உயிரே 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

2

 

கம்பம்!! அதை சுற்றியுள்ள கிராமங்களின் தலைக்கட்டு.. பஞ்சாயத்து தலைவர்.. கட்ட பஞ்சாயத்துக்காரர்.. என்று பல பரிமாணங்களில் அழைக்கப்படும் சற்குணபாண்டியனின் வீடு!

 

 

அந்தக் காலத்து பழமையான தேக்கு மர ஜன்னல் கதவு உத்திரங்கள் தூண்கள் என்று இருந்தாலும், நவீன காலத்துக்கான டைல்ஸ் வாட்ரோப் குளியலறை என்று பழமையும் புதுமையும் கலந்து காணப்படும். அந்த வீட்டின் முகப்பு வாயிலில் தான் கூட்டம் கூடி இருந்தது.

 

 

இன்னும் பாதிக்குமேல் நரைக்காமல் இருக்கும் கருகரு தலைமுடியோடு ஆஜானுபாகுவான உயரத்தோடு தனது கடா மீசையை முறுக்கிக்கொண்டு கன கம்பீரமாக அமர்ந்திருந்தார் சற்குணம். 

 

 

அவருக்கு அருகே அவரது மச்சானும் தங்கையின் கணவருமான நாச்சிமுத்து அமர்ந்திருந்தார் மாமனின் முகத்தை பார்த்தவாறே..

 

 

இன்னும் அல்லக்கைகள் அடியாட்கள் என்று இந்த பக்கம் ஒரு பத்து தலைகளும்.. ஊரு பெருசு சிறுசு.. பங்காளி.. இரண்டாம் பங்காளி.. மூன்றாம் பங்காளி என்று உறவு கூட்டம் ஒரு புறமும் ஆற அமர தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது சற்குணத்தையும் பார்க்க தவறவில்லை.

 

ஆனால் சற்குணமோ இவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல்.. தங்கள் வீட்டு வாசலை பார்ப்பதும் பிறகு கைக்கடிகாரத்தை பார்ப்பதும் அவ்வப்போது தனது கடா மீசையை நீவி கொள்வதுமாகவே அமர்ந்திருந்தார். 

 

பார்த்த மாத்திரத்திலேயே அங்கு ஏதோ ஒரு பஞ்சாயத்துக்கான அறிகுறி என்று நமக்கு தெரிகிறது.

 

இன்னும் அவரது இரண்டு மாப்பிள்ளைகளும் வரவில்லை. அருகில் இருந்த நாச்சிமுத்துவை பார்த்து "எங்க மச்சான்.. பெரிய மாப்புள்ளய இன்னும் காணோம்" என்று கேட்டார் சற்குணம்.

 

நாச்சிமுத்துவின் பெரிய மகன் தர்மராஜூக்கு தான் தனது பெரிய மகள் பூங்கோதையை மணமுடித்துக் கொடுத்து இருக்கிறார்.

 

இரண்டாவது மகள் பூங்கொடியை அருகிலுள்ள பஞ்சநதிகுளத்தில் தான் கொடுத்திருக்கிறார்.

 

"மாமா.. அவேன் காலையில பொழுதோட மில்லுக்கு போய்ட்டியான்.. உச்சிப்பொழுதில் வரேன்னு சொன்னான். செத்த நேரத்துல வந்துருவியான்.. ஆமா சின்ன மாப்புள்ள?" என்று அவர் கேட்க..

 

 

"அதேன்.. இப்ப பெரிய விஷயமாக மாட்டிக்கிட்டு இருக்கு. என்னதான் சின்ன மாப்புள்ளைக்கு நம்ம வூட்டு மேல நல்ல மதிப்பும் மருவாதையும் இருந்தாலும்.. அவிங்க ஊர் கட்டுப்பாடுனு ஒன்னு இருக்குல மச்சான்!" என்று பெருமூச்சு விட்டார் சற்குணம்.

 

 

"இன்னுமும் சின்னவர காணலையே!?" என்று அங்கிருந்த அல்லகைகளில் ஒன்று கூற.. அவனைப் பார்த்து முறைத்தார் சற்குணம்.

 

 

மணியும் பதினொன்னை தாண்டி சென்று கொண்டிருக்க.. அனைவரும் ஒருவித அவஸ்தையில் நெளிந்து கொண்டிருந்தனர் அமர முடியாமல்.. அந்நேரம் கெண்ட கால் கொலுசு ஒலிக்க.. பெரிய பெரிய டம்ளர்களில் நீர்மோர் எடுத்துக்கொண்டு வந்தார் சற்குணத்தின் மனைவி வடிவாம்பாள். பேருக்கு ஏற்றார்போல நல்ல வடிவான களையான தோற்றம். என்னதான் வீட்டுக்கு வெளியில் கட்டப்பஞ்சாயத்து அடிதடி என்று செய்தாலும் மனைவியின் முகத்தைப் பார்த்து சற்குணம் கோபமாகவோ ஆத்திரமாகவோ ஒரு வார்த்தை அதிகமாக பேசி விடமாட்டார்.

 

 

"ஆத்தா வடிவு…" இல்லையென்றால் "வடிவம்மா.." என்று அழைப்பு மட்டும்தான் இருக்கும்.

 

 

வந்தவர் புன்னகை முகத்தோடு அனைவரையும் வரவேற்று.. தன் கைகளால் தாம்பாளத்தில் இருந்த நீர்மோரை ஒவ்வொன்றாக அனைவருக்கும் கொடுத்தார்.

 

 

"நல்லவேள ஆத்தா.. நீ கொண்டுவந்து கொடுத்த தொண்டையே வறண்டு போய்டுச்சு இந்தப் போக்கத்த பயலுவோ கிட்ட பேசி பேசி" என்று ஒரு பங்காளி‌ கூற..

 

"அதுக்கு என்ன மாமா.. இன்னும் வேணும்னா ஒரு டம்ளர் வாங்கி குடிங்க.. தொண்டைக்கு இதமாக இருக்கும்.. உடம்புக்கும் குளிர்ச்சி.. நம்ம வூட்டு மாட்டு பால செய்த நீர்மோரு தாங்க" என்று பின்னோடு ஒரு அண்டாவில் நீர்மோரை தூக்கி வந்த வேலைக்காரனிடமிருந்து அவர்களுக்கு கொடுத்தார்.

 

 

தனியாக மண் சொம்பில் கணவருக்கு கொடுக்க.. சற்குணத்தின் பார்வை கைக்கடிகாரத்தை பார்த்து.. மனைவியை பார்த்து.. பின் வாயிலையும் பார்த்தது.

 

 

"அட! என்னங்க மாமா!! சும்மா உத்து உத்து பாக்குறிக.. எல்லாம் உங்க புள்ளைய பத்தி தெரியாதா? நீங்களே கல்யாணம் ஆன மறுநாளு பன்னெண்டு மணிக்கு மேல தானே எழுந்து வந்தீக.. மறந்துடியலோ.. வித ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்.. உங்க புள்ள கம்பீரத்திலும் வீரத்தில் மட்டுமல்ல மாமா.. எல்லாத்திலேயும் உங்களைப் போலத்தேன்!" என்று அவர் அழுத்திக் கூறியதை கேட்டு.. நீர்மோர் குடித்துக் கொண்டிருந்த சற்குணத்திற்கு புரை ஏறியது.

 

"பார்த்துங்க மாமா!" என்று அருகிலிருந்த நாச்சிமுத்து மாமனுக்கு தலையை தட்டி விட்டு தங்கச்சியை பார்த்து "ஏன் ஆத்தா மாமன் குடிக்கும் போதேன் நீ பேச்சு கொடுக்கனுமா? பாரு பாரு எப்படி பொற ஏறிடுச்சுனு" என்று கடிந்துக் கொண்டார்.

 

அனைவரும் ஒரு வழியாக நீர் மோரை இரண்டு ரவுண்டு குடித்துவிட்டு.. அடுத்து மதிய சாப்பாட்டை இங்கே முடித்து விடுவோமோ அல்லது நம் வீட்டுக்கு போவோமா என்று யோசனையில் இருக்கும் போதுதான் வாசலைத் தாண்டி வந்தான் வீரநெடுமாறன் விடுவிடு என்று வேகத்தில்..

 

 

நெடு நெடு என்ற உயரம்.. உயரத்திற்கு ஏற்ற நல்ல வாட்டசாட்டமான உடல் வாகு.. 

அப்பாவைப் போல கடா மீசை வைக்காமல் சற்றே குறைத்து முறுக்கு மீசை.. கூரிய கண்களுக்கு சற்று மேலே எப்பொழுது இருக்கும் திருநீறு.. விடைத்திருக்கும் நாசி.. அழுத்தமான உதடுகள் என்று சற்றேறக்குறைய ஐயனாரை ஒத்திருந்தான் வீரநெடுமாறன்.

 

 

வாயிலை நோக்கி வரும் போதே வலது கையில் இருந்த வெள்ளி காப்பை முழங்கைக்கு மேலே உயர்த்தி முறுக்கி விட்டு.‌. காலால் உந்தி வேஷ்டியை நுனியை மறுகையால் பிடித்துக்கொண்டு வேகமாக வந்தவனின் பார்வை அங்கிருந்து ஒவ்வொருவரையும் சடுதியில் பார்த்து மனதில் குறித்துக் கொண்டது.

 

 

தந்தையின் அருகே வந்து நின்றவன் "சொல்லுங்க ஐயா!" என்றான் வெகு பவ்யமாக..

 

 

'என்னத்தை சொல்ல? எதிலிருந்து தொடங்க?' என்று புரியாமல் பல பஞ்சாயத்துகளை அனாசயமாக கையாண்ட சற்குணம் நெற்றியை இடதுகையால் நீவிக் கொண்டு, தனது அங்காளி பங்காளி முதல் அல்லக்கை வரை அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மகனை நிமிர்ந்து பார்த்தார்.

 

 

அதிலேயே அவர் கேட்கவேண்டிய கேள்விகள் அனைத்தும் புரிந்தாலும், இவனோ கையை பின்னால் கட்டிக்கொண்டு 'கேளுங்களேன்!! கேட்டுத்தான் பாருங்களேன்!!' என்று தெனாவட்டான உடல்மொழியில் நின்றாலும் வார்த்தை என்னவோ செம பவ்யமாகத்தான் வரும் அவனிடமிருந்து.. அதுவும் அவன் அப்பாவிடம் மட்டுமே..

 

 

சற்குணம் தயங்குவதைப் பார்த்த அங்கிருந்து பங்காளில் ஒருவர் "ஏன்பா மாறா.. சடுதியாக காலையில கிளம்பி வந்து இருக்க வேணாமா? இத்தன பேரும் உனக்காகத்தேன் காத்து கிடக்கோம்" என்று கேள்வி கேட்க..

 

 

"போச்சு.. போச்சு.." என்று நாச்சிமுத்து தலையை குனிந்துகொண்டே முணுமுணுத்தார். அவருக்கு தான் தெரியுமே மருமகனின் வாய் ஜாலத்தை..

 

"ஏன் சித்தப்பூ‌‌.. உம்ம கல்யாணம் முடிஞ்சு மறுநாளு நீரு ரொம்ப வெள்ளனவே எந்திரிச்சுடியலாமே?" என்று கேட்க அவரும்.. "ஆமாம்பா சோலி கழுத கிடக்குமல.. அப்புறம் அதை எல்லாம் ஆரு பார்க்குறது?" என்று எதார்த்தமாக கூற..

 

 

"அதேன்.. எனக்கு தம்பி பொறக்க அஞ்சு வருஷம் தேவைப்பட்டு இருக்கு!" என்று அவரை பாதார்த்தமாக்கி பட்டு என்று போட்டு உடைத்து விட.. கேட்டவருக்கோ 'ஏன்டா இவனிடம் கேட்டோம்?' என்று முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

இவனிடம் எசகுபிசகாக கேள்வி கேட்டா தானே இவ்வாறு பதில் கூறுவான் என்று "நீ செஞ்சது உனக்கே நல்லா இருக்கா மாறா.. போயும்.. போயும்.. அந்த ஊருல.. அதுவும் அந்த வூட்டு பொண்ண போய் கட்டிட்டு வந்து இருக்கியே? உனக்கென்னா பொண்ணா கிடைக்காது நம்ம ஊருல?" என்று மற்றொரு ஒன்றுவிட்ட மாமன் கூற..

 

 

"ஏன் அய்த்த அந்த ஊரு பொண்ணு தானே? மறந்து போயிட்டியலோ? நான் வேணா தோப்புக்கு போற வழியில அய்த்த கிட்ட கேட்டுட்டு போட்டுமா? அவுக ஊரு பொண்ணுஊ எல்லாம் எப்படின்னு?" என்று அவன் திருப்பி கேட்டதில் வாயை இறுக்க மூடிக்கொண்டார் அவரும்.

 

 

இப்படியாக சற்குணத்தை தவிர அங்கிருந்தவர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம், அவர்களது மூக்கை பாரபட்சம் பாராமல் அறுத்து கையில் கொடுக்காத குறையாக இருந்தது அவனது பதில் அனைத்தும்!!

 

 

இவனைப் பற்றி தெரிந்ததுதானே என்று நினைத்து.. அதற்கு மேலும் யாரும் வாயே திறக்கவில்லை.

 

இப்போது சற்குணம் தன் தொண்டையை செருமி மகனை நேரடியாக பார்த்து "ஏன்‌ மாறா? இந்த திடீர் முடிவு?" என்றார்.

 

 

"ஏன்னு தெரியாதவியங்ளுக்கு பதில் சொல்லலாம்.. தெரிஞ்சுகிட்டே கேட்டா எங்குட்டு நான் பதில் சொல்ல.." என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு..

 

"இப்போ அவிங்க ஊர்ல இருந்து வந்தா? என்ன பதில் சொல்றது நாம?" என்று கேட்க..

 

 

"கேட்க அவிங்களுக்கு உரிமை இல்லைனு சொல்லுங்க.. மீறி எவனும் கேட்டா… நானே என் முறையில அவிங்களுக்கு பதில் சொல்லிக்கிறேன்" என்றான் கைகாப்பை முறுக்கியபடி..

 

"இதனால வீணா இரண்டு ஊருக்கும் புகைச்சல்தேன் வரும்!" என்றார் சற்குணம்.

 

 

"இதுவர வராதது ஒன்னும் இப்போ புதுசா வரப்போறது இல்ல.. அதனால இப்படி காலங்காத்தால எல்லாரும் குந்த வெச்சு கூட்டத்தை போடாம.. அவிங்கவிங்க சோலி கழுதயப் பார்த்திட்டு போங்க.. எனக்கும் நிறைய வேலை இருக்கு! அதுவும் நேத்து சாயந்திரந்தேன் எனக்கு கல்யாணம் வேற ஆகி இருக்கு!" என்றவன் இரு கைகளையும் மேலே உயர்த்தி நெட்டி முறித்து திரும்ப அவன் வீட்டுக்குள் செல்ல.. அங்கே கூடியிருந்த கூட்டம் மொத்தமும் வாயை பிளந்து அவனை தான் பார்த்தது.

 

 

விடுவிடுவென்று தன் அறைக்குள் நுழைந்தவன், குளித்துவிட்டு ஈர துண்டை தலையில் சுற்றியப்படி வந்த அஸ்திராவை பார்த்தான்.

 

 

அழகிய நிலவென்ன முகத்தில் குங்குமம் இல்லாமல் வெறும் திருநீறை மற்றும் அவள் தீட்டியிருக்க.. அதுவரை அவளது அழகினை ரசித்துக் கொண்டிருந்தவனின் ரசனை பார்வை உக்கிரமாக மாற.. சட்டென்று அவளது ஈரக் கொண்டையை துண்டோடு சேர்த்து பிடித்து இழுத்தவன், அவள் ஜாக்கெட்டின் உள்ளே போட்டிருந்த தாலிக்கயிறை கைவிட்டு எடுத்து வெளியில் போட்டான்.

 

 

"என்னடி இது? என்னது இது? நேத்து தானே உன் கழுத்துல கட்டினேன் அப்ப பொட்டு வைக்காம வெறும் திருநீறு மட்டும் பூசியிருக்க.. முண்ட சிறுக்கி மாதிரி.. ஒழுங்கா நெத்தியில, வகுடுல குங்குமத்த வச்சுக்கிட்டு வந்து சேர வழிய பாரு.. இல்ல பகல்ல கூட வெளியில போக முடியாது மாமன் ஃபுல் ஃபார்ம்ல வேற இருக்கேன்.." என்று அவளது மேனியை அங்குலம் அங்குலமாக அவனது கண்கள் ரசனையாக பார்க்க ஆனால் அவளுக்கோ தன் முன் துச்சாதனனாய் அவன் தெரிய.. கண்களாலேயே துகில் உரிப்பதை போல இருந்தது.

 

அறை வாசல் வரை சென்றவன் திரும்பி அவளை பார்த்து "ஒரு வாரம் முன்னே அவன் செத்த உடனேயே உனக்கும் அவனுக்குமான சம்பந்தம் எல்லாம் முடிஞ்சு போச்சு டி.. எப்போ உன் கழுத்துல நான் தாலி கட்டணனோ அப்போதிருந்து நான் தான் உன் புருஷன்!! நான் நூறு வருஷம் நல்லா வாழனும்னு நல்ல பெருசா குங்குமத்த அம்மன் கணக்கா வைச்சிக்கிட்டு.. வகுடுலேயும் ஒரு ரோடு போட்டுகிட்டு வெளியே வா டி தீரா.. மாமா வெயிட்டிங்!" என்றவாறு அறைக் கதவை சாத்திவிட்டு சென்றவனை மனம் முழுவதும் குரோதத்துடன் பார்த்தாள் மாயதீரா.

 

 

கணவனைக் கொ

ன்றுவிட்டு அவன் காரியம் முடியும் முன்னே மனைவியை கைப்பற்றி வந்திருந்தான் இந்த நவயுக ராவணன்!!

 

தீருமோ தாகம்??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top