அத்தியாயம் 13
ஆதினி மகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறது. அவள் உடல்நிலையில் வெகுவாக முன்னேற்றம்… அதே போல் மற்ற குழந்தைகள் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட.. ருத்ரனுக்கு இப்பொழுது தான் மனது லேசாகி நிம்மதியடைந்தது. ஆனாலும் உள்ளுக்குள் நீர் பூத்த கனலாக கோபம் இருந்து கொண்டு தான் இருந்தது. காத்திருந்தான் கொத்தோடு அவர்கள் கிடைக்கும்போது மொத்தமாக கருவறுக்க...
இரவில் மகளோடு தங்குபவன், காலையில் வீட்டிற்கு சென்று கிளம்பி மீண்டும் மகளை பார்க்க வருவான் ருத்ரன். அதன் பின் பணிகள் அவனை சூழ்ந்து கொள்ள... போகும்போது மகதியிடம் ஒரு பார்வை.. ஒரே ஒரு பார்வை மட்டும் தான்!!
அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தவுடன் சிறு தலையசைப்பு!! கூடவே மீசைக்கு அடியில் துடிக்கும் அவனது முரட்டு அதிரங்கள் என அவன் விடை பெற்று கண்களில் இருந்து மறையும் வரை கண் சிமிட்டாமல் பார்த்திருப்பாள் மகதி!!
'கர்வம்.. கர்வம்… அத்தன கர்வம் பிடிச்சவன். வாய் திறந்து ஒரு வார்த்தை போயிட்டு வரேன்னு சொல்றதும் கிடையாது, குழந்தையை பார்த்துக்கோனு சொல்வதும் கிடையாது. ஆனால் கண்ணாலேயே எல்லாத்தையும் உணர்த்திவிட்டு போறது. ஆனா அவன் கண்ணால பேசுறதெல்லாம் நமக்கு எப்படி புரியுது? நம்ம மண்டையில ஏதும் டிவைஸ் வச்சிருக்கானா? அவன் பேசுறதெல்லாம் நமக்கு கேட்கிற மாதிரி?' என்று தலையை தட்டி பலமாக சிந்தித்தவள் "எதுக்கும் நம்ம ஒரு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கனும் இல்லை எம்ஆர்ஐ போகலாமா?" என்று சிந்தித்துக் கொண்டே சென்றாள் மருத்துவராய் மகதி!!
ருத்ரனுக்கு மனதில் ஒரு பக்கம் மீண்டும் சென்னை வந்து விட்டோமே என்று பெரும் இறுக்கம்.. அதை தாண்டி இதற்கு முன் பழகிய எந்த முகமும் தன் கண்களில் விழுந்து விடக்கூடாது என்று ஒருவித கவனம்... அதையெல்லாம் விட ஆதினியின் உடல் நலம்... கூடவே இந்த போதைப் பொருள் கடத்தும் கும்பல் என்று அவனைச் சுற்றி ஏக பிரச்சனைகள்!! அநேக வழக்குகள்!!
இவை அனைத்துக்கும் ஒரே ஆறுதலாய்... மருந்தாய்.. அரவணைப்பாய்... இருந்தது மகதியின் அருகாமை மட்டுமே ருத்ரனுக்கு!!
இது தவறா? தவறில்லையா?
சரியா? சரி வருமா?
கிடைக்குமா? கிடைக்காதா? என்றெல்லாம் எண்ணவில்லை ருத்ரன்!! அனைத்தையும் வாழ்ந்து பார்த்து விடுவது என்று உணர்வில் இருந்தான். ஒருமுறை கை நழுவிச் சென்ற வாழ்க்கை.. சந்தோஷம்.. நிம்மதி.. மீண்டும் தன் வாழ்வில் வருமா? என்றெல்லாம் அவன் எங்கும் கலங்கவில்லை. வரவழைக்கும் வித்தை தெரிந்தவன் அவன்!! ஆனால் அதனிடம் போக அவ்வளவு அச்சம்!! மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தாங்கும் வலு கலெக்டரின் இதயத்திற்கு இல்லை.
காதல், கல்யாணம்… ம்ஹூம் என்று பெருமூச்சு விட்டான். இதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் தான் அவனுடைய மனதில் பிரதானமாக இருந்தது. அதற்கு காரணம் அவனுடைய வாழ்க்கை முறை, வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்கள் தான் என்பது தான்!! ஆனால் அதை சரியாக மகதியால் புரிந்துக் கொள்ள முடியுமா? தன்னோட மனதிடமே வாதாட விரும்பவில்லை ருத்ரன். வாழ்வு போன போக்கில் செல்வோம் என்று முடிவு எடுத்தான்.
ஆனால் அந்த போக்கை மாற்ற ஒருவன் வரப் போகிறான் என்பதை அறியாமல்?!!
எப்போதும் இயற்கையின் விதியின்படி எல்லாமே!! அது மனிதர்களாகட்டும் அவர்களின் குணநலன்கள், வாழும் வாழ்கை, மதிப்பு, மரியாதை இவைகள் எல்லாம் இருவகை தான்.
அவர்களாக நினைப்பது ஒன்று!! ஏற்கனவே அவர்களின் விதியை கட்டமைத்த இயற்கையாக செயல்படுத்துவது ஒன்று!! ஆக இவ்விரண்டுக்குள்ளும் மாட்டிக்கொண்டு விதியின் பக்கம் செல்ல முடியாமலும் தான் நினைத்த மாதிரி வாழ முடியாமலும் வாழ்வின் ஓட்டத்தோடு போராட முடியாமல் தோற்றவர்கள் அநேகம்!! விதியின் போக்கிலேயே சேர்ந்து தன் மதியால் வாழ்வில் வெற்றி கண்டவர்களும் அநேகம்!!
முதலில் ருத்ரனின் வாழ்க்கையில் விதி அது இஷ்டப்படி சதி செய்திருக்க.. இரண்டாம் முறை அவ்வாறு நடக்க விடுவானா ருத்ரன்?
பல குழப்பங்களுக்கும், சிந்தனைகளுக்கும் மத்தியில் அங்கிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அடுத்து அவன் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது? ஏன் இந்த நொடி அடுத்த என்ன செய்ய வேண்டும்? என்று கூட தெரியாத குழப்பமான மனநிலையில் உட்காந்திருந்தான்.
அந்த வருத்தம் அவனது பதவி கலெக்டராக கொண்டு இல்லை.. தனி ஒரு மனிதன் ருத்ரனாக.. அவனோட வாழ்க்கை அவனோடு மட்டும் முடிவதில்லை. இதில் ஆதினியும் பிணைந்து இருக்கிறாள் என்று பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன், தற்போது எந்த முடிவும் எடுக்காமல்.. எடுக்க முடியாமல்... முதல் வகையை தேர்ந்தெடுத்தான். அதாவது விதியின் போக்குப்படி போவது என்று!!
இரவெல்லாம் அதே யோசனையோடு ஆதினியின் அருகில் படுத்திருந்தான் மருத்துவமனையில் ருத்ரன். பாவம் ஏற்கனவே ஊசி மருந்து என்றால் பயப்படும் குழந்தை இப்போது வெகுவாக கலங்கி இருந்தாள். காலையில் பெரும்பாலும் மகதி தான் ஆதினியை பார்த்து கொள்வது, அவளுக்கு சாப்பாடு ஊட்டுவதில் இருந்து மருந்து கொடுப்பது வரை மகதி தான்.
மகாதேவன் கூட சில சமயம் மகதியின் இந்த வேலைகளை ஆச்சரியமாக பார்ப்பார். பொதுவாக குழந்தைகள் என்றாலே மகதிக்கு பிரியம் ஜாஸ்தி. மருத்துவம் படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவளை வம்படியாக மருத்துவம் படிக்க வைத்த போது கூட குழந்தை மருத்துவர் ஆகலாம் என்று ஆசை காட்டியே சம்மதிக்க வைத்தார். அவளும் அதை பிடித்துக்கொண்டு தத்தி புத்தி தாவி பாஸ் செய்து விட, இப்பொழுது பிரபல குழந்தை நல மருத்துவர் என்று இல்லாவிடினும் அவளும் ஒரு நல்ல மருத்துவராய் தான் வலம் வருகிறாள்.
பொதுவாக பிள்ளைகளிடம் பாசம் காட்டுவது மதியின் இயல்பு என்று மகாதேவனுக்கு தெரியும். ஆனால் மற்ற பிள்ளைகளை விட மகதி ஆதனியின் பிணைப்பு அவரை திகில் கொள்ள செய்தது.
பிள்ளையுடனான பிணைப்பு அவன் அப்பன் வரை சென்று விடக்கூடாதே என்பது மகாதேவனின் தவிப்பு!!
கலெக்டர் மனைவி இல்லாதவர் என்று தெரியும். அதனால் வந்தப் பரிதவிப்பு!!
அதிலும் ஆதினிக்கு அன்னை இருந்தால் பிரச்சனையே கிடையாது. அன்னையற்ற அவளுக்கு இவள் அன்னையாக மாறிவிடுவாளோ என்று உள்ளுக்குள் சற்று உதறல் தான் எடுத்தது அவருக்கு. ஏனென்றால் இம்மாதிரி கிறுக்குத்தனங்கள் எல்லாம் மகளிடம் எதிர்பார்க்கலாம் என்று அவருக்கு தெரியுமே!!
அவளின் எதிர்காலம் பற்றியும் இந்த மருத்துவமனையின் எதிர்காலம் பற்றியும் பல கனவு கோட்டைகளை கட்டி காவல் காத்துக்கொண்டிருக்கிறார் மகாதேவன். இடையில் ஆதினி என்று சிறு உளியால் மொத்த கோட்டையுமே தரமட்டமாகி விடுமோ என்று பயம் பிடித்துக் கொண்டது அவருக்கு.
மனைவியிடமும் இதைப்பற்றி அவரால் விவாதிக்க முடியாது. ஏற்கனவே சிறுவயதில் மகளை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம்.. அவள் விருப்பப்பட்ட பாடத்தை படிக்கவில்லை.. என்று கிடைக்கும் நேரமெல்லாம் புலம்பி தள்ளுவார் துர்கா. அதற்கு தக்கபடி இப்பொழுது மகள் இந்த இருவரோடு ஒவ்வொராக மாற விருப்பப்படுகிறாள் என்று தெரிந்தால், மறுபேச்சு பேசாமல் தலையாட்டி விடுவார் துர்கா. கூடவே கலெக்டர் மாப்பிள்ளை வேற கசக்குமா என்ன?
வெறும் அவர்களின் பிணைப்பை மட்டுமே வைத்துக் கொண்டு மகாதேவனின் மனம் எங்கெங்கோ பயணித்தது. கடைசியில் இப்படி புலம்புவதை விட அடுத்தடுத்த காரியத்தை உடனே நடத்த வேண்டும் என்ற முடிவு எடுத்தவர் தன் நண்பன் பாஸ்கரனை அழைத்தார்.
அதுவரை பாஸ்கரின் மகனுக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்று ஊசலாடிய அவரது மனம்.. அவனுக்கே கொடுத்து விடுவோம் என்ற முடிவுக்கு வந்திருந்தது. பையனும் டாக்டர் கூடவே கைனக்காலஜிஸ்ட்.. மகளையும் சரி தன் மருத்துவமனையும் சரி நமக்கு பின் மருமகன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் மனைவி மகளுடன் கூட கலந்து ஆலோசிக்காமல் ஒப்புதல் அளித்து விட்டார் இரு வீட்டின் சம்பந்தத்திற்கு… இருவரின் கல்யாணத்திற்கு…
பாஸ்கரனுக்கு அவ்வளவு சந்தோஷம். நண்பன் என்பதை காட்டிலும் மகனை எப்படி யுஎஸ்ஸிலிருந்து இந்தியாவிற்கு வரவழைப்பது என்று காத்துக் கொண்டிருந்தவர், இந்த வாய்ப்பைக் கண கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே ஒரு திருமணம் தோல்வியில் முடிந்து துவண்டு போய் இருக்கும் மகனை மூன்று வருடங்களாக கரைத்துக் கொண்டிருக்கிறார் இன்னொரு திருமணத்திற்கு…
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல இப்போதுதான் மகன் லேசாக தலையாட்டி இருக்கிறான். 'சரி பாருங்க!' என்று!!
அதிலும் இவர் காட்டும் பெண்களை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் இதில் தட்டிக் கழிக்க வாய்ப்பே இல்லை குடும்பமே மருத்துவ குடும்பம்… கோவையில் பார்த்தாலும் சரி சென்னையில் பார்த்தாலும் சரி எங்கேயாவது இவன் குடியும் குடித்தனமாக இருந்தால் போதும் என்று மனப்பல கணக்குகளைப் போட.. தன் மகனுக்கு அழைத்தார். இங்கே பகல் அங்கே இரவு எந்த நேரத்தில் குடியும் குடித்தனம் என்று நினைத்தாரோ.. அவன் தன் தோற்ற திருமண வாழ்வை எண்ணி குடியில்தான் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தான் அந்த இரவு வேளையில்…
"எஸ் டாட்…!!" என்று அவனது குளறலான வாய்மொழியே கூறியது அவன் ஆல்கஹாலின் வசம் என்று!!
அறியாத பிள்ளை என்றால் அறிவுரை கூறலாம்!!
தெரியாத பிள்ளை என்றால் தெளிவுபடுத்தலாம்!!
இவனே அனைவருக்கும் அறிவுரை கூறும் மருத்துவன். இவனிடம் என்ன சொல்லி? அவன் என்ன புரிந்து? பெருமூச்சு ஒன்று மட்டுமே வந்தது பாஸ்கரனிடமிருந்து.
"ஹர்ஷத்…!!" என்று அவரது அழுத்தமான குரலில்.. "சாரி டாட்!! என்னால முடியல.. தோத்த வலி இன்னும் நெஞ்சில் குத்திக்கிட்டே இருக்கு" என்று வீடியோ காலில் வந்த மகனை கண்டு நெஞ்சம் வலித்தது பாஸ்கரனுக்கு.
எப்படி அருமை பெருமையாக வளர்த்த மகன். காதல் என்ற போர்வையில் சென்று இப்படி சீரழிந்து நிற்கிறானே என்று!!
"இங்க பாரு ஹர்ஷத்... உன்னோட ஹெல்த் மட்டும் கிடையாது உன்னோட ப்ரொபஷனலையும் சேர்த்து நீ இதனால் ஸ்பாயில் பண்ணிக்கிற.. நீ இப்படித்தான் இருப்பியா? போடின்னு தூக்கி போட்டுட்டு போறத விட்டுட்டு இன்னும் அவள நெனச்சு குடிச்சு குடிச்சு உன் உடம்பை கெடுத்துட்டு இருக்க… இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல ஹர்ஷத்!! சொல்றத கேளு நான் உனக்கு வேற பொண்ணு பார்த்து இருக்கேன்" என்றதும், "டாட்…!" என்று அழைத்தான் அவன் அழுத்தமாக ஆனால் அது குளறலாக வந்து விட..
"உஷ்!! இந்த முறை நீ எதுவும் சொல்லி தட்டிக் கழிக்க முடியாது. ஏன்னா பொண்ணு என் பிரண்டோட மகள் பேரு மகதி!! பீடியாடரீஸனா இருக்கா.. சென்னையில அவங்களுக்கு ஹாஸ்பிடல் சொந்தமா இருக்கு. நீ இங்க வந்து பார்த்தாலும் சரி இல்ல சென்னையில செட்டில் ஆனாலும் சரி. ஆனா அவ தான் என் மருமகள். அதுல நான் பிக்ஸ் ஆயிட்டேன். நான் ரெண்டும் மாசத்துல கல்யாணம் வைக்கலாம்னு இருக்கேன் உனக்கு ரெண்டே நாள் தான் டைம். அதுக்குள்ள நீ இந்தியா கிளம்பி வர… இதை ஆர்டர் எடுத்துக்கிட்டாலும் சரி.. இல்ல அப்பாவின் ஆசையை எடுத்துக்கிட்டாலும் சரி" என்று வேகமாக பேசிய மனிதர் மகனின் பதிலுக்கு காத்திராமல் போனை வைத்து விட்டார்.
ஆல்கஹாலின் வசனம் இருந்தவனுக்கு அப்பாவின் வார்த்தைகளில் எத்தனை உள்ள போனது என்று தெரியவில்லை. ஆனால் அவன் அப்பா சொன்ன 'போனவளை நினைத்து எதற்கு கவலைப்படுகிறாய்?' என்று ஒரு வார்த்தை அவனுக்கே அவனை கேட்டுக் கொள்ளும்... அதே வார்த்தையை அப்பாவும் செல்லும்போது... "நான் சரியா தான் இருக்கேன் அப்புறம் ஏன் பீல் பண்றோம்? சென்னை போறோம்! கல்யாணம் பண்றோம்! குடும்ப நடத்தி சந்தோசமா வாழ்ந்து காட்டுறோம்! அதுவும் அவளுக்கு எதிரா" என்று குடி போதையில் சபதம் எடுத்தவன் மறுநாள் குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருக்க பாஸ்கரனின் விடாதே அழைப்பே அவனை எழுப்பியது.
"என்ன முடிவு பண்ணி இருக்க ஹர்ஷத்?" என்று கெத்தாக வினவினாலும் உள்ளுக்குள் சற்றே பயந்து தான் போயிருந்தார் பாஸ்கரன்.. மகன் எங்கே வேண்டாமென சொல்லிவிடுவானோ என்று..
'போனை பார்த்தவன் ஏன் காலங்காத்தாலே கூப்பிடுறார் அப்பா? எதுக்கு என்ன முடிவு சொல்லனும்' என்று யோசித்தவனுக்கு அதன் பிறகு நேற்று இரவு அப்பா பேசிய எல்லாம் ஞாபகம் வரவே.. இவன் சபதமும் அரைகுறையாக ஞாபகத்தில் வர "சரிப்பா ரெடி பண்ணுங்க நான் கிளம்பி வரேன். ஆனா ரெண்டு நாள்ல முடியாது. இங்க கொஞ்சம் பேப்பர் வொர்க் எல்லாம் முடிச்சிட்டு தான் வரணும்" என்றான்.
"ஒன் மந்த் நோட்டீஸ் பீரியடுக்கு எவ்வளவு பணம் கட்டணமோ.. அதை சொல்லு நான் கட்டுறேன்!! ஆனா ரெண்டு நாளைக்கு மேல நீ அங்க இருக்கவே கூடாது" மகன் மனம் மாறிவிடக்கூடாது என்று கிடுக்கு பிடியாய் பிடித்து இந்தியாவிற்கு ஒரு வழியாக அவனை வரவழைத்து விட்டார்.
ஹர்ஷத் கோவை சென்று இரண்டு நாட்கள் அப்பாவோடு இருந்து விட்டு பின்பு சென்னை வரலாம் என்று பிளான் செய்ய... பாஸ்கரனோ சூட்டோடு சூடாக மகனை மருமகள் முன் நிறுத்தி விட வேண்டும் என்று பிரியப்பட்டு அவனுக்கு முன்னாலே சென்னை வந்து காத்திருந்தார்.
அதே சென்னை ஏர்போர்ட்டில் தாய்மாமா ராமஜெயத்தை வரவேற்பதற்காக ருத்ரனும் காத்திருந்தான் அதுவும் பாஸ்கரனுக்கு அருகில் அமர்ந்தவாறு..
தன் அருகில் அமர்ந்திருப்பவன் பெரும் பதவியில் இருப்பவன் என்பதை கண்டு கொண்ட பாஸ்கரனும் வலிய சென்று ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டார்.
மும்பை விமான முதலில் வந்துவிட ராமஜெயத்தை ரிசீவ் செய்தவன் ஆதினியின் உடல்நிலை பற்றி கூறிக்கொண்டே அவரை அழைத்துக் கொண்டு சென்றான்.
பேத்தியின் உடல்நலையை கண்டது கேட்டது முதல் அவளை காணத் துடித்தவர் மந்திரியின் மிக முக்கிய மீட்டிங் ஒன்றில் மாட்டிக் கொண்டார். மீட்டிங் முடித்த உடனே தனது வேலையையும் தற்காலிகமாக ராஜினாமா செய்துவிட்டு, பேத்தியை காண ஓடி வந்து விட்டார் ராமஜெயம். ஆறு நாள் குழந்தையிலிருந்து தூக்கி வளர்த்தவர் அல்லவா? பெரும் தவிப்பு எத்தனை நாட்களாக அவர் மனதில். ஆதினியை கண்டவுடன் அதெல்லாம் பறந்து போனது!! "தாத்தா…" என்று கூவி அழைத்தவளை மடியில் அமர்த்தி அழகாக அரவணைத்துக் கொண்டார். அவளும் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதை பேச ஆரம்பித்தாள்.
அவளும் மருத்துவமனையில் அனுமதி வைக்கப்பட்டதிலிருந்து நடந்தவற்றையெல்லாம் கூறி கூறி அவ்வப்போது ஊசி போட்டது மருந்து சாப்பிட்டது எல்லாம் சொல்லி கதை பேசிக் கொண்டிருந்தாள். அந்த கதையில் முக்கால்வாசி மகதி மகதி மகதி மட்டுமே!!
ராமஜெயத்துக்கு கூட அவ்வளவு ஆச்சரியம் 'யார் அந்த மகதி?' என்று கேட்க.. ஆனாலும் அவளாகவே சொல்லட்டும் என்று காத்திருந்தார்.
அவள் சொல்ல தேவையே இன்றி வந்தாள் மகதி, ஆதினி மற்ற குழந்தைகளை பார்க்க… ஒவ்வொரு குழந்தையாக பார்த்துவிட்டு ஆதினியிடம் வந்தவள், "ஹாய் பேபி!! என்ன பண்ற?" என்று அவளிடம் பேசிக் கொடுத்துக் கொண்டு அவரது வைட்டல்ஸ் எல்லாம் செக் செய்தவள் அன்று காலை எடுக்கப்பட்ட பிளட் டெஸ்டையும் பார்த்தாள்.
அளவுக்கு அதிகமாக போதை மருந்தினால் பிள்ளைகளுக்கு ஏதேனும் தொந்தரவு வருகிறதா என்பதை அறிய.. தினமும் காலையில் ஒரு முறை ரத்த பரிசோதனை எடுப்பதை வழக்கமாக கொண்டு வந்திருந்தாள். கூடவே இரண்டு நாளுக்கு ஒரு முறை முழு பரிசோதனை இவள் கூடவே இருந்து செய்தாள்.
முதலில் இந்த மருத்துவமனையில் எப்படி சிகிச்சை இருக்குமோ என்று பயந்த மற்ற பெற்றோர்களும் மகதி மகாதேவன் மற்றும் அவளது டாக்டர் நண்பர்களின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பை பார்த்து வியந்து புகழ்ந்தனர்.
அதிலும் இது ருத்ரன் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கமான முறையில் அதிக தொகையில் பில்லெல்லாம் மகாதேவனால் போட முடியவில்லை. அப்படியே போட்டாலும் மகள் விடமாட்டாள் என்று அவருக்கு தெரியும், அதனால் பணம் வரவில்லை என்றாலும் புகழ் வரட்டுமே என்று அதன் போக்கிலேயே சென்றார்.
"மதியம் சாப்பிட்டியா பேபி? ஜூஸ் குடிச்சியா?" என்று ஒவ்வொன்றாய் கேட்டுக் கொண்டு அவளுக்கு மருந்தையும்.. வலிக்காமல் ஊசியையும் மகதி போட்டு விட அத்தனையும் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ராமஜெயம். ருத்ரன் அவசர வேலை என்று வெளியில் சென்று இருந்தான்.
பேத்தியை இவ்வளவு சந்தோஷமாக பார்த்ததில்லை அவர்!! அதிலும் அந்த கண்களும் முகமும் அந்த சந்தோஷத்தில் மிளிர... ஆசையாக பார்த்தார் ஆதினியை!! கூடவே அவளின் மகிழ்ச்சிக்கு காரணமான மகதியையும் அன்போடு பார்த்தார்.
இருவருக்கும் உள்ள பிணைப்பையும் அவர்களின் ஆழ்ந்த அன்பையும் பார்த்த ராமஜெயத்திற்கு மனதில் சொல்லவெண்ணா நெகிழ்ச்சி!! ஏக கற்பனைகள்!! கற்பனைகள் எல்லாம் கைகூடும் காலம் வருமா என்று அவருக்கு தெரியவில்லை!!
ஆதினிக்கு அனைத்து மருத்தும் கொடுத்துவிட்டு அவளை படுக்க வைத்த மகதி வெளியில் வர... அவள் பின்னால் வந்த இராமஜெயம் அவளிடம் பேத்தியின் உடல்நிலை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். கூடவே அவள் காட்டும் அக்கறையையும் அன்பையும் புகழ்ந்து கொண்டிருக்க... அதே சமயம் அங்கு வந்து மகாதேவன் ராமஜெயம் யார் என்பதை அறிந்தவருக்கு, இன்னும் திகில் பிடிக்க... அவசரமாக அவரிடம் பாஸ்கரனின் மகன் ஹர்ஷத்தை காட்டி "என் வருங்கால மாப்பிள்ளை!!" என்று ராமஜெயத்துக்கு தான் முதலில் அறிமுகப்படுத்தினார். மனதில் லேசாக வருத்தம் இருந்தாலும் அதை மறைத்து, மாப்பிள்ளையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹர்ஷத்தை சரியாக கூட பார்க்காமல்.. பார்க்க மனமி
ல்லாமல்.. "வாழ்த்துக்கள் மா!!" என்றார் மகதியிடம், அவளின் அதிர்ந்த முகத்தை சரியாக கவனிக்கவில்லை!!