தூகை 34

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 232
Thread starter  

34

 

இன்று..!

 

 “பாப்பா.. மிருக்குட்டி.. ஆச்சி வந்திட்டேன்..” என்று உற்சாகத்தோடு உள்ளே நுழைந்தார் மேகலா கூடவே விகர்த்தனன்.

 

சரியாக அந்நேரம் பார்த்து வதனி விசிறி அடைத்த தட்டு அவர் காலில் வந்து விழுந்தது. 

 

“மேகா.. என்ன இது?” என்று கோபத்தோடு கேட்ட அன்னையை சட்டை செய்யாமல் கணவனை முறைத்தப்படி நின்றிருந்தாள் வதனி.

 

மிரு குட்டி பாட்டி மற்றும் அப்பாவோட பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் வதனியால் அங்கு அமரக்கூட முடியவில்லை. மாமியார் மட்டும் வரவில்லை என்றால் இந்நேரம் நிரஞ்சனை ஒரு வழியாக்கி வெளியே துரத்திருப்பாள். 

 

ஆனால் யாரிடமும் கணவனின் இந்த விஷயத்தை வெளிப்படுத்த அவள் விரும்பவில்லை அதற்கு இரண்டு காரணங்கள்.

 

ஒன்று.. “அப்படி உன்ன காதல் செய்தவன் ஏன் இப்படி தடுமாறி போனான்? உங்களுக்குள் எதுவும் சரியில்லையா?” என்று கேலியாய் அவளை தான் கேள்வி கேட்பார்கள்.

 

இரண்டு.. “இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? இப்போதெல்லாம் சமூகத்தில் இது சகஜம் தானே? ஆண்கள்ன்னா‌ அப்படி இப்படித்தான் இருப்பாங்க.. நாம் தான் சரியாக அவர்களை கட்டி இழுத்துக் கொண்டு குடும்பத்துக்குள் வர வேண்டும். இது கூட பண்ணல விவரம் இல்லைன்னா என்ன பொம்பளையா நீ?” என்று வண்டி வண்டியாய் அறிவுரைகளை கொட்டுவார்கள்.

 

ஆக.. அறிவுரையும் அவளுக்கே.

 கேள்வியும் அவளுக்கே? 

 

ஆனால் தப்பு செய்தவனை ஒருவரும் ஒன்றும் கேட்க மாட்டார்கள்? 

 

ஏனென்றால் அவன் ஆண்..!

 

நிரஞ்சன் செய்ததைக் கூறினால் ஆரம்பகால அதிர்ச்சி மற்றும் ஆத்திரம் “நீயா இப்படி?” என்று, அதுவும் சில காலம் நெருங்கிய உறவுகளிடம் இருக்கும்.

 

அதன் பின்??? அனைத்தும் மறந்து அறிவுரைகள் அவளுக்குத்தான் வரும்.

 

“ஏற்கனவே ஒரு புள்ள இருக்கு அடுத்தது ஒரு புள்ள வரப்போகுது.. அப்புறம் என்ன? அவனும் தான் எல்லாத்தையும் மறந்துட்டு உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறானே.. மன்னிக்கிறது தான் பொண்ணுக்கு நல்ல குணம்” என்று இப்படித்தான் அவரின் உறவுகள் கண்டிப்பாக அவளுக்கு அறிவுரை மீது அறிவுரை கொட்டும். அதற்காகவே அவள் யாரிடமும் வாயை திறக்கவில்லை. 

 

அது என்னவோ இந்த சமூகம் காலம் காலமாக தவறு செய்த உரிமையை ஆண்களுக்கு கொடுத்துவிட்டு, அவர்களை மன்னிக்கும் உரிமையை மட்டும் பெருந்தன்மையாக பெண்களிடம் கொடுத்து விடுகிறார்கள்..!

 

அவளுக்கென்று ஒரு மனம் இல்லையா? அதில் உணர்ச்சிகள் இல்லையா?

 

இதற்காகவே தான் யாரிடமும் வாயை திறக்கவில்லை மேகவதனி..!

 

திறக்காத கதவுக்கு பின்னே இருக்கும் ரகசியம் ரகசியமாகவே காக்கப்படும்..!

 

ஒரு முறை கதவு திறந்து அந்த ரகசியம் கசிந்து விட்டால்.. அறிவுரை என்ற பெயரில் இவளையும்,

 

“என்ன மாப்ள அப்படியாமே?” என்று கேலியால் நிரஞ்சனையும் உயிரோடு கொன்று தின்னும் உறவுகளே இங்கே அதிகம்.

 

அதனால் இதுவரை எதற்காக சண்டை? ஏன் பிரிந்து வந்தாய்? என்று அவள் மீது துளைக்கப்பட்ட எரியப்பட்ட கேள்விகளுக்கு எதற்குமே வாய் திறக்காமல் அமைதியாக இருந்தாள்.

 

“சொல்ற விஷயம்னா அவளே சொல்லுவாம்மா..! போட்டு அவளை படுத்தி எடுக்காதீங்க. ஏற்கனவே அங்க முடியலன்னு தானே இங்கே வந்து இருக்கா.. கொஞ்ச நாள் அமைதியா இருங்க.. அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்க.. ஆறுதலா இருங்க..!” என்று விகர்த்ன் தான் அதட்டிருந்தான் அன்னையை.

 

அதன் பின் பழையதை பேசாமல் மகளை தேற்றும் முயற்சியில் மேகலா இருக்க.. பத்து நாளுக்கு மேல் அங்கே தங்கவில்லை அவள். 

 

அதிர்ச்சியாக அனைவரும் பார்க்க “விருந்து மருந்தும் மூன்று நாள் தான்..!” என்று விரக்தியாக சிரித்தவள்,தனியாக வந்துவிட்டாள்.

 

எவ்வளவு நேரம் தான் அறையில் தனியாக அமர்ந்திருக்க மெதுவாக வெளியே வந்து ஆர்யன் கொடுத்த பைலை ஒரு முறை சரி பார்த்தவள் அந்த வேலையை செய்வதற்காக லேப்டாப்பை எடுத்து வைத்து அமர்ந்தாள்.

 

காலை உணவு நிரஞ்சன் சமையலறையில் செய்து கொண்டிருக்க.. அங்கே செல்லவே இல்லை வதனி. அதைப் பற்றி எதுவுமே கேட்கவே இல்லை.

 

மிருவுக்கு முதலில் தோசை வார்த்துக் கொண்டு வந்து நிரஞ்சன் கொடுக்க‌‌..

 

“பாட்டி கதை சொல்லிட்டே ஊட்டி விடுவீங்க” என்றதும்,

 

“என் சமர்த்து தங்கம்..! நீ சுட்டு அடிக்கி வை ஆதவா.. நான் பாப்பாவுக்கு கதை சொல்லிட்டே ஊட்டி விடுறேன்” என்று வெகு நாள் கழித்து பேத்தியின் வாசம் செய் முகர்ந்து கொண்டு அவளுக்கு கதை சொல்லி ஊட்டி விட்டார் பிரேமா. 

 

வயதான காலத்தில் வேறு என்ன வேண்டும்? பிள்ளைகள் மீது கொண்ட பிரேமம் அன்பு அத்தனையும் இருமடங்காக அவர்களின் வாரிசுகளிடம் கொட்டுவதே.. இந்த வயது முதிர்ந்த அன்னையர்களுக்கு முக்கிய வேலை..!

 

இருந்த மாவில் தோசைகளை சுட்டு அங்கிருந்து ஹாட் பேக்கில் அடுக்கி வைத்தவன், அனைத்தையும் கொண்டு வந்து டீப்பாய் மேல் வைத்துவிட்டு வதனியின் முகத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.

 

அவளோ இருவரையும் கண்டு கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருந்தவள், சிறிது இடைவேளை விட்டு எழுந்து சமையலறை சென்று தண்ணீரை அருந்தி விட்டு வந்தாள்.

 

அதற்குள் மிருவும் பிரேமாவும் பேசிக்கொண்டே உணவை முடித்து இருந்தனர், பேசி சிரித்துக் கொண்டே..

 

ஒரு தட்டில் தோசைகளை வைத்து சட்னியை வைத்து வதனியிடம் நீட்டினான் நிரஞ்சன். 

 

அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் பொங்க.. உணவை வீணாக்குகிறோம் என்ற எண்ணம் கூட இல்லாமல் அதனை விசிறி அடித்தாள் வதனி.

 

“என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல நீ? நானும் ஏதும் பேச கூடாதுன்னு பொறுமையா இருக்கேன். உனக்காக இல்லை அந்த வயசானவங்களுக்காகவும் இந்த சின்ன பிள்ளைக்காகவும் தான். இல்ல அவ்வளவு தான்…! எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. நீ மீறின விஷயம் விபரீதம் தான்..” என்று அவள் எச்சரித்துக் கொண்டிருக்கும் போது தான், மேகலாவும் விகர்த்தனமும் வந்தது. தன் காலடியில் பறந்து வந்து விழுந்து தட்டை கண்டு கலவரத்துடன் மகளைப் பார்த்தார் மேகலா. 

 

அன்னையின் இந்த ருத்ர தாண்டவத்தில் மிரு குட்டி பயந்து எழுந்து அருகில் இருந்த சுவற்றோடு ஒன்றிக்கொண்டு நிற்க.. பிரேமாவோ வருத்தமாக மகனையும் மருமகளையும் பார்த்திருந்தார்.

 

வேகமாக உள்ளே வந்து மேகலா “அறிவு இருக்காடி உனக்கு? இப்படித்தான் ஒரு பொம்பள புள்ள சாப்பாட்ட விசிறி அடிப்பியா? இன்னும் இந்த கோபம் உனக்கு குறையல இல்ல.. எல்லாம் உங்க அப்பா கொடுத்த செல்லம்..! என்று நிலைமையின் விபரீதம் தெரியாமல் அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டே செல்ல..

 

விகர்த்தனன் மிருவை பார்த்தவன் ஓடிச் சென்று அவனை அணைத்து “நம்ம கொஞ்ச நேரம் வெளில போயிட்டு வருவோமா மிரு?” என்று அக்காவை கண்களால் எரித்தவன் 

 

அவளிடம் “எதா இருந்தாலும் சண்டை சச்சரவ உங்களுக்குள்ள வச்சுக்கோங்க.. புள்ளைக்கு நேரா வச்சுக்காதீங்க..!” என்று கடிந்துவிட்டு மருமகளை தூக்கிக்கொண்டு வெளியே சென்றான். 

 

இதுவரை பார்த்து பேசிடாத ஏன் பழகாத மருமகன். ஆனால் மருமகன் என்ற ஒற்றை உறவே போதுமானதாக இருந்தது நிரஞ்சனுக்கு மேகலா சப்போர்ட் செய்ய..!

 

அங்கிருந்த சூழ்நிலையை பார்த்து அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் பிரேமாவை பார்த்து கையை பிசைந்தார் மேகலா.

 

‘என்ன இப்படி பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க என்று கேட்டு விடுவார்களோ?’ என்று ஒரு பயம் அவரிடம். என்ன இருந்தாலும் பெண்ணை பெற்றவராயிற்றே..!

 

ஆனால் பிரேமா தான் அவருக்கு ஆதரவாக பேச, மேகலா ஆச்சரியமாக பார்த்தார் அவரை.

 

“சும்மா வதனியை திட்டாதீங்க. அவ இந்த மாதிரி கோபம் எல்லாம் போடவே மாட்டா. ரொம்ப அமைதி. எல்லாம் இப்ப கொஞ்ச நாளா தான். ஏதோ இவங்களுக்குள்ள மனஸ்தாபம். அதுவும் இல்லாம முழுகாம இருக்கா இல்லையா.. அந்த டயத்துல வர ஹார்மோன் கோளாறுன்னு சொல்லறாங்களே அதுவா இருக்கும். நீ அவள பேசாதிங்க” என்று பிரேமா வதனைக்கு சப்போர்ட் செய்து கூடவே அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை போட்டு உடைக்க..

 

அதிர்ச்சியோடு மகளை பார்த்தவர் “என்னடி சொல்றாங்க உன் அத்தை? முழுகாம இருக்கியா நீ?” என்று கேட்க..

 

‘போச்சுடா..! இந்த அம்மா அடுத்தது இனி ஆடுமே..!’ என்று மனதில் நினைத்துக் கொண்டே ஆமாம் என்று தலையசைத்தாள்‌ வதனி.

 

“இது என்ன மறைக்கிற விஷயமா எப்படி இருந்தாலும் இன்னும் சில மாதத்தில் தெரிஞ்சு தானே ஆகும்?” என்று ஆரம்பித்தவர் தான்

..

 

அறிவுரை மலைகளை மழைகளாய் பொழிந்துக் கொண்டிருந்தார் மேகலா..! நான் ஸ்டாப்பாக…!

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top