29
அன்று…!
இரவு எவ்வளவு நேரமானாலும் நிரஞ்சன் வந்ததும் அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று காத்திருந்தாள் வதனி.
உடனே எல்லாவற்றையும் பேசித் தீர்த்து, உடனே அனைத்தும் சரியாகிவிட வேண்டும் என்று பெண்ணவளுக்கு பேராசை..!
ஆம் பேராசையே தான்..! சூரியனைக் கொண்டு பூமி சுழல்வது போல.. ஆதவனைக் கொண்டே வதனியின் உலகம் சுழன்று கொண்டிருக்கிறது அந்த உலகம் திடீரென்று விலகிச் சென்றால்.. அவள் நிலைமை?? பெரும்பாலான பெண்களின் மனநிலை தான் அது.
சூரியன் விலகிச் சென்றால் பூமி தாங்குமா? அதன் தட்பவெப்ப நிலையில் இருந்து பருவ காலங்களில் இருந்து அனைத்திலுமு மாற்றம் உண்டாகும். அந்த மாற்றம் அதில் வாழும் உயிரினங்களுக்கும் கேடு தரும் அல்லவா?
அதுபோலத்தான் ஆதவனின் விலகலும் வதனியின் உலகத்தையே சூனியம் ஆக்கி இருந்தது.
அந்த சூனியம் என்று நிவர்த்தியாகும்? என்று என் உலகம் பழையபடி மலர்களால் பூத்துக் குலுங்கும்? வாசனைகளால் நிரம்பி வழியும்? சந்தோஷம் மகிழ்ச்சி பொங்கி வழியும்? என்னவனும் நானும் சந்தோஷமாக இருப்போம்? என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு கணவனுக்காக காத்திருந்தாள் வதனி.
பொதுவாக ஒரு பிரச்சனை என்றால் பெண் வார்த்தைகளை கோர்த்து எடுப்பாள். ஆனால் ஆணவனோ மௌனத்தை ஆயுதமாக எடுப்பான். இவள் வார்த்தைகளால் வதை செய்யும் அளவுக்கு கூர் தீட்டி அனுப்புவாள். அவனோ எனக்கு காது கேட்கவில்லை என்பது போல அவள் அனுப்பிய கணைகளை அனைத்தையும் போட்டு உடைத்து விடுவான்.
இனி.. ஐந்தாம் உலகப்போர் ஒன்று நடந்தால்.. அது ஆண், பெண் காதலில்தான் அதிகம் நடக்கும் போல..!! ஏனென்றால் உலகிலேயே அதிசக்தி காதலுக்கு உண்டு.
அப்படி ஒரு போர் நடப்பின், அந்த போரினால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல அவர்களை நம்பி இருக்கும் அவர்களை பெற்றவர்களும்.. அவர்கள் பெற்ற பிள்ளைகளும் தான்..!
மணி 9 இருக்கும் அதற்குள் பிரேமாவுக்கும் மிருவுக்கும் உணவு கொடுத்திருந்தாள். பிரேமாவும் களைப்பில் உறங்கி இருந்தார். மிருகுட்டி மாலையில் போட்ட ஆட்டத்தில் அவளும் சீக்கரம் உறங்கி விட, வதனி மட்டுமே ஹாலில் அமர்ந்திருந்தாள் கணவனுக்காக.
நிரஞ்சன் வரும் பொழுதே யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டே வந்தான். என்ன பேசுகிறான் என்று எல்லாம் புரியவே இல்லை அவளுக்கு.
அவன் பேசுவது வைத்து ஏதோ லோனுக்கு ஏற்பாடு செய்கிறான் என்று மட்டும் அவளுக்கு புரிந்தது.
‘லோனா? இந்த நேரத்தில் தேவைப்படும் தானே? ஏற்கனவே நிறைய செலவு..! அவரும் என்னதான் செய்வார்?’ என்று பாவமாக கணவனுக்காக பரிந்தது பாவையின் உள்ளம்.
“சாப்பாடு எடுத்து வைக்க வாங்க?” என்று அவளும் அவன் பின்னாலேயே மெதுவாக கேட்டுக் கொண்டு அறைக்குள் நுழைய..
அவளை திரும்பிப் பார்த்து முறைத்தவன், உஷ் என்று உதட்டில் கை வைத்து, பின் அந்த பக்கம் “ஒரு நிமிஷம் சார்” என்றவன், போனை மியூட்டில் போட்டு
“முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன் வதனி. எதுக்கு சும்மா சும்மா வந்து தொல்லை பண்ற? கொஞ்ச நேரம் பேசாமல் இரு” என்று எரிந்து விழுந்தான்.
அவன் பேசிய அந்த சுருக் சுருக் வார்த்தைகளால் கூட அவளுக்கு மனம் வலிக்கவில்லை. அவன் கூறிய அந்த வதனியில் தான் அவளுக்கு மனம் தைத்தது. ரணமாய் வலித்தது.
காதலித்த நாள் கொண்டு எப்பொழுது வரை அவன் வதனி என்று அவளை அழைத்ததே இல்லை.
“என் மேகமடி நீ.. சூரியனான என்னை ஆசையாய் காதலாய் மோகமாய் தழுவிக் கொள்ளும் மேகம் நீதானடி மேகா..” என்று காதலால் கொஞ்சம் அவனது வார்த்தைகள்.. இப்பொழுதும் காதில் கேட்க.. முணுக்கென்று விழுந்த கண்ணீரை உள்ள இழுத்துக் கொண்டாள்.
‘வர வர நீ ரொம்ப யோசிக்கிற மேகா..! அழுவாச்சியா மாறிட்ட..! வேணாம் அவருக்கும் பல டென்ஷன் இருக்கும். அதுல ஏதாவது மறந்தாப்ல வாயில் வந்திருக்கும். இதை பெரிதுபடுத்தி இருக்கிற டென்ஷனை இன்னும் ஏத்தி விட்டுக்காத’ என்று நினைத்தவள், அவன் முகத்தையே பார்த்தபடி அமைதியாக நின்றியிருந்தாள்
சைகையால் என்ன என்று அவன் கேட்க, திரும்ப சைகையால் ‘சாப்பாடு எடுத்து வைக்கவா?’ என்று அவள் கேட்டாள்.
அவனோ “வேண்டாம். நான் சாப்பிட்டேன் வெளியில.. நீ சாப்பிட்டு படு” என்றான் மென் குரலில்.
கணவன் வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம் என்று வெகு ஆசையாக காத்திருந்தவளுக்கு பெரும் ஏமாற்றமாய் இருந்தது.
உணவோ ஒரு வாய் கூட உள்ளே நுழையவில்லை. ஆனாலும்.. வயிறு ஒன்று இருக்கிறதே. அதற்கு பசிக்குமே என்று உணவை உள்ளே தள்ளினாள் அவள்.
உணவு முடித்து பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்து அடுப்பை துடைத்து என்று வேலையை முடித்து அவள் வர அரை மணி நேரத்துக்கு மேலாக இருந்தது.
மெதுவாக கணவன் என்ன செய்கிறான் என்று அவள் எட்டிப் பார்க்க.. அவனோ எப்போதும் போல அந்நேரத்தில் லைவ்வில் இருந்தான்.
‘இப்பொழுது பேசப் போனால்.. மனதை வருத்தும் படி ஏதாவது பேசுவான். அவன் வந்ததே நேரம் சென்று தான்.. அதற்கு மேல் தான் இந்த வேலையும் பார்க்க வேண்டும் அல்லவா? ம்ப்ச் பேச நேரமே கிடைக்க மாட்டேங்குதே..! ஆண்டவா..!’ என்று புலம்பியபடி பிரேமாவின் அறைக்குள் சென்றாள்.
பிரேமாவோ அப்பொழுதுதான் இருமியபடி எழுந்து அமர்ந்திருந்தார்.
“என்னாச்சு அத்தை?” என்று வதனி கேட்க..
‘என்னன்னு தெரியல பொறை ஏறிக்கிட்டே இருக்கு. யாரும் நினைக்கிறாங்க போல? ஆதவன் வந்துட்டானா? அந்த தண்ணிய கொஞ்சம் எடு” என்றார்.
அவருக்கு அருகிலே இருக்கும் வெந்நீரை எடுத்து கொடுத்தவள், “அவர் அப்பவே வந்துட்டாரு அத்தை” என்றாள்.
“முன்னெல்லாம் வேலை விட்டு வந்ததும் என்னை ஒரு தடவை வந்து பார்த்துட்டு போவான். இப்ப எல்லாம் ஆளே மாறி போய்ட்டான். காலையில தலையாடிட்டு போவதோடு சரி மறுநாள் காலையில தான் அவன பாக்க முடியுது” என்று பெரும் மூச்சி விட்டார்.
“இல்லத்த.. அவங்க வந்து பார்த்தாங்க. நீங்க தூங்கிட்டு இருந்தீங்கன்னு போயிட்டாங்க. அவங்க எப்படி உங்கள மறப்பாங்க?” என்று அத்தையை சமாதானப்படுத்தினாள்.
தண்ணீரை குடித்தவர், “ஏதோ நீ சொல்ற நம்புறேன். ஆனா அவன் ஆளே மாறிட்டான்” என்று மனம் வருந்தியவர், அவள் கைப்பற்றியே கழிவறையும் சென்று விட்டு வந்து படுத்து உறங்கி விட்டார்.
‘அவருடைய மாற்றம் இப்பதான் உங்க கண்ணுக்கு தெரியுதா அத்த? எனக்கு எப்பவோ தெரிஞ்சிருச்சு..!” என்று மனதோடு பேசியவாறு தனக்கு படுக்கையை விரித்தாள் வதனி.
படுக்கையை விரித்து படுத்தவளுக்கு ஒரு பொட்டுக் கூட உறக்கம் வரவில்லை. கண்கள் மூடவே முடியவில்லை. இந்த பிரச்சினையை சரி செய்தால் மட்டுமே தன்னால் நிம்மதியாக உறங்க முடியும் என்று அவளுக்கு புரிந்தது.
பெண்களுக்கு மனதில் பிரச்சனை என்றால் அதன் தாக்கத்தை எல்லா வேலைகளிலுமே காட்டுவர்..!
வீட்டு வேலையை ஒருவித வெறுப்போடு செய்வது.. பிள்ளைகளிடம் எரிந்து விழுவது.. சரியாக சாப்பிடாமல் புலம்பியபடியே சுற்றித் திரிவது.. தூக்கம் வராமல் தவிப்பது என்று..!
ஆனா ஆண்களுக்கு வேலையில் ஏதாவது பிரச்சனை என்றால் தான் அதன் தாக்கத்தை.. அந்த கோபத்தை.. வீட்டிலும் மற்ற இடத்திலும் காட்டுவர்..!
ஆக உணர்விலும் உணர்ச்சியை வெளிப்படுத்துவதிலும் இரு வேறு துருவங்கள் தான் ஆணும் பெண்ணும்..!
ஆனால் இரு வேறு துருவங்கள் தானே ஒன்றை ஒன்று ஈர்க்கின்றன..!
புரண்டு புரண்டு படுத்தவளுக்கு உறக்கம் சிறிது கூட வரவில்லை. எழுந்து மணியை பார்த்தாள் அது 12 என காட்டியது.
‘இந்நேரம் கணவன் லைவ் முடித்து உறங்க ஆயத்தமாகியிருப்பான். இப்போது சென்று பேசினால் தான் என்ன?’ என்று தோன்ற.. மெல்ல அறை கதவை சாற்றி விட்டு பூனை போல மெல்ல நடை பயின்று தங்கள் அறையை கதவை திறக்க.. அங்கே நிரஞ்சனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
“என்ன இவரு இன்னைக்கு சீக்கிரம் தூங்கிட்டாரு? இன்னைக்கு எல்லாமே சொதப்பலாவே நடக்குதே..!” என்று திரும்பிப் போக முயன்றாள். ஆனால் மனம் வரவே இல்லை..!
கணவனிடம் தான் பேசவில்லை என்றாலும்..
அவன் அருகில்..
அவன் அணைப்பில்..
அவன் அரவணைப்பில்..
அவன் கதகதப்பில்..
தூங்க வேண்டும் என்று பாவையின் உள்ளம் வெகுவாய் ஏங்கியது.
மீண்டும் மெல்ல பூனை நடை நடந்து கட்டிலின் நடுவே தூங்கும் மகளை மெல்ல சுவற்றோரம் படுக்க வைத்து இவள் நடுவில் வந்து படுத்தாள்.
கணவனின் சீரான மூச்சு அவன் ஆழ்ந்த உறக்கத்தை காட்ட.. மெல்ல அவனது கையை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டாள்.
‘இப்போதைக்கு இந்த அணைப்பு போதும். அவனின் அருகாமை போதும். தூக்கம் வந்திடும்’ என்று அவள் மெல்ல கண்களை மூட..
அவனோ தூக்கத்திலும் அவளின் அருகாமையை உணர்ந்து தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டான்.
மலைப்பாம்பென தன்னை சுற்றி
வளைத்திருக்கும் அவன் முரட்டு கைகளை ஆனந்தத்தோடு பார்த்தவாறு அவன் அணைப்பிற்குள் அழகாக அடங்கினாள் வதனி.
