22
இன்று..!!
“அப்போ உங்க புருஷன் தான் உங்களை வன்புணர்வு செஞ்சு அதன் மூலம் இந்த குழந்தை வந்ததுனு நான் எடுத்துக்கலாமா? அப்ப அதுக்குனா ப்ரொசீஜர் நான் செய்யலாமா?” என்று ராவண் கேட்க..
இருவரும் திடுக்கிட்டு அவனை பார்த்தனர்.
“அச்சோ.. இல்ல.. இல்ல டாக்டர். அப்படியெல்லாம் இல்ல” என்று கணவனையும் டாக்டரையும் அவள் மாறி மாறி பார்த்து கூறினாள் வதனி.
“தென்?”
“அவரு.. அப்படில்லாம் இல்ல டாக்டர்” மெல்லிய குரலில் கூறியவள், அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்த விதமே இருவருக்கும் நடந்தது அழகான தாம்பத்தியம் இருவருக்கும் விருப்பப்பட்டு இணைந்து நடந்தது தான் என்பது புரிய இராவண் அவர்களை கூர்ந்து பார்த்தான்.
“ஓகே.. மிஸஸ் மேகவதனி, ரீசன் ஏதும் தெரியாம என்னால் அபார்ட் பண்ண முடியாது. ஐ ஹவ் டு சம்மீட் எ ஃபார்ம் டு கவர்மெண்ட் ரிகார்டிங் யுவர் டிஎன்சி. புரியுதா?” என்றதும் அவள் தலையாட்டினாலும் பதில் கூற முடியாமல் அமைதியாக இருந்தாள்.
“நாளைக்கு உங்களுக்கு டிஎன்சி பண்ணிட்டு. அதனால யூட்ரஸ் ப்ராப்ளம் வந்து யூட்ரஸயே ரிமூவ் பண்ணும் போது ஹெவி ப்ளீடிங் ஆகி.. உங்களுக்கு ஏதாவது நடந்தால்..?? அதுக்கு நான் தான் பொறுப்பு ஆகணும்..!” என்றதும் அதிர்ந்து போன நிரஞ்சன்,
“ப்ளீஸ் டாக்டர் இப்படி பேசாதிங்க.. அவ ஏன் டிஎன்சி பண்ண இவ்வளோ அடமண்ட்டா இருக்கான்னு நானே சொல்றேன்” என்று தன்னை ஒப்புக் கொடுக்க முன் வந்தவன்,
“எல்லாம் என் தப்பு தான் டாக்டர்..! என்னோட அலட்சியம்.. அங்காரம்.. கூட சொல்லலாம் இல்ல இல்ல கண்ண தொறந்தேட்டே கிணத்துல விழுந்துட்டேன்..! நான் வந்து..” என்று அவன் சொல்ல ஆரம்பித்ததும் அவனது கையை இறுக பற்றியவள் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.
அந்தப் பார்வை சொன்னது இதற்கு மேல் ஒரு வார்த்தை நீ பேசினாய் என்றால்.. அவ்வளவுதான்..! என்று அத்தனை சீற்றமாய் அவனை எச்சரிக்க…
அவளது கோபத்தில் மனசுக்குள் குளிர்ந்து போனான் நிரஞ்சன். ஆம் கோபமே என்றாலும் அதில் தென்பட்ட மனைவியின் உரிமையில் சிலுசில்லாக சிதறி இருந்தவனின் மனது சில்லென்று பனிமலையில் நனைந்தது போல குளிர்ச்சி கண்டது. வெகு நாட்களுக்கு பின் மனைவி தன் கைத் தொட்ட அந்த ஸ்பரிசம் அவனை இமயமலை சாரலிலே கொண்டு நிறுத்தியது என்றால் மிகை அல்ல..!!
இப்பொழுது அவள் தன் மீது கொண்டிருக்கும் கோபம் கூட என் தவறினால் தான்..! என் தப்பினால்.. நான் தப்பியதால் தான்..!
ஆனால் அவள் என் மீது கொண்ட காதல் அப்படியே அவள் நெஞ்சத்தில் இருக்கிறது. அதனால் தான் என்னை யாரிடமும் விட்டுக் கொடுக்க அவள் விரும்புவதில்லை என்று அவளின் அகமும் புறமும் புரிந்தவனுக்கு இன்னும் அவள் மீது கொள்ளை கொள்ளையாய் காதலும்.. தான் செய்த தப்பினால் தன் மீது அத்துணை கோபமும் வந்தது.
ராவணோ இருவரையும் ஆழ்ந்து பார்த்தவன் “சோ உங்க ஹஸ்பண்ட் சொல்ல வர ரீசனே நீங்க சொல்ல விரும்பல..! இட்ஸ் ஓகே அது உங்க பெர்சனல்.. அப்போ என்னோட பைனல் டெசிஷன் இதுதான். இந்த குழந்தைய அபார்ட் பண்றது உங்க ஹெல்துக்கு ரொம்ப ரிஸ்க்..! ஆனா.. அதையும் தாண்டி நான் டிஎன்சி பண்ணனும்னா எனக்கு வேலிட் ரீசன் வேணும். அந்த வேலீட் ரீசன் எதுவும் உங்ககிட்டே இல்ல..! சோ என்னால இந்த கேஸ எடுக்க முடியாது. நீங்க இந்த குழந்தையை பெத்து தான் ஆகணும். இல்ல வேற எங்கேயாவது நீங்க போய் பண்ணாலும் யுவர் விஷ்..!” என்றதும் இருவரும் யோசனையாய் அவனை பார்க்க..
“பட்.. அதனால வர எந்த சைடு எபக்ட்ஸ்க்கும் நானோ சாருபாலா மேடமோ பொறுப்பேற்க மாட்டோம். அதை நான் கிளியரா எழுதி கொடுத்திடுவேன்” என்றவன் சொன்னதை அப்படியே எழுதி தர விதிர் விதிர்த்துப் போன நிரஞ்சன்
“ப்ளீஸ்.. ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுக்குறீங்களா டாக்டர்? நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்” என்று கெஞ்சினான்.
தன் கைக்கடிகாரத்தை திரும்பி பார்க்க.. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
‘இந்த ராட்சசி இப்ப ஃபோன் பண்ணுவாளே?’ என்று ராவண் நினைத்து முடிக்கும் முன் அவன் செல் சத்தமிட..
மெல்லிய புன்னகையோடு ஃபோனை எடுத்து காதில் வைக்க முன் “மணி இப்போ மூணு..!!” என்று அந்த பக்கம் அதிகாரமான ஒரு குரல் கேட்டது..!
அதை அனுபவித்து சிரித்தவன் “ஓ பேபி.. லாஸ்ட் ஓபில தான் இருக்கேன். இப்போ வந்துருவேன் வந்துருவேன்.. ஜஸ்ட் 5 மினிட்ஸ முடிச்சிடும். அடுத்து ஹாஃப் அன் ஹவர்ல் உன் முன்னாடி நான் இருப்பேன்” என்று அவன் பேச தகைந்து பேச..
எங்களிடம் ஆளுமையாக பேசிய மருத்துவ நாயகனா இவன்? என்பது போல வியந்து பார்த்தான் நிரஞ்சன்.
“ஓகே கய்ஸ்..! பத்து நிமிஷம் இல்ல ஒரு நாள் எடுத்துக்கோங்க.. உங்களுக்காக ஸ்பெஷல் அப்பாயின்மென்ட் நாளைக்கு தர சொல்றேன். நாளைக்கு வந்து உங்க முடிவு சொல்லுங்க.. இதுக்கு மேல கூட என்னால தாங்க முடியாது. என் பாஸ் அங்க வெயிட்டிங்..!” என்று சிரித்தவன் எழுந்து கொள்ள இவர்களும் வேறு வழியின்றி எழுந்தனர்.
இருவரும் எழுந்து வெளியே செல்ல முயல.. “ஒரு நிமிஷம்..!” என்று நிறுத்தினான்.
இருவரும் திரும்பி பார்க்க “தவறு செய்வது மனிதனுடைய இயல்பு அதே தவறை மன்னிக்கிறதும் மனிதனோட இயல்புதான்..!” என்றான் மென்மையான குரலில்..!
“ஏதோ ஒரு விதத்துல.. ஒரு கணத்துல.. நம்மளோட இணை மேல உள்ள ஒரு தவறான கணிப்புனாலையோ இல்ல அவங்க தப்பே செய்யலனாலும் நாம கோபப்படுவோம்..! அவங்கள தள்ளி வைப்போம்..! ஆனால் அவங்களே இந்த உலகத்துல இல்லை என்கிற நிலை வரும்போது..?? கொஞ்சம் நாம மனசு இரங்கி இருக்கலாமோ? நாம அவங்கள மன்னிச்சி இருக்கலாமோ? அப்ப நம்ம மனசு அடிச்சுக்கும் இல்லையா? காலம் கடந்து இந்த யோசனை கூட உங்களுக்கு வரலாம் இல்லையா?” என்றதும் நிரஞ்சனும் வதனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அதனால ரெண்டு பேருமே கொஞ்சம் யோசிங்க.. உங்களுக்காக இல்ல ஏற்கனவே உள்ள உங்க குழந்தைக்காகவும்.. இப்போ வரப்போகிற இன்னொரு குழந்தைக்காகவும் மனசு விட்டு பேசுங்க” என்றான்.
மேகவதனி அவனின் பேச்சில் விருப்பமின்மையை காட்டி அமைதியாக இருந்தாள்.
“உங்க மைண்ட் வாய்ஸ் ஐ கேட்ச் மிஸ்ஸஸ் மேகவதனி..! அட்வைஸ் பண்ண யாராலயும் முடியும்..! ஆனா.. அந்தந்த சூழலில் இருக்குறவங்களுக்கு தான் அதோட வலியும் ரணமும் தெரியுன்னு நீங்க மனசுல நினைக்கிறது எனக்கு புரியுது” என்றவனை ஆச்சரியத்தோடு அதிர்ந்து பார்த்தாள் வதனி.
“நான் ஏன் இதை சொல்றேனா?” என்றவன் ஒரு பெரு மூச்சு விட்டு,
“நானும் இதே மாதிரி ஒரு தவறு இல்லை இல்லை தப்ப தெரிஞ்சே என் மனைவிக்கு செஞ்சவன் தான். அதுக்கப்புறம் நான் அதை உணர்ந்து அவகிட்ட மன்னிப்பு கேட்க.. போராடி.. போராடி.. ஒருவழியா சமாதானம் ஆக்குறதுக்குள்ள உசுரு போய் உசுரு வந்துச்சு..! பட்.. இப்ப நாங்க சந்தோஷமா இருக்கோம்..!” என்றான் நிரஞ்சனை அர்த்தமுள்ள பார்வை பார்த்து..!
பின் மேகவதனியை பார்த்து, “ஒரு சின்ன தப்பு மன்னிக்கிறதுனால எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்னா.. மன்னிக்குறது தப்பில்லையே சிஸ்டர்..! சீ யூ கய்ஸ் இதுக்கு மேல டைம் ஆச்சுன்னா என் பாஸ்.. காளிதேவி ஆயிடுவா..! ஷி இஸ் கேரிங் நௌ” என்றபடி வேக நடையோடு சென்றவனை நிரஞ்சன் ஆச்சரியமாக பார்த்தான்.
மேகவதனியோ ‘எல்லா ஆம்பளைங்களும் ஏதோ ஒரு விதத்துல தப்பு செய்றவங்களா தான் இருக்காங்க..! ஒருத்தன் கூட உருப்படியா இல்ல’ என்று எண்ணினாள். அவள் பட்ட ரணங்களும் வலிகளும் அவளை அவ்வாறுதான் யோசிக்க வைத்தன.
“அப்படி என்ன இவன் தப்பு செய்திருப்பான்?” என்று நிரஞ்சன் யோசிக்க….
“ஹலோ மிஸ்டர் நிரஞ்சன்.. என்ன பத்தி தெரிஞ்சுக்கணும்னா ‘அடங்காத அசுரன் அவன்’ போய் படிங்க..! என்ன ஜியா மேடம் இதெல்லாம் நீங்க சொல்லணும் நான் சொல்ல வேண்டியது இருக்கு என்ன போங்க.. வரவர உங்க பர்ஃபார்மன்ஸ் சரியில்ல” என்று சிரித்தபடி சென்றான் ராவண் திரேந்திரன் மாறவேல்..!
