அத்தியாயம் 4
ருத்ரன் காரை விட்டு இறங்கியதுமே போன் அடிக்க பார்த்தால் முரளிதரன் தான் அழைத்திருந்தார். "எஸ்.. ருத்ரன்…" என்றவுடன், அவர் "சார் அந்த ஈசிஆர் டிரக்ஸ் கேங்க்ஸ் பற்றி தான்…" என்று அவர் ஆரம்பித்தவுடன் பேசிக்கொண்டே ரிசெப்ஷனில் வழி கேட்டு இவன் வரவும்.. சீக்கராக இருந்த பையனிடம் இருந்து தப்பி மகதி ஓடி வரவும் சரியாக இருந்தது!!
அதன் பின் நடந்ததெல்லாம் சரித்திர நிகழ்வுகள் தான்!!
வாடிவாசல் காளையாக பாய்ந்து வந்தவள், அவனை முட்டி தள்ளியதோடு மட்டுமல்லாமல், ஃபோனையும் கபளீகரம் செய்திருந்தாள். முக்கியமான காலில் இருந்த ஃபோன் தெறித்து கீழே விழ... அதில் பலமான சேதாரம் என்னவோ அரை லட்சம் விழுங்கிய லக்ஸரி ஃபோனுக்கு!!
"அச்சச்சோ…!!" என்று இவள் அவனுக்காக பரிதாபப்பட… அவனது உதவியாளரின் கலெக்டர் சார் என்று விளிப்பில்.. அதிர்ச்சியில் இருந்தவளின் கன்னத்தை பழுக்க வைத்து மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தான் ருத்ரன்!!
டாடியின் செல்ல லிட்டில் பிரின்சஸாக வளர்ந்தவளுக்கு இதுவரை சட்டென்று யாரும் கை நீட்டியதில்லை. அதிலும்.. இவளின் வித்தியாசமான அணுகுமுறை சிறார்கள் மத்தியில் பெரும் மதிப்பும்.. அவர்களது பெற்றோர்கள் மத்தியில் நல்ல பெயருமே இதுவரை எடுத்து வந்திருந்தவள் வாழ்வில் முதலடி!! சும்மா நச்சுன்னு ஒரு அடி!!
அவ்வளவுதான் அவளுக்கு கண்கள் எல்லாம் இருட்டிக் கொண்டு வந்தது. கண்களுக்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கியது!!
இதுவரை படத்தில் கிராபிக்ஸில் மட்டுமே பார்த்து வந்திருந்த பறவைகள் கூட்டம் அவள் தலையைச் சுற்றி பறப்பது போலவே பிரம்மை!!
ஒரே ஒரு அடி தான்!! ஆனால் உலகத்தையே சுற்ற வைத்து விட்டானே என்று கண்களை இறுக்கி மூடியவளுக்கு... அந்த நேரத்திலும் "நான் என்ன இவன் பொண்டாட்டியா? இப்படி உரிமையோடு அடிக்கிறானே? காட்டான்! காட்டான்!!" என்று கோபம் துளிர் விட தொடங்கியது.
"யூ.. யூ… இடியட்!! கண்ணு தெரியல உனக்கு!! இப்படிதான் வந்து மேல் விழுவியா!! நெவர் எவர் திங்க் டு டச் மீ!!" என்று அடி தொண்டையில் கர்ஜித்தவனை தான் பயந்து பார்த்தாள் மாது!!
அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. அடுத்தது என்ன நடக்கும் என்பதை அவள் ஓரளவு யூகித்திருந்தாள். அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தாள்.. ம்ஹீம்!! முடியவே முடியாது போல… இந்நேரம் விஷயம் மகாதேவன் காதுக்கு சென்றிருக்கும்.
இன்னைக்கு நைட்… அதை நினைத்தாலே அவளுக்கு வயிறு கலக்கியது! பின்ன… மகாதேவன் அவள் கதற கதற.. தலை விண் விண் என்று தெறிக்க தெறிக்க… அட்வைஸ் மலையை மழையாக பொழிவாரே!! இப்படியாக தான் இருந்தது அவளின் யோசனைகள். எல்லாம் வேற லெவல் தான் அவளை மாதிரி!!
இதற்கிடையில் தன்னைத் துரத்திக் கொண்டு வந்த வாண்டை தேட.. அவனோ போன இடம் தெரியவில்லை!!
"கிரதகா.. எட்டப்பா… என்னை மாட்டி விட்டுட்டு இவன் எஸ்கேப் ஆகிவிட்டான்" என்று முணுமுணுத்து கொண்டவளை இன்னும் உக்கிரம் தணியாமல் தான் மிக மிக செல்லமாக பாசமாக பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்!!
ஆனால் வேறு சிலரும் அவர்களை சுற்றி கூடியிருந்தது அவளுக்கு கொஞ்சம் மன பயத்தை போக்கியது!!
அப்படி நின்று இருந்த ரெண்டு மூன்று பேரும் அவனுடன் வந்தவர்கள் என்பதும் அவர்கள் தான் கலெக்டர் சார் என்று ஒரு விளித்து பைலை கொடுக்கும் போது தான் அவளுக்கு பக்கென்று ஆனது இவன் காட்டான் இல்லையா கலெக்டரா என்று!!
"கிழிஞ்சது… இவனெல்லாம் இந்த மாவட்டத்துக்கு கலெக்டராக போட்டால்.. ஒரு தப்பு கூட நடக்காது!! போலீஸே தேவையில்லை!! பின்ன.. மேல விழுந்ததற்கே இந்த அடி அடிக்கிறானே.. மற்ற குற்றத்திற்கு எல்லாம் என்ன செய்வான்? ஆனாலும் என்னை நீ அடித்திருக்கக் கூடாது காட்டான் கலெக்டரே!!" என்று பொறுமியப்படி அவள் நிற்கும்போது கலெக்டர் வந்த விஷயத்தை அறிந்து மகாதேவன் வந்து விட்டார்.
அவனும் தன் பிஏ கொடுத்த பெண்ணின் மெடிக்கல் பைலை பார்த்துக்கொண்டு தன் எதிரில் இருப்பவளை அடித்தது கூட ஞாபகம் இல்லாமல்.. கண்களால் அதனை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அவன் அங்கே நின்றிருந்த தோரணையும் அவனுக்கு அருகில் நின்றிருந்த பாதுகாவலரையும் உதவியாளரையும் கண்டு மகாதேவனே வழியே சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"ஹலோ சார்.. ஐ அம் டாக்டர் மகாதேவன் கார்டியாலஜிஸ்ட்" என்று!!
"ஹாய் சார்!! ஐ அம் ருத்ர பிரதாப்" என்றதும் "வெல்கம் சார்" என்றார் மகாதேவன்!!
"சார் இந்த ஹஸ்பிட்டல் எங்களோடு தான். சார்.. பீட்டியாட்ரீசியனிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருக்கீங்க என்று கேள்விப்பட்டேன்…" என்று அவர் முடிக்காமல் நிறுத்த…
"எஸ் எஸ்.. என் பொண்ணு ஆதினிக்கு பீடியாடிக் டாக்டரை பார்க்க வந்தேன். நான் இங்க வந்து ஒன் மன்த் தான் ஆகுது" என்றதும் அவரும் தெரியும் என்பது போல தலையசைத்து சில ஃபார்மலான பேச்சு வழக்கோடு சற்று தள்ளி நின்ற மகளை பார்த்ததும் "மகதி…" என்று கூவி அழைக்க..
அருகில் சென்றதும் "சார் நீங்க பார்க்க வந்த பீடியாட்ரீஷியன் என் பொண்ணு மகதி ஸ்ரீ இவ தான்" என்றதும் அவ்வளவு பெரிய ஷாக்கை கேட்டவுடன் அதனை ஜீரணிக்க முடியாமல் முகத்தில் காட்டினான் ருத்ரன்.
'எதுக்கு இப்படி ஷாக் ஆகிறார்?' என்று மகாதேவன் திரும்பி மகளைப் பார்க்க.. அவளும் உதடு கடித்து வேறு பக்கம் திரும்பி நின்றுக் கொண்டிருந்தாள். 'சரி ஏதோ சித்து விளையாட்டை நம் மகள் ஆடி இருக்கிறாள்!' என்று தெளிவாக புரிந்தது அவருக்கு.
அதற்கள் மகதியை மேலும் கீழும் பார்த்தவன் 'இவளா.. இவளா.. நம் மகளை மாற்ற முடியும்?' என்ற தலையை உலுக்கி கொண்டவன் "சாரி சார்... இப்படி ஒரு டாக்டர் நான் எதிர்பார்க்கல!!" என்று சற்று நக்கலாக வெளிப்படையாகவே கூறி விட்டான்.
அவன் கூறாமல் விட்டாலும் அவன் முகமே அதனை ஏற்கனவே சொல்லிவிட.. இப்பொழுது மகதியை பாசமாக பார்ப்பது மகாதேவனின் முறையாயிற்று!!
அதற்குள் அவளும் 'அடித்தது இந்த காட்டன் பேசுறது என்னையா?' என்று முகம் சிடுசிடுக்க... "எனக்கும் உங்க பொண்ணை பார்த்து பேச இன்ட்ரஸ்ட் இல்ல!!" என்றவள் சட்டென்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் அப்படி சென்றது தனக்கு அவமானமாக எண்ணியவன், மகாதேவனிடம் "தேங்க்யூ டாக்டர்!!" என்று வார்த்தைகளை கடித்து துப்பு விட்டு வேகமாக சொர்ணம்மாவுக்கு ஃபோன் செய்து வீட்டுக்கு செல்லும்படி பணித்து விட்டு இவன் அலுவலகத்திற்கு சென்று விட்டான்.
கலெக்டர் மீது கோபத்தில் இருந்தவள் உள்ளே நுழைந்ததும் அங்கே கள்ளம் கபடம் அற்ற பிள்ளைகளை பார்த்து.. கோபத்தை சற்றே தள்ளி வைத்து, மீண்டும் கேம்ஸ் டேவை வெற்றிகரமாக முடித்துவிட்டே ஒவ்வொரு குழந்தைகளாக பார்க்க ஆரம்பித்தாள். அந்த கேம்ஸ் டேவில்
லாக் அண்ட் கீ கேம் விளையாடிய குழந்தைகளில் ஆதினியும் ஒருத்தி!!
சொர்ணம்மா ஹாஸ்பிடல் என்றதும் சற்று மிரட்சியோடு தான் உள்ளே நுழைந்தாள் ஆதினி!! ஆனால் அந்த தளத்தில் நுழைந்ததுமே வரையப்பட்டிருந்த கார்ட்டூனில் மனம் சிறிது பதட்டத்தை தணித்து அதை கவனிக்கலாயிற்று. ஒவ்வொன்றாக கவனித்து வர.. பிள்ளைகளுக்கே உரிய அந்த ரசிப்பு தன்மை தலை தூக்க.. சொர்ணமா பிடியிலிருந்து கையை விடுவித்துக் கொண்டு ஒவ்வொரு கார்ட்டூனையும் பார்த்து அதனை பற்றி கூறிக் கொண்டே சொர்ணம்மாவோடு நடந்தாள். அவள் பேச பேச அதற்கு ஆமோதித்தவரே அவரும் சென்றார்.
இவர்கள் அந்த பெரிய ஹாலுக்கு நுழையும் போது தான் லாக் அண்ட் கீ கேம் பற்றி கூறிக் கொண்டே இருந்த மகதியும் ஆதினியை பார்த்து "ஹாய் டார்லு பேபி… வா.. வா.. வந்து ஜாயின் பண்ணிக்க" என்று அவளையும் பிடித்து வைத்து போட்டி விதிகளை அவர்களுக்கு புரியும் வண்ணம் கூறி விளையாட ஆரம்பிக்க…
முதலில் புரியாமல் நின்றவளோடு மகதியும் சேர்ந்து இந்தப் பக்கம் அந்த பக்கம் என்று அவளை கையில் பிடித்துக் கொண்டே ஓட... மகதியின் இந்த சிறு அரவணைப்பான நடவடிக்கையும் ஆறுதலான பேச்சும்
ஆதினிக்கு மிக பிடித்துப் போக… கூட்டில் இருந்து வெளிவந்த பட்டாம்பூச்சியாக அந்த கேம் புரிகிறதோ இல்லையோ சிரித்து சிரித்து... கைதட்டி கைதட்டி.. மகிழ்ந்து மகிழ்ந்து.. விளையாடினாள் ஆதினி!!
அப்போதுதான் நிறைய பேர் லாக்காகி நின்றுவிட, அவர்களை விடுவிக்குவதற்காக களத்தில் குதித்த மகதியை துரத்திக் கொண்டு ஒரு வாண்டு ஓடி வர.. அந்த அறையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று வெளியில் வந்தவள் மாட்டிக் கொண்டது கலெக்டரிடம்!!
வந்தவன் உள்ளே வராமல் அப்படியே சென்று விட, இங்கு ஆதினிக்கு தந்தை வந்ததும் தெரியவே இல்லை. போனதும் தெரியவில்லை!! பிள்ளைகளோடு பிள்ளைகளாக இல்லை இல்லை மகதியின் அந்த உற்சாக கூச்சலும்… பிள்ளைகளுக்கு நிகராக இறங்கி விளையாடிய பாங்கும் அவளை வெகுவாக ஈர்த்திருந்தது. வேற எதையும் நினைக்க விடாதப்படி!!
கடைசியாக ஆடி ஓடி அனைவருக்கும் தண்ணீர் குடிக்க கொடுத்து ஒவ்வொருவராக பார்க்க ஆரம்பிக்கும் போது தான், ஆதினியை பார்த்து "நீங்க புதுசா இருக்கீங்களே டாலு பேபி?" என்றவள் ஆதினிப் பற்றிய மெடிக்கல் ரிப்போர்ட்டை கேட்க…
"அவங்க அப்பா எடுத்துட்டு வரேன்னாங்க டாக்டர்.. இன்னும் வரல. நீங்க அடுத்த குழந்தைகளை பார்த்துக்கொண்டே இருங்க, அவங்க வந்த உடனே நான் காட்டுகிறேன்" என்று சொர்ணாம்மா கூறவும், சரி என்று நகர்ந்தவளின் கைபிடித்து தடுத்த ஆதினி அவள் இடையோடு கட்டிக்கொண்டு "ஐ லைக் யூ டாக்டர்!!" என்றாள்.
"மை ப்ளஷர் டாலு பேபி!! மீ டூ!!" என்று அவளும் பேசிவிட்டு அடுத்த குழந்தைகளை அவள் கவனிக்க சென்று விட.. அப்போது ருத்ரனிடமிருந்து போன் வர.. செவிலியர் இடம் சொல்லிவிட்டு சொர்ணம்மா ஆதினியை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.
ஆதினிக்கு என்னவோ அங்கே சென்றது ஏதோ இவளை விளையாடுவதற்கு என்று நினைத்தாலும்.. அங்கு நடந்த பற்றி சலசலவென்று பேசிக்கொண்டு சொர்ணமாவோடு வீடு திரும்பினாள்.
அலுவலகத்திற்கு வந்த ருத்ரனுக்கு இருப்பு கொள்ளவே இல்லை.
"ச்சே என்ன இருந்தாலும் அடித்துயிருக்கக் கூடாது!! அதுவும் ஒரு பொம்பள பிள்ளைய!" என்று அவன் உள்ளிருந்த கொஞ்சூண்டு கொஞ்சம் நல்ல.. நியாய மனம் அவனை இடித்துரைக்க.. அலைப்பாய்ந்த கண்களோடு.. சொல்ல முடியாத தவிப்போடு ஜன்னல் வழியே வெறித்து இருந்தவனுக்கு அச்சமயம் ராமஜெயம் ஃபோன் செய்தார்.
எப்பொழுதும் ஆர்ப்பாட்டமாக மாமா என்பவன் இன்று அமைதியாக "சொல்லுங்க மாமா.." என்றதும் கேட்டது தன் காதுகளா என்று காதை நன்றாக குடைந்து விட்டு அழைத்தது நம்ம மருமகனுக்கு தானா என்று மீண்டும் நம்பரை ஒருமுறை செக் செய்தார் ராமஜெயம்.
"எல்லாம் நான் தான் பேசுறேன்!! உங்க காதிலும் நல்லா தான் கேக்குது. சொல்லுங்க…" என்றதும் சிரித்தவர், "என்னடா இன்னைக்கு அடிச்சு வெளுக்க யாரும் கிடைக்கலையா? அமைதியா இருக்கியே?" என்றதும்.. மீண்டும் ஒரு பெருத்த அமைதி அவனிடம்!! ஏற்கனவே அந்த பெண்ணை அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்வில்…
"பிரதாப்பா…" என்று அவர் ஆழ்ந்து அழைக்க.. அந்த அழைப்பே சொல்லியது என்னிடம் எதையும் மறைக்காதே என்று!!
சிறுவயதில் இருந்து தாய் தந்தையரை இழந்தவனை இந்நாள் வரை திருமணம் செய்து கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவர்தான். அதுவும் அவனது பல இக்கட்டான நேரங்களில் தோள் கொடுத்து.. துவண்டு நேரங்களில் தைரியமூட்டி.. சோர்ந்து கிடந்தவனை புத்துணர்வூட்டி.. சில சமயம் தன்னை மறந்து கிடப்பவனை மகளை காட்டி அவனை மீட்டு எடுப்பதற்குள் ஒரு பெரிய போராட்டமே போராடினார் ராமஜெயம். எங்கே மருமகன் மீண்டும் நந்தினி நினைவில் உழலுகிறானோ என்று நினைத்து தான் அவர் அழுத்தமாக கூப்பிட்டது.
"இல்ல மாமா... இது வேற.." என்றவன் "நான்.. நான்... ஒரு பொண்ண…" என்றதும் எதிர்முனையில் இருந்தவருக்கு பயங்கர ஷாக் என்ன பெண் என்கிறான் என்று!!
"என்னடா பண்ண? அடிச்சிட்டியா?" என்று சரியாய் கேட்க.. "எப்படி மாமா கரெக்டா சொல்லிட்டீங்க?" என்று அதிசயித்தான் மருமகன்!!
"பின்ன உன் மூஞ்சுக்கு லவ் ப்ரொபோஸலா பண்ணியிருப்ப.. இல்ல கல்யாணம் பண்ணிட்டேன் தான் சொல்ல போறியா?" என்று அவர் சிரிக்க.. இங்கே அவனோ பல்லை கடித்தான் நறநெறவென்று!!
"எனக்கு ஒரு பொண்ணு இருக்கா மாமா!!" என்றதும், "இருக்கட்டுமே டா!! உனக்கும் இன்னும் வாழ்க்கை இருக்கு தானே? நந்தினி ஓட எல்லாம் முடிந்து விடவில்லை!!" என்றார்.
"இந்த பேச்சு இப்போது வேண்டாம் மாமா!!" என்று கட்டுத்தெரித்தவனின் மனம் கட்டுக்குள் அடங்காமல் தவித்துக் கொண்டிருக்க.. அதை கண்டு கொண்ட மாமனும் "சரி சொல்லு.. எதுக்கு அந்த பொண்ண அடிச்ச?" என்று பேச்சை மாற்றினார்.
"அது ஒரு ட்ரக்ஸ் விஷயமா பேசிட்டு வந்துட்டு இருந்தேன் நான் முரளிதரன் சார் கிட்ட.." என்று சிறு வயது பாலகன் பள்ளிக்கூடத்தில் சண்டையிட்டு வந்ததை சொல்வது போலவே தயங்கி தயங்கி சொன்னவனை கண்டவருக்கு சிரிப்பு வந்தது. "இன்னும் நீ மாறவே இல்லையடா ப்ரதாப்பா" என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
அவன் சொன்னதை முழுதாக அவதானித்துக் கேட்டவர் "நீ செஞ்சது ரொம்ப தப்பு பிரதாப்!! மேல வந்து விழுந்தா உடனே அடிச்சிடுவியா?"
"இல்ல மாமா... சின்ன புள்ள தனமா நடந்துக்கிறா.. ஒரு டாக்டரா இருக்கும்போது.. இப்படி நடக்கலாமா? அவ்வளவு பெரிய போலீஸ் அதிகாரி கிட்ட அந்த ட்ரக்ஸ் கேஸ் விஷயாம டிஸ்கஸ் பண்ணிட்டு வந்தா அந்த பொண்ணு…" என்று சப் என்று அறைந்ததற்கு சப்ப காரணம் கட்டிக் கொண்டிருந்தான் கலெக்டர்.
"டேய்.. டேய்.. நிறுத்து டா!! அந்த பொண்ணு கிட்ட ஏதோ ஒன்னு இருக்க போய் தானே நீ கன்சல்ட் பண்ண போற? எல்லோர் மாதிரியும் இல்லாமல் ட்ரீட் பண்றா வித்தியாசமா பிள்ளைகள ஹேண்டில் பண்றா!! அதுக்காக நீ இப்படி பண்ணுவியா! நாளைக்கு முதல் வேலை போய் அவகிட்ட மன்னிப்பு கேட்கிற…" என்று எக்ஸ் மிலிட்டரி மேனாக அவர் ஆணையிட "சரி மாமா!!" என்றான் அடங்கிய மருமகனாக!!
அவனுக்கு இங்க வேலை ஓடவில்லை சரி இன்று மகளோடு நேரம் கழிப்போம் என்று வீட்டிற்கு சென்றவனை ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள் ஆதனி. 'ஒரே நாளில் என்ன இந்த மாற்றம்?' என்று தன்னை சுத்தப்படுத்தி வந்த மகளை தூக்கி போட்டு பிடித்து அவனும் அவளோடு தோட்டத்தில் ஓடி ஆடி களைத்து அந்த புல் தரையிலே... அப்பாவும் மகளும் மல்லாந்து படுத்திருந்தனர். வெகு நாளைக்கு பிறகான குதூக்கலம் கொண்டாட்டம்!!
எப்போதும் இப்படித்தான் அடித்து பிடித்து கடைசியாக அந்த தரையிலேயே மல்லாந்து விடுவார்கள். இது நந்தினி ஓட பழக்கம்!! அவளுடன் நடந்த சண்டைகள் சமாதானங்கள் எல்லாம் ஊர்வலமாய் மனதில் செல்ல தலையை உலுக்கி நிகழ்காலம் வந்தவன், மகளிடம் திரும்பி "என்னடா பட்டு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல?" என்றான்.
அவனின் எதிர்பார்ப்பு மகள் தான் சீக்கிரமா வந்ததை சொல்வாள் என்று இருக்க.. அவனின் எதிர்பார்ப்பை தவடு பொடியாக்கி "இன்னிக்கு ஹாஸ்பிடல் செமையா இருந்ததுப்பா கேம்!!" என்று அவள் கிள்ளை மொழியில் மருத்துவமனையில் நடந்த விளையாட்டை மிழற்றினாள். கேட்க கேட்க இன்னும் குற்ற உணர்வாய் போனது நம் கலெக்டருக்கு!!
மறுநாள் அவளை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கி சென்றவனை மீண்டும் கோபப்படுத்தி இருந்தாள் அவனை அணைத்து… "அதென்ன
நெவர் எவர் டேர் டூ டச் மீ.. என்று இனி சொல்வாயா என்று!!
ருத்ரன் இப்போது நரசிம்மனாய் நின்றான் சிலிர்த்து கொண்டு!!