32
இன்று..!
நிரஞ்சனின் இந்த திடீர் வருகையை வதனி எதிர்ப்பார்க்கவே இல்லை. அவன் மட்டும் வந்திருந்தால் எப்பவோ வெளிய போக சொல்லி சண்டை போட்டு ஒரு வழியாகி இருப்பாள் அவனை..!
ஆனால் பாதுகாப்பு கேடயமாக அவன் அம்மாவையும் அழைத்து வந்திருந்தான். ‘செய்யுறதெல்லாம் செஞ்சிட்டு.. இப்ப பெரிய நல்லனாட்டும் சீன் போடுறான்’ என்று கோப பெருமூச்சு விட்டபடி தன் அறையில் தனியாக அமர்ந்திருந்தாள் வதனி.
ஏனெனில் ஹாலில் பிரேமா மிருவோட பேசிக் கொண்டிருக்க அருகில் நிரஞ்சனும் மகளின் வாசத்தை சுமந்தபடி அமர்ந்திருந்தான். அவர்கள் மூவரும் அங்கே அமர்ந்திருக்க, அங்கு செல்ல வதனிக்கு பிடிக்கவில்லை.
வெகு நாட்கள் பிறகு பார்த்து பாட்டியிடம் கேட்க சொல்லு என்று மிருவுக்கு நிறைய இருந்தது. அது போல் ஃபோனில் மட்டுமே பேசி வந்து பேத்தியிடம் சொல்வதற்கென்று நிறைய கதைகளை அவர் படித்து வைத்திருக்க.. அதையெல்லாம் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்போதெல்லாம் பிரேமாவும் பார்த்துக் கொண்டிருநத் சீரியல் எல்லாம் எப்போதோ தவிர்த்து விட்டார்.
பேசி சிரித்து சண்டையிட்டு கொஞ்சி விளையாடிய பேத்தியின் நினைவு அவரை வெகுவாய் தாக்கும். அப்போதெல்லாம் அவள் பார்க்கும் அதே கார்ட்டூனை தான் பார்ப்பார்.
இன்று அதையெல்லாம் ஒன்று விடாமல் சொல்லியதும் சந்தோஷமாக “நிஜமா பாட்டி..!” ஆர்ப்பரித்தாள் மிரு. பாட்டியும் தனக்கு பிடித்த அதே கார்ட்டூனை அதே கேரக்டரை பிடிக்கும் என்று சொல்லியதும்.
அன்னையை மறந்து போக.. பள்ளியும் மறந்து போக.. தந்தை மற்றும் பாட்டியோடு அளவளாவி கொண்டிருந்தாள் கூடத்தில் அமர்ந்து.
நேற்று வரை தானும் தன் மகளும் மட்டுமே இருந்த அழகிய சிறுகூடாக இருந்த இவ்வீடு, அரை மணி நேரத்தில் அவனதாகி விட்டானே? என்று நிரஞ்சனின் செயலில் இன்னும் இன்னும் அவளுக்கு கோபம் தான் தோன்றியது.
மாறாக நிரஞ்சன் அங்கே சந்தோஷ வானில் பறந்து கொண்டு இருந்தான்.
மகள் மனைவி அம்மா என்று இந்த மூன்று பெண்களும் அவனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவரவர் அளவில் அவனிடம் அன்பு கொண்டவர்கள்.. நேசம் கொண்டவர்கள்.. பாசத்தை கொட்டுபவர்கள்..!
அதனால் ஒருவரை பிரிந்தாலுமே அவனுக்கு வலிக்கும். வெகு நாட்களுக்கு பின் இன்று மூவரும் ஒரே இடத்தில்..! வேற என்ன வேண்டும்? எனக்கு இந்த ஒரு நிம்மதி.. எனக்கு இதுவே போதும் என்று நினைத்தவன், மெல்ல சமையலறை சென்று என்ன இருக்கிறது இல்லை என்று பார்த்தான்.
இந்த மூன்று மாதத்தில் சமையலின் அரிச்சுவடியை அவன் அறிந்து வைத்திருந்தான்.
ஒரு குட்டி பிரிட்ஜ் இருந்தது. அதுவும் செகண்ட் ஹேண்டில் வாங்கி வைத்திருந்தாள் வதனி. அதனுள் மாவு இருக்க, அவனுக்கு தெரிந்த கார சட்னியை செய்து கொண்டிருந்தான்.
அவ்வப்போது வந்து அம்மாவிடமும் தன் சந்தேகத்தை கேட்டு தெளிவு பெற்று செல்ல.. பிரேமாவும் மகன் மீது இருந்த வருத்தம் மறந்து “நீயே கரைச்சு தோசை சுட போறியா? பார்த்து டா.. புள்ள சாப்பிடணும் வயித்துப் புள்ளகாரியும் சாப்பிடணும்” என்று நக்கல் அடித்தார். அவர் முகமே அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
இருவருக்கும் என்ன் பிரச்சனை என்று இதுவரை யாருக்குமே தெரியாது. வதனியும் சொல்லவில்லை. நிரஞ்சனும் சொல்லவில்லை.
‘ஏதோ பிணக்கு இருவருக்கும் இப்போ அதுவும் சரியாகி விட்டது. மருமகளும் முழுகாம இருக்கிறாள். பிரிந்தவர்கள் சேர்ந்து விட்டோம்’ என்று நினைப்பிலேயே மகன் மீது இருந்த வருத்தங்கள் மறைய சந்தோஷமாகவே பேசிக் கொண்டிருந்தார் பிரேமா.
அவருக்கும் புரிந்தது மகன் ஏதோ தவறு செய்திருக்கிறான். அதனால் தான் இவ்வளவு தூரம் மருமகள் சென்றிருக்கிறாள் என்று..!
‘ஏதாவது இருந்தாலும் அவர்களுக்குள்ளவே பேசி அதை முடித்து கொள்ளட்டும். நாம் தலையிட்டால் பிரச்சினை வேறு விதமாக மாறும்’ என்று அனுபவ அறிவில் இருவருக்குள் தலையிடாமல் அமைதியாக இருந்து கொண்டார்.
நிரஞ்சன் அங்கு வேலை செய்வது இங்கே வதனிக்கு கொதித்தது. அவளுக்கு அவ்வளவு கோபம்..! அந்த கோபம் அவள் உடலுக்கு நல்லதில்லை.. குழந்தைக்கு நல்லதில்லை என்று புரிந்தது அறிவுக்கு..! ஆனால் மனமும் அதனை ஏற்க மறுத்து, அவனை இங்கிருந்து உடனே விரட்ட சொல்லி துடியாய் துடித்தது.
ஏனென்றால் அவள் அனுபவித்த வேதனைகள் அப்படி..! ரணங்கள் அப்படி..! வலிகள் அப்படி..! அதை எல்லாம் ஒரே நாளில் மேஜிக் ஸ்டிக் வைத்து ஜீபூம்பா போட்டு மாற்றிவிட முடியுமா என்ன?
ஒரே இரவில்..
ஒரு கணத்தில்..
ஒரு செயலில்..
ஒரு வார்த்தையில்..
புண்ப்பட்ட மனது அத்தனையும் மறந்து மாறிவிடுமா என்ன?
அது மாற சில மாதங்கள் ஆகலாம்.. சில வருடங்கள் கூட ஆகலாம்.. ஏன் மாறாமல் கூட போகலாம் கடைசி வரை..!
அப்படியே வலி மாறினாலும் புண் மறைந்தாலும் அங்கே உள்ள வடு அழிந்துவிடுமா என்ன?
ஆழமாய் பதிந்து ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்வை சுட்டிக்காட்டிக் கொண்டே தானே இருக்கும்.
ஃபோனை எடுத்து தம்பிக்கு அழைத்தாள். வெகு நேரம் சென்றே அவனது லைன் கிடைத்தது.
“சக்தி.. அம்மாவை கூட்டிட்டு வரேன் தானே சொன்ன.. இன்னும் ஏன்டா அம்மாவ கூட்டிட்டு நீ வரல?” என்று அந்த பக்கம் விகர்த்தனன் போனை எடுத்த உடனே கடுகடு என்று கடுகென பொரிந்தாள் வதனி.
காதிலிருந்து போனை எடுத்தவன், ஒற்றை விரலால் காதை குடைந்து கொண்டு “ஏன் இப்படி கத்துற? நான் காலையில் அம்மாவை கூட்டிட்டு கிளம்பிட்டேன். உன் வீட்டுக்காரர் தான் நீங்க வர வேணாம். அவளுக்கு உதவ நா எங்க அம்மாவ கூட்டி வந்திருக்கேன். அவங்க பார்த்துக்குவாங்கறு சொல்லிட்டார். என்ன பண்ண சொல்ற? அதான் இப்ப திரும்பி போலாம் போயிட்டு இருக்கோம்” என்றான்.
“அது எப்படி அவரு சொன்னா உடனே நீ போயிடுவாயா? அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ அம்மாவ கூட்டிட்டு வா. எனக்கு அவர் இங்க இருக்கிறது கொஞ்சம் கூட பிடிக்கல.. நான் எதுவும் பேசக்கூடாது ரொம்ப கஷ்டப்பட்டு அமைதியா இருக்கேன். ஆனா இந்த அமைதிக்கு ஒரு காலை வரை இருக்கு. அது எக்ஸ்பீரியாக விட்டுறாதே..! விட்டேனா நிலைமை இன்னும் சீரியஸாகும்” என்று அவள் பேசிய தொணியே கண்டிப்பாக எதுவும் செய்வாள் என்று சொல்ல.. வேகமாக வண்டியை திருப்பிப் போட்டு வதனி வீட்டு நோக்கி பயணித்தான் விகர்த்தனன்.
“என்ன இப்பதான் ஏதோ முக்கியமா வேலை இருக்கு கொஞ்ச நேரம் கழிச்சு கூட்டிட்டு போறேன்ன.. இப்போ திரும்பவும் வதனி வீட்டு பக்கமாக போற?” என்று கேட்டார் அவன் அம்மா.
அவருக்கு என்ன விஷயம் என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை மகள் கர்ப்பமாக இருப்பதும் அவருக்கு தெரியாது. மயங்கி விழுந்ததும் தெரியாது.
“மிரு குட்டி ரெண்டு நாளா உன்ன பாக்கணும்னு சொல்லிட்டு இருக்கா வா” என்று காலையில் அன்னையை அவன் அழைக்க..
“இருடா அப்படியே மத்தியானத்துக்கு ஏதாவது சமைச்சு கொண்டு போகலாம். வதனிக்கு இன்னைக்கு ஆபீஸ் இல்லையா?” என்று கேட்டார்.
“இல்லம்மா ஆர்யா எங்கேயோ வெளில போறானாம். அதனால வேலை எல்லாம் ஒரு வாரம் வீட்டில் வைத்து பார்க்க சொல்லி இருக்கான். மிரு ஸ்கூல் கிளம்பறதுக்குள்ள போகணுமா.. வா வா..” என்று அவசரப்படுத்தி அவன் அழைக்க,
மகளுக்கு பிடித்த விதமாய் நிறைய சின்ன வெங்காயம் பூண்டு எல்லாம் நல்லெண்ணெயில் வதக்கி புளி குழம்பு வைத்து எடுத்துக்கொண்டு மகனுடன் வண்டியில் ஏறினார்.
பாதி தூரத்தில் நிரஞ்சன் போன் செய்து அவர்கள் வந்துவிட்டதாக சொல்ல.. இந்நேரத்தில் அம்மாவை கூட செல்வது நல்லது இல்லை. ஏதேனும் பிரச்சனை நடக்கலாம் முதல்ல எல்லா பிரச்சினையும் அவங்க பேசி தீர்த்துக்கட்டும். அதற்கு பின் அழைத்து செல்லலாம் என்று நினைத்தவன்,
“அம்மா கமிஷ்னர் கூப்பிடுறாரு நான் என்னன்னு போய் கேட்டுட்டு வரேன். வீட்டுல உன்ன விட்டுட்டு போறேன்” என்ற வண்டியை எடுத்து வேகத்தில் அவன் திருப்பிட, அப்போது தான் அவனுக்கு வதனி அழைத்தது. இப்போது திரும்பவும் அக்காவின் வீடு நோக்கி வேகமாக பயணித்தான் விகர்த்தனன்.
இவர்கள் வீட்டுக்கு உள்ளே நுழையும் நேரத்தில் வதனி தட்டி விட்ட தட்டு பறந்து வந்து அவர்களது அன்னை காலடியில் வந்து விழுந்தது. அதிர்ச்சியோடு அவர் பார்க்க..
அங்கே தலையை குனிந்தப்படி நின்றயிருந்தான் நிரஞ்சன். அருகே வருத்தமான பார்வையோடு பிரேமா.. அன்னையின் இந்த அதி கோபத்தில் பயந்து சுவற்றோடு ஒன்றியவாறு நின்று இருந்தாள் மிரு.
கண்கள் மூக்கு ஏன் முகமே சிவப்பாய்
மாற கோபத்தில் சுனாமியை கொந்தளித்து ஆக்ரோஷமாய் நின்று இருந்தாள் வதனி.
தூகையாகும்
