மோகங்களில்…15
இரண்டு நாட்களானது அனு அந்த வீட்டுக்கு வந்து. ஒரு விருந்தாளி போல் தான் அவளுக்கு அந்த இடம் ஒட்டவே இல்லை!! ஏனோ பீச் ஹவுஸில் அவள் தனியாக இருந்தபோது ஒரு உரிமையுடன் தான் அங்கே வலம் வந்தாள். குழந்தை பிறக்கும் வரை தான் அவ்வீடு என்று தெரிந்திருந்தாலும் ஒரு ஓட்டு உணர்வு வந்திருந்தது. அந்த வீட்டில் ஆட்கள் இல்லை என்றாலும் அந்த வீடு அவளுக்கு ஒரு உரிமை உணர்வு கொடுத்து இருக்க.. இங்கே சசிகலாவும் அவரது கணவர் திருமலைசாமியும் அவளை தாங்கினாலுமே ஏனோ ஒரு ஒட்டாத உணர்வு தான்!! என்னவென்று அது தெரியவில்லை அவளுக்கு!!
சசிகலா நன்றாக தான் பேசினார்! நன்றாக பார்த்துக் கொண்டார்! தேவை அறிந்து அவள் கேட்க முன்னே அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்தார்!! அவள் அறையிலேயே அடைப்பட்டு இருந்தாலும் அவரே வந்து பேசினார்! இவளை இழுத்து தன்னுடன் வைத்து பேசுவார்!! ஆனால் சாவித்ரி அம்மாவிடம் நீண்ட அவளது வாய் இவரிடம் சற்று அடங்கிய தான் இருந்தது.
துருவுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. எந்த ஆணுக்கும் மனைவியும் அம்மாவும் ஒரே வீட்டில் இருந்தால் திக் திக் என்று தான் இருக்கும். இங்கேதான் இருவருக்கும் ஒருத்தரை ஒருத்தர் உறவு நிலை தெரியாது அல்லவா?? அதனால் இணக்கமாக தான் இருந்தனர்.
இணக்கம் பிணக்கம் கொள்ளும் நாளும் வந்தது விரைவில். அதில் மனச் சுணக்கம் கொண்டது யார்??
பகல் எல்லாம் துருவின் அம்மா அவளோடு இருப்பதால் மதியம் வலுக்கட்டாயமாக தூங்க வேண்டும் என்பது போலவே சொல்லி அறைக்குள் செல்பவள் துருவோடு பேச விரும்பினாள். அவளை அறியாமலே அவனின் அருகாமையை அவளின் மனம் தேடியது.. அவனின் ஆண்மையை நாடியது..!!
இவள் வந்த நாள் எதுவும் தெரியலை.. பகல் வேளை ஒருவாறாக சென்றது. ஆனால்.. அன்று இரவு ஏனோ தூக்கம் வராமல் தவித்தாள். புதிய இடம் என்பதால் அவ்வாறு இருக்கும். ஆனால்.. போக போக பழகிடும் என்று அவளுக்கு அவளே ஆறுதல் சொல்லிக் கொண்டாலும்.. எதுவோ இழந்ததை போலவே உணர்ந்தாள்.
அனு அம்மாவிடம் சேர்ந்து விட்டாள் என்பதிலேயே துருவுக்கு பாதி நிம்மதி! இங்கு என்றாலும் அவர் பார்த்துக் கொள்வார். ஊருக்கு போனபின் பிரச்சனை வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று நிம்மதியாக இருந்தான். அதனால் வீணாக அவளுக்கு கால் செய்து பிரச்சினையை விலை கொடுத்து வாங்காமல் அமைதியாக இருந்து விட.. அவன் ஃபோன் செய்யாதது ஏனோ உறுத்திக் கொண்டே இருந்தது அவளுக்கு. முதல் நாள் பொறுத்திருந்து பார்த்தவள் மறுநாள் இவளே அழைத்து விட்டாள் அவனுக்கு.
ஏதும் அதீத தேவை என்றால் கூட சுகன் மூலமாகத்தான் துருவை இதுவரை அவள் அணுகி பழக்கம்!! அவனின் எண்ணை அவசரத்திற்காக கொடுத்திருந்தாலும் கூட மழை வந்தபோதுதான் அவளாக அழைத்து சமையல் பெண்மணி சொன்னதை கூறினாள்.
மற்றபடி தேவை என்று கூட இருவரும் அழைத்துக் கொண்டதில்லை. அவன் தான் அவ்வப்போது சாவித்ரி அம்மா சென்ற பிறகு இவளது உடல்நிலை கேட்டு தெரிந்து கொள்வான். இப்பொழுது அவன் அழைக்காமல் போகவே.. அதுவே ஒரு சுணக்கம் அவளுக்கு! இரவும் தூக்கமின்மை!! மறுநாள் ஏனோ தனிமையை உணர்ந்தாள் அனு.
அத்தனைக்கும் திருமலை மற்றும் சசிகலா இருவரும் ஹாலில் அவள் அருகில் தான் அமர்ந்திருந்தனர். இவள் அறையில் இருக்கவும் சசிகலாவே சென்று அவளை அழைத்து தங்களோடு அமர்த்திக் கொள்ள… தம்பதிகள் இருவரும் பொதுவான விஷயங்கள் பேச.. அதில் மனம் இவளுக்கு லயிக்கவில்லை.
‘ஏன் இவன் ஃபோன் செய்யவில்லை? ஏன் செய்யவில்லை?” என்று அதிலேயே துருவையே மனம் சுற்றி சுற்றி வந்தது. அவளையும் அறியாமல் மனதுக்குள் நுழைந்து இருந்தான் அவளால் அங்கிள் என்று அழைக்கப்படும் ஆண் மகன்!!
“ஆன்ட்டி.. இதோ வந்துடுறேன்” என்று மெதுவாக எழுந்து அறைக்குள் சென்றவள், தயக்கத்தை விரட்டி அவனுக்கு ஃபோன் செய்தாள் ஒரு எதிர்பார்ப்போடு!!
எப்படியும் இரண்டு மூன்று நாட்களுக்கு சென்னை திரும்ப முடியாது. அதுவரை இங்கு உள்ள வேலையை பார்க்கலாம் என்று வேலையில் மூழ்கி விட்டான் துருவ்.
அதனால் வழக்கம்போல ஃபோனை சைலண்டில் போட்டு விட.. இவள் ஃபோன் செய்தது தெரியவில்லை.
அதை விட அனு ஃபோன் செய்வாள் என்று எதிர்பார்ப்பு இல்லை!!
இரண்டு மூன்று முறை அழைத்துவிட்டு, அவன் எடுக்கவில்லை என்றதும் கோபம் முகிழ்ந்தது பெண்ணுக்கு. “அவனுக்கு நானா போன் செய்தால் இவன் எடுக்க மாட்டானா? இனி இவன் செய்யட்டும்.. அப்போ இருக்கு இவனுக்கு!” என்று ஏக மரியாதையில் அவனை திட்டி விட்டு மீண்டும் வந்து சசிகலா தம்பதியரோடு அமர்ந்து விட்டாள். மதியம் உண்டு விட்டு சிறிது நேரம் உறங்கி எழுந்தாள்.
உறங்கி எழுந்து ஒரு ஆவலோடு அவள் ஃபோனை பார்க்க.. அவனிடமிருந்து அழைப்பு வரவே இல்லை!!
“அவ்வளவு தூரம் ஆயிடுச்சா என்ன்? அங்க போனதுக்கு அப்புறம் என்னை மறந்தாச்சா என்ன? பாதுகாக்க தான் இப்போ சாவி மா மாதிரி அவங்க அம்மாவே இருக்காங்க.. அப்புறம் ஏன் அந்த அங்கிள் எனக்கு கூப்பிட போறான்?” என்று மனதுக்குள் பொறுமியவளுக்கு அன்று இரவும் தூங்கவே இல்லை.
தூக்கம் வரவில்லை என்றால் இவர்களிடம் ஏதாவது நச்சரித்துக் கொண்டு பேசிக்கொண்டே இருப்பாள். அவனும் இவள் அருகே அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டே உம் கொட்டுவான்.
சில நேரம் “கால் ரொம்ப வலிக்குது” என்று அவள் ஆரம்பித்தால், கீசரை போட்டு விட்டு டப்பில் சுடுதண்ணி பிடித்து வந்து அவள் கால் கீழே வைத்து “இதில் கால வை” என்பான்.
அவளுக்காக குழந்தைக்காக செய்வதில் இப்பொழுது அவன் பெரிய கௌரவம் எல்லாம் பார்ப்பதில்லை! சின்ன சின்ன வேலைகளை அவளுக்காக செய்து கொடுத்துக் கொண்டுதான் இருந்தான்.
இரவில் அவளுக்கு பசிக்கும் என்று அறிந்து பால் பழங்கள் பிஸ்கட் கொண்டு வந்து வைப்பது.
இவளுக்கு கால் வலிக்கிறது என்றால் சுடுதண்ணி பிடித்துக் கொண்டு வைப்பது.. இன்னும் சில சமயங்கள் சாப்பிடாமல் அடம் பிடித்தால் கூட அதட்டி உருட்டி சாப்பிட வைப்பது.. அவளுக்கு பிடித்த உணவுகளை தாரதியிடம் கேட்டு அவள் அனுமதி உடன் வாங்கிக் கொடுப்பது.. என்பது போல…!!
சாவித்ரி அம்மா சென்ற பிறகு இவர்களது நெருக்கம் சற்று அதிகரித்திருக்க.. இன்று அவன் இல்லாமல் தனியே இருப்பது பெரும் ஏக்கத்தை பெண்ணிடம் ஏற்படுத்தியது.
இருவரும் காலம் காலமாக பழக விடிலும்.. அந்நியோன்யமாக வாழ்ந்திடா விடிலும்.. காதல் நேசம் என்று வாய் வார்த்தைகளாக கூறி கொள்ளா விடிலும்.. அவர்களுக்குள்ளேயே மெல்லிய நேசம் இழையோடிக் கொண்டுதான் இருந்தது.
அனு அவனது அம்மா வீட்டில் இருக்கிறாள். அதனால் கண்டிப்பாக பாதுகாப்பாக இருப்பாள். அவளைப் பற்றி பயம் இல்லை என்ற உணர்வோடு தான் அவன் தன் வேலையை பார்த்து முடித்து இரவு போல் தான் தங்கியிருந்த அறைக்கு வர.. வரும்போது காரில் பார்த்து விட்டான். “வாட்.. இத்தனை ஃபோன் கால்ஸா? அதுவும் அனுவிடம் இருந்தா?” என்று அதிர்ச்சி ஒரு பக்கம், “என்னாச்சு இவளுக்கு? எனக்கு ஃபோன் பண்ணி இருக்கா?” என்று பதட்டம் மறுபக்கம்.. திரும்ப அவளுக்கு அழைத்தான். அவளோ எடுக்கவே இல்லை..!!
*நான் பண்ணும் போது நீ எடுத்தியாடா? டபரா மண்டையா? நான் மட்டும் உனக்கு ஏன் ஆன்சர் பண்ணனும்? முடியாது போடா!! அங்கிள்.. சரியான பூமர் அங்கிள் டா நீ!” என்று ஃபோனை பார்த்து திட்டிக் கொண்டே இருந்தாள். அவனும் இவளுக்கு அழைத்துக் கொண்டே இருந்தான். கையில் வைத்து அதை பார்த்துக் கொண்டே இருந்தாளே ஒழிய.. கூடவே அவனுக்கு திட்டிக் கொண்டிருந்தாளே ஒழிய.. அவனிடம் பேசவே இல்லை..!!
இரவு உணவின்போது மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போது கூட அனுவின் ஃபோன் அடித்தது. நல்ல வேளை இவள் அவன் பெயரை டிவி என்று சுருக்கமாக வைத்திருக்க.. அவனது பெற்றோருக்கு தெரியவில்லை!
“யாருமா? ரொம்ப நேரமா அடிச்சிட்டு இருக்காங்க.. நீ எடுக்கவே மாட்டேங்குறியே?” என்ற சசிகலா கேட்க.. அவள் மீண்டும் ஃபோனின் சத்தத்தை குறைத்து வைத்ததைக் கண்டு “ஓ உன் வீட்டுக்காரனா? உங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனையோ?” என்று சிரிக்க..
“அது சண்டை இல்லம்மா.. ஊடல் போல மா” என்று திருமலையும் மனைவியிடம் ரசித்துக் கூறினார். அவரது கண்ணில் அவர்களின் கூடல் கொண்ட காலமும், அதற்கு பின்னான கூடலும் இப்போது ரசனையாய் மலர்ந்தது.
என்ன சொல்வது என்று தெரியாமல் “ஆமா ஆண்ட்டி! காலையிலிருந்து நான் ஃபோன் பண்றேன் எடுத்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்ல! வேலைன்னு வந்துட்டா எங்களையெல்லாம் சுத்தமா மறந்துடுறது.. இப்ப கூப்பிட்டா மட்டும் நான் எடுக்கணுமா? கொஞ்ச நேரம் அவஸ்த்திப்படட்டும் ஆன்ட்டி” என்று கூறியவுடன் சிறு பிள்ளைகளின் இந்த ஊடலை கண்டு ரசித்தனர் முதுமை தம்பதிகள்.
“அதுக்குன்னு ரொம்ப நேரம் ஃபோனை எடுக்காம விட்டுடாதம்மா! என்ன தான் இருந்தாலும் வேற ஒருத்தவங்க வீட்டுல இரூக்குற உன் பத்திரத்தை கேட்டு ஃபோன் பண்ணு பண்ணுவாரா இருக்கும். அவருக்கும் உன் நினைப்பு இருக்கும் தானே? அதையும் விட வேலை அதிகமாக இருந்திருக்கும்! இல்லைனா எல்லாத்தையும் விட.. எங்கள் மீதான நம்பிக்கை!! அதனால் உன்னை பற்றி கவலை இல்லாமல் இருந்திருக்கலாம். அப்படி இருந்தா அது எங்களுக்கு சந்தோஷம் தானே?” என்றார்.
“ஆம்..!” என்று தலையாட்டிக் கொண்டவள் அதன் பிறகு மெல்ல அறைக்கு சென்றாள். சசிகலா பேசியதெல்லாம் அவள் காதில் வாங்கவே இல்லை. ‘இவர் சொன்னால் நான் கேட்கணுமா? இவர் புள்ள சொன்னாலே நான் கேட்க மாட்டேன்!’ என்றவள் முதலில் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்ய தான் நினைத்தாள். “வேண்டாம் இவன் அடித்து அடித்து ஓயட்டும்” என்று விட்டு படுத்து உறங்கி விட்டாள்.
நடு இரவில் அவளுக்கு பசித்தது. எழுந்தவள் வழக்கம் போல “சார்.. சார்.. பசிக்குது” என்று அருகில் துருவ் உறங்குவதாக நினைத்து தலையணையை தலைவன் என்று உசுப்ப.. அப்பொழுதுதான் புரிந்தது அவள் எங்கே இருக்கிறாள் என்று!!
“இப்ப பசிக்குது என்ன பண்றது?” என்று இவளே சென்று பாலை காய் காய்த்து அருந்திவிட்டு வர அத்தனை அலுப்பு. கூடவே அந்நியர் வீடு வேற.. வேற வழியின்றி செய்து குடித்துவிட்டு தான் படுத்தாள். ஆனால் இப்போது உறக்கம் வரவில்லை.
“கால் கூட லேசாக வலிப்பது போல இருக்கே..” காலை முடியாமல் குனிந்து நீவிக் கொண்டே இருந்தாள்.
இதே போல் நடு இரவில் கால் வலிக்குது என்றால் சில சமயம் எழுந்து சுடு தண்ணீர் குடித்து தருவான். பல சமயங்களில் “காலை நீட்டு..” என்று அவள் கால்களின் மேல் தன் கால்களை போட்டு விடுவான். முதலில் அதிர்ந்தாலும் அவனும் நன்றாக தூக்கத்திலேயே “வெயிட் போட்டால் கால் வலி குறைந்துவிடும். அப்படியே தூங்கிடு” என்று தூக்கத்திலேயே உளறுவான். அதுவும் இப்போது சில நாட்களாக இவர்களுக்குள் பழகிய ஒன்று! அவனது அருகாமையையும் அந்த தேக்குமரக்காரனின் அழுத்தமான கால்கள் வேண்டுமென அனுவின் ஒவ்வொரு அணுவுமே தேடியது.
மாலையில் இருந்து அனுவுக்கு அழைத்து அழைத்து அலுத்துப் போனான் துருவ். முதலில் ஏதும் அவசரமாக இருக்குமோ என்று அன்னைக்கும் தந்தைக்கும் அழைத்து நலம் விசாரிப்பது போல அவளது நலத்தை விசாரித்துக் கொண்டான்.
“ஆனால் ஏன் இவள் என் காலை புறக்கணிக்கிறா?” என்று மட்டும் அவனுக்கு புரியவில்லை. ஒரு வேளை இந்த அதிரடிப்படை நம்மை பழி வாங்குவது போல.. என்று நினைத்து சிரித்துக்கொண்டவன், படுக்கையில் விழுந்து விட்டான். வேலை மிகுதியால் அந்த களைப்பில் உறங்கி விட்டான்.
ஆனால் நடுராத்திரியில் எழுந்து “அனு..” என்று கத்தி அருகினில் அவன் தேட.. அருகே அவளை காணாமல் “அனு.. அனு..” என்று சத்தமாக கத்தியவாறு மெத்தையை துலாவினான்.
அதே அறையின் வெளிபுறம் மற்றொரு மெத்தையில் படுத்திருந்த சுகன் இவன் சத்தத்தில் அரண்டு எழுந்த வந்து “பாஸ் என்னாச்சு? என்ன ஆச்சு? ஏன் மேடத்தை தேடுறிங்க?” என்று பதட்டமாக கேட்க.. அப்போது தான் துருவுக்கு தான் சிங்கப்பூரில் இருப்பது புரிய…
“இல்ல ஒரு கெட்ட கனவு” என்று படுத்தவனுக்கு திரும்பவும் உறக்கம் பிடிக்கவில்லை.
நடு இரவில் தூங்கும் அவனது முதுகில் முட்டும் அந்த பெரிய வயிறும்.. அவ்வப்போது வயிற்றில் இருந்து உதைக்கும் சிறு சிற் அசைவுகளும்.. கால் வலிக்கிறது என்று இவன் காலுக்கு கீழே இருக்கும் தந்த கால்களின் மென்மையும் அதன் வழவழப்பும்.. அதையெல்லாம் தாண்டிய பெண்ணின் வாசமும்.. என்று அவனுள் ஆட்டிப்படைத்து அவளை தேடியது ஆண்மகனின் உள்ளம்.
மறுநாள் காலை எழுந்ததுமே இவன் அழைக்கவும் உடனே எடுத்து விட்டாள் அனு. இருவரும் சிறிது நேரம் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை! அமைதியாக அடுத்தவரின் இருப்பை அவதானித்து.. தங்களுக்கு இடையே இருந்த இடைவெளியை உணர்வுகள் மூலம் நிரப்பிக் கொண்டிருந்தனர்.
“ஏன் போன் எடுக்கல அனு?” என்று மென்மையாக இவன் கேட்க.. அதே கேள்வியை பின் அவளும் கேட்டாள் குரல் தழுதழுக்க “நீங்க ஏன் போன் எடுக்கல?” என்று.
“ம்ப்ச்… நான் கேள்வி கேட்டதுக்கு நீ பதில் சொல்லு? என்றவனுக்கு அவள் தழுதழுத்த குரல் ஏதோ செய்தது.
“நீங்க பய்ஸ்ட் பதில் சொல்லுங்க! நானும் தான் காலைல இருந்து அத்தனை கால் பண்ணுனேன். நீ எடுத்தீங்களா?” என்று மறு கேள்வி கேட்டாள். அவனுக்கு புரிந்தது நாம் எடுக்காதத்தால் தான் இந்த அம்மணி போன் எடுக்கவில்லை என்று.
“நீ அங்க அம்மா அப்பா கூட தானே இருக்க? எங்க அம்மா உன்னை பத்திரமா பாத்துக்கு வாங்கனு எனக்கு தெரியும்? அதனால தான் நான் பண்ணல.. அதுவும் இல்லாம ரெண்டு நாள் எப்படியும் இங்க தான். சரி கொஞ்சம் பிசினஸை முடித்துவிட்டு வரலாம் அப்படின்னு நினைச்சு.. இங்க உள்ள கிளையன்ட் ஓட ஆபீஸ்க்கு போயிட்டேன். அங்க எனக்கு நேரம் இழுந்துருச்சு” என்றான் தன்னிலை விளக்கம்! இம்மாதிரி விளக்கம் எல்லாம் அவன் வாழ்நாளில் இதுவரை யாரிடமும் கொடுத்தது கூட கிடையாது. அவன் அம்மாவிடமும் ஏன் அப்சராவிடம் கூட சொன்னது கிடையாது.
“உங்க அம்மா கூட இருந்தா எனக்கு ஃபோன் பண்ண மாட்டீங்களா? என் நல்லதை கேட்க மாட்டீங்களா? என்ன தான் உங்க அப்பா அம்மாவா கூட நான் இருந்தாலும், எனக்கு புதியவர்கள் தானே.. அவங்க உங்கள மாதிரி இல்லை தானே?” என்ற அவளின் வார்த்தைகளுக்கு பதிலில்லை அவனிடம்!
“சரி.. இனி ஃபோன் செய்றேன் அனு. இப்ப நீ சொல்லு! நீயே ஏன் ஃபோனை எடுக்கல?” என்று அவன் கேட்க…
“நீங்க எடுக்கலைன்னு கோவத்துல நான் எடுக்கல. உங்களுக்கு என்னை தேடவே இல்லையா? நான் ஃபோன் பண்ணி கேட்பேனு யோசிக்கவே இல்ல நீங்க.. அந்த கோபம் தான்!” என்றால் வெடுக்கென்று.
“என்னை.. என்னை.. நீ தேடினியா அனு?” என்றவனின் வார்த்தைகளில்… அவன் அவளிடம் என்னவோ எதிர்பார்த்தான்.
என்ன என்னவோ? அவள் தன்னை தன்னளவு தேடினாளா? தன்னை நினைத்தாளா? என்றுதான்! இரவு அத்தனை நேரம் தூக்கம் வராமல் தவித்தோமே.. அதுபோல அவளும் தவித்து இருப்பாளா? என்று எண்ணங்களின் குவியல்கள் அவன் மனதை ஆக்கிரமிக்க.. அதை வாய் வார்த்தைகளால் கேட்டு விட முடியாமல், அவர்களின் உறவு நிலை தடுக்க.. அதைத்தான் மறைமுகமாக கேட்டுக் கொண்டிருந்தான் கோமகன்.
“ம்ம்ம்… ஐ மிஸ் யூ..” என்றவளின் வார்த்தைகள் அவனுள் மாயம் செய்ய..
“வீடியோ கால் வா…” என்று அழைத்தான் உரிமையாக!
இன்று துருவ் உணர்ந்த அந்த உரிமை இத்தனை நாட்களில் இல்லை. அமைதியாக பெண்ணை பார்த்தவாறு படுக்கையின் மெல்லிய வெளிச்சத்தில் கண்கள் முழுக்க அன்பை தேக்கி அவன் சாய்ந்து அமர்ந்திருக்க…
முதலில் சாதாரணமாக தான் அழைக்கிறான் என்று எடுத்தவள் அவன் கண்ணில் தெரிந்த பாவனையில்.. கூர் விழிகளை சந்திக்க முடியாமல் முகம் சிவக்க தலை திருப்பி உதட்டை கடித்தபடி இருந்தாள் மாது.
"அனு…!!" என்றவனின் குரல் குழைந்து வர…
"ம்ம்ம்..!!" என்ற சன்ன ஒலி மட்டுமே!!
அவனும் அனு என்று திரும்ப அழைக்க.. இவளும் இம் என்று கூற அடுத்தது என்ன பேசவென்று இருவருக்குமே தெரியாத மோனநிலை!!
துருவ் அனுவை பார்ப்பதும்..
பின்பு கீழ் உதட்டை கடித்தவாறு முகத்தை திருப்பிக் கொள்வதும்… சிகையை கோதுவதும்..
பின் அவளை ஆழ்ந்து பார்ப்பதுமாக இருந்தான்.
அவளோ அவன் பார்க்காத நேரத்தில் அவனையே பார்த்துக்கொண்டு அவன் பார்க்கும் நேரங்களில் நாணம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டும் இருந்தாள்.
மொத்தமே நான்கே நான்கு நாட்கள் பிரிவு தான். ஆனால்.. இருவரிடையே ஏதோ பல வருடங்கள் பிரிவை போல அவர்களை ஏங்க வைத்திருந்தது.
இருவரும் வீடியோ காலில் சிறுது பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்க.. பின்பு ஒரு கட்டத்தில் துருவ் “நான் சீக்கிரம் வர பார்க்கிறேன்” என்று ஃபோனை வைத்து விட்டான்.
அன்றிரவு வந்திறங்கியவன் மழையை கூட பொருட்படுத்தாமல் பல இடங்களில் சாலை மறைந்திருக்க.. திண்டாடி.. மாட்டி முழித்து.. சில இடங்களில் இறங்கி நடந்து ஒரு வழியாக ஆட்டோவில் நடு இரவில் மழைமில் நனைந்து வந்தியிருங்கியவனை கண்கள் கலங்க பார்த்தாள் மாது!!
கண்கள் கலங்க நின்றவளை கண்டவன் இரு பெரு விரலால் அவளது விழி நீரை துடைத்து "நான் இருக்கும் வரை உன் கண்ணில் இருந்து கண்ணீர் வரக்கூடாது சரியா?" என்று ஆணையிட்டான்.
சிரிப்போடு தலையாட்டியவளை உள்ளங்கையை அவள் தலையை வைத்து ஆட்டியவன் நெற்றியில் முத்தமிட்டான்
அதி மென்மையாக..
பெரும் பாசமாக…
நனி நேசமாக..
துளி காதலாக…
இந்த லாஸ்ட் லைன்ஸ் எப்பவும் உங்க கதையில் நா ரசிச்சு படிப்பேன்🤩🤩🤩🤩🤩
அந்த பெரும் பாசம்.... பெரும் காதலா எப்ப மாறும்🤩🤩🤩🤩🤩