உயிரே 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

3

 

சீக்கிரம் வா தீரா.. மாமன் வெயிட்டிங்!" என்று சொல்லி சென்ற கணவனை இல்லையில்லை தன் கணவனை கொன்றவனை வெறுப்பை உமிழும் பார்வையோடு பார்த்தாள் அஸ்திரா.

 

அவர்கள் அறையின் வெளியே வேஷ்டியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் வீரா.. மனதுக்குள் இவளை எப்படி மாற்றப் போகிறோம் என்ற கவலை எல்லாம் இல்லை! அவள் மாறா விடினும் அவளே தன் மணையாட்டி என்பதில் இவன் உறுதியாய் இருந்தான்.

 

இந்த ஜென்மத்தில் அவள் தான் மனைவி என்று அவன் மனதினில் முடிவு எடுத்திருக்க.. இந்த ஜென்மமே என் கையால் தான் உனக்கு முடிய போகிறது என்று அவள் அவனுக்கு முடிவு கட்ட காத்திருந்தாள்.

 

அவள் இன்னும் வராமல் இருப்பதை பார்த்து, "தீரா.. வா வெரசா!" என்று கதவை அவன் தட்ட கை ஓங்க.. கதவைத் திறந்து வெளியே வந்தவளின் அழகை பருக இரு கண்கள் போதாது தவித்தான் வீரா.

 

அவளை பார்த்து விசிலடித்தவன், "மயக்குறடி தீரா.. இன்னும் கொஞ்ச நேரத்துல பஞ்சாயத்துக்கு வந்துருவானுங்க.. இல்லேன்னா உன்னைய இப்படியே திரும்ப ரூமுக்கு தூக்கிட்டு போய் இருப்பேன் மாமன்!" என்றவன் மீசைய முறுக்கி கொள்ள, அவளுக்கு அருவருப்பாக இருந்தது, அவன் அவர்களின் அந்நியோனியத்தை பற்றி பேச பேச.. 

 

ஆனாலும் இப்போது வாய் திறந்து பேச முடியாத நிலைமை. "வான்னு சொன்ன வர மாட்டியோ?" என்றவன் அவளது கையை அழுந்தப் பற்றி கீழே அழைத்து வந்தான்.

 

"எம்மாவ்.. சாப்பாடு எடுத்து வை" என்றவன், அவளின் பிடித்த கையை விடாமலே சாப்பாடு அறைக்கு செல்ல.. அங்கே பஞ்சாயத்துக்காக வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் பார்த்த வண்ணம் இருந்தனர் இருவரையும்.. அவர்களின் பிணைந்த கைகளையும்!! கூடவே வாய் மெல்ல அவர்களுக்கு அவலும் கிடைக்க.. 

 

கண்டெண்ட் கிடைத்த நெட்டிஸென்கள் போல.. இது நொட்டை.. அது நொள்ளை என்று நீட்டி மடக்கி உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தவனுக்கு பரிமாற வந்தார் அவனது அத்தை யோகலட்சுமி.. கூடவே அவனது தங்கை பூங்கோதையும்.

 

"யேன் யா.. உனக்கா இப்படியாப்பட்ட நெலம.. சொந்த பந்தத்தில உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா வீரா.. எனக்குன்னு வந்து பொறந்தது ரெண்டும் பையனா போயிடுச்சே.. இல்லேன்னா என் அண்ண மவன் இப்படி நிக்க நானு விட்டு இருப்பேனா?" என்று மூக்கை சிந்தினார் யோகு.

 

"இப்ப என்ன ஆயிடுச்சு அய்த்த.. இப்பவே மாமா கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி அடுத்த 10 மாசத்துல ஒரு பொண்ண பெத்து கொடுங்க.. பதினெட்டு வருசம் கழிச்சு நானே கட்டிக்கிடுதேன்.‌ என்ன அய்த்த.. மாமா கிட்ட பேசவா?" என்றவனை பார்த்து ஆஆ என்று வாயை பிளந்தவர், "ஏய் மதினி.. உம்ம பையன் பேசுற பேச்சை பாத்தீகளா?" என்று குரல் கொடுத்துக் கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தார்.

 

 

நேற்றிலிருந்து இவர்கள் பேசும் பேச்சையும் அதற்கு மகன் கொடுக்கும் பதிலடியையும் கேட்டுக் கொண்டுதானே இருக்கிறார் வடிவு.

 

"இம்புட்டு நேரம் வரைக்கும் யேன் மருமவன.. யேன் மருமவனு சொல்லிவிட்டு இருந்த நாக்கு இப்போ என் பையனு சொல்து. அவ்வளவு தானா மதனி உம்ம பாசம்?" என்று அவரும் பேச "அதானே.. இப்பத்தானே தெரியுது அவனுக்கு இவ்வளவு அதப்பு எங்கிருந்து வந்திச்சுனு" அண்ணியை பார்த்து நொடித்தார் யோகு.

 

அத்தை உள்ளே சென்றதும் அண்ணனுக்கும் அவன் கட்டி வந்த பொண்ணுக்கும் பரிமாறினாள் பூங்கோதை. இன்னும் அண்ணி என்று அவளை எல்லாம் கோதையால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

"ஊர்ல இல்லாத ராசகுமாரிய கட்டிட்டி வந்திட்ட மாதிரி சலப்பிக்கிட்டு நிக்க.." என்று முணுமுணுத்தாள்.

 

"என்ன வாய்க்குள்ளேயே முணுமுணக்குறவ.. சத்தமா சொன்னா எங்களுக்கும் கேட்கும்ல" என்றவன் அவள் ஊற்றியே நல்லியை கடித்து மென்று கொண்டிருந்தான்.

 

"ம்ம்ம்.. வூட்டுக்கு வந்த மருமவ எந்திருச்சு வர நேரமா இது? அவ அவ வெள்ளனவே எழுந்திருச்சி வீடு வாசல்ல பெருக்கி கோலம் போட்டு சாமிக்கு விளக்கு ஏத்தி வைப்பாளுக.. இங்கன என்னவோ காலை போய் மதிய சாப்பாட்டுக்கு எந்திருச்சு வந்திருகாவ.. அப்படி என்ன ஒரே ராத்திரில சொக்கு பொடி போட்டாவுலோ.." என்றாள் அத்தைக்கு நான் சலித்தவளில்லை என்று!

 

கோதை பேசப்பேச ஏற்கெனவே சாப்பிடாமல் அளந்துகொண்டிருந்த அஸ்திராவுக்கு சுத்தமாக சாப்பிடும் எண்ணம் போனது. இவ்வளவு பேச்சுக்கும் ஒத்த வாய் சோறு தொண்டைக்குள் இறங்குவேணா என்று கண்கள் கலங்க.. தனது கோபத்தையும் ஆத்திரத்தையும்.. அதை காட்ட முடியாத தன் இயலாமையும் இடது கரத்தை இறுக்க மூடி அதில் காட்டினாள்.

 

"சாப்டியா கோதை?" என்று பாசமாக தங்கையை கேட்டான் வீரா.

 

"இன்னும் இல்ல ணா.. அவுக வந்தவுடன் தான் சேர்ந்து சாப்பிடணும்" என்றாள் சந்தோசத்தோடு அதில் கொஞ்சம் வெட்கமும் கலந்து இருந்தது.

 

உடனே போனை போட்டான் தனது நண்பனும் தங்கையின் கணவனான தர்மராஜூக்கு.

 

"ஏலேய் தர்மா.. எங்கடா இருக்கவன்?"

 

'இவன் பஞ்சாயத்துல நம்மை இழுத்து விடுவான் தானே காலையிலேயே கிளம்பி மில்லுக்கு வந்தேன்.. இப்ப போனை போட்டு எதுக்கு என்னைய கூப்பிடுறான்? நாம பிஸியா இருக்குற மாதிரியே காட்டுவோம்!' என்று நினைத்த தர்மன் "நான் எங்க மில்லுல இருக்கேன் மச்சான்" என்றான்.

 

"எப்ப போன மில்லுக்கு நீயு?" என்றான் சாப்பிட்டுக் கொண்டே..

 

"நான் காலையில வெள்ளனவே இங்க வந்துட்டேனே மச்சான்.. எனக்கு இங்கன கொஞ்சம் வேல ஜாஸ்தி இருக்கு" என்றான் அவனிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று.

 

"அதான் டா.. நீ ராவுக்கு வீட்டுக்கு லேட்டா வா.. காலையில வெள்ளனவே போய்டு.. அதான் என் தங்கச்சிக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது. நேத்து கல்யாணமான இளசுக நேரஞ்செண்டு எந்திரிச்சு வந்தது ஏன்னு அவ விபரம் தெரியாம கேட்டுட்டு இருக்கா.. நான் சொன்னா நல்லா இருக்குமா? நீயே வந்து சொல்லிக்கொடு.. சீக்கிரம் வாடா சரியா?" என்று அவன் பேச பேச கோதைக்கு எங்கே போய் ஒளிந்து கொள்வது என்று தெரியாமல் அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள்.

 

அஸ்திராவுக்கும் கோபம் வந்தது. என்ன மனுஷன் இவன்? தங்கை புருஷன்கிட்ட தங்கையை பற்றி என்ன பேச என்று தெரியாமல் பேசுகிறானே என்று.

 

அவரவரின் பேச்சுக்கு அவரவர் வழியில் சென்று தான் நாவை அடக்க வேண்டும் என்று வித்தை அறிந்தவன் வீரநெடுமாறன்.

 

'அது தெரிந்தும் என்னிடம் வாயைக் கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்ளத் தான் வேண்டும்!' என்று நினைத்தவன், "என்னடா இன்னைக்காவது சீக்கிரம் வருவியா?" என்று கேட்க "என் மானத்தை வாங்கிய தொலையாத டா.. இப்பவே வந்து தொலைக்கிறேன்" என்றான் தர்மா.

 

இப்படியாக தன்னிடம் வாயை பிடுங்க வரும் அனைவரின் மானத்தையும் கூரை மேலே ஏற்றிக்கொண்டு இருந்தான் வீரா..

கொஞ்சம் கூட தயவு தாட்சண்யமின்றி..

 

அருகில் தீராவோ மெல்ல முடியாமல் வாயில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு அமர்ந்து இருக்க.. மெல்ல அவள் புறம் குனிந்தவன் "நான் வேணா ஊட்டி விடட்டுமா தீரா.. ஆனா என் விரலு வராது ஊட்ட உதடுதேன் வரும்" என்று சரசமாக கேட்டவனை சவுக்கால் அடித்தால் தான் என்ன? என்று தோன்றியது பெண்ணவளுக்கு.

 

ஆனால் எதையும் காட்ட முடியாத தன் கையறு நிலை எண்ணி முனுக் என்று துளிர்த்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்தவள், வீம்புக்கு என்று வேக வேகமாக அள்ளி வாயில் வைத்து தண்ணீர் குடித்து முழுங்கி வைத்தாள்.

 

"எப்படியோ சாப்பாடு உள்ளே போனால் சரிதான்!! அப்போதேன் ராவுக்கு மாமனை தாங்க முடியும்!!" என்றவன் தானும் சாப்பிட்டு விட்டு மனைவியை தன் காவலிலேயே கொண்டு வந்து மீண்டும் தங்கள் அறைக்குள் விட்டான்.

 

"நல்லா தூங்கி ஓய்வு எடுத்துக்கோ தீரா.. நைட் மாமனுக்கு ஈடு கொடுக்கணும்ல.. நேத்து மாதிரி பொம்மையாட்டம் இருக்காதே என்ன? இந்த வீரனுக்கு ஏத்த வீரியா இருடி!!" என்றவன் அழுத்தமாக அவளது கன்னத்தில் நச்சென்று பல இச்சுகளை வைத்து விட்டே கீழே சென்றான்.

 

வீட்டின் வாயிலில் அவனின் தந்தை அமர்ந்திருக்க அருகே அவனது மாமா.. கூடவே அல்லக்கை நல்லகைகள்.

 

எல்லாம் இரண்டு மூன்று ரவுண்டு நீர்மோரை அடித்து விளாசி விட்டு, அடுத்து வந்த பலகார பட்சணங்களையும் முறையாக வெட்டிவிட்டு, பஞ்சாயத்துக்காக தங்கள் மீசையை நீவி கொண்டும் தோளில் இருந்த துண்டை சீர் படுத்திக் கொண்டும் போர்க்களத்திற்கு போவதைப் போல தயாராக அமர்ந்திருந்தனர்.

 

'நாம சும்மா இருந்தாலும் இவனுங்க சும்மா இருக்க மாட்டாங்க போலயே?' என்று இடது கையால் மீசை நுனியை முறுக்கிக்கொண்டு அவர்களை எல்லாம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் வீரா.

 

சற்று நேரத்தில் புல்லட்டில் வேகமாக வந்த ஒருத்தன் அவசரமாக அதை நிறுத்திவிட்டு மிக பவ்யமாக வாயின் மீது கைகளால் மூடி "அவுக எல்லாம் வந்துட்டு இருக்காக ஐயா!!" என்றான்.

 

அவன் பவ்யமாக நின்று குசுகுசுத்தாலும் அவனின் பாவத்தில் மற்றவர்களோ "வரட்டும் வரட்டும் நாமளும் ஒரு கை பார்த்துடுவோம் அவனுகள.. ரொம்ப நாளா தீராத வழக்கெல்லாம் அவ

னுங்களுக்கும் நமக்கும் இடையில இருக்கு" என்று சலம்பிக் கொண்டிருந்தனர்.


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top