கிளம்பும் நேரம் பிரதீஷ் அலைபேசி அலறியது. எரிச்சலுற்றவன் பட்டென தொடுதிரையை தட்டி அழைப்பை எற்றான்.
மறுமுனையில் அவனது பாட்டி. கல்யாணியின் வற்புறுத்தலில் குசலம் விசாரிக்க போன் செய்தார் பேரனுக்கு.
"ம்ம்ம்.."
"கண்ணா எங்க பா இருக்க?"
"கிளம்பிட்டுருக்கேன் வீட்டுக்கு தான். ஒர்க் முடிஞ்சது.."
"சரி பா.. பாட்டி வர வரை உனக்கு பிடிச்சதை முடிஞ்சா செஞ்சு சாப்பிடு.."
"நான் பாத்துக்குறேன்.." என்னும் போது அவனது காதில் அன்னையின் கிசுகிசுப்பு நன்றாக விழுந்தது.
"வெளியே கண்டதை சாப்பிட வேணாம் சொல்லுங்க அத்தை.." என்ற கல்யாணி குரலை கேட்டு, அதையே அவன் பாட்டி பின்பாட்டாக கூற..
எங்கிருந்து வந்ததோ அவனுக்கு அப்படியொரு கோவம். அன்று செருப்பில் வாங்கிய அடி நினைவுக்கு வர, "நான் எவ வீட்லயும் போய் சாப்பிட மாட்டேன். முடியலைன்னா பட்னியா கிடந்து கூட சாகுறேன். சொல்லிடுங்க.." என்றவன் பட்டென போனை வைத்திட, சாவித்திரி பாட்டி தான் மருமகளை சகட்டு மேனிக்க அர்ச்சித்தார்.
அவரே மருமகளை கடிந்து விட்டு கண்கள் கலங்க ஆறுதல் கூறியதில், கல்யாணி அவர்கள் தான் சொல்லொண்ணா வலியில் கண்ணீர் உகுத்தார்.
எதிர்பாராத வருகை அவனை திக்கு முக்காட செய்ய இருப்பு கொள்ள முடியாது கிளம்பி விட்டான் பெதும்பையை காண. ராசிகா அவன் வரவும் பஞ்சாயத்தை கூட்ட வேண்டும் என்பது போல் தான் ஹாஸ்ப்பிட்டல் எண்ட்ரன்ஸ் முன்பு நின்றிருந்தாள்.
விறுவிறுவென அவளை நோக்கி கசங்காத ஃபுல் ஹேன்ட் சாண்டல் ஷர்ட் அண்ட் பிளாக் பேண்டில் நடந்து வருபவனை விழி அசராது பார்த்தாள்.
அவனது விழிகளும் அவளது அழகை தொலைவில் இருந்தபடி களவாடியது. ரெட் டாட்டடு ஷார்ட் டாப் மற்றும் சாண்டல் நிற ஃபுல் ஸ்கர்ட்டில் பார்ப்பதற்கு சிறு பெண் போல இருந்தாள்.
ஆழ மூச்சொன்று விடுத்து ரசனைக்கு அப்போது அரைக்காற் புள்ளி வைத்தவன், அவளது அருகே சென்று நின்று உஷ்ணமாக பார்த்தான்.
"நான் தான் கோவப்படணும் நீங்க பண்ணுன வேலைக்கு.." என அவள் முகத்தை திருப்பிக் கொள்ள..
"ம்ம்.." என்றான் கையை நெஞ்சின்னூடே கட்டிக் கொண்டு, சிறுபிள்ளை போல் கோவத்தை காட்டும் மைதா மாவில் செய்த சிலையை ரசித்து.
"அன்னேக்கி ஏன் வரல?"
"என்னெக்கி?"
"ஹ்ம்ம்.. தெரியாத மாதிரி கேக்காதீங்க.."
"நான் ஏன் வரணும்?" என்றவன் கீழ் உதட்டை அழுந்த மடித்து சிரிப்பை அடக்கி அவளை வெறுப்பேற்ற, "அப்போ வரமாட்டீங்க.. அப்படி தானே?" என்றவள் அவனையே ஏக்கமாக பார்த்ததில், ஆடவன் மிழிகள் தான் அவளின் முகத்தில் இருந்து அகல மறுத்தது.
"வந்தேன்.. உன் ட்ரெயின் அப்போ தான் மூவ் ஆச்சு."
"பொய் சொல்லாதீங்க.." என்றவள் கழுத்தை வெட்டி முகத்தை திருப்பிக் கொள்ள, அவள் காதோரம் ஆடிய சிவப்பு நிற ஜிமிக்கி வெகுவாக அவனை கவர்ந்தது.
'எங்க டா போச்சு உன் கோவம்!' என அவனது உள்ளம் ஏகத்தாளமாக கேள்வி கேக்க, "இப்போ என்ன உன் பிரச்சனை?" என்றான் பொய்யாக கோவத்தை காட்டி.
"நீங்க நிஜமா என்னை பாக்க வந்தீங்களா?"
"இங்க பாரு இது ஹாஸ்பிட்டல்.. டைம் ஆச்சு நான் கிளம்பனும்.."
பாவம் ஆசையாக வந்தவளை விரட்டியடிப்பது போல் பேசியதாக எண்ணியவள், "நான் கிளம்புறேன்" என்க, அவனும் அதை செவி மடுக்காமல் பார்க்கிங் நோக்கி விரைந்தான்.
'திமிரு பிடிச்சவன்.. போறேன்னு சொல்லுறேன்.. வேணாம்ன்னு சொல்லுறானா பாரு.. இப்படி அம்போன்னு விட்டுட்டு போறான்..' என தானாக புலம்பியப்படி நடந்தவள், சாலையின் ஓரம் ஆட்டோக்காக காத்திருந்தாள்.
காரில் வெளியே வந்தவன், அவளது முன்பு சென்று நின்றபடி ஜன்னலை இறக்கி விட்டு நக்கல் புன்னகையோடு பார்த்தான்.
அவளோ முகத்தை திருப்பிக் கொள்ள, "வரலைனா போ.." என கூறி கிளம்பியவனை கண்டு மேலும் பொரிந்தாள் மானசீகமாக.
மீண்டும் பிரேக் அடித்து கார் கண்ணாடி வழியே, சாலையோரம் நின்றிருந்தவளை பார்த்தான். அவளும் அவனை தான் முறைத்து பார்த்தாள்.
சில நொடிகளில் கண்ணாடியில் அவனது கள்ளச்சிரிப்பு நன்றாக தெரிய, மைதா மாவு சிலையோ ஓடி வந்து ஏறிக்கொண்டாள் அவனது முன் சீட் அருகே.
"விண்டோ க்ளோஸ் பண்ணு.."
"ம்ம்ம்.. நான் வேடிக்கை பாக்கணும்.." என சிறுபிள்ளை போல் சொல்லியவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு, சாலையின் பக்கம் கவனம் செலுத்தினான்.
"நீங்க நிஜமா ஜங்கஷன் வந்தீங்களா?" என சந்தேகமாக கேட்க, அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் பதிலே பேசவில்லை சில நாழிகை.
"உங்க கிட்ட தான் கேட்டேன்.."
"ம்ம்ம்.."
"வந்தீங்களா?"
"ஆமா.."
"அப்போ ஏன் மெசேஜ் பாத்துட்டு எனக்கு போன் பண்ணல?"
"ஏன் பண்ணனும்?" என சட்டென கேட்டு வைத்ததில், பூவையவள் சுட்டெரிக்கும் பார்வை முன் கண்ணாடி வழியே பார்த்தவன் மீண்டும் வெறுப்பேற்றி விளையாட ஆயத்தமானான்.
"நான் எதுக்கு கால் பண்ணனும். நீ தானே அவங்களே தேவையில்லைன்னு சொன்ன. அதான் ரெஸ்பான்ஸ் பண்ணல.."
"பிரதீஷ்!!!"
"ம்ம்ம்.."
"நான் தெரியாம தான் சொன்னேன். ஏன் இப்படி பேசுறீங்க?"
"அப்போ ஏன் பேசுற? பேசாம வா.."
"உங்களுக்கு என்கிட்டே பேச பிடிக்கலையா?"
"நீ பேசுற பேசுறேன். பேசலைனா பேச மாட்டேன்.." என பட்டும் படாமல் அவன் பேசிய பேச்சு அவள் விழிகளில் நீர் திரையிட வைக்க, முகத்தை திருப்பிக் கொண்டாள்.
சில நிமிடங்கள் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மௌனம் மட்டுமே தனக்கு தெரிந்த ஒன்று என சாலையில் சித்தங்கொண்டிருப்பவனை பற்கள் கடித்த பார்த்தவள், "நான் இங்க இறங்கிக்கிறேன்.." என்றாள்.
பிரதீஷ் சுற்றி முற்றி பார்த்தவன் இருப்பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வீடே இல்லாத, மரங்களும் செடிகளுள் நிறைந்த இடத்தில் இறங்கி என்ன செய்ய போகிறாள் என தீவிரமாக யோசித்தான்.
"இங்கயா?"
"ஆமா.." என்றவள் டோரை திறக்க முயல, "இங்க இறங்கி எங்க போக போற?" என்றான் நக்கலாக.
"எங்கயோ போறேன்.. உங்களுக்கு என்ன? லாக் எடுங்க.. நான் போகணும்.." என்றதும் அவனும் லாக்கை எடுக்க, கீழிறங்கினாள்.
முகத்தை தொங்க போட்டுக் கொண்டு, எங்கோ பார்த்தப்படி நின்றருப்பவளை கண்டு அவனுக்கு தான் சிரிப்பை அடக்க பெரும்பாடாக இருந்தது.
"ஏன் நிக்கிறீங்க போங்க.."
"நான் போவேன்.. அப்டியே நிப்பேன்.. உனக்கென்ன?" என்றவன் சில நொடிகள் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி விட்டான்.
அவன் நட்டாற்றில் விட்டு செல்ல, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருள் மட்டுமே காட்சியானது. அதீத வாகனங்கள் செல்லாத அந்த சாலையை காணவே திகிலாக தான் இருந்தது ராசிகாவிற்கு.
எங்கு செல்வது என தெரியாது நின்றிருந்தவளை நோக்கி, காரானது உரசி வந்து நின்றது.
கார் உள்ளே பரவியிருந்த வெளிச்சமே அவனை அடையாளம் காட்ட, பிரதீஷ் தீயாக பார்த்தான். அவள் ஏறாமல் நிற்க, அவனே கீழிறங்கினான்.
"இப்போ எதுக்கு ரோட்ல நிக்கிற? சொன்னா கேக்க மாட்ட நீ?" என்றவன் முகத்தில் அப்பியிருந்த கோவம், காரினுள் பிரகாசித்த வெளிச்சம் மூலம் தெரிந்தது. பதிலே பேசாமல் ஏறி உட்காந்து விட்டாள் அதுவும் பின் சீட்டில்.
வண்டியை ஸ்டார்ட் செய்தவன் அவளை கூர் விழியால் கண்ணாடியில் பார்க்க, அவளோ "போக வேண்டியது தானே.." என்றதும் சடேன் பிரேக் அடித்தான்.
"இங்க முன்னாடி வா.."
"நான் வரல.." என்றவள் முகம் கோணி போவதில் இனம்புறியா கோவம் எட்டிப்பார்க்க, "நான் பெர்மிஷன் கேக்கல ராசிகா. வான்னு சொன்னேன்.." என்றதும் வந்து விட்டாள்.
"சொன்னா கேக்க மாட்டயா நீ?"
"நான் கேட்டா என்ன கேக்கலைனா என்ன உங்களுக்கு?" என்றவளுக்கு அவனது விளையாட்டு புரியாமல் அழுகை வர, அவன் சமாதானம் செய்யாது வண்டியை செலுத்தினான்.
"இதான் லாஸ்ட் வார்னிங்.. இன்னொரு டைம் நடு ரோட்ல எங்கையாவது உன்னை பாத்தேன். அடுத்து மனுஷனா இருக்க மாட்டேன்.." என்றவன் கோவத்தில் கூற அவன் அக்கறை புரியாத டியூப்லைட்டாக இருந்தாள்.
சில நிமிடங்களுக்கு பின், அவள் கை மீது போனை வைத்தவன், "சைட் கீ ஃப்ரஷ் பண்ணிட்டு பாரு" என்றான் அவள் முகம் காணாது.
இதுவரை கலங்கி நின்ற விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிய, அவனையும் அந்த போட்டோவையும் ஒருசேர பார்த்தாள். அவனது தோள் சந்து வழியே கை நுழைத்தவள், "தேங்க்ஸ் பிரதீஷ்.. என்னால நம்பவே முடியல.." என்று கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
கேட்டு பெறுவது அன்பல்ல. குறுகிய தினங்கள் மட்டுமே அவனை கண்டிருந்தாலும், அவன் மீது அப்படியொரு நேசம். அவன் அன்று ஜங்கஷன் வந்ததை அப்போட்டோ மெய்பிக்க, சந்தோஷத்தின் உச்சத்தில் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவனும் அவளை விலக்கவில்லை. என்ன தான் அவளை வெறுப்பேற்றி விளையாடினாலும், அவளுக்கு மீண்டும் இது போல் அசம்பாவிதம் எதுவும் நேரக் கூடாது என உறங்கும் முன் நினைக்காமல் இருந்ததில்லை.
வார்த்தை ஒன்று மட்டுமே அவனை காயப்படுத்தியிருந்தாலும், மனதுக்கு பிடித்தவளே சம்மட்டியால் அடித்தது போல் பேசியது தான் அவனுக்கு வேதனையாக இருந்தது. அதனால் தான் வீராப்பு காட்டிக் கொண்டிருந்தான் பேசாது.
"லவ் யூ பிரதீஷ்.. லவ் யூ சோ மச்!" என்றவளுக்கு பதில் கூறாது, ஆதூரமாக அவள் உள்ளங்கை பற்றினான். மென்மையான விரலோடு ஆணவன் விரல் கொண்ட இறுக்கம், அவளை வேறொரு உலகத்தில் சஞ்சரிக்க செய்தது.
"லவ் யூ சொல்ல மாட்டிங்களா?" என்றவள் அவனது தோளில் இருந்து விலக மனமின்றி கொஞ்சலாக கேட்க, கண்ணாடியை சரி செய்தான். அவள் முகம் பூசியிருந்த செம்மையை காண.
"சொன்னா தான் லவ்வா?" என்றவன் குரல் அவளை மேலும் நாணத்தின் உச்சிக்கு கூட்டி செல்ல, "சொல்லணும்.. எனக்காக.." என்றாள் கெஞ்சலாக.
"அதான் நீ சொல்லிட்டயே? யாரு சொன்னா என்ன ராசிகா?" என்றவன் கவனம் சாலையின் மீதும், அவள் முகம் மீதே இருந்தது. வஞ்சியின் விலோசனங்களும் கண்ணாடி வழியே அவன் முகத்தை தான் ஆராய்ந்து கொண்டிருந்தது.
"சரி எங்க உன்னை டிராப் பண்ண?"
"நீங்க உங்க வீட்டுக்கு போங்க.."
"என் வீட்டுக்கா? அங்க எதுக்கு!"
"ம்ம்ம்.. சொல்லுறதை மட்டும் செய்ங்க" என்றவள் செல்ல கட்டளையிட, பசி வயிற்றை கிள்ளியது கூட கவனித்திடாது வீட்டின் முன்பு காரை நிறுத்த, விடைபெற மனமின்றி இறங்கிக் கொண்டாள்.
"இங்க ஏன் இறங்குன?"
"அதான் நான் தங்கியிருக்க ஃபிரண்ட் ஜனனி வீடு. நீங்க தான் என்னை மூணு நாளா பாக்கல. நான் மாடியில இருந்து உங்களை மார்னிங் சைட் அடிச்சுட்டு தான் இருந்தேன்.." என்றவள் விழிகளை சிமிட்டி கூற, பிரதீஷ் தான் வியப்பில் அவளை பார்த்தப்படி புன்னகைத்து இருந்தான்.
"அவ்வளவு லவ்வா?" என்றவன் அவளை மேலும் வம்பிழுக்க முனைய, "ஃப்ரூப் பண்ணவா?" என்று கேட்டாள்.
அவனும் சரி என்க, "என்ன பண்ணுனா டவுட் கிளியர் ஆகும்?" என்றாள் எல்லாவற்றிற்கும் தயாராக.
"நீ ஒன்னும் பண்ண வேணாம். அடங்கி வீட்டுல இரு."
"இல்லை நான் ஏதாவது பண்ணி ஃப்ரூப் பண்ணனும் சொல்லுங்க.." என்றவள் காரினுள் அமர்ந்திருப்பவன் பதிலுக்கு காத்திருக்க..
"ஒழுங்கா சைட் அடிசக்கிற வேலையை மட்டும் செய்.." என்றவன் விடைபெற்றுக் கொள்ள, இருவருமே பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர் அவர்களின் வீட்டிற்கு.
நீண்ட நாட்களுக்கு பின் அவளோடு அளவாளவிய நேரம் தான் அதிகம். அதுவும் அவனாக விருப்பப்பட்டு. அவளை அழ வைத்தும், பேச வைத்தும், சிரிக்க வைத்து ரசித்தவன் அகம் முழுக்க பாவையவள் நினைவே ஆக்கிரமித்திருந்தது.
ஒரு வாரத்திற்கு பின்..
ராணி அவர்கள் முகத்தில் என்றுமில்லாதொரு கவலையும், பதட்டமும் சூழ்ந்திருந்தது. வேதகி அவர்களையும் ஒருவாறு பார்த்துக் கொண்டிருந்தவர் வாயே திறக்கவில்லை.
"என்ன தான் ராணி போட்டு புழுங்கிட்டு இருக்க.. ஜோசியர் சொன்னது நடக்குதோ இல்லையோ, நீ தான் பயந்து சாகுற.." என்றவர் சேரில் சாய்ந்து உட்காந்தப்படி வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார்.
"இல்லை அண்ணி பயம் தான் என்ன செய்ய? அன்னேக்கி நிச்சயம் நடக்கல. அடிப்பட்டு ரத்த காயத்தோடு தான் தம்பி வீடு வந்தாங்க. இப்போ இப்படியொரு விஷயம் சொன்னா, யாருக்கு தான் அண்ணி பயம் வராது?"
"நீங்க அந்த பையன் வீட்டுல இதை சொன்னீங்களா இல்லையா?"
"எங்க அவர் தானே சொல்லணும். நான் இதுல என்ன செய்ய?" என்றவர் முகம் மேலும் வாட்டம் கொள்ள, "பேசாம நீ பிருந்தா கிட்ட இதை பத்தி பேசி தம்பி கிட்ட எடுத்து சொல்ல சொல்லு." என வேதகி கூறியதில் தான் இது நல்ல யோசனையாக தோன்றியது.
அவரும் நாசூக்காக மகளிடம் கூற, பிருந்தா பெரிதாக அதிர்ந்தவள் உடனே இது பற்றி கூறுகிறேன் என ராணியிடம் கூறி விட்டு வருங்கால கணவன் ஆகப்போகிறவனுக்கு அழைத்தாள். ஒருமுறை என்ன ஏழு முறை அழைத்து விட்டாள் அழைப்பை ஏற்கவில்லை.
ஏற்கும் நிலையில் அவன் இல்லை.. ஏன் அவளும் இல்லை..
போன் சைலன்டில் இருந்தது. அவர்களின் உரையாடலுக்கு இடையூறு உண்டாக்கிட கூடாது என்று.
விசாலமான மொட்டை மாடி. சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி இளஞ்சோடிகள் ரெண்டும் தஞ்சம் அடைந்திருந்தது. இருள் எட்டும் வேளையில்.
வளர்பிறை நிலவின் வெளிச்சம் இருவர் முகத்தில் பால் வண்ண ஒளி வீசியது. மெல்லிய தென்றல் மேனி தொட்டு உரசியதில், அவன் கையை இறுக பற்றியப்படி பேசிக் கொண்டிருந்தாள்.
"வீட்டுல ஆட்ல நடிக்கிறது பிடிக்கல. இப்போ கூட காண்ட்ராக்ட்ல நடிச்சாகனும் கட்டாயத்துல நடிக்கிறேன். அப்பாக்கு எனக்கும் இதுல பெரிய பிரச்சனை ஓடிட்டிருக்கு. இன்னும் சிக்ஸ் மந்த் தான் அப்பறம், வேற ஜாப் ட்ரை பண்ணலாம் இருக்கேன்.."
"உனக்கு என்ன பிடிச்சுருக்கோ அதை செய். யாருக்காகவும் மாத்திக்காதே.." என்றதும் அவளின் பிடிமானம் விரலிடுக்கில் அழுத்தம் கூட, "என்ன டி?" என்றான் சட்டென அவளை திரும்பி பார்த்து.
"இல்லை.. உங்களுக்கு பிடிக்கலைன்னா.. சொல்லிடுங்க.."
"நான் சொன்னேன்னா அப்படி? இது உன் விருப்பம்.."
"அப்பாக்கு இதுனால அசிங்கம் அண்ட் நிறைய மிஸ் யூஸ் பண்ணிடுவாங்கன்னு பயம்.. அதான் உங்க கிட்ட கேட்டேன்.."
"ஒழுக்கம் மனசுல இருக்கு ராசிகா. சரி எது தப்பு எதுன்னு உனக்கே தெரியும். உனக்கா சரியில்லன்னு படும் போது உன் மனசே அங்க இருந்து விலகிடும்.
நான் உன்னை காதல்ன்னு ஒரு பேரை சொல்லி அடைச்சு வைச்சா உனக்கு என்மேல மட்டுமில்ல எல்லார் மேலையும் வெறுப்பு வரும்.
அதுனால நீ உனக்கு பிடிச்சதை மட்டும் செய். எப்போவும் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்." என்றவன் கை அவள் கழுத்தை மாலையாக சுற்றிக் கொள்ள, அவன் தோளில் கண் மூடி சாய்ந்து கொண்டாள்.
அடிப்பட்ட மனம் நாடுவது அன்பு ஒன்றே. அது காதலாகினும் சரி! பெண் தோழி தரும் அன்பாகினும் சரி.
ம்ம்.. தோழி அவள் தான் அடுத்த எதிரியாக அவதாரம் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். இடைவிடாது அழைத்தாள் ராசிகாவிற்கு. அவளது போன் உயிரை விட்டு அணைய, இவள் தான் அணைத்து வைத்து விட்டாள் என தவறாக புரிந்து கொண்டாள் ஆர்த்தி.
"உங்க வீட்டுல ஏன் இப்படி இருக்காங்க பிரதீஷ்?"
"அடி என்ன கேட்டா எனக்கென்ன தெரியும்? நீ கேட்டா தான் அவங்க நியாபகம் வருது.." என்றவன் காலை ஆட்ட, அவள் நீட்டியிருந்த காலில் மோதி கொலுசொலி சிணுங்கியது.
"அழகா இருக்குல்ல சத்தம்.." என்றவன் மீண்டும் அவள் காலோடு கால் உரசிக் கொண்டிருந்தான்.
"பிரதீஷ்.. நான் என்ன கேட்டேன்? நீங்க என்ன பண்ணுறீங்க?"
"இதென்ன வாங்க போங்க.. நல்லவா இருக்கு?"
"ஏன் நல்லா தான் இருக்கு.." என்றவள் கை விரல்கள் தந்த அழுத்தத்தில், "செம சாஃப்ட்டா இருக்கு ஃபிங்கர்ஸ். என்ன க்ரீம் யூஸ் பண்ணுறீங்க மேடம்?" என்றான் ஒவ்வொரு விரலையும் நீவி அளவெடுத்தபடி.
"ம்ம்ம்.. சோப் ஆயில்.."
"ம்ம்ம் ஒன் லிட்டர் வாங்கி தரவா? ஊத்தி குளி.." என்றான் நக்கலாக.
"பிரதீஷ் கிண்டல் பண்ணாதீங்க. நாளைக்கி எத்தனை மணிக்கு போறீங்க?"
"இப்போ என்ன சொன்னேன்? வாங்க போங்க சொல்லாதன்னு சொன்னேன்ல.."
"அப்பறம் என்ன சொல்ல?" என்றவள் அவனை மெல்ல நிமிர்ந்து பார்க்க, "ஏன் 5 அடி வளந்த உனக்கு நான் சொல்லாம தெரியாதா டி?" என அழுத்திக் கூறியதில் சிலாகித்தாள்.
"சரி இனி ட்ரை பண்ணுறேன்.."
"உங்க வீட்டுல எப்போ வர்றாங்க?" என்றவள் கிளம்பிட எழுந்து கொள்ள, அவனும் எழுந்து கொண்டான்.
"வராத வரை நான் நிம்மதியா இருப்பேன்."
"நாளைக்கி என்னையும் இப்படி தானே சொல்லுவீங்க?" என்றவள் அவன் நெஞ்சில் செல்லமாக குத்த, "ஐயோ வலிக்குது.." என நெஞ்சை பிடிக்க..
"நிஜமாவா?" என்றவள் முகம் பாவமாகியது.
"சும்மா சொன்னேன் டி. சரி கிளம்பு டைம் ஆகிடுச்சு.." என்றவன் முன்னே கிளம்பி மாடி லைட்டை அணைக்க, "பிரதீஷ் ஒன்னு கேக்கணும்.." என்றபடி வந்தவள் குரல் மட்டும் கேட்டதில், வேகமாக வந்தவன் அவள் மீது மோத மைதா சிலை தான் தடுமாறி போனது.
"அடி மைதா மாவே.. பாத்து வா.." என்றவன் அவளை தாங்கி பிடித்திருந்த இடையில் இருந்த கையை எடுக்க, ஸ்டெடியாக நின்றவள் "கல்யாணம் பண்ணிக்கலாமா?" என கேட்டதும் பிரதீஷும் சரி என்று விட்டான்.
"எப்போ?"
"நீ சொல்லு எப்போ வேணாலும் பண்ணிக்கலாம்.. ஆனால், உடனே வீட்டுல சொல்ல முடியாது.." என்றவன் அவள் கரம் பற்ற, அவள் மெல்லிய விரல்கள் தந்த இதம் இடையை இறுக தழுவியது.
"பிரதீஷ்.. ஐயோ யாராவது பாக்க போறாங்க.. தள்ளி நில்லுங்க.."
"ஏன் டி இந்த இருட்டுல எவன் பாக்க போறான்.. சரி அப்படி பாத்தா என்ன ஆகப்போகுது? அவன் என்கிட்டே கேக்கவா போறான்?"
"இல்லை.. என்னை தான்.." என்னும் போது அவள் இடையை சுற்றி இருந்த கையை சட்டென எடுத்து விட்டு, "ஸாரி" என்றான் அவள் மன நிலை புரிந்து கொண்டு.
அவளுக்கோ அது நெருடலை தர, இறுக கட்டிக் கொண்டவள் "கல்யாணம் பண்ணிக்கலாம் பிரதீஷ். உங்க கூட இருக்கும் போது ரொம்ப நிம்மதியா இருக்கு. நான் நடிக்கிறதை விட்டாலே என் அப்பா மாறிடுவார். அப்பறம் வீட்டுல சொல்லுறேன்.." என்றாள் அணைப்பின் தீவிரத்தை அதிகமாக்கி.
"சரி டி சீக்கிரம் பண்ணிக்கலாம்.." என எதை பற்றியும் யோசிக்காமல் கூறி விட்டான்.
"லவ் யூ பிரதீஷ்.."
"லவ் யூ டி.."
"நான் ஒன்னு கேக்கவா?" என்றவள் அணைப்பு மேலும் இறுக, அவள் மேனியில் படர்ந்திருந்த ஒருவித நறுமணத்தில் ஆணவன் நெஞ்சமோ தகித்து போனது.
"அதுக்கு ஏன் டி இவ்வளவு டைட்டா.. ஹக் பண்ணிருக்க?"
"வேணாமா?"
'என்ன சொல்ல.. என் கஷ்ட்டம் எனக்கு தான் தெரியும்!" என மூச்சொன்று விடுத்து சமன் செய்தாலும், சட்டென ஆர்ப்பரித்த உணர்வுகள் ஒவ்வொரு அணு வரையும் மின்சாரமாக பாய்ந்தது.
"நான் அப்படி சொல்லவே இல்லையே.."
"பிரதீஷ்.. நான் திடிர்னு இல்லாம போய்ட்டா என்ன பண்ணுவீங்க?"
தேன்மழை💖💖
