காதலி 3.1

 

Jiya Janavi
(@jiyajanavi)
Member Admin
Joined: 11 months ago
Messages: 231
Thread starter  

கள்வன் 3.1

 

 

பயந்து நடுங்கி அமர்ந்திருந்த வாஹினியை ஒருமுறை பார்த்துவிட்டு தயங்கி தயங்கி சாரி சொல்ல முயன்றவன் பின்பு அவளை அப்படியே விட்டுவிட்டு நண்பர்களை தேடி வெளியே சென்றான்.

 

 திருடி வந்த காரில் அமர்ந்தவன் வேகமாக கதவை அடைத்து சாத்திவிட்டு ஸ்டேரிங்கில் தலைவைத்து படுத்துவிட்டான்.

 

பொதுவாக இம்மாதிரி திருட்டு பழக்கங்கள் கொண்டவர்களுக்கு மற்ற கெட்ட பழக்கங்களும் தானாக கை வந்துவிடும். ஒரு சிலரைத் தவிர.. அந்த ஒரு‌சிலரில் அவனும்.. அவன் நண்பர்களும் ஒன்று!!

 

அதுமட்டுமல்லாமல் அவர்கள் வாழும் அந்த குடியிருப்பு பகுதியில் ஒவ்வொருவரும் அவரவருக்கு என்று வகுத்து பிரித்து வைத்திருக்கும் அந்தக் கோட்டை(திருட்டை)த் தாண்டி வருவதில்லை..

 

அதாவது கோட்டை தாண்டி நீ இந்தப்பக்கம் வரக்கூடாது!! நானும் அந்தப்பக்கம் வரமாட்டேன்!! என்று வடிவேலு மாதிரி.. எதற்கும் வருத்தப்படாத திருடர்கள் சங்கம் அது!!

 

திருட்டு காரை வித்த காசை வைத்து ஆசைப்பட்டதை வாங்கி தின்று களிக்கவும் செய்வார்கள்.. ஒன்றுமில்லாத போது கூடி கும்மாளமிட்டு பசியை மறக்க செய்யும் கூட்டம் அது!!

 

 

ஆனால் இன்று தவறுதலாக என்றாலும் தப்பு தப்பு தானே!! என்று வருந்தினான்.

 

பொதுவாக இவர்கள் கூட்டமும் சரி முக்கியமாக ஜித்துவும் சரி.. பெண்கள் விஷயத்தில் தள்ளியே தான் இருப்பார்கள். 'இன்று நானா இப்படி செய்தது?' என்று கையை அந்த ஸ்டேரிங்கிலேயே தட்டி கொண்டான். கையில் அந்த மென்மையின் மென்மை உணர.. இப்படியே இருந்தால் இம்மாதிரி தப்பு தப்பாக தான் நினைக்க வரும் என்று எழுந்து அவனது நண்பர்களை தேடி சென்றான். ஜிகா மெகா என்று என கத்திக்கொண்டே.. அவர்கள் ஆள் அட்ரஸை காணவில்லை.

 

 

 

"எங்க போய் தொலைஞ்சானுங்க??" என்று யோசித்துக் கொண்டே நடந்தவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. நேற்று இரவு சாப்பிடாமல் இரவோடு இரவாக இங்கே வந்த களைப்பு வேறு!! முதலில் வயத்துக்கு தள்ளுவோம் என்று அவர்கள் இடத்திலேயே சிறிய இட்லி கடை வைத்திருக்கும் சவுண்ட் சரோஜாவிடம் போய் நின்றான்.

 

 

 

இங்குள்ளவர்களில் பலபேர் காசு இருக்கும் போது கொடுத்துவிடுவார்கள். காசு இல்லாத போது அக்கவுண்டில் வைக்க சொல்ல.. வராத பாக்கியை தனது சவுண்டால் வர வைத்து விடும் வல்லமை இந்த சரோஜாவுக்கு உண்டு!!

 

 

"சரோ இட்லி கொடு!!" என்று போய் இவன் அமர...

 

 

"எங்கடா இரண்டு நாளாக உன்னிய ஆளியே காணும்.. கைல துட்டு இருந்தா வெளில போய் நாஸ்தா துண்ண வேண்டியது. துட்டு இல்லன்னா சரோ கிட்டான்ட வர வேண்டிது.. உனிக்கெல்லாம் கேட்டவுடனே நாஸ்தாவை தூக்கி கொடுக்குறேன் பாரு.. என்னிய சொல்லணும்!" என்று வாய் அது பாட்டுக்கு சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாலும் அவனுக்கு தட்டில் இட்லி வைத்து, சாம்பார் சட்னி ஊற்றி நீட்டினார்.

 

 

 

வாங்கியவன் உள்ள தள்ளிய வேகத்தைப் பார்த்து "என்னடா இம்புட்டு வேகமா சாப்பிடுற.. நைட்டு ஏதும் துன்னலையா நீயு?" என்றவாறு இன்னும் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்தாள்.

 

 

"நேத்து அவசரமினுட்டு நைட்டு சாப்பிடல.. ஒரு பெரிய பார்ட்டி ஆந்திரா வரைக்கும் போக வேண்டியதா போச்சு சரோ!" என்றவன் ஆந்திரா என்றதும் தான், அவளின் நினைப்பு வர அவளும் சாப்பிடாம தான் இருந்திருப்பா? என்ன பண்ணுவது? என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

 

 

"இந்த ஜிகா மெகாவை பாத்தியா நீ?" என்று சரோவிடம் கேட்க..

 

 

"உம் பின்னால தானே வால புடிச்சுக்கிட்டு சுத்திக்கினு இருப்பானுங்க.. என்கிட்ட வந்து கேட்டா??" அடுத்த ஈடு இட்லியை ஊற்றி வைத்தபடியே ஜித்துக்கு பதிலளித்தாள்.

 

 

"சரி… சரி.. அவனுங்களுக்கும் சேர்த்து ஒரு பத்து இட்லி கொடு.." என்று அவன் பார்சல் வாங்கிக்கொண்டு, இட்லிக்கு தாராளமாக பணத்தை கொடுத்து விட்டே வீட்டுக்கு வந்தான்.

 

 

இன்னும் அந்த அறையைத் திறந்து அவள் வெளியே வரவில்லை. என்ன செய்வது என்று சிறிது நேரம் யோசித்தவன் முதல் அவளுக்கு சாப்பாடு கொடுத்து பேக் பண்ணுவோம் என்று அவள் அறைக் கதவை வேகமாக தட்ட.. பயந்து வந்து திறந்தவள் ஜித்துவை பார்த்ததும் அவ்வளவு வெறுப்பு கோபம் கூடவே சீ என்ற மாதிரியான முக பாவம்!!

 

 

 

கோபம் வெறுப்பை விட அந்த மூன்றாவது அவள் முகத்தில் கண்ட உணர்ச்சிதான் இவனுக்கு சுர்ரென்று இருந்தது.

 

 

அதே வீட்டில் தடுப்பு வைத்து அந்த பக்கம் இருந்த சமையலறைப் பக்கம் போனவன், ஒரு தட்டில் ஐந்து இட்லியை வைத்தான்.

 

 

 

"இந்த மூஞ்சி எல்லாம் பார்த்தா மூணு இட்லி திங்குற மாதிரியா இருக்கு? ஏதோ பேருக்கு ஒரு இட்லி சாப்பிட்டு உயிர் வாழும் ஜீரோ சைஸ் ஜந்து.. பணக்காரில வயித்த விட உடம்பை தான் மெயின்டன் பண்ணுவாளா இருக்கும். இரண்டு இட்லியே இவளுக்கு அதிகம்!!" என்று இரண்டு இட்லியை வைத்தான் அவள் முன்னால..

 

 

 

"ஏ பால் டப்பா!! அப்ப நடந்தது ஏதோ தெரியாமல் நடந்தது. சாப்பிட்டுட்டு கிளம்பு நீ.. உன்னை எங்க கொண்டு போய் விடனுமோ.. அங்க கொண்டு போய் விட்டுட்டு வரேன். உன்னை எல்லாம் தலையில வச்சு பாக்கணும்னு எனக்கு எல்லாம் அவசியமில்லை!!" என்று இவன் வெளியே சென்று அமர்ந்து விட்டான்.

 

 

 

அவளோ இட்டிலியையும் வெளியே சென்றவனையும் மாறி மாறி பார்த்தாள். வயிறு என்னவோ பசி பசி என்று கூப்பாடு போட்டாலும்.. இவனை நம்பி இதை சாப்பிடலாமா? இதில் ஏதேனும் கலந்து வைத்திருந்தால்? என்று யோசனையாகவே இருந்தது வாஹினிக்கு.

 

 

 

அதனால் அதை கையால் கூடத் தொட்டுப் பார்க்காமல் அந்த கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தாள.

 

 

 

ஒரு பத்து நிமிடம் கழித்து உள்ளே வந்தவன் அவள் சாப்பாட்டை தொடாமல் அமர்ந்து இருந்ததை பார்த்ததும், அப்படி ஒரு கோபம்!! "என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ? ஏதாவது கலந்து கொடுத்து அப்படியே உன்னை ஆட்டைய போட்டுடுவேனு நினைச்சியா? அதுக்கு எதுக்கு மருந்தெல்லாம் கொடுக்கணும்.. நான் நினைச்சா…" என்று அவளை ஏற இறங்க பார்க்க.. அவனின் பார்வை சொன்ன செய்தியைக் கண்டவள், அரண்டு ஒதுங்கி நிற்க..

 

 

"இங்க பாரு ஒழுங்கா சாப்பாட்ட சாப்பிடு!!" என்று ஒற்றை விரல் அவன் பத்திரம் காட்ட.. அவள் இன்னும் அந்த பயத்தை விட்டு வெளியே வரவில்லை.

 

 

அதே நேரத்தில் ஜிகாவும் மெகாவும் ஓடி வந்து "என்னடா ஜித்து எங்களுக்கும் சேர்த்து நாஸ்தாவ நீயே வாங்கிட்டு வந்துட்டியாமில்ல சவுண்டு சரோ சொல்லுச்சு!" என்று கேட்க, ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தான் ஜித்து.

 

 

 

சட்டென்று தட்டில் இருந்த இட்லியை எடுத்து ஜிகாவின் பக்கம் அவன் நீட்ட..

 

 

"என்னடா வரவர உன் அன்புக்கு ஒரு எல்லையே இல்லாமல் போவது!! சாப்பாடு வாங்கி வந்து.. அதை நீ தட்டில் வைத்து சாம்பார் சட்னி வச்சு எல்லாம் கொடுக்குற? நிஜமா நீ ஜித்து தானா?" என்று ஆசையோடு அதை வாங்கியவன் இரண்டு வில்லைகள் சாப்பிட்டு முடிக்கும் முன்.. டக்கென்று அவன் கையிலிருந்து தட்டை வாங்கினான் ஜித்து.

 

 

 

"ஏன்டா??" என்று அதிர்ச்சியுடன் பார்க்க.. கொஞ்ச நேரம் பொறு என்றான். எதற்கு சொல்லுகிறான் என்று ஒன்றும் புரியாமல் இட்லியை முழுங்கியவன் கைகளில் ஒட்டியிருந்த சாம்பார் சட்னியை வாய்க்குள் வைத்து சூப்பி சூப்பி கிளீன் செய்ய ஜித்து தன் கைக்கடிகாரத்தை அவ்வப்போது திரும்பிப் பார்த்தான்.

 

 

 

ஒரு பத்து நிமிடம் சென்றதும் "பாத்தல்ல.. அவன் நல்லாதான் இருக்கான்!! இதுல ஏதாவது கலந்து இருந்தா.. அவன் எப்படி கையை நக்கிட்டு இருப்பான்? ஒரேயடியா நட்டுகிட்டு இருப்பான்!!" என்று கேட்டவுடன் சட்டென்று டிரான்ஸ்பார்மர் வெடித்த சவுண்ட் எங்கையோ கேட்க..

 

 

ஜித்துவும் மெகாவும் திரும்பிப்பார்க்க..

 

 

என் நெஞ்சு தான்!! என இடது பக்கம் கை வைத்துக்கொண்டு "அடப்பாவி!! ஒரு பிரண்டையே போட்டுத்தள்ள பார்த்தியா டா நீ??" என்றான் அதிர்ச்சியோடு…

 

 

 

"அட இது நம்ம சவுண்ட் சரோ கட நாஸ்தா தான். இதுல ஏதோ கலந்து கொடுத்த மாதிரி உத்து உத்து பார்த்துச்சு டா அந்த பால் டப்பா!! அதான் உன்ன வச்சு புரூவ் பண்ணி காமிச்சேன்" என்றவுடன் ஜிகா முகம் போன போக்கைப் பார்த்து வாஹினிக்கு கூட மெல்ல சிரிப்பு எட்டிப்பார்த்தது. அவர்கள் பேசுவது அவளுக்கு புரியவில்லை என்றாலும்.. செயல் புரிய சட்டென்று அந்த தட்டை வாங்கியவள் கட்டிலில் அமர்ந்து மெல்ல சாப்பிட ஆரம்பித்தாள்.

 

 

 

"டேய் உங்களுக்கு சாப்பிடுங்க உள்ள வச்சிருக்கேன்!" என்றவுடன் "அப்பாடா எங்க மேல உண்மையிலேயே உனக்கு பாசம் தாண்டா..ஜித்தா!!" உள்ளே சென்று இட்லியை எடுத்து வந்து ஹாலில் வைத்து பிரித்து வைத்தான் மெகா. சட்னி சாம்பார் தனித் தனியாக இருக்க அனைத்தையும் சிறுசிறு கிண்ணங்களில் ஊற்றி வைத்து சாப்பிடலாம் என்று ஜிகாவையும் அமர வைத்து இட்லி இருந்த இலையை எடுக்கப் போன அந்த நொடி…

 

 

அந்த இலை வேற ஒரு பக்கம் இழுக்கப்பட.. "ஐயோ கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையே!!" என்றதோடு நிமிர்ந்து பார்க்க இவர்களுக்கு முன்னால் அமர்ந்திருந்தாள் வாஹினி.

 

 

 

ஏற்கனவே அவள் தட்டில் அனைத்தும் காலி ஆகி இருக்க.. அடுத்து ஒரு மூணு இட்லியை எடுத்து வைத்தவள், அந்த மூன்று இட்லியை நன்றாக சாம்பாரில் குளிப்பாட்டி சட்டியில் பொட்டு வைத்து லபக் லபக் கென்று உள்ளே தள்ளினாள்.

 

 

 

இவர்கள் மூவரும் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தாலும், 'பாவம் அவளும் சாப்பிடாமல் இருந்திருப்பா போல!' என்று எண்ணிக்கொண்டு இருப்பதையாவது ஷேர் பண்ணிக்கலாம் என்று ஜிகாபிட், மெகாபிட் இலையை நோக்கி கை நீட்ட.. மறுபடியும் இட்லி பறிக்கப்பட.. மீண்டும் வாஹினி தான்!!

 

 

 

இம்முறை சட்னியினால் குளிப்பாட்டி சாம்பாரால் பொட்டு வைத்து பிசைந்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.

 

 

"அடிப்பாவி!! என்ன இந்த வெட்டு வெட்டுறா!!" என்று இருவரும் ஒருவரைப் பார்த்து இருக்கும் இரண்டு இட்லியையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்று ஆளுக்கு ஒரு இட்லியை எடுக்க.. இம்முறை அவர்கள் கை அழுத்தமாக பற்றபட.. "யாரு??" என்று இருவரும் அதிர்ந்து பார்க்க கண்களாலேயே இட்லியை தன் தட்டில் வைக்கச் சொன்னாள்.

 

 

 

"ஜித்து!!!" என்று இருவரும் ஒரு சேர அலறி திரும்பிப் பார்க்க.. அவனோ அடக்கப்பட்ட சிரிப்போடு தோளை குலுக்கி கொண்டவன் வெளியே சென்றுவிட்டான்.

 

 

 

"இவனையெல்லாம் நம்பவே கூடாது டா!! பிரெண்ட்டா இவன்!!" என்று ஏக்கத்தோடு அந்த இட்லியை அவள் தட்டில் வைக்க.. மீண்டும் சட்னி சாம்பாரில் குளித்த இட்லிகள் வாஹினியின் வயிற்றில் வாகாக தஞ்சம் அடைந்தது.

 

 

 

"மகராசி!! பத்து இட்லியும் காலி பண்ணிட்டா டா!!" என்று ஜிகா கண்ணீர் குரலில் கூற.. "ஆமாண்டா சட்னி சாம்பார் கூட மிச்சம் வைக்கல!!" என்று மெகாவும் ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினான்.

 

 

 

 

நன்றாக சாப்பிட்டு முடித்தது தண்ணி வேண்டும் என்று செய்கையினால் கேட்க.. "இது வேறயா?? இரு எடுத்துட்டு வந்து தரேன்!!" என்று ஜிகா கொடுத்தவுடன் அதையும் குடித்தவள், அந்த தட்டிலேயே கையைக் கழுவி விட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

 

 

 

உண்மையிலேயே அவளுக்கு சாப்பிட்டு தட்டு எல்லாம் எடுத்து வைக்கும் பழக்கம் கிடையாது. அவள் வளர்ந்த அரண்மனை பழக்கம் வழக்கம் அப்படி!! 

 

 

இதுவரை இவ்வளவு வயிறு நிறைய வாஹினி சாப்பிட்டதே கிடையாது. யானை பசி ஒருபுறம்.. இவர்கள் வேறு ஏதும் செய்து விடுவார்களோ என்று கலக்கம் மறுபுறம்.. 

 

 

 

அவனே உணவு கொண்டு வர.. பரவாயில்லை இவனும் கொஞ்சம் நல்லவன் தான் போல என்று யோசனையோடு இருந்தாலும், சாப்பாடை தொட மறுத்தாள். தன் நண்பனை சாப்பிட வைத்து அவன் காட்ட இப்போதைக்கு அதில் ஒன்றும் இல்லை.. அடுத்த வேளை சாப்பாடு எப்படியோ? இப்போது உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டுமே! என்று சாப்பிட ஆரம்பித்தவள் தான். இந்த சட்னியும் சாம்பாரும் அவ்வளவு டேஸ்ட்டா இருக்க.. சரசர என்று பத்து இட்லியும் பகபகவென உள்ளே சென்று விட்டது‌. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் என்பது மாதிரி கதவை இறுக்க சாத்திவிட்டு படுத்து விட்டாள்.

 

 

 

அவள் கழுத்தில் கையில் இருந்த நகைகளை எல்லாம் கழட்டினாள். இதை பத்திரமாக எங்கே வைப்பது என்று தெரியவில்லை. யாராவது தூக்கிட்டு போய்ட்டானா? என்று யோசித்தவளுக்கு அருகில் இருந்த தலையணை கண்ணில் பட.. அவசர அவசரமாக அந்த தலையணையை உரையிலிருந்து எடுத்தவள், அதில் எளிதாக தலையிலுள்ள பின்னால் கிழிக்க.. அது வழியாக எல்லா நகையையும் உள்ளார தள்ளி.. மேலே அந்த பின்னால் அந்த ஓட்டையை மூடி.. தலையணை உறைக்குள் வைத்து தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள்.

 

 

அப்பாடி இனி தொலையாது என்ற நினைப்போடு!!

 

 

 

நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?? அதுவும் இந்த மூவர் கூட்டணி செம மூடர் முரடர் கூட்டணி என்று தெரியாது அல்லவா??


   
Quote
Share:
error: What bro?? This is very wrong bro!!!
Scroll to Top