கண்ணம்மா 11
சூப்பர்வைசரின் பால்ய சிநேகிதன் ஒருத்தன் தனியாக இம்மாதிரி போதை வஸ்து பரிமாற்றம் கள்ள சாராயம் காய்ச்சுவதை தொழிலாக கொண்டவன். அதைக் கொண்டு செல்ல இவரின் உதவியை நாட.. மறுத்தவருக்கு பணத்தாசை காட்டினான். கூடவே அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுப்பது என்று தாராளமாக அவர் கையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தி ஆசையை தூண்டிவிட்டான்.
"நீ தான்டா இங்கன ராஜா.. உன் மொதலாளிக்கு தெரியவா போகுது.. கூடவே உன் உழைப்புக்கு ஏத்த சம்மானம் உன் மொதலாளி கொடுக்குறது இல்ல டா.. நீ என் கூட கூட்டு வை.. அப்புறம் உன் லெவலே வேற.." என்று ஏற்றிவிட்டவனை நம்பினார்.
யாருக்கும் தெரியாமல் அந்த வேனிலேயே வைத்து இரண்டு மூன்று முறை கடத்தி இருக்க.. யாருக்கும் தெரியவரவில்லை. அதில் தைரியம் பெற்றார். கூடவே பணமும் கணிசமாக கொடுத்தான் அவன்.
அதுவும் தீபாவளி சமயத்தில் அதிகமாக சப்ளை செய்ய இவரை தூண்ட.. இவரும் பணத்துக்கு ஆசைப்பட்டு அவனுக்கு ஒத்துழைக்க.. இப்பொழுது மாட்டிக் கொண்டு விழி பிதுங்கினார்.
"உன் லெவலே வேற வேறனு சொல்லி. இப்படி மாட்ட வைச்சிட்டானே.." என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
அதன்பின் என்ன.. சட்டம் தன் கடமையை சரிவர செய்தது!
கதிர்வேலன் வீட்டுக்கு சென்றவர் யாரிடமும் பேசாமல் தன் அறையில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க.. வைதேகி வந்து மெதுவாக அவரை தொட.. அசைவில்லை அவரிடம்!
முகத்தை வலுக்கட்டாயமாக நிமிர்த்தி பார்க்க.. கண்கள் கலங்கி அமர்ந்திருந்த கணவனை இதற்கு முன்னால் இப்படி பார்த்திராதவர், அவரும் கலங்கி.. கணவரின் கையை பற்றி கொண்டு "என்னங்க மாமா இதெல்லாம்.. எதுக்கு இப்படி அழுகுறீங்க? எல்லாம் சரியா போகும்" என்று ஆறுதல் அளித்தார்.
"ரொம்ப அவமானமா போச்சு டி.. அது நம்ம குடும்பத்தில் இருந்து சாராயம் போதைனு இப்படி ஒரு வார்த்தைய கேட்கயிருக்க மாட்டோம். ஆனா.. இன்னைக்கி நம்ம வண்டியில.. கடத்திருக்கானுவோ.. அவிய்ங்க மட்டும் என் கையில சிக்கட்டும்.. இருக்கு அவிய்ங்களுக்கு" என்று உறுமினார்.
ஆனால் அடுத்த நிமிடம் சோர்ந்து போனவர், "அது.. அது.. என்னைய ஒரு நாள் பூரா லாக்கப்ல வச்சு.." என்று அதற்கு மேல் அந்த காட்சி அவமானமாய் அவர் கண் முன்னே வந்து போக.. தாங்க முடியாமல் குலுங்கி அழுதுவிட்டார் மனைவியிடம்.
என்னதான் வீம்பாக மீசைய முறுக்கு கொண்டு இருந்தாலும்.. ஆண்களுக்குள்ளே ஒரு குழந்தை மனம் உண்டு! அது அனைவரிடமும் வெளிப்பட்டு விடாது!
அது ஆதரவு கேட்கும்.. அழுக மடி தேடும்.. அரவணைக்க கை நாடும்.. மனசை சொல்ல இன்னொரு மனதை எதிர்ப்பார்க்கும்.. ஒட்டுமொத்த ரணத்தையும் பகிர்ந்து கொள்ள ஒற்றை ஜீவனை நாடும்!
பெரும்பாலும் அது அவர்களின் சகதர்மிணியாய் இருப்பார்கள்!
கதிர்வேலனின் அந்த குழந்தை மனம் நெருக்கமானவரிடம் மட்டுமே.. அது வைதேகியே!!
அண்ணனிடம் கூட எதுவும் பேசாமல் தன்னிடம் வந்து குமறும் கணவனை அணைத்து ஆறுதல் படுத்தியவர், "நாங்க.. உங்கள நம்புறோமே மாமா.. நீங்க ஏன் வெசனப்படாறிய்ங்க.. கண்டிப்பா சீக்கிரமே யார் செஞ்சானு கண்டுபிடிச்சிடலாம் மாமா.. கவலைப்படாதீக.." என்று ஆறுதல் படுத்தினார்.
"அவ்வளவு சீக்கிரம் முடியாது வைதேகி. கேஸ் ஃபைல் பண்ணிட்டாய்ங்க.. இதுல இருந்து வெளியில் வர வரைக்கும் கோர்ட்டு போலீஸ் ஸ்டேஷனு நாம அலையனும்! வேந்தனுக்கு போன் போட்டா.. அவேன் இங்கன இல்லையாம் அவங்க மாமியார் பார்க்க ஆஸ்திரேலியா போயிருக்கானாம், கதிரும் அவன் கூடத்தான்.. நாளனைக்கு தான் வராய்ங்க.. அதுவரைக்கும்… என்னால இந்த அவமானத்தை.. தாங்கவே முடியல.." என்று சிறுபிள்ளை போல் தேம்பித் தேம்பி அழுதார் கதிர்வேலன்.
பேசி பேசி அவரை ஆறுதல் படுத்தி தேற்றி "வெளியே வாங்க மாமா.." என்று அழைக்க..
"முடியாது.. என்னால இந்த முகத்தோட என் பொண்ணுங்க முகத்துல முழிக்க முடியாது.. என்னைய தனியா விடு வைதேகி" என்று கூறியவரின் கரங்கள் மனைவியின் கரங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டது. கணவனின் மனம் அறிந்து அவரும் அவருக்கு ஆறுதலாய் அங்கே அமர்ந்திருந்தார். அறைக்குள்ளையே முடங்கிப் போனார் கதிர்வேலன்.
செந்தில்வேலனின் பலமே அவரது தம்பி கதிர்வேலன் தான். அவரை இப்படி பார்த்து பார்த்து அயர்ந்து போய் கூடத்தில் அமர்ந்து விட்டார். அவர் மகள்களும் ஒருத்தரை ஒருத்தரே பார்த்துக்கொண்டு.. என்ன நடக்குது என்பது புரிந்தும் புரியாமலும் இருக்க.. மனைவியிடம் அவர்களை காட்டி "எல்லாரையும் படுக்க சொல்லு!" என்றார்.
மரகதவில்லி மகள்களை அழைத்து "தூங்குங்க கண்ணுக்களா.. எதுவும் பேச வேணாம்.. எதையும் யோசிக்க வேணாம்.. எல்லாம் சரியாகும்" என்று அனுப்பி வைத்தார்.
உள்ளே சென்ற தாராவோ திரும்பத் திரும்ப ஆதித்துக்கு அழைக்க.. அவனோ அவளது ஃபோன் கால் ஒன்றை கூட எடுக்கவில்லை "மகனே என் காலையா எடுக்க மாட்டேங்குற.. நீ வீட்டுக்குள்ள கால வைடா.. அப்புறம் இருக்கு உனக்கு?" என்று கடுப்போடு அமர்ந்திருந்தாள்.
திரும்பவும் மரகதவல்லி கணவன் அருகில் இருந்தார் "அந்த பையன் வந்திருச்சா?" என்று மனைவியிடம் கேட்க..
"இல்லையே.. உங்க கூட தானே வந்தாப்படி.." என்றார்.
"குகன அழைச்சிட்டு எங்கேயோ போறேன்னு சொன்னாப்டி.. ஏற்கனவே பிரச்சனை இதுல இந்த பையன் எங்கேயாவது போய் எதையாவது செஞ்சு மாட்டிக்காம இருக்கணும்" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே..
"அப்பா.. பெரியப்பா.." என்று குதுகலத்தோடு குகன் உள்ளே வர..
"யாத்தே.. இவன் என்ன திரும்பவும் அலறிட்டே வரியான். திரும்ப என்ன குண்ட போட போறியான்னு தெரியலையே.." என்று மரகதவல்லி நெஞ்சை பிடித்தப்படி கணவனை பார்க்க.. அதே சமயம் குகனின் குரலில் பயந்தபடி தான் கதிர்வேலனும் வைதேகியும் அறையில் வந்தனர்.
"அப்பா.. அப்பா.." கதிர்வேலை பார்த்தவனுக்கு அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை. ஏனென்றால் காலை முதல் அவர் பட்ட பாட்டை அருகில் இருந்து பார்த்தவன் ஆயிற்றே..
"என்ன சாமி.. என்னாச்சு ஏன் இப்படி கடந்து தவிக்குற?" என்று வைதேகி மகனை நெருங்கி கேட்டார். ஏனென்றால் அடுத்த வார்த்தை பேச முடியாமல் கண்களில் இருந்து கரகரவென்று அவனுக்கு கண்ணீர் வந்து கொண்டே தான் இருந்தது.
"ஒன்னும் இல்ல.." என்று அம்மாவிடம் தலையசைத்தவன் நெருங்கி தந்தையே இறுக்க அணைத்துக் கொண்டான். அங்கிருந்து ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
மகன் ஏன் இப்படி அழுகிறான்? எதற்கு இப்படிட தன்னை அணைத்துக் கொண்டான்? எதுவுமே புரியவில்லை கதிர்வேலனுக்கு.
"நாம் ஒரு நாள் சிறையில் இருந்ததை நினைத்து மகன் எப்படி மறுகுகிறானோ?" என்று நினைத்தவர், அவன் முதுகை தடவி கொடுத்து "அப்பதான் வெளியில வந்துட்டேனே ராசா! எதுக்கு இப்படி அழுகிற? போதும்.. போதும்." என்று ஆறுதல் அளித்தார்.
அப்போதும் அந்த கேவல் நிற்கவே இல்லை அவனிடம். "என்ன ண்ணே இது?" என்று அவர் அண்ணனை பார்க்க.. அவரும் இவர்கள் அருகில் வந்து "ஐயா சாமி.. என்னடா ஆச்சு? என்னடா இப்படி அழுகிறவன்?" என்று கேட்டவர் குரலும் தழுதழுத்தது.
பெண்கள் நால்வரும் கண்ணீருடன் தான் இவற்றை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களும் இவர்கள் அருகில் வந்து நின்று கண்ணீர் விட..
ஆனால் என்ன எதுவென்று யாருக்கும் தெரியவில்லை. தாராவின் கலங்கிய கண்களோ சுற்று முற்றும் தேடி ஒரு ஓரத்தில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஆதித் மேல் தான் நிலைத்தது.
'இங்கே இவ்வளவு உணர்ச்சிகரமான ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கு.. இவன் என்ன சிரிப்போடு நிற்கிறான்?' என்று தான் யோசித்தாள். அவன் முகத்தில் சிரிப்பில்லை என்றாலும் அந்த கண்களில் அத்தனை மகிழ்வு இருந்ததை அவனவளால் புரிந்து கொள்ள முடியாதா என்ன?
பெரியப்பா வந்து தன் தோளைத் தட்டிக் கொடுத்தது தான் தாமதம்.. தந்தையோடு சேர்ந்து பெரிய தந்தையும் இறுக அணைத்து கொண்டான் குகன்.
ஆண் பிள்ளை என்றாலும், இதனால் வரை பெரிய பொறுப்புகள் எல்லாம் சுமக்காமல் இரு தந்தைகளின் நிழல்களில் அவர்களுக்கு உதவி கொண்டு.. அக்கா தங்கைகளை அன்போடும் வம்போடும் சீண்டி கொண்டு.. இருந்தவன் தான் குகன். இன்று இப்படி ஒரு பிரச்சனையை எதிர் நோக்கவும்.. மனதால் மிகவும் கலங்கி தான் போனான். அதிலும் அப்பாவின் நிலை கண்டு இன்னும் படுமோசம்.
இப்பொழுது அனைத்தும் தெளிவாகி விட.. ஆதவனை மறைத்த முகில் விலகியது போல அனைத்து கஷ்டங்களும் நீங்கிவிட.. மனதில் அத்தனை சந்தோஷம்! அதை எப்படி காட்ட வேண்டும் என்று தெரியாமல் தான் அழுதுக் கொண்டிருக்கிறான் இந்த வளர்ந்த பிள்ளை.
"என்னய்யா.. என்னாச்சு.. ஏன் டி புள்ள இப்படி அழுகுறியான்?" என்று மரகதவல்லி வைதேகியிடம் கேட்க..
"தெரியலையே கா" என்ற வைதேகியின கண்களும் கலங்கி தான் இருந்தது.
ஒருவழியாக அழுகையை நிறுத்தியவன் கண்களை புறங் கையால் அழுந்த துடைத்துக் கொண்டு, சிரித்த வண்ணம் தந்தை ஏறிட்டு "உங்க மேல எந்த தப்பும் இல்லனு சொல்லிட்டாய்ங்க ப்பா.. உங்க மேல எஃப்ஐஆர் எல்லாம் போடல.. விசாரணைக்கு தான் கூப்பிட்டு வச்சுருந்தாய்ங்கலாம். இப்போ உங்க மேல எந்த பழியும் தப்பும் இல்லப்பா" என்றான் முகத்தில் அத்தனை மலர்ச்சியோடு.
"நிசமா வா கண்ணா" என்று மகனின் கன்னங்களை தாங்கி அவன் கண்களை பார்த்து கேட்க ஆம் என்றான் தலையாட்டி.
"நிசமாத்தான்…" என்றதும் கதிர்வேலன் முகத்தில் அத்தனை நிம்மதி.
"எப்படிடா மகனே இது சாத்தியம்? எப்படி நடந்தது இந்த அதிசயம்?" என்று குகனை தன் புறம் திருப்பி அவன் தோளை பற்றி உலுக்கி கொண்டே கேட்டார் செந்தில்வேலன்.
அதற்குள் வைதேகி மரகதவல்லியும் அவன் இருபுறமும் நின்று கொண்டு "நெசமா.. அப்பா மேல தப்பு இல்லன்னு சொல்லிட்டாய்ங்களா? இனிமேட்டு எந்த கேசேம் போட மாட்டாய்ங்களே?" என்று அத்தனை ஆவலாக கேட்டார்.
ஏனென்றால் கணவன் அழுத அழுகை துடித்து துடிப்பை நேரில் பார்த்தவர் அல்லவா?
"யய்யா.. உண்மைய சொல்லு கண்ணு.. ஏற்கனவே இந்த வீடு வீடாவே இல்ல.. தம்பி மேல் எந்த தப்பும் இல்லைனு சொல்லிட்டாய்ங்க தானே?" என்று இந்த புறம் குகனின் தாடையை திருப்பி மரகதவல்லி கேட்க..
"ஆமா.. ஆமா .. அப்பா மேல எந்த தப்பும் இல்லனு நிரூபிச்சாச்சு!" என்றதும் "நிரூபிச்சாச்சா..? யார்? என்ன?" என்று அனைவரும் குழப்ப முகத்தோடு அவனை பார்க்க.. அவனின் கைகள் நீண்டு ஆதித்தை காட்டி "மச்சான் தான் எல்லாத்தையும் ஆதாரத்தோடு நிரூபிச்சாரு" என்றான்.
"எப்படி? எப்படி? யார் செஞ்சது?" என்று கதிர்வேலனும் செந்தில்வேலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குகனிடம் கேட்க..
குகன் சூப்பர்வைசரின் செயல்களை எல்லாம் புட்டு புட்டு வைத்ததோடு அதனை ஆதித் ஆதாரத்தோடு கண்டுபிடித்ததையும் விவரித்தான்.
தாரா கண்கள் மின்ன இப்பொழுது கணவனை ஆசையாக பார்த்தாள். ஆனாலும் உள்ளுக்குள் கடுப்பு!! "எத்தனையும் செஞ்சுட்டு நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லல பாரு இவன்.. தனியா மாட்டட்டும் அப்ப இருக்கு உனக்கு!' என்று!!
ஆக மொத்தம் இந்த மனைவிகளுக்கு கணவன் எது செய்தாலும் குத்தம் தான் போல..
செய்தாலும் குற்றம்! செய்யலை என்றாலும் குற்றம்! அப்படி செய்தால் ஏன் சொல்லிவிட்டு செய்யவில்லை என்று குற்றம் தான்!
ஆனால்.. இது கணவன் மனைவிகளின் அழகான ஊடல்.. அதற்குள் நாம் தலையிட வேண்டாம்.
"இனி நீங்க பயப்படறதுக்கு ஒன்னும் இல்ல. ஆதாரத்தோடு அந்த ஆள புடிச்சு அந்த ஏசிபி கிட்டே ஒப்படைச்சாச்சு. அவரோட வாக்குமூலம் எல்லாம் உங்களை குற்றமற்றவராக நிரூபிச்சிட்டாங்க.. ஏற்கனவே கேஸ் ஒன்னும் போடல.. ஜஸ்ட் விசாரிக்க தான் உங்களை கூப்பிட்டு இருந்தாங்க. அதனால இனிமே நீங்க இந்த கேஸ் பத்தி எந்த பயமும் இல்லாமல் நிம்மதியா இருக்கலாம்" என்றான் ஆதித்.. கதிர்வவேலனை பார்த்து மென்னகையுடன்..
"இப்பதான் எனக்கு உயிரே வந்தது தம்பி.. ரொம்ப நன்றிப்பா!" என்று வைதேகி கணவனுக்கும் சேர்த்து அவரு நன்றி கூறினார்.
ஆனால் கதிர்வேலன் திகைப்பிலிருந்து இன்னும் வெளி வரவில்லை. சற்று முன்னர் தான் அத்தனை அவமானம் இன்னும் இது காலத்துக்கும் தொடருமே என்று பயந்து அழுததற்கு அவை அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது போல பூ என்று ஊதி வந்தவனை தான் திகைப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
"என்ன அக்காடி.. சித்தப்பு உன் ஆள வச்ச கண்ணு வாங்காம பாக்குறாரு.. ஒருவேள லவ்ஸ் பத்திக்கிச்சோ" என்று வர்ஷினி கிண்டல் செய்ய "சும்மா இருங்கடி!" என்று தங்கைகளை அடக்கினாள் தாரா.
கதிர்வேலன் தயங்கியபடியே ஆதித்தை பார்க்க.. அவனோ "ஜஸ்ட் லீவ் இட் அங்கிள்.. இத போட்டு என்னன்னு கொழப்பிக்காதீங்க. ஆன்ட்டிஸ் நீங்க போய் சாப்பாடு எடுத்து வைங்க" என்றதும் அதுவரை இருந்த மனகிலேச்சங்கள் எல்லாம் அகல.. கண்ணீரை துடைத்துக்கொண்ட வைதேகி "இதோ தம்பி.." என்று அனைவருக்கும் இரவு சாப்பாட்டை தயார் செய்ய.. வேற எந்த பேச்சுக்களுமின்றி சாதாரண பேச்சிக்களோடு அமைதியாக சென்றது உணவு நேரம்.
ஆதித் அவ்வப்போது தாராவை பார்க்க அவளோ முகம் கொடுத்து பேசினாள் இல்லை.
"ஏன் மூஞ்ச தூக்கி வச்சிட்டு போறா?" என்று புரியாமல் கை கழுவு செல்லும் இடத்தில் "நைட் என் ரூமுக்கு வர.. இல்ல நான் வந்து உன்னை தூக்கிட்டு வந்துருவேன்" என்று அடிக்குரலில் மிரட்டினான்
"எதுக்கு?" என்று கேட்டவளிடம்
"உனக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது! வா.." என்று தன்னறைக்கு வந்து விட்டான்.
காலையில் இருந்த கசகசப்பு ப தீர நன்றாக குளித்துவிட்டு வழக்கம் போல ஷார்ட் டி-ஷர்ட் வந்தவன்,வீட்டுக்கு அழைத்து அப்பாவிடம் இங்கே நடந்தவற்றையெல்லாம் சொல்லியவன், அம்மாவிடமும் சிறிது நேரம் பேசினான்.
பின் மெதுவாக வெளியே கதவை திறந்து பார்க்க எல்லார் அறையும் விளக்கணைத்து வீடே உறக்கத்தில் இருந்தது.
கண்டிப்பாக தாரா வருவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு!
இல்லையென்றால் அறைக்கு வந்து விடுவேன் என்று அவனின் மிரட்டல் பொயெல்லாம் கிடையாதுக்ஷ சில சமயம் ஆஸ்திரேலியாவில் அப்படி கோபித்துக் கொண்டு தாரா இருந்தால்.. அப்படித்தான் தூக்கி வந்து விடுவான் ஆபீஸ் என்று கூட பார்க்க மாட்டான்..
நேரம் கடந்து கொண்டே செல்ல இவனுக்கு தவிப்பு அதிகமானது. குறுக்கும் மறுக்கும் அறைக்குள் நடந்து கொண்டிருந்தவன் காதில் மெல்ல அரை கதவு திறக்கும் சத்தம் கேட்க…
"வந்துட்டா.. வந்துட்டா.. உன்ன.. இவ்ளோ நேரம் காக்க வச்சு இல்ல.. என்ன பண்றேன் பாரு!" என்றவன் அவன் அறையில் விதி விளக்கையும் அணைத்துவிட்டு கதவின் அருகே காத்திருந்தான்.
கதவு திறந்தது தான் தாமதம் சற்றென்று கையைப் பிடித்து இழுத்து அவள் அதரங்களை அவன் முத்தமிட ஆரம்பிக்க..
அந்தோ பாவம்.. அதரங்களுக்கு பதில் அவனுக்கு கிடைத்தது என்னவோ முரட்டு கெடா மீசை!
"ஐயையோ.." என்று சத்தம் இரு பக்கமும் எழ..
வேகமாக ஆதித் அந்த உருவத்தை விடுத்து விளக்கை போட.. அறையினுள் பாய்ந்த வெளிச்சம் அந்த உருவத்தை யார் என காட்டி கொடுத்தது..
அந்த உருவம்.. கதிர்வேலனே…!!
