4
டேய் நிறுத்துங்கடா.. இதுநாள் வரைக்கும் நடந்தது இரண்டு ஊர்க்காருவுக உள்ள பிரச்சனை.. இப்ப நடக்கப் போறது ரெண்டு வீட்டோடதா. அதுவும் ஒரு பொண்ணோட வாழ்க்கை இருக்கு.. அனாவசியமா யாராவது வாய் பேசுறோம்.. ஒரண்டே இழுக்கிறோம்.. உருட்டுக்கட்டையை எடுக்கிறோம்.. வீச்சருவாள் தூக்குறோம்.. சொன்னீக?? அப்புறம் அவன வகுந்துடுவேன் வகுந்து" என்று வீராவின் தந்தை ஆவேசமாக கூற அப்போதுதான் அனைவரும் அமைதியாக அடங்கினர்.
சற்று நேரத்தில் ஸ்கார்பியோ மூன்று வர.. உள்ளிருக்கும் பெரிய தலைக்கு பாதுகாப்பாக வெளியே அல்லக்கைகள் தொத்திக் கொண்டு நிற்க..
"நாடு எவ்வளவு வளர்ந்தாலும் இவனுக எல்லாம் வளரவே மாட்டானுங்க" என்று அவர்களைப் பார்த்து இளக்காரமாக ஒரு சிரிப்பை உதிர்த்தான் வீரா.
இரு கோஷ்டிகளும் எதிர் எதிரே அமர தந்தையின் அருகில் வீரா நின்று கொண்டிருந்தாலும், அவனது பார்வையில் சிறிதும் மரியாதையை பார்க்க முடியவில்லை.. திமிரும் தெனாவட்டு பெருகி வழிந்தது.
அந்தப்பக்கம் அமர்ந்திருந்த அஸ்திராவின் அப்பாவின் முகத்தில் கோபமும் வன்மமும் வழிந்தது.
கண்கள் தீ கங்குளாக எதிரே அலட்சியத்துடன் நின்றிருந்த வீரநெடுமாறனை தான் முறைத்துக் கொண்டிருந்தது.
அவர் அருகில் அமர்ந்திருந்த அவரின் அண்ணனும் வீராவின் தங்கையின் மாமனாரான அசோகன் அமைதியாக இருந்தாலுமே வீராவின் மீது கோபத்தில் தான் இருந்தார்.
ஏற்கனவே தீராப்பகையில் இரு ஊர்களும் தீயாய் எரிந்து கொண்டிருக்க.. அதை அணைக்க பாடுபடும் சில நல்ல உள்ளங்களில் அவரும் ஒருவர். ஆனால் வெளியே அத்தனை சுலபமாக அதை காட்டிக் கொள்ள மாட்டார் வீராவின் அப்பா சற்குணத்தை போல..
'வீரா இன்று காரியத்தையே கெடுத்து வைத்திருக்கிறானே.. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல இந்த அவசரகாரனுக்கும் புத்தி மட்டும்தான்!! அப்படி என்ன அவசரம்? இன்னும் கணவன் இறந்து முப்பது நாள் காரியம் ஆகாத பெண்ணுக்கு தாலி கட்டி வைத்திருக்கிறானே!' என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தார் வீராவை.
மெல்ல தொண்டையை கனைத்துக் கொண்டு "சொல்லுக.. என்ன விஷயம்" என்றார் சற்குணம். அவரின் ஆளுமையும் நிமிரவும் அப்பட்டமாக தெரிய பல்லை கடித்து கொண்ட அஸ்திராவின் அப்பா அனலரசு தனது அண்ணனை முறைத்தார்.
வரும்போது சொல்லிதான் அழைத்து வந்திருந்தார். எக்காரணம் கொண்டும் நீ வாயை விடாதே. ஏன் திறக்கவே திறக்காதே! நான் பேசிக் கொள்கிறேன்! என்று..
ஆனால் சற்குணத்தின் இந்த ஆளுமையில் "அந்த ஆளுக்கு சற்றும் குறையாத அந்தஸ்துல இருப்பவன் நானு. என்னைய பார்த்து என்னா தெனாவட்டா முறைக்கிறான்.. பேசுறான்.. இவனையெல்லாம்.." என்று அண்ணனிடம் அவர் கடுகடுக்க..
"இப்ப நீ செத்த நேரம் வாய்மூடி இருக்க போறியா இல்லையா? இல்லைனா இந்த பிரச்சனையை நீயே பார்த்துக்கோனு சொல்லிட்டு ஊரு மொத்தம் உதறிடுவோம். என்ன சரிதானே?" என்று அசோகன் சற்று அதட்டலாகவே மொழிந்து அவரை அடக்கி வைத்தார்.
"என்ன சொல்ல சொல்லுதீக.. நடந்த விஷயம் உங்களுக்கும் தெரியும்தானே? விருப்பம் இல்லாத ஒரு பொண்ணுக்கு தாலியை கட்டி இழுத்து வந்து இருக்காரு உங்க புள்ள.. அதுவும் இன்னும் அவ புருஷன் செத்து முப்பது கூட நடக்காம இருக்கு. இதெல்லாம் ஞாயமா? ஏற்கனவே இருக்கிற பிரச்சினைக பத்தாதுன்னு புதுசா வேற பிரச்சனை வேற இழுத்து வந்து இருக்காரு உங்க புள்ள" என்றார் அசோகன்.
சற்குணம் வாயைத் திறக்கும் முன் "அவனவன் புருஷன் இருக்கும் போதே அறுத்து கட்டுறானுக.. அதெல்லாம் தப்பு இல்லையா? ஆனால் புருஷன்னு பேருக்கு மட்டும் இருந்தவன் செத்து.. அதுவும் அவன் கட்டுன தாலி அறுத்துக்கு அப்புறம் தானே என் தாலி ஏறுச்சு.. இதுல என்ன தப்பு கண்டீரு?" என்று இடதுகையால் மீசையை முறுக்கிப்படி பேசியே வீராவை பார்த்து சற்குணம் "பெரியவக நாங்க பேசிட்டு இருக்கோம்ல தம்பி.. நீக செத்த அமைதியா இருக" என்று கண்டித்தார்.
"என் புள்ள செஞ்சது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன். என்ன அந்த புள்ளையோட சம்மதம் கேட்டு செஞ்சிருந்திருக்கலாம்? பரவாயில்ல.. நடந்தது நடந்து போச்சு அந்த பொண்ணுதேன் யேன் வூட்டு மருமக.. இப்போ அதுல எந்த மாத்தமும் இல்ல" என்றார் தெளிவாக.
"ஆரு? ஆரு வூட்டுக்கு ஆரு மருமக?" என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியை பின்னால் தள்ளிவிட்டு ஆவேசமாக எழுந்து நின்றார் அனலரசு.
அதற்குள் சற்குணத்தின் பின்னிருந்த அல்லக்கை நல்லகை எல்லாம் "ஏலேய்.. எங்கன வந்து ஆரு கிட்ட எகுறுற?"
"உனக்கு மட்டும் தேன் நாக்காலிய தள்ள தெரியுமோ அப்பு? நாங்கல்லாம் அத மண்டையிலேயே போட்டு உடைப்போம். பங்காளி சும்மா விடாதே!!" என்று ஆளாளுக்கு வீறு கொண்டு எழ.. அனைவரையும் கையை உயர்த்தி அடக்கினார் சற்குணம்.
சற்குணம் தீர்க்கமான குரலில் "யேன் பையன் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டிட்டாரு. அப்போ அவதேன் யேன் வூட்டு மருமக. ஏன் அஸ்திரா உன்ற பொண்ணு தானே?" என்று உனக்கு நான் சளைத்தவனில்லை என்று காட்டினார்.
"யோவ் என்னைக்குமே அவ என்ற வூட்டு பொண்ணு தான்யா.. அவள எப்படி திரும்பக் கொண்டுவரனும்னு எனக்கு தெரியும்" என்று வீராவை வன்மமாக அவர் பார்த்த பார்வையில்.. "எப்படின்னு சொல்லும்? எப்படி என்னை கொன்னுட்டா? முடிஞ்சா செய்யும்! செய்துதான் பாருமே யா!" என்று பதிலுக்கு சவால் விடுத்தான் வீரா.
அதற்குள் சற்குணம் தன் எதிரே நின்ற சம்மந்தியை பார்த்து "இங்கே பாருக.. ஏற்கனவே இரண்டு ஊருக்குள்ள நிறைய பிரச்சனைக ஓடுது.. அதெல்லாம் சுமுகமா தீர்க்க தான் பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குறது.. அதெல்லாம் இப்போ சில காலமாக செய்து வரோம் நாம.. யேன் வூட்டு பொண்ணை குடுக்கல நானு? ஆனா உங்க தம்பி பேச்சைக் கேட்டு திரும்பவும் வாய்க்கா வரப்பு பிரச்சனையில் இறங்காதீக.. இது இந்த இரண்டு குடும்பத்து பிரச்சனை அதை இரண்டு ஊரு பிரச்சனையா ஆக்காதீரு" என்று அவர் சத்தமாக கூற அனலரசுவின் பக்கத்தில் நின்றவர்களும் தங்களுக்குள் சற்று முணுமுணுத்துக் கொண்டனர்.
"என்னதான் இளந்தாரி பயிலுவ எல்லாம் வம்புனு வந்து நின்னாலும்.. அவங்களுக்கு ஒன்னொன்னா பதறுவது நம்ம வூட்டு பொண்ணு பிள்ளைக தானே.. அவங்க நல்லா இருக்க வேணாமா? இப்படி காலம் ல
பூரா சண்டையும் ரத்தமும்மாவே பார்த்துட்டு இருக்க போறோமா? நம்ம பிள்ளைகளும் படிச்சு நல்ல உத்தியோகத்தில் இருக்குறதை நாம நல்ல கண்குளிர பார்க்க வேணாமா? கொஞ்சம் யோசிங்க யா!! எப்பவும் சீண்டிவிட்டு தூண்டிவிட்டு பின்னாடி குளிர்காய எண்ணாதீக!!" என்று சற்குணத்தின் பேச்சினை அங்கு உள்ளவர்களால் தவிர்க்க முடியவில்லை.
"சரி உம்ம பேசிக்கே நானும் வாரேன். இது இரண்டு குடும்பத்து பிரச்சினை தானே.. இப்ப நாம ரெண்டு பேருமே பேசிப்போம்" என்று தன் அண்ணனை ஓரங்கட்டியவர், "இந்த கல்யாணத்துல யேன் பொண்ணுக்கு விருப்பமே கிடையாது. இவன் வலுக்கட்டாயமாக தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கியான். அதுக்கு என்ன நியாயம் சொல்ல போறீரு? பதினெட்டு பட்டிக்கும் நாட்டாமை இருந்து தீர்ப்பு சொன்னால் மட்டும் போதாது புள்ள செஞ்ச அநியாயத்தை தட்டிக் கேட்கவும் வேணும்!" என்றார் எகத்தாளமாக அனலரசு.
"அந்த புள்ளைக்கு விருப்பம் இல்லைன்னு உங்க கிட்ட சொன்னுச்சா?" சற்குணம் திரும்பி கேட்க..
"யேன் புள்ளையோட மனசு எனக்குத்தேன் தெரியும்! அவளுக்கு இந்த கல்யாணத்துல துளிகூட விருப்பம் கிடையாது. எப்படிங்க புருஷன் செத்து முப்பது நாள் கூட ஆகல. ஒன்னு மண்ணா வாழ்ந்தவுக நினைப்பு கலையக்குள்ள பிடிச்சி இழுத்துட்டு வந்துட்டான் இவன்" என்று வீராவை அவர் குற்றம் சாட்டினார்.
"அட இருங்கப்பா!! இப்ப என்ன அந்த புள்ளைக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா இல்லையானு தெரியணும்.. அம்பூட்டு தானே? அத அந்த புள்ளைய கூப்பிடு நேரா கேட்டா போச்சு?" என்று சற்குணத்தின் பின்னால் இருந்த ஒரு அல்லகை தன் கடமையை சரியாய் செய்ய.. ஐடியா கொடுத்தவரை பார்த்து "தனியே வாடி மாப்பிள்ளை உனக்கு" என்று உரைத்தான் வீரா.
அதற்குள் மீண்டும் ஒரு சலசலப்பு எழ.. அனைவரையும் நோக்கி கையை அமர்த்திய சற்குணம் "அந்த பொண்ண கூட்டிட்டு வர சொல்றேன்" என்று மகனை அனுப்பி அஸ்திராவை அழைத்துவரச் சொன்னார்.
நல்ல பிள்ளையாக தலையாட்டிவிட்டு மனைவியை தேடி அறைக்கு உள்ளே சென்றான் வீரா.
அங்கே அறையில் அஸ்திராவோ மனதில் துக்கம்.. நேற்று முழுவதும் இடைவிடாத வீராவின் லீலை என மிகவும் சோர்ந்திருந்தவள் தன்னை மீறி உறங்கிவிட்டாள்.
தூக்கம் கலைந்து கண் விழித்தபோது வீரா அவள் பக்கத்தில் நெருக்கமாக படுத்திருந்தான். தலையணை மீது கை வைத்து.. அந்த கை மீது கன்னம் வைத்து.. அவளைப் பார்த்து சரிந்து படுத்திருந்தான்.
கண் மூடித் தூங்கும் தன் மனைவியின் முக அழகை எந்தச் சலனமுமின்றி சில நொடிகள் அமைதியாக ரசித்தான். அவளின் நீள மூக்கு மிகவும் அழகாய், அவள் முக அமைப்புக்கு தகுந்தாற்போல இருக்க... அதன் கீழே பிரித்து வைத்த ஆரஞ்சு சுளை போன்ற சற்றே தடித்த இதழ்கள் கவர்ச்சியாய்... அதை பார்த்ததும் தாபம் மீதுற..
அவளது ஈர உதடுகளில் தன் உதடுகளை மெதுவாக உரசினான். தீப் பற்றிக் கொண்டதைப் போலிருந்தது அவனுள்.
தீ தான்!! தாபத் தீ!!
பொங்கி எழும் தீயை அணைக்க அவள் இதழ்களை தன் இதழ்களால் அணைத்தான் வீரா.
அவனின் உதடுகள் அவளின் உதட்டு அமுதத் துளிகளை உறிஞ்சி எடுத்து விட்டு விலகியபோது அவள் உடல் மழையில் நனைந்த புறாக் குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்தது. மெல்லிய உதடுகளின் நடுக்கத்தை மறைக்க அவைகளை வாய்க்குள் இழுத்து மடித்து கொண்டாள்.
"தீரா.. கீழே உங்க அப்பாரு வந்து இருக்காரு. போகலாம் வா" என்றவனை பார்த்தவளின் பார்வையில் என்ன இருந்தது??
