கண்ணம்மா 9
ஆதித் சட்டையின் கையை மடித்து விட்டுக் கொண்டே மாடியில் இருந்து இறங்க.. அவனை ரகசியமாக ரசித்தவாறே காலை உணவை மேஜையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தாரா.
தன்னவள் தன்னை ரசிப்பதை தெரிந்த ஆதித் அவளைப் பார்த்து 'எப்படி இருக்கு?' என்று புருவம் உயர்த்தி கேட்க.. கண்களை மூடித் திறந்து உதடுகளை குவித்து "சூப்பர்.." என்று சைகை செய்தாள் தாரா.
"ஏய் அக்காடி.. சட்னி தட்ட பார்த்து ஊத்து டி!" என்று மஞ்சரி கத்த..
அதுவரை சரியாக தட்டில் ஊத்திக் கொண்டிருந்த தாராவோ அதிர்ந்து இப்போதுதான் மேசையில் ஊத்தினாள். அதை பார்த்து அருகில் இருந்த விசாகாவும் வர்ஷினியும் சிரிக்க "வாலுங்களா.. உங்கள.." என்று நறுக்கு என்று மண்டையில் கொட்ட வந்தவளை பார்த்து 'செய்யாதே..!" என்பது போல தலையசைத்தான் ஆதித்.
அதற்கு கட்டுப்பட்டு அவளும் அமைதியை நிற்க "ஓஓஓ.. ஓஹோ அப்படியா சேதி.. பரவாயில்லையே எங்க அக்காடி மச்சான் பேச்செல்லாம் கேட்கிறாளே?" என்று வம்பு இழுத்தாள் விசாகா.
"நீ வேற விசாக்.. அத்தனையும் அக்மார்க் நடிப்பு! உங்க அக்காவாவது.. என் பேச்சை கேட்கிறதாவது? என்று பெருமூச்சு விட்டான் ஆதித், அவளை பார்த்து..
"ஆனா இப்போ கேட்டாளே.. மச்சான்?" என்று விசாகா சரளமாக அவனோடு உரையாடினாள் மற்ற இருவரும் பேசவில்லை என்றாலும் கண்களால் அதே கேள்வியை கேட்டனர் ஆதித்திடம்.
அவர்கள் அருகிலேயே அமர்ந்தவன் மெல்ல அவர்கள் புறம் குனிந்து சத்தத்தை குறைத்து "அவ நடிக்கிறா உங்களுக்கு முன்னாடி.. சரியான கேட்க அவ!" என்று சொல்ல மூவரும் "இருக்கும்.. இருக்கும்.. வீட்டுக்கு தெரியாம உங்கள காதலிச்சதுல இருந்தே தெரியல.. அவ சரியான கேடினு" என்று கண்களால் சிரித்துக்கொண்டனர்.
"நிக்.. பொய் சொல்லாதீங்க நீங்க சொன்னதை நான் கேட்டதே இல்லையா? ஏன் இப்படி அண்ட புளுகு.. ஆகாச புளுகு புளுகுறிங்க" என்று இடுப்பில் கைவைத்து அவனுக்கு எதிரே நின்று முறைத்தாள் தாரா.
அவனது ஆள் விழுங்கும் பார்வையோ அவளது இடுப்பில் மையம் கொள்ள.. 'பிச்சு.. பிச்சு..' என்று உதட்ட அசைவில் கணவனை திட்டி விட்டு இடுப்போரம் தாவணியை சரி செய்தாள் தாரா.
"நீதான நல்லா கேட்ட போ.. நல்லா கேட்டுக்கோங்க சிஸ்டர்-இன்-லாஸ்.. உங்க அக்கா வீட்ல புருஷனாவும் என்னை மதிக்கறது கிடையாது. ஆபீஸ்ல அவளுக்கு எம்டியாவும் மதிக்கிறது கிடையாது.. வர வர பொண்ணுங்கள்தான் ஓவர் ரூல் பண்றாங்க எங்கள.. ஆண்கள் மீ பாவம்" என்றான் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு..
"நிக்.." என்று சிணுங்கலாக அழைத்தாள் தாரா.
"என்ன நீ மச்சான் பேரை சொல்லி கூப்பிடுற?" என்று வர்ஷினி வாயை பிளக்க…
"ஆமாம் இல்ல.. பேர் சொல்லி கூப்பிடக்கூடாது இல்ல உங்க ஊர்ல.." என்று அவளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தவன், "பீ ரோம் அட் ரோம்' அப்படின்னு யாரோ சொன்னாங்களே தீப்ஸ்.. இப்போ மதுரைக்கார பொண்ணா எப்படி உன் புருஷனை கூப்பிடுவ? என்றதும் அருகில் இருந்த விஷாகா அவன் புறம் குனிந்து "மச்சான்.. மாமானு கூப்பிடுவாங்க" என்றாள்.
"அப்ப நீயும் மாமா சொல்லி கூப்பிடு தீப்ஸ் என்னை இனி.." என்றதும்.. "அஸ்கு புஸ்கு.. ஆசை தான் உங்களுக்கு.." என்றாள் அவள்.
"எப்போதுமே நீ எனக்கு நிக்.. நிக் தான்" என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் தலையில் பட் பட் என்று இரண்டு குட்டி விழ.. அனைவரும் சிரிக்க.. தலை தேய்த்துக் கொண்டே தாரா பார்க்க.. அங்கே வைதேகி தான் முறைப்போடும் நின்றிருந்தார்.
"அது என்ன ஒரு ஆம்பளைய தலைல தட்டுன மாதிரி பேர சொல்லி கூப்பிடறவ.. இப்படியா வளர்த்து வெச்சிருக்கோம் உன்னைய நாங்க..?" என்று கூறியவர் ஆதித்தை மாமா என்று அழை என்றும் கூறவில்லை. அதை ஆதித்தும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
அவனும் மேசையில் அமர்ந்திருக்க அவனுக்கு யார் பரிமாறுவது என்று பெண்களுக்குள்ளயே குழப்பம். மரகதவல்லி வைதேகி பார்த்து 'நீ போ வைதேகி..' என்று தள்ள..
"அக்கா நீங்க போங்க" என்று அவர் தயங்க.. தீபாவை அனுப்ப அவர்களுக்கு பயம். எங்கே செந்தில்வேலன் வந்து திட்டுவாரோ என்று! அதனால் வேற வழியின்றி
வைதேகியே அவனுக்கு பரிமாறினார்.
"நோ ஃபார்மாலிட்டி ஆன்ட்டி! எப்பவும் நானே பரிமாறி தான் பழக்கம். தீப்ஸுக்கும் தெரியுமே!" என்று அவனே எடுத்து வைத்துக்கொள்ள முனைய..
"இல்ல தம்பி.. இங்கன இதுதான் வழக்கம்" என்று அவரே அவனுக்கு பாந்தமாக பரிமாறினார்.
அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பூஜை முடித்து செந்தில்வேவனும் கதிர்வேலவனும் உணவு உண்ண வர.. "குட்மார்னிங் மாம்ஸ்" என்றவன் உணவை தொடர்ந்தான்.
சாப்பிடும் போது எதுவும் கூறக்கூடாது என்று அவர்களும் அமைதியோடு சாப்பிட.. தந்தைமார் வந்ததும் பெண்கள் மூவரும் கடகடவென்று தங்கள் உணவை முடித்து சென்று விட்டனர்.
இவனுமே அவர்கள் சாப்பிடட்டும் என்று அமைதியாக இருந்தவன் அவர்களை உணவு முடித்து வரவும், "வீட்ல இருக்க எனக்கு போர் அடிக்குது. இன்னைக்கு உங்க ரெண்டு பேருல யார் கூடயாவது வரலாம்னு இருக்கேன். யார் கூட வர?" என்று அவன் கேட்ட தினுசில் இருவரும் ஒருவரை பார்த்து "நீங்கள வீட்டிலே இருங்க தம்பி" என்றார் கதிர்வேலன் சற்று அதிகாரமாக.
"அதிகாரம்? அதுவும் என்னிடமா? அப்படியெல்லாம் அடங்குபவனா இந்த ஆதித்?" என்று சிரித்துக் கொண்டான்.
"ஓஹ்.. அப்படியா? ஹே கேர்ள்ஸ்.. உங்களுக்கு இப்ப தீபாவளி ஹாலிடேஸ் தானே.. வாங்க நாம எல்லாம் ஷாப்பிங் போயிட்டு வரலாம்" என்று அவன் அழைக்க..
'இதேதடா விட்டா வீட்டுப் பெண்களோடு இவன் ஐக்கியம் விடுவான் போலவே.. அப்புறம் அவர்கள் மனம் இவனுக்கு சப்போர்ட் செய்தால்.. ம்ஹூம்.. கூடவே கூடாது!' என்று பயந்த செந்தில்வேலன் தம்பியை முறைத்து "இன்று என் கூடவே வாங்க" என்று அழைத்தார் ஆதித் நிகேதனை!
*என்ன ண்ணே இது.. எனக்கு இது சரியா படல" என்று தம்பி அண்ணனிடம் மெதுவாக குறைப்பட..
"கதிரு இவன் எல்லாம் சொகுசா வளர்ந்தவன்.. வாழ்ந்தவன்.. அங்கன வந்து வயல்ல அத இத பண்ணனும்னு சொன்னா மிரண்டு ஓடுவியான் பாரு" என்று சிரித்துக் கொண்டார். கதிர்வேலனும் அண்ணன் பேச்சை ஒத்துக் கொண்டு சிரித்தார்.
அதைப்போல தனது புல்லட்டில் அமர வைத்து தான் அவனை அழைத்துச் சென்றார், தனது தோப்புக்கும் வயல்வெளிகளுக்கும்.
'பட்டணத்தில் படித்தவன்.. தொழில் செய்தவன்.. வெளிநாட்டில் வாழ்ந்து வருபவன்.. இம்மாதிரி சேறு சகதி வயல்வெளி தோட்டம் துறவு இவற்றை கண்டால் கண்டிப்பாக முகம் சுழிப்பான்.. இதில் இறங்கி நட என்றால் வழுக்கி விழுந்து வாரி வைப்பான்.. இதையெல்லாம் சொல்லி இவனுக்கும் நமக்கும் செட்டாகாது என்று முடிந்தால் இன்று இரவே இவனை பேக்கப் செய்து அனுப்பி விட வேண்டும்' என்ற பெரும் பெரும் யோசனைகளோடு அவனை தோட்டத்திற்கு கூட்டி வந்தார் செந்தில்வேலன்.
அவரது தோட்டத்தில் மிக முக்கியமானது மல்லிகை தோட்டம்!
அதுவும் மதுரை மல்லி என்றால் கேட்கவும் வேண்டுமா?
பரந்து விரிந்த அந்தத் தோட்டத்தையும் அதில் வேலை செய்யும் ஆட்களையும் காட்டி.. "காலைல வெள்ளனவே வந்து பூக்கள பறிச்சு நாங்க சந்தைக்கு அனுப்பிடுவோம். இப்போ மீதம் இருக்குற வேலைய பார்க்குறாக.. அதான் செடிக்கு பாத்தி கட்டுதல், உரம் போடுறது, களை எடுக்குறது இந்த மாதிரி வேலை தான் இப்ப நடக்கும். பாத்தி கட்டுறதுனா என்னென்னு தெரியுங்களா தம்பி?" என்று கொஞ்சம் நக்கலாகவே வினவினார் செந்தில்வேலன்.
அவரின் நக்கல் எதற்கென்று புரிந்த ஆதித்.. இவரோடு வரும்போது அவன் வேஷ்டிக்கு மாறி இருந்ததை அப்போதுதான் அவர் கவனிக்க.. அதை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு தோட்டத்துக்குள் இறங்கியவன், அங்கே வேலை செய்து கொண்டிருந்த வேலையாளிடம் சிறிது நேரம் பேசி சிரித்தான். பின் அவரிடம் கேட்டு அவர் செய்து கொண்டிருந்த அந்த வேலையை சிறிது நேரம் பார்த்தான் ஆதித். செந்தில்வேலன் திகைப்போடு அவனை பார்த்திருந்தார்.
லாவகமாக அவன் கைகள் வேலை செய்வதை கண்டு விழி விரித்தார்.
சிரிப்போடு அந்த வேலையாளிடம் கோடாரியை கொடுத்தவன், செந்தில்வேலனை நெருங்கி வரும் போதே ஒரு மல்லி பூவை பறித்து வந்தான்.
"ம்ம்ம் செம வாசமில்ல.. 'மதுரை மல்லி', மதுரையில் மட்டும் பாப்புலர் இல்ல… வோல்ர்ட் லெவல்ல பாப்புலர். பொதுவா.. 'மல்லி' என்றால் பருத்தது, உருண்டது, தடித்தது எனப் பொருளாம். மதுரை மல்லியும் பருத்து, உருண்டு பார்க்க பளபளவென வெண்மையான அழகாக இருக்கும்" என்றதும் அவனை பார்த்தப்படி இருந்தார்.
"மதுரை மல்லி இரண்டு நாளு வர வாடாமல் தாக்குப்பிடிக்கும். அது தான் மதுரை மல்லியின் சிறப்பு! ஏன்னா.. சாதாரண மல்லியின் மொட்டானது இரண்டு முதல் மூன்று அடுக்குகள் இருக்கும். ஆனா.. மதுரை மல்லியின் இதழ்கள் வட்ட வடிவில் நான்கு அடுக்குகளாக இருக்கும். அதனால.. இம்மல்லியோடு மொட்டுக்கள் தாமதமாகவே விரியும்.." என்றதும் இன்னும் வியந்து பார்த்தார்.
"இன்னைக்கு காலையில உங்க தோட்டத்துல பறிக்கும் மல்லிகைப்பூ, நைட் சிங்கப்பூர் மார்க்கெட்டுக்கு போய்டும். அந்த அளவுக்கு மதுரை மல்லிக்கு உலக அளவில் கிராக்கி இருக்கு மாமா…" என்றான்.
"இவ்வளவு விவரம் உங்களுக்கு எப்படி தம்பி..?" என்று அதிர்ச்சி விலகாமல் கேட்க…
"பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவன்.. ஆடம்பரமா வாழ்றவன்.. ஃபாரின்ல வேலை பாக்குறவன்.. இவனுக்கு எங்கே இருந்து விவசாயம் எல்லாம் தெரியும்னு நினைச்சிட்டீங்களா? ஆஸ்திரேலியா இந்த மாதிரி ஃபார்மிங் தான் எனக்கு ஹாபி! சொந்தமா அங்க நிறைய நிலம் இருக்கு எனக்கு. அதோட.." என்று அந்த மல்லிகை பூவை பார்த்து மென்னகை புரிந்தவன் "ஆறு மாசத்துக்கு முன்னாடி இங்கிருந்து பதியம் போட்டு மல்லிகை செடிகளை வாங்கி நட்டு வைத்து வளர்த்துக்கிட்டு இருக்கேன்! உங்க பொண்ணுக்காக தான்.." என்றான்.
அதற்கு மேல் செந்தில்வேலன் எதுவுமே பேசவில்லை. அமைதியாக அவர் நடக்க.. அவர் பின்னால் நடந்து கொண்டு ஒவ்வொன்றையும் அது என்ன? இது என்ன? எவ்வளவு பயிரிட்டு இருக்கிங்க? எவ்வளோ யீல்டு தருது? ஆர்கானிக் உரமா? இல்லை செயற்கை உரமா? என்று இவனே கேட்டு அறிந்து கொண்டான். சிலவற்றுக்கு இவனும் யோசனை கூறினான்.
தோட்டம் வயல்வெளி எல்லாத்தையும் முடித்து வந்தவன் கடைசியாக… "ஏன் மாமா.. நாம் ஏன் மல்லி பூவை எக்ஸ்போர்ட் பண்ணாம சொந்தமா ஒரு ஜாஸ்மின் செண்ட் ஃபேக்டரி ஆரம்பிக்க கூடாது?" என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டு போனான்.
அவன் உண்மையாக செல்லுகிறானா? பொய்யா சொல்கிறானா? என்று தெரியவில்லை அவருக்கு. ஆவென்று வாயை பிளந்து அவன் பின்னே சென்று கொண்டிருந்தார் செந்தில்வேலன். அவனை ஓட ஓட விரட்ட நினைத்தவர் இப்பொழுது ஓய்ந்து அவனை பிரம்மிப்போடு பார்த்தாவறே பின்னே நடந்தார்.
மதியம் உணவுக்கு வீட்டுக்கு வரும் செந்தில்வேலன் சிறிது ஓய்வெடுத்து அதன் பின்னே அவர் விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு ஆட்களை வைத்து பார்ப்பார். மறுநாள் காலை வரச் சொல்வது அவர்களுக்கு கூலி கொடுப்பது உரம் வாங்குவது இதுபோன்ற வேலைகள் நடக்கும்.
அன்று எதுவும் செய்யாமல் தன் அறையிலேயே ஏதோ யோசனையோடு அமர்ந்தவரை மரகதவல்லி யோசனையாக பார்த்து "என்னங்க மாமா வெளியில் போற வேலை இல்லையாங்க" என்று கேட்டார்.
இல்லை என்ற தலை வசித்தவர் "இப்படி உட்காரு மரகதம்.." என்று அருகில் இருந்த கட்டிலை காட்ட..
"இல்ல மாமா.. நான் இப்படியே உக்காந்துக்கிறேன்" என்று அவர் கால் அருகே அமர்ந்து கொண்டு மெதுவாக அவரின் விரல்களுக்கு நெட்டி எடுத்துவிட்டார். இதுபோல ஆனா நேரங்கள்.. அவர்களுக்கே அவர்களுக்கான நேரங்கள்.. மிக சொற்பம் அவ்வீட்டில். அதுவும் கூட்டுக் குடும்பத்தில் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அப்படிப்பட்ட நேரங்களில் மனைவியின் இந்த செயலை வெகுவாக ரசிப்பார் செந்தில்வேலன்.
ஆனால் அந்த பிடித்தத்தை வாய்விட்டு கூறி விட மாட்டார். அது பொதுவாகவே ஆண்களுக்கே உள்ள குணம்! கர்வம் என்று கூட சொல்லலாம்! மனைவி செய்வது பிடித்திருந்தாலும் அதை வேண்டும் என்று மனம் ஏங்கினாலும் வாய்விட்டு கூறி விட மாட்டார்கள் கேட்டு விட மாட்டார்கள்! என்ன ஆண்களின் டிசைனோ??
"அந்த தம்பி என்ன பண்ணுது மரகதம்?" என்று மெதுவாக கேட்க..
"நம்ம விஷாகா இந்த வருஷம் பிளஸ் டூ இல்லையா.. ஏதோ கணக்குல சந்தேகம் கேட்டா.. தீப்பு சொல்லி கொடுத்துட்டு இருந்தா.. அந்த தம்பியும் பக்கத்துல உக்காந்து சொல்லிக் கொடுக்கிறாப்ல.. என்றார்.
கதிர் மதியான சாப்பாட்டுக்கு வந்தானா இல்லை குகன் கிட்ட கொடுத்து விட்டாயா என்று கேட்டார்.
"தீபாவளி சமயமுலங்க.. நிறைய பை தேவைப்படுறதுனால நிறைய வேலை இருக்குன்னு கதிர் மச்சான் வரல.. குகன் கிட்ட தான் மதிய சாப்பாடு கொடுத்து விட்டோம்" என்றார்.
"சரி.. சரி.." என்றவர் மனைவிடம் பேச தயங்கியபடியே அமர்ந்திருந்தார்.
பின் மெதுவாக இன்று நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் அனைத்தையும் மனைவியிடம் பகிர்ந்து கொண்டார்.
"என்னது தீபுக்காக மதுர மல்லிகைய அங்கன பதியம் போட்டு வளர்க்கிறாரா?" என்று மற்றதை விடுத்து இதை ஆச்சரியமாக அவர் கேட்க.. ஆம் என்ற தலை அசைத்தார் செந்தில்வேலன்.
"இந்த காலத்து பசங்க பொண்டாட்டிக்கு ஆசையா பூ வாங்கி கொடுக்கிறதே அதிசயம் தான்! இதுல இவளுக்காக இங்கிருந்து வரவழைத்து செய்திருக்கிறார்னா.. என்ன சொல்ல நான்.." என்று அத்தனை ஆச்சரியங்கள் மரகதவல்லியிடம்.
பெண்ணின் மனது நோகாமல் அவளுக்கு பிடித்தபடி நடக்கும் மாப்பிள்ளையை எந்த அம்மாக்களுக்கு தான் பிடிக்காது?
மெல்ல மெல்ல அவரின் மனதில் நல்ல மனிதனாக உள் நுழைந்த ஆதித்.. இப்போது மாப்பிள்ளையாக சம்மணமிட்டு உட்கார்ந்தான்.
இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் அறையில் விஷாகாவின் தலையில் கொட்டி கொட்டி கணக்கு பாடத்தை உள்ளே புகுத்திக் கொண்டிருந்த தாரா முறைத்தவன் "நீ சொல்லிக் கொடுக்கவே வேணாம் தீப்ஸ்.. இப்படி குட்டி குட்டி சொல்லி கொடுத்தா கணக்கு மனசுல ஏறுமா இல்லை வலியோடு தான் அவள் பாடத்தை கவனிப்பாளா? நிஜமா.. சொல்லிக் கொடுக்கவே தெரியல உனக்கெல்லாம்.." என்று அக்காவை கடிந்து கொள்ளும் இந்த மச்சானை பிடித்தது விசாகாவிற்கு.
அக்காவிடம் பழுப்பு காட்டி விட்டு "மச்சான் நீங்களே எனக்கு சொல்லிக் கொடுங்க" என்று புக்கை அவனிடம் நீட்டினாள்.
அவனும் அவனுக்கு தெரிந்தவற்றை பொறுமையாக சொல்லிக் கொடுக்க விசாகாவுக்கு புரிந்தது. மற்றவர்களும் ஆதித் சொல்லிக் கொடுப்பதை ஆச்சரியத்தோடு பார்த்தனர். பின் தமக்கையை நமட்டு சிரிப்போடு பார்க்க..
"எல்லா சிறுக்கிகளும் ஓடுங்கடி! இங்கன நின்னீங்க கொன்னுடுவேன்" என்று இவள் விரட்டி அடித்தாள்.
"கோவமா இருக்கும் போது நம் செம அழகு தெரியுமா தீப்ஸ்?” என்ற ஆதித் தாராவின் மூக்கோடு மூக்கை உரச…
“ம்ம்ம்.. எனக்கு தெரியல..!" என்று கோபத்தோடு பதிலளித்தாள்.
“ஓஹ்.. நோ.. இந்த உண்மையை உன் கிட்ட யாரும் சொன்னது இல்லையா தீப்ஸ்…?” என்று சீரியஸாக கேட்டான்.
“ம்ஹும்…. ” என்று அவள் தலையாட்ட…
“உன் கூட ஒரு வருஷமா வாழ்ந்த .. உன் புருஷன் கூடவா சொல்லல?”
என்று குறும்பை மறைத்துக் கேட்டான்.
“அதுக்கெல்லாம் ஒரு சென்ஸ் வேணும். அவருக்கு எங்க நேரம்? எப்ப பாரு பிசினஸ்.. பிசினஸ் தான்” என்று தாரா சலித்துக் கொள்ள..
"அப்போ அந்த ஹஸ்பண்ட் டைவோர்ஸ் பண்ணிட்டு.. இந்த லவ்வரை ஹஸ்பென்டா ப்ரொமோட் பண்ணிடு" என்றான் சிரிக்காமல்..
"கொழுப்பு.. கொழுப்பு.. உங்களுக்கு ஊர்ப்பட்ட கொழுப்பு" என்று அவன் புஜத்திலேயே குத்தினாள் தாரா.
"ரெண்டு நாள் சாப்பாடுனாலும் என் மாமியார் வீட்டு சாப்பாடு இல்லையா? அதனாலதான் கொழுப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கூடிப்போச்சு" என்று சிரிக்காமல் பதில் சொன்னவனை கண்டு கோபம் மட்டுப்பட அவளும் புன்னகைத்தாள்.
“உன்னோட கண்ணு தாண்டி அழுகு…” என்றவன்… அகண்டு விரிந்த அவளின் கண்களில் அழுத்தி முத்தமிட்டான்.
“இத கூடவா ரசிப்பீங்க..?” என்ற தாரா உதட்டை கடிக்க…
“ஒன்னரை வருசமா உன் பக்கத்துல உக்காந்து இருக்கேன்… உன் கண்ண பாத்தாலே… எனக்கு அப்படியே ஒரு கிக்… ” என்று அவளின் உதட்டை சப்பி இழுக்க…
“ம்ம்ம்ம்.. உன்ன சரியான முரட்டு பீஸூன்னு நெனச்சேன்… ஆனா.." என்று அவள் இதழ் விரிய சிரிக்க…
அவளின் மேல் உதட்டை கவ்வி சப்பி இழுத்தவன், "பாவம் சின்ன பொண்ணுனு என் முரட்டுத்தனத்தை உன் கிட்ட காமிக்கல தீப்ஸ்.." அவள் உதட்டை கவ்வி வாய்க்குள் இழுத்தான். இருவரது உதடுகளும் ஒன்றோடு ஓன்று… சப்பி சுவைத்து… இருவரும் திக்கு முக்காட..
அப்போது அவளின் கண்களில் கண்ணீர் வழிந்து அவள் காது மடலை நனைத்தது. அந்த உவர் சுவையை கண்டு திகைத்து..
“ஏய்… எதுக்கு டீ… அழுற… அப்போ வேணாமா..?” என்று ஆதித் விலக..
அவன் கையை அழுத்தி புடித்தாள். விரல்களுக்குள் பின்னி பிசைந்த படி.. "நாம சேர்ந்து விடுவோம் இல்ல நிக்! வீட்ல கண்டிப்பா உன்னை ஏத்துப்பாங்க தானே? நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கும் தானே?" என்றவளின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தது.
“ச்சீ.. லூசு.. இதுக்கு போய் அழுதுகிட்டு.. நான் எதுக்கு இருக்கேன்.. அப்படி விட்டுடுவேணா.. உங்க குடும்பத்தை தூக்கியாவது நம்ம கல்யாணத்துக்கு பர்மிஷன் வாங்கிட்டேன் போதுமா?" என்றவன்
அவள் கண்ணத்தில் வழிந்த கண்ணீரை சுவைத்து..
கன்னத்தை கடித்து.. அவளின் கழுத்தை கவ்வி கடிக்க…
அந்நேரம்… "என்னது? என்ன டா சொல்லுற?" என்று செந்தில்வேலின் அதிர்ச்சியான குரலில் இவர்கள் இருவரும் பிரிந்து என்ன ஏது என்று தெரியாமல் கூடத்திற்கு ஓடி வந்தனர்.
"ஆமாம் பெரியப்பா.. அப்பாவ போலீஸ் புடிச்சு வச்சுருக்கு. ஏதோ சரக்கு தப்பா மாட்டிக்கிச்சாம்" என்றவனின் கண்களில் அத்தனை பீதி..கலக்கம்.. பயம்!
"இரு நான் போய் பார்க்குறேன்!" என்று செந்தில்வேலன் கிளம்ப..
"இருங்க.. நானும் வரேன் உங்களோட.." என்று அவரின் பதிலை எதிர்பாராமல் அவரோடு சேர்ந்து கொண்டான் ஆதித்!
"அரசியல்வாதி மகன்னா? நீ பெரிய அப்பாடக்கரா?" என்று கேட்டவாறு ஆதித் முன் தெனாவட்டாக அமர்ந்திருந்தான் அந்த காவல் இணை ஆணையர்.
வேற யாரு? நம்ம எஸ் பி சூரிய பிரகாஷ் தான்..
