருவங்களும்.. சற்று தட்டையாக மொழுமொழுவென்று இருக்கும் மூக்கும்.. லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்து இருக்கும் அதரங்களும்.. அவளது அழகை அள்ளி காட்டும். கூடவே சிரிக்கும் போது விழும் கன்னக் குழி.. எதிரில் உள்ளவரின் கண்களை மட்டுமல்ல புத்தியையும் சற்றே தடுமாற செய்யும். 25 வயது பருவமங்கைக்கு உரிய சௌந்தர்ய அங்கலாவங்களை கொண்டவள்.
பள்ளிக்கு செல்லும் போது பெரும்பாலும் புடவையில் தான் காட்சி தருவாள்!!
பூஜை அறையில் கண நேரம் கடவுளுக்கு ஹாய் சொல்லி குங்குமத்தை இட்டுக் கொண்டு வந்த பெண்ணை பார்த்த அன்னைக்கு கொஞ்சமே கொஞ்சம் பெருமை!! அந்தப் பெருமை எருமை எல்லாம் அவளின் அழகை கொண்டு தான்! அவளின் நடத்தையை கொண்டு அல்ல..
"ஏழு கழுத வயசாகுது ஒரு சமையல் ஒழுங்கா செய்யத் தெரியாதா உனக்கு? எப்ப பார்த்தாலும் போனு இல்லேனா அந்த லேப்டாப் எடுத்து வெச்சி கிட்டு உட்கார்ந்தே இரு!!" என்று அவ்வப்போது நடக்கும் மல்லிகாவின் சொற்பொழிவு!!
"எதுக்கு ஆண்டவன் இரண்டு காதை வைத்திருக்கிறான். ஒன்றில் வாங்கி மற்றொன்றில் விட்டுவிட தான்!" என்று அன்னை அருகே வந்து அவரை கட்டியணைத்து கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள் யாழினி.
"ச்சீ.. விடுடி எரும!!" என்று அலுத்து கொள்வார், சடுதியில் மறந்து விட்ட கோபத்தோடு!
யாழினியின் தந்தை சொக்கலிங்கம் தமிழ் ஆசிரியராக பணியாற்றுபவர், ஓய்வு நேரத்தில் கதை கட்டுரை என்று எழுதிக் கொண்டிருப்பவர்.
சுப்பிரமணியன் என்ற மகன் உண்டு. அவன் தற்போது சாப்ட்வேரின் சொர்க்கமான சான்பிரான்சிஸ்கோவில் இருக்கிறான்.
வேகவேகமாக காலை உணவை முடித்து தனது ஸ்கூட்டி பெப்பை எடுத்துக் கொண்டு இங்க இருந்து 3 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் அந்த தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றாள் யாழினி. 10 11 12 ஆம் வகுப்புக்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை எடுக்கிறாள்.
பாடம் சொல்லிக் கொடுப்பது யாழினிக்கு மிகுந்த பிரியம்! சிறுவயதில் இருந்தே தந்தை டியூசன் எடுக்கும் கரும்பலகை முன்னே தான் அவளின் நேரங்கள் செல்லும். சொக்கலிங்கத்திற்கு மகளை மகளின் இந்த ஆசிரியர் கனவை மிகவும் பிடிக்கும்!! ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது எவ்வளவு தூரம் மகளுக்கு பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் என்று அறிந்ததால் அதில் அவர் கட்டாயப்படுத்தவில்லை. ஏற்கனவே பள்ளி நேரம் தவிர கதை கட்டுரை டியூஷன் என்று எடுத்தாலும் அவர்களது பொருளாதாரம் மத்திய தரத்தை தாண்டி மேலே செல்லவில்லை. அதனால்தான் மகன் கணினி என்று தன் தேர்வை கூறும்பொழுது ஒத்து கொண்டு தன்னால் முடிந்த அளவு அவனுக்கு கல்லூரி கட்டணம் கட்டி படிக்க அனுப்பினார்.
எப்பொழுதும் தமிழ் வாத்தியார் என்றாலே ஒருவித கீழான பார்வை வார்த்தை எல்லாம் அவர் தாங்கி தாண்டி வந்தது தான். மனைவி அவ்வாறு அவரை ஒரு வார்த்தை சொல்லவில்லை என்றாலும், அவர் மனதில் இருந்தது தான். கணினி என்று மகன் வந்தபோது அவருக்கு மகிழ்ச்சி. ஆனால் மகளும் ஆசிரியர் துறையை எடுக்கும்போது அவருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.
"என் விருப்பம்!! என் கொள்கை!!" என்று அதற்குமேல் அன்னையை பேசவிடாமல் இதோ ஆசிரியையாக அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் உலா வந்து கொண்டிருக்கிறாள் யாழினி.
பள்ளிக்கூடம் முடிந்ததும் ஸ்பெஷல் கிளாஸ் என்று பத்தாவது பன்னிரண்டாவது மாணவர்களுக்கு பாடம் எடுத்து விட்டு மிகவும் சோர்வாக நடந்து வந்தவளின் போன் வைப்ரேட்டில் உறுமிக் கொண்டிருந்தது.
எடுத்துப் பார்க்க எண்ணிலடங்கா மிஸ்டுகால் அனைத்தும் ஒருவனிடம் இருந்தே.. ஏபி என்றிருக்க..
யோசனையோடு போனை பார்த்துக் கொண்டு இருந்தாளே, தவிர அட்டென்ட் செய்யவில்லை. இப்போது இருக்கும் இந்த சோர்வில் இவனிடம் மல்லு கட்ட முடியாது என்று உணர்ந்து போனை அணைத்து பேக்கில் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டாள்.
சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் பிள்ளைகளின் ரெக்கார்டு டெஸ்ட் பேப்பர் என்று அதை திருத்தி முடிக்கவே நேரம் ஓடி விட.. பின் எங்கே இருந்து அம்மாவிற்கு சமையலில் உதவி செய்ய?
அன்னையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார் பெண்ணின் வேலை பளுவை.. அதனால் பஜனை பாடினாலும் அதற்குமேல் அவளைக் கட்டாயப் படுத்த மாட்டார். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை கட்டாயமாக அவளை அடுப்படியில் நிற்க வைத்து ஒரு வேளையாவது உணவு சமைத்திட சொல்வார். அவளும் அழுதுக் கொண்டே செய்வாள்.
ஒரு வேளையாக உணவு முடித்து மாடியிலிருக்கும் தன் அறையில் வந்து அவள் படுத்து விட்டாள். அப்பொழுது அணைத்த போனை இதுவரைக்கும் உயிர்ப்பிக்கவில்லை.
மணி பதினொன்றை தாண்டிய நேரம்.. பெரும்பாலும் அந்த நேரத்திற்கு அந்த ஏரியாவில் உள்ள வீடுகள் அனைத்தும் அமைதியுடன் இருந்தது. ஒன்றிரண்டு வாகனங்களை தவிர தெரு முழுதும் இரவில் உறங்கிக் கொண்டிருந்த நேரம்...
மெல்ல மொட்டை மாடி மீது ஒரு பலகை சத்தமில்லாமல் எடுத்து வைத்தது ஒரு உருவம். அடுத்த நிமிடம் அந்த பலகை மீது ஏறி யாழினி தூங்கிக் கொண்டிருக்கும் மொட்டை மாடியில் அந்த நெடிய உருவம் தொப்பென்று வந்து இறங்கியது.
சுற்றுமுற்றும் பார்க்க அனைத்து வீடுகளிலும் விளக்கு அணைக்கப்பட்டு இருக்க.. நன்மை பார்ப்பவர்கள் யாருமில்லை என்று உறுதி படுத்திக் கொண்டு மெல்ல யாழினி அறைக் கதவை தட்ட கை வைத்தது.
ஆனால் அந்த சத்தத்தில் வேறு யாரேனும் விழித்து வந்து விட்டால்?
தன் கையில் இருக்கும் ஸ்குரு டிரைவரை வைத்து மெல்ல அவள் அறையின் தாழ்ப்பாளை நீக்கி, கதவை திறந்து உள்ளே நுழைந்தது.
ஆழ்ந்த உறக்கத்தில் ஏசி குளூமையில் போர்வையை கழுத்து வரை நன்றாக மூடி உறங்கி கொண்டிருந்தாள் யாழினி!!
கோபத்தோடு அவளை உறுத்து விழித்த அந்த நெடியவன், அவள் காதருகே சென்று நாய் குரைக்கும் சத்தம் ஒன்றை போனிலிருந்து சத்தமாக அலறவிட்ட.. அடுத்த நொடி பயந்து அதிர்ந்து எழுந்து அமர்ந்தவள், அங்கே நின்றிருந்த நெடிய உருவத்தை பார்த்து ஆவென்று புறங்கையை வாயில் வைத்து கத்த ஆரம்பிக்க.. தன் முரட்டு கையால் அந்த வாயை அடைத்து இருந்தான் அவன்.
அவன் ஸ்பரிசத்திலேயே வந்தது யார் என்று அறிந்த,யாழினியும் அவனது உள்ளங்கையை நறுக் என்று கடித்து வைக்க.. அடுத்த கணம் ஆஆஆ என கத்துவது இவன் முறையானது!
"ஏண்டி எரும.. இப்படியா கடிச்சு வைப்ப? அதான் வாரத்துக்கு நாலு நாள் நல்ல கோழி ஆடுனு வளைச்சு கட்டுற தானே?" என்று வலியில் கையை உதறிக் கொண்டே கேட்டான் அவன்.
அவன் அரவிந்த் பிரபாகரன்!!
"எனக்கு நாய்னா அலர்ஜினு உனக்கு தெரியும்தானே டா பன்னி.. அப்புறம் ஏன் டா நடுராத்திரில சுவரேறி குதிச்சு இந்த நாய் குரைக்கிற சத்தத்தை வைத்த?" என்று அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனை மொத்து மொத்து என்று மொத்தினாள் யாழினி.
"பின்னே உனக்கு சாயந்திரம் நாலு மணியிலிருந்து எத்தனை கால் பண்ணி இருக்கேன் பாரு? ஒன்னுக்காவது எடுத்து ஆன்சர் பண்ணியா நீனு இல்லை ஏன்னு ஒரு மெசேஜ் ஆவது போட்டுவிட்டியா? கல்நெஞ்சக்காரி!!" என்று மற்றொரு தலையணை எடுத்து அவளை இவன் மொத்தினான்.
"நீ ஏதாவது ஏழரையை கூட்டிவைத்து இருப்பேனு எனக்கு தெரியும் டா.. நீ இத்தனை கால் பண்ணும் போதே.. ஏற்கனவே ஸ்பெஷல் கிளாஸ் அது இதுனு நான் ரொம்ப டயர்டா இருந்தேன்.. இதுல உன்கிட்ட பேசி.. நீ பஞ்சாயத்தை கூட்டி அதுக்கப்புறம் வீட்டுக்கு வர சொல்லுவ. என்னால முடியாது சாமி! அதனாலதான் போன ஆப் பண்ணி விட்டேன்" என்றவள் அந்த கட்டிலில் எழுந்து நல்ல வாட்டமா அமர்ந்தாள்.
"எவ்வளவு பாசம் டி என் மேல உனக்கு? அதை விட எவ்வளவு ஒரு நம்பிக்கை? நான் எதாவது ஏழரையை கூட்டி இருப்பேனு? ஆனாலும் உன் நம்பிக்கை வீண்போகவில்லை மகளே!! வீட்டுக்கு போனா விஸ்வநாதன் என்னை வளச்சி வளச்சி அறிவுரை கொடுப்பார் அதனாலதான் இங்க வந்துட்டேன்" என்றான் அவள் அருகில் அமர்ந்தபடி..
"இன்னைக்கு என்னடா பண்ணி வைத்த பன்னி?" என்ற சோகத்தோடு அவள் கேட்க..
"காலையில நான் வழக்கம்போல ஜாக்கிங் போன போது ஒரு எரும பய ஏற்கனவே சின்ன வீடு வச்சிருக்கான். அது பத்தாதுன்னு வட்டிக்கு கொடுத்த வீட்டில பணம் கட்ட முடியலனு அந்த வீட்டு பொண்ணு போய் கை வைக்க போறான். பாத்துக்கிட்டு சும்மா இருக்க சொல்றியா? அதுதான் நல்ல நடு ரோட்டில வச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்" என்றான் தன் டீசர்ட்டில் இல்லாத காலரை தூக்கி விட்டபடி..
"இப்படி ஊர்ல ஒருத்தன் விடாம எல்லார்கிட்டயும் வம்பு பண்ணிக்கொண்டே இரு விளங்கிடுவ!!
இப்போ எதுக்கு இங்கே வந்து என் தூக்கத்தை கெடுத்த?" என்றாள் கொட்டாவி விட்டப்படி..
"நான் காலைல சாப்பிட்டது டி மித்து. மத்தியானம் இருந்து சாப்பிடவே இல்ல. பசிக்குது ஏதாவது சாப்பாடு எடுத்துட்டு வா" என்றான்.
"டேய்.. மணி பன்னிரண்டாக போகுது டா! இந்த நேரத்தில் சாப்பாடு ஒன்னுமே இருக்காது டா"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. இருக்கிறதுல ஏதாவது செய்து எடுத்துட்டு வா" என்று ஆணையிட்டான்.
"ஆனாலும் உன் மன தைரியத்தை பாராட்டுறேன். என்னை நம்பி சமைக்க சொல்லி சாப்பிட உட்கார்ந்து இருக்க பாரு.. அங்க நிக்கற டா" என்று உதட்டைப் பிதுக்கி சிரிப்புடன் அவள் கூற..
"வேற வழி.. இட்ஸ் ஆல் பேட்!! இல்லனா என்னை கூட்டிட்டு போ.. உன்ன விட நான் நல்லாவே சமைப்பேன்" என்று அவளை அதட்டி உருட்டி ஒரு வழியாக மாடியில் இருந்து, இறங்கினார்கள் இவர்கள் இருவரும்.
"சத்தம் போடாமல் மெதுவாக வாடா! அப்பா முழித்தாருன்னா அங்கிளுக்கு போன் பண்ணிடுவாரு" என்றவாறு இரண்டு பூனைகளும் கிச்சனுக்குள் நுழைய..
"என்னடி எல்லாத்தையும் சாப்பிட்டுக் கவுத்து வச்சிட்டீங்க?!" என்று சோகமாக கேட்டவனிடம், பிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து கொடுத்தாள் யாழினி.
அவசரஅவசரமாக தோசை சுட்டவன் பிரிட்ஜில் வைத்து இருந்த இரண்டு முட்டையையும் எடுத்து ஊத்தி முட்டை தோசை வார்த்து, தொட்டுக் கொள்வதற்கு இட்லி பொடியை வைத்து சமாளித்து சாப்பிட்டு முடித்தான்.
மெலிதாக ஒரு ஏப்பம் விட்டு நிமிர்ந்து பார்க்க எதிரே சொக்கலிங்கம் நின்று கொண்டிருந்தார்.
"அச்சோ மாமா!!" என்றப்படி யாழினி பின்னால் ஒளிந்து கொண்டவனை பார்த்து, மெல்லிய புன்னகை மட்டுமே இவரிடம்!!
"அரவிந்தா!! வெளிய வா!!" சற்று அதட்டலுடன் கூப்பிட்ட உடனே அவர் முன்னே வந்து நின்றான்.
"விசு ரொம்ப உன்னை நெனச்சு வேதனைப்படுறான் டா! நீ ஏன் இப்படி இருக்க? எங்க சுப்புவோட நீ நல்ல மார்க் தானே எடுத்த.. அப்புறம் ஏன் இப்படி வேலைக்கு போகாமல் சுத்திக்கிட்டு அவனையும் டென்ஷன் ஆக்குற?" என்று நண்பனுக்காக பரிந்து பேசினார்.
"என்னால எல்லாம் ஒருத்தன் கிட்ட கைகட்டி வேலை பார்க்க முடியாது மாமா. அவர் தான் சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாருனா நீங்களும் இப்படி பண்றீங்க. சரி சரி எனக்கு தூக்கம் வருது. உங்க நண்பனுக்கு போட்டுக் கொடுக்கிறதா இருந்தா காலையில 8 மணிக்கு மேல போட்டு குடுங்க சரியா?" என்றவன் யாழினியை பார்த்து "ஏய் மித்து.. ஒரு போர்வை தலைகாணியை கொண்டு வந்து கொடு" என்று கூற அவளோ தலையில் அடித்துக் கொண்டாலும் அவன் கேட்டதை கொண்டு வந்து கொடுத்தாள்.
"குட் நைட் மாமா!! குட் நைட் மித்து!!" என்றவன் சோபாவில் சரிந்து விட்டான்.
"நீ போம்மா.. போய் தூங்கு!" என்று மகளை அனுப்பி வைத்தவர் நண்பனுக்கு மெசேஜ் ஒன்றையும் தட்டிவிட்டார்.
மறுநாள் வேலைக்கு கிளம்பி வந்த யாழினி ஸ்கூட்டி பெப்பில் அவனும் ஏறிக்கொண்டான். நேராக விஸ்வநாதன் வீட்டை நோக்கி சென்றது அவர்களது வண்டி.
உள்ளே நுழைந்தவர்களை பார்த்தவர், "கோதாவரி!!!" என்று கத்தி இருந்தார் விசு அலைஸ் விஸ்வநாதன்.
"இவரு பெரிய சம்சாரம் அது மின்சாரம் விசு!!" என்று தன் தோழி மித்ராவிடம் கிசுகிசுத்தான்.
"உன்னை விட மூணு வயசு சின்ன பொண்ணு அது காலையிலேயே வேலைக்கு கிளம்பி போகுது. ஆனா நீ இன்னும் தூங்கி பல்லு கூட விளக்காம அது கூடவே வந்து இருக்க. நீ எல்லாம் என்னைக்கு தான் உருப்படப் போற? எங்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்ல சாமி! உனக்குன்னு ஒரு ஐடென்டிட்டி .. நீ ஊர் சுத்துற அந்த வண்டிக்கு பெட்ரோல் போடவாவது சம்பாத்திக்கலாம் தானே டா" என்று அவர் அடுக்கிக் கொண்டே போனார்.
"ஐயோ அங்கிள்!! விடுங்க எல்லாரும் எல்லாரும் மாதிரி கிடையாது. அவனுக்கு சொந்தமாக தொழில் தொடங்க ஆசை! இப்படி பேசிகிட்டே மூணு வருசத்தை வீணடிச்சத்துக்கு பதிலா அவனுக்கு நீங்க ஒரு சான்ஸ் கொடுத்திருக்கலாம் தானே?" என்று தன் நண்பனுக்காக அவள் வாதாட..
"என்னைக்கு அவனை விட்டுக்கொடுத்து இருக்க நீ? சொந்தத் தொழில் சொந்த தொழிலில் மட்டும் வாய்கிழிய பேசிட்டு இருந்தா போதுமா? அதுக்கு அவன் என்ன ஏற்பாடு செய்திருக்கான்.. என்ன முயற்சி செஞ்சி இருக்கான்.. என்ன மாதிரி தொழில் பண்ண போறான்னு இதுவரைக்கும் சொல்லி இருக்கானா யார்கிட்டயாவது?" என்று அவரின் பேச்சில் வேகம் குறையவில்லை.
"டிஜிட்டல் ஸ்கூல்! இது தான் என் எய்ம்!!" என்றான் அரவிந்த் பிரபாகரன்!!
அதே நேரம் தன் இண்டர்நேஷனல் டிஜிட்டல் ஸ்கூல் விரிவாக்கத்திற்காக சென்னை வந்து இறங்கினான் அதிரதன் வர்மா!!
அரன்.. அழிப்பவனும் அவனே!! காப்பவனும் அவனே!!
இவர்களில் யார் அரன்??