மாமனே 2
ஜீவன், அவன் மாமன் சொன்னவற்றை எல்லாம் சரிபார்த்து முடித்தான். அதற்கே மதியம் நெருங்கியது.
இன்னும் சற்று நேரத்தில் மாணிக்கவேல் வந்து விடுவான். அதற்குள் அம்மாச்சியிடம் ஜீவனுக்கு பேச வேண்டி இருந்தது.
அதுவும் காலையில் அக்காக்கள் சொன்னதிலிருந்து அவன் மனம் அதிலேயே உழன்று கொண்டிருந்தது.
"இந்த அல்லி அம்மாச்சிக்கு ஏன் இந்த வேலை? ரெண்டு பேருக்கும் ஆசையை தூண்டிவிட்டு இரண்டு பேரும் ஒண்ணா வாழலாம்னு இது ஏதோ அவளுக மனச போட்டு கெடுத்து வெச்சி இருக்கு! இது மட்டும் மாணிக்கம் மாமாவுக்கு தெரிஞ்சது.. என்ன என்ன வேடிக்கை நடக்க போகுதோ? ஆச்சி கிழவிய காசிக்கு நாடு கடத்தினாலும் வியப்பில்ல!" என்று ஃபோனை போட்டான் கருமத்தம்பட்டிக்கு அல்லிமலரை ஒரு பிடி பிடிக்க…
"ஹலோஓஓ… ஐயா ராசா ஜீவா… நல்லா இருக்கியா? உன்ற மாமா எப்படி இருக்கான்? நேரா நேரத்துக்கு சாப்பிடறானா? ஓய்வெடுக்கிறானா? இல்ல வேலை வேலைன்னு மதுர வெயில் மொத்தத்தையும் அவன் தலையில தாங்குறானா? வருஷம் மூணாவது இந்த பக்கம் வந்து… அவன பாக்கணும்னா நாங்க தான் வர வேண்டி இருக்கு…" என்று அவர் தன் புலம்பலை தன் வெண்கல குரலில் ஆரம்பிக்க…
" உனக்கெல்லாம் போனே தேவையில்லாத ஆச்சி கிழவி… கருமத்தம்ப்பட்டி வீட்டு வாசல்ல நின்னு நீ கத்துனா… இங்கன இருக்கிற காரியாபட்டிகாரனுக்கே கேட்கும் போல…" என்று காதை குடைந்து கொண்டு ஃபோனை தள்ளிப்பிடித்துக் கொண்டு கத்தினான் ஜீவன்.
"ஏம்டா… இப்படி சொல்லுற கண்ணு… ஆச்சி என்ன அம்புட்டு சத்தமாவா பேசுறேன் கண்ணு.." என்று அதையுமே கத்தி தான் கேட்டார் அல்லி.
"ஆஆஆஆஆ… ஆச்சி மொதல்ல நிறுத்து!" என்று கத்தி இருந்தான் ஜீவன்.
"என்னப்பு நீயும் உன்ற மாமானோட சேர்ந்து சேர்ந்து கத்துற பழக்கத்தை கத்து வச்சிருக்க.. அதெல்லாம் ரொம்ப தப்பு தெரியுமா? அதுவும் பெரியவங்க கிட்ட எல்லாம் ரொம்ப மரியாதையாக தான் நடந்துக்கோணும் கண்ணு!" என்று ஆரம்பிக்க அவனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது.
"இங்க பாரு ஆச்சி கிழவி… நான் பஜார் கடையில இருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல மாமா இங்கன வந்துருவாரு.. அதுக்கு முன்னாடி எனக்கு உன்கிட்ட ஒன்னு கேட்கணும்! ஆமா கிழவி… என்ன சொல்லி வச்ச என் அக்காளுங்க கிட்ட…"
"உன்ற அக்கான்னா என்ற பேத்தி தானேடா… என்ன சொன்னேன்.. சீக்கிரமா இந்த வீட்டுக்கு யாராச்சும் ஒருத்தி மருமகளா வாங்கடி! கிழவி தனியா இருக்கேன்னு சொன்னேன்! இது ஒரு குத்தமா கண்ணு??" என்று கேட்டார் அப்பாவி போல..
"இங்க பாரு அம்மாச்சி… உன் இந்த அப்பாவி மூஞ்செல்லாம் தாத்தா நம்புவாரு! ஏன் மாமா கூட நம்புவாரு.. ஆனா நான் அப்படி இல்லை! ஒழுங்கா சொல்லு ஒருத்தியை கட்டி கிட்டா இன்னொருத்தி ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீனு அவளுக கிட்ட சொல்லி வச்சியா? ரெண்டு பேரும் காலைல ஃபோன் போட்டு இத சொல்றாளுங்க.. நீ பெரிய மனுஷி தானே! சின்ன பிள்ளைகளுக்கு இப்படித்தான் தப்பு தப்பா கத்துக் கொடுப்பியா? ரெண்டு பேருக்கும் ஆசையை வளர்த்து வச்சு.. ரெண்டு பேரையுமே கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா? ஒன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாய்ங்க போலீஸ்காரவிய்ங்க.. என் மாமன தான் புடிச்சி ஜெயில்ல போடுவாய்ங்க தெரியுமா?" என்று பயமுறுத்தினான்.
"அட போடா.. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்! இதுல உங்க ஊரு போலீஸ்காரர்களுக்கு என்னடா வந்தது? என் பேத்திங்க ரெண்டு பேரும் என் வீட்டுக்கு மருமகள்களா வந்தா… தங்கத்தாலேயே அவளுகள இழச்சி தாங்கு தாங்குனு நான் தாங்குவேன் தெரியுமா? ம்ஹீம் அந்த நல்ல நாள் எப்பபோவோ?" என்றார் இன்னும் அந்த காலத்திலேயே இருந்த அல்லி.
"எதே?? நீ தாங்குவியா? உன்னைய தான் புடிச்சு மொதல்ல ஜெயிலுக்குள்ள போடுவாய்ங்க.. இன்னும் உங்க அப்பாரு ரெண்டு பொண்டாட்டி கட்டிகிட்ட காலத்துல இருந்து நீ வெளிய வரவே இல்லையா? இத பாரு கிழவி.. இந்த மாதிரி பேச்சை இத்தோட விடு! இரண்டாங் கல்யாணம் பண்றது சட்டப்படி குற்றம்!! கட்டிக்கிட்டவன்... ஐடியா கொடுத்தவிய்ங்க.. கல்யாணத்துக்கு வந்தவிய்ங்கனு இப்படி குடும்பத்தோட தூக்கி தான் ஜெயில்ல போடுவாய்ங்க..!" என்று சற்று காட்டமாக பேசினான் ஜீவன்.
"அடி ஆத்தி!! கண்ணு நிஜமா தான் சொல்லுறியா? ஜெயில ஏன் போடணும்? அவளுங்க விருப்பப்பட்டு கட்டிகிட்டா அதுக்கு என்ற புள்ள என்ன செய்வான்?" என்றதும், "இப்பவும் நீ திருந்த மாட்டேங்குற! அவளுகளுக்கு ஆச காட்டி விட்டது யாரு? நீ தானே!! ஒருத்தியை கட்ட சொல்றதுக்கே என் மாமா முறுக்கிட்டு திரியுறாரு.. நீ ரெண்டு பேரையும் கட்டி வைக்க போறேன்னு தெரிஞ்சுச்சு முதல் பலி நீ தான்.. பாத்துக்கோ!! இனி என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது! அவளுகள யாராவது ஒருத்தியை என் மாமனுக்கு கல்யாணம் பண்ணு.. இல்லையா வேற எங்கயாவது இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்.." என்று நாட்டாமையாக மாறி அவன் தீர்ப்பு கூற..
"எடுபட்ட பயலே.. என்ற புள்ள சிங்கம்.. அவன விட்டுட்டு வெளியில் மாப்பிள்ளை பார்ப்பீங்களோ? பாப்பிங்க டா.. பாப்பிங்க! வந்து வச்சிக்கிறேன் உங்கள…" என்று வீர் கொண்டு பேசினார்.
"உன் புள்ள சிங்கம்… பெரிய சிங்கம் தான்! சிங்கம் இன்னும் சிங்கிளா தான் சுத்திக்கிட்டு இருக்கு அது மிங்களாகவே மாட்டேங்குது! நீ இப்ப அதுக்கு ஒன்னுக்கு ரெண்டு கோர்த்து விட பார்க்கிற… இப்படியே பண்ணிட்டு இருந்த.. அடுத்து மாமா சொல்லாம கொள்ளாம வேற ஊருக்கு ஓடிப்போய்டுவாரு.. இல்ல வேற யாராவது ஒருத்தியை இழுத்துகிட்டு வர போறாரு பாரு! நீ வாயிலும் கையில் அடிச்சிட்டு ஐயோ அம்மானு பொலம்ப போற.." என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போது வாசலில் ஜாவா பைக்கின் சத்தம் கேட்க "மாமா வந்துட்டாரு ஃபோன மாமா கிட்ட கொடுக்கவா கிழவி.." என்றான் நக்கலாக..
"அடியாத்தி!! இப்ப கொடுத்து என்னை அவன் கடிச்சி திங்கவா? ஏற்கனவே அவன் பசியில வந்திருப்பான். இந்த விஷயத்தை சொன்னா.. வார்த்தையிலே என்னை கடிச்சு துப்பிடுவான். நீ வை ராசா! உனக்கு புண்ணியமா போகும்" என்றவர் முதலில் ஃபோனை வைத்து விட்டார் அல்லி மலர்.
போனை வைத்துவிட்டு அவருக்கு ஒரே யோசனை! 'நாம விளையாட்டுக்கு சொன்னதை இந்த புள்ளைங்க இறுக்கி புடிச்சுகிட்டுங்களே.. என்ன செய்றது இப்போ?' ஒரு பக்கம் மகனின் வாழ்க்கை என்றாலும் மறுபக்கம் பேத்திகள் அல்லவா?
பேத்திகளில் யாராவது ஒருத்தி மருமகளாக வந்தால் அவருக்கும் சந்தோசம் தான். ஆனால் அதனால் மற்றொருத்தி மனது கலங்கினால்.. இவருக்கும் கஷ்டம் தானே!! 'இதுக்கு எல்லாத்துக்கும் என்ன வழி பண்ணாரி அம்மா? நீ தான் இதுக்கு ஒரு வழி சொல்லோணும்?' என்று பெருமூச்சு விட்டவாறு அடுத்த வேலையை பார்க்க சென்றார்.
"என்ன டா… இன்னைக்கு கணக்கெல்லாம் கம்ப்யூட்டரில ஏத்திட்டியா? சொச்சம் எதுவும் இருக்கா?" என்றப்படி மாணிக்கவேல் தன் இருக்கையில் அமர.. அவனுக்கு முன்னிருந்த கணினியை உயிர்ப்பித்தவன், மாமனுக்கு அன்றைய கணக்கை எல்லாம் காட்டினான். கூடவே மாணிக்கவேல் சொன்னவற்றையும் காட்டினான்.
பள்ளி அறிவு பெரிதாக இல்லையென்றாலும் பகுத்தறிவு நிறைய உண்டு மாணிக்கத்திற்கு!
அதிலும் இக்கால இளைஞர்கள் போல எல்லாத்துக்கும் ஃபோனை தேடாமல், வாய் கணக்கு மனக்கணக்கு போடும் வித்தகன்!!
என்ன அந்த ஆங்கிலம் தான் அவனிடம் அல்லோலப்படும். எதுக்கு அதை துன்பப்படுத்திக் கொண்டு என போனால் போகுது என்று அதை விட்டு விட்டான்.
நமக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டது! ஆனால் ஆங்கிலத்திற்கு தான் நம்மிடம் இருந்து இன்னும் விடுதலை கிடைக்கவில்லை.. பாவம்!!
"ஏன் டா ஜீவா.. அந்த களஞ்சியம் இன்னும் நாலு மாச வட்டி கட்டல போல…?? அன்னைக்கு அவனுக்கு ஃபோன போட்டு என்னன்னு கேளுன்னு சொன்னேன் தானே?"
"மாமா… அந்த பய போன் நம்பர மாத்திட்டியான் போல.. நம்பரு நாட் ரீச்சபிளுனு வருது!" என்று தலையை சொரிந்தான்.
மருமகனை பொசுக்கும் பார்வை பார்த்தவன், "இதெல்லாம் சொல்ல மாட்டியா நீ? மத்தத மட்டும் மணிக்கணக்கா வாய் கிழிய பேசு..
அவன் அட்ரஸீக்கு போய் ஒரு எட்டு பார்த்திட்டு வா.. சொளையா அஞ்சு லட்சம் வாங்கியிருக்கான்! வட்டியே நாலு மசாத்துக்கு அறுபாதாயிரம் நிக்குது! இப்படி போனா நம்ப பொழப்பு சிரிப்பா சிரிக்கும்!" என்று ஜீவனை அப்போதே நரிமேட்டில் இருக்கும் அவனை பார்க்க அனுப்பினான்.
"பாண்டி கோவிலுக்கு ஒரு முறை போய்ட்டு வரணும்! நேரமே சரியில்ல.." என்று மாணிக்கம் யோசித்துக் கொண்டிருக்கும் போதே… அவன் கடைக்கு அருகில் மளிகை கடை வைத்திருக்கும் கருப்பண்ணன் வந்தார்.
"வாங்க அண்ணாச்சி…" என்று எழுந்து நின்று அழைத்தான்.
"வாங்க.. வாங்க கடன்தேன் பெருகுது வேலு..." என்று சிரித்தபடி அமர்ந்தார்.
எப்போதும் அவரை சோகமாகவோ கவலையோடவோ அவன் பார்த்தே இல்லை. எந்நேரமும் முகத்தில் இருக்கும் புன்னகை மற்றவரையும் சேர்த்து சிரிக்க வைக்கும்.
"சொல்லுங் அண்ணாச்சி…" என்றதும், "இந்த மாச வட்டி பணம் அப்பு!" என்று நான்காயிரத்தை எடுத்துக் கொடுத்தார்.
கார்ப்பரேட் கம்பெனிகளின் கடும் முன்னேற்றத்தால் ஊரெங்கும் டிபார்ட்மெண்ட் கடைகள் பெருக… நம் அண்ணாச்சி மாதிரியான சிறுசிறு மளிகை கடைகளோ அவர்களோடு எதிர்க்க முடியாமல் தள்ளாடின வியாபாரத்தில்!!
அதனால் பாதிக்கப்பட்டவர்களில் கருப்பண்ணனும் ஒருவர். தட்டுத்தடுமாறி வியாபாரம் நஷ்டத்தில் செல்ல.. என்ன செய்வது என்று தெரியாமல் கடையை விற்று விடலாம் என்று முடிவுக்கு வந்தவர், கடையை வாங்கிக் கொள்கிறாயா என்று மாணிக்கவேலை தான் அணுகினார்.
அவன் மதுரை வந்து இவ்விடத்தில் தொழில் தொடங்கிய போது… அதிகம் அவர் கடையில் தான் இருப்பான். அங்குள்ள ஆட்கள் பற்றி அவர்களின் குணாதிசயங்கள் பற்றி இவனுக்கு நிறைய சொல்லிக் கொடுத்தவர், அங்குள்ள வியாபாரிகள் புதியவன் தானே என்று அசால்ட்டா பேசி பணத்தை கறக்கலாம் என்று அவனை நெருங்கும் போதெல்லாம், கருப்பண்ணன் கண் ஜாடையிலே அனைத்தையும் புரிய வைப்பார்.
ஆனால் அதற்கு எந்த கைமாறும் அவர் எதிர்பார்த்ததில்லை!! இவன் நன்றி சொன்னாலும் "இதெல்லாம் என்ன பெருசா? மனுசனுக்கு மனுஷன் செய்ற சிறு உதவி தேன்" என்று பெருந்தன்மையாக சொல்லுவார்.
ஆனால் அவனின் அந்த நன்றியை திரும்பக் காட்ட நேரம் வந்தது. அவரது தொழில் நலுங்கி நஷ்டமாகி கடையை விற்கும் நிலையில் இவனிடம் வந்து.. "இந்த கடையும் சேர்த்து எடுத்து வியாபாரத்தை பெருக்கு வேலு" என்று சற்று வருத்தம் கலந்த குரலில் கூற.. அவரை அமர வைத்து "என்னாச்சுங்க அண்ணாச்சி?" என்று மரியாதையாக இவன் கேட்க.. அனைத்தையும் சொல்லி முடித்தவர் முகத்தில் அத்தனை துக்கம்!!
இத்தனை நாள் தொழில் செய்த இடத்தில் கலந்து பழகிய மனுஷங்களிடம் இருந்து பிரிந்து போக வேண்டி இருக்கிறதே என்று!! ஆனால் அனைத்தையும் இவன் சரி செய்தான்.
அதுவரை வெறும் நகை அடகு பிடித்தல் மட்டுமே செய்து வந்தவன் அவ்வப்போது சிறு சிறு வியாபாரிகளுக்கு ஒரு லட்சத்துக்குள் வட்டிக்கு கொடுத்து வந்திருந்தான். இன்று முழுதாக மூன்று லட்சத்தை தூக்கி அவரிடம் நீட்ட.. அயர்ந்து தான் போனார் அவனது அன்பை கண்டு!! ஆனாலும் பெரும் தயக்கம் குடிக் கொண்டது அவருள்!! அதை தகர்த்தவன் தானே அவருக்கு சில வழிமுறைகள் கூறி..
ஃப்ரீ டோல் டெலிவரி வசதி… சிறுசிறு கடைகளுக்கு மொத்த சப்ளை என்று இவனிடம் வாடிக்கையாளராக உள்ளவர்களை அண்ணாச்சிக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு வாடிக்கையாளராக்க.. கூடவே கடையின் அமைப்பையும் சற்று மாற்ற…
புதியதோர் விடியல் கருப்பண்ணனுக்கு!! கடையில் மட்டுமல்ல அதன் வளர்ச்சியிலுமே.. "முழுதாக பணத்தை கொடுக்க முடியாது அவ்வப்போது கொடுத்து அடைத்து விடுகிறேன்" என்று கூறியவருக்கு சரி என்றவன் அது போலவே வாங்கிக் கொண்டான்.
மாதாமாதம் அவரால் முடியும் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கும்போது அதில் வட்டியை எடுத்துக் கொண்டு மீதியை அசலுக்கு சேர்த்து விடுவான். இவரிடம் மட்டுமல்ல சிறு வியாபாரிகளிடமும் அதுபோலத்தான். அதனால் வட்டியோடு சேர்ந்து முதலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வர.. அவனின் இந்த வியாபார தந்திரம் அவனுக்கு நல்ல பெயரையும் கூடவே நிறைய வாடிக்கையையும் பெற்று தந்தது!! ஆனாலும் மதுரை மண்ணுக்கு தகுந்த மாதிரி சில பேரிடம் வாய் பேசும் முன் அவனது கை நீண்டு விடும்!!
அதிலும் இந்த தொழிலுக்கு அப்படி இருந்தால் மட்டுமே தான் அவனும் பிழைக்க முடியும் அல்லவா? பாவம் பார்த்தால் இவன் பாவமாகி போய்விடுவான்!!
"இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு இருக்க போற வேலு.. சீக்கிரம் ஒரு கல்யாணம் கட்டிக்கிறது தானே?" என்றதும் வழக்கமான அவன் மென் புன்னகையில் "மத்ததெல்லாம் நல்லா பேசு! இந்த கல்யாணத்தை பத்தி பேசினா மட்டும் வாயை திறக்க மாட்டியே.. சரி சரி நான் கிளம்புறேன்" என்று அவர் கடைக்கு சென்று விட..
கல்யாணம் என்றதுமே அவன் கண் முன் தோன்றினாள் அவனது கண்ணு! ஆனாலும் அது தவறு அவள் இன்று இன்னொருத்தரின் மனைவி! அவளை நினைப்பதுவே பாவம்! என்று தலையை உலுக்கி கொண்டவன், கல்யாணம் என்று வார்த்தைக்கு தடா போட்டு விட்டான்.
இரவு வெகு நேரமாகியும் ஜீவனை காணாமல் இரண்டு மூன்று முறை அவனுக்கு அழைத்தான். அழைப்பு எடுக்கப்படாமல் போகவே.. சிறு பயம் வேறு!! சிறுப்பையன் வேறு.. ஏட்டிக்கு போட்டி பேசுவான் தனியாக அந்த களஞ்சியத்திடம் அனுப்பி வைத்து விட்டோமே? என்று சிறு பயம் அவனுள்!!
நேரமாக ஆக ஆக.. அந்த பயம் பிரவாகம் எடுக்க.. இதற்கு மேல் தாங்காது என்று இப்படி கட்டப்பஞ்சாயத்து என்று சில நேரம் நடக்கும் போதெல்லாம் அதற்கென்று இருக்கும் சண்முகத்திடம் தான் செல்லுவான்.
சண்முகம் அந்த ஏரியாவில் இருக்கும் சிறு ரவுடி போல.. யாருக்காவது ஆட்கள் இது மாதிரி பாதுகாப்பிற்கோ இல்லை மிரட்டலுக்கோ தேவைப்பட்டால் காரை வாடகைக்கு விடுவது போல ஆட்களையும் வாடகை விடுவான்! அதில் கூட நிறைய பேக்கேஜ் வைத்திருக்கிறான். வெறும் மிரட்டலுக்கு இவ்வளவு.. பாதுகாப்புக்கு என்றால் இவ்வளவு.. இல்லை இரண்டையும் செய்ய வேண்டும் என்றால் அதற்கு இவ்வளவு என்று!!
அல்லிமலர் சொல்வது போல அவர் மகனின் பவுசுக்கு உம் என்றால் கருமத்தப்பட்டியில் இருந்து ஒரு லாரியே இறங்கும். ஆனால் அது அவனுக்கு தேவையில்லை!! வெகு சில சொற்பமான சமயங்களில் மட்டும் தான் இவ்வாறு சண்முகத்தின் ஆட்களை அழைத்துக் கொள்வான். இன்றும் அதுபோல அழைத்துக் கொள்ளலாம் என்று இவன் வெளியில் கிளம்பிய வேலை வந்து சேர்ந்தான் ஜீவன்!!
"ஏன் டா.. நேரம் ஆச்சுன்னா சொல்லித் தொலைய மாட்டியா? இப்படித்தான் வந்து சேருவியா? நான் பயந்தது எனக்கு தானே தெரியும்!" என்றான் கோபத்தோடு மாணிக்கவேல்.
"என்ன மாமா இப்படி பொசுக்குனு மாறிட்ட ஒரே ராத்திரில.." என்று சிரித்துக் கொண்டே வந்தவன் "முதலில் சோத்த போடு மாமா! அப்புறம் மத்ததை பார்க்கலாம்" என்றதும், எப்படியும் இன்று அவனுக்கு வேலை அதிகம் என்று அவனுக்கு பிடித்த வாழை இலை பரோட்டாவை வாங்கி வைத்திருந்தான் மாணிக்கவேல்.
அவசரமாக கை, கால் கழுவிய ஜீவன் அதை பார்த்ததும் "மாமான்னா மாமா தான்!" என்று மாணிக்கத்தின் கன்னம் கிள்ளிக் கொஞ்ச..
"சீ.. விடு டா!" என்று தட்டி விட்டான் மாணிக்கம். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முதலில் வயிற்றை நிறைத்தான் ஜீவன்.
வயிறார சாப்பிட்டு முடித்தவன் ஆசுவாசமாக மாமனுக்கு எதிரில் அமர்ந்து "அந்த களஞ்சிய பய மாமா இங்கேயே இல்லை. பக்கத்துல சோழவந்தான்ல அவன் மாமா இருக்காராம். அங்க ஏதோ பிரச்சனைன்னு அங்க போயிருக்கியான். என்ன பிரச்சனைனா…" என்று அவன் விசாரித்ததை எல்லாம் கூறி முடிக்க…
கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கவேல் முகத்திலிருந்து எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை "சரி நீ போய் தூங்கு" என்றான்.
மறுநாள் சோழவந்தானை நோக்கி தனது ஜாவாவில் மாணிக்கவேல் சென்று கொண்டிருக்க.. எதிரே மணப்பெண் கோலத்தில் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தாள் அழகிய மாது.
அதுவோ சற்று குறுக்கு வழி. திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு ஓடி வந்தவளோ எதிரே வந்த மாணிக்கவேல் பைக்கில் மோதி கீழே விழப் போக… வலது கையால் அவளை கையை இறுக்கிப்பிடித்து விழாமல் தடுத்தான் மாணிக்கவேல்.
"கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா உனக்கு? இப்படி வந்து விழுற? ஏதோ நான் கொஞ்சம் மெதுவா வந்ததினால ஆச்சு! இதே வேகமா வந்து இருந்தா.. கீழ விழுந்து மண்ட பொலந்து இருக்கும்" என்று இவன் கடுப்போடு சொல்ல…
அதற்குள் இவளை துரத்திக் கொண்டு வந்த கும்பல்.. இவர்களுக்கு இரண்டு பக்கமும் நின்றது.
"மாட்னியா நீ! இனிமே தப்பிக்கவே முடியாது!! ஒழுங்கா வந்து மணவறையில உட்காரு" என்று கருத்த தேகம் கொண்டவன் அவளை பிடிக்க வர.. அதற்குள் மற்றொரு கும்பலில் இருந்து "அதை நீ சொல்லாதப்பு.. எங்க மாப்பிள்ளை அங்கன வெயிட்டிங்! அவர் கூட தான் இந்த பொண்ணுக்கு கல்யாணம்" என்று அவர்கள் பேச… அதற்கு பதில் இவர்கள் பேச.. என்று இரு கும்பலும் சண்டை போட்டுக் கொண்டிருந்தது
"சார்.. பாத்தீங்களா சார்.. இந்த காலத்திலேயும் எப்படி காட்டு மிரட்டித்தனமா இருக்காய்ங்கன்னு? இவிய்ங்க கிட்ட இருந்து என்னைய எப்படியாவது காப்பாத்துங்க சார்! மதுரையில் கொண்டு போய் விட்டா கூட போதும்.. அங்கிருந்து வேற ஊருக்கு நான் தப்பிச்சு போயிடுவேன்! தயவுசெய்து ஹெல்ப் பண்ணுங்க சார்.." என்றாள் அந்த பெண்!
அவன் பிடித்து இருந்த அவளது கையையும் அவளையும் ஏற இறங்க பார்த்தான் மாணிக்கவேல்!
பின் முன்னும் பின்னும் அந்த ஆட்களை பார்த்தவன், அவளது கையை இழுத்து நெருங்கியவளை ஒற்றை கையால் தூக்கி முன்னால் வண்டியில் அமர வைத்தவன் இரண்டு கும்பலும் சண்டை போட்டு இருக்கும் கேப்பில் பறந்து விட்டான்.
சிறிது தூரம் சென்றதும் "அப்பாடி தப்பிச்சாச்சு..!" என்ற பெருமூச்சு விட்டவள், "ரொம்ப நன்றிங்க சார்.. அவிய்ங்க கிட்ட இருந்து காப்பாத்தி விட்டுடீங்க…" என்றாள் மனமார!
"எது.. அவங்க கிட்ட இருந்து உன்னை காப்பாதினேனு நினைச்சியா?ஹா
.. ஹா.. இப்ப நான் தான் உன்ன கடத்திட்டு போறது!" என்றான் இடது கையால் மீசைய முறுக்கி.. ஜாவாவில் இன்னும் வேகத்தை ஏற்றியபடி….
