18
இன்று..!
மதிய அலுவலகத்தில் கேண்டினில் தான் அன்றும் உணவருந்தி கொண்டிருந்தான் நிரஞ்சன்.
மனதெல்லாம் மனைவியே ஆட்கொண்டு இருந்தாள். சாருபாலாவிடம் பேசி வந்ததிலிருந்து ராவண் திரேந்திரன் மாறவேள் பற்றி அவனும் விசாரித்து வைத்திருந்தான். ஆனால் அப்பார்ட்மெண்ட் தான் கிடைக்கவில்லை. இவனும் இரண்டு முறை முயற்சித்து நாளை மறுநாள் தான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தான்.
அதை மனைவிக்கு போன் செய்து சொல்லலாம் என்று இவன் ஃபோன் செய்ய.. ஆனால் அந்த பக்கம் மனைவியோ எடுக்கவே இல்லை..!
வேறு வழியின்றி நேற்று மகளை காணும் பொழுது அருகே தைரியத்தோடு சென்று அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியதைப் பற்றி கூறினான். அவனை வதனி தீப்பார்வை பார்க்க..
“யுவர் விஷ் தான் மேகா. உனக்கு நான் வாங்குனது பிடிக்கலைன்னா நீயே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு எப்பன்னு எனக்கு இன்பார்ம் பண்ணு. எப்பனாலும் எனக்கு ஓகே” என்றவன் அவளை ரசித்துப் பார்த்து கண்ணடித்தான்.
பிரஷர் போல் அழுத்தி விழுங்க துடிக்கும் துயரங்களின் மத்தியில் இது போன்ற கிறுக்குத்தனங்களின் மூலம் தன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாய் போகிறது.
ஆனால் அவளின் பாரா முகம் அவனை வலியுடன் உள்வாங்கி உறவாட விட்டது.. !!
மகளிடம் பேசி விட்டு அவளுக்கு வாங்கி வந்திருந்த திண்பண்டங்களையும் கொடுத்து விட்டே வந்தான்.
அவனுக்கு ஒரு பேராசை..! குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாது. அதே சமயம் மனைவி உடல்நலையும் நன்றாக இருக்க வேண்டும்.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல..
“பாப்போம் வெள்ளிக்கிழமை நமக்கு என்ன வைத்து காத்திருக்கிறது என்று?” பெருமூச்சு விட்டப்படி அந்த உப்பு சப்பில்லா கேண்டின் உணவை அவன் உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான்.
அவன் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஊழியர், சுந்தர்ராஜன் வந்து அமர்ந்தார்.
“என்ன நிரஞ்சன் இன்னைக்கும் கேண்டினில தான் சாப்பாடா?” என்று கேட்டவர் ஏன் எதற்கு என்று தோண்டி துருவலாம் இல்லை.
“என் கூட கொஞ்சம் ஷேர் பண்ணிக்கோங்க” என்றவர் சாப்பாட்டை கொஞ்சம் பகிர்ந்து கொள்ள..
“இல்ல சார் வேணாம்” என்றவனுக்கு பிடிவாதமாக கட்டாயப்படுத்தி கொடுத்தார்.
சிறிது நேரம் கழித்து அவருக்கு ஃபோன் வந்தது. வழக்கம்போல மனைவியிடம் இருந்துதான்.
புன்னகையோடு எடுத்து மிக பொறுமையாக “சொல்லுமா? இல்லமா..! ஆமா மா சாரி மறந்துட மாட்டேன் மா” என்று பேசி வைத்தார்.
மீண்டும் அடுத்த பத்தாவது நிமிடம் ஃபோன் வந்தது. திரும்பவும் அதேபோலத்தான் பேசினார். பொறுமையாக அவர் பேச இங்கு நிரஞ்சனுக்கு ஒரே குறுகுறுப்பு.
“உங்க வொய்ஃப்பா சார்?” என்று கேட்டவனிடம் ஆமாம் என்று சிரித்தார்.
“ஒரே விஷயத்தை இத்தனை தடவ சொல்றிங்களே உங்களுக்கு எரிச்சல் ஆகலையா?” என்று நெடு நாளைய கேள்வியை இன்று கேட்டான்.
மெல்ல உணவை உண்டவர் “சாப்பாடு எப்படி இருக்கிறது நிரஞ்சன்?” என்று கேட்டார்.
“நல்லா இருக்கு சார். மேடம் ஓட கைப்பக்குவம் ரொம்ப ருசியா இருக்கு. நீங்க ரொம்ப லக்கி” என்றான் ஆத்மார்த்தமாக.
“இவ்வளவு அருமையான உணவை நமக்காக பார்த்து பார்த்து செய்றாங்க.. பெத்தவங்கள கூட பொறந்தவங்கள எல்லாம் விட்டுட்டு நம்ம கூட வந்து.. நம்ம நலனுக்காக உழைக்கிறாங்க.. நம்ம சொந்தங்களுக்காக வேலைக்காரியா இருக்காங்க.. நம்ம வாரிசுகள உசுர கொடுத்து பெத்து வளர்க்கறாங்க.. அவங்களுக்கு நம்ம என்ன திருப்பி செஞ்சுட போறோம் சொல்லுங்க?”
“நகை நட்டு புடவைனு உணர்வும் உயிரும் இல்லாத பொருட்களை மட்டும் தான் பரிசா குடுக்குறோம். அதை எல்லாம் விட்டுட்டு இப்படி அன்பா அனுசரணையா இரண்டு வார்த்தை பேசுங்க.. அதுவே அவங்களுக்கு போதும். அதுவுமில்லாமல் என் மனைவிக்கு கொஞ்சம் வயசானதால இப்பெல்லாம் ஞாபகம் மறதி அதிகம். அதனால அவ சொன்னத அவளே மறந்துட்டு திரும்ப ரெண்டு மூணு தடவ ஃபோன் பண்ணுவா” என்று அவர் புன்னைக்க..
“இப்படியும் மனுசனா?” என்று ஆச்சரியமாக அவரைப் பார்த்தான் நிரஞ்சன்.
“நீங்களும் உங்க வொய்ஃப் கிட்ட இதே ஃபாலோ பண்ணுங்க.. லைஃப் எப்பவும் சொர்க்கம் தான்..!” என்றவர் அவன் முதுகில் தட்டி செல்ல..
அவன் 8 வருட குடும்ப வாழ்வில் புரியாததை 8 நிமிட பேச்சில் புரிய வைத்தவரை வியப்போடு பார்த்திருந்தான் நிரஞ்சன்.
அன்று அவரைப் பார்த்து கேலியாக சிரித்தான். இன்று அனைத்தும் மாறியது..!
“இவர் அளவுக்கு நாம் நம் மனைவியை காதலிப்போமா? அவளை புரிந்து கொண்டு புரிதலோடு நடப்போமா? அன்பு காட்டுவோமா? வயது முதிர்ந்து தருணத்தில் இவர்களைப் போல இருப்போமா?” என்று அவன் உள்ளம் ஏங்கியது.
ஏங்கியது அனைத்தும் கிடைக்கப் பெற்றால் கடவுள் ஏது? விதி ஏது?
ஆனால்.. கிடைக்கப்பெற்றதை ஏக்கமின்றி ஏற்றுக்கொண்டு புரிதலோடு வாழ பழகிக் கொண்டால் அனைத்தும் நம் வசமே..!!
வாழ்வியலும் வசந்தமே..!!
தொடரும்..
