Share:
Notifications
Clear all

மோகங்களில்.. 1

 

(@jiyajanavi)
Member Admin
Joined: 1 week ago
Messages: 17
Thread starter  
 
மோகங்களில் 1
 
சூரியன் உதிப்பதற்கு முன் மற்றும் சூரியன் மறைவதற்கு முன் உள்ள குறிப்பிட காலம் 'சந்தியா காலம்' ஆகும்.
 
பகலவன் புவிவிளிம்பிற்கும் வானத்திற்கும் இடையே உள்ள சந்தில் எழுவது போல அல்லது மறைவது போலத் தோற்றமளிக்கும் நிலை, பகலவனது ‘சந்து புகும்’ நிலையாகக் கருதப்பட்டு ‘சந்தி’ எனத் தமிழர் அழைத்தனர். இதனை, வடவர் தாங்கள் தான் கண்டுபிடித்தாற் போல இருக்கட்டும் என்னும் பேராசை கொண்டு ‘சந்தியா’ என நீட்டி முழக்கினர்!
 
"சந்தியா கால வேளை" மிக விஷேசமான ஒன்றாக நம் தமிழர் வாழ்வில் ஒன்றியுள்ளது… 
 
சாலையோரத்தில் நின்றிருந்தாள் அவள்! தூரத்தில் தெரிந்தது பகவதி அம்மன் கோவில்!! 
 
அங்கே பக்திமயமாக ஏதோ அம்மன் பாடலை உருகி பாடிக் கொண்டிருந்தார் வளர்ந்து வரும் பாடகி!
 
கோவில் மணி ஓசைகளும்… மக்களின் சிறு சிறு சலசலப்பும்.. அதைத் தாண்டிய மந்திர உச்சாடனங்களும்.. 
சாம்பிராணி புகையும்..
நெய் தீபங்களின் மணமும்..
அங்கே ஒரு தெய்வீகத் தன்மையை பரப்பி மனதை நிறைத்துக் கொண்டிருந்தது.
 
அதுவரை எங்கோ வெறித்தபடி நின்றிருந்தவளின் கால்கள் மெல்ல அந்த கோவிலில் நோக்கி தானாகவே சென்றன..
 
மனதில் பெரும் கவலையும் பயமும் சூழ்ந்து இருக்க.. அந்த நேரத்தில் கோவிலின் இந்த தெய்வீக அமைதி அவளுக்கு தேவைப்பட்டது!! 
 
முக்கியமாக.. அதுவும் நிதானமாக அவள் யோசிக்க வேண்டும். அவள் மாட்டிக் கொண்டிருந்த இக்கட்டான நிலைமையில் இருந்து வெளிவர வேண்டும்.
 
எங்கனம்? எவ்வாறு? என்ன செய்வது? என்று ஆலோசனை கேட்க கூட யாரும் இல்லை! 
ஓரிடம் அமர்ந்து யோசிப்பதற்கு ஒரு அடி இடமும் இல்லை!!
 
அவளின் மனத் தைரியம் மட்டுமே இத்தனை வருடங்களாய் அவளின் தன்னம்பிக்கை!
 
நிற்கதியாய் நடுத்தெருவில் விடப்பட்டிருந்தாள் வயிற்றில் ஆறு மாத கருவோடு… இத்தனைக்கும் வயது 21 அவளுக்கு!!
 
அவள் அனுப்ரியா! 
துலக்கி வைத்து வெண்கல விளக்கு போன்ற பொன் மஞ்சள் தேகமும்… கருவண்டு கண்களும்.. 
கூர் மூக்கும்… அழகிய செவ்விதழ்களும்…. இளமையில் மிளிரும் அங்கய லாவண்யங்களும் பார்க்கும் அனைவரையும் திரும்பி நின்று மூச்சு முட்ட பார்க்க வைக்கும் பேரழகி தான்!!
 
அவளின் அந்த அழகு இன்றைய‌ நிலைக்கு காரணம் என்றாலும்.. அவளின் சம்மதம் இல்லாமல் இல்லை!
 
அனுவின் அந்த கருவண்டு கண்கள் இப்போது கலங்கியிருக்க.. கூர் மூக்கு அழுகையில் விடைத்துக் கொண்டிருந்தன… செழுமையான கனிந்த கன்னங்கள் கோபத்தில் சிவந்திருந்தன… ஆறு மாத சூல் தாங்கிய வயிறு 8 மாதம் போல காட்சி அளிக்க.. நடக்க முடியாமல் நடந்து வந்தவளின் மார்புகள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கின…
 
நிலையிலிருந்து இவ்வளவு தூரத்துக்கு மூச்சு வாங்குமா என்ன? இல்லை தான்!! சில நாட்களாக சுகபோக வாழ்க்கையில் மறந்து விட்டுயிருந்த நடை பழக்கமும் சூல் தாங்கிய வயிற்றின் பசியும் அடுத்த என்ன என்ற தெரியாத நிலையும் தான் அவளுக்கு சோர்வை தந்திருந்தன..!!
 
இதுவே முன்பிருந்த அனு என்றால்…நீ இவ்வளவு தூரம் நடந்ததற்கு மூச்சு வாங்குவார் என்று யாராவது சொல்லியிருந்தால்,  
 
சிரித்து கேலி செய்து ஒரு வழியாக்கியிருப்பாள். ஆனால் இன்று மெயின் ரோட்டில் இருந்து இந்த கோயிலுக்குள் வருவதற்குள்ளேயே அவருக்கு வியர்த்து வழிந்து இருந்தது. கூடவே இத்தனை மாதங்களாக சுகமான வாழ்க்கை அவளை சற்று சோம்பேறியாகவும் ஆக்கியிருந்தது!!
 
ஆனால் எதையும் கண்டுகொள்ளும் நோக்கில் அவள் இல்லை!!
 
கருவறை நோக்கி அவரது கால்கள் மெதுவாக அழுத்தமாக நடக்க.. 
 
அங்கே சாந்த சொரூபியாக.. அலங்கார பூஜிதையாக.. அகிலத்தையாளும் அகிலாண்டேஸ்வரி பகவதியாக வீற்றிருக்க…
 
அந்த அம்மனின் முன் நின்றவளின் கண்களில் அத்தனை குற்றச்சாட்டு! அத்தனை வேதனை! அத்தனை குழப்பம்!!
 
'இந்த இக்கட்டில் இருந்து எப்படியாவது காத்து விடேன்!' என்று இறைஞ்சல்.. கெஞ்சல்..
 
தன் தாயிடம் சண்டை போடும் சிறு குழந்தையின் முகபாவனையும் மனநிலையும் தான் அப்பொழுது அனுவிடம்.
 
உலகை ஆளும் ஜெகன்மாதா அவள்! அவளுக்கு அனைவரும் பிள்ளைகள் தானே…
 
'அப்படி என்றால் யாருமற்ற எனக்கு நீ தானே எல்லாமே! இப்படி நீயே என்னை இக்கட்டில் வந்து நிறுத்தி விடலாமா?' என்று அந்த கூட்டத்தில் யாரும் மேடிட்ட வயிற்றை இடித்து வைத்துவிடாமல் இரு கைகள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்களால் இறைஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த இறைவியிடம்!!
 
மெல்ல மெல்ல அவள் பாதம் அந்த அன்னையை நோக்கி செல்ல…
 
"அம்மா.. அம்மா.. நில்லுமா.. இந்த பக்கம் இல்லை! இலவச தரிசனம் அந்த பக்கம் போகணும்.. போ மா" என்று காட்டினான் அந்த கோவில் பணியாளன்.
 
அங்கையோ பெரும் கூட்டம் வரிசையில் நின்றிருந்தது. 'இவ்வளவு தூரத்தை தாண்டி தான் உன்னை பார்க்க முடியுமா?' என்று மனதில் சிறு ஏக்கம். 
 
சூல் தாங்கி இருந்தாலும் அவளும் சின்ன பெண் தானே? 
 
அப்பொழுது யாரோ ஒரு பெண்மணி வர "அம்மா.. கொஞ்சம் தள்ளி நில்லுமா!" என்று அந்த கோவிலின் பணியாளர் கூற..
 
இவள் சற்று ஒதுங்கி நின்றாள். முன்னால் பேரிளம் பெண் ஒருத்தி செல்ல.. அவள் பின்னே இரண்டு பெண்கள் தாம்பாளத்தில் அம்மனுக்கு சாற்ற வேண்டிய புடவை மாலை பழங்களோடு சென்றனர். அதற்குப்பின் இரண்டு பாடிகார்ட்ஸ் போன்ற தோற்றமளித்த இருவர் செல்ல…
 
"இங்கேயும் பணத்திற்கு தான் முதல் மதிப்பு!" என்று மனம் கசந்து போக.. தள்ளி நின்று அம்மனை தரிசித்து விட்டு மெல்ல கீழே விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவள், ஓரமாக அந்த சன்னதியில் தாழ்வாரப் பகுதியில் தூணில் சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.
 
பசி வேறு வயிற்றை கிள்ள ஆரம்பிக்க.. வயிற்றை வருடியபடி அமர்ந்திருந்தாள் ஆற்றாமையோடு தன் மேடிட்ட வயிற்றை பார்த்து "என்னிடம் உன் பசிக்கு உணவு இல்லையே? என்ன செய்வேன்?" என்று உதடு துடிக்க கண்களில் நீர் திரள கேட்டாள்.
 
உலகின் பசியை போக்கியருளும் அன்னபூரணி.. கருவை தாங்கி இருக்கும் இந்த சிறு மகளின் பசியை பொறுப்பாளா? கண்ணீரை தான் தாங்குவாளா?
 
அவள் முன்னே பிரசாத தட்டு ஒன்று நீட்டப்பட்டது. இவள் கேள்வியை பார்க்க… சிரித்த முகமாக சற்று முன் அவள் பார்த்த அதே பணக்கார பெண்மணி.
 
"இன்னைக்கு என் பையனுக்கு பிறந்தநாள் மா.. அன்னத்தானம் செய்ய வந்தேன். உன்னால வந்து வாங்கிக்க முடியாது இல்லையா? அதனால தான் நானே தேடி வந்து கொடுத்தேன். சாப்பிடுமா முகத்தை பார்த்தாலே களைப்பா தெரியுது!" என்று அன்புடன் பேச அவரை ஆச்சரியமாக பார்த்த வண்ணமே அவர் கொடுத்த தட்டை வாங்கினாள்.
 
'பணக்காரர்களில் சில நல்லவர்களும் இருக்கிறார்களோ? இல்லை.. இல்லை.. பிள்ளைதாச்சி என்பதால் தன்னிடம் இத்தனை கனிவாக நடக்கிறார்கள் போல.. எதுவோ ஒன்று!! பசி என்ற உடனே தனக்கு உணவை தந்து விட்டாள் என் அன்னை!' என்று மனதார நன்றி கூறி சாப்பிட ஆரம்பித்தாள்.
 
பசியும் கலக்கமும் அவள் மூளையை மறத்து விட்டிருந்தது. இப்பொழுது பசியாறிய பின் சற்று தெம்பாக உணர்ந்தவளின் மூளை மிக வேகமாக செயல்பட… கண்ணை மூடி சிறிது நேரம் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டாள்.
 
அப்போது அவள் அருகே நிழலாட நிமிர்ந்து பார்த்தாள் அனு. அதே பெண்மணி தான்! அவளிடம் ஒரு கவரில் அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்த பழங்கள் கொடுத்தார். 
 
தான் இருக்கும் நிலையில் அடுத்த உணவு எப்போது என்று தெரியாது. அதனை மறுக்காமல் புன் சிரிப்போடு இவள் வாங்கிக் கொள்ள "தனியாக வந்து இருக்கியா? யாரும் உன் கூட வரலையா?" என்று அவர் அவளை சுற்றி பார்த்து கேட்க..
 
'தன் கதை இவருக்கு எதற்கு?' என்று நினைத்தவள் "இல்லம்மா வீடு பக்கம்தான். எப்போதும் வழக்கமாக வர கோவில்தான். ஒன்றும் பயமில்லை" என்று அவள் புன்னகை புரிய..
 
"அழகா இருக்கேடா! அதுவும் இந்த மாதிரி நேரத்துல பெண்களின் அழகு இன்னும் அபரிமிதமாக இருக்கும்னு சொல்வாங்க… உன் விஷயத்தில் உண்மை தான்! மாசமா இருக்கும்போது பொண்ணுங்க அழகு கூடின பெண் பிள்ளை பிறக்கும்னு சொல்லுவாங்க.. ஆனா எனக்கு தான் அந்த கொடுப்பினையே இல்லை! பெண் பிள்ளை என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். ஆனா ஒரு பையன் மட்டும்தான்!" ஏதோ அறிந்தவள் போல இவளிடம் தன்னை பற்றி கூறினார் அந்த பெண்மணி!
 
அவருக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் சிரித்துக்கொண்டாள் மாயா.
 
"அந்த ஆண்டவன் பொண்ணு தான் குடுக்கல.. கூடிய சீக்கிரம் எனக்கு பேத்தியையாவது தரணும் தான் இந்த அம்மன் கிட்ட வேண்டிகிட்டேன். சரிமா.. பாத்து பத்திரமா போ.. என்ன?" என்று அவளிடம் கூறிவிட்டு இவர் தன் வழியே நடந்தார்.
 
செல்லும் அந்த பெண்மணியை பார்த்தாள். வேலைக்கு ஆட்கள் பாதுகாப்புக்கு ஆட்கள் பட்டாடை பகட்டான நகைகள் என்று செல்வவளம் மிக்கவராக தெரிந்தாலும், அவரின் மனதில் இப்படி ஒரு நிறைவேறாத ஆசை போல..
 
'ஆக… ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு பணம் இருந்தாலும் அதை தாண்டி ஏதாவது ஒரு ஆசை நிறைவேறாமல் இருக்கிறது' என்று சிரித்துக் கொண்டவள், மீண்டும் கண்களை மூடி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் வகுத்துக் கொண்டாள்.
 
கையில் ஒரு ரூபாய் பணம் இல்லை. எப்படித்தான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது என்று யோசித்த அவளுக்கு மகளிருக்கான இலவச பஸ் வர சற்று நிம்மதியுடன் அதில் ஏறி.. அவள் செல்ல வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.
 
பிரமாண்டமான அந்த மருத்துவமனை முன்னே பார்க்கும்போது சாதாரணமாக தெரிந்தது. இன்று மிரட்டியது அவளை!
 
"நீ என்ன என்னை மிரட்டுவது?" என்பது போல உள்ளே சென்றவள் எப்பொழுதும் இருக்கும் செவிலியரிடம் "டாக்டர் தாரதியை பார்க்கணும்" என்றாள்.
 
செவிலியர் அறிமுகமான பெண் தான். "இன்னைக்கு உங்களுக்கு டேட் கொடுத்திருக்காங்களா மேடம்? எனக்கு தெரியலையே! சரி வெயிட் பண்ணுங்க பார்ப்போம்.." என்று அந்த செவிலியர் சொல்லி சென்றார்.
 
அதன்படி அப்பாயிண்ட்மெண்ட் செய்திருந்த பேஷண்ட் முடிந்து, அதற்கு பின் இவள் அனுப்பி வைக்கப்பட்டாள்.
 
இவளைப் பார்த்து தாரதிக்கு முதலில் திக் என்று ஆனது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல் "இன்னைக்கு உங்களுக்கு அப்பாயின்மென்ட் இல்லையே?" என்று சாதாரணமாக கேட்டாள். 
 
இவளோ "நா இப்போ அப்பாயின்ட்மெண்டுக்காக வரலைங்கறதும் உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்" என்றாள்.
 
"இந்த அப்பாயிண்ட்மெண்ட் வேலையெல்லாம் என்னோடது கிடையாது. என்னோட அசிஸ்டன்ட் தான் பாத்துக்குவாங்க" என்றாள் வரவழைக்கப்பட்ட அலட்சியத்துடன்..
 
"டாக்டர்.. நான் சுத்தி வளச்சு பேச விரும்பல.. நான் இங்க எதுக்கு வந்திருக்கேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்!"
 
"எ..எனக்கு எ..எப்படி தெரியும்?" என்று சற்று நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு கேட்டாள் தாரதி..
 
"ஓஹ்.. அப்போ நீங்க அவங்களுக்கு சப்போர்ட்.. ம்ஹூம்??"
 
"இங்க பாருமா.."
 
"அனு.. அனுப்ரியா..!"
 
 "ம்ம் அனு… எதுவும் உனக்கு விருப்பம் இல்லாமல் நடக்கல" என்று தாரதி முடிக்கு முன் சட்டென்று எழுந்தவள் "என் விருப்பத்தோடு தான் நடந்தது! அதுக்குனு என்னை அம்போன்னு விட்டுட்டு அப்படியே போயிடுவாங்களா? இந்த பிள்ளைக்கு யார் பொறுப்பு? எல்லாம் பக்காவா பேசி தானே பண்ணாங்க! இப்போ என்ன நடு தெருவுல விட்டுட்டு போயிட்டாங்க… இருக்க இடம் இல்லாம கூட நான் இருக்கேன் தெரியுமா உங்களுக்கு? காலையிலிருந்து நான் சாப்பிட ஒன்னும் கிடைக்கல… கோவில்ல பிரசாதம் வாங்கி சாப்பிட்டு வந்திருக்கேன். எனக்கு ஏன் இந்த நிலை??" என்று அவள் ஆவேசமாக பேச.. பேச.. இன்னும் மூச்சு வாங்கியது.
 
தாரதி கலக்கத்துடன் அவளையும் அவள் வயிற்றையும் மாறி மாறி பார்த்து "முதலில் நீ உட்காரு அனு.. நாம பேசலாம்" என்றாள்.
 
"இங்கே பேச்சுக்கு இடம் இல்லை ஒரே வீச்சு தான் இனி! என்னை யாருனு நினைச்சுக்கிட்ட? ஏதோ நீங்க பேசின பேச்சு எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டதனால ரொம்ப சாதுவான பொண்ணு நினைச்சிட்டியோ? எங்க பேட்டையில் வந்து கேட்டு பாரு.. இந்த அனு எப்படிப்பட்ட பிஸ்துன்னு?" என்று அதுவரை அழகு தமிழில் பேசி கொண்டு இருந்தவள் சட்டென்று சென்னை தமிழுக்கு மாறி கலங்க அடித்தாள் தாரதியை.
 
 
அதே நேரம் ஓஎம்ஆர் பீச் ஹவுஸில் அமர்ந்து தன் நண்பர்கள் அனைவருக்கும் தண்ணி பார்ட்டி கொடுத்துக் கொண்டிருந்தான் துருவ் வல்லப்!
 
"என்ன துருவ் பர்த் டே திடீர் பார்ட்டியா சொன்ன? என்ன விஷயம்?" என்று‌ ஒருத்தன் கேட்க..
 
"ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு மீட் அப்.. இன்னும் பெருசா ஹோட்டல் அரேஞ்ச் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன்.. இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்ட துருவ்? நான் இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்ல டா! என்றான் இன்னொரு நண்பன் ஒருவன்.
 
"நமக்கு இந்த மாதிரி நம்ம ஓன் பீச் ஹவுஸ் கொண்டாட்டம் தான் மச்சி சேஃப்! வெளில வைச்சா ஃபோனுல கேமரா வச்சு போட்டோ புடிச்சு நெட்ல போட்டு கண்ட மணிக்கு எழுதுறானுங்க… இதெல்லாம் தேவையா? இப்ப பாரு எந்த பிரச்சனையும் இல்லாம.. பிரைவசியா இருக்கும்!" என்று அடுத்த குப்பியை தொண்டையில் சரித்துக் கொண்டான்.
 
"ஆமா.. ஆமா உண்மை தான்!" என்றான் இன்னொருவன்.
 
"என்னடா ஒன்லி டிரங்க்ஸ் தானா? வேற பார்ட்டி எல்லாம் கிடையாதா?" 
 
"சும்மா இரு..‌ சும்மா சும்மா கண்ட இடத்துக்கு போய் சீக் வந்து செத்துடாத!" என்று துருவ் அவனை கலாய்த்தான்.
 
"சரி விடு டா.. எதுவும் விஷேஷமா? அப்பாவாக போறியா?"  
என்றதும் அவனை திரும்பி அலட்சியமாக பார்த்தவன் 
 
"என்னோட மிஸ்ஸஸ் இப்போ என்னோட எக்ஸ்! இன்னைக்கு தான் தலை முழுகினேன்.." என்றதும் நண்பர்கள் "என்ன..!" என்று திகைக்க…
 
"ஆமா என் பொண்டாட்டிக்கும் எனக்கும் டிவோர்ஸ் ஆயிடுச்சு! அதை செலிபிரேட் பண்ண தான் இந்த பார்ட்டி.." என்றவன் இன்னும் உற்சாகமாக சரக்கை ஊற்றி அடித்தான்.
 
நண்பர்கள் அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தனர்.
 
தாரதி அவசரமாக யாருக்கோ டயல் செய்ய அந்த பக்கம் ஃபோன் எடுக்கப்படவில்லை.
 
திரும்பத் திரும்ப அவள் டயல் செய்ய போன் எடுக்கப்பட்டால் தானே? "இங்க பாரு அனு.. போன் அவங்க எடுக்கவே இல்ல.."
 
"அதெல்லாம் எனக்கு தெரியாது! இப்ப இந்த நிமிஷம் அவங்க இங்கே வந்தாகணும்" என்று அத்தனை உறுதி அவள் குரலில்…
 
அனுவின் இந்த அதிரடி பேச்சு சற்று கோபத்தை வரவழைத்தது தாரதிக்கு. இத்தனை பெரிய மருத்துவமனையை கட்டி ஆளுகின்றனர் தாரதியும் அவளது கணவன் ஸ்ரீராமும். 
 
'சாதாரணமான இவள் வந்து என்னை மிரட்டுவதா?' என்று கோபம் பெருக..
 
"இங்கே பார் அனு.. என்கிட்ட எல்லா டாக்குமெண்ட்ஸும் பக்கவா இருக்கு. நீ எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்ட தான் உனக்கு ப்ராசஸ் நடந்தது. இப்ப வந்து என்னை இதுல இழுக்காத! எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உன்னை அழைத்து வந்ததே அவங்க தானே! உனக்கும் அவங்களுக்கும் தான டீலிங்.. எதா இருந்தாலும் நீ அவங்க கிட்ட பேசிக்கோ.. இப்ப நீ கிளம்பு!" என்றாள்.
 
"இப்போ கிளம்பி எங்கே செல்வது?" என்று அவளைப் பார்த்து எள்ளலாக கேட்டவள் "உங்க பக்கா டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எடுங்க பார்ப்போம்! அப்படி டாக்குமெண்ட்ஸ் இருந்தால்.. குழந்தை பிறக்கிற வரைக்கும் என்னை நீங்க பாதுகாப்பாக வைத்திருக்கணும். ஆனால் வைக்கலையே.. ஓகே பைன் உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படிதானே…?"
 
"ஆமாம் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அதனால நீ வெளியில போ" என்றாள் முகத்தில் அடித்தாற் போல தாரதி.
 
"எதே சம்பந்தம் இல்லையா? ஒரே ஒரு இன்டர்வியூ வெளில நின்னு ஏதாவது ஒரு நியூஸ் சேனலுக்கு கொடுத்தா போதும்! அது கூட வேண்டாம் பேஸ்புக்ல அப்டேட் பண்ணாலே போதும்.. உங்க ஹாஸ்பிடல நடக்கிற விஷயத்தையும் அத்தனையும்..
அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் தெரியுமா?" என்றதும் விதிர் விதிர்த்து போனாள் தாரதி.
 
சில விஷயங்கள் கணவனுக்கு தெரியாமல் நண்பர்களுக்காக இவள் செய்வது உண்டு. அதில் ஒன்றுதான் அனுவின் விஷயமும்! இது கணவனுக்கு தெரிய வந்தால்… அவ்வளவுதான்!!
 
'அதைவிட ஹாஸ்பிடல் பேர் அடிபட்டது என்றாலே இராமனாய் சாந்தமாக இருப்பவன் ராவணனாய் அவதாரம் எடுக்கவும் தயங்க மாட்டான்!' இது தாரதியின் அனுபவ உண்மை எனவே அவள் பயந்து விட்டாள்.
 
"ஓகே அனு! நான் எப்படியாவது அவங்க கிட்ட பேசுறேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடு!" என்று கெஞ்சினாள்.
 
டைம் கேட்டு ரெண்டு நாளுக்குள் சம்பந்தப்பட்டவரை பிடித்து எப்படியாவது இவளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவள் மனதுக்குள் பெரும் கணக்கு போட…
 
"அப்படியெல்லாம் தர முடியாது! உங்களுக்கு கொடுத்த நாட்களே போதும்! வேணும்னா.. ஒரு இரண்டு மணிநேரம் எடுத்துக்க டாக்டரே‌.. அதுக்குள்ள.. என் உயிருக்கோ இல்லை வேற ஏதாவது வகையில் எனக்கு என்ன ஆனாலும் நீங்க தான் பொறுப்பென்று நான் வரும்போதே என் பிரண்டு கிட்ட எழுதி கொடுத்துட்டு தான் வந்தேன்! நான் வரலைன்னா அதை அவள் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுப்பா… கூடவே அவ மொபைல்ல நான் ஒரு வீடியோவும் பேசி ஷேவ் பண்ணியிருக்கேன். அதையும் சோஷியல் மீடியாவுல அவ ரிலீஸ் பண்ணிடுவா.. இப்ப பேசுங்க டாக்டரே சம்பந்தப்பட்டவங்க கிட்ட?" என்றதும் சர்வம் நடுங்கியது தாரதிக்கு!
 
இப்படி தன்னை வகையாக மாட்டி விட்டவங்களை நினைத்து கோபம் கொள்ள மட்டுமே அந்நிலையில் முடிந்தது‌.
 
இரண்டு மணி‌நேரமே தாரதியால் அனுவை சமாளிக்க முடியவில்லை. 
 
இரண்டு மணி நேர‌ தொடர் முயற்சியில் தான் இவள் தேடிய ஆள் கிடைக்க… ஆனால் எதிர்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ அதிர்ச்சியின் உச்ச விளிம்பில் தாரதி.
 
"என்ன டாக்டரே.. ரெண்டு மணி நேரம் மூணு நேரமா மாறுது.. செய்திய சொல்றேன்னு சொன்னீங்க.. ஒன்னும் காணும்" என்று கையில் பல கலவைகள் நிறைந்த தட்டோடு வயிற்றை தள்ளிக் கொண்டு நின்றிருந்த மாயாவை பார்க்க இன்னும் அழுத்தம் கூடியது.
 
இரண்டு மணி நேரத்தில் மட்டும் இதுவரை ஒரு லட்ச ரூபாயை காலி செய்து இருக்கிறாள். உடுக்க உடைப்பு என்று ஆரம்பித்து அவளுக்கு தேவையானதை அனைத்துயும் ஆன்லைனில் வாங்கிக் கொண்டாள் அனு. கூடவே ஃபோன் ஒன்று அது தனி கணக்கு. 
 
'இந்த விஷயத்தை இவளிடம் சொன்னால்.. இவள் என்ன செய்வாளோ?' என்று இன்னும் பதற்றம் தாரதிக்கு!
 
வேற வழியில்லாமல் 'நீயே சரணாகதி' என்று‌ கூப்பிடவே கூடாது என்று எச்சரித்திருந்த எண்ணுக்கு அழைத்தாள் தாரதி.
 
அந்தப் பக்கம் எடுக்கும் முன் இவளுக்கு இங்கு நெஞ்ச துடிப்பு எகிறியது! 
 
வெகு நேரம் முயற்சித்த பின் லைனில்…
 
"இட்ஸ் துருவ் ஹியர்…!" என்ற ஆளுமையான அழுத்தமான குரலில் இந்த பக்கம் தாரதிக்கு தொண்டை வறண்டது. என்ன பேசவென்று தெரியாமல் இவள் இங்கே திணற…
 
'பொறுமை ஸ்டாக் நஹி!' என்பது போல "ஹலோ உங்க விளையாட்டுக்கு நான்தான் கிடைச்சனா?" என்று ஆத்திரத்துடன் கேட்ட குரல், ஃபோனை வைக்கும் முன்,
 
"சார்.. சார்.. ப்ளீஸ் ஃபோன வச்சிடாதீங்க!" என்று கெஞ்சிய குரல் அவனுக்கு எங்கோ பரிட்சியம் போல தோன்ற "ஹூஸ் தட்?" என்றான் யோசனையுடன்…
 
"சார்.. நான் டாக்டர் தாரதி ஸ்ரீராம்! சுபம் ஹாஸ்பிடல் ஸ்ரீராம் ஓட வைஃப்" என்றதும் சற்றே யோசித்தவன் "ஓஹ்.. எஸ்! தென் வாட்ஸ்அப்.." என்றவன் கேட்க…
 
எப்படி சொல்வது என்று தெரியவில்லை அவளுக்கு. ஆனால் சொல்லித்தானே ஆக வேண்டும்! என்று தன்னை ஒரு முறை நிலைப்படுத்திக் கொண்டு "சார்.. உங்க குழந்தையை சுமக்கிற வாடகைத்தாய் இப்பொழுது என் வீட்டில் இருக்கிறாங்க… இப்போ அவங்க ஆறாவது மாதத்தின் தொடக்கத்துல இருக்கிறாங்க.. நீங்க அவசரமாக இப்போ இங்க வந்தே ஆகணும் சார்!" என்று ஒருவழியாக சொல்லி முடிக்கும் முன்…
 
"வாட் த ஹெல்!" என்று அந்தப்பக்கம் கர்ஜிக்கும் குரல் கேட்டது. அடித்த மொத்த ஃபாரின் சரக்கின் போதையும் இறங்கியது!
 
'அடடா!! சரக்கு போச்சே…!'
This thread was modified 1 week ago 4 times by Jiya Janavi
This thread was modified 6 days ago by Jiya Janavi

   
Quote
(@gowri)
Member
Joined: 6 days ago
Messages: 5
 

Wow super super start🤩🤩🤩🤩

அனு ராக்ஸ் 🔥🔥🔥🔥

மத்த எல்லாரும் shocks 🤣🤣🤣🤣


   
Jiya Janavi reacted
ReplyQuote
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 week ago
Messages: 17
Thread starter  

@gowri thanks dear


   
ReplyQuote
(@kalpanamurugesan)
Member
Joined: 5 days ago
Messages: 2
 

செம 😄😄😄


   
Jiya Janavi reacted
ReplyQuote
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 week ago
Messages: 17
Thread starter  

@kalpanamurugesan நன்றி சிஸ் ❤️


   
ReplyQuote
 goms
(@goms)
Member
Joined: 5 days ago
Messages: 3
 

Attagasamana arambam 😘 


   
Jiya Janavi reacted
ReplyQuote
(@jiyajanavi)
Member Admin
Joined: 1 week ago
Messages: 17
Thread starter  

@goms நன்றி சிஸ் ❤️


   
ReplyQuote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top