கேரள ஜோசியர் கூறிய ஒவ்வொரு விடயமும் அவர்களுக்கு தலை சுற்றவே வைத்தது. சந்தோஷ செய்தி கேட்க போய், இடி விழுந்த கதையில் ராணி முகத்தை தொங்க போட்டுக் கொண்டு வருவதை கௌதமன் தீப்பார்வை பார்த்தார்.
"ராணி, அவர் தான் மாப்பிள்ளை வீட்டுல சொல்லி குலசாமி கோவிலுக்கு போயிட்டு வர சொல்லிருக்கார்ல. நீ ஏன் இப்படி மூஞ்சியை வச்சுருக்க?" என தங்கையின் முக மாற்றம் அறிந்து ஆறுதல் கூற, அவர் தான் எதையும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை.
"என்னமோ அண்ணே என் மனசுக்கு சரின்னு படல.."
"நீ வேணும்ன்னா வேற மாப்பிளை அழைஞ்சு திரிஞ்சு பாரு. இன்னேக்கி மாப்பிளை பாக்குறது எவ்வளவு கஷ்ட்டம்ன்னு பாத்தா தான் உனக்கு தெரியும்.
நீ வேணும்ன்னா உன் மக ஜாதகத்தை எடுத்துட்டு போய் நல்ல ராஜ வம்சத்து மாப்பிளையை பாத்துட்டு வா.." என்ற கணவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, இதற்கு மேல் அவர் பேசிடவா முடியும்? கப்சிப் என வாய் பொத்திக் கொண்டார் ராணி.
கோயம்புத்தூர் ஜங்கஷனில் பாலக்காடு செல்ல ட்ரைனுக்கு காத்துக் கொண்டிருந்தாள் ராசிகா. ட்ரெயின் வர ஒரு மணி நேரம் இருக்கிறது என்ற தகவல் வேறு, குரல் பதிவாக அவ்வப்போது ஒலித்துக் கொண்டிருந்தது.
'அதற்குள் அவன் வர மாட்டானா? ஒருமுறையாவது பேச மாட்டானா? பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டும்.' என யோசித்திருந்தவளுக்கு கிடைக்கப்போவது ஏமாற்றமே என அவள் உணரவில்லை.
ஓரிரு முறை பிரதீஷிற்கு அழைத்து பார்த்தாள். தொடர்பு எல்லைக்குள் இல்லை என வர அழுகை முட்டிக்கொண்டு நின்றது. மூக்கை உறிஞ்சி அடக்கிக் கொண்டாள். பொது இடம் என்பதால் யாரும் பார்த்தால் அவமானமாகி விடுமே என்ற உணர்வில் தான்.
அவனது முகமும், அதிகாலை கண்ணாடி முன் தலை கோதி நின்று இருந்ததே கண் முன் வந்து போனது.
நினைவும் நீ!
நிழலும் நீ!
நிஜத்தில்
கரம் பற்றுவாயா?
'மிஸ் யூ பிரதீஷ்.. எப்போ பாக்க போறேன்னு தெரியல..' என அவனது எண்ண அலைகளில் இருந்தவளை கலைத்தது என்னவோ ஆடவன் குரலே.
"ராசிகா.. ராசிகா.."
அகம் நிறந்தவனையே நினைத்து இருக்க, சுற்றி முற்றி நிகழ்வது கூட கண்களில் காட்சி படமாக ஓடியது தவிர அவள் கவனிக்கவில்லை.
"ராசிகா" என்றவன் தோளை தட்ட, சடாரென எழுந்தாள். எதிரே அஸ்வத் நின்றிருந்தான்.
"அஸ்வத் எப்போ வந்த? எப்படிருக்க?"
ஆர்த்தி, அண்ணன் வந்ததும் ராசிகா ஊருக்கு செல்கிறாள் என்றதுமே ஓடி வந்து விட்டான். விஷயமறிந்தால் என்னவெல்லாம் பேசுவானோ?
"ஏன் அதுக்குள்ளே கிளம்பிட்ட?"
"இல்லை.. வேலை இருக்கு.." என்றவள் முகம் வாடி போய் இருப்பதை ஆராய்ந்தவன், "சாப்பிட்டயா?" என்க..
அவளும் இல்லை என தலையசைக்க, அவளை அமரச் சொல்லி அருகில் அமர்ந்து கொண்டான்.
முதல் முறை அவனது அருகாமை நெருடலை தந்தது. பேச கூட மனமில்லை. மையலின் நாயகன் வருவான் என எதிர்பார்த்தவளுக்கு இவனது வருகை பெரும் ஏமாற்றத்தை தந்ததோடு, அவனிடம் மட்டுமல்ல யாருடனும் பேச முடியாத உணர்வில் சிக்கி தவித்தாள்.
"ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு எதுவும் சரில்லையா?" என்றவன் விழிகள் வாஞ்சையாக ஆராய, அவளோ புருவம் சுருக்கி ஏறிட்டாள். அதிலே அவளை படித்தவன், "என்ன ஆச்சு எதுவும் திருட்டுத்தனம் பண்ணுனயா?" என பட்டென கேட்டு விட்டான்.
"ஆங்.. அதெல்லாம்.. ஒண்ணுமில்ல.." என்றவள் அங்கும்மிங்கும் தலையசைக்க, அவனுக்கு தான் சந்தேகம் வலுத்தது.
"இல்லையே.. முகமே.. சரியில்லையே.." என்றவன் மேலும் அவளை விழி இடுங்க பார்க்க, "பிரதீஷ்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.." என்றாள்.
அவன் அவளது முகத்தையே ஆராய்ந்து கொண்டிருந்ததால் ஆயிழையவள், மனதில் நின்றவன் பெயரைக் கூறியதை கூட அவன் கவனிக்கவில்லை.
"சரி உடம்பை பாத்துக்க போன் பண்ணு. நான் இப்போ தான் வந்தேன். வந்ததும் உன்னை பாக்க வந்தா, நீ ஏதோ திங்கிங்ல இருக்க. எதுவா இருந்தாலும் தள்ளி வச்சுட்டு நார்மல்லா இரு. எப்போவும் உன் கூட இருப்பேன்." என்றவன் தலை கவிழ்ந்து இருந்த அணங்கவளின் முகத்தை பார்க்க குனிந்தான்.
பாவம் அவன் அக்கறையில் பேசியது கூட அவள் காதில் விழாத அளவு, அவனை பற்றிய சிந்தனையில் நீந்திக் கொண்டிருந்தாள்.
"ராசிகா!"
"ஆங்.. சொல்லு அஸ்வத்.." என்றவள் சட்டென தலையை சிலுப்பிக் காண, அவனோ எழுந்து கொள்ளவும் அவளும் எழுந்தாள்.
"கிளம்புறேன் உடம்பை பாத்துக்கோ.. வீட்டுல நம்ம விஷயமா பேசலாம்ன்னு இருக்கேன்.."
"ம்ம்ம்.. ஓகே பாத்துக்கிறேன்.."
கிறுக்குத்தனம் செய்து விட்டாள் இவ்விடயத்தில் அவன் கூறியதை செவிதனில் நிதானத்தோடு வாங்காது. அவனோ, அவளின் தலையசைப்பில் ஏக ஆனந்தம் அடைந்தவன் ரசனையோடு நங்கையவளை பார்த்து விட்டு மனமின்றி விடை பெற்றுக் கொண்டான்.
இரண்டு நாட்களுக்கு பின்..
பிரதீஷ் குடும்பத்தினர் டூர் சென்றிருந்தனர். சாவித்திரி பாட்டியும், ருத்ரா மாமியார் குடும்பத்தார் வருவது எப்போதாவது என்பதால் பல்வேறு இடங்களை கண்டு ரசித்து விட்டு இப்போது திருக்கடவூரில் அமிர்த சொரூபமாக காட்சி தரும் எம்பெருமானை தரிசித்துக் கொண்டிருந்தனர்.
திருக்கடவூர் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலுல் ஒன்று. அதுவும் மார்க்கண்டையர் உயிர் காக்க சிவன் அவருக்கு காட்சி தந்த இடம் இது என்பதால், அங்குள்ள சிவபெருமானை அமிர்தகடேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அபிராம பட்டரால், அபிராமி அந்தாதி பாடப்பட்ட ஸ்தலமும் இதுவே!
சாமி தரிசனம் முடித்து விட்டு, சுற்று பிரகாரத்தில் ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர். கல்யாணி அவர்கள் மாமியாரிடம் மகனை பற்றி பேசி, மன பாரத்தை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். பாவம் அவருக்கென அவர் பேச்சை கேட்கும் ஒரு ஜீவனாக இருப்பது சாவித்திரி பாட்டி தான்.
வழக்கமாக சில மாமியார் மருமகளுக்கு ஏழாம் பொருத்தமாக இருக்கும். இங்கு இருவரும் அம்மா, மகள் போல் பேசிக்கொள்வது தெய்வானைக்கு தான் சில நேரம் அடிவயிற்றில் புகை வரும்.
அண்ணன் தம்பி, அக்கா தங்கையை கல்யாணம் செய்துள்ளதால் எவ்விஷேஷம் வந்தாலும் திருவிழா தான் அவர்கள் குடும்பத்திற்கு. முன்பெல்லாம் அனைத்திலும் கலந்து கொள்வான் பிரதீஷ். எப்போது நம்பிக்கை கெட்டதோ அன்றிலிருந்து அவனது பாதையே வேறு.
"அவனும் வந்திருந்தா நல்லாருக்கும் அத்தை. எப்படி இருக்கான் என்ன பண்ணுறான்? எங்க இருக்கான் என்னனு கூட தெரியல.."
"அவன் எங்க இருந்தாலும் ராஜாவா தான் இருப்பான்.."
"அத்தை போன் பண்ணி ஊருக்கு போய்ட்டானா கேளுங்க."
"காலையிலேயே போன் பண்ணேன் கல்யாணி. இன்னேக்கி வேலைக்கு போறதா சொன்னான். இப்போ அடிச்சா என்னையவே திட்டுவான்.."
"ப்ச்.. என்ன பையன் இப்படி இருக்கானே. அம்மா தானேன்னு கொஞ்சம் மனசு மாறுனா என்ன? காயத்தோட எப்படி இருக்கான் என்னனு தெரியல. பேசலைனாலும் நம்ம கூட வந்திருக்கலாம்.." என அவர் ஆற்றாமையாக கூற..
"நான் வேணும்ன்னா சிகப்பு கம்பளம் வாங்கி விரிக்கிறேன் வர சொல்லு அவனை.." என தனக்கு பின்னால் இருந்து கேட்ட சதாசிவம் குரலில் அரண்டு திரும்பி பார்த்தார்.
"சதாசிவா, சும்மா ஏதாவது வாய்க்கு வந்ததை பேசாதே. அவன் ஆயிரம் தப்பு பண்ணட்டும் அவன் உன் பிள்ளை.." என மகன் அடுத்த பேச்சு பேசும் முன் வாயை மூடிக்கொள் என கூறாமல் கூறி முடித்தார் சாவித்திரி பாட்டி.
"அம்மா உங்கனால தான் அவன் இந்த லட்சணத்துல இருக்கான். சம்பாரிச்ச காசை வீட்டுக்குன்னு குடுத்த தானே அவனுக்குன்னு ஒரு வீடை கட்ட முடியும். இப்படி எல்லாம் பேங்க்ல போட்டு வச்சா நாளைக்கி கல்யாணம் ஆகவும் எங்க இருப்பான்?"
"ம்ம்ம்ம்.. இப்போ அவன் கேரளால தானே இருக்கான். அங்கேயே இருக்கட்டும்.."
"அப்போ கல்யாணம் ஆனாலும் இங்க வர போக இருக்க மாட்டானா? அவனுக்குன்னு எதுவும் வேணாமா?"
"சதாசிவா, அவனை அவன் போக்குல விட்டுரு. நீ தேவையில்லாம அவசரப்பட்டு ஆழம் பாக்காம காலை விடாதே. இடம் என்னெக்கி இருந்தாலும் மதிப்பு தான்."
"அப்போ பெத்தவங்க பேச்சை கடைசி வரை கேக்க மாட்டான்னு நீங்களே சொல்லாம சொல்ல வரீங்க.."
"கோவில் உக்காந்து கண்டதை பேசி என்கிட்டே வாங்கி கட்டிக்காதே.." என அவர் எச்சரிக்க, நொந்து போய் அமர்ந்திருந்த கல்யாணியை தான் நெருப்பாக பார்த்து விட்டு நகன்றார்.
"அவன் கிடக்குறான் கல்யாணி விடு.. நாங்க இருக்க வீடு அவனுக்கு தான். என் பிள்ளைக்கு கூட உரிமை இல்லை. என் பேரனை நல்ல படியா வாழ வைக்க வேண்டியது உயிர் இருக்குற வரை என் கடமை..!" என அவர் கூற, வில்லங்கம் அவ்விடம் வந்து விட்டது.
"ஆமா.. உன் பேரன் தானே கல்லு மண்ணு வாங்கி போட்டு வீட்டை கட்டுனான். அப்படியே தூக்கி இந்தம்மா அவன் கையில குடுக்க.." என சண்முகம் அவர் பங்கிற்கு பொங்க..
"உங்களுக்கு தனியா சொல்லனுமா? உங்க பையன் இப்போ தான் முறுக்கிட்டு இடப்பக்கம் போனான். நீங்களும் அவனை வால் பிடிச்சுட்டு போங்க.." என அவர் வெகுவாக காய, சண்முகம் அவர்கள் தான் இருவரையும் முறைப்பாக பார்த்து விட்டு நடையை கட்டினார்.
இருக்கின்ற காலியிடத்தில் வீட்டை கட்ட சதாசிவம் அவர்களின் ஆசை. மகன் சம்பாத்தியம் கிடைக்காமலே, அவன் சம்பாரித்து கை நிறைய அனுப்புகிறான் என அவர் ஒவ்வொருவரிடம் கூறி கூறி சலித்தது தான் மிச்சம்.
அவர் நினைத்தால் அவன் தராமலே வீட்டை கட்டி முடிக்கலாம். இருந்தாலும், பெற்ற மகன் சம்பாதித்து தந்தால் இன்னும் நிறைவாக இருக்கும் ஒரு அவா தான் அவருக்கு. அதற்கேற்ப அவர் நடந்து கொள்ளாத போது எப்படி தருவான். பத்திரமாக சேவிங்ஸ் செய்து கொள்கிறான்.
பாலக்காடு
இரவு 7.47 மணி
நிம்மதியோ.. நிம்மதி.. என அமர்ந்து அவனது வேலையில் மும்மரமாக இருந்தான் நாயகன். குடைச்சல் குடுத்த ராகவனுக்கும், பீஜ்ஜு மோனிற்கும் இடையே வாக்கு வாதம் முற்றி கைகலப்பு வராத குறை தான் கடந்து போன நாட்களில்.
அதில் ராகவன் அவர்களே வேலையை விட்டு செல்ல, பிரதீஷிற்கு அடித்தது லக் என்பது போல் பீஜ்ஜுவிடம் இருந்து அழைப்பு வந்தது இரண்டு நாட்களுக்கு முன்பு. ராசிகா கிளம்பி வந்த நாளில் தான், அவனும் அன்றிரவு அரக்க பறக்க வந்து சேர்ந்தான்.
அடிப்பட்டது கூட அவனுக்கு அப்போது பெரிதான வலி தெரியவில்லை. அவன் விருப்பப்பட்டு பார்த்த வேலை பாதியில் தடைப்படவும் தான் அவனுக்கு மிக வேதனையாக இருந்தது. வேலையில் முழு கவனமாக இருந்தவன் அலைபேசி அலறிய வண்ணம் இருக்க, சிஸ்டம் முன்பு அமர்ந்திருந்த நர்ஸிடம் கூறி அணைத்து வைக்க சொன்னான்.
சில நிமிடங்களுக்கு பின்பு இளைப்பாற வெளியே வந்தவன் கேண்டீனில் சூடாக ஒரு இஞ்சி டீ சாப்பிட்டு விட்டு, நடந்து வந்து கொண்டிருந்தான். ரிஷப்ஷனை கடந்து தான், கேண்டீன் செல்ல வேண்டும். இறங்கி வந்தவன் விழிகள் டிவியில் ஒளிபரப்பான விளம்பரத்தில் நிலைகுத்தி நின்றது.
ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் ராசிகா, மினிமினுக்கும் முகத்தை அங்குமிங்கும் காட்டி, பட்டு மேனியின் கை தெரிய, முட்டிக்கு மேல் அணிந்திருந்த ஆடையும் அவனை ஒருக்கணம் அவ்விடம் விட்டு நகர விடாது சிறை செய்தது.
அவளை கண்டு மூன்று நாட்கள் ஆகப்போகிறது. வந்ததில் இருந்து வேலை வேலை என ஓடியவன், அவள் அழைத்த அழைப்பிற்கோ, மெசேஜ்ஜிற்கோ பதிலளிக்கவில்லை.
அவள் முகத்தில் அடித்தாற் போல் பேசிய வார்த்தையில் வெகுவாக காயமடைந்ததில், பதிலுக்கு அவளை அறைந்தும் விட்டான். இருப்பினும் அவளே அப்படி கூறியதை தான் தாங்க முடியவில்லை. இதுவரை அவளை பற்றி பெரிதாக எண்ணாதவன், இப்போது விளம்பரத்தை பார்க்கவும் சிந்தயெல்லாம் மானினி மட்டுமே வட்டமடித்தாள்.
'ராசிகா' அவனையும் மீறி உள்ளம் அவள் பெயரை உச்சரித்தது. அந்நொடியே வேதாளம் முருங்கை ஏறியது போல், அவள் பேசிய வார்த்தை நினைவுக்கு வந்தது.
ஸ்கேன் ரூம் நுழைந்தவன் சும்மா இருந்திடாது, அவளுக்கு பத்து இலக்க எண் ஒன்றை மெசேஜ் அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் எண் எனவும் குறிப்பிட்டு கூறியிருந்தான்.
அதன் பின் மொபைலை சைலன்டில் போட்டு விட்டு வேலையில் மூழ்கினான்.
"This is his number. He will converse better than myself."
(இதான் அவன் நம்பர். என்னை விட நல்லா பேசுவாங்க.)
மெசேஜ்ஜை பார்த்தவளுக்கோ விழிகள் கலங்க, சுர்ரென கோவம் வந்தது. எப்படியும் அழைப்பை ஏற்க மாட்டான் என தெரியும். தான் பேசிய ஒரு வார்த்தைக்கு இவ்வளவு கோவமும், வெறுப்பும் தேவை தானா என புழுங்கியவளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.
பதிலுக்கு மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்தாள். போன் செய்தால் நிச்சயம் பேச மாட்டான். மெசேஜ் என்றால் பதில் வரும் என்ற நம்பிக்கை தான்.
"No need. You're enough for me."
(எதுவும் தேவையில்லை. எனக்கு நீங்க போதும்.)
சில நிமிடங்களுக்கு பின் மெசேஜ்ஜை பார்த்தவன் அதரங்கள் முறுவலை அடக்கிக் கொண்டதோடு, போனை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தான்.
"You're the one who said that he's better than me. Share your experience after have a conversation with him."
(நீ தானே என்னை விட அவங்க எவ்வளவோ பெட்டர்ன்னு சொன்ன. பேசிட்டு எப்படின்னு அனுபவத்தை சொல்லு.)
இப்படியொரு பதிலை அவன் வாரி வழங்குவான் என ராசிகா எதிர்பார்க்கவில்லை. தன்னை விட அவர்களே சிறந்தவர்கள் என்றும், பேசி அனுபவத்தை கூறு என்றதில் வெகுவாக கடுப்புற்றாள்.
"Why are you talking like this pratheesh? I admit that it's my mistake. I shouldn't say like that. Please don't talk to me like that."
"Nice joke idiot!"
"Pratheesh i want meet you!"
"I don't have time. You can contact him. Don't disturb me."
'நேரமில்லாதவன் எப்படி டா பதிலுக்கு பதில் மெசேஜ் பண்ணுவான்? உன்னை என்ன பண்ணுறேன் பாரு!' என நினைத்தவள், சட்டென ஒரு முடிவெடுத்தாள்.
சில மணி நேரங்களுக்கு பின்..
தொலைபேசி வாயிலாக ரிஷப்ஷன் பெண்ணிடம் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என நர்ஸ் கேட்க, அவள் இரண்டு பேர் என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் பிரதீஷ். இன்றாவது சீக்கிரம் சென்று தூங்க வேண்டுமென்று தான்.
அதில் ஒரு லாரி மண்ணு விழ உள்ளதை பாவம் அவன் தான் அறியவில்லை.
ஹோல் அப்டாமினல்(முழு வயிற்றுப்பகுதி) ஸ்கேன் செய்து கொண்டிருந்தவன், அடுத்த கேஸை உள்ளே வந்து வெயிட் பண்ண சொல்லுங்க என்றான்.
முன்பு பார்த்துக் கொண்டிருந்த பேசன்ட் வெளியே செல்லவும் நெட்டி முறித்தவன், "நெக்ஸ்ட்!" என்றான்.
பேஷன்ட் உள்ளே வர, "நேம் என்ன?" என்று கொண்டே ஜெல்லை எடுக்க சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி, பின்பக்கம் திரும்பியவன் முன்னாள் இருப்பவளை சரியாக காணவில்லை. அறையும் இருட்டாக இருந்தது. அவன் ஜெல் காலியாகியதில் எடுத்து விட்டு பேரென்ன என்றான் சிஸ்ட்டத்தை பார்த்தபடி.
"ராசிகா"
அவனுக்கு தான் தூக்கி வாரிப்போட்டது. சட்டென திரும்பியவன் அவளை காண, அவளோ எப்படி உன்னை காண வந்தேன் பார் என்பது போல் இறுமாப்பாக சிரித்தாள்.
"ஹேய் இங்க எதுக்கு வந்த?" என்றான் பற்களை இறுக கடித்தபடி..
"ம்ம்.. எதுக்கு வருவாங்க. ஸ்கேன் பாக்க தான்.." என்றவள் நக்கலாக புன்னகைத்துக் கூற, "என்ன விளையாடுறயா?" என்றான் சினமாக.
"இல்லையே.."
"இப்போ எதுக்கு இங்க வந்த?"
"டாக்டர் நான் உங்க பேஷன்ட். இப்படி பிஹேவ் பண்ணக் கூடாது. அது ரொம்ப தப்பு.."
"ராசிகா.. விளையாடாதே.." என்றவன் அவள் பேஷன்ட் படுக்கையில் உட்காந்திருக்கும் தோரணையில் பதறியவன், நர்ஸ் வந்தால் என்ன ஆகும் என யோசித்தான்.
"Go out"
"போறேன்.. ஒழுங்கா டென் மினிட்ஸ்ல வரணும்.. இல்லை டாக்டர் ஸ்கேன் பாக்க மாட்டுறார்ன்னு, ஹாஸ்பிட்டல்ல சொல்லிடுவேன்.."
"ஹேய்.. வெளியே போ டி.. அறைய போறேன்.."
"நீங்க மட்டும் வராம இருங்க இப்போ.. நான் எல்லார் முன்னாடியும் என்ன சொல்லுறேன் பாருங்க.." என்றவள் கழுத்தை வெட்டி சிலுப்பிக் கொண்டு செல்பவளை விழி வெட்டாமல் பார்த்திருந்தான்.
அவள் அன்றைய தினம் ஊருக்கு செல்லும் போது அழைத்து வரவில்லை என்னும் வேதனையோடு இருக்க, பிரதீஷ் வெறுப்பேற்ற மெசேஜ் அனுப்பி நேரில் வர வைத்து விட்டான். அவள் வருவாள் என அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
தேன்மழை💖💖
