51
மகனின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு தெளிவு கண்டுக்கொண்ட பிரேமா, “நீங்க சொன்னது போல அந்த பெருமாள் சக்தி உள்ளவர் தான். என் பிள்ளை கிட்ட ஏதோ ஒரு தெளிவு இருக்கு” என்றார்
இரு அன்னைகளுக்கும் மனதில் பாலை வார்த்தது.
என்னதான் அவன் தப்பு செய்துவிட்டான் என்று அவனுக்கு தண்டனை கொடுத்தாலும்.. தள்ளி வைத்தாலும்.. அந்த தப்புக்கு இந்த சமூகமும் ஒரு காரணியாக இருப்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
பண தேவை ஒருபுறம்.. மறுபுறம் பக்கத்து வீட்டில் என்ன நடந்தால் கூட நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி போகும் சமூகம்.. ஆசை காட்டி தூண்டில் போடும் இம்மாதிரி சில மனிதர்களை தடுக்காத அரசு.. தனி மனித ஒழுக்கம் அறம் இவற்றை போதிக்காமல் வெறும் பாடங்களை மனப்பாடம் செய்ய வைக்கும் கல்வி நிலையங்கள் என்று சமூகக்காரணிகளுக்கு இம்மாதிரி வழித்தடம் தவறி நடக்க காரணங்கள்..!!
வதனி அவனிடம் சொன்ன காரணங்களை தவிர இன்னும் சில காரணங்கள் இருக்கத்தான் செய்தது
அவையெல்லாம் அவள் மனதளவில்..!
“விகர்த்தனன் சொன்னது போல இவரை ஒதுக்கி வைத்து அதுவே அவரின் இழப்புக்கு காரணமாக அமைந்தால்.. அந்த குற்ற உணர்வை தன்னால் தாங்க முடியுமா? இல்லை இல்லவேயில்லை..!” அவனை முழு மனதாக காதலித்தவள் அல்லவா வதனி.
“கணவனாய் தான் எனக்கு துரோகம் செய்தார் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருந்து விட்டு போகட்டுமே..!” என்ற எண்ணமும்..
அதனோடு சில சமூக காரணங்களும் உண்டு..!
“லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு போனா.. இப்ப பாரு புருஷனை பிரிஞ்சிட்டா ரெண்டு பிள்ளைங்களோட தனியா இருக்காளாம். இவ என்ன தப்பு செஞ்சாளோ இல்ல இவள வேணானு அவன் விட்டுட்டு போயிட்டானோ?” என்று எப்பொழுதும் நாக்கில் நம் வஞ்சத்தோடு குற்றம் சொல்ல தயாராக இருக்கும் உறவின கூட்டங்கள்..
ஒரு பெண் தனியாக இருந்தால் சிங்கிள் மதர் ஆக இருந்தால்.. அது தனக்கான வாய்ப்பு என்று பயன்படுத்திக்கொள்ள கழுகுகளாக சுற்றி தெரியும் சில மானங்கெட்ட ஆண்கள். இவை கூட காரணம் தான் நிரஞ்சனை அவள் அந்த வீட்டில் இருக்க சொல்ல..
மாதங்கள் செல்ல செல்ல வதனியால் அந்த மாடியில் ஏற இறங்க முடியாமல் சிரமப்பட.. சற்று யோசனையுடனே “நம்ம வேற வீட்டுக்கு போகலாமா மேகா? இரு இரு சொல்லிடுறேன்..! உனக்கும் அம்மாவுக்கும் மேல கீழ ஏறி இறங்கி முடியல.. லிஃப்ட் இருந்தா வசதியா இருக்கும். அதுவும் இல்லாம அம்மாவுக்கு ஹாலிலேயே இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு. அவங்களுக்கு தனியா ஒரு ரூம் இருந்தா பெட்டரா இருக்கணும் எனக்கு தோணுச்சு” என்றான் நிரஞ்சன்.
அப்பொழுது விகர்த்தனன் அங்கே இருக்க.. “அதுக்கு எதுக்கு வாடகைக்கு போயிட்டு? இரண்டு பேரும் இஎம்ஐ கட்டி ஒரு வீட்டை எடுங்களேன்” என்றான். அது ஒத்துக்கொள்ள கூடியதாக இருந்தது வதனிக்கு.
அடுத்து வந்து மாதங்களில் அவர்கள் எதிர்பார்த்தது போல இரண்டு படுக்கையறை கொண்ட வீடு ஒரு அபார்ட்மெண்டில் விலைக்கு வர.. அதற்கு ஒத்துக்கொண்டார்கள்
ஆனால் முன்பணம் கொடுக்க வதனியிடம் பணம் இல்லை. அவள் யோசனையாக இருக்க.. அவளுக்கு சேர்த்து வைத்த நகையை கொண்டு வந்து கொடுத்தார் மேகலா.
முன்ன எப்படியோ இப்பொழுது நகைகளை வாங்கிக் கொண்டவள் அதனை ஈடு வைத்து தன் பங்குக்கான பணத்தை கொடுக்க, அந்த வீட்டை இருவரும் பேரிலும் ரிஜிஸ்டர் செய்தார்கள்.
ஒரு சுபயோக தினத்தில் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். பிரேமாவோடு அந்த அறையில் நிரஞ்சன் தங்கிக் கொள்ள மிருவும் வதனியும் மற்றொரு அறையில் தாங்கிக் கொண்டனர்.
இது சற்று உறுத்தலாக இருந்தாலும் இப்போதைக்கு இதுவே போதும் என்ற மனநிலையில்தான் இருவரின் பெற்றவர்களும்.
ஆனால் வதனி மிகத் தெளிவாக இருந்தாள் தன் நிலையில்..!!
சில விஷயங்களை சமூகத்திற்காக ஒத்துக் கொண்டாலும் பல விஷயங்கள் நம் மனதிற்கு ஒவ்வாததாக இருந்தால்.. அதனை தள்ளி நிறுத்தி விடுவோம் அல்லவா?
அது போல தான் நிரஞ்சனும் அவளுக்கு. பிள்ளைகளுக்காக பெற்றோர்களுக்காக என்று அவனை தங்கள் கூட்டில் வாழ ஒத்துக் கொண்டாலும்.. அவனோடு வாழ முறுப்படவே இல்லை வதனி..!
வதனிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது..!
நிரஞ்சனின் சகோதரிகள் வந்து போவார்கள்தான். ஆனால் முன்ன மாதிரி அவர்களால் அன்னையிடம் வதனியை பத்தி வைக்க முடியவில்லை. வதனியிடமும் வேலை வாங்க முடியவில்லை. வந்தாயா? வா.. போகிறாயோ? போ.. என்பது போல தான் நடந்து கொண்டாள் வதனி.
நிரஞ்சனம் பெரிதாக அவர்களை கண்டு கொள்ளவில்லை. ஆனால் சகோதரிகளுக்குச் செய்யும் தன் கடமையில் இருந்து அவன் தவறுவதில்லை.
வதனிடம் ஒத்துக் கொண்டது போல அனைத்து வேலைகளையும் இருவரும் பிரித்துக் கொண்டிருந்தனர். குழந்தையை அவள் இரவில் பார்த்துக் கொண்டாள். பகலில் நிரஞ்சன் பார்த்துக் கொண்டான்.
முதல் மாதம் மேட்டர்நிட்டி லீவ் என்று நிரஞ்சன் எடுத்து இருக்க.. மொத்த வங்கியே அவனை விசித்திரமாக பார்த்தது.
மூன்று ஆண்டுகள் கழித்து..
தொலை கல்வி மூலம் எம்எஸ்டபிள்யூ (MSW) முடித்தாள் வதனி. இப்போது சமூக நலத்துறையின் சமூக விழிப்புணர்வு அதிகாரியாக வேலை செய்கிறாள்.
முக்கியமாக சில ஆப்களை இது போல் அவள் கண்டறிந்தால் அதனை பாரபட்சமே பார்க்காமல் பேன் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்து நீதிமன்றத்தை அணுகி விடுவாள் வதனி.
கூடவே அதைப்பற்றிய விழிப்புணர்வு ஒன்றையும் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவாள்.
பிள்ளைகள் இருவரும் பதினொன்னு மற்றும் மூன்று வயதில் இருக்க.. இன்னும் சில வருடங்களில் டீன் ஏஜில் கால் வைக்கும் தன் மூத்த மகள் மிருளாளிணிக்கும்.. இளைய மகள் மிருதுலாவிற்கும் அம்மா தான் பெஸ்டி..!
பள்ளியில் நடந்தது ஒன்று விடாமல் தன் வேலை முடித்து வந்தவுடன் கேட்பதுதான் அவளது முதல் கடமை. பிறகுதான் மற்றவை எல்லாம்?
பிள்ளைகளிடம் சரியாக நேரம் ஒதுக்கினாலே அவர்கள் வாழ்வில் வரும் சில அனர்த்தங்களை தவிர்த்து விடலாம் என்று அவள் தம்பி கூறி இருக்க.. அதையே இப்பொழுது அவள் பின்பற்றுகிறாள்.
நிரஞ்சன் பிரமோஷன் கிடைத்திருக்க அவனது வங்கியின் தலைமை அலுவலகத்தில் வேலை செய்கிறான்.
இன்னுமே பிரேமாவின் அறையில் தான் அவனது வாசம்..!
ஆனால் எட்டி இருந்தாலும் தன் மனைவி பிள்ளைகளே அவனின் சுவாசம்..!
சிலருக்கு இம்முடிவு ஏற்புடையதாக இருக்கலாம். சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.. ஆனால் ஒரு பெண்ணின் நிலையிலிருந்து நாம் யோசித்தால் வதனி எடுத்த முடிவு சரியானதாக தான் இருக்கும்..!!
இதுவரை என்
னோடு பயணித்த அனைத்து டியர்ஸுக்கும் நன்றி நன்றி நன்றி..!!
சுபம்..!
