அழகன் 13
‘இப்போதெல்லாம் முன்னைப் போல யாருமே ஆற்றில் குளிப்பது இல்லை..!
படித்து முடித்து வெளியூரில் வேலைக்கு சேர்ந்த பிறகு ஆற்றில் போய் குளிப்பதையே இன்டீசன்ட்டாக நினைத்து விட்டார்களா அல்லது பழைய பள்ளிக்கால நினைவுகளை நினைவுப்படுத்தி இப்போது கஷ்டப்படுவானேனு விட்டுவிட்டார்களா?
பள்ளிக்கால பிராயம் என்பது எப்போதுமே நினைவில் இருக்கும் பசுமை மாறாத நினைவுகள் அல்லவா?’ என்று தன் போல யோசித்துக் கொண்டே சென்றாள் அங்கயற்கண்ணி.
“என்ன ஆத்தா.. உன் தம்பிக்காரன குளிக்க வச்சு கூட்டியாறியா?” என்று எதிர்ப்பட்ட வயதான பெண்மணி அங்கயற்கண்ணியிடம் கேட்க,
“ஆம்தா..” என்றாள் அந்த முதிய பெண்மணியிடம் கண்ணி.
“அப்படியே.. நீயும் மேலுக்கு நெனஞ்சிப்புட்டு வரதானா ஆத்தா?” என்று அவர் கேட்க…
“இல்ல அப்பத்தா… அங்கன நம்ம மாட்டு டாக்டரு புள்ளைகள கூட்டியாந்து நீச்சல் பழக்குறாரு.. அதேன்.. நான் இவன மட்டும் குளிப்பாட்டு கூட்டியாந்திட்டேன்” என்றாள் அவள்..!
“ஓஓஓ.. சரி சரி.. இந்த காலத்துல நம்மூர் புள்ளக பட்டணத்துக்கு படிக்க வேலைக்கு போனா.. இப்படி கொளம் குட்டையில குளிக்க மாட்டேங்குதுங்க.. இந்த டாக்டரு தம்பி பரவாயில்ல.. நல்ல புள்ளயாத்தேன் இருக்கு” என்றார்.
அவள் அப்படியா என்று பார்க்க…
“ஆம்த்தா.. நிறைய அப்படித்தேன். படிச்சு வெளியூருக்கு போய் வேலைக்கு சேர்ந்து அந்த ஊர், மக்க, பழக்க வழக்கம், புது சூழலுக்கு பழகிய பொறவு சொந்த ஊரை அறுவெறுப்பா.. அசிங்கமான ஊராக பார்க்க ஆரம்பிச்சுடுறாய்ங்க.. அதுவர மாமா மச்சானு ஆசையோடு பழகியவியங்க… தள்ளி நின்னு பேசுதுக.. என்ன சொல்ல..?”
“அவுக என்ன தேன் சம்பாதிச்சாலும்.. பெரிய பதவியில் இருந்தாலும் நாம் செத்த உரிமையில பேசும போது அது அவுகளுக்கு பண்பாடு இல்லாத, மரியாதை குறைவான வார்த்தையாக தெரிஞ்சு நம்மள ஏதோ வேட்டுகிரகத்துக்கு ஜந்து போல பாக்குறாய்ங்க.. ஏன் சிலரு ஊருக்கு வற்ரதையே வெறுத்திடுறாய்ங்க.. பட்டணத்து மோகம்த்தா.. மோகம்..! என்ன பண்பாடோ.. கலாச்சாரமோ... போ..!” என்ற அந்த பெண்மணி பல நாள் தன் உள்மன ஆதங்கத்தை வெளியிட்டு சென்றார்.
அங்கயற்கண்ணியோ செல்பவரை பார்த்து “இந்த ஆத்தாவுக்கு எவன் என்ன சொன்னியானோ.. பாவம் புலம்பிட்டு போகுது. சரி வாடா காங்கேயா உனக்கு சாப்பாடு வைக்கிறேன்” என்று காங்கேயனை அதன் கொட்டிலுக்கு அழைத்து சென்றாள்.
இவளுக்கு முன் வீட்டுக்கு சென்ற ஆண்டாளை கண்டதும் கலையரசி “பாப்பா எப்ப போனவ நீ இப்பதேன் வர.. தலையை காய வைக்க போய்.. இப்படி நீயே காஞ்சி கருவாடா வந்து இருக்க?” என்று மருமகளை திட்டி தலையை உச்சி முடி பின்னி கீழே கோடாலி கொண்டை இட்டு “வந்து முதல்ல சாப்பிடு.. ஆள் பார்க்கவே என்னவோ போல இருக்க” என்று அவளை மதியம் சாப்பிட வைத்து பின்பே அறைக்கு அனுப்பி வைத்தார்.
அறைக்கு சென்றவளுக்கோ தூக்கம் கண்களை சுழற்றியது.
நேற்று இரவின் களைப்பும்.. இன்று வெகு நேரம் மதிய உச்சி வெயிலில் நின்றதும்.. அவள் கண்களை சுழற்ற, படுக்கையில் படுத்தவள் நன்றாக உறங்கினாள்.
அதன் பின் அழகன் மதிய உணவுக்கு வந்ததோ.. இவளை கண்களால் தேடியதோ..
பின்பு அம்மா பரிமாற அமைதியாக உண்டு அறைக்கு வந்தவன், இவளை கண்சிமிட்டாமல் அருகில் படுத்து பார்த்ததோ.. ஏதும் அறியாள் பெண்ணவள்..!
ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக உறங்கும் பாவையளின் பால் வண்ண முகத்தை ஒற்றை விரலால் அவள் தூக்கம் கெடாதவாறு ஆசையாக வருடினான் அழகன்..!
நேற்றிரவு அத்தனை ஜாலங்களை காட்டிய அவளது கருவிழிகள் இரண்டும்.. இன்று சிப்பிக்குள் உறங்கும் முத்தாக இருப்பதை கண்டு ரசித்தான்..!
மதுரை பட்டர் பன்னை போல மெத்து மெத்து என்று இருக்கும் இந்த கன்னங்கள் தான் எத்துணை சுவையாய் இருந்தது நேற்று..!
“இந்த மொழு மொழு மூக்கு மோமோஸ் போல இருந்துச்சு டி பொம்மா நேத்து..
அப்புறம் இந்த இதழ்கள்..” என்று அவற்றை மெல்ல பெரு விரலால் தடவி வருடினான். அதிலும் அவளின் வெண்சங்கு கழுத்தும். அதன் கீழும் கண்கள் மெல்ல செல்ல..
“ம்ஹூம்..” என்று இடவலமாக தலையாட்டி எதிலிருந்து தப்பிப்பவன் போல சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டான் அழகன்.
“ரொம்ப என்னைய படுத்துறடி பொம்மா.. அதுவும் நேத்து இராத்திரிக்கு அப்புறம்.. சுத்தமா முடியல” என்று அவளின் அதரங்களில் மெல்லத் தன் அதிரங்களை ஒற்றி எடுத்தவன், வெளியே வேலைக்கு எப்பொழுதும் போல சென்று விட்டான்…
ஆண்டாளோ இது எதையும் அறியாமல் நன்றாக உறங்கி எழுந்தாள்.
உறங்கி எழுந்ததும் ஒரு சிறு தெளிவு வந்தது. அப்பொழுதுதான் அங்கயற்கண்ணி பேசியதெல்லாம் அவள் ஞாபகத்தில் ஒவ்வொன்றாய் வர, அதனை யோசித்துக் கொண்டு கீழே வந்தாள்.
“இந்த அத்தாட்சி யாரையோ லவ் பண்ணிஇருக்கா.. அந்த வீணாப் போனாவன் இவாளை விட்டுட்டு போயிட்டானு இப்ப கல்யாணம் வேணாம்னு சொல்லுறா.. பாவம்..! அவன் ஏமாத்திட்டு போனதும் எவ்வளவு மனசு உடைஞ்சு போயிருப்பா..! இந்த விஷயத்தை அத்தையாண்ட எப்படி நாம பக்குவமா எடுத்து சொல்றது? பாவம் அவாளும்.. இந்த விஷயத்தை கேட்டேள்னா துடிச்சு போயிடுவா.. இல்லன்னா அத்தாச்சிய தான் கோபமா திட்டுவா.. இப்ப என்ன பண்றது? நேக்கு ஒரு யோசனையும் வரலையே?” என்று யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு இதை கணவனிடம் தான் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தவள், அதன் பின்னே அத்தையை தேடிச் சென்றாள்.
“வா.. வா.. உன்னைய தான் கூப்பிடலாம்னு வந்தேன். எல்லோரும் கோவிலுக்கு கிளம்புறோம். நீயும் புடவைய மாத்திட்டு வெரசா வா..” என்று கலையரசி சொல்ல, ஆண்டாளும் தலையை ஆட்டிவிட்டு உடை மாற்ற சென்றாள்.
இவள் மெல்லிய ஜரிகை கொண்ட நீல நிற டிஸ்யூ சேலையை மாற்றி வந்தாள். அங்கயற்கண்ணி பொன்னிற சில்க் காட்டன் புடவையில் அழகுற வர, இரண்டு பேத்திகளையும் கண்டு மகிழ்ந்த சொக்கியம்மாள், இருவருக்கும் திருஷ்டி எடுத்தே மருமகளோடு அனுப்பி வைத்தார்.
இவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு தான் சென்றார்கள்.
வழக்கம் போல சிவன் தமேத பார்வதியை தரிசனம் செய்துவிட்டு பின் சுற்றுகளில் உள்ள தெய்வங்களை வணங்கி வரும் போது,
துர்கை சந்ததிக்கு முன் நின்றவர், தான் கையில் கொண்டு வந்திருந்த எலும்பிச்சை பழங்களை கண்ணியின் கையில் கொடுத்த கலையரசியோ, “இந்தா மொத்தம் இருபத்தி விளக்கு போடணும்.. போடு..! ஆண்டாளு நீயும் இவளுக்கு உதவு.. நான் இந்தா வந்திடுறேன்” என்று அக்கோவிலின் அர்ச்சகரும் ஜாதகம் கணிப்பவருமான நாராயண சாஸ்திரியை காணச் சென்றார். மகளின் திருமணம் கவலையை சொல்ல..!
எதுக்கு அத்தாச்சி.. இத்தனை விளக்கு ஏத்தனும்? பொதுவா
துர்க்கைக்கு வெள்ளி கிழமை தான் விளங்கு போடுவா? அத்த ஏன் ஞாயித்து கிழமை போட சொல்றா?” என்று கண்ணியுடன் சேர்ந்து எலுமிச்சை பழங்களை இரண்டாக நறுக்கிக்கொண்டு தன் சந்தேகத்தை கேட்டாள் ஆண்டாள்.
“உனக்கு தெரியுது துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை தான் விளக்கேத்தனும்னு.. உங்கத்தைக்கு தெரியலையே? ஒன்னு பண்ணு உங்க அத்தை வந்த உடனே நீயே உங்க அத்தை கிட்ட கேளு?” என்று உதட்டை பிதுக்கியவள், நறுக்கிய பழங்களை பிழிந்து சாற்றை எடுத்து விட்டு, அவற்றை பிரட்டி, அகல் போல மாற்றி, அவற்றின் மீது மஞ்சள் குங்குமம் வைத்து திரியை போட்டு விளக்கேற்ற ஆரம்பித்தாள் அங்கயற்கண்ணி.
“ஆஹாங்.. என்னை மாட்டி விட பார்க்குறேளா.. நான் சிங்க் மாட்டேன் பா” என்றவள், பழங்களை அறுத்து வைத்து விட்டு கையோடு கலையரசி கொண்டு வந்திருந்த ஒரு டவலில் கையை நன்றாக துடைத்தாள்.
“என்ன பால்கோவா.. வர வர ரொம்ப வெவரம் ஆயிட்ட..” என்றபடி அனைத்து விளக்குகளையும் ஏற்றி முடித்து எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து அங்கயற்கண்ணி கண்களை மூடி வேண்டிக் கொண்டாள்.
கண்களை மூடி தன் வேண்டுதலித் லயித்திருந்த அங்கயற்கண்ணியை சிறிது நேரம் கண் சிமிட்டாமல் பார்த்த ஆண்டாளும், தானும் கண்களை மூடி “அத்தாச்சிக்கு.. அவா மனம் விரும்பிய மாப்பிள்ளையாண்டானே வரணும் அம்பாளே..” என்று மனம் உருகி வேண்டிக் கொண்டாள்.
ஆண்டாள் கண்களை திறந்தும் கண்ணி இன்னும் தன் வேண்டுதலேயே இருக்க.. மெல்ல ஆண்டாள் சற்று நகர்ந்து வந்து கலையரசியை தேடினாள்.
எதிர்க்க வந்தவரோ கண்களை முந்தானையில் துடைத்தபடி வர.. “என்னாச்சு அத்த.. ஏன் அழுகுறேள்?” என்று பதட்டமாக அவரின் கைபிடித்து கேட்டாள் ஆண்டாள்.
அவளுக்கு பின்னே எட்டி கலையரசிப் பார்க்க “அத்தாச்சி இன்னும் வேண்டுதல் முடிச்சு வரல.. நீங்க என்னாண்ட என்ன இருந்தாலும் சொல்லுங்கோ அத்த” என்று ஆதரவாக கேட்ட மருமகளின் கையைப் பிடித்து அருகில் இருந்து படியில் அமர்ந்தவர்,
“என்னன்னு சொல்ல பாப்பா.. இவளுக்கு முன்னாடி ஒரு பையனை பார்த்தோம். எல்லா பொருத்தமும் இருந்ததுச்சு.. ஆனா இவ பிடிக்கலனு சொல்லிட்டா.. அதிலிருந்து நானும் நல்ல சம்பந்தமாக அமையணும்னு எல்லா வேண்டுதலும் பண்றேன். ஒன்னுமே சரியா நடக்க மாட்டேங்குது..! ஒன்னு தட்டி தட்டி போகுது. இல்லையென்னா.. எல்லாம் கூடி வந்தா பொருத்தம் இருக்க மாட்டேங்குது” என்பவரின் கைகளை ஆதூரமாக பற்றிக் கொண்டாள் ஆண்டாள்.
‘அத்தாச்சியின் ஒரு காதலைப் பற்றி சொல்லி விடலாமா?’ என்று அவளுக்கு உள்ளே ஒரு கேள்வி எழுந்தாலும்..
‘வேணாம்.. வேணாம்.. முதல்ல நாம அவராண்ட சொல்லுவோம்’ என்று வாயைத் திறக்காமல் அமைதியாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டாள்.
“அதான்டி பாப்பா.. இந்த கோயிலு அர்ச்சகருக்கு கொஞ்சம் ஜாதகம் பார்க்க தெரியும். அவர்ட்ட கேட்டுட்டு வந்தேன். இன்னும் ஒரு வருஷமாவது ஆகுமாம்.. அதுவும் நாம பாக்குறது அமையாதாம். அவ மனசுக்கு பிடிச்சவன தான் கை பிடிப்பாளாம்.. இவ அந்த பார்வதி மாதிரியாம்” என்றவரின் கண்கள் லேசாக கலங்கியிருந்தது.
“அட! இதுக்காவா அழுறேள்? அவா மனசுக்கு புடிச்சவரோட கல்யாணம் கட்டி நன்னா சந்தோசமா இருந்தா உங்களுக்கும் சந்தோஷம் தானே அத்த.. இதுக்கு போய் அழுவானேன்?” என்ற அவரின் கண்களை துடைத்தவள்,
“அடிப் பிரத்தட்ஷனம் பண்ணா கேட்டது கிடைக்கும்னு அம்மா சொல்லுவா.. நான் இந்த துர்க்கையை 101 தடவ அடிபிரதட்சனம் பண்ணிட்டு வரேன்.. ஆத்தாச்சிக்காக” என்று சொல்லும் மருமகளை தடுக்க முடியாமல் மகிழ்ச்சியோடு பார்த்தார் கலையரசி.
மகளுக்காக அடிப்பிரத்தட்சனம் செய்தவளை கண்டு உள்ளம் நெகிழ்ந்தது கலையரசிக்கு.
மகனுக்கு தன் தேர்வு சோடை போகவில்லை என்று திடமாக நம்பினார். இதேபோல மகளுக்கும் சொந்தத்தில் இருந்தாலும் பார்த்திருக்கலாம். ‘ஆனா சொந்தத்தில் யாரும் இல்லையே.. என் மருமகள போல நல்ல மருமகன்..!’ என்று பெருமூச்சு விட்டார்,
அங்கயற்கண்ணி வேண்டுதல் முடித்து அடிப்பிரதட்சனம் செய்யும் ஆண்டாளை நெற்றி சுருக்கி பார்த்துவிட்டு அன்னையின் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
அன்னையின் கலங்கிய கண்களும் அதனை மீறி தெரியும் ஒரு வித மகிழ்வும், அதுவும் கண்சிமிட்டாமல் மருமகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதை கண்டவள்,
“என்ன என் கல்யாணபுராணத்த அவகிட்டயும் சொல்லிட்டியா? அதான் பால்கோவா அடிபிரதட்சணம் செய்றாளா? என்று சரியாக கணித்தாள்.
“அண்ணனும் தங்கச்சிக்கு இதுல ஒன்னடி.. நான் என்ன செஞ்சாலும் என்கிட்ட என்ன செஞ்சீங்கன்னு கேக்குறது இல்ல.. நான் சொல்றதுக்கு முன்னாடி எல்லாத்தையும் சரியா கவனிச்சு விடுறீங்க.. இந்த புத்திசாலித்தனத்தை வாழ்க்கையில் காட்டின சரிதான்” என்று பார்வையை மகளிலிருந்து மீண்டும் மருமகளுக்கு மாற்றிக் கொண்டார்.
இரவு அன்று வெகுநேரம் கழித்தே அழகன் வீட்டுக்கு வந்தான். அவனிடம் அன்று கோவிலில் நடந்தவற்றை மெல்லிய குரலில் கலங்கிய கண்களோடு கூறி முடித்தார் கலையரசி.
“ம்ம்ம்..”
“ம்ம்ம்??”
“ம்ம்ம்!!” என்ற சொல்லை மட்டும் வெவ்வேறு மாடுலுஷனில் கூறிக்கொண்டே உணவு உண்டானே தவிர.. வேறு எதுவும் வாய்விட்டு அவன் கூறவே இல்லை.
கலையரசியும் மகன் ஏதாவது சொல்வான் மகளின் திருமணத்தை பற்றி.. என்று அவன் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க அவனோ ஒன்றுமே வாய் விட்டு கூறவில்லை.
“ம்ம்ம்.. நீ உண்டுடீயாமா?” என்று கேட்டவனிடம் அவர் இல்லை என்று தலையாட்ட..
“நேரமே உண்ட்டு போய் உறங்குமா” என்று அறிவுரை கூறியவனை கண்டு அவருக்கு அயர்ச்சி தான் கொண்டது மனம்.
“சரிய்யா..” என்றவரின் கலங்கிய வார்த்தையில் இருந்து அவர் கண்டிப்பாக உண்ணப் போவதில்லை என்று அறிந்தவன்,
அம்மாவை அருகிலேயே அமர வைத்து “முதலில் சாப்பிடுமா..!” என்று கண்டன குரலில் அதட்டலாக கூற.. அவரும் மீண்டும் கலங்கிய கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டு இம் என்று தலையாட்டியப்படி உண்டார்.
ஆனால் இட்லி ஒரு வில்லை கூட அவர் வாயிலிருந்து தொண்டைக்குள் போகவே இல்லை.
அதனை கண்டவன் ஒரு பெருமூச்சு விட்டவன் “என்ன இருந்தாலும் அவ யேன் தங்கச்சிங்கறது மாறப்போறது இல்ல அம்மோவ்.. அப்புறம் எதுக்கு இப்படி வெசனப்பட்டுடு உட்கார்ந்திருக்க.. கொஞ்ச நாளு அவ போக்குல அவள விடு. இதெல்லாம் சரியாகும். எப்ப பாத்தாலும் ஜாதகம் கட்டோட கோவிலு கோவிலா போயிட்டு இருக்காத.. அங்கேயும் இங்கேயும் அலையாத..! கூடவே வயசு பொண்ணையும் அழைச்சிகிட்டு சுத்தாத..!” என்று மகன் பெரிதாக அறிவுரை கூறியதும் தான் அவர் முகத்தில் சிறு மலர்ச்சி ஏற்பட்ட..
“சரிய்யா.. சரிய்யா” என்று வேகமாக தலையாட்டி கொண்டே உணவை உண்டு முடித்தார்.
அவர் உண்டு முடித்து அனைத்தையும் ஒதுங்க வைத்து அவர் அறைக்கு உறங்க சென்ற பின்னரே இவனும் மாடி எறி தன் அறைக்கு வந்தான்.
தங்கையின் வாழ்க்கை குறித்து அவனுக்கு இருக்காத கவலையா? ஆனாலும் அவன் சொன்னது போலவே.. சிறிது நாட்கள் அவளை விட்டு பிடிக்கவே முயன்றான் அழகன்.
அறைக்கு வந்தால் அங்கே நித்திரையில் இருந்தாள் அவனது பத்தினி..!
“சரியான தூங்கு மூஞ்சி டி பொம்மா நீ” என்றபடி அவள் அருகில் அமர்ந்தவன் அவளை ரசிக்க ஆரம்பித்தான்.
நேற்று அவளை ரசித்தது அவனது மனக்கண்ணில் வந்து அவனை தாப சூழலில் தள்ளியது. ஆனாலும் மனைவியின் வயது அவளின் தேக அக்கறையை கொண்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவனோ, தன்னை சுத்திப்படுத்தி வேட்டி வெள்ளை நிற கையில்லா பனியனோடு அவள் அருகில் படுத்தான் அணைத்தாற் போல்…!
அவளோ புரண்டு புரண்டு கால்களை உதிறிக் கொண்டு படுப்பதைக் கண்டவனுக்கு, அவள் செய்த நூத்தியொரு அடிபிரதட்சணம் ஞாபகம் வர,
“பொம்மா.. பொம்மா.. நீ குழந்தையா? குமரியா? டி..!” என்று சிரித்தவன்,
மெல்ல அவளின் கால்களை பிடித்து விட, அந்த சுகத்தில் ஆழ்ந்து உறங்கினாள் ஆண்டாள்.
ஆனால் அவனுக்கோ உறக்கம் வரவில்லை..!
நேற்று மிச்சத்தை இன்று தொடர வேண்டுமென அவன் இளமை தேடல் கொள்ள..
வெண் பஞ்சு மேகத்திலே உலா வரும் நிலாவும்.. சிலுசிலுவென்ற காற்றும்.. இடையூர் இல்லா தனிமையும்.. பெண்ணவளின் தளிர் மேனியும்..
அவளின் அருகாமையும்.. அழகனின் தாபத்தை பற்ற வைக்க..
தன் வசம் இழந்து அவள் வாசத்தை பிடித்தவன், அவளின் மார்பில் முகம் புதைத்தான்.
அவளோ அந்த உறக்கத்திலும் அவனை உணர்ந்து “மாமா..” என்று மெல்ல முனகியபடி அவனை இறுகத் தழுவினாள்.
தன் முகத்தில் இழையும் அவன் முகத்தில் அங்கங்கே முத்தங்களை வாரி இறைத்தாள் வள்ளலாக!!
தீண்ட தீண்ட போதவில்லை அவனுக்கு
அவள் மீதி
ருந்த மோகம்!!
திணறத் திணற வேண்டுமென கேட்டது அவள் இளமையின் மீது கொண்ட தாகம்!!
அவளை இழுத்து தன் போட்டுக் கொண்டே உறக்கம் கொண்டான் அழகன்..!
தொடரும்..
