அழகன் 12
“என்ன அத்தாச்சி.. சின்ன குளம்னு சொன்னேள்? இதுவோ இவ்வளவு பெருசான்னா இருக்கு?” கண்கள் விரிய கேட்ட ஆண்டாளை பார்த்து,
“அடியே பால்கோவா.. ஏன் நீ இதுக்கு முன்னால இந்த மாதிரி குளம் குட்டை ஆறு எல்லாம் பார்த்ததே இல்லையா?” என்றவாறு பாவாடை தாவணியில் இருந்தவள், பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகி மெல்ல அந்த குளத்தில் கால் வைத்தாள் அங்கயற்கண்ணி.
“ம்ஹூம்.. நான் பஸ்ல ட்ரெயினில போறச்ச பார்த்திருக்கிறேன். இப்படி பக்கத்துல வந்து எல்லாம் பார்த்ததே இல்ல..” என்றாள் வெள்ளந்தியாக ஆண்டாள்.
“ஓஹ்… அப்போ… இதுவரைக்கும் எந்த ஒரு கொளம் குட்ட ஆத்துல எல்லாம் நீ குளிச்சதே இல்லையாடி பால்கோவா?” என்றாள் அதிசயமாக மேவாயில் கே வைத்து..!
“ரொம்ப பண்ணாதேள் அத்தாச்சி..! இங்க நான் கடைசியா வந்து தங்கி ஒரு பத்து வருஷமா இருக்குமானோ? என்ன எங்க அம்மா பெரிய பொண்ணான பிறகு எங்கேயும் அனுப்பவே இல்ல.. அது ஒரு தடவ இராமேஸ்வரம் போனச்ச கடல்ல கால் வச்சு லேசா ஜலத்தை எடுத்து தலையில் தெளிச்சுவிட்டதோட சரி.. இப்படி குளம் குட்டை ஆத்துல எல்லாம் குளிச்சதேல்ல.. என் ஆத்துல மட்டும்தான் குளிச்சிருக்கேன்” என்று சோகத்தோடு கூறினாள்.
“அவ்வளவுதானா விடு..! காங்கேயனோடு சேத்தி உன்னையும் குளிப்பாட்டிட்டா போச்சு” என்றதும் அலறியே விட்டாள் ஆண்டாள்.
“ஐயோ அத்தாச்சி.. எனக்கு இந்த மாதிரி தண்ணில குளிக்க.. அதுவும் உங்க தம்பியோட.. வேணவே வேணாம்..! நான் இப்படியே கரையில இருந்து உங்களையும் உங்க தம்பியாண்டானையும் வேடிக்கை மட்டும் பாக்குறேன்” என்றாள், பெரிதாக கையை மேலே தூக்கி கூப்பி.. அவளின் செயலைக் கண்டு கலகலத்துச் சிரித்தாள் கண்ணி.
காங்கேயன் கழுத்திலிருந்ல கயிற்றை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவனை அப்படியே தண்ணீரில் ஒரு சுத்தி வர சொல்லி கூற.. அவனும் அழகாக தண்ணீரில் நீச்சல் அடித்து வந்தான்.
பெருமை பொங்க தன் தம்பியை பார்த்துக் கொண்டே “பாரு.. பாரு.. எப்படி சூப்பரா நீந்துறானு” என்று அகமகிழ்ந்தாள்.
தன்னை தான் தன் அக்காள் பாராட்டுகிறாள் என்று புரிந்தவன் இன்னும் தலையை சிலுப்பி சிலுப்பி தண்ணீரில் ஆடி, ஏக கும்மாளத்தோடு ஆட்டம் போட்டுக் கொண்டு குளித்தான்.
அதுவும் ஆண்டாள் அருகே வரும்போது காங்கேயன் தண்ணீரில் சிலிர்த்து தலையை ஒரு ஆட்டு ஆட்டினான், அதன் தண்ணீர் அவள் மேல்பட்டதற்கே அவள் அலறி கத்தினாள்.
“அத்தாச்சி…!!!” என்று கூவியவள், “இந்த விளையாட்டுக்கு நான் வரல அத்தாச்சி.. நான் ஆத்துக்கு போறேன்..” என்று திரும்பியவளை,
“ஏய் பால்கோவா.. போகக்கூடாது அப்படியே நில்லு. அது என்ன கூட வந்திட்டு என்னைய விட்டுட்டு நீ மட்டும் தனியா போறவ.. நாத்தி மேல பயம் வீட்டுக்கு போச்சு.. ம்ம்ம்..!” என்று தோரணையாக சொன்ன கண்ணியை பாவமாக பார்த்தவள்,
“ப்ளீஸ்..!” என்று இரு காதுகளில் பிடித்துக் கொண்டு கேட்க..
“செல்லாது.. செல்லாது..!” என்று தன்னோடு வம்படியாக நிறுத்தி வைத்துக் கொண்டாள்.
முதல் முறை கொண்ட கலவியின் களைப்பு வேறு.. கூடவே சிறிது நேரம் தோப்பிலேயே நடந்தது வேறு.. கால்களும் கைகளும் இடுப்பும் சற்று ஓய்வு கொடேன் என்று கெஞ்ச, அப்படியே அருகில் உள்ள மரத்தில் சாய்ந்து அமர போனவளை தடுத்து, சற்று தள்ளி இருந்த ஒரு பெரிய பாறை போன்ற கல்லில் அமர சொன்னாள் கண்ணி..!
அங்கே தண்ணீருக்குள் காங்கேயன் விளையாடுவதை மகிழ்ச்சியோடு ஆரவாரமாக பார்த்துக் கொண்டிருந்த அங்கயற்கண்ணி பற்றியே ஆண்டாளுக்குள் என்னன்னவோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன..!
அவளையை கண்டெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு, “என்னடி பால்கோவா என்னைய வச்சு கண்ணு வாங்காம பாக்குறவ? இதெல்லாம் தப்பாச்சே..! இந்த பார்வை எல்லாம் எங்க அண்ணன் கிட்டல செய்யணும்” என்று குறும்பாக கண்ணடித்தவளை பார்த்ததும் முகம் நாணிச் சிவந்தது ஆண்டாளுக்கு.
அவளின் வெட்கச் சிவப்பை பார்த்தவளுக்கு, அண்ணனுக்கும் அவன் மனைவிக்கும் அனைத்தும் சரியாகி விட்டது என்று புரிந்து கொண்டாள் அங்கயற்கண்ணி..!
ஆண்டாளுக்கு தான் ‘அண்ணனும் தங்கையும் சரியாக பேசிக் கொள்வதில்லையோ?’ என்று சிறிது நாட்களாக தோன்றிக் கொண்டிருந்தது.
காலையில் சென்றால் இரவு தான் வீடு வருவான் அழகன். கண்ணியோ காலையில் சென்று மாலையே வந்து விடுபவள், அதன் பின் காங்கேயனோடு சிறிது நேரம் பொழுதைக் கழித்துவிட்டு, பின் பள்ளி பற்றி வேலைகள் என்று அறையினுள் அடைந்து விடுவாள்.
இரவும் அழகன் வருவதற்கு முன்பு உண்டு விட்டு உறங்கு சென்று விடுவாள்.
சாதாரணமாக பார்க்கும் போது யாவருக்கும் பெரிதாக சந்தேகம் வந்திடாது..!
“ஆமா.. அழகனுக்கு நேரமில்ல.. இவளும் வெள்ளனவே எந்திரிச்சு ஸ்கூலுக்கு போகணும் இல்ல..?? வாத்தியாரிச்சியே லேட்டா போன பிள்ளைங்க எப்படி சுதானமா ஸ்கூலுக்கு வருவானுங்க?” என்பது போன்ற பதில்கள் தான் வரும்.
ஆனால் ஆண்டாளுக்கு அது போதவில்லை..!
‘என்னவோ சரி இல்லை இருவருக்குள்ளும்..! என்னவாக இருக்கும்?’ என்று இங்கு வந்த சிறந்த நாட்களிலேயே கண்டுபிடித்து விட்டாள் ஆண்டாள்.
ஆனால் அதைக் கேட்க தான் அவளுக்கு பெரும் தயக்கமாக இருந்தது.
அங்கயற்கண்ணியிடமாவது ஏதாவது இது பற்றி தைரியமாக கேட்டுவிடலாம் அவள் பதில் சொல்ல விடினும்…!
ஆனால் அழகனிடம் இதைப் பற்றி வாயே திறக்க முடியாது. அவனைக் கண்டாலே பேச்சு எங்க மூச்சே சில சமயம் வருவதில்லை அவளுக்கு..!
‘சரி மெல்ல தூண்டில் போடுவோம்..! சிக்கறது சிக்கட்டும்..’ என்று எண்ணியவள்,
“அத்தாச்சி.. அன்னைக்கு என் கேள்விக்கு பாதியிலேயே விட சொல்லாம என்ன பதில் கேள்வி கேட்டு குழப்பி அனுப்பிட்டேளோனோ?” என்றதும் முதலில் புரியாமல்,
“என்ன பால்கோவா? என்னைக்கு?” என்று கேள்வி அவளிடம், பார்வையோ காங்கேயனிடம்,
“ஏலேய் அங்குட்டு போகாதடா.. இங்குட்டு போ..” என்று அதட்டி விட்டு ஆண்டாளை பார்த்தாள் கண்ணி.
“அதான்.. ஏன் நீங்க கல்யாணத்தை தள்ளி போடுறீங்கனு கேட்டேனேனோ இல்லியோ அன்னைக்கு.. அதுக்கு..! என்னென்னமோ சாக்கு போக்கு எல்லாம் சொல்லி என் மைண்டை டைவர்ட் பண்ணிட்டேள்..” என்று குற்றம் சாட்டினாள் குழந்தை குமரியாய் ஆண்டாள்…!
“ஓஓஓ… அன்னைக்கா??” என்றவள் அதன்பின் பேச்சை வளர்க்காமல் முடித்துக் கொள்ள பார்க்க..
“அதெல்லாம் நேக்கு தெரியாது.. என்னை கூப்பிட்டு வச்சு இவ்ளோ நேரம் வெயில்ல காய வச்சேள் இல்ல.. அதனால கண்டிப்பா சொல்லணும்..! ஏன் உங்களுக்கு கல்யாணம் வேணாம்னு ரீஸன் சொல்ல போறேளா? இல்லையா?” என்று சற்று அதட்டலோடு கேட்கும் ஆண்டாளைக் கண்ட கண்ணிக்கோ, சின்ன பிள்ளையின் வாத்தியாரின் நாடகத்தை பார்த்தது போலவே இருந்தது.
“வர வர பால்கோவா.. வாய் பெருசா ஆயிடுச்சிடியோய் உனக்கு” என்று இவள் ஒற்றை விரலைப் பத்திரம் காட்ட..
“நான் தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல அத்தாச்சி.. நான் இப்போ உங்க மாமா மக ஆண்டாள் மட்டும் இல்லை.. உங்க மன்னியாக்கும்..!” என்று ஸ்டைலாக முந்தானையை வலது கையில் பிடித்து சுழற்றி தோளில் போட்டுக்கொண்டு மிதப்பாக அங்கயற்கண்ணியை பார்த்தாள் ஆண்டாள்.
“ம்ம்ம்..!! கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?” என்று மெல்லிய குரலில் கேட்ட அங்கயற்கண்ணியை கண்டு ஆனந்தம் கூத்தாடியது ஆண்டாளுக்கு.
உடனே தான் அமர்ந்திருந்த அந்த பெரிய பாறையில் இருந்து எழுந்து குடுகுடுவென்று ஓடி வந்தவள், “ஆமா.. ஆமா.. கண்டிப்பா சொல்லித்தான் ஆகணும் அத்தாச்சி” என்று அவள் தாடையை பற்றி கொஞ்சிக் கேட்டாள்.
காங்கேயனை அங்கயற்கண்ணி குளிப்பாட்டிக் கொண்டிருந்த குளமோ அவர்களது சொந்தக் குளம் கிடையாது. அது பொதுவான குளம்..!
இவர்கள் தென்னந்தோப்பிற்கு அருகில் இருப்பதால் அடிக்கடி அதை அழைத்து வருவாள்.. குளிப்பாட்டுவாள்.. தண்ணீரில் நீச்சல் அடிக்க பழக்குவாள்..!
அப்போது அந்த ஊரின் கால்நடை மருத்துவமனான சரபேந்திரன் நாலைந்து சிறு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு குளத்துக்கு வந்தான், அவர்களுக்கு நீச்சல் பழக்க..!
இம்மாதிரி குளம் குட்டை எல்லாம் வேண்டும் என்று சில கார்ப்பரேட் நிறுவனங்களாலும்.. சில தனிநபர்களின் துஷ்பிரயோகத்தாலும் தற்போது குப்பைகளை கொட்டும் குப்பை தொட்டிகளாக மாறிவிடுகின்றன..!
ஆனால்.. அப்படி ஏதேனும் நேராமல் இந்நாள் வரை அந்த குளம் சுத்தமாக இருக்கிறது, அதனை அவ்வாறு பார்த்து பேணி வந்து கொண்டிருக்கிற பெருமை அவ்வூர் மக்களையேச் சாரும்...!
அதனால் பிள்ளைகளையும் அங்கே இம்மாதிரி நீச்சல் பழக்க அழைத்து வருவார்கள்..!
சரபேந்திரன் இரண்டு பெண்கள் நிற்பதை பார்த்து “டேய் கேசவா.. பொம்பளைங்க அங்கன நிக்கிறாங்க.. அவங்க குளிக்கிறாங்களான்னு பாரு. அவங்க இருந்தா நான் வரல.. நாம அப்புறம் வரலாம்” என்று ஒரு சிறுவனை அனுப்ப.. அவனும் பார்த்துவிட்டு “இல்ல ண்ணே.. டீச்சர் அக்கா தான் அவங்க மாட்ட தண்ணிக்கு பழக்குறாங்க..” என்றதும்,
“சரி வாங்க டா..!” என்று அழைத்துச் சென்றான்.
குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தவன், சிறு டியூப்பையும் எடுத்து வந்து ஒவ்வொன்றிலும் காற்றை நிரப்பி தண்ணீரில் போட்டு அவர்களை பிடிக்க சொல்லி அருகிலேயே நின்று நீச்சல் பழக்கிக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்து அங்கயற்கண்ணி “ஏலே வண்டுகளா.. யேன் தம்பி காங்கேயம் அங்கன நிக்கிறியான். அவனை பயமுறுத்தி சீண்டி ஏதாவது பண்ணி அப்புறம் அவன் முட்ட வந்தானு சொல்லக்கூடாது இப்பவே சொல்லிபுட்டேன்.. ஆமா..! மீறி எவனாவது வாலு பண்ணுனீக.. வால ஒட்ட நறுக்கிபுடுவேன்” என்ற பேச்சு என்னவோ பிள்ளைகளிடம் இருந்தாலும் பார்வை என்னவோ சரபேந்திரனிடம் தான் இருந்தது.
அவனோ அப்படி ஒருத்தி அங்கு நிற்பதை கண்டுகொள்ளாமல் அந்த பிள்ளைகளிடம் “டேய் டியூப நல்லா புடி.. கால ரெண்டத்தையும் மேல கொண்டு வந்து நல்லா அடி..!” என்று அவன் அவர்களுக்கு நீச்சல் பழக்கினான்.
“ஆமா ஆண்டாளு.. நீ என்கிட்ட கதை கேட்ட இல்ல.. ஏன் கல்யாணம் பண்ணிக்கலன்னு அந்த கதையை இப்ப சொல்றேன் கேக்குறியா?” என்று கண்ணி சத்தமாகவே கேட்க,
இவளோ எப்போ எப்போ என்று இருந்தாளே.. அதனால் “சொல்லுங்க அத்தாச்சி” என்று ஆர்வமாக அருகில் வந்து நின்று கொண்டாள்.
“அது ஒரு மாமாங்கத்து கத.. அப்ப நம் பூட்டு பக்கத்துல ஒரு வில்லேஜ் ஆஃபிஸர் வந்து குடியிருந்தாரு. அவருக்கு ரெண்டு புள்ளைக.. அதுல சிறுசு யேன் செட்டு..! பெருசு இரண்டு வரும் பெருசு.. கொஞ்சம் சண்டிப்பய..! அவனுக்கு படிப்பு ஏறவே ஏறாது மண்டையில.. நான்தான் கொட்டி கொட்டி கணக்கெல்லாம் சொல்லி தருவேன்..! அப்பவே இந்த கண்ணி டீச்சராக்கும்..!” என்று ஜாக்கெட்டில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள் கண்ணி..!
“அப்புறம் என்ன அத்தாச்சி ஆச்சு?” என்று ஆண்டாள் கேட்க..
“இந்த பயலுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறதோட மட்டுமல்ல நிறைய உதவியும் செஞ்சுருக்கேன். அதுவும் வீட்டுக்கு தெரியாம தேன், வீட்ல தெரிஞ்சுச்சு உங்க அய்த்த கலையரசி விளக்கமாத்தாலே எனக்கு பூஜை நடத்திடவாக.. அதுலேயும் உன் வீட்டுக்காரரு.. அந்த கள்ளழகன் இருக்காரே.. அவ்வளவுதான்..! அந்த சண்டிபய எல்லா உதவியும் என் கிட்ட வாங்கிட்டு கடைசியா என்னைய கணக்கு பண்ணிப்புட்டான்” என்றாள்..
ஆண்டாள் முதல் அங்கிருந்த சிறு குழந்தைகள் வரை சிரித்தனர்.
பின் அந்தப பிள்ளைகள் “டீச்சர் என்ன லவ்ஸாஆஆஆ?” என்று சத்தமாக ராகமாக கேட்க…
“ஆமா டா பயலுகளா.. அந்த பய என்கிட்ட ஒரு நாள் லவ்ஸ தேன் சொன்னியான். ஆனா நானோ பயந்து.. ‘அய்யா சாமி.. எங்க குடும்பத்துல அப்படி எல்லாம் விட மாட்டாய்ங்க.. நான் ஏதோ என்னாலான உதவிய தேன் செஞ்சேன். அதனால என்னை மறந்துட்டு பொழப்ப பாருன்னேன்’ நானும் பக்கம் பக்கமா டயலாக் விட்டேன்..”
“ஹான்.. அப்புறம் என்ன டீச்சர் நடந்துச்சு?” என்று மீண்டும் அவர்கள் ஆர்வமாக கேட்க..
“அடேய் எல்லாரும் உதைபட போறீங்க..! நீச்சல் கத்துக்க தானே வந்தீங்க.. ஒழுங்கா நீந்தக் கத்துகிட்டு வீடு போய் சேருற வேலையை பாருங்க. இந்த வயசுல உங்களுக்கு என்னங்கடா காதல் கதை கேக்குது?” என்ற பல்லை கடித்தான் சரபேந்திரன்.
“ஏன் டா.. டிவி சீரியலிலிருந்து உங்க தலைவன் நடிக்குற படம் வரைக்கும் அத தேன் காட்டுறாய்ங்க.. அப்ப எல்லாம் தெரியலையோ? ஒழுங்கா கதைய கேளுங்க டா” என்றவள், கதையை தொடர்ந்தாள்..!
“ஆனா.. அவேன் எனக்கு மேல பக்கம் பக்கமா டையலாக் எல்லாம் பேசி கட்டுனா உன்னைய தேன் கட்டுவேன்..! இல்லைன்னா கட்டுமரம் மாதிரி கடல தேன் கிடப்பேன்னு சொல்லிட்டு இருந்தியான்..! சரி நானும் நம்ம மேல இம்புட்டு ஆசையா இருக்கியானு ஓகே சொல்லி்ட்டேன்” என்றாள் கண்ணி.!
ஆண்டாள் முதல் அங்கிருந்து சிறுவர்கள் வரை “ஓஹோ.. கத அப்படிப் போச்சா.. சூப்பரு டீச்சரு” என்று சுவராசியமாக கேட்டனர்.
“அப்படி தேன் போக வேண்டியது.. ஆனா அதுல ஒரு டிவிஸ்ட்..!”
“என்ன? என்ன? ட்விஸ்ட்?” என்று அனைவரும் ஆவலாக அவளை பார்க்க..
ஏன் சரபேந்திரன் கூட அவளை ஓரக்கண்ணால் பார்த்தான், அடுத்து என்ன நடந்து இருக்கும் என்ற ஆவலை தேக்கியப்படி..!
“அப்ப.. அவேன் அப்பாருக்கு ட்ரான்ஸ்ஃபர் வந்துச்சு..! அதுல ஊர் விட்டு போனவன் தேன்.. ஊரையும் மறந்து.. காதலியையும் மறந்து.. அவேன் சொன்ன கட்டுமரத்தையும் மறந்துட்டு.. இப்போ வேற ஒருத்தியை கட்டிக்கிட்டு குடும்பஸ்தனா சுத்திக்கிட்டு இருக்கியான்” என்றாள் சோகமாக..!
“அச்சோ.. சோ சேட்..!” என்றனர் அந்த பிள்ளைகள்.
இந்த பக்கம் ஆண்டளோ புடவை முந்தானையில் மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள் அழுகையோடு..!
“அடியே.. ஆண்டாளு.. ஏன் அழுகுறவ?” என்று பயந்து கேட்க..
“இல்ல அத்தாச்சி.. என்னாலேயே இந்த சோகத்த தாங்க முடியல.. இத்தனை வருஷமா நீங்க இப்படி தான் தாங்கினேளோ?” என்று அழுதவளை கண்டு,
“ஆத்தா.. நல்ல நேரத்துல நீ வீட்டுக்கு போ..! நீ இப்படி அழுததை உன் அய்த்த பார்த்துச்சு.. என்னைய
உப்புக்கண்டம் போட்டுடும்” என்று அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்..!
ஆண்டாளோ அவளை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு மூக்கை உறிஞ்சிக் கொண்டே வீட்டை நோக்கி சென்றாள்.
“இவளோட! இவ என்ன படிச்சா? ஒரு கே டிராமா, சி டிராமா எல்லாம் பார்க்காம..! நானே அதிலிருந்து நாலஞ்சு சீன உருவி இவ கிட்ட இத அளுக்குறேன்… அந்த கூட கண்டுபிடிக்கல..” என்று இடவலமாக தலையசைத்த அங்கயற்கண்ணி திரும்பி காங்கேயனை பார்த்து “வாடா நாமளும் போகலாம்” என்று அழைக்க அதுவும் வேகமாக வந்தது.
அவன் வேகமாக வந்த நேரத்தில் அவனின் கயிற்றைப் பற்றி இவள் வேகமாக சுழற்ற.. குளத்திலிருந்த தண்ணீரை அருகில் நின்றிருந்த சரபேந்திரன் மேல் அபிஷேகம் ஆனது..!
“ஓஹ் சாரி..! எப்படியும் நீச்சல் பழகும் போது குளிக்க தானே போறீக.. கொஞ்சம் முன்னமே குளிச்ச மாதிரி நினைச்சுக்கோங்க” என்றவள் காங்கேயனை கரைக்கு ஏற்றி விட்டு,
அவளும் ஏற முயல..
அவன் ஆத்திரம் மிகுதியில் "உன்னை.. உன்னை.." என்று அவள் அருகில் வர..
"என்னை.. என்னை.. அப்புறம்.." என்று அவளும் அவன் முன்னே சென்று இடிப்பது போல நிற்க..
"போடி" என்று அவள் தோளில் கை வைத்து அவன் தள்ள.. கண்மூடி திறக்கும் நேரத்தில் அவன் கழுத்தை வளைத்து பட்டும்படாமலும் இதழ் ஒற்றி முடித்திருந்தாள் கண்ணி.
“இப்ப என்ன நடந்துச்சு? இவ என்ன பண்ணினா நம்மள?’ என்று அவன் புரியாமல் விழிக்க அவனின் பார்வையை படித்தவள்,
"வேணும்னா இன்னொரு டெமோ செஞ்சு காட்டவா டாக்டரே.. கொஞ்சம் அழுத்தமா..!!" என்றவள் தாவணி முந்தானையை நுனிகள் திருகியவாறு கேட்க..
சரபேந்திரன் சட்டென்று குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களை பார்த்தான், இங்கே நடந்தவற்றை அவர்கள் பார்த்து விட்டார்களோ என்று அஞ்சி..!
அவர்களோ அந்த ட்யூபில் அமர்ந்து தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் சற்றே ஆசுவாசமாக பெருமூச்சு விட்டவன் அவளை முறைத்தான்.
ஒரு முத்தத்தில் தீ பற்றிக்கொள்ளுமா என்ன? அதிலும் உடம்பும் தண்ணீரால் நனைந்து இருக்க... தேகம் சூடாவது போல் உணர்ந்தான்..!
இது சரியில்லை..! இல்லையில்லை இவ சரியில்லை என்று தன் த
லையை ஒரு முறை ஆட்டி சிலுப்பியவன் “போடி” என்று பற்களை கடித்து கர்ஜித்தவன், தன் உடல் சூட்டை தணிக்க அந்த குளத்துள் அந்த சிறுவர்களோடு இறங்கிவிட்டான்..!
தொடரும்..
