சண்டியரே 21
அப்பாவின் அதட்டலுக்கும்.. கணவனின் கண்டனத்துக்கும்.. என்ன வினையாற்றுவது என்று செய்வதறியாது இருவருக்கும் நடுவில் மிரண்டு போய் மருண்டு விழிகளில் கண்ணீர் ததும்ப நின்றிருந்தாள் தங்கமயில்.
அவளை அந்நிலையில் பார்த்ததுமே மனது கனத்து போனது ஆரூரனுக்கு. ‘என் மனைவிக்கா இந்நிலை? என்ன தவறு செய்தாள்? கணவனோடு இருந்தது தவறா? அதுவும் அப்பனாலேயே..? அவன் அப்பன் என்றதால மட்டும்தான் விட்டு வைத்திருக்கிறேன்’ என்று கோபத்தில் முஷ்டி மடக்கி நின்றிருந்தவன் அய்யனாருக்கு ஒத்தாற் போல நின்றிருந்தான்..!!
அவனின் கோபத்தை கண்ட தங்கமயில் கண்களால் அவனிடம் கெஞ்சினாள், எதுவும் செய்ய வேண்டாமே என்று..!
அவனின் கோபத்தில் தினவெடுத்த மார்பும்.. முறுக்கேறிய புஜங்களும்.. கழுத்து நரம்பு தெறிக்க நின்ற அவன் கோலம் கண்டு பெண்ணவள் பயந்து போனாள்.
கோபத்தில் வார்த்தை விட்டால் பரவாயில்லை.. இவன் அடித்து விட்டால்.. இவனின் பலத்தை தாங்குவாரா அப்பா? இல்லை படாத இடத்தில் பட்டு ஏதேனும் ஆகிவிட்டால்? இருவருக்குமே கஷ்டம் தான்.
யாருக்கு கஷ்டம் என்றாலும் அதனால் அதிகம் பாதிக்கப்பட போவது இவள் தான்..! அதனால் கூடுமானவரை இருவருக்கும் சண்டையை தவிர்க்க முயன்றாள்.
அப்பாவிடம் பேசினால் வேலைக்காகாது என்று கணவனிடம் அவள் கெஞ்ச அவனுமே சற்று நிதானித்து “சரிதான் போ டி.. ரொம்பத்தான் பாசம் நொப்பன் மேல..!” என்று கண்களால் திட்ட.. அதற்கு பின் வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள் தங்கமயில்.
தான் சொல்வதைக் கேட்டு தான் மகள் சென்று விட்டாள் என்று கர்வம் பொங்க ஆரூரனை ஒரு பார்வை ஏகத்தாளமாக பார்த்தவர், தன் வயல் ஆட்களுக்கு வேகமாக உத்தரவிடத் தொடங்கினர்.
இப்படி சிலம்பல் பண்ணுபவரை அப்படியே விட்டு விட்டால் அவன் ஆரூரன் இல்லையே?
“ஒரு கிழ ஆடு ரொம்ப நாளா சலம்பல் பண்ணிகிட்டே இருக்கு. ஒரு நாள் புடிச்சு பிரியாணி போடுறனா இல்லையான்னு மட்டும் பாரு தையான். அப்படி போட்டா அந்த ஆட்டுக்கறிக்கு ஊருக்கே விருந்து தான்..!” என்று அவன் சத்தமாக கூற அது தன்னைத்தான் கூறுகிறான் என்று புரிந்து கடுகடு என்று அவனிடம் சண்டை போட தியாகேசன் போக, அந்நேரம் வந்து அவர் கையைப் பற்றி இருந்தான் லோகநாதன்.
‘இவன் எங்க இங்கே இவர் கூட சுத்திகிட்டு இருக்கான்?’ என்று கூர் பார்வையுடன் அவர்களை ஆரூரன் பார்க்க.. முறைத்துக் கொண்டே ஆரூரனிடம் சண்டை போடும் நோக்கத்தில் முனைந்த தியாகேசனை கட்டுப்படுத்திய லோகநாதன் “நீங்க வாங்க நம்ம பேசிக்கலாம்.. அவன்கிட்ட இப்ப போய் மோதாதீங்க..!” என்று இழுத்துக்கொண்டு சென்றவனை ஆரூரன் யோசனையோடு பார்க்க..
அவனை பார்த்து பவ்யமாக வணக்கம் வைத்துவிட்டு ‘நான் கூட்டிட்டு போறேன்.. ஒன்னும் பிரச்சனை பண்ண மாட்டார்.. நீங்க உங்க வேலையை பாருங்க..!’ என்று சைகையால் செய்தான் லோகநாதன்.
ஆரூரன் அழுத்தமான பார்வையோடு நின்றிருக்கும் போதே அங்கு வந்த தையான் “சின்னய்யா அந்த லோகநாதன்..” என்று இழுக்க…
“ஒரு கிழ ஆடு தான் மாட்டுச்சுனு நினைச்சேன். பக்கத்திலேயே இன்னொரு ஆடும் ஜோடி சேர்ந்திருக்கு.. ரெண்டுத்தையும் சேர்த்து கூட்டு குர்பானி போடலாம்” என்று சிரித்தவன் தையான் தோளில் தட்டி செல்ல..
எல்லாத்துக்கும் பொறுமையாக இருக்கும் ஆரூரனை விசித்திரமாக பார்த்தான் தையான். அவன் கண்டவரை சிறு வயது முதல் இருந்து எதற்கும் உணர்ச்சி வசப்பட்டு கோபத்தில் பொங்கி அடித்து விட்டு தான் பேச ஆரம்பிப்பான் ஆரூரன். இப்படி நிதானமாக அதேசமயம் தன் ஆளுமையும் விட்டுக் கொடுக்காமல் பேசும் ஆரூரன் புதிது..!!
ஆரூரன் மாலை போல வீட்டுக்கு சென்றதும் அப்பொழுதுதான் தவழ ஆரம்பித்திருந்த ராகவி இவனைப் பார்த்ததும் ரெண்டெட்டு தவழ்வதும் பொத்து என்று விழுவதும் தந்தையை கண்டு கை கால்களை ஆட்டி பரப்பரப்பதுமாக இருக்க.. முற்றத்தில் கை கால்களை கழுவியவன் சிரிப்போடு வேகமாக சென்று மகளை தூக்கி ஒரு சுற்று சுற்றி “தங்க குட்டி தவழ ஆரம்பிச்சுட்டாங்களா? என் பொண்ணு குட்டி அப்பாவை தேடினிங்களா?” மகளிடம் கொஞ்சி கேட்க தந்தையின் முரட்டு மீசை குத்தியதில் கிளுக்கிச் சிரித்தாள் மகள்.
மதியம் தூங்கி முழித்து கொல்லைப்புரம் இருக்கும் காய்கறிகளை ஒருதரம் பார்த்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்குள் வந்த விஜயராகவன் ஆதூரமாக இதனை பார்த்துக் கொண்டிருந்தார்.
கமலாம்பிகை தம்பியை பார்த்துவிட்டு “உனக்கும் டீ கொண்டு வரவா ஆரு?” என்று கேட்டதும் “கொண்டு வா கா..” என்றவன் முற்றத்துக்கு அருகில் இருக்கும் தாழ்வாரத்தில் பாய் விரித்து மகளோடு அமர்ந்து பேசத் தொடங்கினான்.
விஜயராகவனும் “எனக்கும் கொண்டு வாமா” என்றபடி அவரும் தூணில் சாய்ந்து பேத்திக்கு அருகில் அமர்ந்தார். ஆரூரன் பேசுவதும் அதற்கு தன் பாஷையில் அவள் பதில் அளிப்பதும் அமைதியாக இதனை பார்த்து இருந்தார் விஜயராகவன்.
“பொம்பள புள்ளனாலே இந்த அப்பாக்களுக்கு ஸ்பெஷல் தான்..!” என்றபடி வந்த கமலாம்பிகை அப்பாவை பார்த்து சிரிக்க மகளை தன் அருகில் அமர்த்திக் கொண்டவர் “நீயும் எனக்கு ஸ்பெஷல் தான் கமலா” என்றார்.
“அப்ப நானு??” என்றபடி நண்பர்களோடு விளையாடி விட்டு வந்த மயூரன் கேட்க..
“நீயும் தான் யா..” என்று பேரனையும் அருகே அமர்த்திக் கொள்ள அனைவருக்கும் கமலாம்பிகை குடிக்க டீ கொடுக்க.. குடித்துக் கொண்டு மெல்ல பேசிக் கொண்டிருந்தனர். பழங்கால கதைகள் தமயந்தி இருந்த போது நடந்தவை ஆதிரன் பற்றி என்று பேச்சுப்பாட்டில் சென்று கொண்டே இருந்தது.
“அக்கா உன் புருஷன் மறுபடியும் அந்த லோகநாதன் கூட சுத்துறாரு போல..” என்று பேச்சுனூடே ஆரூரன் கூற..
திடுக்கிட்டு திரும்பி பார்த்த கமலாம்பிகை “என்னடா சொல்ற?” என்று கேட்க..
“ஆமா இன்னைக்கு மயிலு வயலுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துச்சு.. அவங்க அப்பாவுக்கு”
“ஆச்சரியம் போ..? அதிசயமா என் பொண்ணுக்கு சமையல் கட்டு பக்கம் எல்லாம் வழி தெரிஞ்சிருக்கு பாரேன்?” என்று அதிசயப்பட்டார் கமலாம்பாகை.
“என்ன சாப்பாடு எடுத்துட்டு வந்தா?” என்று கேட்க..
“கம்பங்கூழ் எடுத்துட்டு வந்தா..!” என்றான் ஆரூரன் ரகசிய சிரிப்போடு..!
இன்னும் அதிர்ச்சியாகி “அந்த மனுஷன் அதெல்லாம் குடிக்க மாட்டாரே? இவ எதுக்கு அத போய் எடுத்துக்கிட்டு வந்தா?” என்று கேட்டார்.
“அவ சாப்பாடு எடுத்துட்டு வந்தது அவ புருஷனுக்கு தான்..!” என்றான் புன்னகையோடு ஆரூரன். முகத்தில் இப்பொழுது பெரும் நிம்மதி மகள் தம்பியை வெறுக்கவில்லை கோபத்தில் தான் இருக்கிறாள் என்று..!
ஆசுவாசம் கொண்டவர் கணவனுக்காக கூழ் எல்லாம் காய்ச்சி மகள் எடுத்து வந்திருக்கிறாளே என்று மனம் நிறைந்து போனது.
“அப்போ அவ கிட்ட பேசிட்டு இருக்கும்போது தான் உன் புருஷன் வந்து, என்னமோ லவ்வர்ட்ட பேசிட்டு இருக்கும்போது இடையில் வந்து பிரிக்கிற வில்லன் மாதிரியே பிரிச்சுவிட்டு போனாரு. நானும் உன் பொண்ணும் புருஷன் பொண்டாட்டின்னு உன் புருஷன் தலையில் நச்சு நச்சுன்னு குட்டி குட்டி சொல்லணும்னு என் கையெல்லாம் துடிச்சுச்சு.. ஆனா உன்ன நெனச்சு விட்டுட்டேன்.. ஏற்கனவே நீ கொட்டி கொட்டி பள்ளம் ஆகி வச்ச தல தானே?” என்று அக்காவை வாரினான் தம்பி.
மயூரனுக்கு சிரிப்பு வர அன்னையை பார்த்து இன்னும் சிரிக்க “வாய மூடுடா..!” என்று மகனை அதட்டியவர் தம்பியை பார்த்து முறைத்தார்.
விஜயராகவன் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க “என்னப்பா நீங்க அமைதியா இருக்கீங்க?” ஆரூரன் கேட்க..
“எனக்கு நடக்கிறது எதுவும் சரியா தெரியல தம்பி.. கிறுக்கு புடிச்ச குரங்கு கைல பாம்பு சிக்குனா என்ன ஆகும் அந்த நிலைமையில் தான் வீம்பு கொண்ட அந்த மனுஷன் கைல போய் என் பேத்தி மாட்டி இருக்கா? அந்த மனுஷன் எக்கு தப்பாவும் செஞ்சுருவானோன்னு பயமா இருக்கு யா?” என்றார்.
“அப்படியெல்லாம் நடக்காதுப்பா..! நான் எதுக்கு இருக்கேன்? நான் பாத்துக்க மாட்டேனா? என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”
“அப்படி இல்ல சிவா..! உன்மேல நம்பிக்கை இல்லாமல் இல்ல.. கள்ளன் பெருசா காப்பவன் பெருசானு ஒரு வழக்கு இருக்கு. என்னதான் நம்ம கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தி காவந்து பண்ண பார்த்தாலும் கள்ளன் ஏதாவது வழியில் உள்ள பூந்துருவானாம். அப்படித்தான் அந்த லோகநாத பைய..! ஏற்கனவே உன் கிட்ட அடி வாங்கிட்டு போனவன் இப்ப நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கீங்க.. இதுதான் சாக்குனு சொல்லிட்டு அந்த ஆள பேசி இல்ல எதையாவது கொடுத்து பேத்தி தனியா இருக்கும்போது உள்ள நுழைஞ்சிட்டானா??” என்று பதைப்பதைத்தார்.
தம்பி சொல்ல கேட்டு கமலாம்பிகைக்கு ஏற்கனவே மனம் அடித்துக் கொண்டது. இதில் அப்பா சொன்னதை கேட்டதும் உடல் எல்லாம் உதறியது “என்னப்பா இப்படி எல்லாம் சொல்றீங்க? அந்த ஆளு வேறு தண்ணி அடிப்பாரே அப்பப்போ.. அவர நம்பி வேற நான் பொண்ண விட்டு வச்சிருக்கேனே? ஏதாவது பண்ணி தொலைச்சிட்டாருனா நான் என்னப்பா பண்ணுவேன்?” என்றவர் உடனே எழுந்து “நான் இப்பவே எங்க வீட்டுக்கு போறேன் பா.. என் பெ
பொண்ண விட எதுவும் முக்கியம் இல்லை” என்று அழுதார்.
“அக்கா நீ உட்காரு.. முதலில்..!” என்று அவரை அமர வைத்தவன்,
“இப்ப என்ன ராவுக்கு அவளுக்கு துணை வேணும் அவ்ளோதான? நான் போய்க்கிறேன்.!” என்றதும் விஜயராகவனும் கமலாம்பிகையும் அவனை அதிர்ச்சியுடன் பார்க்க..
“வேற என்ன பண்றது? சுவரு ஏறி குதிச்சு தான் போயே ஆகணும். எனக்குன்னு வந்து வாய்ச்ச பொண்டாட்டியும் சரியில்ல மாமனரும் சரியில்ல.. இப்ப நீ போனினா இன்னும் அவருக்கு தொக்கா போயிடும். இன்னும் ஏகத்துக்கு ஆட ஆரம்பிச்சிடுவாரு..!” என்றதும் மனது அடித்துக் கொண்டது கமலம்பிகைக்கு.
“வேணாம் தம்பி.. நீ நேரா வீட்டுக்குள்ள போ.. பின்பக்கமாக போறது சரியில்ல. ஊர் தப்பா பேசும்” என்றார் கமலா.
“என்னது நேரா போறதா? உன் புருஷன் விட்டுட்டாலும்?” என்று நொடித்தவன் எழுந்து செல்ல.. வேதனையோடு அமர்ந்திருந்தார் கமலாம்பிகை.
அப்பா பேசியது அவன் காதில் ஒலித்து கொண்டே இருக்க.. மறுபுறம் அவன் காதல் தேவதையின் முகம் இம்சித்து கொண்டே இருக்க... தன் கால்களால் அவன் அறையை அளந்தவாறே நடைபயின்று கொண்டிருந்தான் ஆரூரன். அலுப்புடன் தன் படுக்கையில் மல்லாக்க விழுந்து விட்டதை பார்த்தவன்.. அதில் அவனும் அவளும் அந்த இரவின் தனிமையில்... வயல்களின் நடுவே... அவர்கள் வீட்டில்.. என காட்சிகள் அவன் கண்முன்னே விரிந்துக் கொண்டே செல்ல.. காதல் படுத்தும் பாடும் அது கொடுத்த இனிமையான அவஸ்தைகளை அவனால் தாங்க இயலவில்லை.
காலை தன்னவளோடான தனிமையில் அவள் மேலிருந்து வீசிய அவளுக்கே உரித்தான கஸ்தூரி மஞ்சள் வாசனையும், அவள் மேனியின் மென்மையும், அவளின் அங்கல லாவன்யங்களின் இளமையும் அவனுள் பல உணர்ச்சிகளின் எழுச்சியை தூண்ட.. இனி முடியாது என்று விரைந்து விட்டான் வேடனென கிளியை சிறைபிடிக்க…
ஆனால் அவனின் உள்ளமோ
இந்நேரத்தில் சென்றுதான் ஆகவேண்டுமா? என்று ஒரே ஒரு நிமிடம் கேட்க, அதையெல்லாம் புறந்தள்ளி அவன் தன் வெண்ணிற நவீன புரவியை எடுத்துக் கொண்டு வேந்தன் என பாய்ந்தான் தங்கமயில் வீட்டை நோக்கி…
சொன்னது போலவே அன்று இரவு சுவரேறி குதித்து பின்பக்க வழியாக கமலாம்பிகை வீட்டுக்குள் நுழைந்து விட்டான் ஆரூரன், காதல் பெண்ணவளை சிறையெடுக்க..
கழுத்துவரை போர்வையை போர்த்திக்கொண்டு, அருகில் மற்றொரு தலையணையை அணைத்தவாறு, சற்று மேவாய் பிளந்து சிறு குழந்தை என உறங்கும் தன்னவளை ரசனையுடன் அருகமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆரூரன்.
நல்லவேளையாக வீட்டில் தியாகேசன் இல்லை. வீடும் உள்பக்கமாக தாழ்பாள் போட்டு இருந்தது. அதை சரிபார்த்து கொண்டவன் மெல்ல அவளை நெருங்கி போர்வையை விலக்கினான்.
அன்று அவன் காலையில் பார்த்த அதே புடவையில் படுத்து அவள் உறங்கி கொண்டிருக்க.. "பார்றா.. நொப்பன் கூட சண்டைபோட்டுட்டு டிரெஸ்ஸ கூட மாத்தாம அப்படியே தூங்குறத பாரு.. ஆக சோம்பேறி டி நீனு" என்று திட்டிக்கொண்டே கண்களால் அவள் அழகை பருகிக் கொண்டிருந்தான்.
மெல்லிய காற்று ஜன்னலில் இருந்து வீச,
அதில் புடவை சற்று நகர்ந்து அவள் வெண்ணிற இடை அழகை அவனுக்கு காட்ட.. அம்மெல்லிடையில் இருந்து அவனால் கண்களை பிரித்து எடுக்க முடியவில்லை. சிற்றிடையில் இருந்த அவன் கண்கள் மேலே செல்ல, அவளுடைய இளமை வனப்புகள், அழகின் சொர்க்கப்பூரியாய் அவனை உள்ளிழுக்க தன் தலையை ஆட்டி "வேண்டாம் ஆரூரா.. ஏற்கனவே அவ மினி காளீஸ்வரி தான்.. எக்கு தப்பா பார்வைய ஓட்டி, கைய கியை வச்ச முழு ருத்ர காளியா மாறி உன் குடலை உருவிடுவா.. கன்ட்ரோல் கன்ட்ரோல்" என்று தன்னை மீறி அவள் வெண்ணிற இடையின் மென்மையை ஆராய கிளம்பிய தன் கைகளை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.
திடீரென புரண்டு படுத்தாள் தங்கமயில். அதில் அவனுக்கு திக்கென்றது. அவளுக்கு ஜன்னலிலிருந்து வீசிய பலத்த காற்று தொந்தரவை தர, அவளுக்கு மட்டுமா தொந்தரவு தந்தது, அவளருகில் அமர்ந்து அவளின் அழகை பருகிக்கொண்டிருந்த ஆரூரனுக்கும் வெகு தொந்தரவாக மாறியது. பின்னே காற்று அவள் உடலில் பயணித்து புடவையை நெகிழ்விக்க, விழிகளை அவற்றில் இருந்து அகற்ற வெகு சிரமப்பட்டான் அந்த காதலனான கணவன்.
தூக்கத்தின் நடுவே புரண்டு புரண்டு படுத்தாள் மயில். பலமான காற்றினால் ஜன்னல் கதவுகள் மூடி மூடி திறக்கவும், அதில் படீர் படீரென சத்தம் கேட்க, தூக்க கலக்கத்திலேயே எழுந்த தங்கமயில், ஜன்னலை மூடியவள் திரும்பி வர அப்படியே உறைந்து நின்று விட்டாள் அதிர்ச்சியில்..!!
தன் அறையில் அதுவும் தன் கட்டிலில் ஆரூரனை அவன் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. கணவன் தான், ஆனாலும் இப்படி அர்த்த ராத்திரியில் அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் வந்திருப்பவனை கண்டு அதிர்ந்தாள்.
ஆரூரனோ சாவதானமாக மாமியார் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை போல, கட்டிலில் நன்றாக சாய்ந்து அமர்ந்து ஒரு காலை மடித்து மறு காலை கீழே விட்டு இரு கைகளை கட்டியவாறு அமர்ந்திருக்க... அவளுக்கு உடல் நடுங்கியது பயத்தால்…
வாய்வழி வரை வந்து அலறலை தொண்டையிலேயே தடுத்து நிறுத்தியவள், ஆரூரனின் இந்த அராஜகத்தை நம்பவே முடியவில்லை.
அறைக்கு வெளியே அப்பா படுத்திருக்க இங்கே சாவதானமாக அமர்ந்திருக்கும் கணவனை பார்த்ததும் அவளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
தூங்கிக்கொண்டிருக்கும் தன் அருகில் எவ்வாறு வந்து உட்கார்ந்து இருப்பான்? என்று அவள் கொஞ்சம் நம்பமுடியாமல் சுற்றுமுற்றும் பார்க்க, அவனோ அவள் பார்வையை உணர்ந்து கட்டிய தன் கையை எடுத்து கதவை நோக்கி நீட்ட அதை பார்த்த அவளுக்கு அடுத்த அதிர்ச்சி.. கதவின் தாழ்ப்பாள் கழண்டு இருந்தது.
மென் சிரிப்பில் அதரங்கள் விரிய கூர்ந்து அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆரூரன்.
"உங்கள.. உங்கள.." வார்த்தைகள் தந்தியடிக்க கைநீட்டி கேட்டாள் அவள்..
அந்த இருளிலும் அவள் கண்கள் காந்தமென அவளை இழுக்க.. நாக்கு உலர்ந்து.. தொண்டை வரண்டு.. பேச்சு வெளி வரவில்லை அவளுக்கு.
அவன் அருகே வந்து "அறிவிருக்கா மாமா உனக்கு? நடுராத்திரில இங்கே உட்கார்ந்து இருக்கியே.. எங்க அப்பாவுக்கு தெரிஞ்சா?” என்று சன்னக்குரலில் அவள் கோபத்துடன் கேட்க..
"உன்னை பார்க்கணும் தோணுச்சு வந்துட்டேன்.. நொப்பன் பார்த்தா என்ன பண்ணுவாராம்? அப்புறம் ஒரு டவுட்டு ஒன்னு கேட்கணும்?” என்று அசட்டையாக அவன் கூற..
தன் தலையில் அடித்துக் கொண்டவள் "யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? முதல்ல இங்கிருந்து கிளம்பு" என்று அவள் அவனை கிளப்ப முயல... மாட்டேன் என்பது போல தலையசைத்தான் அவளை நேராக பார்த்து..
“காலைல சாப்பாடு எனக்கு எடுத்துட்டு வந்தியா இல்லை? உங்க நொப்பனுக்கு எடுத்துட்டு வந்தியா?” என்று கேட்டானே கேள்வி..!
‘அடப்பாவி.. மாமா..!! இந்த டவுட்டை கேட்க தான் அர்த்த ராத்திரில என் அறை கதவு தாழ்ப்பாளை எல்லாம் கழட்டிட்டு வந்தியா?’ என்பது போல அவள் முறைத்து பார்த்தாள்.
“எஸ் பொண்டாட்டி..!” என்றவன் அதிர்ந்து நின்றவளை இழுத்து தன் மடியில் வாகாக அமர்த்திக் கொண்டான்.
அதே நேரம் வெளியில் குடித்து விட்டு பப்பரப்பா என்று கிடந்த தியாகேசனிடம் இருந்து சாவியை எடுத்து கதவை திறந்து கொண்டு மெல்ல உள்ளே வந்தான் லோகநாதன்..!
தொடரும்..
