நேசம் 7

 

Sunitha Bharathi
(@sunitha-bharathi)
Member Moderator
Joined: 4 months ago
Messages: 26
Thread starter  

நேசம் : 7

கிச்சன் வந்தவள் கிச்சனை அலச… எல்லாம் பளபளவென துடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

“எதுவும் சமைக்கிறது இல்லையா? வேலைக்கார அம்மா வர்றாங்க தானே?” என்று பின்னால் வந்து நின்ற கிருஷ்ணாவிடம் கேட்டாள் மீரா.

“நான் இருக்கும் போது மட்டும் சமைச்சு கொடுத்தா போதும்னு சொல்லிட்டேன்” என்றான் அவன்.

“இப்போ பசிக்குதே என்ன பண்ணுவ?” என்று கேட்டவள், பிரிட்ஜை திறந்து பார்த்தாள்.

முட்டையும், பிரட்டும் மட்டும் தான் இருந்தது.

“புரூட்ஸ் வாங்கி வச்ச உன் சொத்து அழிஞ்சிருமா?” என்று அவனை திட்டிக் கொண்டே பிரட் ஆம்லேட் செய்ய தயாராகி விட்டாள்.

“ப்ச்… காலியாகிடிச்சி டி” என்றான் அவன் சலிப்பாக.

“காலியான வாங்கி வைக்க மாட்டியா?” என்று அதற்கும் திட்டிக் கொண்டே அவள் பவுலில் முட்டையை அடித்து கலக்க ஆரம்பித்திருந்தாள்.

“வாங்கலாம்… வாங்கலாம்” என்றவன் பிரிட்ஜை கட்டிக் கொண்டே கண்கள் சொருக அவள் செயல்களை தான் கவனித்துக் கொண்டிருந்தான்.

“என்ன பண்ற?” என்றவன் கேள்விக்கு,

“பிரட் ஆம்லேட்” என்று சொல்லிக் கொண்டே நான்ஸ்டிக் தவாவில் முட்டை கலவையை ஊத்த போக,

“ஆனியன் போட்டு பண்ணிக் கொடு” என்று கூடுதலாக வேலை ஏவினான்.

அரைகணம் அவனை விழிகளை சுருக்கி கடுப்பாக பார்த்தாலும் அவன் கேட்டதை செய்து கொடுக்கவே விழைந்தாள்.

கூடையிலிருந்து வெங்காயத்தை எடுக்க, அந்த வெங்காயத்தோடு தொங்கி கொண்டு வந்த ஊர்வனத்தை பார்த்தவள்,

ஆ… என்று பயந்து அலறி வெங்காயத்தை தூக்கியே வீசி விட்டாள்.

தலை தொங்கிய நிலையில் பிரிட்ஜை கட்டிக் கொண்டு நின்றிருந்த கிருஷ்ணாவும், மீரா அலறலில் திடுக்கிட்டு ஏறிட்டு பார்த்தவன்,

“என்ன டி?” என்றான் சற்று சலிப்பான குரலில்.

“என்ன நொன்னடி? வீட்டுக்குள்ள பூராண் வளர்த்து வச்சிருக்க? நீ வீட்ல சரியா தங்குறது இல்லைனு அதுக்கு உள் வாடகைக்கு விட்டுட்டியா?” என்று கேட்டுக் கொண்டே கண்களை துழாவ விட்டு துடைப்பத்தை எடுத்து அதை அடிக்க கிளம்பி விட்டாள்.

இங்கே இன்னமும் பிரிட்ஜை கட்டிக் கொண்டு நின்றிருந்த கிருஷ்ணாவோ, “பூராணா?” என்று தோய்ந்த குரலில் கேட்டவனுக்கு அதன் பிறகு தான் அந்த உயிரினம் மனதில் பதிந்ததோ என்னவோ, “ஐயோ அம்மா! மீராஆஆஆ” என்று சற்று முன் அவள் அலறியதுக்கு மேலாக காட்டுக்கத்தலாக கத்தியபடி அவள் பின்னால் வந்து ஒளிந்தபடி அவளையே அணைத்து கொண்டான் பராக்கிரமசாலி.

அவன் கத்தல் கேட் அருகே நின்றிருந்த வாட்ச்மேன் வரைக்கும் கேட்டது.

அவரும் ஒருநொடி திடுக்கிட்டு வீட்டின் புறம் பார்வையை திருப்பியவர்,

“உள்ள என்ன நடக்குது? எதுக்கு தம்பி கத்துது? போய் பார்ப்போமா?” என்று யோசித்தாரே தவிர, சென்று பார்க்கும் எண்ணத்தை செயல்படுத்த அவர் மனம் விளையவில்லை.

அதற்குள் இங்கே மீராவோ, “கத்தாத…” என்று கிருஷ்ணாவை அடக்கியவள், தன் வயிற்றை சுற்றி பிடித்திருந்த அவன் கரங்களை பிரித்து விட, அவனோ அவள் தோள்களை பற்றியபடி தான் அவளை ஒட்டிக் கொண்டே வந்தான்.

மீரா தூக்கி எரிந்த போதே தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்த பூராணை அவள் விழிகள் தேடிட,

அதுவோ இவன் காட்டுக் கத்தலில் பயந்து சுவற்றின் ஓரத்தில் பதுங்கி கொண்டிருந்தது.

அதை கண்டுக் கொண்டவள் ஒற்றை அடியாக அடித்து அதை வெளியே தூக்கி போட்டு விட்டு வரும் வரை அவளை விட்டு நகரவே இல்லை அவன்.

“அது செத்து போச்சு விடு என்னை” என்று சொல்லிக் கொண்டே தன் தோளில் பதிந்திருந்த அவன் கைகளை எடுத்து விட்டவள், வேறு வெங்காயம் எடுத்து கழுவி வெட்ட ஆரம்பித்திருந்தாள்.

கிருஷ்ணாவோ அங்கிருந்த டைனிங் டேபிள் தலை சரித்து கண்களை மூடி கிடந்தான்.

பின்னால் திரும்பி அவனை பார்த்தவள், “தூங்கிடாத. உனக்காக தானே பண்றேன்” என்று அவனிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்திருந்தாள். பிறகு மட்டையாகி அவன் தூங்கி விட்டால் அவள் உழைப்பு அல்லவா வீணாகும்.

“இத பார்த்தே இப்படி பயப்படுற? நீயெல்லாம் எப்படி தான் இவ்வளவு நாள் இந்த வீட்ல தனியா இருந்தியோ?” என்று கேட்க,

“தனியா தான் இருக்கேன். அது என் தலையெழுத்து. நீ எழுதி வச்ச என் தலையெழுத்து. சாப்டியா? என்ன பண்ற? உனக்கு எதாவது வேணுமா?னு கேட்க தான் யாருமே இல்லையே. எட்டு வருஷத்துல நான் ரொம்ப பெரிய சாதனை பண்ணிட்டதா எல்லாரும் கொண்டாடுறாங்க. இந்த வளர்ச்சி எதுவும் என் அப்பா கண்ணுக்கு தெரியலையா? ஏன் அவர் எங்கிட்ட திரும்பி வரல? என் அம்மாவுக்கு கூட நான் ஆகாத புள்ளை ஆகிட்டேன்ல. ரொம்ப லோன்லியா பீல் பண்றேன்” என்றவன் வலி நிறைந்த வார்த்தைகள் அவளுக்கும் நெருடலாக தான் இருந்தது.

அந்த தாய், தந்தை பெற்ற மகனை ஒதுக்கி வைக்க அவள் தானே காரணம் என்று குற்றவுணர்வாக கூட இருந்தது.

ஆனால் அது அவர்கள் எடுத்த முடிவு. அதில் அவள் தலையீடு எதுவும் இல்லையே. அவர்கள் முடிவுக்கு மாற்றுக் கருத்து சொல்லியிருக்க வேண்டுமோ? என்று இப்போது தோன்றியது.

அவள் சொன்னாலும் அதை நெல்லையாண்டார் ஏற்றிருக்க மாட்டார் என்பது வேறு விஷயம். ஆனாலும் அவள் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைக்க வைத்திருந்தான்.

“அப்பா, அம்மாவ ரொம்ப மிஸ் பண்றியா?” கரகரப்பான குரலில் கேட்டாள்.

“ரொம்ப… அதை விட அதிகமா என் மீராவ மிஸ் பண்றேன். நான் எதாவது புதுசா பண்ணனும்னு நினைச்சா? இப்படி பண்ணாத… இதுல இவ்வளவு பிரச்சனை வரும். இப்படி பண்ணு இது ஈஸி மெதட்னு, அதுல இருக்கிற நல்லது, கெட்டது சொல்லிக் கொடுக்கிற என் மீராவ ரொம்ப மிஸ் பண்றேன். என் அப்பா அடிக்கிறத விட அதிகமான வலிகளை அவர் எங்கூட இல்லாத நேரத்துல அனுபவிச்சிட்டேன். தவறு செஞ்சி விழுந்து அடிவாங்கி நானே கத்துக்கிட்டு எழுந்து ஓடுறேன். என் மீரா எனக்கு கிடைச்ச பொக்கிஷம். அவளை ரொம்ப மிஸ் பண்றேன்” என்றவன் வார்த்தைகளில் இப்போது அவள் மீது இருக்கும் புரிதல் சில வினாடிகள் முன்பு ஏன் இல்லை என்பது அவளுக்கும் வருத்தமாக தான் இருந்தது.

சில நிமிடங்கள் முன்பு காரில் வைத்து இதற்காக கூட அவளிடம் சண்டையிட்டானே.

‘நான் ஒரு விஷயம் கத்துக்க நினைச்சா… நீ அதுல ப்ரோ அளவுக்கு கரைச்சி குடிச்சிட்டு வந்து நிற்ப’ என்று திட்டினானே.

அவன் கற்றுக் கொள்ள நினைப்பதை அவனுக்கு முன்பாக கற்று அதில் கை தேர்ந்து வந்து நிற்பாள் தான். அதுவும் அவனுக்காக. கடினப்பட்டு அவள் கற்றிருந்தாலும், அதில் இருக்கும் சூட்சமங்களை எல்லாம் எளிதாக அவனுக்கு கற்று கொடுக்கவே அவள் மேற்கொண்ட முயற்சிகள் தான் அது.

அப்போது பிடித்த மீராவின் அந்த செயல்கள் கூட குறை கண்ணால் பார்க்கும் போது பெரும் சதி செயலாக தான் தெரிந்தது.

‘ஏன் இப்படி மாறி விட்டான்? நான் எங்கே தவறிழைத்தேன்?’ என்ற யோசனையோடு, தவாவில் முட்டை கலவையை ஊற்றி பிரட் துண்டுகளையும் அதன் மேல் வைத்துக் கொண்டிருந்த மீராவை பின்னால் இருந்து அணைத்திருந்தான் கிருஷ்ணா.

“ஐ நீட் யூ மேட்லி… ஐ நோ… ஐ ஹேட் யூ. பட்… ஐ மேட்லி நீட் யூ…” என்றவன் மோகம் கலந்த வார்த்தைகளும், ஸ்பரிசங்களும், அவள் உடலை நடுங்க வைத்தது.

என்ன சொல்கிறான் இவன்?

உன்னை வெறுக்கிறேன். ஆனாலும் நீ வேண்டும் என்று கேட்கும் அவனின் மனநிலையை அவளால் கிரகித்துக் கொள்ளவே முடியவில்லை.

அவன் அணைப்பு அவளுக்கு ஒன்றும் புதிது இல்லை தான். சற்று முன் கூட அவளை அணைத்திருந்தானே. அது பயத்தில் அணைத்து கொண்டது. அந்த அணைப்பிற்கும், இப்போது தேகத்தை ஊடுருவி சென்று விடும் முனைப்பில் அவன் அணைத்திருக்கும் இந்த அணைப்பிற்கும் பாரிய வித்தியாசம் அவளால் உணர முடிந்தது.

விரல்கள் நடுங்க நின்றிருந்தவள், மேஜை விளிம்பை இறுக பிடித்து கொண்டு நின்றிருக்க, இன்னும் அவளை நெருக்கி அணைத்த கிருஷ்ணாவோ,

“யார் என் கூடா இல்லைனாலும், என் மீரா எங்கூட இருக்கணும். எனக்கு சப்போர்டிவா. எனக்கு வழிக்காட்டியா இருக்கணும்” என்றவன் அணைப்பு மேலும் மேலும் இறுகியது.

மீண்டும் அவளை இழந்து விட கூடாது என்ற தவிப்பும், பயமும் அந்த அணைப்பில் தெரிந்தது.

எல்லாம் அவன் சுயநினைவில் இல்லாத போது தான் இத்தனை தேடுதல். நிதானமாக இருந்திருந்தால் வீட்டிற்குள் கூட அவளை அனுமதித்திருப்பானோ என்னவோ.

சுயநினைவு இல்லாது அணைத்து கொண்டு நிற்கிறான். விலக்கி விடவா? வேண்டாமா? என்ற தயக்கம் பெருமளவு இருந்தது அவளுக்கு.

என்ன இருந்தாலும் இந்த நேரம், இந்த அணைப்பு தவறு தான். அதுவும் அவன் நிலையாக இல்லாத போது, அவளுக்கு உரிமையில்லாதவன் அணைப்பு. அடுத்து அவன் வாழ்வில் ஒரு பெண் வந்து விட்டால். இந்த நிலைமையில் நட்பு ரீதியாக கூட இந்த அணைப்பை கடந்து விட முடியவில்லை அவளால்.

ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்து கொண்டே தன் வயிற்றில் பதிந்திருந்த அவன் கரத்தினை விலக்க போராடியபடியே, “உனக்கு தான் என்னை பிடிக்காதே” என்றுக் கேட்டாள் வெறுமையான குரலில்.

ஆனால் அவன் தான் விலகியபாடில்லை. இவள் விலக்க முயல, அவன் மேலும் மேலும் அவளை இறுக்கி கொண்டான்.

“உன்னை பிடிக்காது. என் மீராவ பிடிக்கும்” என்று குழம்பினான்.

“ரெண்டு பேரும் ஒன்னு தானே”

“இல்ல… என் மீரா ரொம்ப நல்லவ. அவளோட எண்ணங்கள் மொத்தமும் இந்த கிருஷ்ணாவோட நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும். எப்பவும் என்னை ஹர்ட் பண்ண நினைக்க மாட்டா. யார்கிட்டேயும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டா. நான் தான் அவளுக்கு முன்னுரிமையா இருப்பேன். எனக்கு அடுத்து தான் அவ அப்பா, அம்மா பத்திக் கூட யோசிப்பா.”

“இப்பவும் அப்படி தானே யோசிக்கிறா? “

“பொய்… என்னை பத்தி அவ யோசிச்சிருந்தா இப்படி என்னை தனியா விட்டிருக்க மாட்டா. அவளுக்கு அந்த குழந்தை முக்கியமா போயிடிச்சு.”

“அது கிருஷ்ணாவோட குழந்தையா இருந்ததால தான் அவளுக்கு அது முக்கியமா இருந்துச்சு.”

“சமாளிக்க பார்க்கிற? கிருஷ்ணாவுக்காக அந்த குழந்தையே வேண்டாம்னு முடிவு எடுத்தவ என் மீரா. அப்புறம் என்னாச்சு? ஏன்? ஏன்? அவ்வளவு பெரிய டிராமா பண்ணி… என்னை மொத்தமா எல்லாரையும் விட்டு பிரிச்சிட்ட?” என்று அவளை தன் பக்கமாக திருப்பி அவள் கண்களை பார்த்து கொண்டே கேட்டான்.

தான் என்ன சொன்னாலும் இந்த நிலையில் அவனுக்கு புரியாது என்று தெரியும். இருந்தாலும் அவனுக்கு விளக்கம் சொன்னாள்.

அதில் அவன் திருப்தியாகிறானா இல்லையா என்பதை விட, அவன் மனதில் இருக்கும் தன்னை பற்றிய தவறான சித்தரிப்பிற்கு தன்னால் பதிலளிக்க முடிகிறதா என்று அவளுக்கு அவளே தெளிவு படுத்தி கொள்ளவே பதிலளித்தாள்.

“ஒருசில விஷயம் அவளையும் மீறி நடந்துருச்சி. அத அவளால கூட கேண்டில் பண்ண முடியல. என்ன பண்ண சொல்ற? அப்போ கூட நீ கேட்டு தானே உன்னை விட்டு விலகி போனா” என்று சொல்ல,

“எப்பவும் நான் ராங் டிசிஷன் எடுத்தா. அது தப்புனு எனக்கு சொல்லுவா தானே. ஏன் இந்த விசயத்துல சொல்லல. எதுக்கு என்னை விட்டு பிரிஞ்சி போனா? ஏன் என் அப்பா, அம்மாவை எங்கிட்ட இருந்து பிரிச்சா? மொத்தமா என்னை கொன்னுட்டு போயிட்டா. என்று சிறுபிள்ளைப்போல் கேள்விக் கேட்டு அழும் அந்த ஆறடி ஆண்மகனை என்ன சொல்லி தேற்றுவது என்று அவளுக்கும் தெரியவில்லை.

“எனக்கும் தெரியல கிருஷ்ணா… அந்த சிட்சுவேஷனை எப்படி கேண்டில் பண்றதுனு? உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேனு புரியுது. எனக்கு கொஞ்சம் டைம் கொடு. எல்லாத்தையும் சரி பண்றேன்.” என்று அவன் முகத்தை துடைத்து விட்டபடி சமாதானம் செய்தவள்,

“இத பத்தி இப்போதைக்கு பேச வேணாம். வந்து சாப்பிடு” என்று சொல்லி அவனை உணவுமேஜையில் அமர வைத்தவள், அவனுக்காக தயாரித்த உணவை அவன் முன் வைத்து சாப்பிடு என்றாள் பாரமான மனதுடன்.

அவள் சிந்தனை மொத்தமும் நெல்லையாண்டாரை எப்படி சமாளிப்பது என்பதில் தான் உழன்றுக் கொண்டிருந்தது.

நிச்சயம் அவர் கோரிக்கையை நிறைவேற்றாது அவனை அவர் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பது தெளிவாக புரிந்தது அவளுக்கு.

இப்போது போதையில் தன்னை தேடும் இந்த தொழில் ஜாம்பவான் கிருஷ்ணாவும் நிச்சயமாக அவர் கோரிக்கையை ஏற்க போவதில்லை.

என்ன செய்து இருவரையும் சேர்த்து வைக்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தவள் அப்போது தான் கிருஷ்ணாவை கவனித்தாள்.

அவள் கொடுத்த உணவில் கையை கூட வைக்காது அவளை தான் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போதும் சரி. இப்போதும் சரி அவளோடு பேச்சு வார்த்தைகள் நீளுமே தவிர, இந்தவகை பார்வை பரிமாற்றங்கள் நீண்டதில்லை.

ஒருநொடி மீராவுக்கே அவன் பார்வையில் என்னமோ போல் இருந்தது.

“என்ன? சாப்பிடு” என்றாள் அவன் பார்வை ஏற்படுத்திய மெல்லிய பதட்டத்துடன்.

இல்லை என்று தலையை அசைத்தவன், “நீயே ஊட்டி விடு” என்று கண்கள் இரண்டையும் மூடிக் கொண்டே வாயை திறக்க, சட்டென்று சிரிப்பு தான் வந்தது மீராவுக்கு.

இப்போது புரிந்தது ஆளை விழுங்கும் அந்த பார்வையின் அர்த்தம்.

அவளை விழுங்க அவன் பார்க்கவில்லை, அன்னை அரவணைப்பை தேடி அவளை நாடியிருக்கிறான் என்று.

மறுக்க தோன்றாது அவளே அவனுக்கு ஊட்டி விட்டவள், வாயை கூட துடைக்காது உணவு மேஜையிலேயே தலை சாய்த்து தூங்க போனவனை தடுத்து நிறுத்தி, நீர் கொண்டு அவன் வாயை துடைத்து விட்டவள், அவனை இழுத்து கொண்டு அங்கிருந்த படுக்கை அறையிலும் கொண்டு போட்டிருந்தாள்.

அப்போதும் “ஏன் மீரா எனக்கு துரோகம் பண்ண?” என்று புலம்பி கொண்டிருந்தவன் புலம்பல்கள் காதில் ஏற்காது சில நிமிடங்கள் அவனை அமைதியாக பார்த்திருந்தவள், அவன் புலம்பல்கள் எல்லாம் அடங்கி அவன் தூக்கத்தை தழுவிய பிறகே அறையை விட்டு வெளியேறினாள்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top