தூகை 4

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

அத்தியாயம் 4

 

இன்று…

 

இன்றும் அன்று‌ போல ஓர் சனிக்கிழமை இரவு..!

 

சனிக்கிழமை மட்டுமல்ல அதன்பின் வந்த விடுமுறை நாட்களிலும் பேத்தியோடு பழகி தன்னை அறியாமல் “என் பேத்தி..!” ஒரு உரிமை உணர்வு பிறந்திருந்தது பிரேமாவிற்கு. அதுவும் மகள்களோடு பேசும் போது “நான் கதை சொன்னால் தான் தூங்குறா மிருக்குட்டி. நீங்க கதை சொன்னால் தான் சூப்பரா இருக்கு பாட்டின்னு சொல்றா..” என்று பேத்தியின் பெருமை தான்..!

 

இப்பொழுது இரண்டு மாதங்களாக அருகில் பேத்தி இல்லை..!

 

செல்ல பேத்தியின் அந்த முல்லை பூ வாசனை இல்லை..!

 

தன் மீது குட்டி கைகளை கால்களை போட்டு இறுக்கி தூக்கத்தில் கூட அவர் சொன்ன கதையின் கதாபாத்திரங்களை உளறிக்கொண்டு இருக்கும் அந்த பிள்ளையின் செல்ல உளறல்கள் இல்லை..!

 

சில சமயம் தூக்கத்திலேயே கட்டிலை நனைத்துவிட்டு தான் திட்டியதும் தூக்கக் கலக்கத்திலே விழித்துக் கொண்டு உதட்டைப் பிதுக்கி “சாரி பாட்டி.. நான் குட்டி பொண்ணு தானே..” என்று கொஞ்சும் குரலில் தன் தாடையைப் பிடித்து சாரி கேட்கும் அந்த குட்டி பெண்ணின் கொஞ்சல்கள் இல்லை..!

 

பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தன் மகள் மகனின் மீது கொண்ட அந்த பாசம் பிரேமம் பிரியும் அன்பு அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மூட்டை கட்டி தங்கள் பேரப்பிள்ளை மீது தான் காட்டுவார்கள். 

 

பிரேமாவும் அப்படி தான். இன்று அவரின் செல்ல பேத்தி இல்லாமல் தூக்கமே வரவில்லை பிரேமாவுக்கு. 

 

அவள் கட்டிப்பிடித்து விளையாண்ட பொம்மைகள் தான் அவரைச் சுற்றி கிடந்தன..!

 

ஒரு காலத்தில் அவற்றை எல்லாம் “படுக்கும் போது இடைஞ்சலா இருக்கு தூக்கி போடு மிரு குட்டி” என்று கத்துவார்.

 

இன்று அவை தான் அவருக்கு ஆறுதல்..! அவை தான் அவருக்கு பல கதைகள் சொல்லுகின்றன..! அவரை ஆற்றுப்படுத்துக்கின்றன..!

 

மெல்ல கட்டிலை வருடியவர்.. நடுங்கும் விரல்களால் அந்த பொம்மைகளையும் வருடி அணைத்தப்படி கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே படுத்திருந்தார் பிரேமா. 

 

வெளியே கதவை தட்டி தட்டி பார்த்துவிட்டு ஓய்ந்து போய் சோபாவில் அமர்ந்திருந்தான் ஆதவ் நிரஞ்சன்.

 

அவனின் விழிகள்‌ இரண்டும் மூடிய அம்மாவின் அறை கதவிலேயே இருந்தன. 

 

பிரேமா அழுது கொண்டு இருப்பார் என்பது ஆதவனுக்கு நன்றாக தெரியும்.

 

“அவங்க வாய் விட்டு அழறாங்க.. நான் அழல.. அதுதான் வித்தியாசம்..! மத்தப்படி என் வலியும் வருத்தமும் அவங்களோட பெருசு” என்று விரக்தி புன்னகையோடு அம்மாவுக்கு எடுத்து வைத்திருந்த சாப்பாட்டை வெறித்துக் கொண்டே இருந்தான்.

 

அவனின் சின்ன சின்ன அபிலாசைகள் எல்லாம் இன்று எங்கோ ஓடிப்போக..‌ அவனின் இப்போதைய பெரிய ஆசையே மனைவி மகளும் இந்த வீட்டில் இருந்தால் போதும் என்று இருந்தது.

 

ஆனால் அவனின் எந்த விளக்கத்திற்கும் மன்னிப்புக்கும்.. எதற்கும் செவிசாய்க்க மறுக்கிறாள் மனைவி. எதையும் வாய்விட்டு கூற விழைகிறாள் இல்லை..!

 

உன் கோபம் தீரும் மட்டும் என்னை அடித்து விடேன் டி பாதகத்தி..! 

 

உன் வலி தீரும் மட்டும் என்னை கோபமிகு வார்த்தைகளால் வைது விடேன் டி..!

 

உன் நம்பிக்கையை உடைத்து இதயத்தை பிளந்த என் இதயத்தை பிளந்து விடேன் டி..!

 

உன்னை ஆழ வைத்து இமைகள் மூட முடியாமல் வைத்த என் விழிகளை பிடுங்கி விடேன் டி..!

 

என் மீதான உன் காதலை மரிக்கச் செய்த என்னை மரிக்கவாவது செய்யேன் டி..!

 

ஆனாலும் இவை அனைத்தையும் என் அருகில் இருந்தே செய்ய டி..! விலகி செல்லாத டி..!

 

என்று மனைவியின் புகைப்படத்தை வைத்து மனதோடு புலம்ப மட்டுமே முடிந்தது.

 

இரண்டு மாதங்களுக்கு முன் சிரிப்பும் கேலியும்.. 

கிண்டலும் வம்பும்..

கெஞ்சலும் சிணுங்கலும்..

முத்தமும் மொத்தமும்..

காதலும் காமமும்..

மோகமும் தாபமாய்.. இருந்த தன் அறையின் ஒவ்வொரு செங்கல்களும் இன்று தனித்து தவித்து நிற்க..

 

கட்டாந்தரையில் கேட்பாரற்று கிடந்தான் ஆதவ் நிரஞ்சன்..!!

 

தான் செய்த தவறும் அதற்கான‌ குற்றவுணர்ச்சியும் அவனை தாக்க.. இப்படியே வாழ்க்கை சென்று‌ விடுமோ என்ற பயம் பிடிக்க.. செய்வது அறியாது தவித்தான் ஆதவ் நிரஞ்சன்.

 

காதலித்த நாட்களில் விடிய விடிய கூட ஸ்வீட் நத்திங்ஸ் பேசிய காலம் உண்டு. இன்று அவளின் ஒற்றை வார்த்தையை கேட்க மனம் ஆவல் கொண்டு முண்ட.. அதற்கு வழியில்லா தன்னை நினைத்து அவனுக்கே வெறுப்பு..!!

 

அவ்வளவு தானா மேகா நம் காதல்?? என்று அவன்‌ புலம்ப..

 

திருமணம் ஆன பின்பு அவளிடம் காதலாக பெரிதாக பேசியதில்லை. மற்றப்படி அன்பாகவும் பாசமாகவும் தான்‌ இருந்தான்..

 

ஆனால் காதல்? அவளிடம் கேட்கிறாயே? நீ அவ்வாறு இருந்தாயா? உன்னில் இருந்ததா அவளுக்கான காதல்?? உன்னையே உன்னை மட்டுமே நம்பி இந்த குடும்பத்திற்குள் வந்தவளின் நம்பிக்கையை கடைசி வரை காப்பாற்றினாயா?? என்று மனசாட்சி கேட்ட எந்த கேள்விக்கும் அவனிடத்தில் பதில் இல்லை.‌.!

 

அதே நேரம்.. அதே இரவில்.. பனியில் நனையும் நிலவினை வெறுமையாய் பார்த்தப் படி தன் அருகில் மீண்டும் கருவறை பிள்ளை போல சுருண்டு படுத்திருக்கும் மகளை அணைத்து படுத்திருந்தாள் மேகவதனி.

 

“என்னோடு பகிர்ந்த அந்தரங்கத்தை வேற‌ ஒருவளோடு எவ்வாறு பகிர முடிந்தது உன்னால்??” என்று மனதில் காதல் கொண்

டு மணந்த மணவாளனிடம் கண்ணீரோடு கேட்டுக் கொண்டிருந்தாள் வதனி..

 

 

தொடரும்..


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top