கண்ணம்மா 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 14

 

"தம்பி எழுந்திட்டானா ஆத்தா.." என்று காலையில் தனக்கு நீராகாரம் கொடுத்த வைதேகிவிடம் விசாரித்தார் செந்தில்வேலன்.

 

"இல்லைய்ங்க பெரிய மாமா.. இன்னும் தூங்கறாக" என்றதும், 

 

"தூங்கட்டும்.. தூங்கட்டும்.. நல்லா தூங்கி எழும்பட்டும் ஆத்தா! நேத்து எல்லாம் பாவம் அவேனுக்கு பயங்கர மன உளைச்சல்த்தா.. பய ரொம்ப பயந்துட்டான். நல்லா தூங்கி பொறுமையாக எழுந்து வரட்டும்.. ஒன்னும் அவசரம் இல்லை" என்றார்.

 

எப்பொழுதும் நீராகரம் குடித்துவிட்டு காலை ஒரு முறை வயலுக்கு சென்று பார்த்துவிட்டு வருபவர் அன்று அமர்ந்து இருப்பதைக் கண்ட வைதேகி மரகதவல்லியிடம் அவரை காண்பித்து "என்ன கா மாமா வயலுக்கு போகல போல" என்றதும்..

 

"தெரியலையே என்ன விஷயம்னு? சோழியும் குடும்பியும் சும்மா ஆடாது வைதேகி.. ஏதாவது பெருசா காரணம் இருக்கும்" என்றவர் மெல்ல கணவன் அருகே வந்து "என்னங்க வயலுக்கு கிளம்பலையா?" என்றார்.

 

 மனைவியை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் "போவோம்.. போவோம்.. இப்ப என்ன அவசரம் மெதுவா போய்க்கலாம்" என்றார்.

 

"அப்ப ஏதோ ஒரு விஷயம் இருக்கு.. ஆனா என்கிட்ட சொல்ல மாட்டேங்கறீய்ங்க கத்திரிக்காய் முத்துனா சந்தைக்கு வந்து தானே ஆகணும்.. அப்ப பாத்துக்குறேன்" என்று தாடையை தோள்பட்டையில் இடித்துவிட்டு அவர் செல்ல.. செல்லும் மனைவி பார்த்து இடவலமாக தலையாட்டி கொண்டவர், "எப்படித்தான் இந்த பொம்பளைங்க நாம சொல்லாமலே நம்ம முகத்தை பார்த்து விஷயத்தை கண்டுபிடிக்கிறாய்ங்களோ??" என்று யோசித்த வண்ணம் அமர்ந்திருந்தவர் 'எப்படியும் தம்பி லேட்டா தான் தூங்கி வருவியான்.. நம்ம அதுக்குள்ள ஒரு எட்டு வயலுக்கு போயிட்டு வந்திடுவோம். அவன் எழுந்ததும் அவேன் கிட்ட பேசுவோம்' என்று அவர் எழுந்திருக்கும் பொழுது அறையிலிருந்து வெளிவந்தார் கதிர்வேலன்.

 

இப்போது மரகதவல்லி முழங்கையால் வைதேகியை இடித்து "கூடத்தை பாராத்தா.." என்ற கண்களை காட்ட, அங்கே வந்த கணவனை பார்த்து இவர் யோசனையாக அக்காவை பார்க்க.. இருவரும் என்னவாயிருக்கும் என்று யோசனையோடு உதட்டை பிதுக்கி கொண்டனர்.

 

இன்னும் பெண்கள் எல்லாம் எழுந்து வரவே இல்லை.

குகனுமே நேற்று நடந்த அத்தனை நிகழ்ச்சிகளில் ஒரு வித அயர்ச்சி உண்டாக இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தான்.

 

"ஏம்தா வைதேகி.. கதிரு வந்துட்டியான் பாரு.. அவேன் குடிக்க ஏதாவது கொண்டு வாத்தா.." என்று இவர் குரல் கொடுக்க, "இதோ வந்துட்டேங்க மாமா" என்றபடியே கணவனுக்கும் நீராகாரத்தை கொண்டு வந்து கொடுக்க, அதை குடித்தவர் அமைதியாக சிறிது நேரம் அந்த லோட்டாவையே வெறித்தார்.

 

"உன்கிட்ட கொஞ்சம் பேசும் கதிரு.."

 

"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ண்ணே.." என்று இருவரும் ஒரே நேரத்திலேயே பேசினார்கள்.

 

வைதேகி இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க.. "இங்கன என்ன வாய பாத்துகிட்டு இருக்கிறவ.. கால சமையல் வேலையை சீக்கிரம் முடி வைதேகி" என்றதும்..

 

"அண்ணனும் தம்பியும் தனியா பேசிக்க போறீய்ங்கனு சொன்னா.. நாங்க வந்து இடையில புகுந்திடுவோமா? பேசுங்க.. பேசுங்க.. நல்லா பேசுங்க! எனக்கு என்ன வந்தது? அக்கா சொன்ன மாதிரி கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும். எப்படி இருந்தாலும் விஷயம் என்கிட்ட வந்து தானே ஆகும்! அப்போ வச்சிக்கிற உங்கள நாங்க… அக்கா பாத்தீய்ங்களா இவுகள.." என்று கணவனிடம் ஆரம்பித்து மரகதவல்லியிடம் பேசியப்படி சமையலறை நோக்கி சென்றார் வைதேகி.

 

திரும்பவும் அண்ணன் தம்பி இருவருக்கிடையே ஒரு மௌனம் பேரிச்சைலாய் ஆட்சி செய்ய.. 

 

"அண்ணே.."

 

"கதிரு…" என்று மீண்டும் இருவரும் ஒரே நேரத்தில் அழைத்துக் கொள்ள..

 

இதையெல்லாம் சமையலறையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வைதேகியும் மரகதவல்லியும் "இப்போதைக்கு இவிய்ங்க பேசுவாய்ங்கனு எனக்கு நம்பிக்கை இல்லை வைதேகி"

 

"அதே தான் கா! பாருங்களேன்.. என்னமோ புதுசா பாத்துக்குற லவ்வர்ஸ் போல ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காய்ங்க! ரெண்டு பேரும் மனசுலேயும் ஒரே விஷயம் தான் ஓடிட்டு இருக்கு.. அத பட்டுன்னு சொல்லி முடிக்க எத்தனை தயக்கம் இவிய்ங்களுக்கு உள்ளாறா?" என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு அங்கலாய்த்தார் அக்காவிடம்.

 

"நீங்க வயலுக்கு போகலையா ணே?" என்று கேட்டார் கதிர்வேலன்.

 

"உனக்காக தான் காத்துகிட்டு இருந்தேன் கதிரு" என்றார் அவரும் மெல்லிய குரலில்..

 

"அது ண்ணே.. அது வந்து.. அந்த பையன்.." என்று அவர் இழுக்க..

 

"நேத்து ராத்திரி மாப்பிள்ளையா இருந்தவரு.. இப்ப காலைல அந்த பையனா ஆயிட்டாரா கதிரு.." என்று செந்தில்வேலன் கூறியதும்

திடுக்கிட்டு அண்ணனை பார்த்தார் கதிர்வேலன். 

 

"நேத்து இராவு நானும் அவரை பார்க்க அங்க வந்திருந்தேன் கதிரு.." என்றதும் இருவருக்குமே புரிந்தது.

 

"அந்தப் பையன் சொன்ன மத்ததை விட ஒரு விஷயம் நிசமான நிசம் கதிரு.. என்னோட பலமே நீ தான் யா.. உனக்கு ஒன்னுனா.. என்னால…" என்று செந்தில்வேலன் பேசும்போது அவரது குரல் தழுதழுக்க…

 

"என்ன ண்ணே.. இது.." என்று வேகமாக அண்ணனை கட்டிக் கொண்டவரின் கண்களும் கலங்கித்தான் இருந்தது.

 

இருவரையும் தாடையில் கை வைத்தப்படி வாயை பிளந்து அவரின் மனைவியர்கள் அதிசயித்து பார்த்த வண்ணம் தான் இருந்தனர்.

 

"என்னமோ சின்னஞ்சிறுசு மாதிரி நீங்க ரெண்டு பேரும் கட்டிக்கிட்டு நிக்கிறீய்ங்க.. அவிய்ங்க தானே கட்டிக்கணும்‌. அப்போ கல்யாண தேதிய குறிச்சிடலாமுங்களா பெரிய மாமா??" என்று சமையலறையில் இருந்து வைதேகி கேட்க..

 

"கழுத.. கழுத.. வாய் கொழுப்பு ஜாஸ்தி டி உனக்கு!!" என்று மனைவியை கண்டித்தாலும் அதில் சிரிப்பு மட்டுமே விஞ்சியிருந்தது.

 

நேற்று நடந்த விஷயம் எதுவும் வெளியில் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை.

 

தீபாவளி பரபரப்பில் நிறைய வண்டிகள் லைசென்ஸ் இல்லாமல் பிடிக்கப்பட்டதால் அரசு பறிமுதல் செய்த கள்ளச்சாராயம் போதை வஸ்து வெளியில் காட்டப்படாமல் அப்படியே காவல்துறையினர் குடோனுக்கு எடுத்து சென்று விட்டனர்.

 

"எத? நம்ம வண்டி புடிச்சுட்டாய்ங்களா? அந்த பைய லைசென்ஸ் எல்லாம் ஒழுங்கா வச்சிருந்தானா? நான் போய் என்னன்னு ஸ்டேஷன்ல விசாரிச்சிட்டு வரேன்" என்று மகனிடம் மட்டுமே சொல்லி சென்றதனால், மற்றவர்களுக்கும் கதிர்வவேலன் வேறு வேலையாக சென்றுள்ளார் என்றே நினைத்தனர். 

 

கூடவே அனைவருமே தீபாவளியென ஒருவித பரபரப்பில் இருந்ததால்இதனை கண்டு கொள்ளாமல் விட்டதால் யாருக்கும் விஷயம் தெரியாமல் காதோடு காது வைத்த மாதிரி முடிந்துவிட்டது.

 

அதற்குள் விசாகா எழுந்து வந்திருந்தவள் அன்னையின் பேச்சு கேட்டு "யாருக்கு மா கல்யாணம்?" என்று சிரித்துக் கொண்டே வர..

 

"போச்சு.. நம்ம வீட்டு நியூஸ் சேனலுக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு! இனி இந்த விஷயம் ஊரு பூரா தம்பட்டம் அடிக்காம இவ விட மாட்டா" என்று மகளை பற்றி முணுமுணுத்துக் கொண்டே "முதல்ல போய் கிச்சன்ல டீ இருக்கு எடுத்து குடி! பெரியவங்க பேசும்போது என்ன வாய பாக்குறவ?" என்று அதட்டினார்.

 

"ஐ.. அக்காவுக்கும் மச்சானுக்கும் தானே கல்யாணம்? எனக்கு தெரியும்! எனக்கு தெரியும்! நான் போய் எல்லார்கிட்டயும் சொல்ல போறேனே.. ஏய் மஞ்சரி.. வர்ஷினி.. டேய் ண்ணே குகா.." என்று அவள் வேகமாக சென்றாள். முதலில் மஞ்சரி மற்றும் வர்ஷினிடம் விஷயம் சொல்லி அவர்களையும் எழுப்பி கூட்டி வந்தாள்.

 

"ஆமா.. அக்கா எங்க?" என்றதும் அவள் அறையைத் தட்ட அங்கே அவள் இல்லை!!

 

"அய்யய்யோ அம்மா.. பெரியம்மா.. அக்கா ரூம்ல இல்லையே? எங்க போன தெரியலையே?"

 

"ஆமா அம்மா அக்காவ ரூம்ல காணும்!"

 

"ஒரு வேள மச்சான் தூக்கிட்டு ஆஸ்திரேலியா போய்டாரோ?" என்று அறையின் வாசலில் இருந்து வெளியே பெற்றோரை எட்டி பார்த்தப்படி அவர்கள் சத்தம் போட..

 

இவர்கள் என்ன ஏது என்று புரியாமல் "வீட்டில் இருக்கிற பொண்ணு எங்க போவா? ஒழுங்கா தேடிப் பாருங்க டி!" என்று அதட்டினார் வைதேகி!

 

"இல்லமா ரூம் ஃபுல்லா தேடிட்டோம்.. நெஜமா அக்காவ காணும் மா" என்று விழி விரித்து கூறினாள் விஷாகா.

 

இவர்கள் கத்தலை கேட்டுக்கொண்டே குளியலறையில் இருந்து வெளிவந்த தாரா "ஏண்டி கத்துற? பாத்ரூம் தானடி போயிருந்தேன். அதுக்குள்ள காணும் ஊரு ஃபுல்லா கூப்பாடு போடுற? ரூம்ல இல்லாம எங்க போய்ட போறேன் நானு?" என்ற தாரா தங்கையின் தலையில் நறுக்கு என்று ஒரு கொட்டு போட்டாள்.

 

அதற்குள் மஞ்சரி "அம்மா அக்கா பாத்ரூம் போய் இருக்கா.. இவ அதுக்குள்ள காணோம்னு கத்திட்டா.. பஜாரி" என்றாள்.

 

"நீ தான்டி பஜாரி.. நீனும் சேர்ந்து தானே காணோம்னு சொன்ன.." என்று ஒரு சிறு பஞ்சாயத்து அங்கே…

 

'நல்ல வேலை மூவரும் இங்கே அடித்துக் கொண்டதில் நாம் மெதுவாக அறைக்குள் நுழைந்து குளியல் அறைக்குள் நுழைந்ததை யாரும் கவனிக்கவில்லை!' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் தாரா.

 

"சரி‌ சரி இங்க வாங்க.. முக்கியமான விஷயம்.." சகோதரிகள் அனைவரையும் அழைத்து குசுகுசுவென்று "அப்பாவும் சித்தப்பாவும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாய்ங்க.. அத தனியா நின்னு குசுகுசுனு பேசுறாய்ங்க..

 

 ஆனா நான் கேட்டுட்டேனே!!" என்று முன்னதை மெதுவாகவும் பின்னதை சத்தமாகவும் சொல்லி தன் நைட்டியில் இல்லாத காலரை தூக்கி விட்டவளை கண்டு மற்றவர்கள் சிரிக்க தாராவின் முகத்தில் ஒரு புது பொலிவு! மணமகளுக்கான தனி அழகு மிளிர்ந்தது அப்போதே!

 

"பேசிட்டே இருக்கீய்ங்க சீக்கிரம் கீழ் வாங்க ஆத்தா.‌. சாப்பிடலாம்" என்று செந்தில்வேலன் கூறினாலும் அவர் கண்கள் மாடியில் தான் இருந்தது. "அவரே வரட்டும் நாம தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.

 

ஆனால் விசாகவால் பொறுக்க முடியவில்லை. வீட்டில் நடக்கும் ஒரு முதல் திருமணம் கொண்டாட்டம்! கூடவே பொதுவாக மாப்பிள்ளை வந்து பொண்ணை பார்த்து அப்படி எல்லாம் இல்லாமல் அக்காள் ஏற்கனவே செய்து கொண்ட திருமணத்திற்கு சம்மதம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று எத்தனை நாட்கள் பரிதவித்து கடைசியில் ஒரு வழியாக குடும்பம் ஒத்துக் கொண்ட காதல் திருமணம்!

 

அந்த விஷயமே ஒரு கிளுகிளுப்பை தர.. அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி! அதனை அப்பவே ஆதித்திடம் சொல்ல அவனின் அறைக்கதவை இவள் சென்று தட்ட "ஏய் இரு நாங்களும் வறோம்" என்றனர் இரட்டையர்கள்!

 

"நீங்க கூட வாங்க.. ஆனா மச்சான் கிட்ட நான் தான் சொல்லுவேன்!" என்றாள் விஷாகா.

 

"அதெல்லாம் முடியாது.. நாங்க தான் சொல்லுவோம்!" என்றனர் இரட்டையர்கள்.

 

"முதல் முதலில் மச்சான் எனக்கு தான் ஃபிரண்டா ஆனாரு.. அதனால் நான் தான் சொல்வேன்"

 

இப்படியாக மூவரும் சண்டையிட்டு சமாதானம் பண்ணி கூட்டணி அமைத்து ஆதித்தை எழுப்ப.. தூக்குக் கலக்கத்தில் எழுந்து வந்தவன் இவர்களை பார்த்து "என்ன எதும் ப்ராப்ளமா? எல்லாரும் ஓகே தானே? இல்ல தீப்ஸுக்கு எதுவுமா?" என்று பதட்டத்தோடு விசாரிக்க.. அவனை அப்படியே கைபிடித்து அந்த மாடி வராண்டாவில் ஒரு சுற்று சுற்றி "எங்க அப்பாங்க உங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க.." என்று அவர் சத்தமாக சொல்ல அவனின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம்.

 

எப்படியும் சம்மதித்து விடுவார்கள் சம்மதம் வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது தான். ஆனால் காலையில் எழுந்திருக்கும் போதே இப்படி ஒரு நல்ல விஷயம் கேள்விப்பட்டது அவனுக்கு சந்தோஷத்தை அளித்தது.

 

இப்படியாக விஷாகா துள்ளித் திரிந்து அந்த வீட்டினை கலகலப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் தன் அன்னையோடு அந்த வீட்டிற்கு திரும்பவும் வந்தான் வெற்றிவேல்.

 

"தீபாவளி வாழ்த்துக்கள் மாமாக்களே…" என்ற ஆர்ப்பாட்டத்தோடு!!

 

விசாகாவின் கலகலப்பில் அனைவரும் முகமும் சந்தோஷத்தில் மிளிர்ந்திருக்க.. அப்படியே திரும்பி வாயிலை பார்த்தார்கள்.

 

"என்னங்க மாமா மூஞ்சியெல்லாம் சந்தோசமா இருக்கு. அப்படின்னா அந்த பயலை வீட்டை விட்டு தொரத்திட்டீய்ங்களா? அதானே.. என் மாமனுங்கனா கொக்கா!! மதுரகாரவனுக்கிட்ட வச்சிக்கலாமா? எப்போ எனக்கும் தீபுவுக்கும் கல்யாணம் மாமா?" என்று தன் முப்பது பல்லையும் காட்டி கேட்க..

 

அதுவரை சந்தோஷத்தில் வகிசித்திருந்த அனைவரின் முகமும் ஒரு மாதிரி ஆகிவிட.. அமைதி காத்தனர்!!

 

"என் புள்ள கேட்கிறது சரிதானே? ஏதோ ஊருக்காக தங்க வைச்சோம். ஒரு வாரத்துக்குள்ள உங்கள அவனை ஏத்துக்க வைக்கணும்னு சொல்லி தானே தங்க வச்சோம்? அது ஒப்புக்குனு எங்களுக்கும் தெரியும்! உங்களுக்கு தெரியும்! என்னைக்கு இருந்தாலும் என் புள்ள தான் உங்க வீட்டு மருமவனு நீங்க வாக்கு கொடுத்து இருக்கீங்களே! அப்படி இருக்கும்போது அந்த வெளிநாட்டு பையன அனுப்பி விட வேண்டியது தானே? அதான் நாளைக்கு தீபாவளி தானே!" என்று சட்டமாக அமர்ந்து கொண்டார் அழகு மீனாள்.

 

இதை எப்படி சரி செய்வது என்று புரியாமல் தம்பியை பார்த்தார் செந்தில்வேலன். ஏனென்றால் சொந்தத்துக்குள் பெண் கொடுத்து கட்டுவது எல்லாம் அங்கே வழக்கம் என்றாலும் இப்பொழுது அதை தலைகீழாக மாறி உள்ளதே ஆதித் தாரா காதல்! கூடவே கொடுத்த வாக்கையும் நிறைவேற்ற வேண்டுமே! இல்லையென்றால்.. வாக்கு கெட்டவன் என்று சொந்தத்துக்குள் பெயர் நிலைத்து விடும். பின் எதற்கும் இவர்களை இவர்கள் வாக்கை நம்ப மாட்டார்கள்!

 

அண்ணன் தம்பி இருவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தனர்.

 

அதே நேரம் மாடி வளைவில் தன்னவளை சிறைபிடித்தவன் "என்ன டி பண்ணி வச்சிருக்க என்னை? இங்க பாரு.." என்று சட்டை பட்டனை விலக்கி காட்ட.. அங்கே மார்புக்கு மத்தியில் தாராவின் அழகிய கூடல் பல் தடம் சிவந்து கண்ணி இருந்தது.

 

அதை பார்த்தவுடன் எப்பொழுது எந்த நேரத்தில் அங்கே கடித்தாள் என்று எண்ணி பார்த்தவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்ன.. "ச்சீ முதல்ல சட்டையை மூடுங்க! வயசு பொண்ணுங்க இருக்குற வீட்ல.." என்று அவள் கண்களை உருட்ட..

 

"அடிப்பாவி செஞ்சது நீனு! சொன்னது குத்தமா?" என்று அவளை கிண்டல் செய்தான்.

 

"சரி தள்ளுங்க நிக்.. கீழ ஏதோ பேச்சு குரல் கேக்குது. எங்க அத்தை வந்திருக்காங்க நினைக்கிறேன்" என்று அவனல தள்ள பார்க்க..

 

"அதெல்லாம் முடியாது! நீ என்ன கடிச்சல்ல அதே மாதிரி.. நானும்.. அதே இடத்துல.. கடிக்கணும்! பழிக்கு பழி வாங்கணும்"என்று நம்பியாரைப் போல கையை பிசைந்து கொண்டு அவளை இன்னும் நெருக்கமாக நெருங்க.. அவள் அதிர்ந்து தன் மார்பை கைகளால் மூடிக்கொள்ள…

 

"சொல்லு தீப்ஸ்… கடிச்சிக்கவா?" என்று‌ ஹஸ்கி வாய்ஸில் கண்களில் காதலும் காமமும் சேர்ந்து வழிய கேட்டவனை கண்டவளும் அதில் கட்டுண்டு நிற்க.. அவர்களை தாண்டி அழுதுக் கொண்டே ஓடிச் சென்ற‌ மஞ்சரியை கண்டு இருவரும் திடுக்கிட்டு பிரிந்து நின்றனர்.

 

"நான் அப்பவே சொன்னேன்ல.. நல்லவேளை அவ ஓடுற வேகத்துல நம்மள பாக்கல" என்று அவன் இடுப்பில் கிள்ளிவிட்டு.. இவள் தங்கை பின்னால் போக.. 

 

"தனியா இன்னைக்கு மாட்டுவல தீப்ஸ்.. அப்போ இடுப்புக்கும் சேர்த்து தண்டனை இருக்குடி!" சிரித்துக் கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தவன், அங்கிருந்து இறுக்கமான சூழ்நிலையைக் கண்டு "என்ன.. என்ன ஆச்சு?" என்று குகன் அருகே மெல்லிய குரலில் விசாரித்தான்.

 

அங்கே இருந்தவர்களை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு "அது அத்த வந்து அக்காவை பொண்ணு கேட்டு வந்தாய்ங்க" என்றதும் இவன் கோபத்தோடு கையை முறுக்கியவன் அவர்களை நோக்கி போக.. அவனை பிடித்து தடுத்த குகன் "அப்பாவும் சித்தப்பாவும் அதுக்கு சம்மதிக்கல!" என்றதும் மனதுக்குள் அவனுக்கு ஒரு ஆசுவாசம்.

 

"உங்களுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுக்கிறதா சொல்லிட்டாயங்க" என்றான் குகன் மகிழ்ச்சியோடு. இன்னும் பெரும் மகிழ்ச்சி ஆதித் கண்களிலும் வதனத்திலும்…

 

"அப்புறம் ஏன் எல்லாரும் சோகமா.. எப்படியோ இருக்காங்க" என்று கேட்டான் ஆதித்.

 

"அது சின்ன வயசுல இருந்து.. வெற்றி மாமாவ தான் எங்க வீட்டுக்கு மருமகனும் சொல்லி சொல்லி பழகிட்டாய்ங்களா..

இப்போ அக்காவ உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா.. மஞ்சரிய வெற்றி மாமாவுக்கு கட்டி கொடுக்க சொல்றாய்ங்க.. அதுவும் வரும் மூகூர்த்திலுயே கல்யாணம் பண்ணி குடுங்கன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காய்ங்க" என்றான் நலிந்த குரலில்..

 

"அது எப்படி முடியும்? அவ இன்னும் ன்ன படிப்பு முடிக்கலையே?" என்று ஆதித் பேசியவன், இதற்கெல்லாம் காரணம் இவர்களின் கல்யாணம் என்பது உணர்ந்தவன் "ஷிட்..!" என்று தலையில் கை வைத்துக் கொண்டான். கதிர்வேலனும் செந்தில்வேலனும் அமைதியாக இருப்பதை பார்த்து சூழ்நிலை தன் கையில் எடுத்துக் கொண்டான்.

 

"சொல்லுங்கண்ணா நாள குறிச்சிடுவோமா? என்று மீனாள் கேட்டதும்..

 

"குறிச்சிடலாம்.. குறிச்சிடலாம்.. அதுக்கு முன்ன மஞ்சரி படிப்பை முடிக்கணும்! அதைவிட முக்கியம் அவளுக்கு உன்ன பிடிக்கணும்!!" என்றார் அவர்களின் முன்னே தோரணையாக நின்று!

 

"அதை சொல்ல நீ யாருடா? அவ என் தாய் மாமா பொண்ணு" என்று வெற்றிவேல் பாய்ந்து வர..

 

"நான் இந்த வீட்டு மூத்த மருமகன் மட்டுமல்ல மகனும் கூட!" என்று தெனாவட்டாக நின்றான் ஆதித். கதிர்வேலனையும் செந்தில்வேலனையும் முறைத்தவாறு..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top