30
இன்று..!
“டேய்.. எனக்கே டயர்டா இருக்கு. எந்திரிச்சு வர வேணாமா? சும்மா டொய்ங் டொய்ங்னு காலிங் பெல்ல நொட்டிக்கிட்டே இருக்க.. இடியட்..!” என்ற படி கதவை திறந்தவள் வேகமாக பேச… அங்கே நின்றிருந்தவனை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆம் ஆதவ் நிரஞ்சன் தான்.
“குட் மார்னிங் மேகா” என்றான் விரிந்த புன்னகையோடு..!
அவனுக்கு பின்னால் “வதனி..” என்று மெல்லிய குரலில் அழைத்துக்கொண்டு நின்றிருந்தார் அவளின் மாமியார் பிரேமா.
அன்று இரவு கலவரத்திற்கு பின் வெகு நாளைக்கு பிறகு பிறந்த வீட்டுக்கு சென்றாள் வதனி. அதுவும் எப்பேர்ப்பட்ட நிலையில்? மழையில் நனைந்து உடல் எல்லாம் தண்ணீரில் ஊறி கையில் குழந்தையோடு பரிதாபமாக நின்றவளை எந்த கேள்வியும் கேட்காமல் ஏதோ பெரிய பிரச்சனை போல என்று ஊகித்து உடனே உள் அழைத்தது விகர்த்தனன் தான்.
அவளது அம்மா மேகலாவும் கூட எதுவும் பேசாமல் மகள் நின்ற நிலையிலே பரிதவித்து போய் வாரி அணைத்து கொண்டு அழுது கரையலானார். தங்கபாஸ்கரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
இத்தனை வருடங்களாக மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று தான் நினைத்திருந்தார். ஆனால் இப்பொழுது என்ன ஆனது? ஏதானது? ஒன்று புரியவில்லையே? என்று அவரும் மகளிடம் பேசவில்லை என்றாலும் பரிதவிப்போடு பார்த்தார்.
அதன்பின் வதனி தனியாக செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கும் போது கூட அன்னையோ வேண்டாம் என்று தடுத்தார்.
“இல்லன்னா நானும் உன் கூட வரேன். தனியா உன்னை அனுப்ப முடியாது” என்று அத்தனை போராட எப்பொழுதும் போல வதனியின் பிடிவாதமே ஜெயிக்க.. தனியாக வந்து விட்டாள்.
மகள் இப்படி தங்கள் சொல்பேச்சை கேட்காமல் தனியாக சென்றது இருவருக்குமே வருத்தம் என்றாலும் அவ்வப்போது மேகலா மட்டும் மகளை வந்து பார்த்து செல்வார்.
நேற்று தம்பி போன வேகத்தில் கண்டிப்பாக தாய் காலையிலேயே கிளம்பி வந்து விடுவார் என்று எதிர்பார்த்தவளுக்கு எதிர்பாராத விதமாய் கணவனும் மாமியாரும் வந்து நிற்க.. ஒரு நிமிடம் அவளால் பேசவே முடியவில்லை.
பிரேமா தான் முன்னெடுத்து வந்து “வதனி?” என்று மெல்ல அழைத்தவர் நடுங்கும் விரல்களால் அவளது கன்னத்தை தொட்டு “நல்லா இருக்கியா?” என்று கேட்டார்.
அவளால் பதில் கூற முடியவில்லை. இப்பொழுது சில நாட்களாக அவ்வப்போது ஃபோனில் பிரேமா பேசும்போது அவரின் மாற்றத்தை உணர்ந்து இருக்கிறாள் தான். ஆனால் இன்று நேரில் கண்டதும் அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.
எப்பொழுதும் விரட்டி விரட்டி பேசிய பழக்கப்பட்ட மாமியார் திடீர் என்று பாசமாக பேசினால் எந்த மருமகளுக்கு தான் பயந்து பயந்து வராது??
அதிலும் ஆய்ந்து ஓய்ந்து போன தோற்றத்தில் மாமியாரை கண்டதுமே அவளுக்கு மனம் உருகிற்று.
எப்பொழுதுமே இறுக்கிய கொண்டை நெற்றியில் விபூதி கழுத்தில் இரட்டைவடை சங்கலி காட்டன் புடவை என்று பாந்தமாக ஒருவித அதிகார தோரணையில் தான் வலம் வருவார் பிரேமா.
அதிலும் படிக்க மட்டுமே அவர் போடும் அந்த கோல்ட் ஃப்ரம் கண்ணாடி என்று சில நேரம் மாமியாரை பார்க்கும்போது ‘சின்ன வயசுல இன்னும் அழகாக இருந்திருப்பாங்க போல’ என்று பலமுறை எண்ணியது உண்டு வதனி.
இன்றோ தோல் எல்லாம் சுருங்கி போய் ஆள் மெலிந்து இறுக்கமான கொண்டை தளர்ந்து கண்களில் கண்ணாடியோடு அவரை பார்க்கவே பல நாள் நோய்வாய்பட்ட மாதிரி இருந்தது.
“நான் வரவா வதனி?” என்று அவளிடம் அனுமதி கேட்டவரை எப்படி வர வேண்டாம் என்று சொல்ல? அவளுக்கு வாய் வரவில்லை. மகன் செய்த தப்புக்கு தாய் என்ன செய்வார்?
“வாங்க.. வாங்க.. அத்த” என்றவள் மறந்தும் கணவனை திரும்பி பார்க்கவே இல்லை. அதை பிரேமாவும் கவனித்தார்.
ஆனால் கவனிக்க வேண்டியவனோ அதையெல்லாம் கவனிக்கவே இல்லை. உரிமையோடு உள்ளே வந்தவன் தான் கொண்டு வந்த பைகளை எல்லாம் ஹாலின் ஓரமாக வைத்துவிட்டு, “பாத்ரூம் இந்த ரூம்ல தானே?” என்றபடி சாதாரணமாக அறைக்குள் நுழைந்து கை கால் கழுவி விட்டு உறங்கும் மகளை பார்த்தான்.
அருகில் படுத்து மிரு என்று மெல்லிய குரலில் அழைத்தவன், அவள் முகத்தில் புரண்டு அவளது சிறு சிறு முடிக் கற்றைகளை காதின் ஓரம் மெலிதாக ஒதுக்கி விட்டான்.
அது என்னவோ இந்த அப்பாக்களுக்கு மகளிடம் மட்டும் குரல் அத்தனை மென்மையாக வரும்..!
தந்தையின் குரல் கேட்டதும் கனவு போல்.. அவறின் ஸ்பரிசமும் கனவு என்று தூக்கத்திலேயே சிரித்தவள் கண் விழிக்காமல் இருக்க..
நிரஞ்சன் மீண்டும் மிரு என்று அவள் அருகில் சென்று எழுப்ப.. நிஜமாகவே தந்தை வந்திருக்கிறாரா? என்று ஒரு விழியை மட்டும் திறந்து பார்த்தவள், தன் முன்னே அரங்கநாதரை போல பள்ளிகொண்டிருந்த தந்தையைக் கண்டு இப்பொழுது இரண்டு விழிகளும் பட்டென்று பெரிதாய் விரிந்து கொள்ள “அப்பா.. நிஜமா அப்பா? நிஜமாவே வா அப்பா?” என்று ஆசையாக அழைத்து அவன் கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.
எத்தனை பெரிய பிள்ளையாக வளர்ந்தால் என்ன? அப்பாக்களுக்கு மகள் இன்னும் அதே பஞ்சு பொதியில் பார்த்த ரோஜா குவியல் குழந்தைதான்..!!
“நிஜமாப்பா நிஜமாவே வந்துட்டீங்களா? இனி நாம் எல்லாம் ஒன்னா இருக்க போறோமா?” என்று அத்தனை முறை தந்தையின் கழுத்தை இறுக்கமாக கட்டிக்கொண்டு கேட்ட மகளை கண்டவனுக்கு கண்களில் நீர் துளித்தது.
எத்தனை பாசமான பெண் என் மகள்..! இவளை கூட பார்க்க விடாமல் பண்ணி விட்டாளே என்று மனைவி மீது கோபம் இல்லை வருத்தம் இருந்தது. அவள் மீது கோபம் கொள்ளும் நிலையிலா அவன் இருக்கிறான்? அவளின் கோபம் குறைந்தால் போதும் என்றல்லவா தவம் இருக்கிறான்?
அறையில் அப்பாவும் மகளும் தங்கள் உலகத்திற்குள் சென்று பாசமழையை பொழிந்து கொண்டிருக்க.. இங்கே ஹாலில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த மாமியாரை பார்த்தவாறு நின்று இருந்தாள் வதனி.
நேற்று மருத்துவமனையில் மருத்துவர் பேசியதிலிருந்து ஓரளவு கணித்திருந்தாள் தான் வதனி. கணவன் தன்னை வீட்டுக்கு கூப்பிடுவான் என்று..!
இல்லையென்றால் தன் தம்பியிடம் பேசி அம்மாவை வரவழைக்க ஏற்பாடு செய்வான் என்று..!
இவ்வாறெல்லாம் அவள் எண்ணி இருக்க.. இவனோ தடாலடியாக இவளது வீட்டுக்கு வந்து விடுவான் என்று அவள் ஒரு பர்சன்ட் கூட நினைக்கவில்லை.
மெல்ல நிமிர்ந்து வதனியை பார்த்த பிரேமா “உன் பார்வை எனக்கு புரியுது. உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்னு தான் நான் சொல்லி இருந்தேன். ஆனா இங்க வர்றது பத்தி எனக்கு தெரியவே தெரியாது. ஒரு இடத்துக்கு போகணும் கொஞ்சம் உங்க டிரஸ் மருந்து எல்லாம் பேக் பண்ணி வையுங்கனு நேத்து ராத்திரி தான் ஆதவன் சொன்னான். சரி எங்கையாவது கோயில் குளத்துக்கு அழைச்சிட்டு போவானா இருக்கணும்னு நானும் எல்லாத்தையும் பேக் பண்ணி வச்சு காலைல பார்த்தா இங்க கூட்டிட்டு வந்து இருக்கான்” என்றார்.
“நீங்க உங்க பிள்ளை கிட்ட ஒரு கேள்வி கூட கேட்கல.. எங்க போறோம்? எதுக்கு போறோம் காலையில வரைக்கும்.. இதை நான் நம்பணுமா?” என்று கூரிய வாளாய் வந்து விழுந்தது வதனின் வார்த்தைகள்.
அவளைப் பொருத்தவரையில் பிரேமாவின் பிரேமம் முழுவதும் மகனின் மீதுதான்.
என்னதான் மருமகள் பிரிந்து சென்றாலும். அதற்கான வருத்தம் அவருக்கு இருந்தாலும்.. மகன் மீது உள்ள அன்பு பாசம் குறையாமல் தான் இருக்கும் என்பது அவளது கருத்து. ஆனாலும் உண்மை அப்படி இல்லையே? அது அவளுக்கு தெரியவும் தெரியாதே..!!
“நான் அவன் கூட பேசி ரெண்டு மாசத்துக்கு மேல் ஆகுது. இப்போ பத்து நாளைக்கு முன்னாடி தான் அவ மூஞ்சே சரி இல்லாம ஒரு நாள் வீட்டுக்கு வந்தான். அப்பத்தில் இருந்துதான் அவன் கிட்ட தேவைக்கு மட்டும் பேசுறேன். நீ நம்பலைன்னாலும் இதுதான் நெசம்” என்றார் அவள் கண்களை தீர்க்கமாக பார்த்து..
பிரேமாவின் உடல் மொழியும் கண்ணின் நிமிர்வுமே அவர் பொய் கூறவில்லை என்பது வதனிக்கு புரிந்தது.
ஏன் எதனால் என்று ஆயிரம் கேள்விகள் அவள் மண்டைக்கு குடைந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு இப்போ எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்? என்று அவள் அமைதியாக அவரைப் பார்க்க..
“வதனி நிஜமா சொல்றேன் எனக்கு எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தானே தெரியாது. கொஞ்சம் டிரஸ் பேக் பண்ணி வாங்க போலாம்னு சொன்னானா.. நானும் கிளம்பிட்டேன். இங்க வந்ததுக்கு அப்புறம் தான் இது நீ தங்கி இருக்கிற வீடுனே தெரியும்” என்றார் பாவமாக முகத்தை வைத்து பிரேமா.
இவரிடம் கேட்டு ஒரு பயனும் இல்லை என்று நினைத்தவள் அவள் அறைப்பக்கம் நகர முயல..
“வதனி.. ஒரு டீ மட்டும் போட்டு தர்றியா? ரொம்ப நாளாச்சு உன் கையில டீ சாப்பிட்டு. காலையில ஒண்ணுமே சாப்பிடவே இல்லை. இந்த பையன் புடிச்சி இழுத்துட்டு வந்துட்டான்” என்று கெஞ்சலாக கேட்டு மாமியாரை வித்தியாசமாக பார்த்தாள் வதனி.
இதே சிறிது நாட்களுக்கு முன்பு அதட்டலாக உரிமையாக கேட்ட பிரேமா எங்கே? இப்பொழுது கெஞ்சலாக போட்டு தருவாயா என்று கேட்கும் இந்த பிரேமா எங்கே??
‘வாழ்க்கை ஒரு வட்டம் என்பது எவ்வளவு நிதர்சனம்’ என்பது போல தலையசைத்துக் கொண்டவள் ஒன்றும் செல்லாமல் சமையலறை சென்று அனைவருக்குமே டீ போட்டு மகளுக்கு பால் ஆத்தி கொண்டு வந்து ஹாலில் இருக்கும் டேபிளில் பொதுவாக வைத்தாள்.
அதற்குள் மகளை கிளப்பி பிரஷ் செய்ய வைத்து அழைத்து வந்திருந்த நிரஞ்சன், அங்கிருந்த டீயை பார்த்து தனக்கும் சேர்த்து இருப்பதையும் கண்டு கொண்டவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.
அவள் எடுக்க சொல்லி தான் குடிக்க வேண்டும் என்ற பிகுவெல்லாம் இல்லை அவனிடம். தானாக எடுத்துக் கொண்டவன் மகளிடமும் பாலை எடுத்துக் கொடுக்க இவற்றையெல்லாம் பார்த்தபடி அமைதியாக தன் டீயை அருந்திக் கொண்டு இருந்தாள் வதனி.
வதனியாக கூப்பிட வேண்டும்.. வதனியாக எதுவும் செய்து அவனுக்கு கொடுக்க வேண்டும்.. வதனியாக பேச வேண்டும் என்ற கட்டத்தை எல்லாம் கடந்து விட்டு, அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று இவனே அனைத்துக்கும் முன் நின்றான். முதல் அடியை எடுத்து வைத்தான். முதல் வார்த்தையை பேசினான்.
அமைதியாக டீ நேர முடிய “பாப்பா நீ போய் குளி” என்றதும் மகள் சிணுங்கிவாறே பாட்டியின் அருகில் உரசிக் கொண்டே அம்மாவை பார்த்தாள். பிரேமாவும் பேத்தியை தொட்டு தடவிக் கொஞ்சியப்படியே இருந்தார்.
“இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேணாம் குளிச்சிட்டு வா” என்று மகளை அனுப்பிவிட்டு இப்பொழுது கணவனை நேர்பார்வை பார்த்தவள்
“என்ன நிரூபிக்க இதெல்லாம் பண்றீங்க? உங்க உதவி வேணும்னு நான் கேட்டனா? உங்க அரவணைப்பு வேணும்னா ஏங்கினேனா? இல்ல உங்க பாதுகாப்பு தாங்கனு கெஞ்சினேனா?” என்று அவள் கேட்க அமைதியாக தன் கையில் இருந்த வெற்று டம்ளரை வெறித்தவன் பின் ஏதோ முடிவு எடுத்தவன் போல அதை டீப்பாயில் வைத்துவிட்டு அவள் முன் நிமிர்ந்து நின்றான்.
தன் அம்மாவை பார்த்து “உங்க மருமக முழுகாம இருக்கா ம்மா. மூணு மாசம்” என்றதும் அவருக்கோ அத்தனை ஆனந்தம்.
“நிஜமாவா வதனி?” என்று முகம் கொள்ளா புன்னகையோடு அவள் கன்னத்தை பிடித்து திருஷ்டி எடுத்தார்.
மாமியாரின் செய்கைக்கு அமைதியாக இருந்தவள், கணவனை கண்களால் எரித்து “என்ன நிரூபிக்க பாக்குறீங்க? என் மேல நீங்க அக்கறை வச்சிருக்கீங்க.. அன்பு காட்டுறீங்க.. நேசம் வச்சிருக்கீங்கன்னு இந்த செய்கை எல்லாம் செஞ்சு காட்டுறீங்களா? இல்ல இதெல்லாம் பார்த்து நான் நீங்க செஞ்சதை மறந்துடனும்னு நினைக்கிறீங்களா?” என்றதும், இல்லை என்று அவன் தலையாட்ட..
“இதுக்கெல்லாம் மேல முக்கியமான ஒன்னு இருக்கு தெரியுமா? அது நம்பிக்கை..! அதெல்லாம் உடச்சிட்டு இப்ப இதெல்லாம் பண்ணா மட்டும் எல்லாம் சரியாயிடும் நம்புறீங்களா? முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போங்க..!” என்றவளுக்கு மூச்சு வாங்கியது கோபத்தில் வேகவேகமாக பேசியதால்..
அவனோ கொஞ்சம் கூட அசரவே இல்லை. சமையல் அறை சென்று ஒரு சின்ன சொம்பில் தண்ணீரை எடுத்து வந்தவன் அவள் முன்னே நீட்டி “முதல்ல இது குடி. பிள்ளைதாச்சி பொம்பள இப்படி வேகு வேகுதுன்னு பேசுறது உடம்புக்கும் குழந்தைக்கும் நல்லது இல்ல” என்றவனை அவள் ஆயாசமாக பார்க்க..
“அம்மா கொஞ்ச நாளைக்கு நம்ம இங்க தான் இருக்க போறோம். ஒரு பெட்ரூம் தான் இருக்கு. நீங்க அட்ஜஸ்ட் பண்ணி இருக்கீங்களா?” என்றதும்,
“எனக்கு என் மருமகள் பேத்தியோடு இருக்கிறதே போதும்” என்றார் அவர்.
“அப்போ உங்களுக்கு நான் இங்கே ஒரு கட்டில் வாங்கி ஹாலிலேயே போடுறேன். சோபா மாறியும் வச்சுக்கலாம்” என்றவன், போனை எடுத்து “சக்தி நான் வந்துட்டேன்.. அம்மாவும் தான். நீ அத்
தை எல்லாம் இங்க அழைச்சிட்டு வர வேணாம் சரியா?” என்று பேசியவாரே வெளியே செல்லும் கணவனை தீ பார்வை பார்த்தாள் வதனி.
