கண்ணம்மா 2

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 12 months ago
Messages: 308
Thread starter  

கண்ணம்மா 2

 

 

சொக்கனையே சொக்க வைத்த மீனாட்சி அன்னையவள் ஆளும் மதுரை மாநகரம்…!!

 

சிம்மக்கல்லின் அந்த பழங்கால வீடு.

"ஏம்தா வர்ஷினி.. இங்கன வாத்தா" என்ற செந்தில்வேலன் குரலுக்கு ஓடிவந்தது என்னவோ அவரது தம்பி கதிர்வேலனின் மகள் தீபவிசாகா பன்னிரண்டாவது படிக்கும் பூஞ்சிட்டு.

 

"பெரியப்பா இந்தாங்க மோரு.. உங்களுக்கு பிடிச்ச மாதிரிதேன் பெரியம்மா கலந்து கொடுத்தாக" என்று கொடுத்தவள், அவரது கரத்தில் இருந்த பையை வாங்கி பிரித்தாள்.

 

அவளுக்கு பிடித்த கருப்பட்டி தீனி இருக்கிறதா என்று பார்க்க.. அவளை ஏமாற்றாமல் இருந்தது. எடுத்துப் பார்த்தவளின் கண்கள் பளீச்சிட மற்றதை அப்படியே போட்டுவிட்டு உள்ளே ஓட போனவளை, பிடித்து தலையில் ரெண்டு கொட்டி நிறுத்தினார் விஷாகாவின் அன்னை வைதேகி.

 

"நீ அக்கா கிட்ட இருந்து மோர் வாங்கியாரப்பவே தெரியும்டி இந்த தீனிக்காகத்தான் பறப்பேன்னு.. அது என்ன வாங்கின அம்பூட்டையும் வாங்கி எல்லாருக்கும் கொடுக்காம.. அங்கனவே போட்டுட்டு ஓடுறவ.. எடு மொதல்ல" என்று திட்டவும் தலையை தேய்த்துக் கொண்டு அம்மாவை முறைத்துக் கொண்டு உதடு பிதுங்கி எடுத்தவளை பார்த்த செந்தில்வேலன் "ஏம்தா.. சின்ன பிள்ளையை திட்டுறவ.." என்று மகளுக்கு ஆதரவு கரம் கொடுத்தார்.

 

அதுவரை பிதுங்கி இருந்த அவளது உதடுகள் இப்போ அழுவதற்கு தயாராக "கொன்னுடுவேன் கொன்னு கண்ணுல தண்ணி வைச்சீனா! இந்த அப்பாவி பார்வை எல்லாம் பாக்காத டி கழுத.. எடுத்துட்டு போ போ.. இன்னும் சின்ன புள்ள கிடையாது" என்று அவள் கையில் மொத்த பையை கொடுத்து "உள்ள கொண்டு போய் பெரியம்மாட்ட கொடு" என்றார் அதட்டலோடு.

 

பின்பு செந்தில்வேலன் புறம் திரும்பியவர் "பெரிய மாமா நீ கொடுக்கிற செல்லம் தேன் இப்படி பொறுப்பு இல்லாம சுத்துது இந்த சின்னது" என்று குறை சொன்னதும் சிரித்தவர் "நம்ம வீட்ல இருக்கிற வரைக்கும் தேன் ஆத்தா நம்ம புள்ளைக சந்தோஷமா எந்த கவலையும் இல்லாமல் சிரித்து விளையாண்டுக்கிட்டு தம்போக்குல இருக்குமுங்க.. அதுக்கப்புறம் கட்டி கொடுத்த அவங்களால நினைச்சா கூட அப்படி இருக்க முடியாது இல்லையா?" என்றார். குரலில் கவலை தொணித்தது.

 

"பொண்ணுங்கனா தேன் உன் பெரிய மாமனுக்கு கரிசனம் எல்லாம்.. இதே பொண்டாட்டின்னா அதெல்லாம் கிடையாது வைதேகி. அப்படித்தானுங்களே?" என்றபடி வந்தார் மரகதவல்லி செந்தில்வேலன் மனைவி.

 

அதற்கு பதில் கொடுத்தால் இன்னும் வார்த்தைகள் விபரீதமாகும் என்று புரிந்தவர் "வர்ஷினி எங்கே?" என்று 

பேச்சை மாற்றினார்.

 

"இன்னைக்கு காலேசு லீவு. அதேன் கொல்லைப்புறத்தில் கொய்யாக்கா பறிச்சிட்டு இருக்கா.. மஞ்சரியோடு கூட்டுபோட்டுகிட்டு" என்றவர் வைதேகியை ஜாடையாக பார்த்தார்.

 

விசாகா கொடுத்த மோரை குடித்துக் கொண்டிருந்த செந்தில்வேலன் கண்களுக்கு இவை தப்பவில்லை "என்ன அக்காவும் தங்கச்சியும் கண்ணாலே பேசிக்கிறீக. என்னன்னுதான் இங்கன சொல்றது?" என்றதும் வைதேகி தான் ஆரம்பித்தார்.

 

"பெரிய மாமா தீபாவளிக்கு பிள்ளையை வர சொல்லலாம்ல.. போய் ரெண்டு வருஷம் ஆகுது. பெரிய குட்டியை பார்த்து.. கண்ணுலேயே நிக்குறவ" என்றார்.

 

"பாத்துமா அக்காவுக்கு கால் வலிக்க போகுது. செத்த நேரம் உட்கார சொல்லு" என்றபடி வந்தான் அவர்களின் ஒற்றைக்குல கொழுந்து கதிர்வேலனின் மகன் சிவகுகன்.

 

"தம்பி.." என்று பெரியப்பாவின் வார்த்தைக்கு அமைதியானான் குகன்.

 

"எங்கன.. உன் அப்பன காணல?" என்று கேட்டார் செந்தில்வேலன்.

 

"அப்பா.. புதுசா ஆரம்பிச்சு இருக்குற அந்த துணிக்கடைக்கு பை சப்ளை பண்றதுக்காக போயிருக்காரு பெரியப்பா" என்றவன், "மா பசிக்குது. சாப்பாடு எடுத்து வை" என்றான்.

 

"பெரியப்பா கிட்ட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கோம். உள்ள அப்பத்தா இருக்கு. நீ போய் கேட்டு வாங்கி சாப்பிடு" என்றதும் அவன் முகம் சுழித்தான்.

 

"போமா அப்பத்தாவுக்கு வர வர காது சரியாக கேட்க மாட்டேங்குது. நான் ஒன்னு கேட்டா அது ஒன்னு வைக்குது. ஆனா தண்டட்டி மட்டும் பெருசா ஆடுது. என்னால ஆவறது இல்ல.. நீ வாம்மா.." என்றவனை பார்த்து கண்களை உருட்டினார் வைதேகி. அருகில் நின்ற மரகதவல்லி "நீ பேசுத்தா வைதேகி. நீ வா தங்கம் தான் சாப்பாடு வைக்கிறேன்" என்று அழைத்து சென்றார்.

 

மகனும் அக்காவும் உள்ளே செல்வதை பார்த்த வைதேகி "என்ன பெரிய மாமா நான் கேட்டேன். நீங்க பதிலே சொல்லல.." என்றார்.

 

"நானும் அதத்தேன் யோசிச்சிட்டு இருக்கேன் ஆத்தா.. கதிரு வரட்டும் பேசுவோம்" என்றதும் புருவம் சுழித்து கணவனின் அண்ணனை பார்த்தவர்,

 

"ஏன் மாமா.. இதுக்கு எதுக்கு அவுக வரணும். நீங்க புள்ள கிட்ட பேசி லீவ் போட்டு வர சொல்ல வேண்டியது தானே" என்றார்.

 

"உள்ளுக்குள்ள ஒரு ரோசணை ஓடிக்கிட்டே இருக்கு ஆத்தா.. இராவு அத பத்தி பேசுவோம்" என்று எழுந்து சென்று விட்டார்.

 

"பெரியம்மா ராலு பிரட்டு செமையா இருக்கு" என்றதும் இன்னும் அவனுக்கு வைத்தார் மரகதவல்லி.

 

சாப்பிட்டுக் கொண்டிருந்த பேரனின் அருகில் சென்று பார்த்த கிருஷ்ணாமணியோ "ஏண்டி பெரியவளே.. புள்ள தான் அத புடிக்கலைன்னு சொல்றானே. திரும்பத் திரும்ப அதையே வச்சுட்டு இருக்கே.. கொஞ்சமாச்சும் உனக்கு பொறுப்பு இருக்கா.. இந்த வீட்டுக்கு ஒத்த ஆம்பள புள்ள இருக்கான். அவனுக்கு புடிச்சது உன்னால செஞ்சு தர முடியாதா.. இரண்டு சிறுக்கிக்கும்?" என்று ஆரம்பிக்க மரகதவல்லிக்கு இது பழகி போன ஒன்றுதான். அதனால் அவர் அமைதியாகி விட்டார்.

 

கிருஷ்ணாமணிக்கு இப்போது எல்லாம் காது சரிவர கேட்பதில்லை. அதனால் வீட்டில் யாராவது ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் இவர் தலையிட்டு சம்பந்தமில்லாமல் பேசி வைப்பது அங்கு சகஜமாகி போனது.

 

"அப்பத்தா உனக்கு புண்ணியமா போகும்.. நான் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் தயவு செய்து இந்த பக்கம் வந்துராத.. உன் கூட மாரடிக்க என்னால முடியல.." என்று கைகூப்பி குகன் பேசியதும் "பாரு.. பாரு.. நான் சொன்னவுடன் புள்ள என்னைய பார்த்து கையெடுத்து கும்புடுறியான். அப்படின்னா என்ன அர்த்தம்? நீ அவன ஒழுங்கா கவனிக்கலனு அர்த்தம். புள்ளைய கவனிக்கிறது விட்டுட்டு இந்த வைதேகி எங்க போனா?" என்று அடுத்து வைதேகியை அவர் டார்கெட் செய்ய போக..

 

அதை கண்டு கொண்ட குகன் அவரை குண்டுக் கட்டாக தூக்கி கொண்டு வந்து கூடத்தில் இருக்கும் அவரது சாய்வு நாற்காலியில் அமர வைத்தவன் "இங்கனவே உட்கார்ந்து இருக்கணும்!" என்று அதட்டலிட்டு சென்றான்.

 

அதற்குள் கொல்லைப் புறத்திலிருந்து வந்த வர்ஷினியும் மஞ்சரியும் அதை நன்றாக கழுவி கீற்று போட்டு உப்பு மிளகாய் தூவி அனைவரிடமும் கொடுத்துவிட்டு உண்ண அமரும் போது தான் மாடியில் இருந்து வந்த விஷாகா "எனக்கு கொடுக்காம நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுறீங்க.. கொடுங்க எனக்கு" என்று கேட்டாள்.

 

"உன் பங்கு அங்கன ஏற்கனவே எடுத்து வச்சாச்சு.."

 

"இதுல கொஞ்சமா தான் இருக்கு.. உங்களோடது மட்டும் நிறைய இருக்கு" சண்டைக்கு நின்றாள் விஷாகா.

 

"நாங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு கொல்லைக்கு போய் கொசுக்கடியில நின்னு முள்ளு குத்துனது கிழிச்சது எல்லாம் வாங்கிட்டு பறிச்சிட்டு வந்தா உனக்கும் இந்தளவு வேணுமா? அதெல்லாம் முடியாது போடி!" என்று இரட்டையர்கள் இருவரும் அவளிடம் சண்டை போட..

இவர்கள் பேசுவது எதையும் புரியாத கிருஷ்ணாமணி அவர் இஷ்டத்துக்கு அவரும் பஞ்சாயத்து பண்ண.. 

இப்படியாக கலகலப்பாக இருந்தது அவர்கள் வீடு. 

 

கிருஷ்ணாமணி முத்து கருப்பன் இருவருக்கும் 3 பிள்ளைகள். மூத்தவர் செந்தில்வேலன் அவரது மனைவி மரகதவல்லி. இவர்களுக்கு தீபதாரா என்ற மகளும் அதன் பிறகு இரட்டையர்களான தீபவர்ஷினி தீபமஞ்சரி..

 

அடுத்தவர் கதிர்வேலன் வைதேகிக்கு மூத்தவன் சிவ குகன் அடுத்தது தீபவிசாகா…

 

இவர்களின் ஒரே தங்கை அழகுமீனாட்சியை அருகில் உள்ள பழமுதிர்சோலையில் தான் திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். அவருக்கு வெற்றிவேல் என்ற மகன் மட்டுமே.


 

மரகதவல்லியும் வைதேகி கூட இவர்களுக்கு ஒன்றுவிட்ட அத்தை பெண்கள்தான். இப்படி சொந்தத்துக்குள்ளே திருமணம் செய்து சொந்தம் விட்டுவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் முத்தக்கருப்பன் குடும்பம். 

முத்துக்கருப்பன் தீவிர முருகன் பக்தர். அதனால் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் முருகன் பெயர் வருமாறு பெயர் வைத்திருந்தார். அவர் தவறி ஐந்து வருடங்கள் ஆகிறது.

 

"பெரிய மாமா சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?" என்றபடி வைதேகி வர..

 

"இரு ஆத்தா.. கதிரு வந்திடட்டும்" என்று இரவு 10 மணி ஆகியும் இன்னும் வராத தம்பியை வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.

 

இவர்களுக்கு பை தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. பெரிய பெரிய ஷாப்பிங் பேக்கில் இருந்து தாம்பூலம் போடும் சிறு பை வரைக்கும் விதவிதமாய் டிசைன்களில் அளவுகளில் செய்து கொண்டிருக்கிறார் கதிர்வேலன்.

 

செந்தில்வேலனோ அவர்களின் பாரம்பரிய நிலம் தோப்பு ஆகியவற்றை பார்த்துக் கொள்கிறார். மஞ்சரியும் வர்ஷினியும் கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கின்றனர்.

 

குகன் விவசாயம் படித்துவிட்டு பெரியப்பாவோடும் அப்பாவோடும் மாறி மாறி வேலையை பார்த்துக் கொள்வான்.

 

"ரொம்ப காக்க வச்சிட்டேனா ணே" என்றப்படியே வந்தார் கதிர்வேலன்.

 

"இல்லடா கதிரு.. முதல்ல கை கால் கழுவிட்டு வா சாப்பிடுவோம்.. நேரமாச்சு" என்று சாப்பிட அமர்ந்தனர். அதற்குள் வீட்டு சிறுசுகள் எல்லாம் சாப்பிட்டு உறங்க சென்றுவிட பெரியவர்கள் மட்டுமே அப்பொழுது.

 

"நீங்களும் உக்காருங்கத்தா.." என்றபடி செந்தில்வேலன் கதிர்வேலன் வைதேகி மரகதவல்லி அமர்ந்துவிட… அவர்கள் பேசுவது காதில் விழவில்லை என்றாலும் பிள்ளைகளின் இந்த ஒற்றுமையை பார்த்தவாறு சாய்வு நாற்காலையில் அமர்ந்திருந்தார் கிருஷ்ணாமணி.

 

"உங்க கிட்ட எல்லாம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். தீபாவளிக்கு நம்ம தீபுவ வர சொல்லலாம்னு இருக்கேன்" என்றதும் பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

 

"அதோட நம்ம வெற்றிவேலுக்கு கூப்பிட்டு பரிசம் போட சொல்லலாம்னு ரோசன.. நீ என்ன சொல்லுற கதிரு" என்றதும் பெரிதாக எல்லாம் அதிரவில்லை அவர்கள்.

 

சிறுவயதிலிருந்து இருக்கும் பேச்சு தான். கூடவே உறவில் திருமணம் பண்ணுவது இவர்களுக்கு எல்லாம் வழக்கம் அல்லவா..

 

'இப்பொழுது இவளுக்கு செய்தால் தான் அடுத்தடுத்து பெண்கள் செய்ய சரியாக இருக்கும்!' என்று புரிந்து கொண்டார்கள்.

 

"அப்படியே செய்யலாம் ணே" என்று கதிர் ஒப்புதல் அளித்ததும் பெண்களைப் பார்க்க, அவர்களும் சம்மதமாய் தலை அசைத்தனர்.

 

அடுத்த நாளே மகளுக்கு அழைத்து விட்டார் செந்தில்நாதன்.

 

வீட்டினரோடு பேசும் அந்த அரை நேரமும் தனியாக மற்றொரு அறையில் வந்து கதவை தாழிட்டுக்கொண்டு தான் பேசுவாள் தீபதாரா.

 

வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும் சட்டென்று ஆதித் அவளிடம் வழக்கம் போல அணைப்பது போல ஏதாவது செய்துவிட்டால்… இல்லை வெறும் முகம் தரிசனம் கொடுத்து விட்டால்.. அவ்வளவுதான்..!!

 

அதுபோல குடும்பத்தினர் மொத்த பேருடனும் பேசிவிட்டு கடைசியாக அப்பாவிடம் பேசும் பொழுது "தீபாவளிக்கு கண்டிப்பா வந்திடு தீபு" என்று அத்தனை அழைத்தார்.

 

தாராவுமே போகும் எண்ணத்தில் தான் இருந்தாள். அப்பாவிடம் பேசி எப்படியாவது தங்கள் காதலுக்கு மரியாதை செய்துவிட வேண்டும் என்று அவள் நினைத்திருக்க..

 

அவரோ கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டவர் போல "வெற்றியோடு உனக்கு பரிசம் போடலாம்னு நாங்க எல்லாம் முடிவு செய்து இருக்கோம் ஆத்தா.." என்று பெரிய அணுகுண்டாய் தூக்கி போட்டார்.

 

என்னதான் சரவெடி விடாமல் வெடித்தாலும் ஒற்றை அணுக்குண்டு ஒரு நிமிடம் நம்மை ஸ்தம்பிக்க வைத்து விடுவது போல அவரின் வார்த்தைகள் இருக்க அதன் பின் யார் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் அவள் நினைவிலே இல்லை.

 

போனை கட் செய்து "நிக்…" என்று அலறி அடித்துக் கொண்டு அருகில் இருந்த அவர்கள் அறைக்குள் ஓடியவள், குளித்து வந்தவனை இறுக கட்டிக் கொண்டாள்.

 

"வாவ் தீப்ஸ்… என்னைக்கும் இல்லாத திருநாளா என்ன பாய்ஞ்சு வந்து கட்டிபிடிக்கிற… என்ன தீப்ஸ் குஜால் மூடா.. வா வா.. அடியேன் உன்னை ஆராதிக்க தான் காத்திருக்கிறேன்" என்றவன் அவள் பேச வருவதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அதரங்களை ஆக்கிரமித்து இருந்தான்.

 

"ச்சு.. விடு நிக்.." என்று அதரங்களை இழுத்துக் கொண்டவள் "கொஞ்சம் கூட உங்களுக்கு சீரியஸ்னஸே தெரியல நிக்.. ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன்" என்றாள்.

 

அவள் இடையை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டே… "எனக்கு இது தான் முக்கியமான விஷயம். கல்யாணத்துக்கு அப்புறம்தான் எல்லாம் சொன்ன.. சரி வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா அப்பா அம்மா முன்னாடி தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்ன.. அப்புறம் நாம ஒரே வீட்டில் இருக்கோம் எனக்கு ஒரு மாதிரி கில்டியா இருக்கு மோதிரம் மாத்தி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்ன.. அதுக்கும் சரின்னு சொன்னேன்! அப்பப்போ கிடைக்கிற இந்த சின்ன சின்ன கில்மாஸ்ஸூக்கும் தடைப் போட்டா எப்படி டி?" என்றவன் அவள் கழுத்தில் தன் முகத்தை புதைத்து வாசம் படித்துக் கொண்டே இதழ்களுக்கும் வேலை கொடுத்தான்.

 

அவன் அணைப்பில் நெகிழ்ந்த உடலையையும் உடையையும் கண்டு மாது அவனிடமிருந்து விலக முயன்றவாறே "நேத்து லீனா என்னை பார்த்து சிரிச்சா தெரியுமா? எல்லாம் உன்னால தான் நிக்!" என்று அவனின் புஜத்திலேயே குத்தினாள்.

 

"நான் தான் எதுவும் செய்யலைன்னா அன்னைக்கு செக் போன டாக்டரே சொல்லிட்டாங்களே தீப்ஸ்" என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசனையை நுகர்ந்தவாறே.‌‌.

 

"அதான்.. அதுக்கு தான்.. சிரிச்சா!! ஊருக்குள்ள வேற டாக்டரே இல்லையா சாதாரண இன்டைஜிஸன் ப்ராப்ளமுக்கு உன்னை யாருடா என்னை கைனகாலஜி கிட்ட அழைச்சிட்டு போக சொன்னா? என்ன மேரேஜ்க்கு முன்னாடியே ப்ரெக்னன்ட் ஆன கேட்டு சிரிக்கிறா?" என்று‌ கோபமா முறைத்தாள்.

 

"நாம தான் மோதிரம் மாத்தி மேரேஜ் பண்ணிக்கிட்டோமே அதை அவர்கிட்ட சொல்ல வேண்டியது தானே! உனக்கு வீம்பு டி!" என்றவன் அவள் காது மடலை கவ்வி கடித்தால் சற்று வலிக்கும்படி..

 

"ஸ்ஸ்ஆஆஆ... வலிக்குது நிக்!" 

 

"வலிக்கட்டும்.. நல்லா வலிக்கட்டும்.." என்றவன் அடுத்த நிமிடமே அவளிடம் குழைந்து "எப்போ நம்ம மேரேஜ் வச்சுக்கலாம் தீப்ஸ்?" என்று கேட்டான். இதுதான் நிக் தாராவிடம் அவனின் கோபம் சிறிது நேரம் கூட நிக்காது.

 

அப்போதுதான் அப்பா பேசியதெல்லாம் தாராவுக்கு ஞாபகம் வந்தது. "அய்யோ நிக்.. நான் தீபாவளிக்கு ஊருக்கு போறேன்னு சொன்னேன் இல்லையா.. அப்போ எனக்கு பரிசம் போட எங்க அத்தை பையன் வரானாம்" என்றாள் அதிர்வோடு.

 

"அவன் கிட்ட ஏன் பரிசு எல்லாம் கேக்குற தீப்ஸ் நீ? நான் எதுக்கு இருக்கேன்? உனக்கு.. என்ன கிப்ட் வேணும் சொல்லு நான் வாங்கி தரேன் தீப்ஸ்" என்றவனின் இதழ்கள் அவள் காது மடலை கவ்வியது.

 

"அய்யோ.. நிக்.. பரிசும் பரிசமும் ஒன்னும் கிடையாது. பரிசம்னா.. லைக் எங்கேஜ்மென்ட் மாதிரி" என்றதும்..

 

"வாட்?" என்று அதிர்ந்தவன் அவளை தள்ளி நிறுத்தி "யார் பொண்டாட்டிக்கு யாருடி பரிசம் போடுறது.. இரு இப்பவே எங்க அப்பா கிட்ட.. இல்ல இல்ல வேணாம் வேணாம்.. எங்க அம்மா கிட்ட சொல்லி நம்ம மேரேஜூக்கு அரேஞ்ச் பண்றேன்" என்றான்.

 

"கொஞ்சம் பொறுமையா இரு நிக். நான் முதல்ல நம்ம லவ்வ பத்தி எங்க வீட்ல சொல்றேன்" என்றவளை முறைத்துப் பார்த்தவன் "ஆறு மாசமா இதே டயலாக் தான் சொல்லிட்டு இருக்க.. ஒன்னரை வருஷமா நாம லவ் பண்ணி.. ஒரு வருஷமா ஒரே வீட்டில் ஒன்னா இருக்கோம். சீக்கிரம் சொல்லு இல்லன்னா பாவமெல்லாம் பார்க்க மாட்டேன்.. நீ ஊருக்கு போகும் போது ஒத்தையா போக மாட்ட.."

 

"ஏன் நீங்களும் என் கூட வர போறீங்களா நிக்?" என்று அவள் விழி விரித்து சற்று பயத்துடன் தான் கேட்டாள்.

 

"நோ தீப்ஸ்! ரெண்டு பேரா இல்லை மூணு பேரா தான் போவோம்" என்று அவள் வயிற்றில் ஒரு அழுத்தம் கொடுக்க திடுக்கிட்டு பார்த்தாள் தாரா.

 

பெண் மறுக்க மாட்டாள் என்ற தைரியத்தில் செந்தில்வேலன் தன் தங்கைக்கு போன் செய்து பரிசம் போடுவதைப் பற்றி பேசிவிட்டார்.

அழகுமீனாட்சிக்கு ஆனந்தம் பொங்க.. அங்கே தடப்புடலாக தயாரானான் மாமன் வெற்றிவேல் பரிசம் போட…

 

'இவள் காதலை வீட்டில் சொல்வாளா மாட்டாளா என்று குழப்பத்தில் எதற்கும் நாம் அம்மாவிடம் சொல்லி விடுவோம்' என்று அன்னையிடம் தன் காதலை பற்றி கூறி விட்டான் ஆதித் நிகேதன்.

 

அருணாச்சலம் தான் எப்போ எப்போ என்று காத்திருந்தாரே அவரும் இந்த பக்கம் தயாராகி விட்டார், பெண் கேட்க…

 

இரண்டு குடும்பங்களும் ஒரே நாளில் செந்தில்வேலன் வீட்டு வாசலில்…


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top