கண்ணம்மா 3

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 3

 

"மா..‌ மா…" என்று ஏலம் போட்டுக் கொண்டிருந்தான் வெற்றிவேல்.

 

"இருடா வரேன்" என்று தனது அட்டிகையை சரிபடுத்திக் கொண்டே வெளியில் வந்த அழகு மீனாட்சி "என்னடா..?" என்று கேட்க..

 

"ஏம்மா‌‌.. பரிச புடவ நாம தீபு வந்தவுடன் வாங்கினா என்ன? அவளுக்கு புடிச்ச மாதிரி. இப்ப என்னத்துக்கு அவசரமா பட்டு எடுக்கணும்னு நீ அவசரப்படுற?" என்று முகம் சுழித்தான்.

 

"டேய்… தீபு கரெக்டா தீபாவளிக்கு மொத நாளு தேன் வருவான்னு அண்ணன் சொன்னாரு.. தீபாவளி முடிஞ்சு இரண்டாம் நாள் பரிசம் போடணும்னு சொல்லி இருக்காரு.. ஏற்கனவே மருமவ சோர்ந்து வருவா. அதனால அலைய வைக்க முடியாது டா"

 

"வேணாம்.. வேணாம். தீபு ரெஸ்ட் எடுக்கட்டும். நம்ம கைத்தறி நகர்ல பரமேஸ்வரன் இருக்காருல மா.‌ அவர் கிட்ட சொன்னா நல்லாவே பண்ணி தருவார்"

 

"யாரு எங்க அண்ணன் வீட்டு பங்காளி கதிரோட மாமனாரையா சொல்ற?" என்று கேட்டார்.

 

"ஆமா.. ஆமா.. கதிர் மச்சானோட மாமனாரே தான். அப்போ சரி ஆனாலும் இன்னைக்கு போய் ஒரு எட்டு பேசிட்டு வந்துருவோம்.. இன்னிக்கு நாள் ரொம்ப நல்லா இருக்கு" என்று தன் குடும்பத்தோடு அண்ணன் வீட்டுக்கு ஆர்ப்பாட்டமாய் வந்தார் அழகுமீனாட்சி..

 

முதல் நாள் இரவு மகன் பேசியதே நினைத்துக் கொண்டு இருந்தவர் கணவன் அன்று கட்சி வேலைகள் இன்றி.. அவரின் தொண்டர்கள் படைகள் இன்றி.. செய்தித்தாளில் மூழ்கி இருப்பதைக் கண்டு, இதுதான் சரியான நேரம் என்று நினைத்த சந்திரிகா அவரை நெருங்கினார்.

 

"என்ன நீ பம்மி பம்மி வரதை பார்த்தா.. ஏதோ பெரிய விஷயம் போல இருக்கே" என்றார் அருணாச்சலம் ஆதித் நிகேதன் தந்தை.

 

"உங்க இந்த அரசியல புத்திய வீட்டுக்குள்ள கொண்டு வராதீங்கன்னு சொல்லி இருக்கானா இல்லையா?" என்று முகத்தை சுழித்தாலும் கணவன் அருகில் அமர்ந்து "ஏங்க.." என்று ஆரம்பித்தவரை பார்த்து "அதான் சொல்ல வந்துட்டுல சொல்லு.. நீ இவ்ளோ நெளியறதை பார்த்தால்.. எதுவோ உன் புள்ள விவகாரம் தான் தெரியுது. ஆனா விவகாரம் விபரீதமா இல்லாம இருந்தா சரி" என்றவர் செய்தித்தாளை முடித்து அருகில் வைத்துவிட்டு மனைவி புறம் திரும்பி அமர்ந்தார்.

 

"அது ஆதி அங்கு யாரோ ஒரு புள்ளைய லவ் பண்றானாம்"

 

"என்னது வெள்ளைக்காரி லவ் பண்றானா உம் புள்ள?" என்று அதிர்ந்தார்.

 

"அட நீங்க வேற வெள்ளக்கார பொண்ணு எல்லாம் இல்ல.. நம்ம ஊரு பொண்ணு தான்! பேரு தீபத்தாரான்னு சொன்னான். பொண்ணுக்கு மதுரையாம். அங்க வேலை பார்க்க வந்த இடத்தில் புடிச்சி இருக்குன்னு லவ் பண்றேன்னு சொன்னான்" என்று மெல்லக் கூறியவர் கணவனின் முகத்தை பார்த்தார்.

 

சிறிது நேரம் தாடையை தடவி யோசித்தவர் "அவன் கல்யாணம் பண்ணிப்பானு நம்பிக்கை இல்லாம தான் இருந்தேன். பரவால்ல லவ் பண்றேன்னு வெளிநாட்டு பொண்ணு இழுத்துட்டு வராம தமிழ் பொண்ண தான் புடிச்சிருக்குனு சொன்னானே.. அதுவரைக்கும் சந்தோசம்! சரி என்னென்ன விவரத்தை கேளு நாம ஒரு எட்டு போய் பேசிட்டு வந்துடலாம்"

 

"நிஜமாவா சொல்றீங்க? உங்க தேர்தல் வாக்குறுதி போல இல்லை தானே இது?" என்று கணவனை வாரினார் சந்திரிகா.

 

"அடிங்க.. கொழுப்பு டி உனக்கு! இப்பவே உன் புள்ளைக்கு வயசு 32 ஆவது. செழியன் வேற இவனுக்கு கல்யாணம் பண்ணாம அவன் பண்ணிக்க மாட்டேன் வேற நிக்கிறான். அதனால அவனையும் பாக்கணும் நாம" என்றார்.

 

அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்தது அருணாச்சலத்தின் படை…

 

"ஏம்தா மரகதம் இன்னைக்கு தங்கச்சி வீட்டிலிருந்து வரேன்னு சொல்லி இருக்காய்ங்க.. மதிய விருந்துக்கு ரெடி பண்ணிட்டியா?" என்று கேட்டார் செந்தில்வேலன்.

 

"அதெல்லாம் ஆச்சு ஆச்சு" என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தார் மரகதவல்லி.

 

"ஏம்தா வைதேகி புள்ளைங்கள ஏன் இன்னைக்கு லீவ் போட சொல்லல?"

 

"ஏன் மாமா சும்மா பேச தானே வராய்ங்க.. இதுக்கு எதுக்கு இவளுகள எல்லாம் லீவு போட்டுக்கிட்டு. அதுவும் இல்லாம வீட்டில இருந்தா சும்மா இருக்க மாட்டாளுக.. எல்லாத்தையும் நான் ஸ்கூலுக்கும் காலேஜுக்கு அனுப்பி விட்டுட்டேன். நாம விஷயத்தை பேசிட்டு இன்னைக்கு முடிஞ்சா போய் பட்டு எடுத்துட்டு வந்துருவோம். இவளுகளை எல்லாம் கடைக்கு கூட்டிட்டு போனா ஒரு நாள் பத்தாது மாமோய்.." என்றவர், "அக்கா இந்த பூ போதுமில்லை?" என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தார்.

 

மரகதவல்லி கொஞ்சம் பொறுமையின் சிகரம். பிள்ளைகளையும் கடிந்து பேச மாட்டார். அவருக்கு அனைத்து பிள்ளைகளும் ஒரே மாதிரி தான் ஆனால் வைதேகி அப்படி கிடையாது வீட்டில் அனைவரும் செல்லம் கொடுக்க.. இவர் சற்று கண்டிப்போடு தான் இருப்பார். இவருக்கும் தன் பிள்ளை ஓரக்கத்தி பிள்ளை என்ற ஓரவஞ்சனை எல்லாம் கிடையாது.

 

ஆர்ப்பாட்டத்தோடு "பெரியண்ணே.. சின்னண்ணே.." என்று வாய் நிறைய புன்னகையோடு உள்ளே வந்த தங்கையை செந்தில்வேலனும் கதிர்வேலனும் வாய் நிறைய அழைத்தனர். பின்னால் வந்த அவர்களது மச்சான் சுந்தரத்தையும் மாப்பிள்ளையாக போகிற வெற்றிவேலையும் அழைத்து உபசரித்தனர்.

 

"ஆத்தா மீனாட்சி.. சாப்பாடு ரெடியா இருக்கு. நம்ம விருந்து முடிச்சிட்டு அதுக்கப்புறம் பட்டெடுக்க போலாமாத்தா?" என்றதும்..

 

"இல்லை டே.. நல்ல விஷயம் நம்ம மீனாட்சி அம்மன் கோவில் போய் கும்பிட்டுட்டு பட்டு எடுத்துட்டு வந்துருவோமே.. அதுக்கப்புறம் நிறுத்தி நிதானமா சாப்பிட்டுக்கலாம்" என்றவர் திரும்பி கணவனை பார்த்து "என்னங்க நான் சொல்றது சரிதானே?" என்றதும் அவரும் தலையை தலையை ஆட்டினார்.

 

"மச்சான் நீங்க ஒன்னும் சொல்லலையே?" என்று கதிர்வேலன் கேட்க..

 

"என்னைக்கு உங்க தங்கச்சியை நான் கட்டணுனேனோ அன்னையில் இருந்து நான் எங்க அவ பேச்சுக்கு எதிர் பேச்சு பேசி இருக்கேன். எங்க ஆத்தா அப்பவே சொன்னுச்சு மீனாட்சினு பேரு இருக்கு நீ தாண்டா அடங்கி போகணும்னு. நான் கேட்கல.. ம்ஹும்.. இப்ப வந்து என்ன பேசுனா நான் எப்படி பேசுவேன்?" என்றதும் கணவனின் விலாவில் முழங்கையால் ஒரு குத்து குத்தினார் மீனாட்சி.

 

"விடுமா.. ரொம்ப நாளா மனசுல இருந்தது. உங்க அண்ண கேட்டதும் வாய் தவறி சொல்லிட்டேன். பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருமா" என்றார். மெல்லிய சிரிப்பொலி அங்கு எழுந்து அடங்க… அனைவரும் பட்டெடுக்க ஆயத்தமாகி நிற்க…

 

சர சர சர என்று ஐந்தாறு கார்கள் அவர்கள் வீட்டு முன்னே வந்து நிற்க.. குகன் தான் முதலில் வெளியே சென்று பார்த்தான். பார்த்தவன் அங்கிருந்து "அப்பா இங்க வந்து பாருங்க.." என்று கத்த..

 

கதிர்வேலன் கூடவே வெற்றிவேலும் வந்து பார்த்தான். வண்டியையும் அதிலிருந்து கொடியையும் பார்த்ததுமே அரசியல் கட்சி.. அதுவும் எந்த கட்சி என்றும் சரியாக யூகித்தவர்கள் கொஞ்சம் அதிர்ச்சியோடு நின்றவர்கள்,

 

"உள்ளே வரலங்களா?" என்று அதிகாரமான அருணாச்சலத்தின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தனர்.

 

"வாங்க.. வாங்க.." என்று அழைத்தார் கதிர்வேலன், அருணாச்சலம் அவர் மனைவி இன்னும் சிலர் மட்டும் உள்ளே வர மீதி தொண்டர்கள் எல்லாரையுமீ கை நீட்டி வெளியே நிற்க சொல்லி விட்டார். அவருக்கு பாதுகாப்புக்கு என்று வந்த இரண்டு துப்பாக்கி ஏந்திய பிளாக் கேட்ஸ் மட்டும் வீட்டு வாசலில் நின்று கொண்டனர்.

 

அருணாச்சலத்திற்கு முன்னமே உள்ளே ஓடி வந்த கதிர்வேலன் அண்ணன் செந்தில்வேலனின் காதில் அவர் யார் என்னவென்று போட்டு வைத்திருக்க "இவர் எதுக்குடா நம்ம வீட்டுக்கு எல்லாம் வந்திருக்காரு?" என்று குழப்ப மேகங்கள் அனைவர் முகத்திலும் சூழ்ந்து கொண்டது.

 

ஆயிரம் இருந்தாலும் வீட்டுப் படி ஏறி வந்தவரை விருந்தோம்பும் பண்பு கொண்ட மதுரை குடி மக்கள் அவரை அன்புடனே வரவேற்று அமர வைத்து உபசரித்தனர்.

 

*உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன். இருந்தாலும் நானே அறிமுகப்படுத்துகிறேன். நான் அருணாச்சலம் இந்த கட்சியில் 20 வருஷமா இருக்கேன். எனக்கு ஒரே ஒரு பையன் பேரு ஆதித் நிகேதன். இப்போ வெளிநாட்டில் அட்வர்டைஸ் கம்பெனி ஒன்று நடத்துறான்" அவர் அட்வர்டைஸ்மென்ட் கம்பெனி என்றதுமே குகனுக்கு யோசனையாக.. அருகே இருந்த வெற்றிவேலை கலவரத்தோடு பார்த்தான். ஏதோ பெரிய பூகம்பம் வரப்போவது போல இருக்கே என்று.

 

"என் பையன் கம்பெனியில் தான் உங்க பொண்ணு தீபதாரா.. பேரு சரிதானே?" என்று மனைவியிடம் கேட்க அவர் ஆமா என்று தலையசைக்க "வேலை பண்றாப்ல போல. என் பையனுக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதான் பொண்ணு கேட்கலாம் என்று வந்தோம்" என்றதும் உச்சகட்ட அதிர்ச்சியில் தாராவின் குடும்பத்தினர்..

 

பெண் கேட்டு வந்ததே அதிர்ச்சி அதிலும் இவர்கள் அரசியல்வாதி குடும்பம் என்பது பேரதிர்ச்சி! எப்படி மறுப்பது என்று தயங்கி தயங்கி நின்றிருந்தனர்.

 

"உங்க முகத்தைப் பார்த்தாலே புரியுது. அரசியல்வாதினாலே ஒரு கலக்கம் பயம் இருக்கத்தான் செய்யும். ஆனா என் பையனுக்கும் அரசியலுக்கும் சுட்டு போட்டா கூட ஒத்தே வராது. அப்பவே அவன் தனியா சேனல் தான் ஆரம்பிச்சான். அதுலயும் சில கட்சி பிரச்சனைகள் எல்லாம் உள்ள வரவும் அவனுக்கு பிடிக்காமல் தான் ஆஸ்திரேலியா போயிட்டான். நீங்க கவலைப்படாதீங்க எனக்கு பின் அரசியலுக்கு எல்லாம் வரவே மாட்டான். எனக்கு அப்புறம் என் அரசியல் வாரிசு எல்லாம் என் தம்பி மகன் செழியன் தான்" என்றதும் அப்போதும் அவர்கள் முகம் தெளியாமல் இருக்க மனைவியை பார்த்தார் 'நான் சரியாத்தானே இதுவரைக்கும் பேசினேன்?' என்று.

 

சந்திரிகாவும் கண்களை மூடி திறந்தவர் வைதேகி மரகதவல்லியை பார்த்து யார் இவர்களில் அம்மா என்று தெரியாமல் பொதுவாக "உங்க பொண்ணு ரொம்ப அழகா இருக்கா. எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு" என்றார்.

 

இவர்கள் பேச பேச அங்கே வெற்றிவேலுக்கு கைகளில் பூரான் ஓடியது. அதாங்க நரம்பு எல்லாம் புடைத்து மண்ணின் மைந்தனாய் வீரம் சொட்ட சொட்ட அவர்களை முறைத்து நின்றான்.

 

அதை கண்டு கொண்ட குகன் அவன் கையைப் பிடித்து "அய்த்தான்.. கண்ட்ரோல்.. கண்ட்ரோல்.. அவர் அரசியல்வாதி. கொஞ்சம் அமைதியா இருங்க.. நம்ம பேசி புரிய வைக்கலாம்" என்று கட்டுப்படுத்தினான். இந்த பக்கமும் அழகு மீனாட்சி முகத்திலோ அத்தனை கோபத்தைக் காட்டி அண்ணன்களை பார்த்து முறைத்தார்.

 

செந்தில்வேலன் கதிர்வேலன் இருவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான். ஆனாலும் முகத்தில் அடித்தால் போல பதில் சொல்ல முடியாமல் "இங்க பாருங்க எங்களுக்கு பொண்ணு வெளிய கொடுத்து எல்லாம் பழக்கம் கிடையாது. நாங்க ஒன்னுக்குள்ள ஒன்னு தான் கொடுத்து எடுப்போம். என் பொண்டாட்டியும் சரி என் தம்பி பொண்டாட்டியும் சரி எங்க ஒன்னு கிட்ட அத்தை பொண்ணுங்க தான். அதே மாதிரி என் தங்கச்சி கொடுத்ததும் எங்க மாமா மகனுக்கு தான். அதேபோல என் பொண்ண என் தங்கச்சி பிள்ளைக்கு கொடுக்கிறதா முடிவு பண்ணி இன்னைக்கு பட்டெடுக்க தான் வெளியில கிளம்பினோம். நீங்க வந்து இருக்கீங்க" என்று தங்கள் மறுப்பை இதமாக முன் வைத்தனர்.

 

அருணாச்சலம் யோசனையாக மனைவியை பார்த்தார் "இப்ப என்னடி பண்றது?" என்றவாறு. அவர் கண்மூடி திறந்து "உங்களுக்கு வெளி அரசியல் மட்டும் தான் தெரியும். வீட்டு அரசியல் தெரியாது இதை நான் பார்த்துகிறேன்" என்றாய்.

 

செந்தில்வேலனை பார்த்து "என் கணவர் ரொம்ப வருஷமா அரசியலில் இருக்காரா.. அதான் விஷயத்தை சரியா கொண்டு போய் சேர்க்க தெரியல!" என்றதும் அருணாச்சலம் மனைவியை முறைக்க மற்றவர்களின் முகத்தில் மெல்லிய புன்னகை..

 

அரசியல்வாதியை கலாய்த்தால் அதுவும் அவரது மனைவியே கலாய்த்தால் சிரிக்க மாட்டார்களா என்ன..??

 

"அதாவது என் பையன் மட்டும் காதலிக்கலைங்க.. உங்க பொண்ணும் தான் காதலிக்கிறா. ரெண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரு வருஷமா காதலிக்கிறார்களாம். உங்க பொண்ணு வீட்ல சொல்ல பயந்துகிட்டு எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிச்சுகிட்டு இருக்கா.. நீங்க பரிசம் போட போற விஷயம் தெரிஞ்சு அவ இன்னும் பயந்து என் பையன் கிட்ட புலம்ப அவன் என்கிட்ட விஷயத்தை சொல்லிட்டான்… எங்களுக்கு இந்த சம்பந்தத்தில் பரிபூரண சம்மதம். நாங்க பெருசா ஏதும் எதிர்பார்க்கல. எங்ககிட்ட இல்லாததா? எல்லாம் நாங்க எங்க மருமகளுக்கு போட்டு அழகு பார்ப்போம்! என் பையனுக்கு பிடித்த பொண்ணு மட்டும் தான் எங்களுக்கு வேண்டும். நல்லா யோசிச்சு சொல்லுங்க.." என்று எழுந்து அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டவர் கணவனை பார்த்து கண் காட்ட அவரும் ஒரு பெரிய கும்பிட்டோடு நகர்ந்தார்.

 

ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல அந்த வீடு அவ்வளவு அமைதியாக இருந்தது. 

 

"அந்த அம்மா எப்படி பேசிட்டு போது பார்த்தீய்ங்களா ணே.. உண்மையிலேயே தீப்பு அந்த பையனை விரும்பி இருப்பாளா?

சொல்லுங்க ணே ? அப்போ என் புள்ளையோட நிலைமை என்ன?"

என்று செந்தில்வேலன் கையை பிடித்து உலுக்க.. 

 

 அவரும் தான் பாவம் என்ன செய்வார்? பெண்ணை வேலைக்கு என்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் தான். ஆனால் அவளின் இந்த காதலை ஏற்க முடியாமல் தம்பியை பார்த்தார். அவரும் அண்ணனின் தோளில் ஆதரவாக கை வைத்து "நான் பேசுறேன் தீபுக் கிட்ட" என்றார்.

 

'அப்பத்தா அப்பவோ இப்பவோ கிடக்கு அவசரமாக கிளம்பி வா!' என்ற தகவல் தீபதாராவுக்கு சென்று அடைய.. அது உண்மையா பொய்யா என்று அவளால் பிரித்து அறிய முடியாமல் கிளம்பி வந்தவளை லாக் செய்தது குடும்பமே சேர்ந்து!!

 

"விஷயம் வெளிய தெரிய கூடாது இவ கிட்ட பேசி எப்படியாவது வெற்றிவேலோட பரிசம் போட சம்மதிக்க வைக்கணும் என்ன செய்வது?" என்று கதிர்வேலன் அண்ணனிடம் கேட்க.. குடும்பமே யோசனையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது செந்தில் கண்கள் பளீச்சிட்டன! "நாம ஏன் நம் வேந்தனை கூப்பிடக்கூடாது?" என்றார்.

 

"யாரு நம்ம வாஞ்சிவேந்தன் அண்ணன் மகன் வெற்றி வேந்தனையா சொல்றீய்ங்க?"

 

"ஆமா?" என்றார் செந்தில்வேலன்.

 

"நாம பேசினா தானே சரிவராது. நாம படிக்காத தற்குறி நமக்கு ஒன்னும் தெரியலன்னு இப்போ உள்ள புள்ளைங்க எல்லாம் நெனைக்குறாய்ங்க.. அந்த புள்ள வெளிநாடு போய் எல்லாம் படிச்சு தொழில் பண்ற புள்ள தானே.. வேந்தன் சொன்னா கண்டிப்பா கேட்டுக்குவா!" என்றதும் அனைவரும் ஒருமித்து வெற்றி வேந்தனை அழைத்து பெண்ணுக்கு அறிவுரை கூற முடிவு எடுத்தனர்.

 

 

"ஏலே.‌ கதிரு.." என்று வெற்றிவேந்தன் குரலுக்கு… 

 

"வந்துட்டேன்.. வந்துட்டேன்.." என்றபடியே மாடியில் இருந்து தடதடவென்று வேகமாக இறங்கி வந்தான் கதிர்வேந்தன்.

 

வாட்ட சாட்டமாக கம்பீரமாக நின்றிருக்கும் அண்ணனை பார்த்து மெல்ல அவன் விசில் அடிக்க.. அவனை உதடு கடித்து, அடி கண்களால் பார்த்து முறைத்தான் வேந்தன்.

 

"இன்னைக்கு ஒரு பஞ்சாயத்திற்கு நீ போய்ட்டு வந்துரு" என்று சட்டையின் கையை மடக்கிவிட்டபடியே அவன் பேச…

 

"எதே கதிர் மச்சானா?" என்று நிவேதித்தா அதிர்ச்சியோடு கேட்க..

 

"ஏன் பான்ஸ் டப்பா? என்ன பாத்தா பஞ்சாயத்து பண்ற மாதிரி தெரியலையா?" என்று கேட்டவனின் தலையில் வழக்கம் போல ஒரு குட்டு குட்டிய கதிரின் அன்னை "ஒழுங்கா மதனினு கூப்பிடு டா" என்று போற போக்கில் சொல்லிக் கொண்டே சென்றார்.

 

தலையை தேய்த்துக் கொண்டு அன்னையை முறைத்தவன் "நீ சொல்லு ணே.. என்ன பஞ்சாயத்து?"

 

"நம்ம ஒன்னு விட்ட பங்காளி வெற்றிவேலன் சித்தப்பா குடும்பம் தெரியும் தானே உனக்கு?" என்று கேட்டதும் தெரியும் என்று தலையாட்டினான் கதிர்.

 

"அவிய்ங்க பொண்ணு தான் யாரையோ லவ் பண்ணுதாம். ஆனா அந்த பையன் குடும்பத்துக்கு ஒத்து வர மாட்டியான்னு இவிய்ங்க சொல்றாய்ங்க.. என்னன்னு பார்த்து பேசி முடிச்சு விடு" என்றான் வேந்தன்.

 

"சுத்தம்! இவர் போய் குட்டைய குழப்பாமல் இருந்தால் சரி. ஆமா கதிர் மச்சான்.. எனக்கு ஒரு டவுட்டு நீங்களே லவ் மேரேஜ்.. நீங்க யாருக்குனு போய் பஞ்சாயத்து பண்ணுவீங்க?" என்று சிரித்தபடி கேட்டு சென்றாள் நிவேதிதா.

 

"கதிரின் பஞ்சாயத்து கலகத்தில் தான் முடியும்! ஏற்கனவே குழம்பி இருக்கிறவியங்கள நல்லா குழப்பி விட்டுட்டு வரேன் பான்ஸ் டப்பா" என்றவனை பார்த்து உதடு கடித்து முறைத்தான் வேந்தன்.

 

"பொண்ணு விவகாரம்! அதுவும் நம்ம பங்காளி வீட்டு பொண்ணு.. என்னன்னு ஒழுங்கா பார்த்து பத்திரமா பேசி முடித்துவிட்டு வா. சும்மா இன்னும் விளையாட்டு புள்ள மாதிரி நடந்துகிட்டு இருந்த.. அப்புறம் இருக்கு உனக்கு?" என்று தம்பியை எச்சரித்துவிட்டு அவர்களின் குவாரியை நோக்கி சென்றான் வேந்தன்.

 

"அப்புறம் மா தீபா… இந்தக் காதல் எல்லாம் சுத்த மடத்தனம்.." என்று ஆரம்பித்து காதில் ரத்தம் வழிய வழிய காதலை வைத்து கிழி கிழி என்று கிழித்து கொண்டு இருந்தான், ஒரு காலத்தில் பத்ம பிரியலோச்சினியை சுத்தி சுத்தி காதலித்து கைத்தறி நகரே கதியாக கிடந்த இந்த கதிர்.

 

செந்தில்வேலன் இவன் உள்ளே நுழைந்ததுமே "அரசியல்வாதி குடும்பம் மகனே.. நமக்கும் அவிங்களுக்கும் செட்டாகாது. நீ பார்த்து பேசி புள்ள மனச திருப்பிவிடு" என்றார்.

 

"கதிர் இருக்கே கவலைப்படுவானேன்.. சித்தப்பு!" என்று உள்ளே சென்றவன், அவளை அமர வைத்து பேசு பேசென்று பேச.. அனைத்தையும் பொறுமையாக கேட்டவள் கடைசியாக "நாங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம் அண்ணே" என்று குண்டு தூக்கி போட்டாள்.

 

"என்னது கல்யாணமே பண்ணிக்கிட்டியா?" என்று அதிர்ந்தவன்,

 

"சித்தப்பு.. உங்க பொண்ணுக்கு பரிசம் போட மாப்பிள்ளைய வர சொல்லாதீய்ங்க.. தல தீபாவளி கொண்டா வர சொல்லுங்க!" என்றான்.

 

தீபாவளி… தல தீபாவளி…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top