மயக்கம் 4
அன்று மாலை போல, வாடகை பணத்தை கொடுக்க என்று வாகீஸ திரிபுரபவனன் சிவகாமியின் வீட்டிற்கு வந்திருந்தான்.
“வா வாகீஸா…” என்று அன்புடன் அழைத்தார் சிவகாமி.
“வரேன் அத்த..” என்றவன் ஷூ ஷாக்ஸை கழட்டி விட்டு அவர் வீட்டின் உள்ளே நுழைந்தான்.
பெரும்பாலும் அவர்கள் வீட்டிற்குள்ளே செல்ல மாட்டான். வாடகை கொடுப்பது கூட பல நேரங்களில் வெளியில் நின்று கொடுத்துவிட்டு, சிவகாமி அழைத்தால் கூட,
“டயர்டா இருக்கு அத்த.. ரூமுக்கு போறன்” என்று சென்று விடுவான்.
ஆனால் இன்று அவரிடம் சற்று பேச வேண்டியது இருந்தது அவனுக்கு.
காரணம் கிருத்திலயா..!!
இங்கே வந்த பொழுது கீழே கேட்கும் அவளது சத்தங்களும்.. அவ்வப்போது தம்பியோடு அவள் போடும் சண்டைகளும்.. அம்மாவிடம் ஏற்படுத்தும் சலசலப்புகளும் அவனுக்கு பெரும் இம்சையாக தான் இருக்கும்.
“என்ன இந்த பொண்ணு.. ஒரேயும் இப்படி கத்திக்கிட்டே இருக்கா? நியூஸ்சன்ஸ்..!” என்று பல நேரங்களில் நினைத்தவன் தான்..!
ஆனால் கடந்த ஒரு வாரமாக கிருத்திலயாவிடம் இருந்து எந்த ஒரு சத்தமோ சண்டையோ சலசலப்போ ஏன் அவள் அரவம் கூட கேட்காமல் ஏதோ ஒன்று குறைவது போலவே அவனுக்கு தோன்றியது..!
“என்னடா இது? இந்த பொண்ணு கதைச்சாலும் இம்சையா இருக்கு.. கதைக்கல என்டா அதவிட பெரிய இம்சையா இருக்கு.. என்னவா இருக்கும்? ஏன் இந்த அமைதி அவள்ட?” என்று அவனுக்கு பதில் தெரிய வேண்டி இருந்தது.
கூடவே அன்று இரவு அவள் அமர்ந்திருந்த கோலம் அவனை கொஞ்சம் பாதித்திருந்தது.
எப்பொழுதும் கலகலப்பாக சிரித்தப்படி ஓடியாடி கொண்டு இருக்கும் பெண், இப்படி அமைதியாக ஒரே இடத்தில் பல மணி நேரங்களாக.. முகத்தில் வலியும் கோபத்தையும் பிரதிபலித்தபடி அமர்ந்திருப்பதை கண்டவனுக்கு தன்னையே அவளிடத்தில் பார்த்த உணர்வு..!
பல நேரங்களில் கோபத்தையும் வலியையும் அதை காட்ட முடியாத இயலாமையும் தாங்கியபடி அவன் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருப்பான்.
இல்லையென்றால் அங்கும் இங்கும் அலைந்து மனதில் உள்ள வலியை கால்களுக்கு கொடுத்து அதன் பின்னே தூங்க முயற்சிப்பான்.
தன்னைப் போலவே அவளும் அந்த இருளில் அமைதியை கிழித்துக்கொண்டு வெகு அமைதியாக அமர்ந்திருந்த கோலம் அவனை அசைத்திருந்தது..!
அதனைக் காட்டிலும் அதுக்கடுத்த வந்த ஒரு வாரமும் சத்தம் இல்லாத அவளின் அமைதி பேர் இறைச்சலாய் அவனை தாக்கியிருந்தது..!
என்னானது அவளுக்கு? ஏன் இந்த அமைதி? ஏன் இந்த மௌனம்? என்று முன்னைவிட இப்போதெல்லாம் பாட்டு சத்தத்தை அதிகமாக வைத்திருந்தான்.
ஆனால் அந்த பாட்டு சத்தத்துக்கு சிறு பிரதிபலிப்பும் இன்றி இருந்தது அவளது வீடு..!
வெகு நேரம் பாட்டு சத்தத்தை அதிகம் வைத்து அவனின் வாசக்கதவையே உற்று உற்று பார்த்திருப்பான் பவனன் அவள் வந்து கதவை தட்டுவாளா? தன்னை திட்டுவாளா? என்று..!
ஆனாலும்.. ஒன்றும் நடந்தப்பாடு இல்லை.., கடந்த பத்து நாட்களாக..!
ஏன்? ஏன்? ஏன் அவள் வரவில்லை? ஏன் வந்து கதவை தட்டவில்லை? ஏன் இந்த அமைதி? ஏன் அவளின் ஆரவாரம் இல்லை? ஏன் அவளின் சண்டைகள் இல்லை? ஏன் அவளது சலசலப்புகள் இல்லை? என்று இந்த ஒரு வாரமாய் ஏன் ஏன் என்று அந்த வெறும் இரண்டு எழுத்து, அவனை வெகு பூதாகாரமாய் தாக்கியிருக்க..
அதன் தாக்கத்தை தாங்க முடியாமல் இப்பொழுது சிவகாமியிடம் பேசி விட வேண்டுமென்றே அவர்கள் வீட்டில் வந்து அமைதியாக அமர்ந்திருந்தான் திரிபுரபவனன்.
“டீ காபி? எது போடட்டும் வாகீஸா? என்ன பிடிக்கும் உனக்கு?” என்று அவர் அன்போடு கேட்க, அவர் அன்பை நிராகரிக்க முடியாமல்,
“காஃபி அத்த..!” என்றான்.
அவனின் ஒன்றுவிட்ட அத்தை சிவகாமி என்று அவனது தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆன்ட்டி என்று அழைக்காமல் அத்தை என்றேதான் அழைத்து வருகிறான் பவனன்.
அண்ணன் மகன் எப்போதும் போல மறுப்பான் என்று எதிர்பார்த்தவர், மாறாக இன்று கேட்டவுடன் பரபரப்பாகி “இதோ வாகீஸா..” என்று கள்ளிப்பால் போல சொட்ட சொட்ட திக்கான பாலோடு இன்ஸ்டன்ட் காபி சேர்க்காமல், டிகாஷன் போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.
அதன் வாசனையே அத்தனை அவனை ஈர்க்க.. சொட்டு விடாமல் குடித்தவன் “காஃபி ரொம்ப நல்லா இருந்தது அத்த..!” என்று தன் சம்பாசனையை ஆரம்பித்தான்.
“கிருத்திக்கு காஃபினா ரொம்ப பிடிக்கும் வாகீஸா.. இன்ஸ்டன்ட் காஃபி பிடிக்காது. டிகாஷன் இறக்கி போட்டா தான் பிடிக்கும். இப்ப அவ வேற நேரம்.. அதனால அவளுக்கு இறக்கி வச்சிருந்தது. நீ கேட்டவுடனே உனக்கு போட்டு கொடுத்தேன்” என்று அவரும் சம்பாஷனையை முன்னெடுக்க..
‘அத்தையே அவளை பற்றி ஆரம்பிக்கிறார் நல்லதாய் போயிற்று’ என்று மெல்ல இவன் அவரிடம் ஆரம்பித்தான்,
“கிருத்தி இப்ப இல்லையா அத்த.. இப்ப வர்ற நேரம் சொன்னீங்க? எங்க போயிருக்காங்க?” என்று எதார்த்தமாக கேட்பது போல் ஆழம் விட்டான்.
“அதுவா வாகீஸா.. ஒரு வாரமா பக்கத்துல இருக்குற ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு வேலைக்கு போயிட்டு இருக்கா.. அவங்க ப்ரோபஸர் ரெபர் பண்ணாங்களாம்” என்றார் பெருமிதமாக சிவகாமி.
“ஓஹ்.. சில்லா.. வேலைக்கு போகுதா? வேலைக்கு போற அளவுக்கு பெரிய மனுஷியாகிட்டாங்களா? அப்பாடி இனிமே பிரச்சனை இல்லை..! என்கிட்ட இனிமேல் சண்டை போட மாட்டாள்” என்று ஒரு வித நிம்மதி..!
அந்த நிம்மதி எதனால் அவனுக்குள் ஏற்பட்டது என்று அவனை கேட்டால், காரணம் தெரியாது.
இவன் தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதை சிவகாமி உத்துப் பார்க்க, சட்டென தன்னை நிதானத்திற்கு கொண்டவன் “வேலைக்கு போறாங்களா? சூப்பர் அத்த.. என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க..!” என்றவன் எழுந்து கொண்டான்.
ஆனால் அவன் முக்கியமான பேச வந்த விஷயத்தை அவன் இன்னும் பேசவில்லை. அதை எப்படி சிவகாமியிடம் ஆரம்பிப்பது என்று அவனுக்கு சற்று தயக்கமாக இருந்தது.
வெளியில் செல்ல முயன்றவன் ஒரு விநாடி தாமதித்து திரும்பி சிவகாமியை பார்த்தவன், “அத்த.. நீங்க அதை எப்படி எடுத்துக்குவீங்கன்னு எனக்கு தெரியல.. ஆனாலும் சொல்லணும்னு தோணுச்சு..! அவங்க.. அதான் கிருத்தி அன்னைக்கு சோகமா இராத்திரி உக்காந்து இருந்தது.. அதுவும் ரொம்ப நேரமா இருளுல உட்கார்ந்தது.. எனக்கு ஒரு மாதிரியா இருந்தது. இனிமே அப்படி அவங்கள தனியா இருக்க விடாதீங்க..! அவங்களுக்கு தனியா இருக்க பிடிக்குதுனாலும் நீங்களோ இல்ல வேலனோ கூட இருங்க..! அனுபவத்துல சொல்றேன்..! தப்பா இருந்தா சாரி..!” என்றவன் அதற்கு மேல் நிற்காமல் வேக வேகமா இரண்டு இரண்டு படிகளாக தாவி தன் வீட்டுக்கு சென்று விட்டான்.
முதலில் ஏன் இந்த பையன் இப்படி சொல்லுது என்று யோசித்தவருக்கு அதன் பின்னே அவனது காரணங்கள் புரிந்தது.
அன்று ஃபோனில் முதன் முதலில் பேசியபோது வாகீஸனின் அப்பா கூறியது எல்லாம் நினைவு வர,
“இந்த புள்ளைக்கு அதோட ரணம் ஞாபகம் வந்திருச்சு போல.. அதை வைத்து நம்ம புள்ளையும் பார்த்து தனியா இருக்க விட கூடான்னு சொல்லுது. எவ்வளவு பொறுப்பான புள்ள..! அடுத்தவங்க மேல எவ்வளவு அன்பு அக்கறையான புள்ள..! இந்த புள்ளைக்கு அப்படி நடந்திருக்க வேண்டாம்..!” என்று மகளை மறந்து வாகீஸனுக்காக வருத்தப்பட்டார் சிவகாமி.
அவர் வாசலில் நின்று கொண்டு மாடிக்கு செல்லும் பவனனை பார்த்துக் கொண்டிருக்கும்போதே “மா..” என்றபடி தனது ஸ்கூட்டியை உள்ளே நிறுத்திக் கொண்டு சோர்வுடன் வந்தாள் கிருத்தி.
“என்னடி இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட?” என்றதும் அன்னை ஒரு மாதிரியாக பார்த்தவள், வேறு ஒன்றும் பேசாமல் அமைதியாக தன்னறைக்கு சென்று முடங்கிக் கொண்டாள்.
“இன்னைக்கு என்ன பீரியட்ஸ்சா அவளுக்கு? இல்லையே இன்னும் நாள் இருக்கே. அவளுக்கு? ஆனா ஏன் புள்ள இப்படி சோர்ந்து வந்து இருக்கா?” என்று அவளின் அறையை எட்டிப் பார்க்க..
அவளோ கருவறை பிள்ளை போல கால்களை குறுக்கி படுத்திருந்தாள்.
மகள் ஏதோ மன கஷ்டத்தில் இருக்கிறாள் என்று அவள் படுத்து இருப்பதை பார்த்த உடனே கண்டு கொண்டார் சிவகாமி.
எப்பொழுதும் இம்மாதிரி அவள் சுருண்டு படுத்திருந்தால் அவளே தெளிந்து வரட்டும் என்று அமைதியாக சென்று விடுவார் சிவகாமி. ஆனால் இன்று வாகீஸன் சொன்னது அவருக்கு நினைவு வர, பெருமூச்சு ஒன்று விட்டபடி மகளுக்கு காஃபி கலந்து எடுத்துக்கொண்டு சென்றார் சிவகாமி.
“கிருத்திமா.. இந்த காஃபி குடி.. உனக்கு பிடிச்ச மாதிரி டிகாஷன் இறக்கி போட்டு இருக்கேன். கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவ..” என்றதும், ‘எப்பொழுதும் போல அம்மா தனியே விடாமல் இப்பொழுது என்ன புதுசா?’ என்பது போல தலையை நிமிர்த்தி புருவத்தை சுருக்கி அன்னையைப் பார்த்தாள் கிருத்தி.
“அட எழுந்திரு டி..! ஃபர்ஸ்ட் இத புடி, அப்புறம் குடி..!” என்று அவர் டி ஆர் மாதிரி பேச, முகிழ்த்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அன்னை கொடுத்த காஃபியை வாங்கி மூக்கருகே வைத்து வாசனையை பிடித்தாள்.
“சாப்பிடற பொருளை இப்படி மோந்து பார்க்காதேன்னு எத்தனை தடவை சொல்றது?” என்று அவர் கடிந்து கொண்டு, அவள் அருகே அமர்ந்து கொள்ள..
“அட போம்மா..! சாப்பிடுறங்குறது ஐம்புலன்களுக்கும் சந்தோஷம் தர ஒரு விஷயம்..! ஃபர்ஸ்ட் முக்கால் முகர்ந்து பார்க்கணும்.. அப்புறம் நாவால ருசித்து பார்க்கணும்.. அது அப்படியே மனசுக்குள்ள கொண்டு போய் ரசித்து பார்க்கணும்.. சாப்பிடும் போது அந்த சத்தத்தை காதால குளிர்ச்சியா கேக்கணும்..” என்று அனுபவித்து கூறினாள்.
“அப்புறம்?” என்று மகளின் பேச்சை ரசித்து கேட்டார் சிவகாமி.
“அப்படியே இந்த நான்கு புலன்களும் அதை ரசிச்சு ருசிக்கும் போது.. நம்ம உடம்பே அப்படியே அதை ஆர்கிசிக்கும் பாரு.. வேற லெவல் ஃபீலிங் அது..! எப்படி நம்ம சாப்புடுற சாப்பாடு அஞ்சு புலன்களுக்கும் சந்தோஷம் தருதா?” என்று கண்ணடித்து குறும்பாக கேட்டான் கிருத்தி.
சிறு வயது முதல் இருந்தே அப்படித்தான் கிருத்தி. எந்த ஒரு சாப்பாட்டு பொருளையும் அவ்வளவு விரும்பி ரசித்து ருசித்து கண்களில் அந்த ரசனை காட்டி அனுபவித்து சாப்பிடுவாள். அதன் எதிரொலியே இந்த செஃப் படிப்பு அவளிடம்..!
“காலையில நீ கொடுக்கிற அந்த இஞ்சி டீ ஆகட்டும்.. அப்பப்போ சாயந்திரம் கொடுக்கிற இந்த காஃபி ஆகட்டும்.. ஆசேம் மா. இந்த ஏஈரெழு 14 உலகத்துல உன்னை போல யாராலும் போட முடியாதும்மா..! வேற லெவல் நீ சிவகாமி..!” என்று செய்கையோடு மகள் காட்டிப் பேசும்போது,
வாகீஸன் சொன்னது சரிதான் என்று புரிந்தது அவருக்கு. நாமும் மகளிடம் பேசாமல் அவளுக்கு தனிமை என்று ஒதுங்கிப் போனால்.. அவள் இன்னும் தன் கூட்டுக்குள் ஒடுங்கி மன அழுத்தத்தை அதிகப்படுத்தி கொள்கிறாள் போல.. இனி அது போல் இருக்க விடக்கூடாது என்று புரிந்து கொண்ட சிவகாமி, மனதுக்குள் மனதார பவனனுக்கு நன்றி கூறினார்.
அதோடு அன்று காலையில் நடந்தவற்றையெல்லாம் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டே இருந்தவள் அதன் பிறகு மாலை போல் நடந்தவற்றை எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை.
‘அதிலேயே அவளுக்கு பிடிக்காதது எதுவும் மாலையில் நடந்திருக்கிறது. அதனால் தான் இவள் முன்னமே வீட்டுக்கு வந்து விட்டாள்.. வந்தவள் சோர்ந்து படுத்து விட்டாள்’ என்று புரிந்தது சிவகாமிக்கு.
அதைத் தோண்டி துருவி கேட்காமல் இவரும் காலையில் தன்னிடம் புதிதாக வந்த ஒரு வாடிக்கையாளர் கேட்டு கவுனையும்.. இவர் விவரித்ததையும்.. அதற்கு பதில் அவர் விவரித்ததையும்.. இப்படியே ஒரு மணி நேரம் இருவரும் மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டே கடைசி வரைக்கும் எந்த முடிவும் எடுக்காமல் போனதை வருத்தமாக அவர் பேச பேச.. குபீர் சிரிப்பு மகளிடம்.
“ஏன் டி ஏன் டி சிரிக்கிற?” என்றதும்
“இல்ல நீ எப்படி அவங்க கிட்ட டிஸ்க்ரைப் பண்ணி இருப்பான்னு நெனச்சேன்.. சிரிச்சேன்..!” என்றதும் மகளை செல்லமாக முறைத்தவர் “போடி.. எரும..!” என்று செல்லமாக மகளின் தலையில் கொட்டி விட்டு அவர் சமையலறைக்கு டிபன் ஏதாவது செய்யலாம் என்று சென்றார்.
அம்மா கொடுத்த காஃபியை குடித்து முடித்தவளுக்கு தலைவலி சற்று குறைந்து போல இருந்தது. மனசு பாரம் சற்று நீங்கினால் போலிருக்க.. புத்துணர்ச்சி பெற்றதும், அம்மாவை தேடிக்கொண்டு சமையலறையில் நுழைந்தவள், சிங்கில் காஃபி ட்மளரை வைத்து விட்டு.. பின்னால் இருந்து அன்னையை அணைத்து அவர் தோள் வளைவில் தலையை சாய்த்துக் கொண்டாள்.
அடுத்தது மகளிடமிருந்து ஏதோ பெருசாக வரப்போகிறது. அதனால் தான் தன் அரவணைப்பை இத்தனை நாடுகிறாள் என்று புரிந்தது சிவகாமிக்கு. எதுவாகினும் அவள் வாயில் இருந்தே வரட்டும் என்று அமைதியாக இருந்தார்...
ஏற்கனவே ஊற வைத்து அவலில் வெல்லம் ஏலக்காய் தட்டி போட்டு தேங்காய் துருவல் போட்டு கிளறிக் கொண்டிருந்தார்.
“இன்னைக்கு பார்த்தேன் மா.. அவர.. அதுவும் அந்த குடும்பத்தோட.. அந்த பொண்ணுக்கு கிட்டத்தட்ட நம்ம வேலன் வயசு இருக்கும் மா. அப்படின்னா.. இங்கே உன் கூடேயும்.. அங்கே அந்த அம்மா கூடேயும்.. ஒரே நேரத்துல எப்படி மா? அவரால..?” என்று அதற்கு மேல் பேச்சு வர முடியாமல், அப்பா செய்த துரோகத்தை பேச முடியாமல் நா தழுதழுத்தது அவளுக்கு.
தனக்கே இந்த துரோகம் இவ்வளவு மன வருத்தத்தை கொடுக்கிறது என்றால்.. அன்னைக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும்?
உண்ணோடு உயிரோடு ஒன்றாக கலந்து சந்தோஷமாக தம்பதியாக வாழும் போது, ஒருவர் தன் இணைக்கு துரோகம் இழைத்து, அந்த துரோகம் பல நாட்கள்.. இல்லை இல்லை… பல வருடங்களாக அவரிடம் மறைத்து ஒரு நாள் வெளிப்படும்போது அவரின் மனம் என்ன பாடுபடும்?
கிருத்திக்கு சிறுவயதில் புரியாதது எல்லாம் இப்பொழுது புரிய..
அதுவும் ஒரு பெண்ணாக அன்னையின் நிலையில் தன்னை வைத்து பார்த்த பிறகு அந்த துரோகம் தாங்க முடியாததாக இருந்தது அவளுக்கு.
அன்னையை அணைத்துக் கொண்டு கண்ணீர் சொறிந்தவளை, மென் புன்னைகை முகத்தோடு திருப்பி அணைத்துக் கொண்டவர்,
“எப்பொழுதும் வேலன் சொல்றதுதான் மகளே.. நம்ம கொடுக்கிற அன்பு நம்பிக்கை காதல் நேசம் இதற்கு துரோகம் செய்தவங்கள நினைச்சு நம்ம வருந்தக்கூடாது..! அதுக்கு அவங்க வொர்த் கிடையாது சரியா?” என்று
மகளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவரின் கண்களிலும் மகள் அறியாத கண்ணீர்..!
உண்மையான நேசத்திற்கு இங்கே கண்ணீர் தான் பதிலா???
தொடரும்…