காதலி 14

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 14

 

 

காவலனே.. களவாணி ஆனாயே என்று இவள் குமுற..

 

"யார் சொன்னா நான் உனக்கு செக்யூரிட்டி கார்ட் என்று? யோசி டி பால் டப்பா?" என்று அவளை குழப்பிவிட்டு இவன் குப்புறப்படுத்து, விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

 

அவளோ இன்னுமே ஒரு கையில் பெட்ஷீட்டை பிடித்துக்கொண்டு மறுகையால் தலையை தட்டி தட்டி யோசித்தாள். அப்பவும் இவனை பார்த்த ஞாபகமே இதுவரை அவளுக்கு வரவில்லை. 'எங்க பார்த்து இருப்போம்? எங்க பார்த்து இருப்போம்?' என்று திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டே இருந்தவளை சட்டென்று இடையை பற்றி இழுத்து, "தூங்கு கொஞ்ச நேரம்.. அப்புறம் யோசிக்கலாம். உன்னை கண்ட நாளிலிருந்து என் தூக்கம் போனது தான் மிச்சம்!!" என்றவன் இடையை வளைத்து கையை விலக்காமல் அவன் உறங்க, இவளுக்குத்தான் பெரும் அவஸ்தை ஆகிப்போனது.

 

 

எவ்வளவு நேரம் அப்படியே இருக்க?? தூக்கமும் வராமல் கொஞ்சம் அசைந்தாலும் மலைப்பாம்பு போல இறுக்க பிடித்திருக்கும் அவன் பிடி இன்னும் இறுக்கத்தான் செய்தது ஒழிய குறையவில்லை.. கொஞ்ச நேரத்தில் மெதுமெதுவாக அவன் கைகள் தளர ஆழ்ந்து உறங்கி விட்டான் என்று மெதுவாக அவனது கையை விலக்கிவிட்டு பெட்ஷீடடோடு இவள் குளியலறை புகுந்துவிட்டாள்.

 

 

குளித்து முடித்தவுடன் தான் "இவன் நம்மளை அலேக்கா தூக்கி போட்டு கொண்டு உள்ளே வந்துட்டான்.. இப்ப மாற்று உடைக்கு என்ன பண்ணுவது?" என்று இவள் யோசித்துக்கொண்டே பூந்துவாளையுடன் வெளியே வர உறங்கிக் கொண்டிருந்தவன் ஒரு கை மட்டும் எதிர்ப்புறம் உள்ள கப்போர்ட்டை காட்டியது.

 

 

தூக்கத்திலா இருக்கான்??? இல்லை முழித்து விட்டானா?? என்று யோசனையோடு நின்றிருக்க..

 

"நான் தூங்கிட்டு தான் இருக்கேன் பால் டப்பா!" என்று மெல்ல வந்தது கரகரப்பான ஆண்மை நிறைந்த அவன் குரல்..

 

"எவனாவது தூங்குபவன் நான் தூங்கி கொண்டு இருப்பேன் என்று சொல்வானா? இவனது அலும்புக்கு அளவே இல்லை!! ஏடு கொண்டலவாடா!!" என்று அவன் கைகாட்டிய திசையில் இருந்த கதவை திறக்க.. அங்கேயிருந்த உடைகள் பகட்டாக இல்லை என்றாலும் பார்ப்பதற்கு கண்ணியமான உடைகளாக இருக்க.. அதில் பிடித்ததை எடுத்துக்கொண்டவளுக்கு உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு!! உள்ளாடைகள் முதல் கொண்டு இவளின் அளவை இவன் எப்படி தெரிந்து கொண்டான்?? அவற்றை எடுக்கையிலே முகம் மட்டும் திருப்பி உறங்குபவனை பார்க்க…

 

 

"எல்லாம் தெரியும்!! தெரியும்.. தெரியும்!! சும்மா சும்மா திரும்பி பார்க்காதடி.. தூங்க முடியல. மனுஷனை கொஞ்ச நேரம் தூங்க விடுடி!!" என்று அலுத்த குரலில் குப்புறப்படுத்தவாறே அவன் திரும்பி படுத்துக் கொள்ள..

 

'இவனுக்கு கண்ணு தலையில் இருக்கா இல்ல உடம்பு பூரா இருக்கா?' என்று யோசனையோடு அவள் அருகே இருந்த தடுப்புக்கு சென்றாள் உடையை மாற்றிக் கொள்ள..

 

உடைமாற்றி வந்தவள் அறைக்குள்ளேயே இருந்தாள். எவ்வளவு நேரம்தான் அறைக்குள்ளேயும் அடைந்து கொண்டிருப்பது? வயிற்றில் சின்னதாக ஆரம்பித்த சவுண்ட் எஃபெக்ட்ஸ் நேரம் ஆக ஆக டிடிஎஸ் சவுண்டாக மாறியது. 

 

"அச்சச்சோ.. பசி எடுக்குதே?? அப்படி என்னதான் இருக்கு இந்த வீட்டில் பார்த்துவிடுவோமே.." என்று மெல்ல கீழே இறங்கி சென்றாள்.

 

கீழே ஆங்காங்கே சீருடையில் சில நபர்கள் அங்கும் இங்கும் நடப்பதும்.. ஒரு சிலர் நின்று கொண்டிருப்பதும் தெரிய.. இவள் அமைதியாக இறங்கி சோபாவில் அமர்ந்து கொண்டு அனைவரையும் அவதானித்துக் கொண்டிருந்தாள். கண்கள் என்னவோ அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாலும் மனமோ.. 'என்னை பாரடி.. 

என் வயிற்றை பாரடி.. 

என் பசியை பாரடி.. 

அதை போக்கடி!' என்று பயங்கரமாக அலறிக் கொண்டிருந்தது.

 

 

சிறிது நேரத்தில் அவள் முன் ஜிபூம்பா போட்டதுபோல பிரசன்னமானாள் ஹரிதா. சுட சுட டீயை அவளிடம் நீட்ட.. அப்பாடி என்று பேருக்கு கூட மறுக்காமல் வாங்கிக் குடித்தாள் வாஹினி.

 

அவள் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள் "மேடம் டிபன் ரெடியா இருக்கு. நீங்க சாப்பிடுறீங்களா? இல்லை ஹெட் கூட.." என்று அவள் இருக்க..

 

"உன் தலை…" என்று கடுமையாக ஏதோ பேச வந்தவள் இவளை சாடி என்ன பிரயோஜனம் என்று புரிந்து "உன் தலை வரும்வரை என் வயிறு தாங்காது. வந்து டைனிங் டேபிள் இருக்கும் இடத்தை காமிச்சுட்டு நீ போ" என்றாள்.

 

"நேற்று அவன் என்னை படுத்திய பாட்டுக்கு யானைப் பசி பசிக்குது எனக்கு!! இதுல தலை வர வரைக்கும் வெயிட் பண்ணுமுமாம்ல.. நாங்க எல்லாம் சோத்தை கண்டால்  

பொங்கி எழுற ஜாதி!" என்று ஹரிதாவோடு நடந்தவாறே முணுமுணுத்தாள்.

 

 

சரி என்று ஹரிதா அழைத்து சென்று அங்கு பதார்த்தங்கள் வைக்கப்பட்ட டைனிங் டேபிளை காட்ட.‌ இருப்பவற்றை தட்டில் பரிமாறி கொண்டு வேகவேகமாக உண்ண ஆரம்பித்தாள். அருகில் இருந்து அவ்வப்போது அவளுக்கு தண்ணி தேவையான சைடிஸ் மற்றும் அங்கு என்னென்ன இருக்கு என்பதை மெல்லிய குரலில் கூறிக் கொண்டிருந்தாள் ஹரிதா.

 

 

ம்ம்.. என்ற வார்த்தையை பல மாடுலேஷனில் கூறி நேற்று இரவுக்கும் சேர்த்து உணவை விழுங்கிக் கொண்டிருந்தாள் வாஹினி.

 

 

"நீங்க சாப்பிடலையா??" என்று மினி இட்லியை சாம்பாரில் குளிப்பாட்டி உள்ளே தள்ளிக் கொண்டே கேட்க..

 

"நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சு மேடம்! எல்லாம் டைமுக்கு செய்யலைனா ஹெட்டுக்கு கோபம் வரும். அதுல எங்க சாப்பாடு விஷயமும் ஒன்னு!

ஃபெர்பெக்ட் டைம் மேனேஜ்மென்டர்"

என்று பெருமை பொங்கி வழிந்தது அவளது ஹெட்டை பற்றி..

 

 

"ம்க்கும் பொல்லாத டைம் மேனேஜ்மென்ட்.. பாவி நைட் என்னை எப்போ தூங்க விட்டானோ தெரியல? காலையில் எழும்போது அவ்வளவு மயக்கமாய் இருந்தது" என்று தனக்குள் மட்டுமே பேசிக் கொண்டாள்.

 

 

எப்பொழுதும் வாஹினிக்கு ஒரு பழக்கம். எல்லோரும் முதலில் இனிப்பு எடுத்துக் கொண்டால் இவள் கடைசியாக தான் உண்ணுவாள்.

 

அதே போல.. இவள் உண்டு கொண்டிருக்க.. அருகில் நின்று கொண்டிருந்த ஹரிதாவின் உடல் நிலையில் திடீரென்று ஒரு மாற்றம். உடல் விறைக்க அட்டென்ஷனில் அவள் வந்து நிற்க.. எதற்கு இப்படி நிற்கிறாள் என்றவாறே ஹரிதா கண் சென்ற திசையைப் பார்க்க அங்கு மாடி படியில் வேகமாக இறங்கிக்கொண்டு இருந்தான் ஜித்தேந்தர்.

 

 

இதுவரை ஏனோ தானோ என்றிருந்த தலை முடி சீராக வெட்டப்பட்டு.. ஜெல் தடவி வாரி இருக்க.. அவன் உடலை இறுக்கி பிடித்திருந்த உயர்ரக கருநீல சட்டையும்.. அதற்கு கான்ட்ஸ்ட்ராக அவன் போட்டுயிருந்த வெளிர் நிற பேண்டும்.. இடது கையில் இருக்கும் பட்டை வாட்சும் மற்றும் வலது கையில் இருந்த காப்பும் சட்டையை தாண்டி தெரிந்தது. இதுவரை இருந்த ஜித்து இல்லை இவன் முழுதாக மாறிய ஜித்தேந்தர்.

 

அவன் நடந்து வந்ததை கொஞ்சம்கூட கூச்ச நாச்சம் இல்லாமல் வாயை பிளந்து இவள் பார்க்க.. அருகே வந்தவன், அவளின் பார்வையை படித்து.. ம்க்கும் என்று தொண்டையை கணைக்க.. 

 

சுதாரித்தவள் தன் பார்வையை திருப்பிக்கொண்டாள். அருகே ஹரிதாவும் அவனை தான் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

 

இவளுக்கு திகுதிகுவென்று மேனி எல்லாம் எரிந்தது. இவளை அந்த கதாபாத்திரமாக நடிக்கச் சொன்னால், நிஜமாகவே எனக்கு சக்களத்தியா மாறிவிடுவா போலவே என்று!!

 

 

"பாஸ்.. அவர் ஹெட் இஸ் பேக்!! யூ ஆர் லுக்கிங் கிரேட் அண்ட் சோ ஹேண்ட்சம்!!" என்று புகழாரம் ,வேறு.. எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றினாள் ஹரிதா..

 

 

ஹரிதாவின் மீதிருந்து பார்வையை விலக்காமல் பொசு பொசு என்று மூச்சை விட்டிக்கொண்டிருந்த வாஹினியைப் பார்த்ததும் இன்னும் சுவாரசியம் ஜித்துக்குள்.

 

 

அவளை நெருங்கி வந்தவாறு தன் வலது கையிலிருந்த சட்டை பட்டனை கழட்டி விட்டவன் "எங்கேயோ கருகுற வாசனை வருதே ஹரிதா?" என்று ஜித்து மூக்கை தேய்த்தவாறு கேட்க.. மூச்சை உள்ளிழுத்து உள்ளிழுத்து முகர்ந்த ஹிரிதா ஒன்னும் உணராமல் "அப்படி ஒன்னும் வரலயே பாஸ்!!" என்று கூறியவள், அவனின் அழுத்தமான அந்த பார்வையை புரிந்து கொண்டவள் சட்டென்று அங்கிருந்து விலகி கிச்சனுக்குள் ஓடினாள்.

 

 

அவன் கருகுற வாசம் என்றது அவளை தான் எனப்புரிந்து, அவனை முறைத்து பார்த்தாள் வாஹினி. 

 

ஆனால்.. அந்தோ பரிதாபம்!! கண்களுக்கு தொலைவில் இருந்த போது தோன்றிய அந்த அவனின் கம்பீரம் அருகில் இன்னும் கவர்ச்சியாக தெரிய..‌ கண்களை கனலை கக்க முடியாமல்.. அந்த கவர்ச்சியில் விழ, விலக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனின் அந்த கண்கள் இன்னும் இன்னும் காந்தமாய் அவனுள் இழுப்பதுபோன்ற ஒரு பிரமை..

 

"என்ன சாப்பாடு?" என்று அவன் கேட்க அது எங்கோ ஆழ் கடலில் இருந்து கேட்கும் மெல்லிய குரல் போல் அவள் காதை சென்றடையவில்லை.

 

 

பேந்த பேந்த விழித்தவாறு அவள் இருக்க அவள் முன்னால் தட்டில் இருந்த பொங்கலையும் வடையையும் பார்த்தவன் பாதி சாப்பிட்ட கையோடு இருந்த அவளின் கையை பார்த்தவாறு "எனக்கு இல்லையா?" என்று ஒருவித மோகன குரலில் கேட்டான்.

 

 

அந்த குரல் அவளை ஏதோ செய்தது. "எது? எது? உனக்கு இல்லையா?" என்று புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள், கண்கள் மட்டும் விலக்கவே முடியவில்லை அவன் பார்வையிலிருந்து..

 

"வேற‌ என்ன? சாப்பாடு தான் நான் கேட்டது!" என்றவன் மெல்ல வாய் திறந்து அவளிடம் காட்ட..

 

"இது எச்சில்.." என்று ஏதோ கூற வந்தவள் அவன் கண்களும் சிரிப்பில் துடிக்கும் மீசையும் சொன்ன செய்தியில் வெட்கம் பிடுங்கித் தின்க முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

"இப்படி பேசுற வேலை வைச்சுக்காதே.. போய் நீயா சாப்பிடு. என்னையும் சாப்பிட விடு!" என்றவாறு சுற்றி முற்றி இவள் பார்க்க.. அங்கே இங்கே ஆட்கள் இருந்தாலும், அவர்கள் யாரும் இவர்களை கவனித்தது போல் தெரியவில்லை. ஆனால் இப்படி பப்ளிக்கா கேட்கிறானே என்று அவளுக்குத் தான் ஒரு மாதிரியாக இருந்தது.

 

அதையெல்லாம் கண்டு கொண்டால் அவன் ஜித்தேந்தர் அல்லவே!! அவன் இன்னும் நெருங்கி நிற்க அவனின் நெருக்கம் எப்பொழுதும் இல்லாத புது அவஸ்தையாய் அவளுள்…

 

 

"குடுடி.." என்று காது மடலில் கற்றை மீசை தீண்ட கேட்க.. மெல்ல தன் போல தலை மறுப்பு சொல்ல.. கையை இழுத்து கொண்டாள். ஆனால் அப்படியெல்லாம் விடுபவனா அவன்??அவள் கையைப் பிடித்து பொங்கலை வாங்கியவன், அவள் ஒவ்வொரு வெண்டைப்பிஞ்சு விரலையும் அதிலிருந்த பொங்கலையும் மெல்ல தன் இதழ்களால் ரசித்துச் சப்பி சுவைத்தான்.

 

 

அவன் இதழ் பட்ட இடமெல்லாம் சிலிர்த்து அடங்கியது பெண்ணவளுக்கு!! இதுவரை அறியப்படாத உணர்வு குவியல் அவளை தாக்கியது. அவளின் கன்னங்கள் இரண்டும் செவ்வண்ணம் பூசிக்கொள்ள… பார்வையை திருப்பிக் கொண்டவளின் உடல் முழுவதும் பாய்ந்தது சூடான ரத்தம்.. 

 

அவளின் பார்வை மாற்றத்தை எல்லாம் படித்துக் கொண்டுதான் இருந்தான். "ரொம்ப நல்லா இருக்கு.. சர்க்கரை பொங்கல்?!" என்றான் கண்ணடித்து..

 

"வாட்?? இது மிளகு பொங்கல் ரா!" என்று விழி விரித்து சொல்ல.. 

 

"அது சர்க்கரை பொங்கல் தான்!!" என்றவன் கண்கள் சொன்ன சில்மிஷத்தில்.. அவள் கீழ் உதட்டை கடித்து கொள்ள.. 

 

"ம்ப்ச்.. விடுடி.. எனக்கு வலிக்குது"

என்றவன் பெரு விரலால் அவளது இதழ்களை விடுவித்தவனின் விரல், அங்கேயே ஆரய்ந்தது அச்செவ்விதழின் மென்மையை..

 

அவள் கண்களில் மெல்ல கிறக்கம் குடிக்கொள்ள.. இது அவனுக்கு போதை ஏற்ற.. அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன் "காலையிலேயே கொல்லாதடி!! வேலை நீண்டு கிடக்குடி!!" என்றவனின் இதழ்கள் அவளது வெளிர் நிற பின் கழுத்து பிரதேசத்தில் உழுதுக் கொண்டிருந்தது.

 

 

"விடு ஜித்து.. எல்லோருக்கும் காட்சி பொருளா என்னை மாத்தாத!!" என்றாள் அவஸ்தையான குரலில்..

 

 

"ஒருத்தன் கண்ணும் இங்கே பார்க்காது. பார்த்ததுனா.. அந்த கண் இனிமே அவன் உடலில் இருக்காது!" என்று ஒருவித ஆளுமையோடு உரைத்தவன்..

 

"சீக்கிரம் நேரம் ஆகுது எனக்கு.. ஊட்டுடி!!" என்று குழைந்தது அவனது குரல் நொடி நேரத்தில்.. முன்னாலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அவளை அமர்த்தி.. ம்ம்ம் என்று இவன் வாயை திறக்க.. இவளுக்கு தான் சங்கடமாக இருந்தது, அனைவரும் பார்க்கும் வண்ணம் இவனுக்கு ஊட்டிவிட..

 

ஆனால் அந்த சங்கோஜம் எல்லாம் அவனிடம் இல்லை. "சீக்கிரம்.. சீக்கிரம்.." என்று அவன் உந்த.. வேறுவழியின்றி தன் கண்களை சுழல விட்டவாறு அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

 

அப்பொழுது மெகா வந்து அவன் அருகில் நின்று ஒரு சல்யூட் அடிக்க..

திரும்பிப் பார்த்தவள் அவனை முறைத்தாள். "நீயும் கள்ளக் கூட்டு தானே!! இதில் பாசமாய் என்ன நடிப்பு!!" என்று அதில் அர்த்தம் பொதிந்து இருந்தது.

 

 

"சொல்லு ரகு!!" என்று அவனிடம் கூறி விட்டு, "ம்ம் ஆனா" இவளிடம் வாயை காட்ட இவள் வெகு அவஸ்தையோடு அவனுக்கு ஊட்டலானாள்.

 

 

"பாஸ்.. கர்னல் ரெண்டு தடவை காண்டாக்ட் பண்ணிட்டாரு. உங்ககிட்ட பேசணுமாம். வேனியூ பிக்ஸ் பண்ண சொல்கிறார்" என்று கூற, சிறிது நேரம் யோசித்தவன் "மூன்று நாள் நான் என் பால் டப்பாவோட பிஸியோ.. பிஸி. அவர் நினைக்கும் போது எல்லாம் அவரை பார்க்க முடியாது என்று சொல்லிவிடு!" என்று கூலாக அவன் சொல்ல.. 

 

 "இந்த பக்கி தெரிஞ்சு பேசுதா? தெரியாம பேசுதா? மூணு நாள் என் கூட பிஸினு சொல்கிறான். கர்னல் அங்கிள் என்ன நினைப்பார்? வேலை என்று சொன்னால் கூட பரவாயில்லை .ஆனால் இவன் என் கூட பிஸி என்கிறான்.. ஐயோ ஆண்டவா!!" என்று அவள் பயத்தில் வெடவெடக்க..

 

"நோ.. நோ.. பால் டப்பா!! நீ ஏன் பயப்படுற? கர்னல் உன் அப்பாவோட பிரண்ட். அதைத் தாண்டி உங்க அரண்மனை செக்யூரிட்டி போஸ்ட்ஸ இருப்பவர். அவ்ளோ தான்!! அவருக்கு நீ பதில் சொல்லனும் என அவசியம் எல்லாம் இல்லை! நீ பதில் சொல்ல வேண்டிய ஒரே ஆள் யார் தெரியுமா?" என்று அவன் கேட்க..

 

 

"நான் பதில் சொல்ல வேண்டியது என் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தான். இப்படி யாருனே தெரியாது உன் கூட வந்து தங்கி இருக்கேன் இல்லையா? எல்லாம் எனக்கு தேவைதான்!!" என்றாள் கலங்கும் குரலில்.

 

"இல்ல பேபி.. உன்னை கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. நீ அந்த அரண்மனையின் ராணி!! நீ பதில் சொல்ல வேண்டிய ஒரு ஆள் நான் மட்டும்தான்!! நான் மட்டுமே தான்!! ஆனா என்கூட இருந்ததற்காக நான் எப்படி உன்கிட்ட ஒரு கேள்வி கேட்பேன்?" என்று சற்று கம்பீரமாக ஆரம்பித்தவன் குரல் கடைசியில் சரசமாக முடிய..

 

 

வார்த்தைகள் மட்டும் மெல்ல அவனது கைகளும் அவளது கன்னங்களைத் தட்டி சில சில்மிஷங்களைச் செய்ய "எல்லாத்தையும் பப்ளிக்கா தான் செய்வியா??" என்று அவள் முறைக்க..

 

"அவன் எல்லாம் அப்பவே போய்ட்டான்! திரும்பி பாரு.." என்க..

 

மெகா, ஜித்து இவளிடம் பேச்சை ஆரம்பித்த உடனே அங்கிருந்து சென்றிருந்தான். "நல்ல வருவீங்க டா நீங்க எல்லாம்!!" என்று அவள் எழ போக "முழுசா ஊட்டிவிட்டு போடி பால் டப்பா.. பாதி சாப்பாட்டில் பட்டினி போனால் பாவம் உன்னை தான் சேரும்!!" என்றான் முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு..

 

அதன்பின் "ஊட்டி தானே.. இரு!" என்றவள் அருகில் இருந்த மொத்த பொங்கலையும் தன் தட்டில் இடம் பெயர்த்து மலைபோல் குவிந்து இருந்த நடுவில் குழி பறித்து அதில் சாம்பாரை ஊற்றிறவள், சேர்ந்து ஒரு பெரிய உருண்டையாக அதாவது யானை கவளம் போல மாற்றி அவன் முன்னே நீட்ட "ஓஹ் பேபி!! நீ சாப்பிடுவது போலவே என்னையும் நினைச்சு கொடுக்காதே என்ன தான் நான் யானையோட‌ ஆளா.. ஐ மீன் உன் ஆளா இருந்தாலும்.. இப்படி எல்லாம் சாப்பிட்டதே இல்லை!!" என்றான் குறும்பு மின்ன..

 

 

அவள் முறைத்தவள், "உன்னை.. நான் யானையா? யானையா?" என்று அவனுக்கு ஊட்டிவிட்ட ஆரம்பிக்க இல்லையில்லை அப்பி விட ஆரம்பிக்க.. அவள் கையை பிடித்து தடுத்தவன், "இன்னும் நீ மாறல பால் டப்பா..!!" என்றான் கரகரத்த குரலில்..

 

 

அதில் அவள் நிமிர்ந்து அவனை பார்க்க.. தன் பார்வையை சட்டென்று மாற்றியவன், தட்டை தன் புறம் இழுத்து அவளுக்கு ஊட்டி விட்டு இவனும் சாப்பிட்டு விட்டு எழுந்தான்.

 

 

அதன் பிறகு அவனைப் பார்க்கவே முடியவில்லை. அவன் எங்கு செல்கிறான்? இருக்கிறானா இல்லையா? என்பது கூட தெரியவில்லை. ஆனால் ஹரிதா இவள் செல்லும் இடமெங்கும் பின்னால் நிழல் போல பாதுகாப்புக்கு தொடர்ந்து கொண்டிருந்தாள்.

 

 

முதலில் அது அவளுக்குப் பெரிய அவஸ்தையாக இருந்தாலும் ஹரிதாவை திட்டி அனுப்பினாலும் ஹரிதா இருந்த இடத்தை விட்டு ஒரு இன்ச் கூட அசையாமல் இருக்க.. "உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!" என்று தன் போல நடை பயின்று அந்த வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.

 

அந்த இரண்டு நாட்களும் ஜித்தேந்தர் எப்பொழுது எங்கே இருந்து வருவான் என்று தெரியாது வருபவன், சட்டென்று இதழ் உரசலோடு மெல்லிய முத்தத்தையும்.. சில சமயங்களில் இதழ்களே விண்டுவிடும் வண்ணம் ஆழ்ந்த முத்தத்தையும் கொடுத்து விட்டே தான் செல்வான்.

 

அன்று இரவுக்கு பின் அவளை அவன் நெருங்கவும் இல்லை இரவு தூங்க எப்பொழுது வருகிறான் என்று கூட அவளுக்கு தெரியாது. சில சமயம் இரவு இடையில் எழுந்தால், அவனது கைகள் அவளை அணைத்து வண்ணமே இருக்கும்.

விடிந்து பார்த்தால் அவன் இருந்த தடமே இல்லாமல் இருக்கும்.

 

"என்னை பைத்தியம் ஆக்காம விட மாட்டான் போல!!" என்று தலையை உலுக்கிக் கொண்டு காலை வேலையை முடித்து அவள் சாப்பிட செல்ல ஏனோ மனம் வரவில்லை.

பால்கனி வழியே அங்கிருந்த மலைகளையும் இயற்கை காட்சிகளையும் பார்த்து கொண்டிருந்தவள் கண்களில் இருந்தது அந்த காட்சி!!

 

கர்னலின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து நின்றிருந்தான் ஜித்தேந்தர் தஸ்யூதன்!!

 

இவள் பதறி அவர்களை நோக்க ஓட.. அதற்குள் அவள் காதில் விழுந்தது துப்பாக்கி சுடும் சத்தம்!!


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top